மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
[இது அமெரிக்கா எங்கே செல்கிறது? என்ற புதிய புத்தகத்தின் முன்னுரையாகும். இப்புத்தகம் விரைவில் மெஹ்ரிங் நூலக நிறுவனத்தால் ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் பதிப்புகளில் வெளியிடப்படவுள்ளது. மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள லீப்ஜிக் புத்தகக் கண்காட்சியில் இது சமர்ப்பிக்கப்பட உள்ளது.]
***
இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கி ஒரு ஆண்டை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா என்பது குறித்த விவாதங்களுக்கு அரசின் நடவடிக்கைகளே முற்றுப்புள்ளி வைத்துவிட்டன. 2026 ஜனவரியில் மினியாபோலிஸில் நடந்த நிகழ்வுகள் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. மேலும், அமெரிக்க ஜனநாயகம் ஒரு இராணுவ-பொலிஸ் அரசாக உருமாறுவது இனி ஒரு கோட்பாட்டு ரீதியான சாத்தியக்கூறு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளன. அது தற்போது கண்முன்னே விரிந்து கொண்டிருக்கும் ஒரு நிதர்சனமான உண்மையாகும்.
ஜனவரி 6, 2026 அன்று, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியேற்ற அமலாக்க நடவடிக்கை என்று கூறி, உள்நாட்டு பாதுகாப்புத் துறை 2,000ம் மத்திய அரசின் முகவர்களை மினியாபோலிஸ்-செயின்ட் போல் பெருநகரப் பகுதியில் நிலைநிறுத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்தது ஒரு அமெரிக்க நகரத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு ஆகும். முகமூடி அணிந்த, தந்திரோபாய உடைகளைத் தரித்த முகவர்கள் சுற்றுப்புறங்கள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என எங்கும் அதிரடியாகப் புகுந்தனர். தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகிலும் அவர்கள் நிலைகொண்டனர். ஜனவரி 7 அன்று, 37 வயதான, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ரெனீ நிக்கோல் குட் தனது காரில் அமர்ந்திருந்தபோது, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) முகவர் ஜொனாதன் ரோஸ் என்பவர் அவரைச் சுட்டுக் கொன்றார். பல செய்தி நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், அவர் முகவரைத் தாக்கினார் என்ற நிர்வாகத்தின் கூற்றை நேரடியாக மறுத்தன. ஜனவரி 24 அன்று, 37 வயதான தீவிர சிகிச்சை பிரிவு செவிலியரும் மத்திய அரசின் ஊழியருமான அலெக்ஸ் பிரெட்டி, ICE முகவர்களால் தரையில் தள்ளப்பட்ட ஒரு பெண்ணைப் பாதுகாக்க முயன்றபோது, எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் அவரைக் கொலை செய்தனர். ராய்ட்டர்ஸ், பிபிசி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் ஆகிய செய்தி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்ட ஒரு சாட்சியின் வீடியோவில், பல முகவர்கள் பிரெட்டியைத் தரையில் பலாத்காரமாக தள்ளி வீழ்த்துவதும், ஐந்து வினாடிகளில் குறைந்தது 10 முறை அவரைச் சுடுவதும் தெரிந்தது.
உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்கள் இந்தக் கொலைகளை மட்டுமன்றி, ஜனாதிபதியின் நியாயப்படுத்துதலையும் நேரில் கண்டனர். ரெனீ குட் என்பவரை ஒரு “உள்நாட்டு பயங்கரவாதி” என்று ட்ரம்ப் அவதூறாகப் பேசினார். இந்த நடவடிக்கையை விமர்சித்ததற்காக உள்ளூர் அதிகாரிகள் “கிளர்ச்சியைத் தூண்டுவதாக” அவர் குற்றம் சாட்டினார். கிளர்ச்சிச் சட்டத்தைப் அமல்படுத்தப்போவதாக அவர் அச்சுறுத்தினார். ரெனீ குட்டின் மரணம் “அவராலேயே தேடிக்கொள்ளப்பட்ட ஒரு துயரம்” என்று துணை ஜனாதிபதி வான்ஸ் அறிவித்தார். இந்த விசாரணையில் மாநில சட்ட அமலாக்கத் துறையினர் பங்கேற்பதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. ஜனவரி மாதத்தில் மட்டும் மினசோட்டாவில் குறைந்தது 96 நீதிமன்ற உத்தரவுகளை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மீறியுள்ளதாக ஒரு மத்திய அரசின் நீதிபதி கண்டறிந்தார். பள்ளிகள் மூடப்பட்டன அல்லது தொலைதூரக் கல்விக்கு மாற்றப்பட்டன. வணிகங்கள் முடங்கின. மத்திய அரசின் முகவர்களால் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அமெரிக்கா முழுவதும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு எதிராக அரசால் நடத்தப்படும் ஒரு பரந்த பயங்கரவாத நடவடிக்கையின் மிக வெளிப்படையான ஒரு வெளிப்பாடு மட்டுமே மினியாபோலிஸ் சம்பவமாகும். ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், மத்திய அரசின் முகவர்கள் அதிகாலை வேளைகளில் வீடுகளில் சோதனையிடுவது, பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் மக்களைக் கைது செய்வது, பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது என புலம்பெயர்ந்தவர்கள் குடும்பங்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் ICE காவலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர்—இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத மிக அதிக அளவாகும்—மேலும் 2026 இன் முதல் சில வாரங்களிலும் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மினியாபோலிஸில், ஐந்து வயது சிறுவன் லியாம் ராமோஸ், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மத்திய அரசின் முகவர்களால் பிடித்துச் செல்லப்பட்டான். அவன் அப்போதும் தனது ஸ்பைடர் மேன் முதுகுப்பையையும், முயல் காதுகள் கொண்ட நீல நிறத் தொப்பியையும் அணிந்திருந்தான். எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத, சட்டப்பூர்வமாகத் தஞ்சம் கோரிய அவனது தந்தையுடன் சேர்த்து, அவனது வீட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெக்சாஸின் டில்லே (Dilley) பகுதியில் உள்ள ஒரு தடுப்பு முகாமிற்கு அவன் கொண்டு செல்லப்பட்டான்.
டில்லே பகுதியில்தான் சர்வாதிகார வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு காட்சியை நாம் காண்கிறோம். மத்திய அரசின் ஒப்பந்தத்தின் கீழ் ஒரு தனியார் சிறை நிறுவனத்தால் நடத்தப்படும் தெற்கு டெக்சாஸ் குடும்ப குடியிருப்பு மையத்தில் 1,200 கைதிகள் உள்ளனர், அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் — அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகள் வளாகத்தின் திறந்தவெளிப் பகுதிகளுக்கு வந்து, முள்வேலி எல்லைகளுக்கு அப்பால் எதிரொலிக்கும் வகையில் தங்களது மெல்லிய குரல்களில் சுதந்திரத்திற்காகக் கூக்குரலிடத் தொடங்கினர். அந்த மையத்தில் இருந்த கைதிகளில் எண்பது சதவீதத்தினர் இந்தப் போராட்டத்தில் இணைந்தனர். தாய்மார்களும் தந்தையர்களும் “குழந்தைகளுக்கு விடுதலை” என்று கையால் எழுதப்பட்ட வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். போராட்டம் தொடங்கியபோது அங்கு இருந்த குடிவரவு வழக்கறிஞர் எரிக் லீ, அங்கிருந்த குடிநீர் மிகவும் மோசமாக இருந்ததாகவும், உணவில் பூச்சிகளும் குப்பைகளும் இருந்ததாகவும், பெரியவர்களுக்கான சிறைகளில் காட்டப்படும் அதே கொடூரத்துடன் காவலர்கள் குடும்பங்களை நடத்தியதாகவும் தெரிவித்தார். 13 வயது சிறுமி ஒருத்தி, “குழந்தைகளுக்காகக் கூண்டுகள் இருக்கக்கூடாது” என்று கூறினாள். இதுதான் “சுதந்திர உலகின்” மையத்தில் உள்ள யதார்த்தம் — முள்வேலிகளுக்குப் பின்னால் சிறைபிடிக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் சிறைக் காவலர்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் சுதந்திரத்திற்காகக் கதறுகிறார்கள். ஒருவேளை அந்த மொழி காவலர்களுக்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்கப்போவதில்லை.
அமெரிக்காவில் ஜனநாயகத்தின் முறிவு குறித்து சர்வதேச ஊடகங்கள் அறிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. பிப்ரவரி 6, 2026 தேதியிட்ட தி எகனாமிஸ்ட் இதழ், மினியாபோலிஸ் வீதிகளில் எடுக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் “குடியேற்றத்தையும் தாண்டியவை” என்றும், இது “தனது சொந்தக் குடிமக்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒரு பரிசோதனை” என்றும், சுதந்திரத்திற்கும் கொடுங்கோன்மைக்கும் இடையிலான ஒரு பிளவுபடுத்தும் கோடு” என்றும் குறிப்பிட்டது. மேலும், “இதுவே இறுதியானதாக இருக்காது” என்றும் அந்தத் தலையங்கம் எச்சரித்தது. அதே வாரத்தில், ஜேர்மனியின் ARD தொலைக்காட்சி வலையமைப்பு ஒரு விரிவான அறிக்கையை ஒளிபரப்பியது. அதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் முறைகளுக்கும், 1930-களில் நாஜி ஆட்சியின் முறைகளுக்கும் இடையே வெளிப்படையான ஒப்பீடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக, ஒருங்கிணைத்தல் (Gleichschaltung) என்ற பேரில், நிறுவனங்களை நாஜித் தலைவரின் (Führer) விருப்பத்திற்கு ஏற்ப வலுக்கட்டாயமாக ஒத்திசைக்கச் செய்யும் முறையை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. ஒரு பெரிய ஐரோப்பிய ஒளிபரப்பு நிறுவனத்திடமிருந்து இத்தகைய ஒப்பீடு ஒரு வருடத்திற்கு முன்பு வரை நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிசத் தன்மை அதிகரித்தளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளையில், பெரும்பாலான ஆய்வுகள் இன்னும் ட்ரம்ப் என்ற தனிமனிதரைச் சுற்றியே — அவரது உளவியல், அவரது குணம் மற்றும் அவரது தனித்துவம் என்று கருதப்படுபவை குறித்தே — மையமாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கான ஆழமான காரணங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால், வரலாற்றின் “மோசமான ட்ரம்ப்” கோட்பாடு மிகக் குறைந்த அளவே விளக்குகிறது. இது பதில் அளிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வியை எழுப்புகிறது: பூமியிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பதவிக்கு இந்த சமூக விரோதத் தனிநபர் உயர்த்தப்பட்டதற்கு எது காரணம்? இந்த விளைவை உருவாக்கிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறைகள் யாவை? மேலும், இதில் எந்த வர்க்க சக்திகள் செயல்படுகின்றன?
ஜேர்மன் பாசிசத்தின் எழுச்சி குறித்த தனது எழுத்துக்களில், ட்ரொட்ஸ்கி ஒரு கூர்மையான அவதானிப்பைச் செய்தார்: “ஒவ்வொரு விரக்தியடைந்த குட்டி முதலாளியும் ஹிட்லராக முடியாது. ஆனால் ஒவ்வொரு விரக்தியடைந்த சிறு முதலாளிக்குள்ளும் ஹிட்லரின் ஒரு துகள் படிந்துள்ளது.” இந்த நுண்ணறிவை இன்றைய அமெரிக்கச் சூழலுக்கு ஏற்ப இவ்வாறு மாற்றியமைக்கலாம்: எல்லா வணிகர்களும் ட்ரம்ப் அல்ல. ஆனால் அமெரிக்க வணிக வர்க்கத்தின் கணிசமான ஒரு பகுதியினரிடம் ட்ரம்பின் ஒரு துகளுக்கும் மேலான ஒரு பகுதி உள்ளது.
எண்ணற்ற வணிக ரீதியான ரியல் எஸ்டேட் (நிலச் சொத்து) நடவடிக்கைகள், தனியார் பங்கு நிறுவனங்கள், கிரிப்டோகரன்சி முயற்சிகளின் நிர்வாகிகள் ஆகியோரிடையே அமெரிக்க ஜனாதிபதியின் ஆளுமை, நடை உடை பாவனைகள், குறிக்கோள்கள் மற்றும் முறைகளை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கும் எண்ணற்ற நபர்கள் உள்ளனர். ட்ரம்ப் இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கவில்லை. அவர் ஆளும் பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் உருவகமாகவும், அதன் குற்றவியல் உச்சப்புள்ளியாகவும் இருக்கிறார். அவரது ஆளுமை மற்றும் செயல்பாட்டு முறையில், ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கும் (CEO) ஒரு மாஃபியா கும்பல் தலைவனுக்கும் இடையிலான வேறுபாடு ஒழிக்கப்பட்டுவிட்டது.
நியூ யோர்க் ரியல் எஸ்டேட் துறையின் சாக்கடைகள், அட்லாண்டிக் சிட்டி சூதாட்ட உலகம் மற்றும் ரியாலிட்டி தொலைக்காட்சி என அரை நூற்றாண்டு கால அவரது தொழில் வாழ்க்கையில் — நிதி மோசடிகள், ஒப்பந்ததாரர்களை ஏமாற்றுதல், தொடர் திவால் நிலைகள், எண்ணற்ற வழக்குகள் மற்றும் மோசடிப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனது. அவரது உலகில், பேச்சுவார்த்தையும் மிரட்டிப் பணம் பறித்தலும் நெருங்கிய உறவினர்கள் போன்றது. தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே கட்டுப்பாடு தனது சொந்த ஒழுக்கநெறி தான் என்று அவர் சமீபத்தில் எந்தவொரு தயக்கமுமின்றி அறிவித்தார். உண்மைதான். அது செல்வத்தையும் தனிப்பட்ட அதிகாரத்தையும் தேடும் தனது முயற்சியில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத தன்னலக்குழுவின் “ஒழுக்கநெறி” ஆகும்.
ட்ரம்ப் தனது மேலான அறிவுத்திறன் குறித்து பெருமை பேசுவது வழக்கம். ஆனால், அவரது வழக்கமான உளறல்களின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அதில் முறையான சிந்தனை என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இருக்காது. தனது கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கேள்விகளுக்கு ட்ரம்ப் அடிக்கடி கூறும் பதில்: “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்பதுதான். இது, ஒருவிதமான திட்டமிடப்படாத மற்றும் தன்னிச்சையான குரூரத்தால் வழிநடத்தப்படும் அந்த மனிதருக்கு, தனது சொந்த செயல்களின் விளைவுகள் குறித்து எந்தப் புரிதலும் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. அவரது பொது உரைகள் அனைத்தும், தர்க்கரீதியான தொடர்பு இல்லாமலும், உண்மைத் தகவல்கள் இல்லாமலும், தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் “மிகப்பிரம்மாண்டமான”, “நம்பமுடியாத”, “இதுவரை யாரும் பார்த்திராதது” போன்ற மிகைப்படுத்தப்பட்ட சொற்களின் முடிவற்ற அடுக்குகளாகவே இருக்கின்றன. ஹிட்லரின் எனது போராட்டம் (Mein Kampf) என்ற புத்தகத்தைத் தவிர, பேசுபவர் வேறு எந்தப் புத்தகத்தையாவது படித்திருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் அவற்றில் இருப்பதில்லை.
மேலும், அவர் தன்னைச் சுற்றி திரட்டிக் கொண்டிருப்பது தகுதியற்றவர்களும் ஒழுக்கக்கேடானவர்களும் கொண்ட ஒரு பட்டாளமே. ரோமானியப் பேரரசர் கலிகுலா (Caligula), தனது குதிரையைத் தூதராக நியமிப்பேன் என்று கிண்டலாகக் கூறுவார். ஆனால் அந்தப் பைத்தியக்காரப் பேரரசருக்கிருந்த நகைச்சுவை உணர்வுகூட இல்லாத ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் முக்கியப் பதவிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் வெட்கமற்றவராக நடந்து கொள்கிறார்.
ஸ்டீபன் மில்லர், கோயபல்ஸைப் (ஹிட்லரின் பிரச்சார அமைச்சர்) போலவே பாவனை செய்பவர்; பீட் ஹெக்செத், முன்னாள் பொக்ஸ் நியூஸ் வார இறுதி தொகுப்பாளர், இவர் தனது ஜெனரல்களும் கர்னல்களும் எவ்வளவு இடுப்பு அளவு வைத்திருக்கிறார்கள் என்பதில் விசித்திரமான பற்றுதல் கொண்டவர்; கிறிஸ்டி நோம், உள்நாட்டு பாதுகாப்புச் செயலர், இவர் ஒருமுறை தனது சொந்த நாயைச் சுட்டுக் கொன்றதாகப் பெருமையாக பீற்றிக்கொண்டவர்; ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள தடுப்பூசி எதிர்ப்பு சதிக் கோட்பாட்டாளர்; துள்சி கப்பார்ட், தேசிய உளவுத்துறை இயக்குநர், 17 உளவு அமைப்புகளைக் கண்காணிப்பதற்கான இவரது தகுதிகள் சிஐஏ-விற்கே ஒரு மர்மமாக உள்ளது. இறுதியாக FBI யில் காஷ் படேல், ஒரு ட்ரம்ப் விசுவாசி, இவரது முதன்மைத் தகுதி தனது தலைவருக்கு (Fuehrer - நாஜித் தலைவர்) அடிமைத்தனமாக விசுவாசமாக இருப்பதுதான்.
வரலாற்றின் “மோசமான ட்ரம்ப்” கோட்பாடு மிகவும் போதுமானதாக இல்லாத காரணத்தினால்தான், ஒரு ஆழமான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இந்தச் சூழலில்தான், பாலியல் கடத்தலில் ஈடுபட்ட மெகா-மில்லியரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வாழ்க்கை, ட்ரம்ப் மற்றும் எண்ணற்ற பிற சக்திவாய்ந்த, புகழ்பெற்ற நபர்களின் வாழ்க்கையோடு எவ்விதம் பின்னிப் பிணைந்துள்ளது என்பது குறித்த வெளிப்பாடுகள் அதன் முழுமையான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் குற்றங்கள் தொடர்பான 3 மில்லியனுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் இலட்சக்கணக்கான புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருப்பது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகும். ஆனால், இதன் முக்கியத்துவம், அந்த ஒரு மனிதனின் பாலியல் வேட்டை தொடர்பான அருவருப்பான விவரங்களையும் தாண்டியுள்ளது —அந்தக் குற்றங்கள் எவ்வளவு கொடூரமானவையாக இருந்தாலும் சரி. எப்ஸ்டீன் கோப்புகள், சிதைவின் உச்சகட்ட நிலையில் இருக்கும் ஒரு சீரழிந்த ஆளும் வர்க்கம் மற்றும் தன்னலக்குழு சமூகத்தின் முகத்தையே வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஷேக்ஸ்பியரின் வரிகளில், அவர்கள் செய்துள்ள குற்றங்கள் மிகக் கொடூரமானது; அவை வானம் வரை துர்நாற்றம் எடுக்கின்றன.
அமெரிக்க சமூகத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் — ஜனாதிபதிகள், மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பில்லியனர் நிதியாளர்கள், சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஜாம்பவான்கள், புகழ்பெற்ற அறிஞர்கள், இளவரசர்கள் மற்றும் தூதர்கள்— குற்றவாளி என தண்டனை பெற்ற சிறுவர் பாலியல் குற்றவாளியின் வட்டத்தில் சுதந்திரமாகவும், தெரிந்தே நடமாடினார்கள் என்ற நீண்டகால சந்தேகத்தையும், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் உள்ளுணர்வாகப் புரிந்து வைத்திருந்த உண்மையையும் இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த நபர்கள், இவற்றை எப்ஸ்டீனின் குற்றங்களைப் பற்றித் தெரியாமல் செய்யவில்லை. மாறாக, அவற்றைப் பொருட்படுத்தாமலும், பல சந்தர்ப்பங்களில் அவற்றில் பங்கேற்றபடியுமே செய்தார்கள். அவர்கள் வாழும் இந்தச் சமூக உலகம், சாதாரண மக்களின் வாழ்க்கையை வழிநடத்தும் விதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதிகளின் கீழ் இயங்குகிறது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்க மற்றும் சர்வதேச மேல்தட்டு உயரடுக்கின் ஒவ்வொரு துறையிலும் தனது தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த ட்ரம்ப், எப்ஸ்டீனை ஒரு “அற்புதமான மனிதர்” என்று வர்ணித்தார். எப்ஸ்டீனின் நட்பு வட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்; தனது பட்டங்கள் பறிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இளவரசர் ஆண்ட்ரூ; நவீன வாழ்க்கையின் டிஜிட்டல் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தும் பில் கேட்ஸ், எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க், செர்ஜி பிரின், லாரி பேஜ் மற்றும் ரீட் ஹோஃப்மேன் ஆகியோர் அடங்குவர். மேலும், முன்னாள் நிதித்துறைச் செயலரும், கற்பித்தல் பணியிலிருந்து விடுப்பில் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவருமான லாரி சம்மர்ஸ்; அமெரிக்க பாசிசத்தின் முக்கிய சித்தாந்தவாதியும், ட்ரம்பின் திரைமறைவு ஆலோசகருமான ஸ்டீவ் பானன்; ஒரு கடிதத்தில் எப்ஸ்டீனைத் தனது “சிறந்த நண்பர்” என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் மிகச்சிறந்த தாராளவாத அறிஞராகக் கொண்டாடப்படும் நோம் சாம்ஸ்கி; பார்ட் கல்லூரியின் தலைவர் லியோன் போட்ஸ்டீன்; ரிச்சர்ட் பிரான்சன், பீட்டர் தியேல், ஆலன் டெர்ஷோவிட்ஸ் மற்றும் லியோன் பிளாக் ஆகியோரும் இதில் அடங்குவர். எப்ஸ்டீனின் தொலைபேசி முகவரிப் புத்தகத்தில் ஊடக நிர்வாகிகள், அரசியல்வாதிகள், தொழில்முனைவோர், நடிகர்கள் மற்றும் கல்வியாளர்கள் என 1,700-க்கும் மேற்பட்ட பெயர்கள் இருந்தன.
இந்த வலையமைப்பு அமெரிக்காவிற்கு அப்பாலும் பரவியிருந்தது: நோர்வே நாட்டு இளவரசி, எஹுத் பாரக் போன்ற இஸ்ரேலிய அரசியல் பிரமுகர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தொழிலதிபர்கள், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் மற்றும் பிரபுக்கள் என நீண்டு சென்றது. இது முழுமையான அர்த்தத்தில், முதலாளித்துவ மேல்தட்டு உயரடுக்கின் ஒரு அருவருப்பான சர்வதேச வலையமைப்பாக இருந்தது.
எப்ஸ்டீன் ஊழல் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் கையாளும் வழக்கமான முறை, தனிமனிதக் குற்றங்கள் குறித்த கேள்வியிலேயே கவனம் செலுத்துகிறது. எந்தக் குறிப்பிட்ட தனிநபர்கள் குற்றங்களைச் செய்தார்கள்? வழக்குகள் பதிவு செய்ய முடியுமா? “வாடிக்கையாளர் பட்டியல்” இருக்கிறதா? இந்தக் கேள்விகள் முக்கியமானவைதான். ஆனால், அடிப்படையான அர்த்தத்தில் இவை இரண்டாம் நிலைதான். அவர்கள் மிகவும் முக்கியமான அரசியல் கேள்வியை மறைத்துவிடக் கூடாது: எப்ஸ்டீன் வலையமைப்பை உருவாக்கிய சமூகத்தின் தன்மை எதனை வெளிப்படுத்துகிறது?
எப்ஸ்டீன் தனது நடவடிக்கைகளை மிகவும் திறமையாக மறைத்து வைத்திருந்தார் என்று சொல்ல முடியாது. அவர் 2008-லேயே பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார். அவர் பதிவு செய்யப்பட்ட ஒரு பாலியல் குற்றவாளி. இருப்பினும் — இதுதான் மிக முக்கியமான புள்ளி — மேல்தட்டு சமூகத்தின் கதவுகள் அவருக்குத் திறந்தே இருந்தன. பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து அவரது பணத்தை ஏற்றுக்கொண்டன. அறிஞர்கள் தொடர்ந்து அவரது கலைக்கூடங்களில் கலந்து கொண்டனர். இலக்கிய முகவர் ஜோன் ப்ரோக்மேன், எப்ஸ்டீன் விஞ்ஞானிகளுடனும் தொழில்நுட்ப நிர்வாகிகளுடனும் கலந்து பழகக்கூடிய அறிவுசார் சந்திப்புகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்தார். பொழுதுபோக்கு விளம்பரதாரர் பெக்கி சீகல் தொடர்ந்து அவரைத் தனியார் நிகழ்வுகளுக்கு அழைத்தார். ஹார்வர்ட் பேராசிரியர்கள் அவரைத் தங்களது அலுவலகங்களில் சந்தித்தனர். அவருக்கு தங்குவதற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டன, தனியார் தீவுகளுக்கு அழைக்கப்பட்டார், எண்ணெய் விலைகளிலிருந்து காதல் ஆலோசனைவரை பல்வேறு விஷயங்களில் அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த நபர்கள் வாழும் உலகில், செல்வம் என்பது சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அனைத்தையும் புறந்தள்ளுகிறது. அமெரிக்கா மற்றும் சர்வதேச ஆளும் வர்க்கத்தின் தார்மீக உலகம், பண வழிபாட்டினால் அந்த அளவிற்கு முழுமையாக அரிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், ஒரு தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி, போதுமான அளவு செல்வந்தராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருக்கும் வரை, மேல்தட்டு சமூகத்தின் மதிக்கப்படும் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட முடிந்தது. எப்ஸ்டீன் வழக்கு என்பது இந்த சமூகச் சூழலில் நடந்த ஒரு விதிவிலக்கல்ல. இது அந்தச் சூழலின் மிகவும் செறிவூட்டப்பட்ட மற்றும் அருவருப்பான இழிவான வெளிப்பாடாகும்.
எப்ஸ்டீன் வலையமைப்பின் அரசியல் ரீதியாக மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் இரு கட்சிகளையும் இணைக்கும் தன்மை. இதில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருசேர இடம் பெற்றிருந்தனர். கிளிண்டன் மற்றும் ட்ரம்ப். சம்மர்ஸ் மற்றும் பானன். ரீட் ஹோஃப்மேன் மற்றும் பீட்டர் தியேல். தாராளவாத அறிஞர்கள் மற்றும் வலதுசாரி செயல்பாட்டாளர்கள். அதிகாரப்பூர்வ அரசியலின் நாடக மேடையில் மிக மெல்லிய “கட்சிப் பிரிவினையை” கொண்டு நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அதே நபர்கள் தான், எப்ஸ்டீனுடன் அமர்ந்து விருந்துண்டனர். மேலும் இதுவரை அறியப்படாத பல சந்தர்ப்பங்களில், அவர் ஏற்பாடு செய்த சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் பங்கேற்றனர்.
இரு கட்சிகளின் ஒழுக்கச் சீரழிவும், இரு கட்சிகளின் அரசியலும் ஒன்றுக்கொன்று பிரதிபலிப்பவை. இந்த நபர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கட்சி எல்லைகளைக் கடந்து மிக எளிதாக நடமாடியது ஒரு ஆழமான அரசியல் உண்மையை வெளிப்படுத்துகிறது: அமெரிக்காவின் பெரும் பகுதி அரசியல் ஆற்றலை உறிஞ்சும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையிலான அந்தப் பிரிவினையானது, முக்கியமான பல விஷயங்களில் மேலோட்டமானது என்பதுதான் அது. இது ஆளும் வர்க்கத்திற்குள் நடைமுறை, முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களைக் கையாளுதல் போன்ற விஷயங்களில் நிலவும் ஒரு பிரிவினையே தவிர, சமூகத்தின் பொருளாதார அமைப்பைப் பற்றிய அடிப்படை கருத்து வேறுபாடு அல்ல.
நிழல் யுத்தம் மற்றும் பரஸ்பர சேறு பூசுதல்களுக்கு மத்தியிலும், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான வேறுபாடுகளின் அளவு வியக்கத்தக்க வகையில் மிகக் குறைவானதே. இது பெரும்பாலும் “வெறும் சத்தமும் ஆவேசமும் நிறைந்ததாக இருக்கிறதே தவிர, எவ்வித அர்த்தமும் அற்றது” ஒபாமா, ட்ரம்பின் முதல் தேர்தல் வெற்றியின் சில மணி நேரங்களிலேயே வழக்கத்திற்கு மாறான வெளிப்படைத்தன்மையுடன் ஒரு கருத்தை முன்வைத்தார்; அதாவது இதில் அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும், இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல்கள் ஒரு “உள்வீட்டு” மோதலே தவிர வேறில்லை என்றும் விவரித்தார். இறுதிப் பகுப்பாய்வில், அனைவரும் ஒரே பக்கத்தில் தான் உள்ளனர். ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் நடத்திய ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அறிவித்தார்: “நமக்கு ஒரு குடியரசுக் கட்சி தேவை. கொள்கை ரீதியாகவும் வலுவாகவும் உள்ள ஓர் எதிர்க்கட்சி நமக்குத் தேவை.”
இவர்களுக்கு இடையே ஏதேனும் தீவிரமான வேறுபாடுகள் இருக்குமானால், அவை பெரும்பாலும் வெளியுறவுக் கொள்கை மற்றும் ஏகாதிபத்திய தந்திரோபாயங்கள் குறித்த அம்சங்களிலேயே உள்ளன. உக்ரேனில் நடக்கும் ஏகாதிபத்திய பினாமி போரில் ட்ரம்பிற்கு போதிய ஆர்வம் இல்லை என்பது குறித்த மோதல் மிகவும் தீவிரமாக இருந்தது. ஆனால் ட்ரம்பின் பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கைகள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் கண்டனங்கள் வெறும் நாடகத்திற்கு மேலானவை அல்ல. செல்வப் பகிர்வு, நிதி மூலதனத்தின் அதிகாரம் மற்றும் இராணுவவாதத்தை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தீவிரமாக வேறுபடுவதில்லை.
நிதி ஒழுங்குமுறை நீக்கம் ரீகனால் முன்னெடுக்கப்பட்டு கிளிண்டனால் நிறைவு செய்யப்பட்டது. மத்திய கிழக்கிலான போர்கள் புஷ்ஷால் தொடங்கி வைக்கப்பட்டு, ஒபாமாவால் விரிவுபடுத்தப்பட்டன. 2008-2009 வங்கிக் மீட்பு நடவடிக்கை என்பது ஆரம்பம் முதல் முடிவு வரை இரு கட்சிகளும் இணைந்தே நடத்திய ஒரு நடவடிக்கையாகும்—இதன் மூலம் வோல் ஸ்ட்ரீட் காப்பாற்றப்பட்டது, ஆனால் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். செப்டம்பர் 11, 2001-க்குப் பிறகு உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அரசு இரு கட்சிகளாலும் கட்டப்பட்டது. வேலைநிறுத்தங்களை நசுக்குவதிலும், தங்கள் வாழ்க்கைத்தரத்தின் மீதான பெருநிறுவனத் தாக்குதலுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் உரிமையை சட்டவிரோதமாக்குவதிலும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
ரீகன் PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களைப் பணிநீக்கம் செய்தது, அதற்கு முந்தைய ஜனநாயகக் கட்சித் தலைவரான ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகத்தால் வரையப்பட்ட ஒரு திட்டத்தை அமல்படுத்தியதாகும் என்பது பொதுவாக மறக்கப்பட்டுவிட்டது.. 1983-ல் பெல்ப்ஸ் டாட்ஜ் தாமிரக் கூட்டு நிறுவனத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக, அரிசோனாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் புரூஸ் பாபிட் தான் மாநில போலீஸை ஏவிவிட்டிருந்தார். இன்று வரை இரு கட்சிகளும் இணைந்து வேலைநிறுத்தங்களை உடைத்ததற்கு இன்னும் எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும்.
ஆகவே, எப்ஸ்டீனின் உணவறை, படுக்கையறை மற்றும் மசாஜ் மேசை என்ற அந்த நெருங்கிய வட்டாரத்தின் கோணத்தில் இருந்து பார்த்தால், அமெரிக்கப் பொதுமக்களுக்கு “அரசியல்” என்று காட்டப்படும் கட்சி ரீதியான மோதல்கள் வெறும் ஒரு பக்கநிகழ்ச்சியாகவே இருந்தன. பொதுமக்கள் இதைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் இதை நன்கு புரிந்திருந்தார்கள். அவர்கள் ஒரு பொதுவான வர்க்க நிலைப்பாட்டையும், ஒரு குறிப்பிட்ட பொருள்சார் நலன்களையும், மற்றும் — தற்போது ஆவணங்கள் தெளிவுபடுத்துவது போல — ஒரு குறிப்பிட்ட ஒழுக்க நெறிகளையும், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் ஒழுக்க நெறிகள் முற்றிலுமாக இல்லாத ஒரு நிலையையுமே பகிர்ந்து கொண்டனர்.
இரு கட்சிகளையும் வேறுபடுத்திக் காட்டும் தீவிரமான கலாச்சார மற்றும் அடையாள-அடிப்படையிலான மோதல்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே சேவையாற்றுகின்றன: அவை, சமூக வர்க்கத்தின் அத்தியாவசியப் பிளவுகளை மறைப்பதோடு, முதலாளித்துவ அமைப்பு முறைமைக்கு எதிராகத் திரும்பக்கூடிய அரசியல் ஆற்றலைத் திசைதிருப்பவும் செய்கின்றன. தொழிலாள வர்க்கமானது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு இடையே பிளவுபட்டு, கலாச்சாரப் போர் தூண்டுதல்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வரை, இரு கட்சிகளும் சேவை செய்யும் அந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு எதிராக அவர்களால் ஒன்றுபட முடியாது. இது ஒரு அரசியல் அமைப்புமுறையின் கட்டமைப்பு அம்சமாகும். இதில் இரு கட்சிகளுமே ஒரே விதமான செல்வந்த கொடையாளர்களால் நிதி அளிக்கப்படுபவை மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவை—அதே வர்க்கத்தினர் தான் எப்ஸ்டீனின் உலகத்திலும் வலம் வந்தனர்.
ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் அரசியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு எப்ஸ்டீன் ஊழல் ஒரு அத்தியாவசியப் பின்னணியை வழங்குகிறது. அமெரிக்க “சுதந்திரத் தொழில்” எனப் புகழப்படும் முதலாளித்துவ அமைப்பு அழுகிப்போன நாற்றம்கண்ட நிலையின் ஆகச்சிறந்த அரசியல் வெளிப்பாடே ட்ரம்ப் —அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் அந்த அழுகியதின் சுருக்கமான வடிவம்.
ட்ரம்பின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட குணாதிசயங்கள் —அதாவது நோயியல் ரீதியான நேர்மையின்மை, வெளிப்படையான பாலியல் அத்துமீறல்கள், சட்ட நெறிமுறைகள் மீதான அலட்சியம், அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசு அதிகாரத்தைப் பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்துதல் மற்றும் கொள்கை ரீதியான அனைத்துக் கேள்விகளையும் தனது தனிப்பட்ட விசுவாசத்திற்கு உட்படுத்தும் தற்பெருமை— ஆகியவை எவராலும் மறைக்கப்படவில்லை. ஆனால், இவரே ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க அரசியல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவர் மூன்று முறை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் இரண்டு முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு பதவிநீக்க விசாரணைகளும், ஒரு குற்றவியல் தண்டனையும் கூட அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுசெல்லத் தவறிவிட்டன,அவரை வெள்ளை மாளிகைக்குள் நுழைய விடாமல் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
எப்ஸ்டீனுடனான ட்ரம்பின் சொந்தத் தொடர்பே பல விஷயங்களைக் கற்பிக்கிறது. இந்த குற்றவாளியுடன் அவர் நீண்டகால சமூக உறவைப் பேணி வந்தார். எப்ஸ்டீன் கோப்புகளை அவரது நிர்வாகம் கையாண்ட விதம் வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமானது —தனது சொந்தத் தொடர்புகளைக் குறைத்துக் காட்டி, அதே நேரத்தில் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவற்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது. இவற்றில் எதுவுமே அரசியல் ரீதியாகத் தகுதி நீக்கம் செய்யவில்லை என்ற உண்மை, அமெரிக்க அரசியல் அமைப்பின் இழிவான நிலையையும், அது சேவை செய்யும் ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.
ட்ரம்பிற்கும் அமெரிக்க வீழ்ச்சியின் நிகழ்ச்சிப்போக்கிற்கும் இடையிலான உறவு “MAGA” எனும் முழக்கத்திலேயே அடங்கியுள்ளது. “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (Make America Great Again) என்பது ஒரு வகையான பிற்போக்குத்தனமான ஏக்கத்தைத் தூண்டுகிறது—அதாவது ஒருபோதும் மீட்டெடுக்க முடியாத, பெரும்பாலும் கற்பனை செய்யப்பட்ட ஒரு இழந்த பொற்காலத்திற்கான ஏக்கம் ஆகும்.
இதில் கவனிக்கத்தக்க ஒரு வாழ்க்கை வரலாற்று பரிமாணம் உள்ளது, ஏனெனில் ட்ரம்பின் வாழ்நாள் முழுவதும், போருக்குப் பிந்தைய அமெரிக்க முதலாளித்துவத்தின் அதன் உச்சக்கட்டத்திலிருந்து, ஒப்புக்கொள்ளப்படாத ஆனால் மிகவும் உண்மையான திவால்நிலையின் தற்போதைய நிலை வரை உள்ள முழுப் பயணத்தையும் உள்ளடக்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 14, 1946 அன்று பிறந்தார்—அதாவது, ஜூலை 1944-ல் நடந்த பிரெட்டன் வூட்ஸ் மாநாடு, ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர் என்ற நிலையான விகிதத்தில் அமெரிக்க டாலரைத் தங்கமாக மாற்றிக்கொள்ளும் முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சர்வதேச நாணய முறையை நிறுவிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பிறந்தார். அந்த ஏற்பாடு வெறும் கோட்பாட்டு கருத்து அல்ல. அது, உலக உற்பத்தியில் ஏறக்குறைய பாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு, உலகின் தங்க இருப்புகளில் பெரும்பான்மையைக் கையில் வைத்து, வரலாற்று இணையற்ற இராணுவ மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்துறை ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஆனால் 1950கள் மற்றும் 1960கள் முழுவதும் அந்த தொழில்துறை மேலாதிக்கம் படிப்படியாக சிதைந்ததனால், நிக்ஸன் நிர்வாகம் பிரெட்டன் வூட்ஸ் முறையை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆகஸ்ட் 15, 1971 அன்று—ட்ரம்ப் தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு—நிக்ஸன் டாலரைத் தங்கமாக மாற்றும் முறையை நிறுத்தி வைத்தார். இந்த நடவடிக்கை போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கின் முடிவைக் குறித்ததோடு, அமெரிக்க முதலாளித்துவத்தால் தான் உருவாக்கிய உலகளாவிய ஏற்பாடுகளை இனிமேலும் தக்கவைக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்வதாகவும் அமைந்தது.
அதன்பிறகு என்னென்ன நடந்துள்ளது என்பதை ஒரு எண்ணே முழுமையாகச் சுருக்கிக் காட்டுகிறது. 1971-ல் ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர் என மதிப்பிடப்பட்டது. இன்று அது ஒரு அவுன்ஸ் சுமார் 5,000 டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது—வரலாற்றில் மதிப்பின் அளவுகோலாக நிலைநிறுத்தப்பட்ட தங்கத்துடன் ஒப்பிடும்போது, டாலர் 140 மடங்குக்கும் அதிகமாக மதிப்பிழந்துவிட்டது. இது அமெரிக்கப் பொருளாதார சக்தியின் நீண்டகால வீழ்ச்சியின் பணவியல் வெளிப்பாடாகும்; இந்த வீழ்ச்சியை இராணுவச் செலவுகளை அதிகரிப்பதாலும், நிதி தந்திரங்களைப் பயன்படுத்துவதாலும் அல்லது தேசியவாத கோஷங்களை எழுப்புவதாலும் மாற்றிவிட முடியாது.
அமெரிக்காவின் வீழ்ச்சியை தேசிய இச்சையின் வெறும் வலியுறுத்தல் மூலம் மீட்டெடுப்பதாக MAGA உறுதியளிக்கிறது. அதாவது சுங்க வரிகள், குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் நட்பு நாடுகளையும் எதிரிகளையும் ஒரே மாதிரியாக அச்சுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம். ஆனால் இந்த கோஷங்களின் பின்னால், அமெரிக்க வீழ்ச்சியை உருவாக்கிய அடிப்படை பொருளாதார செயல்முறைகள் தடுக்க முடியாத விசையுடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ட்ரம்ப் இந்த முரண்பாட்டின் உருவகமாகவே இருக்கிறார்: அமெரிக்காவின் உச்சகட்ட அதிகாரத்தில் பிறந்த இவர், தனது முழு வயது வந்த வாழ்க்கையையும் பொருளாதார அடித்தளங்கள் படிப்படியாக வெறுமையாக்கப்பட்ட ஒரு சமூகத்தில் கழித்துள்ளார்; இப்போது அந்த வரலாற்றுச் செயல்முறையை வெறும் வன்முறையின் மூலம் தலைகீழாக மாற்ற அவர் முனைகிறார்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலை மோசமடைந்து வருவதற்கு, ட்ரம்பின் கொள்கைகள் அளிக்கும் பதில் பொறுப்பற்றதும் வன்முறையுடனும் கூடியவை. 1950-களில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வருடத்திற்கு சராசரியாக 4.2 சதவீதம் வளர்ந்தது. 1960-களில் அது 4.5 சதவீதமாக இருந்தது. உற்பத்தித் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 முதல் 25 சதவீதம் வரை இருந்தது. தொழிலாளர் புள்ளியியல் அலுவலகத்தின் (BLS) ஊதியத் தரவுகள், போருக்குப் பிந்தைய உச்சக்கட்டமான செப்டம்பர் 1953-ல், உற்பத்தித் துறையில் 16.4 மில்லியன் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதைக் காட்டுகின்றன. இது மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்காகும்.
பொருளாதார பகுப்பாய்வு பணியகத்தின் பெருநிறுவன இலாப அட்டவணைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள், 1962-ல் உற்பத்தித் துறை அனைத்து பெருநிறுவன இலாபங்களில் 46.1 சதவீதத்தை உருவாக்கியது, அதே நேரத்தில் நிதித் துறை வெறும் 15.1 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் இருந்து வருகிறது. சராசரி ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1950கள் மற்றும் 1960களில் 4 சதவீதத்திற்கும் மேலாக இருந்த நிலையில், 1970கள் மற்றும் 1980களில் சுமார் 3 சதவீதமாகவும், அதன்பிறகான தசாப்தங்களில் 2.5 சதவீதத்திற்கும் குறைவாகவும் சரிந்தது. 2000-ஆம் ஆண்டுகள் குறிப்பாக மோசமான பாதிப்பை ஏற்படுத்தின, டொட்-காம் குமிழி சரிவு மற்றும் 2008-ஆம் ஆண்டின் பேரழிவு தரும் நிதி நெருக்கடியால் சராசரியாக வெறும் 1.9 சதவீதமாக சரிந்தது. இதற்கிடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு 25 சதவீதத்திலிருந்து சுமார் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உற்பத்தித் துறை வேலைவாய்ப்பின் போக்கும் அதே அளவுக்கு பேரழிவுகரமானதாகவே உள்ளது. BLS ஊதியப் பட்டியல் தரவுகள் இந்த வீழ்ச்சியை இரக்கமற்ற துல்லியத்துடன் பதிவு செய்கின்றன: 1953-ல் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பில் 32.5 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறை, 1970-ல் 25.7 சதவீதமாகவும், 1990-ல் 16.2 சதவீதமாகவும், 2010-ல் 8.7 சதவீதமாகவும் குறைந்தது, மேலும் ஜனவரி 2025 நிலவரப்படி இது வெறும் 8.0 சதவீதமாகக் குறைந்துள்ளது—இது மொத்த பணியாளர்களில் சுமார் பன்னிரண்டில் ஒரு பங்கு ஆகும்.
பெருநிறுவன இலாபங்களின் பங்கு, இதே கதையை மற்றொரு கோணத்தில் இருந்து சொல்கிறது: 1963-ல், அனைத்து பெருநிறுவன இலாபங்களில் உற்பத்தித் துறை 47.8 சதவீதத்தை ஈட்டியது, நிதித்துறை வெறும் 13.4 சதவீதத்தை மட்டுமே ஈட்டியது. 1990-ல் இந்த இடைவெளி வியத்தகு முறையில் குறைந்தது — உற்பத்தித் துறை 28.7 சதவீதமாகவும், நிதித்துறை 23.1 சதவீதமாகவும் இருந்தது. 1991-ல், நிதித்துறை முதல் முறையாக உற்பத்தித் துறையை முந்தியது. 2010-ல் இந்தத் தலைகீழ் மாற்றம் முழுமையடைந்தது: நிதித்துறை 27.8 சதவீதத்தில் நின்றது, உற்பத்தித் துறையோ 12.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. நூற்றாண்டின் பாதியில் அனைத்து இலாபங்களிலும் கிட்டத்தட்ட பாதியாக இருந்த உற்பத்தித் துறை, தற்போது வெறும் எட்டில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது; அதே சமயம் நிதித் துறையின் பங்கு ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது. அமெரிக்காவின் தொழில்துறை வீழ்ச்சி ஒரு இயற்கையான செயல்முறை அல்ல. இது, நாட்டின் உற்பத்தித் திறனைப் பலி கொடுத்து, குறுகிய கால நிதி ஆதாயத்திற்காக, இரு கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட கொள்கை முடிவுகளின் விளைவாகும்.
இந்த நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பதில், மூலதனத்தின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், பகுத்தறிவற்றதாக இருக்கவில்லை. பெருநிறுவன இலாபங்கள் மற்றும் சமூகச் சலுகைகள் ஆகிய இரண்டையுமே தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு பொருளாதார உபரி வேகமாக வளரவில்லை என்றால், சலுகைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல், நிதித்துறை கட்டுப்பாடுகளை நீக்குதல், செல்வந்தர்கள் மீதான வரிகளைக் குறைத்தல், சமூகத் திட்டங்களைச் சிதைத்தல், உற்பத்தித் துறையை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் — இவை அனைத்தும் ரீகன் காலம் முதல் இரு கட்சிகளாலும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டன. இவை தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டி, இலாப விகிதத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கான ஒரு தெளிவான வர்க்க மூலோபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன.
இந்த வர்க்க உத்தியின் விளைவுகள், செல்வக் குவிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மையின் புள்ளிவிவரங்களில் எழுதப்பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அசாதாரணமாக மிகுதியானவை, அவை அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) சொந்த தரவுத்தளங்களிலிருந்து எடுக்கப்படாமல் இருந்திருந்தால், சோசலிசப் பிரச்சாரகர்களின் கற்பனைகள் என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.
2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான அமெரிக்க மத்திய வங்கியின் தரவுகள், அமெரிக்கக் குடும்பங்களில் மேல்தட்டில் உள்ள 1 சதவீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 31.7 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் காட்டுகின்றன. 1989-ல் மத்திய வங்கி, குடும்பச் செல்வத்தைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து இதுவே மிக உயர்ந்த அளவாகும். அந்த 1 சதவீதத்தினர் வசம் சுமார் 55 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன — இந்தத் தொகையானது அமெரிக்க மக்கள் தொகையில் கீழ்த்தட்டில் உள்ள 90 சதவீதத்தினர் அனைவரிடமும் உள்ள மொத்த செல்வத்திற்கு சமமானதாகும். மேல்தட்டில் உள்ள 10 சதவீதத்தினர் மொத்த குடும்பச் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மறுமுனையில், அமெரிக்கக் குடும்பங்களில் கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீதத்தினர் — அதாவது சுமார் 66 மில்லியன் குடும்பங்கள் — மொத்த செல்வத்தில் வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர். மக்கள் தொகையில் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீதத்தினர், கீழ்த்தட்டில் உள்ள 90 சதவீதத்தினரை விட அதிகச் சொத்துக்களை வைத்துள்ளனர். இந்த புள்ளிவிவரத்தின் ஆழத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
காலப்போக்கில் இந்தச் செல்வக் குவிப்பின் போக்கும் சமமாகக் கண்டிக்கத்தக்கது. 1989-ல், கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் 3.4 சதவீதத்தை வைத்திருந்தனர் — இது ஏற்கனவே ஒரு மிகச் சிறிய பங்காகும். 2025-க்குள், அந்தச் சிறிய பங்கும் மேலும் சுருங்கிவிட்டது. இதற்கிடையில், மேல்தட்டில் உள்ள 0.1 சதவீதத்தினர் வைத்துள்ள பங்கானது அதே காலப்பகுதியில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 905 பில்லியனர்கள் இப்போது ஒட்டுமொத்தமாக 7.8 டிரில்லியன் டாலர் செல்வத்தை வைத்துள்ளனர் — இது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் கீழ் பாதியினரின் மொத்த செல்வத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். வெறும் மூன்று தனிநபர்கள், கீழ்த்தட்டில் உள்ள 160 மில்லியன் (16 கோடி) அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர்.
உரிமையாளர்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் இடையிலான இந்த ஆழமான இடைவெளியானது, தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) ஊதியத்திற்கும் சாதாரண தொழிலாளர்களின் ஊதியத்திற்கும் உள்ள விகிதத்தில் குறிப்பாகத் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தின்படி (Economic Policy Institute), பொதுப் பங்கு வர்த்தகம் செய்யும் 350 மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2024-ல் சராசரியாக 23 மில்லியன் டாலர் மொத்த ஊதியத்தைப் பெற்றனர்— இது ஒரு சாதாரண தொழிலாளியின் ஊதியத்தை விட 281 மடங்கு அதிகமாகும். 1965-ல் இந்த விகிதம் 21-க்கு 1 என்ற அளவில் இருந்தது. 1978-ல் இது 31-க்கு 1 ஆக இருந்தது. அதன்பிறகு இது கிட்டத்தட்ட பத்து மடங்கு வளர்ந்துள்ளது. மிகவும் மோசமான சில நிறுவனங்களில், இந்த விகிதம் கற்பனைக்கு எட்டாத வகையில் உள்ளது: ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி 2024-ல் 97.8 மில்லியன் டாலர்களைப் பெற்றார் — இது அந்த நிறுவனத் தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தை விட 6,666 மடங்கு அதிகமாகும்.
1978 ஆம் ஆண்டிலிருந்து, தலைமை நிர்வாக அதிகாரிகளின் உண்மையான ஊதியம் 1,094 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், ஒரு சாமானிய தொழிலாளியின் ஊதியம் வெறும் 26 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது — அதேசமயம் நிகர உற்பத்தித்திறன் 80 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்துள்ளது. தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதற்கும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் இடையிலான வேறுபாடு, ஏறக்குறைய முழுவதுமாக முதலாளித்துவ வர்க்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சமத்துவமின்மையின் விளைவுகள் அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் ஊடுருவியுள்ளன. அதிக வருமானம் ஈட்டும் மேல்தட்டு 10 சதவீதத்தினர் இப்போது அமெரிக்காவின் மொத்த நுகர்வோர் செலவினங்களில் பாதியைக் கொண்டுள்ளனர் — இந்த விகிதம் 2020-ல் 43 சதவீதமாக இருந்தது, 2025-ல் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் அதிகளவில் செல்வந்தர்களின் நுகர்வு முறைகளையே சார்ந்துள்ளது. அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்கள் தேக்கமடைந்த ஊதியங்கள், அதிகரித்து வரும் கடன்கள் மற்றும் வீட்டுவசதி, மருத்துவம், கல்வி ஆகியவற்றின் உயரும் செலவுகளுடன் போராடுகின்றனர்.
அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் சராசரி ஆயுட்காலம் உண்மையில் குறைந்துள்ளது — இது ஒரு முன்னேறிய தொழில்மயமான நாட்டில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகும். ஓபியாய்டு (opioid) போதைப்பொருள் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய தற்கொலை, மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் அதிகப்படியான உட்கொள்ளலால் ஏற்படும் “நம்பிக்கையற்ற மரணங்கள்” ஆகியவை ஒரு சமூக ஒழுங்கின் உடலியல் விளைவுகளாகும். இந்த சமூக ஒழுங்கு பல கோடி மக்களை பொருளாதார பாதுகாப்பின்மை, சமூகச் சீரழிவு மற்றும் நம்பிக்கையற்ற வாழ்க்கைக்குத் தள்ளியுள்ளது.
2020 ஜனவரியில் கோவிட்‑19 பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது, இலாபத்தை உயிருக்கு மேலாக முன்னுரிமைப்படுத்தும் அமெரிக்க ஆட்சிவர்க்கத்தின் இருகட்சிகளின் அடிப்படை நோக்கம் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்தது.தொழிலாள வர்க்கத்தின் நேரடி அழுத்தத்தின் கீழ், SARS-CoV-2 வைரஸ் பரவுவதைத் தடுக்க தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஆளும் வர்க்கம் மிகக் குறுகிய காலத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், வோல் ஸ்ட்ரீட்டை மீட்பதற்கான ஒரு பாரிய நிதி உதவித் திட்டத்திற்கு காங்கிரஸ் வாக்களித்தவுடன், உயிரிழப்புகளைப் பொருட்படுத்தாமல் மக்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்துவதில் கவனம் திரும்பியது.
தாராளவாத நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளரும் “ஏகாதிபத்தியத் தூதருமான” தோமஸ் ப்ரீட்மேன், நடைமுறையில் இருந்த மற்றும் நன்கு நிறுவப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கான ஒரு முழக்கத்தை வழங்கினார்: “நோயைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் [அதாவது, இலாபத்தை இழந்து வைரஸ் பரவலைத் தடுப்பது] நோயை விட மோசமானதாக இருக்க அனுமதிக்காதீர்கள்.” இதன் முடிவுகள் பேரழிவுகரமானவை: அமெரிக்காவில் 15 இலட்சத்திற்கும் அதிகமான தவிர்க்கக்கூடிய மரணங்கள் மற்றும் சர்வதேச அளவில் குறைந்தது 3 கோடி தவிர்க்கக்கூடிய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன, பெருந்தொற்று இன்னும் பொதுச் சுகாதாரத்தை கடுமையாக சீர்குலைத்து வருகிறது. ஆனால், S&P 500 மற்றும் டவ் ஜோன்ஸ் (Dow Jones) ஆகியவற்றின் தொழில்துறை சராசரிகள் 2020-ல் இருந்த நிலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளன.
உயர்ந்து வரும் பங்குச் சந்தை குறியீடுகளுக்குப் பின்னால் இருக்கும் சமூக யதார்த்தம் இதுதான். ஆளும் வர்க்கம் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகிய இருவரையும் உமிழ்ந்து வாந்தி எடுத்ததுடன், அவர்களை மகத்தான அதிகாரம் மற்றும் செல்வாக்கு மிக்க இடங்களுக்கு உயர்த்தியது. உச்சியில் ஆபாசமான அளவில் செல்வம் குவிக்கப்படுவது, பெரும்பான்மையான மக்களின் சுரண்டல் மற்றும் வறுமையுடன் பிரிக்க முடியாதது. இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு கட்டமைப்பானது. முதலாளித்துவ வர்க்கத்தை வளப்படுத்திய அதே செயல்முறைகள் — தொழிற்சங்கங்களின் அழிவு, நிதித்துறை கட்டுப்பாடுகளை நீக்குதல், சமூகத் திட்டங்களைச் சிதைத்தல், உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றுதல் — அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தைப் ஏழ்மையாக்கி, ட்ரம்ப் போன்ற சர்வாதிகார வாய்வீச்சாளர்கள் வளர்வதற்கான சமூக அவநம்பிக்கை சூழலை உருவாக்கியுள்ளன.
உற்பத்தி சார்ந்த முதலீடுகளின் இலாபம் குறைந்தபோது, மூலதனம் அதிகளவில் நிதிச் சூதாட்டத்தை நோக்கி நகர்ந்தது — நிதிச் சொத்துக்கள், கடன் வாங்கிய கையகப்படுத்துதல்கள், சொத்துக் குமிழிகள் மற்றும் எதையும் உற்பத்தி செய்யாமல் செல்வத்தைப் பிழிந்தெடுக்கும் வோல் ஸ்ட்ரீட் சூதாட்டக் கட்டமைப்புகள் ஆகியவற்றை நோக்கி அது சென்றது. ட்ரம்பின் தனிப்பட்ட ஊழல் மலிந்த குணம் இந்த உலகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆனால், அவரது அனைத்து உளறல்களுக்கு மத்தியிலும், ட்ரம்ப் வாக்குறுதி அளித்த அந்தப் பொருளாதார அதிசயம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, ட்ரம்பின் சொந்த உடல் மற்றும் மன ரீதியான சீரழிவைப் போலவே, அமெரிக்கப் பொருளாதாரத்தின் சிதைவுச் செயல்முறையும் இடைவிடாத மற்றும் வெளிப்படையான முறையில் தொடர்கிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிப்ரவரி 2, 2026 அன்று பின்வருமாறு குறிப்பிட்டது:
அமெரிக்காவிற்கு ஒரு பொற்காலத்தைக் கொண்டு வரும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் வாக்குறுதி அளித்த அந்த உற்பத்தித் துறை எழுச்சியானது, இப்போது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களின் பல ஆண்டுகால பொருளாதாரத் தலையீடுகளுக்குப் பிறகு, பெருந்தொற்று முடிவுக்கு வந்த காலத்திலிருந்து கணக்கிடுகையில், இப்போது தான் மிகக்குறைந்த அளவிலான அமெரிக்கர்கள் உற்பத்தித் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, ட்ரம்ப் “விடுதலை நாள்” சுங்க வரிகளை அறிமுகப்படுத்திய பிறகு வந்த எட்டு மாதங்களிலும் உற்பத்தித் துறையினர் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளனர். இது 2023 முதல் 200,000‑க்கும் மேற்பட்ட வேலைகள் அழிந்துவரும் உற்பத்தித் துறையின் சுருக்கத்தை மேலும் நீட்டித்தது.
தொழில்துறை உற்பத்தியில் மட்டுமல்லாது, இதர துறைகளிலும் ‘ட்ரம்ப்பிசத்தின்’ திவால் நிலை அம்பலமாகியுள்ளது. அமெரிக்க வீழ்ச்சியின் அளவுகோலான டாலரின் நிலை, MAGA எனும் முழக்கத்தின் மாயையான தன்மையை இன்னும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. டாலரை மீண்டும் மகத்தானதாக்குவதற்குப் பதிலாக, அதன் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தி எகனாமிஸ்ட் இதழ் தனது பிப்ரவரி 6-13 பதிப்பில், “ஆபத்தான டாலர்” என்ற தலைப்பிலான முதன்மைக் கட்டுரையில் பின்வருமாறு தெரிவிக்கிறது:
ஜனவரி 2025-ல் [ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற போது] அடைந்த உச்சத்திலிருந்து, மற்ற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டாலர் தனது மதிப்பில் பத்தில் ஒரு பங்கை இழந்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாட்டு நாணயங்களின் அடிப்படையில் பார்த்தால், அமெரிக்கச் சொத்துக்களின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக, யூரோவின் மதிப்பில் கணக்கிடும்போது, அமெரிக்கப் பங்குகள் கடந்த ஓர் ஆண்டில் மிகக் குறைந்த அளவே உயர்ந்துள்ளன
பிட்காயினை (bitcoin) ஒரு மாற்று மற்றும் சிறந்த மதிப்புச் சேமிப்பாக ஊக்குவிப்பதன் மூலம், டாலர் வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் நம்பினார். இந்த சர்வரோக நிவாரணி குறித்த அவரது சந்தைப்படுத்தல் ஆரம்பத்தில் வெற்றியடைந்தது. பிட்காயினின் விலை 120,000 டாலருக்கும் மேல் எகிறியது. ஆனால் யதார்த்தம் அதன் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோ மீதான மோகம் தற்போது குறைந்து வருகிறது, மேலும் பிட்காயின் விலை 65,000 - 70,000ம் டாலர்கள் என்ற எல்லைக்கு மீண்டும் சரிந்துள்ளது—இது நவம்பர் 2024-ல் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு இருந்த விலையாகும். மேலும், இது அதன் சாத்தியமான ஆதாள பாதாளத்தை இன்னும் நெருங்கவில்லை என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் பிட்காயின் வைத்திருப்பவர்கள், தங்கள் கைவசமுள்ள பிட்காயின்களை எத்தனை துலிப் (tulips) மலர்களுக்கு ஈடாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதைக் கொண்டே அதன் மதிப்பை அளவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.
பொருளாதாரச் வீழ்ச்சிக்கும் ஒட்டுண்ணித்தனத்திற்கும் மற்றும் இராணுவ வன்முறையை அதிகளவில் தடையின்றி சார்ந்திருப்பதற்கும் இடையிலான தொடர்பு மறுக்க முடியாதது. அமெரிக்க அரசு வன்முறையை நாடுவதும், சட்டபூர்வமான தன்மையை மேன்மேலும் நிராகரிப்பதும் அதன் கடுமையான பொருளாதார மற்றும் நிதி பலவீனத்தில் வேரூன்றியுள்ளது. உயர்ந்து வரும் பொதுக் கடன் சுமை மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தொடரும் நிதிப்பற்றாக்குறை ஆகியவை கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன. மேலும், இந்த அமைப்புமுறை தொடர்ச்சியான மறுநிதியளிப்பு, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் டாலர் சொத்துக்களுக்கான தடையற்ற உலகளாவிய தேவை ஆகியவற்றையே மென்மேலும் சார்ந்திருக்கச் செய்கிறது. அதே நேரத்தில், பங்குச் சந்தைகள் —எல்லாவற்றிற்கும் மேலாக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள்— முடிவற்ற வருவாய் வளர்ச்சி மற்றும் சாதகமான பணப்புழக்கச் சூழலை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளில் தங்கியுள்ளன. இந்த மதிப்பீடுகளில் ஏற்படும் எந்தவொரு நீடித்த மாற்றமும், எதிர்மறையான செல்வச் சரிவு, பெருநிறுவன ஆட்குறைப்பு செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வங்கிக்-கடன் சந்தை அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
அமெரிக்க மத்திய அரசு, கடன் மற்றும் வட்டி சுமையின் கீழ் இயங்குகிறது, இது அதன் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான இடத்தை கடுமையாகக் குறைக்கிறது: ஜனவரி 7, 2026 நிலவரப்படி, மொத்த அமெரிக்கப் பொதுக் கடன் 38.43 டிரில்லியன் டாலராக இருந்தது (இதில் பொதுமக்களிடம் உள்ள $30.81 டிரில்லியன் அடங்கும்). அதே சமயம், 2025 நிதியாண்டில் நிகர வட்டிச் செலவுகள் சுமார் 970 பில்லியன் டாலர்கள் ஆகும்—இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.2 சதவீதம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் மொத்தச் செலவினத்தில் 13.8 சதவீதம் ஆகும்.”
இந்தச் சூழ்நிலைகளின் கீழ், சொத்துப் பெருக்கத்தைத் தற்காப்பதற்கும், வெளி நிதி ஆதார வழிகளை அமல்படுத்துவதற்கும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிராக எழும் உள்நாட்டு எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கும், கட்டாயமும் சட்டவிரோதமான முறைகளும் அரசின் கருவிகளாக மாறுகின்றன.
ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை—அதாவது பிரம்மாண்டமான தேசியக் கடன், சீரழிந்து வரும் நாணய மதிப்பு, வீழ்ச்சியடைந்து வரும் தொழில்துறை உற்பத்தி மற்றும் உலகளாவிய சந்தைகளை இழப்பது போன்றவை—1937-38 காலகட்டத்தில் நாஜி ஆட்சி எதிர்கொண்ட சூழலை ஒத்திருக்கிறது. ஹிட்லரின் மூன்றாவது பேரரசு குறித்த சிறந்த வரலாற்றாசிரியர் டிம் மேசன் பினவருமாறு எழுதுகிறார்:
சர்வாதிகாரத்தினாலும், மீள்ஆயுதமயமாக்கலாலும் உருவான அமைப்பு ரீதியான அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மூன்றாவது பேரரசுக்கு முன்னால் இருந்த ஒரே “தீர்வு” என்பது: அதிக சர்வாதிகாரம் மற்றும் அதிக மீள்ஆயுதமயமாக்கல், பிறகு விரிவாக்கம், பிறகு போர் மற்றும் பயங்கரம், அதன் பிறகு கொள்ளையடித்தல் மற்றும் அடிமைப்படுத்துதல் ஆகும். வீழ்ச்சியும் குழப்பமும் மட்டுமே இதற்கு மாற்றாக எப்போதும் இருந்ததால், அனைத்து தீர்வுகளும் தற்காலிகமானவையாகவும், அவசரமானவையாகவும், அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ஒரு கொடூரமான கருப்பொருளைச் சுற்றியுள்ள காட்டுமிராண்டித்தனமான தற்காலிக ஏற்பாடுகளாகவுமே இருந்தன. ... மனிதவளம் மற்றும் மூலப்பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கான ஒரு போர் என்பது, தேசிய சோசலிச (நாஜி) ஆட்சியின் கீழ் ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியின் பயங்கரமான தர்க்கத்திற்குள் மிகச்சரியாகப் பொருந்தியது. [நாஜிசம், பாசிசம் மற்றும் தொழிலாள வர்க்கம் (கேம்பிரிட்ஜ், 1995), ப.51]
உற்பத்தி ரீதியாக அமெரிக்க முதலாளித்துவம் போட்டித்தன்மையை இழந்து வருவதால், தனது உலகளாவிய நிலையைத் தக்கவைத்துக் கொள்ள அது பெருகிய முறையில் இராணுவ பலத்தையும் கட்டாயத்தையும் சார்ந்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நடந்த போர்கள் வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. மாறாக பொருளாதார ஆற்றல் மூலம் மட்டுமே தனது நலன்களைப் பாதுகாக்க முடியாத ஒரு அமைப்பின் வெளிப்பாடுகளாகும். நிரந்தரப் போர், ட்ரோன் மூலம் படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தடுப்புக்காவல்கள் போன்றவற்றை இயல்பாக்குவது அரசியல் வாழ்க்கையின் குரூரமடைதலைக் குறிக்கிறது; இது தவிர்க்க முடியாமல் உள்நாட்டு அரசியலிலும் திரும்பி பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவில் மதுவிலக்கு இடம்பெற்ற காலத்தில் மாஃபியாக்கள் கையாண்ட முறைகளை ட்ரம்ப் தனது வெளியுறவுக் கொள்கையில் அமல்படுத்துகிறார். அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட ட்ரம்பிற்கு, அல் கபோன் (Al Capone-சிக்காகோவில் இருந்த மிகவும் பிரபலமான மாஃபியா குண்டர் தலைவன்) பயன்படுத்திய தாம்சன் துப்பாக்கிகளை மட்டுமல்ல, மனித வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான இராணுவ சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுதக் களஞ்சியத்தையும் தன்வசம் கொண்டுள்ளார்—இது மனித வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான இராணுவ சக்தியாகும். இதில் நாகரிகத்தையே முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களும் அடங்கும். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படை ஆபத்து இதுதான்: பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறனை இழந்துவிட்ட ஓர் ஆளும் வர்க்கத்தின் சேவையில், ஒரு வல்லரசின் ஆயுத பலத்தால் ஆதரிக்கப்படும் ஒரு குண்டரின் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ட்ரம்ப் ஆட்சியின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் வெடிப்பு—வெனிசுவேலா மீதான படையெடுப்பு, கனடா மற்றும் கிரீன்லாந்தை இணைப்பதற்கான பகிரங்க அச்சுறுத்தல்கள், ஈரான் மீதான இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புகள்—அமெரிக்கக் கொள்கையில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்காத நேட்டோவின் ஐரோப்பிய நட்பு நாடுகளை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் முற்றிலும் தயாராகாமல் சிக்கிக் கொண்டனர்.
ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பை ட்ரொட்ஸ்கியாலும் அவர் நிறுவிய இயக்கத்தாலும் மிக நீண்ட காலத்திற்கு முன்பே குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் முன்னறிவிக்கப்பட்டது. 1928-ஆம் ஆண்டிலேயே, போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சிக்கு பின்னரும், பொருளாதார பெரு மந்தநிலைக்கு முன்னருமான காலத்தில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்:
நெருக்கடியான காலகட்டத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கம், பொருளாதார செழிப்பின் காலத்தை விட மிகவும் முழுமையாகவும், வெளிப்படையாகவும், இரக்கமற்ற முறையிலும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே இது நடந்தாலும் சரி, அல்லது அமைதியான முறையிலோ அல்லது போரின் மூலமாகவோ இது நடந்தாலும் சரி, தனது சிரமங்களையும் நோய்களையும் சமாளிக்கவும் அவற்றிலிருந்து தப்பிக்கவும், அமெரிக்கா முதன்மையாக ஐரோப்பாவின் செலவில் முயற்சிக்கும்.
ட்ரொட்ஸ்கி ஏகாதிபத்திய மோதலுக்கான பொதுவான போக்கை மட்டும் முன்கூட்டியே கணிக்கவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் இலட்சியங்களின் புவியியல் பரப்பையும், அவை எவ்வளவு இரக்கமின்றித் தொடரப்படும் என்பதையும் அவர் அசாதாரணமான துல்லியத்துடன் அடையாளம் காட்டினார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ட்ரம்ப் கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார், பனாமாக் கால்வாயைக் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார், வெனிசுவேலா மீது படையெடுக்கிறார், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை விட்டுக்கொடுக்கக் கோருகிறார் மற்றும் ஈரானை இராணுவ அழிவு மூலம் அச்சுறுத்துகிறார்.
“1934-இல், ஜேர்மன் பாசிசத்தின் எழுச்சி மற்றும் இரண்டாம் உலகப் போரின் நெருக்கடிக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கி இந்த ஆய்வை மேலும் கூர்மைப்படுத்தினார். “உலகம் பிரிக்கப்பட்டுவிட்டதா? அது மீண்டும் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை அது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும்’ ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவோ உலகத்தையே ‘ஒழுங்கமைக்க’ வேண்டும். வரலாறு மனிதகுலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புடன் முகத்திற்கு நேராக நிறுத்துகிறது.” இந்தச் சொற்றொடர்—அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பு—என்பது காலாவதியான ஒரு உவமை அல்ல. அது இன்று நிறைவேறிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் பூர்வமான முன்கணிப்பாகும்.
இதுவரை நாங்கள் முன்வைத்துள்ள பகுப்பாய்வு, முதலாளித்துவ அமைப்பின் மற்றும் அதன் ஆளும் வர்க்கத்தின் சிதைவையும் அழுகலையும் கணிசமான விவரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அச்சுறுத்தலை மட்டும் பார்ப்பது—மனச்சோர்வுக்கும் அவநம்பிக்கைக்கும் அடிபணிவது—ஒரு ஆழ்ந்த அரசியல் பிழையாகும். இந்த நெருக்கடி பாசிசம் மற்றும் போரின் அபாயத்தை மட்டுமல்ல, சமூகப் புரட்சிக்கான புறநிலை சாத்தியத்தையும் தன்னுடன் கொண்டு வருகிறது. உண்மையில், ஆளும் வர்க்கத்தை சர்வாதிகாரத்தையும் இராணுவவாதத்தையும் நோக்கித் தள்ளும் அதே முரண்பாடுகள்தான், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்திற்கான நிலைமைகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கி வருகின்றன.
இந்த நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? முதலாளித்துவ வர்ணனையாளர்கள் ஓயாமல் கூறுவது போல, இது தலைமைத்துவத்தின் தோல்வி, நாகரிகத்தின் பற்றாக்குறை, அல்லது ஜனநாயக விதிமுறைகளின் முறிவு அல்ல. இவை அனைத்தும் அறிகுறிகள் மட்டுமே. இதன் காரணம் கட்டமைப்பு ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் உள்ளது: உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமைக்கும், உற்பத்திச் செயல்முறையின் பெருகிவரும் சமூகத் தன்மைக்கும் இடையிலான சமரசமற்ற முரண்பாடு. இது மார்க்ஸால் அடையாளம் காணப்பட்ட மைய முரண்பாடாகும், மேலும் தற்போதைய சகாப்தத்தில் அதன் செயல்பாடு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத தீவிரத்தை எட்டியுள்ளது.
இதனுடன், நெருக்கமாகத் தொடர்புடைய இரண்டாவது முரண்பாட்டையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்: உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும்—உண்மையான உலகளாவிய உற்பத்தி, பரிவர்த்தனை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பின் உருவாக்கத்திற்கும்—இடையே, அரசியல் அதிகாரம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள காலாவதியான தேசிய-அரசு அமைப்பிற்கும் இடையிலான முரண்பாடு. நாடுகடந்த உற்பத்தி வலைப்பின்னல்கள், டஜன் கணக்கான நாடுகளைக் கடந்து செல்லும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், மற்றும் உடனடி உலகளாவிய தகவல் தொடர்பு ஆகியவற்றின் தோற்றம், உற்பத்தி சக்திகளின் பகுத்தறிவுள்ள வளர்ச்சிக்கு தேசிய-அரசு ஒரு தடையாக மாறியுள்ளது. மூலதனம் எல்லைகளைக் கடந்து சுதந்திரமாகப் பாய்கிறது; உழைப்பு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது; தைவானில் உள்ள ஒரு குறைக்கடத்தி (semiconductor) தொழிற்சாலையில் ஏற்படும் ஒரு இடையூறு, மிச்சிகனில் உள்ள வாகன ஆலைகள், குவாங்டாங்கில் உள்ள மின்னணு உதிரிப் பாகங்கள் உற்பத்தி வரிசைகள் (Assembly lines) மற்றும் வேர்ஜீனியாவில் உள்ள சேவையகப் பண்ணைகள் (Server farms) வரை அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. ஆயினும்கூட, அரசியல் அதிகாரம் தேசிய எல்லைகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளது; போட்டியிடும் தேசிய முதலாளித்துவங்களின் நலன்களால் வழிநடத்தப்படும் ஆளும் வர்க்கங்களின் கணக்கீடுகளால் அது கையாளப்படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம் இந்த முரண்பாட்டை இராணுவ வலிமையின் மூலம் தீர்க்க முயல்கிறது—அதாவது பூகோளப் பொருளாதார உறவுகளைத் தனக்கு சாதகமான முறையில் வன்முறை மூலம் மாற்றியமைப்பதன் வழியாக இதைச் செய்ய முனைகிறது. வழக்கமான “சுதந்திர உலகத்தைப் பாதுகாத்தல்” என்ற போர்வையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையின் அத்தியாவசிய உள்ளடக்கம் இதுவேயாகும்.
இருப்பினும், இதே பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு மற்றொரு சக்தியையும் உருவாக்கியுள்ளது—அந்த சக்தியை உருவாக்குவது முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கமாக இருக்கவில்லை, மேலும் அதன் புரட்சிகரமான தாக்கங்களை அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிலும், செறிவிலும், புறநிலை ரீதியான ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட தன்மையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான உலகளாவிய தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டில், உலக மக்கள் தொகையின் நகரமயமாக்கலும், பாட்டாளி வர்க்கமயமாக்கலும், திகைப்பூட்டும் அளவிலான மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. இலத்தீன் அமெரிக்காவில், நகர்ப்புற மக்கள் தொகை 1970-ல் 57 சதவீதமாக இருந்தது இன்று 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது சாவ் பாலோ, மெக்சிகோ சிட்டி, புவெனஸ் அயர்ஸ், பகோட்டா மற்றும் லிமா போன்ற நகரங்களில் தொழிலாள வர்க்க மக்கள் தொகையின் மிகப்பெரிய செறிவை உருவாக்கியுள்ளது. ஆப்பிரிக்காவில், நகர்ப்புற மக்கள்தொகை 1970-ல் சுமார் 80 மில்லியனிலிருந்து 700 மில்லியனுக்கும் அதிகமாக, அதாவது கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. ஆசியா முழுவதும் —சீனா, இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில்—கோடிக்கணக்கான விவசாயிகள் ஒரே தலைமுறைக்குள் தொழில்துறை உற்பத்திக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டும் மனித வரலாற்றின் மிகப்பெரிய இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. 1980-களுக்குப் பிறகு சுமார் 300 மில்லியன் மக்கள் கிராமப் புறங்களிலிருந்து தொழில்துறை நகரங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இன்றைய உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பில்லியன்களில் உள்ளது.
நவீன உற்பத்தியின் நாடுகடந்த தன்மையும், உலகளாவிய விநியோகச் சங்கிலியும், தொழிலாள வர்க்கத்தை வரலாற்றில் இதற்கு முன் உதாரணமே இல்லாத வகையில் புறநிலை ரீதியாக ஒன்றிணைக்கின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் நடக்கும் ஒரு வேலைநிறுத்தம், வூஹானில் உள்ள உற்பத்தி ஆலைகளைப் பாதிக்கிறது. தென்னாப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர்களின் வெளிநடப்பு, ஜேர்மனியில் உள்ள உற்பத்தித் தொழிலை முடக்குகிறது. ஒரு ஒற்றை ஸ்மார்ட்போனைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் —கொங்கோவில் அரிய கனிமங்களை வெட்டியெடுப்பதில் இருந்து, சிலியில் லித்தியத்தைச் சுத்திகரிப்பது, தென் கொரியாவில் சிப்களைத் தயாரிப்பது, ஷென்செனில் ஒன்றிணைப்பது, பெங்களூரு மற்றும் குபெர்டினோவில் மென்பொருளை உருவாக்குவது வரை— கண்டங்கள் கடந்த ஒரு உற்பத்திச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர். இது தேசிய எல்லைகளைத் தொழில்நுட்ப ரீதியாகக் காலாவதியானதாக ஆக்குகிறது. உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் இந்தப் புறநிலை ஒருங்கிணைப்பு, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத புரட்சிகர சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறது. இந்தப் புறநிலை ஐக்கியத்தின் நனவு பூர்வமான அரசியல் வெளிப்பாடே இப்போது தேவைப்படுகிறது —அதாவது ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டமும் ஒரு சர்வதேசப் புரட்சிகரக் கட்சியும்.
மேலும், அரசியல் ரீதியாகப் பிற்போக்குத்தனத்தின ஆதிக்கம் இருந்தபோதிலும், கடந்த அரை நூற்றாண்டு காலமானது மனித வரலாற்றிலேயே மிகச்சிறந்த அறிவியல் (விஞ்ஞானம் ) மற்றும் தொழில்நுட்பப் புரட்சி என்று நியாயமாக விவரிக்கப்படக்கூடிய ஒன்றைக் கண்டுள்ளது. அறிவியலின் ஒவ்வொரு துறையும் ஒரு அசாதாரணமான மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
உயிரியல் துறையில், மனித மரபணுவின் வரிசைப்படுத்தல், CRISPR மரபணுத் திருத்தத் தொழில்நுட்பத்தின் உருவாக்கம் மற்றும் உலக வரலாற்று வேகத்துடன் நிரூபிக்கப்பட்ட mRNA சிகிச்சைகளில் ஏற்பட்ட புரட்சி ஆகியவை கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஒரு தலைமுறைக்கு முன்பு அற்புதமாகத் தோன்றியிருக்கும் நோயை வெல்வதற்கான சாத்தியங்களைத் திறந்துவிட்டன.
வானியல் மற்றும் இயற்பியல் துறைகளில், புவி ஈர்ப்பு அலைகளைக் கண்டறிதல், கருந்துளைகளைப் படம்பிடித்தல், ஆயிரக்கணக்கான புறக்கோள்களைக் கண்டுபிடித்தல் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் அசாதாரணமான துல்லியம் ஆகியவை பிரபஞ்சத்தைப் பற்றிய பற்றிய நமது புரிதலை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.
வேதியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில், புதிய வினையூக்கிகள், நானோ பொருட்கள் மற்றும் சூரிய மின்கலத் திறன் மற்றும் மின்கல சேமிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றங்கள் உள்ளிட்ட நிலையான எரிசக்தி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்கான தொழில்நுட்ப அடிப்படை இருப்பதை நிரூபித்துள்ளன.
மருத்துவத் துறையில், நோய் எதிர்ப்புச் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நோய்களைக் கண்டறிய படம்பிடிக்கும் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணுயிர் (microbiome) தொகுதியின் புரிதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மனித ஆரோக்கியத்தின் எல்லைகளை அடிப்படையில் விரிவுபடுத்தியுள்ளன.
இப்போது செயற்கை (அல்லது சரியாகச் சொல்வதானால், மேம்படுத்தப்பட்ட) நுண்ணறிவு (AI) உள்ளது. பெரிய மொழி மாதிரிகள் (large language models), புரத அமைப்பு முன்னறிவிப்பு திறன் கொண்ட இயந்திர கற்றல் அமைப்புகள் (machine learning systems), செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய மருந்து கண்டுபிடிப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் (autonomous systems) வளர்ச்சி ஆகியவை ஒரு தொழில்நுட்பப் புரட்சியைக் குறிக்கின்றன, அதன் தாக்கங்கள் இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு முதன்மையாக இலாபம் ஈட்டும் கருவியாக உருவாக்கப்படுகிறது—அதாவது தொழிலாளர் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கும், கண்காணிப்பை விரிவுபடுத்துவதற்கும், நுகர்வோர் நடத்தையைக் கையாள்வதற்கும் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கான எந்தவொரு ஏற்பாடும் இன்றி அவர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், முதலாளித்துவ இலாபத்தின் கட்டாயங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டால், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு எதைச் சாதிக்க முடியும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். சமூகத் திட்டமிடலுக்கான சாத்தியக்கூறுகள் —அதாவது வளங்களை பகுத்தறிவுடன் ஒதுக்குதல், தனிநபர் செல்வத்தைப் பெருக்குவதற்குப் பதிலாக மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை மேம்படுத்துதல், கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவைக் குறைத்தல், மற்றும் மனிதர்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் தரம் குறைந்த உழைப்பிலிருந்து விடுவித்தல் போன்றவை— அசாதாரணமானவை. தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள AI, சுரண்டலுக்கான கருவியாக அல்லாமல், விடுதலைக்கான கருவியாகச் செயல்பட முடியும். இது சோசலிச இயக்கம் நீண்ட காலமாக எதிர்பார்த்த, ஆனால் இதுவரை தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் செயல்படுத்த முடியாமல் இருந்த ஒரு பொருளாதாரத் திட்டமிடலையும் ஒருங்கிணைப்பையும் சாத்தியமாக்கும்.
இந்த முரண்பாடு மிகத் தெளிவாகத் தெரிகிறது. மனிதகுலம் தனது வரலாற்றில் முதன்முறையாக, பசி, நோய், சுற்றுச்சூழல் சீரழிவு, சுரண்டல் உழைப்பின் கடினத்தன்மை போன்ற பொருட்சார்ந்த இருப்பின் மிக அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்க்கும் அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் திறன்கள்–அவற்றை தனியார் இலாபத்தைச் சேர்ப்பதற்கு அவற்றைக் கீழ்மைப்படுத்தும், அறிவியல் மேதைமையை நிதிப் பொறியியல் மற்றும் ஆயுத மேம்பாட்டிற்குத் திசைதிருப்பும், கணினி வழிமுறைகள் விளம்பர வருவாயை அதிகரிக்க மேம்படுத்தப்படும் போது குழந்தைகள் பட்டினியால் வாட அனுமதிக்கும்–ஒரு சமூக அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொழில்நுட்பத்தின் மீதான குற்றச்சாட்டு அல்ல, மாறாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் சமூக அமைப்பின் மீதான குற்றச்சாட்டாகும். தனியார் முதலாளித்துவ உரிமையின் இறுக்கமான பிடியிலிருந்து அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் விடுவிப்பது சோசலிசப் புரட்சியின் ஒரு முக்கியப் பணியாகும்.
ஆளும் தன்னலக் குழுவால் கட்டுப்படுத்தப்படும் AI தொழில்நுட்பம் பெரும் அபாயங்களைக் கொண்டுள்ளது. ஆனால், மார்க்சிச மற்றும் சோசலிச இயக்கத்தால் அது பயன்படுத்தப்படுவது, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் விழிப்புணர்வுக்கு முன்னெப்போதும் இல்லாத சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது. டிசம்பர் 2025-ல் சோஷலிசம் AI-ஐ அறிமுகப்படுத்தியபோது உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல:
சோசலிசம் AI-யின் தீர்க்கமான முக்கியத்துவம், தொழிலாளர் வர்க்கத்தின் புறநிலை இயக்கத்திற்கும் சோசலிச நனவின் அகநிலை மட்டத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் திறனில் உள்ளது. தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள், எவ்வளவுதான் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அவை ஒரு ஒத்திசைவான புரட்சிகர முன்னோக்கை உருவாக்காது என்பதை மார்க்சிசம் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. நனவு வளர்த்தெடுக்கப்பட வேண்டும், வரலாற்று அனுபவம் உள்வாங்கப்பட வேண்டும், தத்துவார்த்த பார்வை அடையப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இப்போது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உலகம் முழுவதும் கருத்துகளை விரைவாக பரப்பும் வாய்ப்பை வழங்குகின்றன. இதனால், தொழிலாளர் வர்க்கம் தங்களது அரசியல் புரிதலை, தற்போதைய நெருக்கடிக்கு ஏற்ப, விரைவாக வளர்த்துக்கொள்ள முடிகிறது.
ஆளும் வர்க்கத்தின் சீரழிவு, பொருளாதார முறிவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு, பாசிச அரசியலின் எழுச்சி, ஜனநாயக வடிவங்களின் அழிவு என இன்றைய பழைய ஆட்சிமுறையின் உலகளாவிய நெருக்கடியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), உலக சோசலிச வலைத் தளமும் ஆய்வு செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இன்று வெளிப்படையாக வெடித்து வரும் இந்த உலகளாவிய நெருக்கடி, பல ஆண்டுகளுக்கு முன்பே வியக்கத்தக்க துல்லியத்துடன் கணிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 2016-ல், அதி செவ்வாய்க்கிழமை முதன்மைத் தேர்தல்களில் ட்ரம்ப் பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து, உலக சோசலிச வலைத் தளம் ஒரு முன்னோக்கு கட்டுரையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருந்தது:
டொனால்ட் ட்ரம்ப்பின் வேட்புமனுவை, மிக சமீப காலம் வரை பல அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்டது போல, ஒரு வினோதமான மற்றும் ஓரளவு வேடிக்கையான ஒரு பக்கக் காட்சியாக இனி தள்ளிப்போட முடியாது. தேர்தல் முடிவு இன்னும் நிச்சயமற்றதாக இருந்தாலும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவிற்கான முன்னணி வேட்பாளர், தனது ஆளுமையிலும் மக்களை ஈர்க்கும் விதத்திலும் தெளிவாக பாசிசப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒருவராக இருக்கிறார்.
தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார பேரழிவில் தான் ட்ரம்ப்பிற்கான ஆதரவின் சடரீதியான வேர்கள் உள்ளன என்பதை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியது. மேலும், சமூக நெருக்கடியைத் தீர்க்க தவறும் போலி-இடதுகளும் ஜனநாயகக் கட்சியும், வலதுசாரி ஜனநாயக விரோதப் பிரசாரத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று அது எச்சரித்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே 2016-ல், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஒரு மேலதிக பகுப்பாய்வை வெளியிட்டது. அதில், குடியரசுக் கட்சியின் சாத்தியமான வேட்பாளராக ட்ரம்ப் உருவெடுத்தது “அமெரிக்க மற்றும் உலக அரசியலில் ஒரு ஆபத்தான திருப்புமுனை” என்றும், “இரண்டு முக்கிய முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றின் வேட்பாளராக ஒரு பாசிச வாய்வீச்சாளர் தேர்ந்தெடுக்கப்படுவது, அமெரிக்க ஜனநாயகம் அழுகிப்போயுள்ள நிலைக்கு மறுக்க முடியாத சான்றாகும்” என்றும் எச்சரித்தது. அந்தக் கட்டுரை ஒரு பரந்த வரலாற்று முடிவைக் குறிப்பிட்டது: “ட்ரம்ப்பின் வேட்புமனு என்பது ஏதோ ஒரு தற்காலிகமான அல்லது தற்செயலான நிகழ்வு அல்ல. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால நெருக்கடியிலும், அதன் வரலாற்று ரீதியான முதலாளித்துவ-ஜனநாயக கட்டமைப்பின் முறிவிலும் வேரூன்றியுள்ளது”.
தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே —மே 2016-ல்— உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது: ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றாலும், “இன்னும் கூடுதலான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபருக்கான களம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ட்ரம்ப் அதன் தலைமையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஜனவரியில் ஆட்சியை ஏற்கும் அரசாங்கம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்கான, வன்முறையான மற்றும் சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக இருக்கும்”. ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், இன்று கணிப்புகளாகத் தோன்றவில்லை, மாறாக நிறுவப்பட்ட உண்மைகளின் விவரிப்புகளாகவே படிக்கப்படுகின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இந்த நுண்ணறிவுகளைத் தற்செயலாகக் கண்டடையவில்லை அல்லது வெறும் யூகத்தின் மூலம் அடையவில்லை. இவை மார்க்சிச வழிமுறையின் பிரயோகத்தில் இருந்து உருவாயின —அதாவது முதலாளித்துவ அமைப்பு முறையின் புறநிலை முரண்பாடுகள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவம் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆய்விலிருந்து இவை ஊற்றெடுத்தன.
ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலமே தொழிலாள வர்க்கம் வரலாற்றுச் சூழலைப் பற்றிய நனவு பூர்வமான புரிதலை வளர்த்துக் கொள்ளவும், சமூகத்தின் சோசலிச மாற்றத்தை முன்னெடுக்கவும் முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை தற்போதைய நெருக்கடியை முன்கூட்டியே கணித்து, அதன் வர்க்கத் தன்மையை அடையாளம் கண்டு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கான ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கியுள்ளது என்பது, இந்தப் பணிக்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் கருவிகள் ஏற்கனவே உள்ளன என்பதையே நிரூபிக்கிறது. அவற்றை புதிதாகக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. அவற்றை எடுத்துக்கொண்டு, கற்றுக்கொண்டு, பயன்படுத்தினாலே போதுமானது.
அப்படியானால், இதிலிருந்து என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்?
ட்ரம்ப் ஒரு நோய் அல்ல. அவர் அந்த நோயின் மிக முற்றிய அறிகுறி மட்டுமே. அவரைத் தேர்தல்கள் மூலம் பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்த்துவிடலாம் என்று நம்புவது மிகவும் ஆபத்தான மாயையாகும். 2026 இடைத்தேர்தல்கள் மட்டுமின்றி, எதிர்கால ஜனாதிபதித் தேர்தல்களும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தேர்தல்களை அடக்குவதற்கும் அல்லது கையாளுவதற்கும் அடித்தளத்தை ட்ரம்ப் ஏற்கனவே அமைத்து வருகிறார். மினியாபோலிஸை ஆக்கிரமித்த அதே குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவர்கள் மற்றும் மத்திய கூட்டாட்சி அரசின் அதிகாரிகளைப் பயன்படுத்தி, வாக்காளர்களை அச்சுறுத்தவும் அவர்களை வாக்குச் சாவடிகளுக்கு வராமல் தடுக்கவும் அவர் அரசுப் படைகளைப் பயன்படுத்துவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனவரி 6, 2021 அன்று தான் நடத்திய சதித் திட்டத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள அவருக்குப் போதிய அவகாசம் கிடைத்துள்ளது. அடுத்த முயற்சி, ஒழுங்கமைக்கப்படாத வெறியர்கள் கும்பலால் நடத்தப்படும் ஒரு தற்காலிகக் கலவரமாக இருக்காது. அது தன் வசம் உள்ள ஒட்டுமொத்த மத்திய அரசாங்கத்தின் முழு இயந்திரத்தையும் கொண்டு செயல்படுத்தப்படும்.
உயிரியல் ரீதியான காரணங்களால் ட்ரம்ப் களத்திலிருந்து அகற்றப்பட்டாலும் கூட, சர்வாதிகாரத்தை நோக்கிய இந்த நகர்வானது நின்றுவிடாது. ஒருவேளை ட்ரம்ப்பை விட சற்றே மெருகேற்றப்பட்ட, ஆனால் அவரைப் போலவே ஆபத்தான ஒரு புதிய ட்ரம்ப் உருவாக்கப்படுவார். ட்ரம்ப்பை உருவாக்கிய அதே புறநிலை சக்திகள் —அதாவது அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி, அதன் உற்பத்தி அடித்தளத்தின் சிதைவு, நிதி ஒட்டுண்ணித்தனத்தின் ஆதிக்கம், சமூக சமத்துவமின்மையின் அழுத்தத்தால் ஜனநாயக நிறுவனங்களின் சிதைவு— அவரது அடுத்த வாரிசின் கொள்கைகளையும் தீர்மானிக்கும்.
ட்ரம்ப் நிர்வாகமானது முதலாளித்துவ ஜனநாயக மரபுகளின் தீர்க்கமான முறிவையும், சர்வாதிகாரத்தை நோக்கிய முன்னெப்போதினும் கூடுதலான வெளிப்படையான மாற்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் இது வெளிப்படையான வர்க்க மோதலின் பரந்த அதிகரிப்பையும், சமூகப் புரட்சிக்கான மாற்றத்தையும் குறிக்கிறது.
அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடிக்கு, தற்போதுள்ள நிறுவனங்களிலிருந்தோ அல்லது முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிலிருந்தோ எந்தத் தீர்வும் கிடைக்காது. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பு மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கிற்கு வெளியே, அவற்றுடன் சமரசமற்ற எதிர்ப்பின் மூலமாக மட்டுமே தீர்வு உருவாக முடியும், உருவாகும்.
இது ஒரு கற்பனாவாத முன்னோக்கு அல்ல. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் காட்டும் எதிர்வினை, ஏற்கனவே ஒரு அரசியல் தீவிரமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு தொடங்கிவிட்டதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
அமெரிக்கா எங்கே செல்கிறது?’ என்ற இந்த நூலின் தலைப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்வி, கல்விசார் விவாதங்களில் அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எதிர்-புரட்சிகரமான இரக்கமற்ற தன்மையை குறைத்து மதிப்பிடுவது பொறுப்பற்ற செயலாகும். ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின் மறைந்திருக்கும் ஆற்றலையும் புரட்சிகரத் திறனையும் தள்ளுபடி செய்வது பேரழிவுகரமான குறுகிய பார்வையாகும். அதுமட்டுமல்லாமல் அது ஒரு தோல்வி மனப்பான்மையுமாகும். புறநிலை நிலைமைகளின் அடிப்படையில் பார்த்தால், வளர்ச்சியின் மேலாதிக்கப் போக்கு சந்தேகத்திற்கு இடமின்றி சோசலிசத்தை நோக்கியே உள்ளது. ஆனால் இந்தப் புறநிலை ஆற்றலானது புரட்சிகர வர்க்கத்தின் அகநிலை நனவில் வெளிப்படையாகப் பிரதிபலிக்க வேண்டும்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள், “மன்னர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்தை கிட்டத்தட்ட தன்னெழுச்சியாக, ஏற்றுக்கொண்டிருப்பது மகத்தான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூன் 2025-ல், மில்லியன் கணக்கான மக்கள் இந்த பதாகையின் கீழ் அணிவகுத்துச் சென்றனர். அக்டோபரில், 50 மாநிலங்களிலும் நடைபெற்ற 2,700-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். மினியாபோலிஸ் நகரை மத்திய கூட்டாட்சியின் படைகள் ஆக்கிரமித்ததை எதிர்த்து, ஜனவரி 23 அன்று உறைநிலைக்குக் கீழான கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் திரண்டது, சமீபத்திய அமெரிக்க வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க மக்கள் எதிர்ப்புகளில் ஒன்றாகும். பொஸ்டனில் வெளிவந்த ஒரு தொலைக்காட்சி தலையங்கம், 2026-ன் மினியாபோலிஸிற்கும், 1775-ன் பொஸ்டனுக்கும் இடையே ஒரு தெளிவான ஒப்பீட்டை வரைந்தது. —அதாவது மத்திய கூட்டாட்சியின் முகவர்களால் ஒரு அமெரிக்க நகரம் ஆயுதமேந்தி ஆக்கிரமிக்கப்பட்டதற்கும், சுதந்திரப் போரைத் தூண்டிய பிரிட்டிஷ் இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் இடையே அந்த ஒப்பீடு அமைந்திருந்தது.
அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் எந்தவொரு புரட்சிகரப் பாரம்பரியமும் இன்றி இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் புரட்சிகர மரபானது, உலகிலேயே மிகவும் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த ஒன்றாகும். நவீன வரலாற்றின் இரண்டு பெரும் புரட்சிகர எழுச்சிகளான 1775-1783-ன் அமெரிக்கப் புரட்சி மற்றும் 1861-1865-ன் உள்நாட்டுப் போர் ஆகியவை இன்றும் அமெரிக்க மக்களின் நனவில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்ற முடியாத உரிமைகளைப் பெற்றவர்கள் என்ற பிரகடனத்தைக் கொண்ட சுதந்திரப் பிரகடனம் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை மற்றும் உரிய சட்ட நடைமுறை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் உரிமைகள் மசோதா போர்க்களத்தில் எட்டப்பட்ட வெற்றியைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்திய அடிமை விடுதலைப் பிரகடனம் மற்றும் 13, 14, 15-வது திருத்தச் சட்டங்கள்: அதாவது இரண்டாவது அமெரிக்கப் புரட்சியின் மூலம் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது ஆகிய அனைத்தும் இந்த பாரம்பரியத்தின் அங்கங்களாகும்.
இந்த வரலாற்றுச் சான்றுகள் வெறும் பழைய ஆவணங்கள் அல்ல; அவை மக்கள் நனவுகளில் ஆழமாகப் பதிந்துள்ள உயிர் வாழும் மரபுகள் ஆகும். இவை சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வலிமையான அடித்தளத்தை வழங்குகின்றன.
பாரிய போராட்டங்களில் புரட்சிகரமான கடந்த காலத்தை நினைவுபடுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் ஜனநாயக மரபுகள் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. தங்கள் முன்னோர்கள் எதற்காகப் போராடினார்களோ, அந்த விழுமியங்களுக்கு ஒரு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதைச் சரியாக உணர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்களால் இந்த மரபுகள் இன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த ஜனநாயக மரபு மட்டுமே போதுமானதல்ல. தேசிய ஜனநாயகப் புரட்சிகளின் யுகம் இப்போது வெகு தொலைவில் உள்ள கடந்த காலத்திற்குச் சொந்தமானது. தற்போதைய வரலாற்று சகாப்தம் உலக சோசலிசப் புரட்சிக்கான காலமாகும். 1917 அக்டோபர் புரட்சியின் போது ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய அனுபவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கத் தொழிலாளர்களின் உள்ளுணர்வான போராட்டக் குணத்திற்கும், மார்க்சிசத்தின் பிரம்மாண்டமான தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபிற்கும் இடையிலான தடையானது கடக்கப்பட வேண்டும்.
முதலாவது அமெரிக்கப் புரட்சி காலனித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து சுதந்திரத்தை நிலைநாட்டியது. இரண்டாவது அமெரிக்கப் புரட்சி அடிமைமுறையை ஒழித்துக்கட்டியது. சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் தீர்க்கமான அங்கமாக விளங்கும் மூன்றாவது அமெரிக்கப் புரட்சியின் பணி, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதாகும். தொழிலாளர் வர்க்கத்திற்கு இன்று தேவையானது என்னவென்றால், அதன் ஆழமான ஜனநாயக அபிலாஷைகளை சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு வேலைத் திட்டமும் கட்சியுமே ஆகும். அதாவது, உண்மையான ஜனநாயகம் என்பது, நிதியியல் தன்னலக்குழுவின் சர்வாதிகாரத்துடன் ஒத்துப்போகாது என்பதையும், சமூகத்தின் சோசலிச மாற்றத்தின் மூலம் மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் புரிந்து கொள்ளும் ஒரு அரசியல் தேவைப்படுகிறது.
இந்தப் போராட்டம் சர்வதேசத் தன்மை கொண்டது. எப்ஸ்டீன் வலையமைப்பு சர்வதேச அளவில் பரவியிருந்தது. ட்ரம்ப்பின் பாசிச அரசியல் என்பது எந்த வகையிலும் அமெரிக்காவிற்கு மட்டும் தனித்தானது அல்ல. ஐரோப்பா முழுவதும் அவருக்கு அரசியல் நகலெடுப்பாளர்கள் இல்லாமல் இல்லை: இத்தாலியில் மெலோனி, பிரான்சில் லூ பென், பிரிட்டனில் பாரேஜ், ஜேர்மனியில் AfD கட்சியின் தலைவர்கள் என அவர்களது பட்டியல் நீள்கிறது. மூன்றாவது பேரரசு (ஹிட்லரின் ஆட்சி) வீழ்ந்து 81 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் அறிவிக்கப்படாத முழக்கம்: “ஐரோப்பாவை மீண்டும் பாசிசமயமாக்குங்கள்” என்பதாகும்.
முதலாளித்துவத்தின் நெருக்கடி சர்வதேசமானது. தொழிலாளர் வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கமாகும். இதற்கு எந்தவொரு தேசியத் தீர்வும் இல்லை, இருக்கவும் முடியாது. அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் நிலைபெற்று வரும் தன்னலக்குழுவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சர்வதேசப் புரட்சிகர இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கம் மார்க்சிசத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களால் வழிநடத்தப்பட வேண்டும், தொழிலாளர் வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும், மேலும் முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசுவதுக்கு தன்னை அர்ப்பணித்திருக்க வேண்டும்.
தற்போதைய நெருக்கடியின் பிரம்மாண்டமான அளவிற்கும், தற்போதைய நனவின் மட்டத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. கம்யூனிச எதிர்ப்பு என்பதை கிட்டத்தட்ட ஒரு அரசு மதம் என்ற நிலைக்கு உயர்த்தி, அனைத்து வகையான அரசியல் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனங்களையும் இடைவிடாமல் ஊக்குவிக்கும் ஒரு நாட்டில், இது எப்படி இருக்காமல் போகும்? சமூகத்தின் உண்மையான நிலையைப் பற்றிய எந்தவொரு விமர்சனப் பகுப்பாய்வும் பொதுமக்களுக்குக் கிடைக்காமல் செய்ய சாத்தியமான அனைத்தும் செய்யப்படுகின்றன. செய்தி ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்த பெருநிறுவனங்கள் மற்றும் பிற்போக்குத்தனமான கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களின் கட்டுப்பாட்டிலும் தேவையிலும், செய்திகளின் புறநிலை அறிக்கையிடல் என்பது முற்றிலும் பிரச்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. மாலை நேரச் செய்தி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வானிலை அறிக்கைகள், மனிதநேயம் சார்ந்த சிறுகதைகள், விளையாட்டு மற்றும் மருந்துப் பொருட்களின் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கே ஒதுக்கப்படுகின்றன.
இன்றைய புறநிலைச் சூழல், மற்றொரு வரலாற்று நெருக்கடி காலத்தில் ஆப்ரகாம் லிங்கன் குறிப்பிட்டது போல, “கஷ்டங்களால் குவிந்து கிடக்கிறது.” ஆனால், இந்தப் பிரச்சனைகளை உருவாக்கிய அதே புறநிலை நிலைமைகள், அவற்றுக்கான தீர்வுக்கான சாத்தியக்கூறுகளையும் உருவாக்குகின்றன. தற்போதைய சூழல் முன்வைக்கும் மிகப்பெரிய பணி என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் நனவு மட்டத்தை இந்த புறநிலை நெருக்கடிக்குத் தேவையான நிலைக்கு உயர்த்துவதாகும்.
இது எவ்வாறு செய்யப்பட வேண்டும்? 1938-ஆம் ஆண்டில், பெரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும், உலகப் போர் வெடிப்பதற்குச் சற்று முன்னரும், லியோன் ட்ரொட்ஸ்கி தனது அமெரிக்க ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் இந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்: “முதலாவதாக, தொழிலாளர்கள் இன்று இதற்குத் தயாராக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், புறநிலைச் சூழலையும், அந்தச் சூழலிலிருந்து எழும் வரலாற்றுப் பணிகளையும் பற்றிய தெளிவான, நேர்மையான சித்திரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். எமது பணிகள் தொழிலாளர்களின் மனநிலையைச் சார்ந்தவை அல்ல. தொழிலாளர்களின் மனநிலையை வளர்ப்பதே எமது பணியாகும்.”
இன்று இந்த வார்த்தைகள் மிகவும் அவசரமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. எமக்கு முன்னால் உள்ள சவால் என்னவென்றால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளில் உள்ள சக சிந்தனையாளர்களுடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதாகும். இது ஒரு தொலைதூர அல்லது கற்பனையான இலக்கு அல்ல. இது நமது காலத்தின் மிகவும் அவசரமான நடைமுறைத் தேவையாகும்.
மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுப்பாய்வுகள், நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் வேலைத்திட்டம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான பாதையை வழங்குகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பிரிவுகளையும் கட்டியெழுப்புங்கள். உலக சோசலிச வலைத் தளத்தின் பணிகளையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துங்கள். மனிதகுலத்தின் எதிர்காலம் அதனைச் சார்ந்தே இருக்கிறது.
