இலங்கை: 2022 எழுச்சியின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொன்றதற்காக 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் பதவியிறக்கத்தில் முடிவடைந்த 2022 மாபெரும் எழுச்சியின் போது,​​அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பொலிஸ் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்ட வழக்கில், பெப்ரவரி 11 அன்று இலங்கை உயர் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் நான்கு பேருக்கு ஆறு மாதகாலம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, 23 பேர் விடுவிக்கப்பட்டனர்.

2022 மே 9 அன்று, கொழும்பின் காலிமுகத்திடலை ஆக்கிரமித்திருந்த ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது, தடிகளும், கத்திகளும், பிற ஆயுதங்களையும் கொண்டு ஆளும் கட்சி குண்டர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மக்கள் கோபம் வெடித்திருந்த சூழலில், இந்தக் கொலைகள் நடந்திருந்தன. ஜனாதிபதியின் சகோதரரான பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசாங்கக் கும்பல் கூடியிருந்தது. அங்கு அவர் நூற்றுக்கணக்கான தனது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆதரவாளர்களை தூண்டிவிட்டார். அந்தக் குண்டர்கள் அருகிலிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கிய பின்னர், காலிமுகத்திடலில் கூடியிருந்தவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தினர்.

காலிமுகத் திடலில் போராட்டக்காரர்களின் கூடாரத்தின் மீது வலதுசாரி குண்டர்கள் தாக்குதல் நடத்திய போது [Photo: Facebook]

இராஜபக்ச அரசாங்கம் ஏற்கனவே காலிமுகத் திடலில் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பீரங்கிகளுடன் கூடிய பொலிஸ் படையை நிலைநிறுத்தியிருந்தது. ஆனால் கண்டுகொள்ளாமல் இருந்த பொலிசார், வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. தனது சொந்த அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதலை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, கோட்டாபய இராஜபக்ஷ காலவரையற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, தெருக்களில் பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தினார்.

அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வன்முறையால் சீற்றமடைந்த பல்லாயிரக்கணக்கானோர், ஊரடங்கு உத்தரவையும் இராணுவப் நிலைநிறுத்தலையும் மீறி, தீவு முழுவதும் தெருக்களில் திரண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை மற்றும் தபால் திணைக்களம் உட்பட தொழிலாளர்களில் சில பிரிவினர், எதிர்ப்புத் தெரிவித்து தன்னிச்சையாகப் வேலையை நிறுத்தினர். மே 9 அன்று இரவு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கியதோடு சிலர் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைத் தாக்கினர்.

அதுகோரல உயிரிழந்த சம்பவம் இந்தப் பின்னணியிலேயே நடந்தது. கொழும்பிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிட்டம்புவவில், போராட்டக்காரர்கள் குழுவால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரோ அல்லது அவரது பொலிஸ் பாதுகாப்பு அதிகாரியோ கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். கோபமடைந்த போராட்டக்காரர்களால் துரத்தப்பட்ட அவ்விருவரும் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்குத் தப்பிச் சென்றனர், அங்கு இருவரும் உயிரிழந்தனர். அதுகோரல தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக ஆரம்பகட்ட பொலிஸ் அறிக்கைகள் குறிப்பிட்டன, ஆனால் அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று பிரேதப் பரிசோதனை உறுதிப்படுத்தியது.

இந்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தபோது, ​​காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது ஆயுதபாணி குண்டர்கள் நடத்திய தாக்குதல்களை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கண்டித்ததுடன், இந்தக் கும்பலை ஒழுங்கமைப்பதில் அரசாங்கத்தின் ஈடுபாட்டையும் அம்பலப்படுத்தியது. போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அது தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது. அதே நேரம், “ஒரு முற்போக்கான அரசியல் முன்நோக்கு இல்லாமல், திங்கட்கிழமை இரவு சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கு வழிவகுத்ததைப் போன்ற கோப வெளிப்பாடுகள், அரசாங்கத்தின் மற்றும் பிற்போக்குவாதிகளின் கரங்களை மட்டுமே வலுப்படுத்தும்,” என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது.

தற்போது, ​​வலுவற்ற சான்றுகள் மற்றும் குறைபாடுகளுடனான சட்டரீதியான வாதங்களின் அடிப்படையில், அதுகோரரலவைக் கொன்றதற்காக 12 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இது, தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை அச்சுறுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு வர்க்கப் பழிவாங்கும் செயலாகும்.

இதே நேரம், காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலைத் தூண்டிவிட்டு நடத்தியவர்களில்—குறிப்பாக, இராஜபக்ச சகோதரர்களில்—ஒருவருக்கு கூட மே 9 அன்று அவர்கள் செய்த செயலுக்காக வழக்குத் தொடரப்படவோ அல்லது தண்டனை வழங்கப்படவோ இல்லை.

முழுமையான தீர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அதுகோரலவுக்கும் அவரது காவலருக்கும் என்ன நடந்தது என்பதற்கு நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை என்பதை அது ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு முற்றிலும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைச் சான்றுகளையே சார்ந்துள்ளது. இலங்கை சட்ட அமைப்பில் முதல் முறையாக, தடயவியல் முகப் பகுப்பாய்வின் மூலம் சந்தேக நபர்கள் 'அடையாளம் காணப்பட்டுள்ளனர்'. ஆனால் அது ஒரு கேள்வியை எழுப்புகிறது: எங்கே, என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று அடையாளம் காணப்பட்டார்களா? அதுகோரல தப்பி ஓடிய கட்டிடத்திற்குள் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காட்டும் காணொளி ஏதேனும் உள்ளதா? அப்படியென்றால், அது நீதிமன்றத்தில் காட்டப்பட்டதா?

குற்றவாளி, குற்றத்திற்கு “ஏதேனும் ஒரு பங்களிப்பை” செய்துள்ளார் என்று காட்ட முடிந்தால், “குற்றத்தை” நிலைநாட்ட முடியும் என்று நீதிமன்றம் கண்டறிந்ததே, அத்தகைய சான்றுகள் இல்லாததைச் சுட்டிக்காட்டுகிறது. தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட இந்த சட்டக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், நடுவர் குழு (ஜூரி) இல்லாத மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இந்தத் தீர்ப்பு, 2:1 என்ற விகிதத்தில் பிளவுபட்டிருந்தது. சிரேஷ்ட நீதிபதியும் அமர்வுத் தலைவருமான சஹான் மாபா பண்டார, அரசுத் தரப்பு வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறி, தண்டனைத் தீர்ப்பை எதிர்த்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டு நீதித்துறை (திருத்த) சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்றங்கள் ஆளும் வர்க்கத்தின் சார்பாக அரசியல் முடிவுகளை வழங்கும் தீர்ப்பாயங்களாக செயல்பட முடியும். இந்தச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரால் அடையாளம் காணப்பட்ட 'விசேட வழக்குகளை' விசாரிக்க, நடுவர் குழு இல்லாமல் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற நேரடி விசாரணை அமர்வுகளை அமைக்க முடியும்.

ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆளும் கட்சிகளும் ஊடகங்களும், அரகலய என அறியப்படும் 2022 வெகுஜனப் போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு இது ஒரு 'பாடம்' என்று கூறி, நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாகப் பாராட்டின. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மாரிக்கர், 'நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்' என்று அறிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ஷ, நீதிமன்றம் 'சுதந்திரமாக' நீதியை வழங்கியதில் திருப்தி தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பால் சீற்றமடைந்த சமூக ஊடகத்தினரைக் கண்டித்த அவர், சம்பவத்தை 'பயங்கரவாதச் செயல்' என்று விவரித்து நியாயப்படுத்த முயன்றார். ஜனாதிபதி இராஜபக்ஷவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு சதித்திட்டமே அரகலய போராட்டங்கள் என ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குற்றம் சாட்டி வரும் நிலையில், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

2022 எழுச்சியின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் பொய்யாகக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இந்தத் தீர்ப்பை வினைத்திறனுடன் அங்கீகரித்துள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரிய “இது உண்மையில் ஒரு நீதித்துறைத் தீர்ப்பு. நீதித்துறைத் தீர்ப்புகள் என்பவை நீதிமன்றங்களால் வழங்கப்படுபவை. அவை அரசியல் முடிவுகள் அல்ல,” என அறிவித்தார்.

அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, இந்தத் தண்டனைகளையும் மரண தண்டனையையும் திட்டவட்டமாக எதிர்க்கிறது. மரண தண்டனை என்பது ஒடுக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மிலேச்சத்தனமான கருவியாகும். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.ர பாராளுமன்ற உறுப்பினர் கொலை தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிடவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும் கோருமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 2022 மே 9 அன்று நிராயுதபாணி போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலை ஏற்பாடு செய்த உண்மையான குற்றவாளிகளே தண்டிக்கப்பட வேண்டும்.

கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 9 ஜூலை 2022 அன்று, இலங்கை ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் தெருவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். [AP Photo/Amitha Thennakoon]

நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் ஏற்பட்ட வாழ்க்கைத்தரம் வீழ்ச்சிக்கு எதிரான அரசாங்க-விரோத எழுச்சியில், மே 9 நிகழ்வுகள் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களில் இணைந்தனர். இந்த எழுச்சியை அடக்குவதற்கான ஒரு தீவிர முயற்சியாக, ஜனாதிபதி இராஜபக்ஷ இரண்டாவது முறையாக அவசரகால ஆட்சியைப் பிறப்பித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மே 11 அன்று திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற மூன்றாவது பொது வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் விளைவுகளுடன் கைவிட்டன. இதனால் அரசாங்கம் செயற்படத் தூண்டப்பட்டது. விளைவு, காலிமுகத் திடலில் குண்டர்கள் நடத்திய தாக்குதல் ஆகும். ஆனால், மே 9 அன்று ஊரடங்கு உத்தரவைப் புறக்கணித்து மக்கள் வீதிகளில் இறங்கியதைத் தொடர்ந்து, போராட்டங்கள் பரவியதால் மஹிந்த இராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதுவே அரசாங்கத்தின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்தார். ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அனைத்து ஆளும் கட்சிகளும், முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கம் மக்களின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியைத் தீர்க்கும் என்ற பொய்யைப் பரப்பின. அவர்களின் அரசியலமைப்புக்கு முரணான பாராளுமன்ற சூழ்ச்சிகளின் விளைவாக, பெரும் வணிக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒரு பிணையெடுப்பு கடனைப் பேச்சுவார்த்தை மூலம் பெற்றார். அதற்கான கடுமையான சிக்கன நடவடிக்கைகளையே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்தி விருகின்றது.

சோசலிசக் கட்சி மட்டுமே ஒவ்வொரு வேலைத் தளத்திலும் மற்றும் அந்தந்தப் பகுதிகளிலும் உள்ள கிராமப்புற மக்களிடையேயும் தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுத்தது வெகுஜன எழுச்சிக்கு ஒரு புரட்சிகர மாற்றை முன்வைத்தது. அதன் வேலைத்திட்டம், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைமையிலான அரசாங்கத்தை அகற்றி, சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்த ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்காக, கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை தம்பின்னால் ஒருங்கிணைத்துக்கொண்ட தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

12 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட்டுள்ளமை, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை உக்கிரப்படுத்துவதற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை அடக்குவதற்கு ஆளும் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகும். இந்த அரசாங்கம் ஏற்கனவே கடுமையான தண்டனைகளை விதிக்க அச்சுறுத்தும் வகையில், வேலைநிறுத்தங்களைத் தடை செய்ய அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஆணைகளைப் பிறப்பித்து வருகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு சோசலிச முன்நோக்குக்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதே இதன் தீர்க்கமான படிப்பினை ஆகும். இதற்கு, தொழிலாள வர்க்கம் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி இடது அடிவருடிகளிடமிருந்து முழுமையாக அரசியல் ரீதியில் விலகிக்கொள்ள வேண்டும்.

Loading