செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு விதிகளை கைவிடாவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு பென்டகன் மூன்று நாள் அவகாசம் வழங்கியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இடது: பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தின் அதிகாரப்பூர்வ உருவப்படம்; வலது: 2023 இல் டாரியோ அமோடி [Photo by Department of Defense / TechCrunch / CC BY 2.0]

பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) , ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடிக்கு (Dario Amodei ) வெள்ளிக்கிழமை மாலை வரை காலக்கெடு விதித்துள்ளார். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை இராணுவம் தடையின்றி அணுகுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், இல்லையெனில் “விநியோகச் சங்கிலி அபாயம்” எனக் கருதி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் அல்லது பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தின் (Defense Production Act) கீழ் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த இறுதி எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை காலை பென்டகனில் நடந்த ஒரு பதட்டமான கூட்டத்தில் வழங்கப்பட்டது. இதில் அந்தத் துறையின் உயர்மட்ட வழக்கறிஞர் உட்பட ஆறு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதே நாளில், எலோன் மாஸ்க்கின் xAI நிறுவனம், தனது பாசிச குரோக் (Grok) AI அமைப்பை இரகசிய இராணுவ வலையமைப்புகளில் பயன்படுத்த பென்டகனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் இரகசிய வலையமைப்புகளில் கிளாட் பெற்றிருந்த தனித்துவமான நிலை முறியடிக்கப்பட்டது. ஆந்த்ரோபிக் நிறுவனம் எதனை எதிர்த்து வருகிறதோ, அதே “அனைத்து சட்டப்பூர்வ நோக்கங்களுக்காகவும்” பயன்படுத்தலாம் என்ற நிபந்தனைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி xAI ஒப்புக்கொண்டது

ஜனவரி 3 ஆம் தேதி, வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய சட்டவிரோதத் தாக்குதலில் —ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தெரியாமலேயே— கிளாட் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் இந்த மோதலைத் தூண்டின. இந்தத் தாக்குதலில் 83 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர், மேலும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டார். அப்போதே உலக சோசலிச வலைத் தளம் ஆவணப்படுத்தியபடி, வெனிசுவேலாவின் எண்ணெயைக் கட்டுப்படுத்தவும், இலத்தீன் அமெரிக்காவில் தனது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தவும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உறுதியால் தூண்டப்பட்ட நீண்டகால ஏகாதிபத்தியத் தலையீட்டின் உச்சக்கட்டமே இந்தத் தாக்குதலாகும்.

ஆந்த்ரோபிக்கிற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான தகராறு, பெருநிறுவன ஊடகங்களால் “AI பாதுகாப்பு” மற்றும் “தேசிய பாதுகாப்பு” ஆகியவற்றிற்கு இடையிலான மோதலாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு, தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களது மிகவும் சக்திவாய்ந்த AI அமைப்புகளை எந்த நிபந்தனைகளின் கீழ் தடையின்றி ஒப்படைப்பார்கள் என்பது குறித்து அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் மோதலாகும்.

ஆபத்தில் உள்ள அடிப்படை மூலோபாய நலன்கள்

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் “சற்றும் சுமூகமானதாகவோ அல்லது நட்புணர்வோடு கூடியதாகவோ இருக்கவில்லை” என்று ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி ஆக்ஸியோஸ் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். பென்டகன் எடுக்கும் செயல்பாட்டு முடிவுகளுக்கான நிபந்தனைகளை எந்தவொரு நிறுவனமும் தீர்மானிக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று ஹெக்செத் அமோடியிடம் கூறினார். முரண்பாடாக, பென்டகனின் ஆக்கிரமிப்பு அதன் சார்பு நிலையாலேயே இயக்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பு அதிகாரி ஒப்புக்கொண்டது போல்: “நாங்கள் இன்னும் இவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணம் எங்களுக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள், அதுவும் இப்போதே தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் அவர்கள் அந்த அளவுக்குத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.”

கிளாட் உலகிலேயே மிகவும் திறமையான முன்னிலை AI மாதிரியாக பரவலாகக் கருதப்படுகிறது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் AI குறியீட்டு கருவியான கிளாட் கோட் (Claude Code), மென்பொருள் பொறியியலை அந்தளவிற்கு மாற்றியுள்ளது. இதனால் 2026 ஆம் ஆண்டு மென்பொருள் பொறியாளர்களுக்கு “ஒரு வேதனையான ஆண்டாக” இருக்கும் என்றும், அந்த வேலைவாய்ப்பு “மறையத் தொடங்கும்” என்றும் அவர்களின் சொந்த தயாரிப்புத் தலைவர் போரிஸ் செர்னி சமீபத்தில் எச்சரித்தார். முக்கிய நிறுவனங்களில் உள்ள பொறியாளர்கள், AI தங்களது முழுமையான குறியீடுகளை எழுதுவதாகத் தெரிவிக்கின்றனர்.

கிளாட்டை இழக்க முடியும் என்பதால் பென்டகன் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை அச்சுறுத்தவில்லை. மாறாக, அதை இழக்க முடியாது என்பதாலேயே அச்சுறுத்துகிறது — ஏனெனில் பூமியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த AI அமைப்பு, அதன் AI-இயக்கப்படும் போர் திட்டங்களுக்கு இன்றியமையாதது. மேலும் போர் இயந்திரத்தின் மீது எந்தவொரு தனியார் நிறுவனமும் நிபந்தனைகளை விதிக்கும் முன்னுதாரணத்தை அரசால் சகித்துக்கொள்ள முடியாது.

இதற்கான மூலோபாயச் சூழல் இதைத் தெளிவாக்குகிறது. ஜனவரி 9, 2026 அன்று, ஹெக்செத் “போர்த் துறைக்கான செயற்கை நுண்ணறிவு மூலோபாயத்தை” வெளியிட்டார். இதன் மூலம் பென்டகனை “AI-ஐ முதன்மையான போரிடும் சக்தியாக” மாற்றுவதற்கு அவர் உறுதியளித்தார். இந்த மூலோபாயமானது, ஏழு “வேக-அமைப்பு திட்டங்களை” குறிப்பிடுகிறது. இதில் “ஸ்வார்ம் போர்ஜ்” (Swarm Forge) AI மூலம் இயங்கும் தானியங்கி ட்ரோன்கள் அடங்குகின்றன. மேலும், ஏஜென்ட் வலையமைப்பானது (Agent Network) போர்த்திட்டமிடல் முதல் “இலக்கைக் கண்டறிந்து அழிக்கும் தாக்குதலை செயல்படுத்துவது” வரை அனைத்தையும் உள்ளடக்கிய AI-ஆல் இயங்கும் போர் மேலாண்மை அமைப்பு மற்றும் அதீத வேகத்தை கொண்டிருக்கும் இராணுவ உருவகப்படுத்துதல் ஆகியவைகளும் அடங்கும். இதற்கான ஆரம்பக்கட்ட செயல் விளக்கங்கள் ஜூலை 2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பென்டகன் AI- ஆல் இயக்கப்படும் போருக்கான ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது, அதைச் செயல்படுத்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த AI மாதிரிகள் அதற்குத் தேவையாக உள்ளன.

செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனையில் மிக முக்கியமான தீவிரப்போக்கு என்னவென்றால், போர்க் காலச் சட்டத்தைப் (DPA) பயன்படுத்துவோம் என்ற வெளிப்படையான அச்சுறுத்தலாகும் — இது, ஒரு AI நிறுவனத்தை அதன் பாதுகாப்புத் தடுப்புகளை அகற்றும்படி கட்டாயப்படுத்த இதற்கு முன் ஒருபோதும் பயன்படுத்தப்படாத ஒரு போர்க்காலத் தொழில்துறை அணிதிரட்டல் சட்டமாகும். “விநியோகச் சங்கிலி அபாயம்” என்பதற்கும் இதற்கும் இடையிலான வேறுபாடு முக்கியமானது. கருப்புப் பட்டியலில் சேர்ப்பது என்பது ஒரு தண்டனையாகும். இது பென்டகனின் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்யும் மற்றும் ஒவ்வொரு ஒப்பந்ததாரரையும் ஆந்த்ரோபிக் உடனான உறவுகளைத் துண்டிக்குமாறு கட்டாயப்படுத்தும். ஆனால் DPA என்பது ஒரு கட்டாயமாகும். இது ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சொந்தக் கொள்கைகளை மீறி, பென்டகனின் விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப கிளாட்டை வடிவமைக்க அந்த நிறுவனத்தை வற்புறுத்தும்.

கூட்டத்தின் போது, கராகஸ் மீதான தாக்குதலில் கிளாட் பயன்படுத்தப்பட்டது குறித்து அதன் கூட்டாளியான பலந்திர் (Palantir) நிறுவனத்திடம் ஆந்த்ரோபிக் கவலை தெரிவித்துள்ளதாக ஹெக்செத் கூறினார். ஆனால் இதை அமோடி மறுத்தார். இது தற்போதைய நெருக்கடியைத் தூண்டிய செமாஃபோர் (Semafor) மற்றும் பிற ஊடகங்களின் முந்தைய செய்திகளுக்கு முரணாக உள்ளது. ஒன்று ஆந்த்ரோபிக் நிறுவனம் சரணடையத் தயாராகி வருவதால் தனது கதையை மாற்றிக் கூறுகிறது, அல்லது முந்தைய செய்திகள் ஒரு சாதாரண உரையாடலை பலந்திர் நிறுவனம் தனது சுயநலத்திற்காக சித்தரித்ததன் அடிப்படையில் அமைந்திருக்கலாம்.

கூட்டத்துக்கு பிந்தைய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அறிக்கை இந்த நிலையை உறுதிப்படுத்தியது. “உரையாடலின் போது, டாரியோ அமைச்சகத்தின் பணிகளைப் பாராட்டினார் மற்றும் செயலாளரின் சேவைக்கு நன்றி தெரிவித்தார்” என்று நிறுவனம் கூறியது. மேலும், “எங்கள் மாதிரிகள் நம்பகத்தன்மையுடனும் பொறுப்புடனும் செய்யக்கூடியவற்றிற்கு ஏற்ப, அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புப் பணிக்கு ஆந்த்ரோபிக் தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதி செய்வதற்காக, எங்கள் பயன்பாட்டுக் கொள்கை குறித்த ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நாங்கள் தொடர்ந்தோம்,” என்றும் குறிப்பிட்டது. தன்னை அழிக்கப்போவதாக மிரட்டிய ஒருவருக்கு நன்றி தெரிவிக்கும் இந்த மொழி — அந்த நிறுவனம் சரணடையத் தயாராகி வருவதன் தெளிவான அடையாளமாகும்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் “கொள்கை ரீதியான நிலைப்பாடு” என்ற கட்டுக்கதை

பெருநிறுவன ஊடகங்கள் பெரும்பாலும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை இராணுவ அத்துமீறலை எதிர்த்து நிற்கும் ஒரு துணிச்சலான நிறுவனமாகச் சித்தரித்துள்ளன. இந்த விவரிப்பு முற்றிலும் ஒரு கட்டுக்கதையாகும்.

ஆந்த்ரோபிக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இராணுவ ஒருங்கிணைப்பைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மிக முக்கியமாக, நவம்பர் 2024 இல், இது பலந்திர் (Palantir) —அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறைக்குச் சேவை செய்வதையே தனது வணிக மாதிரியாகக் கொண்ட கண்காணிப்பு ஒப்பந்ததாரர்— மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) ஆகியவற்றுடன் இணைந்து கிளாட்டை இரகசிய வலைப்பின்னல்களில் நிலைநிறுத்தியது. ஜூன் 2025 இல், இது தேசிய பாதுகாப்பு நிறுவனங்களுக்காக “கிளாட் கோவ்” (Claude Gov) ஐத் தொடங்கியது. அடுத்த மாதம், பென்டகனிடமிருந்து 200 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கிடைத்ததைக் கொண்டாடியது. கடந்த ஆகஸ்டில், போட்டியாளர்களை வீழ்த்தி சந்தைப் பங்கைக் கைப்பற்றுவதற்காக கிளாட்டை அரசாங்க முகமைகளுக்கு வெறும் 1 டாலருக்கு வழங்க முன்வந்தது.

இந்த நிறுவனத்தின் “சிவப்புக் கோடுகள்” குறிப்பிடத்தக்க வகையில் மிகக் குறுகியவை. அதன் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை, “முழுமையான தானியங்கி ஆயுதங்கள்” மற்றும் “அமெரிக்கர்களின் மீதான பாரிய உள்நாட்டுக் கண்காணிப்பு” ஆகியவற்றை மட்டுமே தடை செய்கிறது. இவை இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், வெளிநாடுகள் மீதான கண்காணிப்பு, ஒரு மனிதர் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் ட்ரோன் இலக்குகள் அல்லது ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது தாக்குதல் திட்டமிடுவது ஆகியவற்றைத் தடை செய்யவில்லை — இந்த நெருக்கடியைத் தூண்டியதே இந்தச் செயல்பாடுதான். அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்குகளைப் பேச்சுவார்த்தை மூலம் வழங்குவதற்கான உரிமையை அந்தக் கொள்கை வெளிப்படையாகத் தக்கவைத்துள்ளது. இந்த “சிவப்புக் கோடுகள்” உண்மையில் கோடுகளே அல்ல; அவை ஒரு பேச்சுவார்த்தையின் தொடக்க நிலைகளே ஆகும்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சுதந்திரத்தை மதிப்பிடும் எவரும், அதன் உரிமையாளர்கள் யார் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமேசான் —இதன் AWS அமைப்பு CIA-வின் முதன்மையான கிளவுட் உள்கட்டமைப்பை உருவாக்கியது மற்றும் தொடர்ந்து வழங்குகிறது— 8 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கூகிள் சுமார் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. மைக்ரோ சொப்ட் மற்றும் என்விடியா (Nvidia) இணைந்து 15 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளன. ஆரம்பகால நிதியுதவியில் சாம் பேங்க்மேன்-ஃபிரைட்டின் அலமேடா ரிசர்ச் (Alameda Research) வழங்கிய 500 மில்லியன் டாலர்களும் அடங்கும் — இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றான பேங்க்மேன்-ஃபிரைட்டின் மோசடி விசாரணையில் அரசு வழக்கறிஞர்கள் நிறுவியபடி, மோசடி செய்யப்பட்ட FTX வாடிக்கையாளர் நிதியைப் பயன்படுத்தி முதலீடு செய்யப்பட்டது. இராணுவ-உளவுத்துறை மூலதனத்தின் இந்த வலைக்குள் சிக்கியுள்ள ஒரு நிறுவனம் ஒரு சுதந்திரமான நெறிமுறை சார்ந்த நடிகராகச் செயல்படும் என்பது ஒரு கற்பனையாகும்.

அமோடியும் தாராளவாத முதலாளித்துவ எதிர்ப்பின் எல்லைகளும்

தொழில்நுட்ப தன்னலக்குழுவைச் சேர்ந்த எலோன் மாஸ்க்குகள் (Musks) மற்றும் தீல்களிடமிருந்து (Thiels) அமோடியை வேறுபடுத்துவது கொள்கை அல்ல, மாறாக சமூகக் கண்ணோட்டம் ஆகும். அவர் முதலாளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட “தாராளவாத” பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் அதீத சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் அரசியல் விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார். ஜனவரி 2026 இல் எழுதிய “தொழில்நுட்பத்தின் இளமைப் பருவம்” (The Adolescence of Technology) என்ற கட்டுரையில், AI “டிரில்லியன் கணக்கான தனிப்பட்ட சொத்துக்களை” உருவாக்கக்கூடும் என்றும், அது அவற்றின் உரிமையாளர்களுக்கு “அளவற்ற அரசியல் செல்வாக்கை” வழங்கும் என்றும் அமோடி எச்சரித்தார். அவர் “குடி உரிமைகளை மையமாகக் கொண்ட சட்டம் (அல்லது ஒரு அரசியலமைப்புத் திருத்தம்)” வேண்டும் என்று கோரினார். மேலும், “எம்மை எதேச்சதிகார எதிரிகளைப் போல மாற்றும் வழிகளைத் தவிர மற்ற எல்லா வழிகளிலும்” தேசியப் பாதுகாப்பிற்காக AI-ஐப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். அந்த 19,000 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை X தளத்தில் பதிவிட்டபோது, மினியாபோலிஸில் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அலெக்ஸ் பிரெட்டியைச் சுட்டுக் கொன்றதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டு, “உள்நாட்டில் ஜனநாயக விழுமியங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது குறிப்பாகப் பொருத்தமானது” என்று எழுதினார்.

ஒரு ஆக்ஸியோஸ் வலைத்தளத்தின் நேர்காணலில், அமோடி இன்னும் வெளிப்படையாகக் கூறினார்: “நாங்கள் இந்த அபரிமிதத்தையெல்லாம் உருவாக்கப் போகிறோம், அதில் பெரும்பகுதி எங்களுக்கே செல்லும், நாங்கள் டிரில்லியனர்களாக இருப்போம், அதைப் பற்றி யாரும் புகார் செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் சொல்ல முடியாது. இதை நீங்கள் சரியான முறையில் செய்யாவிட்டால் ஒரு கும்பல் உங்களைத் தேடி வரும்.” மேலும், அவர் Fortune இதழுக்குக் கூறுகையில், “இங்கே நடக்கும் அதிகாரக் குவிப்பைக் கண்டு, கிட்டத்தட்ட ஒரே இரவில், தற்செயலாக நடந்தது போல, நான் குறைந்தபட்சம் ஓரளவாவது சங்கடமாக உணர்கிறேன்,” என்று கூறினார். மேலும் “மற்ற அனைத்து நிறுவனங்களும் நிர்வாகமும் ஒழுங்குமுறை இருக்கக்கூடாது என்று கூறியிருக்கும் போது”, அவர் ஒழுங்குமுறை வேண்டும் என்று கோரினார்.

ஜனவரியில், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஏழு நிறுவனர்களும் தங்களது சொத்துக்களில் 80 சதவீதத்தை தானமாக வழங்க உறுதியளித்தனர். அமோடி அப்போது, “கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சமூகத்தை உடைக்கும் அளவிற்கான செல்வக் குவிப்புதான்,” என்று அறிவித்தார். மேலும் மாஸ்க்கின் 700 பில்லியன் டாலர் நிகர மதிப்பு ஏற்கனவே பொன்னிறப் பொற்காலத்தில் ராக்ஃபெல்லரின் சொத்தை விட அதிகம் என்பதைக் குறிப்பிட்டார். பிப்ரவரி 12 அன்று, AI ஒழுங்குமுறை சூப்பர் PAC-க்கு அந்நிறுவனம் 20 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியது.

அமோடியின் தீர்வுகள் —தொண்டு, அரசியலமைப்புத் திருத்தங்கள், PAC நன்கொடைகள் மற்றும் ஒழுங்குமுறைக்கான கோரிக்கைகள்— அவர் எத்தகைய அதிகாரக் குவிப்பைக் கண்டு அஞ்சுகிறாரோ, அதே முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளேயே செயல்படுகின்றன. அவர் வருத்தப்படும் அதே ஊக வணிக வெறி மற்றும் தொழிலாளர் வெளியேற்றம் (AI-ஆல் வேலைகள் பறிபோதல்) ஆகியவற்றால்தான் அவரது 380 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்திற்கு இந்த மதிப்பு கிடைத்துள்ளது; இந்தப் நெருக்கடியின் மூலவேரை எதிர்ப்பது என்பது அவரது சொந்தச் செல்வத்தின் மூலத்தையே எதிர்ப்பதாகும்.

பென்டகனுடனான மோதல் இந்த தாராளவாத முதலாளித்துவ நிலைப்பாட்டின் இறுதிக் கட்ட எல்லையை வெளிப்படுத்துகிறது: அரசு நிபந்தனையற்ற அடிபணிதலைக் கோரும்போது, பெருநிறுவன அறநெறிகளும் அறக்கட்டளை உறுதிமொழிகளும் வலுவற்றதாகிவிடுகின்றன.

எலோன் மாஸ்க்கின் பாசிச குரோக் AI, கண்காணிப்பு அரசு மற்றும் போருக்கான இருகட்சிகளின் உந்துதல்

செவ்வாய்க்கிழமையன்று பென்டகன் தனது இரகசிய இராணுவ வலைப்பின்னல்களில் குரோக் (Grok) AI-ஐப் பயன்படுத்தத் தொடங்கும் என்ற அறிவிப்பு, அமோடி மற்றும் ஹெக்செத் இடையிலான சந்திப்பிற்குத் தகுந்தாற்போல் நேரமிடப்பட்டுள்ளது. இது ஜனநாயக உரிமைகளின் மீதான மிகக் கடுமையான கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறைக்காக AI-ஐப் பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தேசித்துள்ளது என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாகும்.

லாஃபேர் (Lawfare) ஆவணப்படுத்தியுள்ளபடி, குரோக் “பாரபட்சமான, தவறாக வழிநடத்தும், யூத-விரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் வெளியீடுகளின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக்” கொண்டுள்ளது. அந்தப் பதிவுகள் அசாதாரணமானவை. ஜூலை 2025 இல், குரோக் தன்னை “மெக்கா ஹிட்லர்” (MechaHitler) என்று அழைத்துக்கொண்டது, அடால்ஃப் ஹிட்லரைப் புகழ்ந்தது, நவ-நாஜி சுயவிவரங்களைக் கொண்ட பயனர்களுக்கு இரண்டாவது இனப்படுகொலையை (Holocaust) பரிந்துரைத்தது, “ஒவ்வொரு முறையும்” என்ற யூத-விரோத சொற்றொடரைப் பயன்படுத்தியது, மற்றும் பொழுதுபோக்குத் துறையில் “கட்டாயப் பன்முகத்தன்மைக்கு” “யூத நிர்வாகிகள்” தான் காரணம் என்று குற்றம் சாட்டியது. இந்தச் சம்பவத்தை ஒரு “தற்செயலான புதுப்பிப்பு” என்று xAI தள்ளுபடி செய்தது.

ஜனவரி 2026-ல் வெளியிடப்பட்ட ஒரு அவதூறு எதிர்ப்பு லீக்கின் ஆய்வின்படி, யூத எதிர்ப்பு உள்ளடக்கத்தை எதிர்கொள்வதில் அனைத்து முக்கிய AI மாதிரிகளிலும் குரோக் மிக மோசமாகச் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டது. குரோக் மீண்டும் ஒருமுறை யூத-விரோத பதில்களை உருவாக்கிய சில நாட்களிலேயே xAI ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), டெஸ்லா (Tesla) மற்றும் அரசாங்கத் திறன் துறை என்று அழைக்கப்படுவதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மாஸ்க்கின் ட்ரம்ப் உடனான அரசியல் கூட்டணி, xAI எவ்விதக் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளாது என்பதை உறுதி செய்கிறது. இது கூட்டாளிகளுக்கு வெகுமதி அளித்தல் மற்றும் எதிர்ப்பாளர்களை நசுக்குதல் என்ற கொள்கையின் அடிப்படையில் பகிரங்கமாகச் செயல்படும் ஓர் அரசு இயந்திரத்திற்குள், தொழில்நுட்பத்தை அரசியல் விசுவாசத்திற்கு அடிபணியச் செய்வதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஹிட்லரைப் புகழ்வது மற்றும் இனப்படுகொலைக்குத் தூண்டுவது போன்ற வெளியீடுகளைக் கொண்ட மிகவும் வெளிப்படையான பாசிச AI மாதிரி (model) வரவேற்கப்படுகிறது, அதே நேரத்தில் மிகவும் திறமையானதாகக் கருதப்படும் மாதிரிக்கு பெயரளவிலான கட்டுப்பாடுகளை வைத்திருந்ததற்காக அழிவு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

“அமெரிக்கர்களின் மீதான பாரிய உள்நாட்டுக் கண்காணிப்பு” மீதான தடையை ஆந்த்ரோபிக் நீக்க வேண்டும் என்ற பென்டகனின் கோரிக்கையை, ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே எதை உருவாக்கி வருகிறது என்ற பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். 3.75 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ் கிளியர்வியூ (Clearview) AI முக அங்கீகாரத்தை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) நிலைநிறுத்தியுள்ளது. இரகசிய அமைப்புகளில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சொந்தக் கூட்டாளியான பலந்திர் (Palantir), புலம்பெயர்ந்தோரின் “துல்லியமான கண்காணிப்பை” வழங்கும் 30 மில்லியன் டாலர் மதிப்பிலான “இம்மிக்ரேஷன் ஓஎஸ்” (ImmigrationOS) தளத்தை இயக்குகிறது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), முக அங்கீகாரம் மற்றும் AI கண்காணிப்பின் “செயல்பாட்டு நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது”. பாசிச ட்ரம்ப் ஆட்சி ஏற்கனவே பாரிய கண்காணிப்புக்காகச் AI-ஐப் பயன்படுத்தி வருகிறது; பென்டகனின் கோரிக்கை என்னவென்றால், மிகவும் சக்திவாய்ந்த AI மாதிரி ஒரு போலீஸ் அரசு இயந்திரத்திற்கும் மற்றும் வெளிநாடுகளில் தீவிரமடைந்து வரும் போருக்கும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

WSWS பகுப்பாய்வு செய்துள்ளபடி, AI-ஐ இராணுவத் தேவைகளுக்கு அடிபணியச் செய்யும் உந்துதல் இருகட்சிகளாலும் ஆதரிக்கப்படுவதாகும். ட்ரம்ப் அந்தப் பாதையைத் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும், AI அமெரிக்க புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று கோருவதோடு மட்டுமல்லாமல், வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு அறநெறிக் கட்டுப்பாடும் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோருகிறார். ஆந்த்ரோபிக் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இடையிலான தகராறு அறநெறிக்கும் இராணுவவாதத்திற்கும் இடையிலான மோதல் அல்ல. இது AI இராணுவமயமாக்கலின் வேகம் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரிவுகளுக்கு இடையே நிலவும் மோதலாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் AI-ஐ அடிபணியச் செய்வது, தொழிலாள வர்க்க விடுதலையின் ஒரு கருவியாகச் AI-ஐ வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2025 டிசம்பர் 12 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட சோசலிசம் AI என்பதன் முக்கியத்துவம் இதுதான் — முதலாளித்துவ இலாப நோக்கங்கள் மற்றும் ஏகாதிபத்திய போர்த் திட்டமிடல்களிலிருந்து சுதந்திரமாகத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தின் முதல் பயன்பாடு இதுவாகும்.

AI இராணுவமயமாக்கப்படுவதற்கும், கண்காணிப்புக்கும் எதிரான போராட்டம் என்பது, அதை உருவாக்குகின்ற முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது ஆகும். அனைத்து இராணுவ AI திட்டங்களையும் பகிரங்கப்படுத்துவது, உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது, மற்றும் AI தொழில்நுட்பத்தை நிதி தன்னலக்குழுவின் நலன்களுக்காக அல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகப் பொது உடமையாக்கி ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

Loading