இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒரு 'வெற்றிக் கதை' என்று மீண்டும் மீண்டும் புகழ்ந்த அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் மூன்று நாள் வருகை, மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் வர்க்கத் தன்மையை மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, கடந்த டிசம்பரில் சுமார் 1,000 பேரைக் கொன்று, வீடுகள் மற்றும் பிரதான உள்கட்டமைப்புகளை அழித்து, 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவை 'மதிப்பிடுவதே' சர்வதேச நாணய நிதிய பிரதிநிதியின் நோக்கமாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு, பொருளாதார இழப்புகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 16 சதவீதம் என மதிப்பிட்டுள்ளது.
இந்தப் பேரழிவு நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னரும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமோ அல்லது பெரும் சர்வதேச சக்திகளோ, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் சிதைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அல்லது பேரழிவிற்குள்ளான உள்கட்டமைப்பை மீட்டெடுக்கத் தேவையான வளங்களில் சிறிதளவையும் வழங்கவில்லை. புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் அனைத்தையும் இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் உட்பட, போதுமான நிவாரணத்தை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்ததன் காரணமாக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.
டிட்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவை, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைத் திட்டத்திலிருந்து விலகுவதற்கான நியாயப்படுத்தலாக எந்த வகையிலும் காட்ட முடியாது என்று ஜோர்ஜீவா தெளிவுபடுத்தினார். 'சூழ்நிலைகள் மாறும்போது, சர்வதேச நாணய நிதிய திட்டங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன,' என்று அவர் கூறினார். ஆனால் இந்த 'நெகிழ்வுத்தன்மை' கடன் நிலைத்தன்மை, கடன் வழங்குநர்களின் நம்பிக்கை ஆகியவற்றின் எல்லைகளுக்குள் கடுமையாகச் செயல்படுகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் இலக்குகளைக் குறைக்காமல் நிர்வகிக்கப்பட வேண்டும். புயல் தாக்குவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் 2026 வரவு-செலவுத் திட்டம் அப்படியே இருக்கும். கொள்கை மாற்றம் இருக்காது.
சர்வதேச நாணய நிதியம் தனது விரைவு நிதி கருவி கடன்களின் கீழ் சுமார் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக வழங்கியிருந்தாலும், இலங்கையானது நிதி நிர்வாகத்தைத் கவனமாக மேற்கொண்டு, கையிருப்புகளைச் சேரித்துக்கொள்வதோடு, கடனை உறுதிப்பாட்டுடன் குறைக்க வேண்டும் என்று ஜோர்ஜீவா வலியுறுத்தினார் -வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஜோர்ஜீவா, ஜனாதிபதி அனுராகுமார திசநாயக, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தார். 'இலங்கை நீண்ட தூரம் வந்துவிட்டது. அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பலனளிக்கிறது. இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தினேன்,' என்று தனது பயணம் முடிந்ததும் சர்வதேச நாணய நிதிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2024இல் சுமார் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி, அது 2025 இல் மேலும் விரிவடைந்தமை, 2022இல் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம் கிட்டத்தட்ட 2 சதவீதமாகக் குறைந்தமை, வரி வருவாய் அதிகரிப்பு, மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பின் மீட்சி ஆகியவற்றையே சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகள் பலனளிக்கின்றன என்பதற்கான சான்றாக அவர் சுட்டிக்காட்டினார். 'முதல் முறையாக மக்களால் நம்பப்படும் ஒரு அரசாங்கம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்,' என கூறி அவர் அரசாங்கத்தைப் பாராட்டினார்.
இலங்கை 'நீண்ட தூரம் வந்துவிட்டது' என்ற சர்வதேச நாணய நிதிய தலைவரின் கூற்று, மில்லியன் கணக்கான மக்களின் மாபெரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்திற்கு வழிவகுத்த 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு திணிக்கப்பட்ட ஒரு தொகை கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறை சாத்தியமானதாக ஆக்குவதாகும். இது, நிதிசார் இறுக்கம், நாணய சரிசெய்தல் மற்றும் நாநூறுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு ஆகியவை பெரும்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் 'செயல்பட்டுள்ளன' என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் மருந்து தொடர வேண்டும் என்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், பத்திரதாரர்கள் மற்றும் கடன் கொடுத்த அரசாங்கங்களுக்கு அனுப்பும் ஒரு தெளிவான செய்தியாகும்.
ஜோர்ஜீவாவின் பயணம், இலங்கை கடன் திருப்பிச் செலுத்துதலுக்கு தொடந்து முன்னுரிமை அளிக்கும், சந்தை சார்ந்த பரிமாற்ற வீதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும், மற்றும் விலை-செலவு மீட்பு நடவடிக்கைகளை -அதாவது, எரிசக்தி மற்றும் பயன்பாட்டுப் பொருட்களுக்கான விலை உயர்வுகளை- செயல்படுத்தும் என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூகக் கஷ்டங்களை ஆழப்படுத்தும் அதேவேளை, பெருவணிகத்தின் இலாபங்களைப் பாதுகாக்கின்றன.
சர்வதேச நாணய நிதிய தலைவர், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் 'மக்களால் நம்பப்படுகிறது' என்று கூறும்போது, அது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கவில்லை, மாறாக பெரிய வணிகம் மற்றும் நிதி மூலதனத்தையே குறிக்கின்றது. அவற்றின் நலன்களையே திசாநாயக நிர்வாகம் விடாமுயற்சியுடன் பாதுகாக்கின்றது.
'நடவடிக்கை நிறைவேறியது என்று அறிவிக்க இன்னும் அதிக காலம் இருக்கிறது' என்று எச்சரித்த ஜோர்ஜீவா, மீட்சி சரியான பாதையில் உள்ளது என்று கூறி, 'அதே பாதையில் தொடருமாறு' அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். 'கட்டமைப்பு மறுசீரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டால்,' 7-8 சதவீத உயர் வளர்ச்சி சாத்தியமாகும் என்று அவர் கூறினார். இலங்கை, 'எங்கள் ஆதரவை நம்பலாம்' என்றும் அவர் உறுதியளித்தார்.
கொழும்பின் நிதிப் பத்திரிகைகள் மற்றும் பெருநிறுவனப் பிரமுகர்களால் 'நிலைப்படுத்தல்' மற்றும் 'புதுப்பித்தல்' என்ற கூற்று மீண்டும் மீண்டும் கூறப்படுவதானது பத்திரதாரர்கள், பலதரப்பட்ட கடன் வழங்குநர்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு, 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்துதல்கள் முழுமையாகத் தொடங்கும் என்றும், சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளிலிருந்து எந்தவகையிலும் விலகுவது பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் உறுதியளிக்கிறது.
பணவீக்க விகிதத்தில் தற்போதைய சரிவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவில்லை. பரந்த அளவிலான வரி உயர்வுகள், பயன்பாட்டு விலை உயர்வுகள் மற்றும் ஊதியக் கோரிக்கைகள் நசுக்கப்படுவதும் தொடர்ந்து பெரும் சுமையாக உள்ளன. பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் உயர் வட்டி விகிதங்கள் மூலம் கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதானது, சிறு நிறுவனங்களையும் சுயதொழில் செய்பவர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ளதுடன் கடன் வாங்கிய குடும்பங்களின் மீது சுமையை ஏற்றியுள்ளது.
அடிப்படையில் மறைமுக வரிவிதிப்பை அதிகரிப்பதன் மூலமாகவே அதிக அரசாங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளமை, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை கடுமையாகப் பாதிக்கிறது. 2022 இன் தொடக்கத்தில், 8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி (VAT), இப்போது 18 சதவீதமாக உள்ளதுடன் எரிபொருள், எரிவாயு மற்றும் தொலைத்தொடர்பு உட்பட 90க்கும் மேற்பட்ட, முன்பு விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், இப்போது பெருமதி சேர் வரிக்கு உட்பட்டுள்ளன.
உத்தியோகப்பூர்வ கணிப்புகளின்படி, வருடாந்திர வெளிநாட்டுக் கடன் சேவை, 2026–27ல் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 2.7 பில்லியன் டொலராகவும், பின்னர் 2028ல் 3.2 பில்லியன் முதல் 3.5 பில்லியன் டொலர் வரையிலும் அதிகரிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரைச் சந்தித்த பிறகு பேசிய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 'ஒழுக்கம்' பராமரிக்கப்பட்டால் இது நிர்வகிக்கக்கூடியது என்று கூறினார்.
சமூக யதார்த்தத்தில் மொழிபெயர்த்தால், ஒழுக்கம் என்பது மறைமுக வரிகள் நிரந்தரமாக உயர்த்தப்படுதல், மின்சாரம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான விலை அதிகரிப்பு, பொதுச் செலவினங்களில் வெட்டுக்கள் மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை ஈவிரக்கமின்றி அடக்குதலையும் குறிக்கிறது.
இலங்கையின் பெருநிறுவன உயரடுக்கு சிக்கன நடவடிக்கைகளை அனுபவிக்கவில்லை, மாறாக அதிகரித்து வரும் லாபத்தை அனுபவித்து வருகிறது. நிறுவனக் குழுமங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் வலுவான வருவாயைப் பெறுவதாக வணிக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நிதித் துறை அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பிலிருந்து பயனடைகிறது. இந்த வாரம், தனது வரலாற்றிலேயே மிக வலுவான செயல்திறனை அறிவித்துள்ள சம்பத் வங்கியின் நிகர இலாபம் 2025 இல் 13 சதவீதம் அதிகரித்து 32 பில்லியன் ரூபாய்களை (103 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) எட்டியுள்ளது. பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் 'மீட்சி' என்று கொண்டாடப்படும் இந்த பெரும் இலாபம் உழைக்கும் மக்களிடமிருந்தே பிழிந்து எடுக்கப்படுகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வெளிப்படையாகவே பெருவணிக ஆதரவு திட்ட நிரலை செயல்படுத்துகிறது. பிரதான முதலீட்டாளர்களுக்கு தாராளமான வரிச் சலுகைகளை வழங்குவதற்காக, இந்த மாதம் மூலோபாய மேம்பாட்டுத் திட்ட விதிமுறைகள் திருத்தப்பட்டன. 50 மில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிய திட்டங்களுக்கு, இப்போது பெறுமதி சேர் வரி, சுங்க வரி மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்களிப்புடன் சேர்த்து, 10 ஆண்டுகள் வரை பெருநிறுவன வருமான வரி விலக்குகளுக்கு தகுதி பெறுகின்றன. உற்பத்தி, உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறைகள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றன.
தொழில் அமைச்சு, 12 தொழிலாளர் சட்டங்களை நான்காக ஒருங்கிணைத்து வருவதுடன் முதலீட்டை ஈர்க்கவும் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் 'நவீனமயமாக்கல்' மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு இந்த மாற்றங்கள் அவசியம் என்று கூறுகிறது. நடைமுறையில், இந்த சீர்திருத்தங்கள் தொழிலாளர்களை அதிகமாக சுரண்டுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தப் வாய்ச்சவடால்களுக்குப் பின்னால், தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதையும் வேலைப் பாதுகாப்பை சிதைப்பதையும் நோக்கமாகக் கொண்ட, தொழிலாளர் சந்தை நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்த, சர்வதேச நாணய நிதியம் நீண்டகாலமாக தினித்த அழுத்தமே உள்ளது. உழைக்கும் வர்க்கத்திற்குள் கோபம் அதிகரித்து வருவதால், தொழிற்சங்கத் தலைவர்கள் அதிகரித்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும், தொழிலாளர்களை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை கட்டமைப்புடன் பிணைத்து வைக்கவும் முயற்சிக்கின்றனர்.
தொழிலாளர் சட்டத்தை மறுசீரமைப்பதானது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல், அரச-தனியார் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல், மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகளில் செலவு-மீட்பு விலை நிர்ணயத்தை செயல்படுத்துதல் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளை முழுமையாக்குகிறது.
இலங்கை மின்சார சபையில் (இ.மி.ச.) ஏற்படும் நட்டங்களைத் தடுக்க, மின்சாரக் கட்டணங்கள் முழுச் செலவுகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை நான்கு சிறிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியார்மயமாக்கும் செயல்பாட்டில் உள்ளது. நிதி இலக்குகளை அடையக்கூடியவாறும் கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்கக் கூடியவாறும் நுகர்வோர் மீது கட்டண அதிகரிப்பை சுமத்த எதிர்பார்க்கும் அதேவேளை, இ.மி.ச. தொழிலாளர்களின் தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை, பொருளாதார விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. பிரதான பணவீக்கம் குறைந்திருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் நெருக்கடிக்கு முந்தைய (அதாவது, 2022) அளவை விட மிக அதிகமாகவே உள்ளன. பெறுமதி சேர் வரி அதிகரிப்புகள் மற்றும் பிற மறைமுக வரிகள் வீட்டு வருமானத்தில் பெரும் பங்கை விழுங்கிக்கொள்கின்றன. சர்வதேச நாணய நிதிய கட்டளைப்படி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவினதும் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இருப்பினும், உண்மையான ஊதியங்கள் 2022க்கு முந்தைய நிலைகளுக்கு திரும்பாமல் இருக்கும் அதே நேரம், அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் ஊழியர்களின் கடுமையான பற்றாக்குறையும் நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகள், நெரிசல் மற்றும் போதுமான வளங்கள் இன்மை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் போராடுகின்றன. பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக அதிக வட்டி விகிதங்களை எதிர்கொண்டு இன்னும் கடனில் மூழ்கியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட உலக வங்கி கணக்கெடுப்பின்படி, ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் (32.4 சதவீதம்) நாளொன்றுக்கு 2 டொலர் வருமானத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே அல்லது அதற்கு சற்று மேலே வாழ்கின்றனர்.
பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை 'கைவிடமுடியாது' என்று ஜோர்ஜீவா இலங்கையர்களிடம் கூறினார். சர்வதேச கடன் வழங்குநர்களுக்கு, கைவிடமுடியாது என்பது 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்துதலுக்கான உத்தரவாதம் ஆகும். தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு, இது சமூகக் கொள்கையை நிதிச் சந்தைகளுக்காக நிரந்தரமாக அடிபணியச் செய்வதைக் குறிக்கிறது -அதாவது சிக்கன நடவடிக்கைகளை தீவிரமாக்குலையும் சமூக நிலைமைகள் மற்றும் வேலைப் பாதுகாப்பை தொடர்ச்சியாக அழிப்பதையுமே இது குறிக்கின்றது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனக் கோரிக்கைகளை தவிர்க்க முடியாதவையாக காட்டுவதுடன் பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் அதை முழுமையாக ஆதரிக்கின்றன. உண்மையில், ஜோர்ஜீவா, தனது வருகையின் போது அரசாங்கத்தை மட்டுமன்றி, உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகளையும் பாராட்டினார்.
பல தசாப்தங்களாக செல்வந்தர்களுக்கான வரிச் சலுகைகளுக்கும், பரந்த இராணுவச் செலவுகளுக்கும், ஊழல் நிறைந்த பாரிய திட்டங்களுக்கும் நிதியளிக்கவும் நிலையற்ற உலகளாவிய மூலதனச் சந்தைகளில் ஒருங்கிணைந்ததன் விளைவாகவும் குவிந்துபோயுள்ள நாட்டின் வெளிநாட்டுக் கடன்களுக்கு தொழிலாள வர்க்கமும் கிராமப்புற மக்களும் பொறுப்பாளிகள் அல்ல,.
பொருளாதார வெற்றிக் கதை எனப்படுவது உழைக்கும் மக்களின் முதுகின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, உழைக்கும் மக்களின் எதிர்காலமாக இப்போது பரிந்துரைக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு உண்மையான மாற்றீட்டை வழங்க முடியும்.
தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரிப்பதோடு, உயரடுக்கினரை மேலும் செல்வந்தர்களாக்கியுள்ள பிரமாண்டமான வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதை நிராகரிப்பதற்காகப் போராட வேண்டும். வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் பொது உடைமையின் கீழும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவரப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்களும் கிராமப்புற சமூகத்தினரும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டத்திலும், சுற்றுப்புறத்திலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும், இந்தக் குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்பவும் வலியுறுத்துகிறது.
சோசலிசத்திற்கான பரந்த சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான ஒருங்கிணைந்த போராட்டம் மட்டுமே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க
- இலங்கை அரசாங்கத்தின் 2026 வரவு-செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது
- இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் சிக்கன நடவடிக்கைகளின் "வெற்றியை" கொண்டாடுகின்றன
- அரச மருத்துவ அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்! இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க சுகாதார ஊழியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!
- இலங்கையின் திசாநாயக்க அரசாங்கம் சந்தை சார்பு கல்வி சீர்திருத்தங்களை அறிவிக்கிறது
