மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
1. பிப்ரவரி 28 அதிகாலை வேளையில் தொடங்கிய ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல், அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் போர் நடவடிக்கையாகும். இதன் ஆரம்பக்கட்டத் தாக்குதலில், ஈரானின் அரசுத் தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி மற்றும் ஈரானிய அரசாங்கத்தின் பிற மூத்த தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு எவ்வித சட்டபூர்வ நியாயமும் இல்லை. அமெரிக்க அரசியலமைப்பின் 1-வது பிரிவு, 8-வது பிரிவின்படி தேவைப்படும் அமெரிக்க காங்கிரஸின் எவ்வித அனுமதியும் இதற்காகக் கோரப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் எந்தவொரு தீர்மானமும் இந்த வலிந்த தாக்குதலுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெனீவாவில் முடிவடைந்த, ஓமானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. ஈரான் மீதான தாக்குதலானது, 1945-1946ல் நாஜித் தலைவர்களுக்கு எதிரான நூரம்பேர்க் விசாரணைகளின் போது “அமைதிக்கு எதிரான குற்றம்” என்று விவரிக்கப்பட்டதற்கு துல்லியமாக ஒத்திருக்கிறது —“இதர போர்க் குற்றங்களிலிருந்து மட்டுமே வேறுபடும் அளவிற்கு, இது உச்ச சர்வதேசக் குற்றமாக இருப்பதுடன், இதில் ஒட்டுமொத்த தீமையும் குவிந்துள்ளது.”
2. பிப்ரவரி 14, 2026 அன்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்கத் திட்டத்தை ஒரு “நாகரீகப் பணி” என்று வர்ணித்துப் பேசிய இரண்டு வாரங்களிலேயே இந்தப் போர் தொடங்கியது. ஐரோப்பா தனது கடந்தகால பேரரசு குறித்த “குற்ற உணர்வையும் வெட்கத்தையும்” கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, “பெரிய மேற்கத்திய பேரரசுகளின்” வீழ்ச்சி குறித்து வெளிப்படையாக வருத்தமும் தெரிவித்தார். அதாவது, கொள்ளை, அடக்குமுறை மற்றும் இனப்படுகொலைகளின் மேல் கட்டப்பட்ட அதே பழைய காலனித்துவ ஒழுங்கையே அவர் போற்றினார். இந்த பேரரசின் ஏக்கத்தின் வாய்வீச்சைத் தொடர்ந்து, தற்போது குரூஸ் ஏவுகணைகள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய நகரங்கள் மீதான குண்டுவீச்சுகள் என உண்மையான போர் அரங்கேறி வருகிறது. “நாகரீகம்” பற்றிய பேச்சுக்கள் யாவும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முன்னால் சொல்லப்படும் வழக்கமான பொய்முகமே என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
3. ஈரான் மீதான இந்தக் குண்டுவீச்சு ஒரு குற்றமாகும்—மக்களுக்கு எதிரானது மற்றும் நாகரிகத்திற்கு எதிரானது. கோம் (Qom) மற்றும் இஸ்பஹான் (Isfahan) போன்ற நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, அதன் இலக்கானது வெறும் “உள்கட்டமைப்பு” மட்டுமல்ல, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சமூகத்தின் திரட்டப்பட்ட அறிவுசார்ந்த, கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கையையும் நோக்கி உள்ளது. 90 மில்லியன் (9 கோடி) மக்கள் வாழும் ஒரு தேசத்தை வெறும் வரைபடக் குறியீடுகளாகவும் மற்றும் “ஆட்சி மாற்ற” முழக்கங்களாகவும் சுருக்குவது என்பது ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மொழியைக் குறிக்கிறது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள உழைக்கும் மக்கள் இந்தத் தாக்குதலை எதிர்க்க வேண்டும், இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தக் கோர வேண்டும். மேலும் பாரிய படுகொலைகளையும் கலாச்சார அழிப்பையும் கொள்கை ரீதியான கருவிகளாக இயல்பாக்குவதை நிராகரிக்க வேண்டும்.
4. அமெரிக்காவிற்கு ஈரானால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது முதலாளித்துவ ஊடகங்களில் கூட பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். சொல்லப்போனால், ஜூன் 2025-ல் நடந்த பன்னிரண்டு நாள் போருக்குப் பிறகு —அப்போது அமெரிக்கா தனது ஆயுதக் கிடங்கில் உள்ள மிகப்பெரிய வழக்கமான வெடிமருந்துகளைக் கொண்டு ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கியது— ஈரானின் அணு ஆயுதத் திறன் “அழிக்கப்பட்டுவிட்டது” என்று ட்ரம்பே அறிவித்தார். பிப்ரவரி 24, 2026 அன்று ஆற்றிய தனது நாட்டின் நிலை குறித்த உரையில் கூட அவர் இந்த வாதத்தைத் திரும்பக் கூறினார். ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு, ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு “உடனடி அச்சுறுத்தலாக” இருப்பதாக அவர் கூறியது, பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் 2025-ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கு முற்றிலும் முரணானது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திறனை உருவாக்க ஈரானுக்கு இன்னும் பல ஆண்டுகள், அல்லது ஒரு தசாப்தம் கூட ஆகலாம் என்று அந்த மதிப்பீடு முடிவு செய்தது. ட்ரம்பின் கூற்றுக்கு உளவுத்துறை ஆதாரங்கள் இல்லை என்று இரு உளவுத்துறை வட்டாரங்கள் சி,என்,என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான பிரதிநிதி ஜிம் ஹிம்ஸ், இது குறித்து விளக்கம் பெற்ற பிறகு இவ்வாறு கூறினார்: “மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்குவதற்கு இப்போதுதான் சரியான தருணம் என்பதற்கு ஒரு ஒற்றை நல்ல காரணத்தைக் கூட எங்களால் கேட்க முடியவில்லை.”
5. ஈரான் மீது தாக்குதல் உடனடியாக நடக்கவிருக்கிறது என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தது. தாக்குதலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 19 அன்று, ICFI இவ்வாறு கூறியது: “அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை —அதாவது இந்த கிரகத்தின் மீதான மேலாதிக்கத்தை— அமைதி வழியில் அடைய முடியாது. ஈரானுக்கு எதிரான போர் என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவுடன் வரவிருக்கும் மோதலுக்கான அதன் தயாரிப்பில் ஒரு முக்கியமான கட்டமாகும்.” மேலும் அது, மிகவும் தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்ட ஒரு எச்சரிக்கையை விடுத்தது: “ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம் போரை நிறுத்த முடியாது. சர்வதேச தொழிலாள வர்க்கம், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் இருந்ததைப் போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறது. ஆனால் அந்த ஒப்பீடு போதுமானதல்ல, ஏனெனில் இன்றைய போரின் விளைவுகள் 87 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட முடிவில்லாத அளவு பயங்கரமானதாக இருக்கும். மனிதகுலம் ஒரு அணுவாயுத பேரழிவின் உடனடி அபாயத்தை எதிர்கொள்கிறது. இது, அனைத்து மனித உயிர்களின் அழிவிற்கும் இட்டுச் செல்லும்.”
6. போர் தொடுப்பதற்கான தனது முடிவிற்கு ஒரு தெளிவான, அல்லது நம்பத்தகுந்த விளக்கத்தை அளிப்பதற்கு ட்ரம்ப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான்கு நாட்களுக்கு முன்புதான், அவர் வரலாற்றிலேயே மிக நீண்ட, நாட்டின் நிலை குறித்த உரை ஒன்றை ஆற்றியிருந்தார். அந்த சமயத்தில் அவர் ஏற்கனவே போருக்கான அனுமதியில் கையெழுத்திட்டிருந்த போதிலும், ஈரானைப் பற்றி ஒரு சில வாக்கியங்களை மட்டுமே அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார். 2003 ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு, மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இராணுவக் குவிப்பு ஏற்கனவே நன்கு முன்னேறிய நிலையில் இருந்தது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் பல மாதங்களாகவே கொமேனியின் நடமாட்டங்களைக் கண்காணித்து வந்தன.
7. ட்ரம்ப் இந்தப் போரை வெள்ளைமாளிகை ஓவல் அலுவலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மூலமாகவோ, அல்லது யுத்தப் பிரகடனம் செய்யும் அதிகாரம் கொண்ட அரசியலமைப்பின் கீழ் இயங்கும் நாடாளுமன்றத்தின் முன்னிலையிலோ அறிவிக்கவில்லை. மாறாக, புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-ஏ-லாகோ மாளிகையிலிருந்து, அதிகாலை 2:30 மணிக்கு தனது சொந்த சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல் இணையத் தளத்தில் பதிவிடப்பட்ட எட்டு நிமிட வீடியோ மூலம் அறிவித்தார். அப்போது அவர், “USA” என்று பொறிக்கப்பட்ட வெள்ளை நிற பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்தார். ட்ரம்ப் அமெரிக்க மக்களிடம் பேசவில்லை. அவர் தனது ஆதரவுத் தளத்திடம் —குறிப்பாக, அவர் வளர்த்தெடுத்த, அவரது உண்மையான அரசியல் கும்பலாக இருக்கும் பாசிச இயக்கத்திடம் பேசிக் கொண்டிருந்தார். பிப்ரவரி 28 அன்று, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போல, “இப்போது, பெரும்பாலான அமெரிக்கர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் தனது தலையில் ஒரு பேஸ்பால் தொப்பியை அணிந்து கொண்டு ட்ரம்ப் தனது முடிவை அறிவித்தார். அவர், அமெரிக்காவையும் ஒட்டுமொத்த உலகையும் ஒரு பேரழிவுகரமான பாதையில் தள்ளியுள்ளார்.” அந்த அறிக்கை தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று ஒப்பீட்டைச் செய்தது: “எதிர்காலத்தில், வரலாற்றாசிரியர்கள் ட்ரம்ப் ஈரான் மீது நடத்திய பிப்ரவரி 28, 2026 தாக்குதலை, ஹிட்லர் போலந்து மீது நடத்திய செப்டம்பர் 1, 1939 படையெடுப்புடன் ஒப்பிடுவார்கள். இவை சம அளவிலான குற்றங்களாகும்.”
8. போருக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருப்பதை கருத்துக் கணிப்புகள் உறுதிப்படுத்திய போதிலும், அது ட்ரம்பின் கணக்கீடுகளில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு மேரிலாண்ட் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில், 21 சதவீதமான அமெரிக்கர்கள் மட்டுமே ஈரான் மீதான தாக்குதலை ஆதரித்தனர். அதேசமயம் 49 சதவீதத்தினர் அதை உறுதியாக எதிர்த்தனர். தாக்குதல் நடந்த நாளன்று யூகோவ் (YouGov) நடத்திய உடனடி கருத்துக் கணிப்பில் 34 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர் —இது நவீன வரலாற்றிலேயே அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த மிகக்குறைந்த பொது ஆதரவாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்புகளுக்குக் கிடைத்த ஆதரவில் இது பாதியளவு கூட இல்லை. ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பில் 43 சதவீதம் பேர் போருக்கு எதிர்ப்பையும், 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவையும் தெரிவித்தனர். சிபிஎஸ்/யூகோவ் (CBS/YouGov) கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 74 சதவீதம் பேர், ட்ரம்ப் ஒருபோதும் கோராத காங்கிரஸின் அனுமதியை அவர் பெற வேண்டும் என்று கூறினர். குயினிபியாக் (Quinnipiac) கருத்துக் கணிப்பில் 10-ல் 7 வாக்காளர்கள் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையை எதிர்த்தனர். இந்தப் புள்ளிவிவரங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும், அது ஒடுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. இந்தப் போர் அமெரிக்க மக்களின் பெயரால் நடத்தப்படவில்லை. மாறாக, அவர்கள் தெளிவாக வெளிப்படுத்திய, அவர்களின் விருப்பத்திற்கு எதிராகவே நடத்தப்படுகிறது.
9. அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்து படுகொலைகளின் வடிவத்தை எடுத்துள்ள இந்தப் போருடன் சேர்ந்து மிகப்பெரிய குண்டுவீச்சுகள் மேற்கொள்ளப்படுகின்றன, பயங்கரமான பொதுமக்களின் உயிரிழப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. முதல் கட்டத் தாக்குதல்கள் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, ஈரானின் உச்ச தலைவர் அலி கொமேனி, இராணுவப் படைப்பிரிவுத் தலைமைத் தளபதி, பாதுகாப்பு மந்திரி, புரட்சிகர காவல்படையின் தளபதி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மற்றும் சுமார் 40 இதர அதிகாரிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி தாக்கப்பட்டது. இதில் சுமார் 150 பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. முதல் சில மணிநேரங்களிலேயே 200-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக ஈரானிய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஈரானின் தலைநகரான “தெஹ்ரானின் இதயப் பகுதியில்” நடத்தப்பட்ட தாக்குதல்கள், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து நீடிக்கின்றன. கொமேனியின் மகள், பேரக்குழந்தை, மருமகள் மற்றும் மருமகன் ஆகியோர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
10. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரை “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” வரை தொடர “உத்தேசித்துள்ளன” என்று ட்ரம்ப் அறிவித்தார். இதன் மூலம், ஈரானை அடிபணிய வைப்பதற்காக ஒரு நீண்டகால குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு வாஷிங்டன் தயாராகி வருவதை அவர் தெளிவுபடுத்தினார். அதே நேர்காணலில், அமெரிக்க சிப்பாய்களின் மரணங்கள் குறித்து உறையவைக்கும் அலட்சியத்துடன் பேசிய ட்ரம்ப், “உயிரிழப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று வெளிப்படையாகக் கூறினார். மேலும் பென்டகனின் மதிப்பீடுகள் “இன்னும் சற்று அதிகமாக” இருக்கலாம் என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். இந்தக் கருத்துக்கள், ஒரு குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்காக —எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானில் மட்டுமல்லாமல், பிராந்தியமெங்கும் மற்றும் அமெரிக்க துருப்புகளுக்கு இடையேயும்— எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுக்க வெள்ளை மாளிகை தயாராக உள்ளது என்பதற்கான பகிரங்கமான அறிவிப்பாகும்.
11. ஜூன் 2025 போருக்கு முன்பு நடந்தது போலவே, தற்போதும் பேச்சுவார்த்தைகள் நல்லெண்ணத்துடன் தொடரப்படுகின்றன என்ற அமெரிக்காவின் உறுதிமொழிகளை மீண்டும் ஒருமுறை நம்பி, ஈரானியத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் ஏமாற்றப்பட்டு, திகைப்பில் ஆழ்த்தப்பட்டனர். தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெஹ்ரானிலிருந்து ஜெனிவாவிற்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார். ஈரானின் அரசு செய்தி நிறுவனம், பேச்சுவார்த்தைகளின் முட்டுக்கட்டை குறித்து அதிருப்தியை வெளியிட்ட போதிலும், அதற்கு வாஷிங்டனே காரணம் என்று குற்றம் சாட்டியது. இருப்பினும், அந்தக் கடைசி நேரத்தில் கூட இராஜதந்திர செயல்முறை உண்மையானது என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் செயல்பட்டனர். இப்போது இந்த வடிவம் மிகத் தெளிவாகத் தெரிகிறது: ஒரு மரணத் தாக்குதலை தயாரிக்கும் போது, அமெரிக்கா தனது எதிரியை ஒரு தவறான பாதுகாப்பு உணர்வுக்குள் தள்ளுவதுக்கு இராஜதந்திரம் என்ற பாசாங்கைப் பயன்படுத்துகிறது. ஜூன் 2025-இல், அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி 2026-இல், ஜெனிவா சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்து இரண்டே நாட்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
12. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் எதிர்வினையும் எந்தவிதத்திலும் குறைவான இழிவானது அல்ல. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது, அந்த நாட்டின் தலைவரைப் படுகொலை செய்தது, பள்ளிக்கூடக் குழந்தைகள் மீது குண்டு வீசியது என இவை அனைத்தையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் தொடங்கின. இருப்பினும், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கை, ஆக்கிரமிப்பாளர்களை விடுத்து பாதிக்கப்பட்ட நாட்டின் மீதே கண்டனம் தெரிவித்தது. அந்த E3 நாடுகளின் (பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து) அறிக்கை, “பிராந்தியத்திலுள்ள நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை மிக வன்மையாகக் கண்டிப்பதாகக்” கூறியதுடன், தங்கள் மூன்று அரசாங்கங்களும் “இந்தத் தாக்குதல்களில் பங்கேற்கவில்லை” என்று மட்டுமே கூறியது. ஈரானிய ஆட்சி “முற்றிலும் அருவருப்பானது” என்று கூறிய ஸ்டார்மர், ஈரான் “மேலும் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கோரினார். அதாவது, தனது தலைமையும் பள்ளிக் குழந்தைகளும் கொல்லப்பட்ட ஒரு திடீர் தாக்குதலுக்கு உள்ளான ஒரு நாட்டிற்குத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இல்லை என்பது போல அவர் பேசினார். அடுத்த நாளே, ஸ்டார்மர் இன்னும் ஒரு படி மேலே சென்று, பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் “தற்காப்பு நடவடிக்கைகளை” மேற்கொண்டு வருவதாகவும், ஈரான் நடத்திய தாக்குதல்களை பிரிட்டன் ஏற்கனவே இடைமறித்துள்ளதாகவும், மேலும் ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவின் கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டதாகவும் அறிவித்தார். இதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்ற போலி வேடம் நாளுக்கு நாள் கலைந்து வருகிறது. ஈராக், லிபியா மற்றும் உக்ரேன் பினாமிப் போர்களில் இழுக்கப்பட்டது போலவே, ஐரோப்பிய வல்லரசுகளும் அமெரிக்க இராணுவவாதத்தின் சுழலில் சிக்கி இழுக்கப்படுகின்றன.
13. அமெரிக்காவும் இஸ்ரேலும் நிச்சயமாக கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமையின் தலை துண்டிக்கப்பட்டது ஒரு பேரழிவு தரும் தாக்குதலாகும். ஆனால், ஒரு போரின் முடிவை அதன் முதல் சில நாட்கள் அல்லது மாதங்களின் முடிவுகளைக் கொண்டு தீர்மானிப்பது ஒரு பாரிய தவறு என்பதை வரலாறு கற்பிக்கிறது. 2003 ஈராக் படையெடுப்பின் ஆரம்பக்கட்ட “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு” தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இரண்டு தசாப்த கால கிளர்ச்சிகள், மதப்பிரிவு உள்நாட்டுப் போர் ஆகியவற்றால், அமெரிக்காவிற்கு ஒரு மூலோபாய பேரழிவே மிஞ்சின. 2001-ல் ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட “வெற்றிகரமான” படையெடுப்பிற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021-ல் காபூல் தலிபான்களிடம் வீழ்ந்தது ஏகாதிபத்திய ஆணவத்தின் நினைவுச் சின்னமாக நிற்கிறது. ஈரான் 9 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு. அதன் நிலப்பரப்பு இஸ்ரேலை விட சுமார் 74 மடங்கு பெரியது. அந்நாட்டு மக்கள் ஈராக்குடன் எட்டு ஆண்டுகாலப் போர், பல தசாப்த கால தடைகள் மற்றும் மீண்டும் மீண்டும் நிகழும் வெளிநாடுகளின் தாக்குதல்களைத் தாங்கி நின்றுள்ளனர். கொமேனியின் படுகொலை அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், அமெரிக்கா மேற்கொண்டுவரும் பெரும் படுகொலைகளால் திணிக்கப்படும் ஆட்சி மாற்றத்தை, அந்நாட்டு மக்கள் நன்றியுடன் வரவேற்பார்கள் என்றும் கருதுவது, வியட்நாம் போருக்குப் பிந்தைய ஒவ்வொரு அமெரிக்க இராணுவ சாகசத்திலும் காணப்படும் அதே மாயையாகும்.
14. அமெரிக்கா கணக்கிட முடியாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்ட ஒரு போரைத் தொடுத்துள்ளது. ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் ஏற்கனவே பாரசீக வளைகுடா முழுவதும் பரவி, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், சிவிலியன் விமான நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன. ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியதில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹோர்முஸ் நீரிணை — இதன் வழியாகத்தான் உலகின் தினசரி எண்ணெய் தேவையில் சுமார் 20 சதவீதம் கொண்டு செல்லப்படுகிறது— இடையூறுகளை எதிர்கொள்கிறது. எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் பெரும் கொந்தளிப்பில் உள்ளன. பிராந்தியம் முழுவதும் விமான நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த மோதலானது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு தீயில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, இதன் அளவையும் காலத்தையும் யாராலும் கணிக்க முடியாது. முதல் அமெரிக்க உயிரிழப்புகளும் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
15. இந்தப் போருக்கான உண்மையான காரணங்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் இல்லை —ஈரானின் அணுசக்தித் திட்டம் அமைதி நோக்கங்களைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியாது என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளது. மாறாக இந்தப் போருக்கான பின்னணியில், எண்ணெய்க்கான புவிசார் அரசியல், மூலோபாய வளங்களைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான போராட்டம் மற்றும் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி ஆகியவை உள்ளன. ஈரான் உலகின் நான்காவது பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பையும், இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்பையும் கொண்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி அமைப்பில் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் வடக்குக் கரையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வளங்களைக் கட்டுப்படுத்துவது —மிக முக்கியமாக, தனது எதிரிகளுக்கு இந்த வளங்கள் கிடைப்பதைத் தடுத்து நிறுத்துவது— கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையமான நோக்கமாக இருந்து வருகிறது.
16. ஈரானை அடிபணியவைப்பதற்கான இந்த உந்துதலை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவான பாதையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இந்தத் தாக்குதலுக்கு முன்பே உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல, வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதும், ஈரான் மீதான இந்தத் தாக்குதலும் ஒரே மூலோபாயத்தின் கூறுகளாகும்: தனது தினசரி எண்ணெய் நுகர்வில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்யும் சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாராகும் வகையில், உலகின் எரிசக்தி வளங்களைத் கைப்பற்ற அமெரிக்கா முயல்கிறது. சீனாவின் எரிசக்தி இறக்குமதியில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை ஈரானிலிருந்து வருகின்றன. இதற்கான அணுகலை இழப்பது சீனாவின் சுதந்திரமான தொழில்துறைக்கு ஒரு பெரிய மூலோபாய அடியாக அமையும். இந்த அர்த்தத்தில், ஈரான் மீதான போரானது உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஒரு போராகும். இது தெஹ்ரானை மட்டுமல்லாமல் பெய்ஜிங், மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களையும் இலக்கு வைக்கிறது. மத்திய கிழக்கின் எரிசக்தி வளத்தில் இந்த நாடுகள் தங்கியிருப்பதானது, வாஷிங்டனுக்கு அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியை வழங்குகிறது. ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை மட்டுமல்லாமல், அதன் பெயரளவு நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது —ஐரோப்பியப் பொருட்கள் மீது வரிகளை விதிப்பது, கிரீன்லாந்தைக் கைப்பற்ற அச்சுறுத்துவது, வெனிசுவேலாவின் எண்ணெய்க் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முனைவது போன்ற நடவடிக்கைகள் மூலம், வளர்ந்து வரும் “வல்லரசுப் போட்டி” யுகத்தில், பூமியின் ஒவ்வொரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்கா தனது இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்த விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
17. இந்தப் போரை முன்னெடுப்பதில் ஜனநாயகக் கட்சியின் பங்கு, அவர்களை ட்ரம்பின் கூட்டாளிகளாக மாற்றியுள்ளது. ஜனநாயகக் கட்சியினர் இந்தப் போருக்கு எதிரானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் இதற்கு உடந்தையாக இருப்பவர்கள். இப்போது ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஆயுதத்திற்கும் அவர்களே நிதி வழங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 901 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (NDAA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, 115 ஜனநாயகக் கட்சியினர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். செனட்டில், மூன்றில் இரண்டு பங்கு ஜனநாயகக் கட்சியினர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜனவரி மாதம், 149 பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் 839 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாக்களித்தனர். 2003 ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு மிகப்பெரிய இராணுவக் குவிப்பு நடந்து கொண்டிருந்த போதிலும், அதற்கு முந்தைய வாரங்களில் நாடாளுமன்றத்தின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ், செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் அல்லது நாடாளுமன்றத்தின் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் என யாருமே போரைத் தடுக்க எந்தவொரு தீவிர முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, ஒகாசியோ-கோர்டெஸ் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகத்தின் “ஆட்சி மாற்ற” கருத்துக்களையே திரும்பக் கூறினார். பென்சில்வேனியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் பெட்டர்மேன், ஈரான் மீதான “நள்ளிரவுச் சுத்தியல் தாக்குதல் நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், அதற்காக நான் ஆரவாரம் செய்தேன்” என்று நியூஸ்மேக்ஸ் தளத்தில் பகிரங்கமாக அறிவித்தார். காங்கிரஸ் அனுமதியின்றி ஈரானுக்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் தீர்மானத்தை எதிர்த்து ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜோஷ் கோத்தெய்மர் ஒரு இருகட்சி அறிக்கையை வெளியிட்டார். ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், “ஜனாதிபதி தனது மேசையில் அனைத்து விருப்பங்களையும் வைத்திருப்பது பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன்” என்று அறிவித்தார்.
18. ட்ரம்ப் பயன்படுத்தும் அனைத்துக் கொடூரமான ஈரான்-எதிர்ப்பு தாக்குதல்களையும் ஜனநாயகக் கட்சியினரும் ஊக்குவிக்கின்றனர். ஈரான், “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உலகின் முதன்மையான நாடு” என்ற ட்ரம்பின் வர்ணனையை அவர்களும் எதிரொலிக்கின்றனர். ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறக்கூடாது என்பது முதல், இஸ்லாமியக் குடியரசு மட்டுமே தனித்துவமான ஒடுக்குமுறை ஆட்சி என்பது வரையில், ஆட்சி மாற்றத்திற்கான ஒவ்வொரு பொய் வாதங்களையும் அவர்கள் மறுசுழற்சி செய்கின்றனர். எகிப்து, சவுதி அரேபியா மற்றும் வளைகுடாவில் உள்ள சிறிய நாடுகளில், அமெரிக்காவின் ஆதரவுடன் நடக்கும் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகார ஆட்சிகள் இருக்கும் ஒரு பிராந்தியத்தில், இவர்கள் இதைச் சொல்கிறார்கள். ஜனநாயகக் கட்சியின் குரலாகச் செயல்படும் நியூ யோர்க் டைம்ஸ், கொமேனியை அகற்றுவதற்கு “தரையில் சூழலை உருவாக்குவதற்காக” வடிவமைக்கப்பட்ட தாக்குதல்கள் உட்பட, இராணுவத் தெரிவுகளின் விரிவான வரைபடங்களை வெளியிட்டு, இந்தத் தாக்குதலுக்கு பொதுமக்களின் கருத்தை உருவாக்குவதிலும் அதனை நியாயப்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டது. இப்போது போர் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியினரின் “எதிர்ப்பு” என்பது காங்கிரஸின் அனுமதி பெறப்படவில்லை என்ற நடைமுறை புகார்களை மட்டுமே கொண்டுள்ளது —அதாவது, போருக்கு எதிராக எந்தவொரு கொள்கை ரீதியான எதிர்ப்பு என்ற ஒரு வார்த்தையைக் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. ஜெப்ரீஸ் அவரே இவ்வாறு அறிவித்தார்: “ஈரான் ஒரு மோசமான நாடு, அது ஆக்ரோஷமாக எதிர்கொள்ளப்பட வேண்டும்.” இது போருக்கான எதிர்ப்பு அல்ல. போரைத் தொடுக்கும் முடிவில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையே ஆகும்.
19. ஈரான் மீதான இந்தத் தாக்குதலானது, அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த 73 ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் ஆக்கிரமிப்பு வரலாற்றின் ஒரு விளைவாகும்—ஈரானின் தற்காப்பு நடவடிக்கைகளை “அறிவற்றவை” என்றோ அல்லது “தூண்டுதலற்றவை” என்றோ சித்தரிக்கும் பிரச்சாரங்கள் எவ்வளவு ஆதாரமற்றவை என்பதை இந்த வரலாறு நிரூபிக்கிறது. 1953-ல், ஈரானிய எண்ணெயை மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக, ஈரானின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக்கை சி.ஐ.ஏ (CIA) மற்றும் பிரிட்டிஷ் MI6 ஆகிய உளவு நிறுவனங்கள் தூக்கியெறிந்தன. அப்போது தெஹ்ரானின் வீதிகளில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர். 26 ஆண்டுகளாக அமெரிக்கா ஷா-வின் (Shah) சர்வாதிகாரத்தை ஆதரித்து வந்தது. சித்திரவதை மற்றும் அடக்குமுறை முறைகளில் SAVAK இரகசிய போலீசாருக்கு அமெரிக்கா பயிற்சியும் அளித்து ஆயுதங்களையும் வழங்கியது. 1980–88 ஈராக்-ஈரான் போரின் போது, சதாம் உசேன் தலைமையிலான ஈராக்கிய அரசு, ஈரானிய படையினர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் என்று தெரிந்தே, அதற்குத் தேவையான உளவுத் தகவல்களை அமெரிக்கா வழங்கியது—இதன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான ஈரானிய படையினர்கள் நச்சு வாயுத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டனர். ஜூலை 1988-ல், யு.எஸ்.எஸ் வின்சென்ஸ் என்ற போர் விமானம், ஈரானின் ஏர் 655 என்ற சிவிலியன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதில் 66 குழந்தைகள் உட்பட 290 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை மேற்கொண்ட போர் விமானத்தின் கேப்டனுக்கு பிற்காலத்தில் உயரிய விருது வழங்கப்பட்டது. 2007 முதல், இஸ்ரேல் அமெரிக்காவின் உடந்தையுடன், கார் குண்டு, காந்தக் கருவி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் இயந்திர துப்பாக்கி மூலம் குறைந்தது ஏழு ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகளைப் படுகொலை செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் கூட்டாக உருவாக்கப்பட்ட “ஸ்டக்ஸ்நெட்” (Stuxnet) எனும் இணையவழி ஆயுதம் (cyberweapon), நடான்ஸ் (Natanz) அணுசக்தி நிலையத்தில் இருந்த சுமார் 1,000 மையவிலக்குக் கருவிகளை (centrifuges) அழித்தது. ஜனவரி 2020-ல், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்தது. ஜூன் 2025-ல், சர்வதேச பாதுகாப்பு வளையத்தில் இருந்த ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி 1,000-க்கும் மேற்பட்டோரைக் கொன்றதுடன், அணுசக்தி விஞ்ஞானிகளை அவர்களின் வீடுகளில் வைத்தே குறிவைத்துத் தாக்கியது. இப்போது, பிப்ரவரி 2026-ல், ஈரானின் அரசுத் தலைவரையும், டசின் கணக்கான உயர்மட்ட அதிகாரிகளையும் அமெரிக்கா படுகொலை செய்துள்ளதோடு, ஒரு ஆரம்பப் பள்ளியின் மீது குண்டுவீசித் தாக்கியும் உள்ளது. இத்தனைக்கும் பிறகு அமெரிக்கா மீதான ஈரானின் பகையை அறிவுக்குப் புறம்பானது என்று விவரிப்பது ஒரு பகுப்பாய்வு அல்ல. அது ஒரு ஏகாதிபத்திய சக்தியின் சுயநலமான கட்டுக்கதையாகும்.
20. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் தனது சொந்த நாட்டு மக்களுடனேயே போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் முறையான வகையில் ஜனநாயக உரிமைகளைச் சிதைத்து வருகிறது, அரசுப் பணிகளில் இருந்து அதிகாரிகளை நீக்குகிறது, அரசியல் எதிரிகளுக்கு எதிராக மத்திய அரசின் முகமைகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது, நீதித்துறையைத் தாக்குகிறது, சமூக நலத் திட்டங்களை முடக்குகிறது மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில், நிறைவேற்று அதிகாரத்தை குவித்து வருகிறது. அமெரிக்க நகரங்களையும் சுற்றுப்புறங்களையும் அச்சுறுத்துவதற்காக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மற்றும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) முகவர்களை அது நிலைநிறுத்தியுள்ளது. இது உரிமைகள் மசோதாவை மீறுகிறது. ஈரானுக்கு எதிராக இந்தக் குற்றவியல் போரைத் தொடங்கிய அதே நிர்வாகம்தான், உள்நாட்டிலும் ஒரு சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது. தொழிலாள வர்க்கமானது, வீழ்ச்சியடைந்து வரும் உண்மையான ஊதியங்கள், வீட்டு வசதி நெருக்கடி, சீர்குலைந்து வரும் பொதுச் சேவைகள் மற்றும் கடந்த நூற்றாண்டில் வென்றெடுத்த ஒவ்வொரு சமூக ஆதாயத்தின் இழப்பு ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் நிலையில், இந்த அரசு அருவருக்கத்தக்க அளவிலான செல்வத்தைக் குவித்துள்ள ஒரு நிதி தன்னலக்குழுவின் நலன்களுக்காக ஆட்சி செய்கிறது. ஈரானுக்கு எதிரான போரும், அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரும் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. அவை ஒரே தாக்குதலின் இரண்டு முனைகளாகும். வெளிநாடுகளில் மீதான இராணுவவாதம் எப்போதும் உள்நாட்டில் சமூகப் பிற்போக்குத்தனத்தின் கருவியாகவும் துணையாகவும் இருந்து வருகிறது.
21. அமெரிக்கா, ஈரான், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இந்தக் குற்றவியல் போருக்கு எதிராக அணிதிரள வேண்டும். முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு பிரிவும் இதனை நிறுத்தப் போவதில்லை. மேலே விளக்கியுள்ளபடி, ஜனநாயகக் கட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு சக்தி அல்ல. ஜனநாயகக் கட்சியுடனும் முதலாளித்துவ அரசுடனும் கைகோர்த்துச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எதுவும் செய்யப் போவதில்லை. இந்த நிறுவனங்களைச் சுற்றி இயங்கும் போலி இடது அமைப்புகள், போருக்கு எதிரான எதிர்ப்பைத் திசைதிருப்பவும், மீண்டும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்குள்ளேயே கொண்டு சேர்க்கவும் மட்டுமே பயன்படுகின்றன.
22. ஈரான் மீதான இந்தக் குற்றவியல் போருக்கு எதிரான போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் பின்வரும் வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றன:
- ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அனைத்து விதமான இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்த வேண்டும். ஈரான் மீது இனி ஒரு குண்டு கூட வீசப்படக்கூடாது, ஒரு ட்ரோன் கூட இயக்கப்படக்கூடாது. இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட வேண்டும். அதனுடன் மத்திய கிழக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும்—இதில் காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை மற்றும் பயங்கரவாதம், முற்றுகை மற்றும் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பணிய வைப்பதை நோக்கமாகக் கொண்ட தீவிரமடைந்து வரும் தாக்குதல்கள் ஆகியவையும் அடங்கும்.
- மத்திய கிழக்கிலிருந்து அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் உள்கட்டமைப்பாகச் செயல்படும் நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களையும் மூட வேண்டும். பாரசீக வளைகுடா முழுவதும் —கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில்— பரவியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் விரிவான வலையமைப்பு, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக உலகின் எரிசக்தி வளங்களின் மீது அமெரிக்க நிதி மூலதனத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவே நிலைகொண்டுள்ளன.
- நேட்டோவை கலைக்க வேண்டும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரம்மாண்டமான இராணுவ-உளவுத்துறை அமைப்புகளை அகற்ற வேண்டும். ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி பென்டகனுக்கும் உளவு அமைப்புகளுக்கும் திருப்பி விடப்படுகிறது. இது, சமூக வளங்களை மரண இயந்திரத்திற்குள் செலுத்தும் ஒரு மிகப்பெரிய திசைதிருப்பலாகும். இந்த வளங்கள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் அவசர சமூகத் தேவைகளான மருத்துவம், கல்வி, வீட்டு வசதி மற்றும் சீர்குலைந்து வரும் உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
- ஈரான் மற்றும் இதர அனைத்து நாடுகளுக்கும் எதிரான அனைத்து வகையான பொருளாதாரத் தடைகளையும், பொருளாதாரப் போரையும் நிராகரிக்க வேண்டும். பல தசாப்தங்களாக ஈரானியப் பொருளாதாரத்தை நெரித்து வரும் தடைகள் என்பன, அந்நாட்டுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதைத் தடுத்து வருகின்றன. இது ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு எதிராக நடத்தப்படும் ஒரு “கூட்டுத் தண்டனை” முறையாகும். இது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப் வேண்டும்.
- இந்தப் போரின் சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகள் மீது முழுப் பொறுப்பையும் ஏற்க வைக்க வேண்டும். அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறி, காங்கிரஸின் அனுமதியின்றி ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவது ஒரு குற்றச் செயலாகும். ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்து, ஆரம்பப் பள்ளி உட்பட பொதுமக்களின் இலக்குகள் மீது குண்டுகளை வீசி திட்டமிட்டுச் செயல்படுத்திவரும் ஜனாதிபதி முதல் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வரை, அனைவரும் இதற்குப் பொறுப்பாளிகளாக ஆக்கப்பட வேண்டும்.
- ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தலும், அவற்றை விரிவுபடுத்தலும். போருக்கு எதிரான போராட்டத்தை, அமெரிக்க அரசு பாசிசமாக மாற்றமடைவதற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாது. காங்கிரஸின் ஒப்புதல் இன்றி ஈரான் மீது குண்டுவீசும் அதே அரசாங்கம், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது, நீதித்துறையைத் தாக்குகிறது, மத்திய அரசின் முகமைகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது மற்றும் எதிர்ப்புகளைக் குற்றமாக்குகிறது. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், தொழிலாள வர்க்கம் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், அமைப்பாகத் திரண்டு போராடவும், அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கவும் தனக்குள்ள உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
23. இந்தக் கோரிக்கைகளை அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவினரிடமும் முறையிடுவதன் மூலம் நிறைவேற்ற முடியாது. இதற்குத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாகும். ஒரு உண்மையான போருக்கு எதிரான இயக்கத்தைக் கட்டியெழுப்புவது, பின்வரும் நான்கு அத்தியாவசியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிறுவியுள்ளது:
- முதலாவதாக, போருக்கு எதிரான போராட்டமானது சமூகத்தின் மகத்தான புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், மக்கள் தொகையிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் அதற்குப் பின்னால் ஒன்றிணைக்க வேண்டும்.
- இரண்டாவதாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தையும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் இந்தப் பொருளாதார முறையையும் முடிவுக்குக் கொண்டு வராமல், போருக்கு எதிராக எத்தகைய தீவிரமான போராட்டத்தையும் நடத்த முடியாது.
- மூன்றாவதாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து முற்றிலும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி சுயாதீனமானதாகவும், அவற்றிற்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும்.
- நான்காவதாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சக்தியை அணிதிரட்ட வேண்டும்.
24. உயிர்களைப் பலிவாங்கும், வளங்களை உறிஞ்சும், பணவீக்கத்தைத் தூண்டும் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை வேகப்படுத்தும் ஒரு போரினால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பெறுவதற்கு ஏதுமில்லை, மாறாக இழப்பதற்குத்தான் அனைத்தும் உள்ளன. போருக்கு எதிரான போராட்டத்தை, அதனை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. ஏகாதிபத்தியம் என்பது ஒரு கொள்கை ரீதியான விருப்பத்தேர்வு அல்ல; அது உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்திற்கும், போட்டியிடும் தேசிய-அரசுகளாக அது பிரிக்கப்பட்டிருப்பதற்கும் இடையே உள்ள முரண்பாட்டின் தவிர்க்க முடியாத விளைவாகும். ஒவ்வொரு தேசிய-அரசும் ஒரு ஆளும் வர்க்கத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அந்த ஆளும் வர்க்கம் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மூலமும், வெளிநாடுகளில் வளங்களையும் சந்தைகளையும் கொள்ளையடிப்பதன் மூலமும் தனது நலன்களைத் தேடிக்கொள்கிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கான போராட்டமானது, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த முதலாளித்துவ அமைப்பு முறையையே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டமாகும். காலாவதியான தேசிய-அரசுகளின் பிளவுகளுக்குப் பதிலாக, ஒரு “உலக சோசலிச கூட்டமைப்பை” உருவாக்குவதே இதன் இலக்காகும். அத்தகைய அமைப்பில் மட்டுமே, மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள் அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும்.
25. இந்தப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி உங்கள் தொழிற்சாலைகள், பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கூட்டங்களை கூட்டுங்கள். அமெரிக்க மக்கள் இந்தப் போரை எதிர்க்கிறார்கள் என்பதையும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகிறார்கள் என்பதையும் உலகம் அறிய வேண்டும். ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள்.
