மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பின்வரும் அறிக்கையானது, ஈரான் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்காகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் அவர்களால் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இதில், சர்வதேச சட்டத்தை மீறும் இந்தத் தாக்குதலுக்கு ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் வழங்கியுள்ள ஆதரவை அவர் குறிப்பாகக் கண்டிக்கிறார். மெர்ஸ் நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புடனும், இந்த குற்றவியல் ஆட்சி மாற்றப் போருடனும் தனது ஒற்றுமையை மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்டோப் வான்ட்ரையரின் வீடியோ வெளியான முதல் 24 மணி நேரத்திற்குள் பேஸ்புக்கில் 1,90,000 பார்வைகளையும், டிக்டொக்கில் 1,15,000 பார்வைகளையும், இதர தளங்களில் இன்னும் பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும் பெற்றது. இந்த நேரத்தில் இது 20,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் (likes), 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவான கருத்துகளையும் பெற்றது. இது போருக்கு எதிரான பரவலான எதிர்ப்பையும், போருக்கு எதிராக ஒரு சோசலிச முன்னோக்கின் அவசியத்தையும் காட்டுகிறது.
ட்ரம்ப் ஈரான் மீது குண்டுவீசி, குழந்தைகளைக் கொன்று, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தீக்கிரையாக்குகிறார். இதைப் பார்த்து பிரெட்ரிக் மெர்ஸ் கைதட்டிப் பாராட்டுகிறார். இதுதான், அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் மேற்கத்திய 'விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்காகும்.'
பிப்ரவரி 28 அன்று இரவு, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐ.நா,வின் ஆணை இல்லாமலும், நாடாளுமன்ற அனுமதி இல்லாமலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின —இது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். அவர்கள் ஈரான் நாட்டுத் தலைவர், டசின் கணக்கான அரசாங்க அதிகாரிகள் மீதும், ஒரு பெண்கள் பள்ளியின் மீதும் குண்டுகளை வீசித் தாக்கினர். இதில் சுமார் 150 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இது துல்லியமான தாக்குதல் அல்ல — மாறாக, இது அரச பயங்கரவாதமாகும்.
மெர்ஸும் ஐரோப்பிய அரசாங்கங்களும் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டிக்கவில்லை —அதற்குப் பதிலாக ஈரானைக் கண்டிக்கிறார்கள். அவர்கள் தாக்குதலுக்குத் தேவையான இராணுவத் தளங்கள், விமானங்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை வழங்குகிறார்கள். எண்ணெய் வளம், சீனாவின் மீதான மேலாதிக்கம் மற்றும் புவிசார் அரசியலுக்காக ஒரு பெரும் போர் மூளும் அபாயத்தையும், ஏன் அணுஆயுதப் போர் அபாயத்தையும் கூட எதிர்கொள்ளத் துணிந்துள்ள ஒரு முன்னணியில், மெர்ஸ் ஜேர்மனியை ட்ரம்ப்புடன் இணைக்கிறார். இது அமைதிக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதே அடிப்படை குற்றத்திற்காகத்தான் நூரம்பேர்க்கில் நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனர்.
உக்ரேன் போரின் தீவிரத்தையும், பில்லியன் கணக்கிலான ஆயுத விநியோகத்தையும் ரஷ்யாவின் சர்வதேச சட்ட மீறலைச் சுட்டிக்காட்டி ஜேர்மன் அரசாங்கம் மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தியது. ஆனால், அமெரிக்காவின் விஷயத்தில், அதை ஒரு சட்ட மீறல் என்று பெயரிடக் கூட அவர்கள் முன்வரவில்லை.
மத்திய கிழக்கில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு ஈரானே பொறுப்பு என்றும், எனவே இந்தப் போர் நியாயமானது என்றும் மெர்ஸ் கூறுவது எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு சிடுமூஞ்சித்தனமான செயலாகும். இதே ஜேர்மன் அரசாங்கம்தான், காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடூரமான இனப்படுகொலையில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி, ஆதரித்து வருகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, இதுதான் அந்தப் பிராந்தியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பயங்கரவாத நடவடிக்கையாகும்.
இல்லை, ஈரானுக்கு எதிரான இந்தப் போர் மனித உரிமைகள் பற்றியதோ, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது அணு குண்டை தடுப்பதற்கானதோ அல்ல. இது முழுக்க முழுக்க எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் உள்ள புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் சீனாவிற்கு எதிரான போர் ஆயத்தங்கள் தொடர்பானது மட்டுமே.
ஆளும் வர்க்கமானது. தங்கள் இரக்கமற்ற தன்மையின் மூலம் எதையும் செய்யத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. மேலும், மனித நாகரிகத்தின் உயிர் வாழ்வையே கேள்விக்குறியாக்கும் ஒரு உலகப் போரை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
பொது மக்களிடையே, இந்த பைத்தியக்காரத்தனமான செயல் பரவலான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், பெரும்பாான்மையான மக்கள் ஈரானுக்கு எதிரான போரை எதிர்ப்பதைக் காட்டுகின்றன. ஆனால், இந்த எதிர்ப்பு அரசியல் ஸ்தாபனத்தில் எந்தப் பிரதிபலிப்பையும் பெறவில்லை. ஜேர்மனியில் உள்ள இடது கட்சி கூட, இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையையும் மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கத்தின் இலக்குகளையும் ஆதரிக்கிறது. அந்த இலக்குகளை வேறு வழிகளில் சிறப்பாக அடைய முடியும் என்று மட்டுமே அது கூறுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு தெளிவாகக் கூறுகிறது:
இந்தப் போர் அமைதிக்கு எதிரான ஒரு குற்றமாகும். இது உலகப் போர் மற்றும் அணுஆயுதப் பேரழிவை நோக்கிய ஒரு படியாகும். ஈரான் மீதான அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இந்தப் போருக்கு ஒரு காசு கூட, ஒரு துளி கூட ஆதரவு அளிக்கக் கூடாது. மத்திய கிழக்கிலிருந்து அனைத்து மேற்கத்தியப் படைகளும் வெளியேற வேண்டும் மற்றும் தடைகள் நீக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சர்வதேச, சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவோம்!
மெர்ஸின் போர் ஆதரவை நீங்கள் எதிர்த்தால், ட்ரம்பிற்கு எதிராகவும், இந்த ஏகாதிபத்திய பைத்தியக்காரத்தனத்திற்கு எதிராகவும் நீங்கள் இருந்தால் — அணிதிரளுங்கள்! சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள் மற்றும் போருக்கு எதிரான ஒரு நனவான சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள்.
