மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக சட்டவிரோத மற்றும் தூண்டப்படாத போரைத் தொடங்கிய மூன்று நாட்களில், இந்தத் தாக்குதலின் தன்மை தெளிவாகியுள்ளது: இது ஈரானிய அரசை முறையாக அழிப்பதையும், ஒட்டுமொத்த மக்களையும் அடிபணிய வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பாரிய குண்டுவீச்சு ஆகும்.
முதல் 48 மணிநேரத்தில் மட்டும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் சுமார் 1,200 இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், 2,000ம் இறாத்தல் எடை கொண்ட குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், மேலும் ஈரானின் மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைமையைக் கொல்ல “தலைதுண்டிக்கும் தாக்குதல்களை” நடத்தியுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இன்னும் அழிவுகரமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில், ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அடிப்படை நரம்பு மண்டலமான விமான எதிர்ப்பு பேட்டரிகள், ரேடார், தகவல் தொடர்பு வலையமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை முடக்குவதில் கவனம் செலுத்தி குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது இன்னும் ஒரு பேரழிவுகரமான தாக்குதலுக்கான தயாரிப்பாகும்.
ஈரானில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் (HRANA) அமைப்பின் கூற்றுப்படி, கடந்த திங்கள்கிழமை மதியம் கிழக்கு நேரப்படி, ஈரானில் குறைந்தது 742 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 176 குழந்தைகள் அடங்குவர், மேலும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ட்ரம்ப் இந்தப் படுகொலையை கொண்டாடுகிறார். “நாங்கள் அவர்களை துவம்சம் செய்து கொண்டிருக்கிறோம்,” என்று ஒரு கேபிள் டிவி தொகுப்பாளரிடம் அவர் கூறினார். மேலும் வரவிருக்கும் இன்னும் பெரிய அளவிலான கொலைகள் குறித்து அவர் வெளிப்படையான அச்சுறுத்தலை விடுத்தார்: “நாங்கள் இன்னும் அவர்களைக் கடுமையாகத் தாக்கவே தொடங்கவில்லை. ... பெரிய தாக்குதல் ஒன்று விரைவில் வரப்போகிறது.” இந்தப் போர் “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” அல்லது “இன்னும் நீண்ட காலம்” நீடிக்கக்கூடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். திங்கட்கிழமை இரவு சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்புடன் போர்களை “தொடர்ச்சியாக” நடத்த முடியும் என்று அவர் அறிவித்தார்.
தீவிர வலதுசாரி பத்திரிகையான நியூ யோர்க் போஸ்ட்டிடம் பேசிய ட்ரம்ப், “தரைப்படைகளை இறக்குவது குறித்து எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒவ்வொரு ஜனாதிபதியும் ‘தரைப்படை அனுப்பப்பட மாட்டாது’ என்று சொல்வார்கள். ஆனால் நான் அப்படிச் சொல்லமாட்டேன்” என்று அறிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்திலுள்ள தீ வைப்பவர்களும், இஸ்ரேலில் உள்ள அவர்களது கூட்டாளிகளும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தீக்கிரையாக்கி, உலகையே திகைக்க வைக்கும் அளவிலான ஒரு பேரழிவிற்குள் தள்ள அச்சுறுத்துகின்றனர்.
வெள்ளை மாளிகையால் வெளியிடப்படும் நியாயப்படுத்தல்களும் “விளக்கங்களும்” நாளுக்கு நாள், ஏன் மணிநேரத்திற்கு ஒருமுறை கூட மாறுகின்றன. இந்தப் போர் ஏன் தொடங்கப்பட்டது, இது எந்த “அச்சுறுத்தலுக்கு” பதிலளிக்கிறது அல்லது எந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்களால் ஒரு நிலையான விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அயதுல்லா கொமேனியின் கொலைக்குப் பிறகு ஒரு “மாற்றத்திற்கான” தனது திட்டங்கள், ஈரான் அரசின் தலைமையிலுள்ள அனைவரையும் அவர்கள் கொன்றுவிட்டனர் என்ற உண்மையால் சீர்குலைந்துவிட்டதாக ட்ரம்பே ஒப்புக்கொண்டுள்ளார்.
வாஷிங்டனில் தற்போது மேலோங்கி நிற்பது முற்றிலும் ஒரு குண்டர் தனமான போக்காகும். ஈரான் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகு திங்கட்கிழமை காலை பென்டகனில் நடந்த முதல் அதிகாரப்பூர்வ இராணுவச் செய்தியாளர் கூட்டத்தின் அரசியல் சாராம்சம் இதுவேயாகும். யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத், “இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்பின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி உத்தரவின் கீழ், யுத்த அமைச்சகம் உக்கிரமான போர் நடவடிக்கை என்ற பேரில் வரலாற்றிலேயே மிகவும் கொடிய, அழிவுகரமான, மிகவும் சிக்கலான மற்றும் மிகவும் துல்லியமான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது” என்று பிரகடனம் செய்தார்.
வரலாற்றிலேயே “மிகவும் அழிவுகரமான” வான்வழித் தாக்குதலா? அநேகமாக இதன் அர்த்தம் என்னவென்றால், குறைந்தது 100,000 மக்களைக் கொன்ற டோக்கியோ எரியூட்டல் உட்பட இரண்டாம் உலகப் போரின் தீக்குண்டு வீச்சுப் படுகொலைகள் மற்றும் முறையே 90,000 மற்றும் 60,000 பேரைக் கொன்ற ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணு குண்டுத் தாக்குதல்களை விடவும் இது கொடியது என்பதாகும்.
அமெரிக்க இராணுவம் தாண்டாத எல்லை என்று எதுவுமே இல்லை என்பதை ஹெக்செத் தனது கருத்துக்களில் தெளிவுபடுத்தினார். “இந்தப் போர் முற்றிலும் எங்கள் விதிமுறைகளின்படியும், அதிகபட்ச அதிகாரத்துடனும் நடத்தப்படும். இதில் முட்டாள்தனமான தாக்குதல் விதிகள் இருக்காது, தேசத்தைக் கட்டியெழுப்பும் சிக்கல்கள் இருக்காது, ஜனநாயகத்தை உருவாக்கும் பயிற்சிகள் இருக்காது, அரசியல் ரீதியாகச் சரியான போர்கள் இருக்காது. நாங்கள் வெற்றி பெறுவதற்காகவே போராடுகிறோம்...” என்று அவர் தற்பெருமை பேசினார்.
இது நாஜிக்கள் செய்ததைப் போலவே போரை நடத்துவதற்கான ஒரு நோக்கத்தின் பிரகடனமாகும். நாஜி பிரச்சார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸைப் போலவே ஹெக்செத்தும் “முழுமையான போரை” (total war) பிரகடனப்படுத்துகிறார். அமெரிக்கா இனி சர்வதேச அல்லது உள்நாட்டுச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாது. நூரம்பேர்க் தீர்ப்பாயம் மூன்றாம் பேரரசு (நாஜிக்களின் ஆட்சி) மீதான விசாரணையில் எதைக் கண்டித்ததோ, அதுவே இதுவாகும். ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவது “அமைதிக்கு எதிரான குற்றமாகும்” — இதுவே “உயர்ந்த சர்வதேசக் குற்றமாகும்” — இது இறுதியில் அதற்குப் பொறுப்பானவர்களை மரணதண்டனைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்தது.
இரத்த வெறியுடன், ஹெக்செத் “வீரர்களின் அறநெறியை” போற்றிப் புகழ்ந்ததோடு, “நாங்கள் இனி பாதுகாவலர்கள் அல்ல. நாங்கள் போர்வீரர்கள், எதிரிகளைக் கொல்லவும் அவர்களது மன உறுதியை உடைக்கவும் பயிற்சி பெற்றவர்கள்” என்று பிரகடனப்படுத்தினார். ஒரு கட்டத்தில், இஸ்ரேலை “திறமையான கூட்டாளிகள்” என்று புகழ்ந்த அவர், “வழக்கமான கூட்டாளிகள் கைகளைப் பிசைந்து கொண்டும், பலத்தை பயன்படுத்துவதைப் பற்றி தயங்கிக் கொண்டும் இருப்பதைப் போல அவர்கள் இல்லை” என்றார். அதாவது, காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைதான் இப்போது ஈரானுக்கான முன்மாதிரியாக இருக்கப் போகிறது.
ஒட்டுமொத்த செய்தியாளர் சந்திப்பும் அச்சுறுத்தும் தொனியில் இருந்தது: ஒரு சட்டவிரோதப் போரைத் தொடங்கி, பெரும் படுகொலைகளுக்குத் தயாராகி வரும் ஒரு ஆட்சி, அமெரிக்க மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எந்தக் கேள்வியையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் ஒரே நேரத்தில் பிரகடனம் செய்கிறது. குண்டுவீச்சு “நான்கு முதல் ஐந்து வாரங்கள்” நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியதை ஒரு நிருபர் சுட்டிக்காட்டியபோது, ஹெக்செத் அதை ஒரு “மடக்கும் கேள்வி” என்று ஏளனம் செய்தார். ட்ரம்ப் முன்னதாகக் குறிப்பிட்ட தனது சொந்த “நெறிமுறைகளைத்” தவிர, வெள்ளை மாளிகையும் பென்டகனும் தங்கள் செயல்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் அங்கீகரிக்கவில்லை.
நடான்ஸ் (Natanz) அணுசக்தி செறிவூட்டல் நிலையம் தாக்கப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியதை அடுத்து, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மார்ச் 2 அன்று அவசர ஆளுநர் குழுக் கூட்டத்தைக் கூட்டியது. அதன் அறிக்கையில், பணிப்பாளர் நாயகம் ரபேல் குரோஸி எச்சரிக்கையில், “அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், கதிரியக்கக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை எங்களால் நிராகரிக்க முடியாது; இது பெரிய நகரங்களைப் போன்ற அல்லது அதைவிடப் பெரிய பகுதிகளிலிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார்.
ஹெக்செத்தின் கருத்துக்கள் அடுத்த கட்டத்துக்கு போர் தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. “தரைப்படைகளை” அனுப்பும் வாய்ப்பை நிராகரிக்க மறுத்த அவர், ட்ரம்ப்பின் கூற்றுகளை வழிமொழிந்தார். இதன் மூலம் சுமார் 93 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான முழு அளவிலான தரைவழிப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளார்.
2003 ஈராக் மீதான படையெடுப்பு சுமார் 145,000 அமெரிக்கப் படையினர்களுடன் தொடங்கியது. ஆனால் ஈரானை ஆக்கிரமிக்கத் தேவையான படையில் இது “ஒரு சிறு பகுதி” மட்டுமே என்று அமெரிக்க அதிகாரிகள் முன்பு குறிப்பிட்டிருந்தனர். ஈரான் ஈராக்கை விடப் பெரியது, மலைகளை கொண்டிருக்கிறது மற்றும் அதிக மக்கள் தொகை கொண்டது. மேலும் நீண்டகால எதிர்ப்பைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. தரைப்படை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் எந்தவொரு முயற்சியும், தொடக்கத்திலேயே பல இலட்சம் துருப்புக்கள் தேவைப்படும், மேலும் ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுக் கட்டுப்பாட்டிற்கு இன்னும் பெரிய அளவிலான படைகள் தேவைப்படும்.
அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் பின்பற்றும் தரநிலைகளின்படி, 1,000 குடியிருப்பாளர்களுக்கு சுமார் 20–25 பாதுகாப்புப் பணியாளர்கள் தேவை. இதை ஈரானின் மக்கள் தொகைக்குப் பயன்படுத்தினால், சுமார் 1.9 முதல் 2.3 மில்லியன் துருப்புக்கள் வரை தேவைப்படும்.
இந்த அளவிலான ஒரு போரை, அமெரிக்க சமூகத்தைப் போருக்கு முற்றிலும் அடிபணியச் செய்யாமல் நடத்த முடியாது. இதற்கான பெரும் செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதலின் மூலம் சுமத்தப்படும். அதே நேரத்தில், அரசாங்கம் எதிர்ப்பை வலுக்கட்டாயமாக ஒடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். 93 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு எதிரான நீண்ட காலப் போருக்கு, வெளிநாட்டில் குண்டுகளும் துருப்புக்களும் மட்டும் போதாது, உள்நாட்டில் ஒரு கொடூரமான போலீஸ் அரசும் தேவைப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் முழுமையான குற்றத்தன்மை, அமெரிக்காவிற்குள் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அதன் போரிலிருந்து பிரிக்க முடியாதது. “சட்டவிரோத குடியேறிகள்” பெருமளவில் வாக்களிக்கிறார்கள் என்ற போலிப் புகார்களைக் கூறி, 2026 தேர்தல்களில் முறைகேடு செய்ய அல்லது அவற்றை முற்றிலும் நிறுத்தி வைக்க இந்த ஆட்சி தயாராகி வருகிறது. அதே நேரத்தில், அதன் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் ஒடுக்குமுறை கொள்கைகளை எதிர்ப்பவர்கள் ஒட்டுமொத்தமாகச் சிறைபிடிக்கப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
ட்ரம்ப்பின் ஆட்சி ஒரு போரைத் தொடங்கியுள்ளது, அதன் விளைவுகளை அவர்களால் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. அதன் செயல்களில் ஒரு பைத்தியக்காரத்தனம் உள்ளது, ஆனால் அது வர்க்க நலன்களில் வேரூன்றிய ஒரு பைத்தியக்காரத்தனமாகும். ஈரானுக்கு எதிரான இந்தப் போரானது, பல தசாப்தங்களாக விரிவடைந்து வரும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக ஏற்பட்டதாகும். இது தனது பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வன்முறையின் மூலம் ஈடுகட்ட முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தால் தூண்டப்படுகிறது.
அதே நேரத்தில், ட்ரம்ப் நிர்வாகம் உள்நாட்டில் தீவிரமடைந்து வரும் ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. எப்ஸ்டீன் தொடர்பான வெளிப்பாடுகள் இந்த நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இது ஒரு குற்றவியல் தன்னலக் குழுவின் செயல்பாடுகளின் மீது எஞ்சியிருந்த திரையையும் கிழித்து எறிந்துள்ளது. குற்றங்களில் மூழ்கிப்போன மற்றும் வளர்ந்து வரும் மக்களின் கோபத்தால் அச்சுறுத்தப்படும் அரசாங்கங்கள் எப்போதும் செய்வது போலவே, இந்த அரசாங்கமும் இப்போதும் பதிலளிக்கிறது: அது போரில் தனது இரட்சிப்பைத் (பாதுகாப்பைத்) தேடுகிறது.
பெருநிறுவன ஊடகங்களிலும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்திலும் இந்தப் போரின் தோற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து எந்தவொரு தீவிரமான விளக்கமும் இல்லை, போர்க்குற்றச்சாட்டு என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் ஈரானிய மக்களுக்கோ, போர்த் தீயால் அச்சுறுத்தப்படும் பிராந்தியத்திற்கோ அல்லது ஒட்டுமொத்த உலகத்திற்கோ ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி எவரும் பேசுவதில்லை.
ஜனநாயகக் கட்சியைக் கண்டு ட்ரம்ப் அஞ்சவில்லை. ஜனநாயகக் கட்சியின் தலைமை மண்டியிட்டுக் கிடக்கிறது என்பதையும், அவர்கள் போர்க்கள மேசையில் ஒரு இருக்கைக்காக மட்டுமே கெஞ்சுகிறார்கள் என்பதையும் அவர் நன்றாகவே அறிவார். இந்த வாரம், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் இரண்டு தனித்தனி அரசியல் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போரை எதிர்ப்பது போல் நடிக்கிறார்கள், ஆனால் உண்மையில் எதையும் செய்யவில்லை.
ஈரானில் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் போர் அதிகாரச் சட்டத்தின் (War Powers Act) கீழ் செனட் ஒரு சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும். அது நிறைவேற்றப்பட்டாலும் (அது நடப்பதற்கு வாய்ப்பில்லை), ட்ரம்பின் தவிர்க்க முடியாத வீட்டோ (Veto) அதிகாரத்தை முறியடிக்கத் தேவையான வாக்குகள் அவர்களிடம் இருக்காது. பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினரோ, தங்களின் “போர் எதிர்ப்பு” மசோதாவை வெறும் தீர்மானமாக முன்வைத்ததன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்த்தனர். இதற்குச் சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது, இது ட்ரம்பின் குற்றவியல் போருக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது.
இது போருக்கு எதிரான எதிர்ப்பு அல்ல, மாறாகப் போருக்கு உடந்தையாக இருப்பதாகும். ஜனநாயகக் கட்சி என்பது வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சியாகும். இது குடியரசுக் கட்சியினரைப் போலவே அதே வர்க்க நலன்களைப் பாதுகாக்கிறது மற்றும் அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது. அதன் முதன்மையான பயம் ட்ரம்பின் போர் அல்லது சர்வாதிகாரம் அல்ல, மாறாகக் கீழிருந்து எழும் மக்களின் ஒரு இயக்கத்தின் எழுச்சி பற்றியதாகும்.
தீவிரமடைந்து வரும் போர் நெருக்கடியானது, நேற்றைய தினம் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு வெளியிட்ட “ஈரானுக்கு எதிரான குற்றவியல் அமெரிக்க-இஸ்ரேலிய போரை நிறுத்து!” என்ற அறிக்கையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போருக்கு எதிரான போராட்டம் எந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதை அந்த அறிக்கை பின்வருமாறு கோடிட்டுக் காட்டியுள்ளது:
முதலாவதாக, போருக்கு எதிரான போராட்டமானது சமூகத்தின் மகத்தான புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், மக்கள் தொகையிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் அதற்குப் பின்னால் ஒன்றிணைக்க வேண்டும்.
இரண்டாவதாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தையும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் இந்தப் பொருளாதார முறையையும் முடிவுக்குக் கொண்டு வராமல், போருக்கு எதிராக எத்தகைய தீவிரமான போராட்டத்தையும் நடத்த முடியாது.
மூன்றாவதாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து முற்றிலும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி சுயாதீனமானதாகவும், அவற்றிற்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும்.
நான்காவதாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சக்தியை அணிதிரட்ட வேண்டும்.
இந்தக் குற்றவியல் போருக்கும், மத்திய கிழக்கு மீதான ஒட்டுமொத்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கும் எதிராக அணிதிரளுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். தொழிற்சாலைகள், துறைமுகங்கள், தளவாட மையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என்பன கலந்துரையாடல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் மையங்களாக மாற வேண்டும். இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரி கூட்டங்களை நடத்துங்கள். இந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் பொய்களை அம்பலப்படுத்துங்கள், எதிர்ப்பை மௌனமாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நிராகரியுங்கள், மேலும் போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்.
