ட்ரம்ப் ஆந்த்ரோபிக் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்தார் மற்றும் அனைத்து கூட்டாட்சி முகமைகளுக்கும் அந்த AI நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படி உத்தரவிட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நியூயார்க்கில், 2026 பிப்ரவரி 26 வியாழக்கிழமை அன்று கணினித் திரையில் காட்டப்படும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணையதளப் பக்கங்கள் மற்றும் அதன் சின்னங்கள். [AP Photo/Patrick Sison]

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், பென்டகனுக்கு தனது கிளாட் AI அமைப்பில் கட்டுப்பாடற்ற அணுகலை வழங்க ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் மறுத்ததைத் தொடர்ந்து,  ஒவ்வொரு கூட்டாட்சி முகமையும் “ஆந்த்ரோபிக் தொழில்நுட்பத்தின் அனைத்து பயன்பாட்டையும் உடனடியாக நிறுத்துமாறு” ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும் அந்த நிறுவனத்தைத் “தேசிய பாதுகாப்பிற்கு விநியோகச் சங்கிலி அபாயம்” என்று வகைப்படுத்துமாறு  பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்-க்கு உத்தரவிட்டார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு கட்டுப்பாடற்ற பதிவில், ஆறு மாத கால வெளியேற்றக் கட்டத்தில் [தற்போது ஆந்த்ரோபிக் தயாரிப்புகளை பயன்படுத்தும் அரசுத் துறைகளுக்கு ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது] நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்றால், “பெரிய அளவிலான சிவில் மற்றும் குற்றவியல் விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் மிரட்டினார்.

ஆந்த்ரோபிக் மற்றும் பென்டகனுக்கு இடையிலான மோதல் இந்த வாரம் வேகமாக வெளிப்பட்டதுடன், ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற கொள்கைகள் குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் பிளவுகளை வெளிப்படுத்துகிறது. செவ்வாயன்று (பிப்ரவரி 24) வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடேய் (Dario Amodei) வியாழக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், பெண்டகன் தங்களது AI மாதிரியை முழுமையான தன்னாட்சி ட்ரோன்களுக்கோ (ஆளில்லா விமானங்கள்) அல்லது உள்நாட்டு வெகுஜனக் கண்காணிப்புக்கோ பயன்படுத்தக்கூடாது என்ற நிறுவனத்தின் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மறுத்தார்.

இது பெருநிறுவனப் பத்திரிகைகளில் ட்ரம்ப்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு துணிச்சலான எதிர்ப்புச் செயலாகச் சித்தரிக்கப்பட்டாலும், கடிதத்தை முழுமையாகப் படிக்கும்போது, அது அப்படி எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்கும் ஒரு பிரகடனமாகும். பெண்டகனின் வாதங்களை அப்படியே மீளுரைக்கும் இந்தக் கடிதம், இரண்டு குறுகிய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளைத் தவிர எந்த வேறுபாடும் கொண்டதல்ல.

“அமெரிக்காவையும் பிற ஜனநாயக நாடுகளையும் பாதுகாப்பதற்கும், நமது எதேச்சதிகார எதிரிகளைத் தோற்கடிப்பதற்கும் AI-ஐப் பயன்படுத்துவதன் இருப்பியல்  முக்கியத்துவத்தை நான் ஆழமாக நம்புகிறேன்,” என்று அமோடேய் எழுதினார். இரகசிய அரசாங்க வலையமைப்புகள் மற்றும் தேசிய ஆய்வகங்களில் நிலைநிறுத்தப்பட்ட முதல் முன்னணி AI நிறுவனம் ஆந்த்ரோபிக் என்றும், தேசிய பாதுகாப்பு வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை வழங்கியதாகவும் அவர் பெருமையடித்துக் கொள்கிறார். “இன்று உக்ரேனில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற பகுதியளவு தன்னாட்சி ஆயுதங்கள், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கியமானவை,” என்று அவர் அறிவித்தார். மேலும், “முழுமையான தன்னாட்சி ஆயுதங்கள் [மனிதர்களின் தலையீடு ஏதுமின்றி இலக்குகளைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் தானியங்கி ஆயுதங்கள்] கூட நமது தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதவை,” என்றும் அவர் கூறினார்.

எனவே, தன்னாட்சி ஆயுதங்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பு கொள்கை ரீதியானது அல்ல, மாறாக அது தொழில்நுட்ப அடிப்படையிலானது. தற்போதைய முன்னணி AI அமைப்புகள் “போதுமான அளவு நம்பகமானவை அல்ல” என்பதே அவரது வாதம்.

எல்லாவற்றையும் விட மிகத் தெளிவாக, அமோடேய்  எழுதியதாவது, “நாங்கள் ஒருபோதும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை அல்லது எங்கள் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை  தற்காலிகமான முறையில் கட்டுப்படுத்த முயன்றதில்லை.”  ஜனவரி தொடக்கத்தில் கரகாஸில் பென்டகன் நடத்திய இராணுவத் தாக்குதலுக்கு ஆந்த்ரோபிக் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதை இங்கே அமோடேய் உறுதிப்படுத்தினார். அந்தத் தாக்குதலில் 83 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டார். வெளிப்படையாக இந்த நடவடிக்கைதான் தற்போதைய இந்த நெருக்கடியைத் தூண்டியது.அதுமட்டுமின்றி, வேறு எந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கையையும் அவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை!

நெறிமுறைசார் AI‑க்கான முன்னணி ஆதரவாளராகப் புகழப்படுகிற இந்த நபர், உண்மையில் பெண்டகனிடம் சொன்னது இதுதான்: நீங்கள் செய்த அனைத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம்; இனிவரும் காலங்களில் இரண்டு தொழில்நுட்ப விலக்குகளை மட்டுமே நாங்கள் கோருகிறோம்.

அந்த இரண்டு கோரிக்கைகளைத் தவிர மற்றபடி முற்றிலும் பணிவானதாக இருந்த இந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் ட்ரூத் சோஷியலில் எழுதினார்: “ஆந்த்ரோபிக் நிறுவனத்திலுள்ள இடதுசாரி பைத்தியக்காரர்கள், போர் துறையை மிரட்டி, நமது அரசியலமைப்பிற்குப் பதிலாகத் தங்களின் சேவை விதிமுறைகளுக்கு கீழ்ப்படியுமாறு கட்டாயப்படுத்த முயன்று ஒரு பேரழிவுகரமான தவறைச் செய்துவிட்டனர்.”  அவர் மேலும் கூறுகையில், “நமது நாட்டின் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம்—உண்மையான உலகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாத, தீவிர இடதுசாரி AI நிறுவனத்தால் அல்ல.” 

ஆந்த்ரோபிக் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடேய் ஆகியோருக்கு எதிரான டிரம்பின் பாசிசவாத வெறியாட்டங்கள், தனது கட்டுப்பாடற்ற அதிகாரத்திற்கு மிகச் சிறிய வரம்புகளையும் சகிக்கத் தயங்கும் ஒரு ஆட்சியாளரின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. ஆந்த்ரோபிக் “பாதுகாப்புக்கு முதலிடம்” கொடுக்கும் AI நிறுவனம் என்ற நற்பெயரைக் கொண்டிருந்தாலும், இந்த நற்பெயர் எப்போதும் உள்ளடக்கத்தை விட சந்தைப்படுத்தலை மையமாகக் கொண்டதாகவே இருந்தது, மற்றும் அதை “தீவிர இடதுசாரி” என்று கூறுவது அபத்தமானது.

ஆந்த்ரோபிக் என்பது 380 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு AI நிறுவனமாகும். இதற்கு அமேசானிடமிருந்து 8 பில்லியன் டாலர் (அதன் AWS பிரிவு CIA-வின் முதன்மை கிளவுட் உள்கட்டமைப்பை உருவாக்கி இயக்குகிறது), கூகுளிடமிருந்து 3 பில்லியன் டாலர், மற்றும் மைக்ரோசாப்ட் மற்றும் என்விடியா ஆகியவற்றிடமிருந்து இணைந்து 15 பில்லியன் டாலர் நிதி ஆதரவு கிடைத்துள்ளது. இது ஜூலை 2025 இல் தனது 200 மில்லியன் டாலர் பென்டகன் ஒப்பந்தத்தைக் கொண்டாடியது. மேலும், ட்ரோன் இலக்கு நிர்ணயம் முதல் ICE-க்கான குடியேற்றக் கண்காணிப்பு வரை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்குச் சேவை செய்வதையே தனது வணிக மாதிரியாகக் கொண்ட பாலன்டிர் (Palantir) நிறுவனத்துடன் இணைந்து, ரகசிய வலையமைப்புகளில் கிளாடை நிலைநிறுத்த ஆந்த்ரோபிக் ஒப்பந்தம் செய்தது.

விநியோகச் சங்கிலி ஆபத்து என்ற இந்த அறிவிப்பு பரந்த பொருளாதார விளைவுகளைக் கொண்டுள்ளது. அனைத்து இராணுவ ஒப்பந்ததாரர்களும் இப்போது தங்களது பணி நடைமுறைகளில் ஆந்த்ரோபிக் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில்லை என்று சான்றளிக்க வேண்டும். இதில் போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களும் அடங்கும், அவை கிளாட் உடனான தங்களது தொடர்புகளை மதிப்பிடுமாறு இந்த வார தொடக்கத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 200 மில்லியன் டாலர் பென்டகன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு பகுப்பாய்வு குறிப்பிட்டது போல, கிளாடைப் பயன்படுத்துவது என்பது இனி தற்போதைய அல்லது எதிர்கால அமெரிக்க அரசாங்க வணிகத்தை நேரடியாகக் கைவிடுவதற்கான ஒரு உறுதியான முடிவாக மாறும். இது ஆந்த்ரோபிக் நிறுவனத்தைப் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமல்லாமல், கூட்டாட்சி அரசாங்கத்துடன் வணிகம் செய்யும் அல்லது செய்ய விரும்பும் எந்தவொரு துறையில் உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் நச்சுத்தன்மையுடையதாக ஆக்குகிறது. அமெரிக்காவின்  நட்பு அரசாங்கங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆந்த்ரோபிக்கின் கருவிகளைத் தாங்கள் பயன்படுத்துவதை மறுமதிப்பீடு செய்வதால், இதன்  தொடர் விளைவுகள் உலகளவில் விரிவடையும்.

அமோடேய் வரையும் இரண்டு “சிவப்புக் கோடுகள்”—மொத்த உள்நாட்டுக் கண்காணிப்பு மற்றும் முழுமையான தன்னாட்சிக் கருவிகள் ஆகியவற்றுக்கு எதிராக—அவர் ஆர்வமாகச் சேவை செய்யும் முகமைகளால் ஏற்கெனவே உறுதியாக நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு எதிராகவே அமைந்துள்ளன.

2013 ஆம் ஆண்டின் ஸ்னோவ்டென் வெளிப்பாடுகள் ஒன்பது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து தரவுகளைச் சேகரித்த NSA-வின் PRISM திட்டத்தையும், இணையப் போக்குவரத்தை மொத்தமாக உறிஞ்சுவதற்காக ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் (fiber-optic cables) பயன்படுத்திய திட்டங்களையும் அம்பலப்படுத்தின. வாரண்ட் இல்லாத கண்காணிப்புக்கான சட்டப்பூர்வ அடித்தளமான வெளிநாட்டு உளவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 702, இரு கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸால் மீண்டும் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மிக சமீபத்தில் 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது. உளவுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இயந்திரக் கற்றல் (machine learning) மற்றும் AI உதவியுடன் கூடிய வெகுஜனக் கண்காணிப்புத் தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி வருகின்றன. வெகுஜன உள்நாட்டு கண்காணிப்புக்கு எதிரான அமோடேயின் “சிவப்பு கோடு” என்பது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு எதிராக வரையப்பட்ட கோடாகும். அதுவும் அத்தகைய கண்காணிப்பு செயல்படும் இரகசிய வலையமைப்புகளின் மீது தனது வணிகத்தைக் கட்டியெழுப்பிய ஒருவரால்  இது வரையப்பட்டுள்ளது.

அமோடேயின் வரையறுக்கப்பட்ட எதிர்ப்பிற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பதில் அரசாங்கத்தின் உண்மையான, மறைக்கப்பட்ட தன்மையை வெளிப்படுத்தியது. பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் எமில் மைக்கேல் , எக்ஸ் (X) தளத்தில் அமோடேயை ஒரு “பொய்யர்” என்றும், “கடவுள் மனப்பான்மை” கொண்டவர் என்றும், “அமெரிக்க இராணுவத்தைத் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்த முயல்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் எதுவும்  இல்லை” என்றும் கண்டனம் தெரிவித்தார். இது அடக்குமுறையை திணிப்பதற்காக தனிநபர் அவதூறை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாசிச அரசியல் மிரட்டலின் மொழியாகும். ஒரு உயர் அரசாங்க அதிகாரி, வெகுஜன கண்காணிப்புக்கு AI பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறி ஒரு தலைமைச் செயல் அதிகாரியை மனநலம் குன்றியவர் என்று பகிரங்கமாக முத்திரை குத்துவதே இந்த ஆட்சியின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

அதன் வரையறுக்கப்பட்ட தன்மை இருந்தபோதிலும்,  இந்த இரண்டு கோரிக்கைகளிலும் பணிய மறுத்த ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் நிலைப்பாடு , பிற AI நிறுவனங்களிலும் அதற்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத் துறையிலும் பணிபுரியும் தொழிலாளர்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.

இதை எழுதும் வரை, 558 தற்போதைய கூகுள் ஊழியர்களும் 91 தற்போதைய ஓப்பன் ஏஐ (OpenAI) ஊழியர்களும் ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர்: “ஆந்த்ரோபிக் நிறுவனம் மறுத்துவிட்ட நிபந்தனைகளுக்குக் கூகுள் மற்றும் ஓப்பன்ஏஐ நிறுவனங்களைச் சம்மதிக்க வைப்பதற்காகப் பென்டகன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மற்ற நிறுவனம் பணிந்துவிடும் என்ற அச்சத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நிறுவனத்தையும் பிளவுபடுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். மற்ற நிறுவனங்கள் என்ன நிலைப்பாட்டில்  உள்ளனர் என்பதை நாம் அறியாமல் இருந்தால் மட்டுமே அந்த உத்தி செயல்படும்.”

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஓப்பன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், தங்கள் நிறுவனமும் ஆந்த்ரோபிக்கின் “சிவப்புக் கோடுகளைப்” பகிர்ந்து கொள்வதாகத் தனியாக அறிவித்தார். இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இரவு ஆல்ட்மேன், பென்டகனுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும், “தங்களது AI மாதிரிகளைப் பென்டகனின் இரகசிய வலையமைப்பில் நிலைநிறுத்த” ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ட்வீட் செய்தார். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை; எனினும், ஆந்த்ரோபிக் கடைப்பிடித்த அதே இரண்டு கட்டுப்பாடுகளையே ஓப்பன் ஏஐ-யும் கோருவதாக ஆல்ட்மேன் கூறுகிறார். இதில் சந்தேகத்திற்கு இடமின்றி பல ஓட்டைகள் உள்ளன, அவை விரைவில் வெளிப்படும். ஆல்ட்மேனின் அந்த ட்வீட், “உலகம் ஒரு சிக்கலான, குழப்பமான மற்றும் சில நேரங்களில் ஆபத்தான இடம்” என்று அச்சுறுத்தும் வகையில் முடிவடைகிறது.

காலநிலை நீதிக்கான அமேசான் ஊழியர்கள் (Amazon Employees for Climate Justice), ஆல்ஃபெபெட் தொழிலாளர்கள் சங்கம் (Alphabet Workers Union), நிறவெறிக்கு தொழில்நுட்பம் வேண்டாம் (No Tech for Apartheid), மற்றும் நிறவெறிக்கு அசூர் வேண்டாம் (No Azure for Apartheid) போன்ற சுமார் 700,000 தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் இரண்டாவது மற்றும் மிகவும் பொதுவான கடிதம் இன்னும் ஒரு படி மேலே சென்று இவ்வாறு கூறுகிறது: “எங்கள் நிறுவனங்களோ அல்லது அவை முதலீடு செய்துள்ள அதிநவீன ஆய்வகங்களோ பென்டகனுடன் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டால், எங்கள் நிறுவனங்களும் அத்தகைய ஒப்பந்தங்களுக்கு இணங்க மறுக்குமாறு வலியுறுத்தவே நாங்கள் இதனை எழுதுகிறோம்.” இது, “கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பாளர்கள் பென்டகனின் முன்மொழிவுகளை நிராகரிக்க வேண்டும்; மேலும் DHS (உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை), CBP (சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் ICE (குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) உள்ளிட்ட அடக்குமுறை அரசு முகமைகளுடனான ஒப்பந்தங்கள் குறித்துத் தொழிலாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை வழங்க வேண்டும்” என்று கோருகிறது. முக்கியமாக, இந்தக் கடிதம் அமெரிக்கர்களைக் கண்காணிப்பதற்கு மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கும் அமோடேயின் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று, குடியேறியவர்களைக் கண்காணிப்பதையும் எதிர்க்கிறது.

இருப்பினும், இந்த இரண்டு கடிதங்களுமே பெருநிறுவன நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் முறையிடும் வரம்பிற்குள்ளேயே உள்ளன. AI தொழில்நுட்பத்தைப் பொதுவுடைமையாக்குதல், அதன் மீது தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாடு, அல்லது இராணுவ ஒப்பந்தங்களை முழுமையாக ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளை இவை முன்வைக்கவில்லை. முதலாளித்துவ அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து — இந்தத் தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை வளர்த்துக் கொள்வார்களா, அல்லது மூலதனத்தின் ஒரு பிரிவிற்கு எதிராக மற்றொரு பிரிவிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு குழுவாகவே நீடிப்பார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) என்பது, AI தொழில்நுட்பத்தைப் பொதுவுடைமையாக்குதல், அதன் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடு, அனைத்து இராணுவ AI ஒப்பந்தங்களையும் முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் ஏகாதிபத்தியப் போரை எதிர்த்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், ஒரு சுயாதீனமான வர்க்கத் திட்டத்திற்காக தொழில்நுட்பத் தொழிலாளர்கள் போராடுவதற்கான ஒரு அமைப்பு ரீதியான கட்டமைப்பை வழங்குகிறது.

இராணுவத்தில் AI பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் அதிகரித்து வரும் அபாயங்கள், இந்த வாரம் ஒரு அறிவியல் ஆய்வின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன. அந்த ஆய்வில், கிளாட்,சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை ஆயுத மோதல் உருவகப்படுத்துதல்களில் பயன்படுத்தப்பட்டன. AI மாதிரிகள் 95 சதவீத சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தன; குறிப்பாக, கிளாட் 64 சதவீதப் போர் ஒத்திகைகளில் அணு ஆயுதத் தாக்குதல்களைப் பரிந்துரைத்தது.

ஆந்த்ரோபிக் மற்றும் பென்டகன் இடையேயான தகராறில் அணு ஆயுதக் கேள்வி மையமாக இருந்ததும் தெளிவாகிறது. கடந்த மாதம் நடந்த ஒரு கூட்டத்தில், மைக்கேல் அமோடேயிடம் ஒரு கற்பனையான சூழலை முன்வைத்து வினவியதாக வாஷிங்டன் போஸ்ட் பிப்ரவரி 27 அன்று செய்தி வெளியிட்டது: ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அமெரிக்காவை நோக்கிப் பாய்ந்து வரும்போது, “முடிவெடுப்பதற்கான நேரம் வெறும் நிமிடங்களிலும் வினாடிகளிலும் கணக்கிடப்படும் நிலையில்,” அதைச் சுட்டு வீழ்த்த கிளாட் உதவுமா? அதற்கு அமோடேய், “நீங்கள் எங்களை அழைக்கலாம், நாங்கள் அதைப் பார்த்துக் கொள்வோம்” என்று பதிலளித்ததாகப் பென்டகன் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ஆந்த்ரோபிக் நிறுவனம் இதனை “முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்று மறுக்கிறது. மேலும், 2025 டிசம்பரிலேயே ஏவுகணைத் தற்காப்பு நடவடிக்கைகளுக்குக் கிளாடைப் பயன்படுத்தத் தாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டதை அது சுட்டிக்காட்டுகிறது.

ஆந்த்ரோபிக் மற்றும் பென்டகன் இடையேயான தகராறு என்பது ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்படும் ஒரு மோதலாகும். தொழில்நுட்பத் தொழிலாளர்கள் உட்பட, உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு சுயாதீனமான அரசியல் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். AI தொழில்நுட்பத்தின் இராணுவமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்திற்கு, AI-இன் பொது உடைமை மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாடு, கண்காணிப்பு அரசை அகற்றுதல் மற்றும் ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றுக்காகச் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் இன்றியமையாததாகும்.

Loading