ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் பலவீனமான உலகப் பொருளாதாரத்தையும் நலிவடைந்த நிதி அமைப்பையும் தாக்கும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஈரானின் தெஹ்ரானில் 2026 பிப்ரவரி 28 சனிக்கிழமை அன்று நடந்த ஒரு குண்டுவெடிப்புக்குப் பிறகு வானத்தில் புகை எழுவதைப் மக்கள் பார்க்கிறார்கள். [AP Photo]

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் பின்னணியில் திங்களன்று முக்கிய நிதிச் சந்தைகள் நிலையாக இருந்தபோதிலும், போர் தொடர்வதாலும் ஆழமடைவதாலும் வரும் நாட்களில் பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

இந்தக் கட்டத்தில், உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவது பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் உள்ள குறுகிய கடல்வழியான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதாகும். இதன் வழியாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கும், அதே போல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) ஐந்தில் ஒரு பங்கும் கடந்து செல்கின்றன

சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை, ஆரம்பத்தில் 13 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 82 டாலருக்கும் மேல் சென்றது, பின்னர் சற்று குறைந்தது, ஆனால் மீண்டும் கடுமையாக உயரக்கூடும். இது ஒரு பேரலுக்கு 108 டாலர் வரை உயரக்கூடும் என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எண்ணெயை விட LNG-யின் மீதான தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.

இந்த நீரிணை வழியாக அனுப்பப்படும் கத்தாரில் இருந்தான விநியோகம் துண்டிக்கப்பட்டதால், திங்களன்று ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலைகள் 50 சதவீதம் உயர்ந்தன. தனது இரண்டு உற்பத்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல்கள் காரணமாக LNG மற்றும் பிற பொருட்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரவலான கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கியின் உலகப் பொருளாதாரப் பிரிவின் தலைவர் ஜோசப் கபுர்சன் கூறினார்: “மத்திய கிழக்கில் உருவாகக்கூடிய எல்லா சாத்தியமான நிலைகளிலும், தற்போதைய நிலைமை உலகப் பொருளாதாரத்திற்கு மிக மோசமான ஒன்றாகும். நிலைமை தணிவதற்கு முன்னதாக இன்னும் தீவிரமடையும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள், ஆரம்பகட்டச் சரிவுகளுக்குப் பிறகு, அடிப்படையில் நிலையாக இருந்தன. ஆனால் நிதி ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆசியாவில் டாலருக்கான “அவசர வாங்குதல்” அலை ஏற்பட்டதாகவும், இது ஜப்பானிய யென் உள்ளிட்ட பிராந்திய நாணயங்களைச் சரிவடையச் செய்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம், இருப்பினும், அமெரிக்கப் பத்திர விலைகள் சரிந்தன; இது கொந்தளிப்பான சூழ்நிலைகளில் அமெரிக்க அரசாங்கக் கடன் இனி ஒரு “பாதுகாப்பான புகலிடமாக” கருதப்படவில்லை என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். பைனான்சியல் டைம்ஸ் (FT) குறிப்பிட்டது போல: “நெருக்கடி காலங்களில் உலகின் நம்பகமான சொத்து என்ற அந்தஸ்தை அமெரிக்கத் திறைசேரிப் பத்திரங்கள் இழந்து வருவதைக் காட்டும் மற்றொரு தரவாக இது அமைகிறது — இது ட்ரம்பின் கீழான ஒழுங்கற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிறுவனங்களின் சீரழிவின் விளைவு என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.”

தங்கம் மட்டுமே பாதுகாப்பான சொத்தாகப் பெருகிய முறையில் கருதப்படுகிறது. அதன் விலை திங்களன்று 5,400 டாலராக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்தது. கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை 80 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் 54 சதவீதத்திற்கும் மேலாகவும் உயர்ந்துள்ளது — இது உலகளாவிய அரசாணை நாணயமாக (fiat currency) அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கை குறைந்து வருவதைக் காட்டுகிறது.

FT-ஆல் மேற்கோள் காட்டப்பட்ட பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் ஆய்வாளர்கள்  “சமீபத்திய இந்த மத்திய கிழக்கு மோதலின் தீவிரமடைதலால் ஏற்படக்கூடிய தேக்கவீக்க அபாயங்களைக் கருத்தில் கொண்டால், நீண்டகால அரசாங்கப் பத்திரங்கள் முதலீட்டுத் தொகுப்பைச் சமநிலைப்படுத்தும் நம்பகமான காரணியாக இருக்க முடியாது என்பதையே” சந்தை எதிர்வினை காட்டுகிறது என்று கூறினர்.

எண்ணெய் விலை உயர்வுகள் நீண்ட காலம் நீடித்தால், பணவீக்கம் திடீரென அதிகரிக்கும் அபாயம் உருவாகும். அத்தகைய சூழலில், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்குப் பதிலாக மீண்டும் உயர்த்தத் தொடங்கும் என்ற சாத்தியப்பாட்டிலிருந்து தேக்கவீக்கத்தின் அபாயம் எழுகிறது. இது ஏற்கனவே பலவீனமடைந்து வரும் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

ஏற்கனவே நலிவடைந்துள்ள நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தற்போதைய சூழல் அந்த அமைப்பிற்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) [அல்லது இன்னும் சரியாக மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு] தரவு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாரிய முதலீடுகள் லாபத்தை உருவாக்குமா, மென்பொருள் துறையின் முழுப் பகுதிகளிலும் AI-இல் ஏற்படும் முன்னேற்றங்களின் தாக்கம் என்ன, மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் குவிந்துள்ள தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களை இது எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பவையே இந்தக் கவலைகளின் மையமாக உள்ளன.

அடுத்து, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சில ஆபத்தான செயல்பாடுகள் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. கடந்த அக்டோபரில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் ஆதரவு பெற்ற அமெரிக்க வாகனச் சந்தையின் இரு நிறுவனங்கள் திவாலானபோது, ஜேபி மோர்கன் தலைவர் ஜேமி டைமன் குறிப்பிடுகையில்: நீங்கள் ஒரு “கரப்பான் பூச்சியைக்” காண்கிறீர்கள் என்றால், அங்கே எப்போதும் இன்னும் பல (கரப்பான் பூச்சிகள்) இருக்கும்  என்று குறிப்பிட்டார்.

பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அடமானக் கடன்களை வழங்கும் Market Financial Solutions (MFS) நிறுவனம் திவாலானதை அடுத்து, அதற்கு வழங்கப்பட்ட பில்லியன் கணக்கான பவுண்டுகளில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் கணக்கிடத் தொடங்கின. தனது பிணைச் சொத்துக்களை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அடமானம் வைத்து கடன் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலேயே அந்த நிறுவனம் வீழ்ச்சியடைந்தது.

இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பார்க்லேஸ் (Barclays), ஜெஃப்ரிஸ் (Jeffries) மற்றும் அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் (Apollo Global Management) நிறுவனத்திற்குச் சொந்தமான அட்லாஸ் எஸ்.பி. பார்ட்னர்ஸ் (Atlas SP Partners) ஆகியவை அடங்கும். திவாலான MFS நிறுவனத்தில் அட்லாஸ் எஸ்.பி. பார்ட்னர்ஸின் 400 மில்லியன் பவுண்டுகள் முதலீடு சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பார்க்லேஸின் பாதிப்பு 600 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டைமன் தனது “கரப்பான் பூச்சி” குறிப்புகளைத் தொடர்ந்து நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை குறித்து தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

தற்போதைய நிதிச் சூழலில், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அபாயகரமான கடன்களை வழங்குவது போன்ற “விவேகமற்ற நடவடிக்கைகளில்” ஈடுபடுவது, 2008 நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்ற சூழலை மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று கடந்த மாதம் அவர் எச்சரித்தார்.

“ஒரு நாள் ஒரு பொருளாதாரச் சுழற்சி ஏற்படும்,” என்று அவர் கூறினார். “எந்த நிகழ்வுகளின் சேர்க்கை அந்தச் சுழற்சியை உருவாக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அது குறித்து எனது கவலை அதிகமாக உள்ளது. சொத்துக்களின் விலைகள் உயர்வாக இருப்பது எனக்கு எந்த விதத்திலும் ஆறுதல் அளிக்கவில்லை. உண்மையில், அது அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.”

2008-க்கு முந்தைய ஆண்டுகளில் “கிட்டத்தட்ட இதே நிலைதான் இருந்தது. ஏறும் அலை அனைத்துப் படகுகளையும் உயர்த்திக் கொண்டிருந்தது. அனைவரும் பெருமளவில் லாபம் ஈட்டினர். மக்கள் தங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி முதலீடு செய்தனர். லாபம் ஈட்டுவதற்கு வானமே எல்லை என்பது போன்ற ஒரு மாயை அப்போது நிலவியது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கைகள், FT-க்கு அளித்த பேட்டியில் கோல்ட்மேன் சாக்ஸ் முன்னாள் தலைவர் லோய்ட் பிளாங்க்ஃபைன் தெரிவித்த கருத்துக்களால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டன. 2008 ஆம் ஆண்டு வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஊக வணிகம் மற்றும் வெளிப்படையான குற்றச் செயல்களின் மையத்தில் தனது வங்கி இருந்ததால், அதுகுறித்த நேரடி அறிவைக் கொண்ட பிளாங்க்ஃபைன், கணக்குத் தீர்க்கும் காலங்களுக்கு இடையிலான காலம் எவ்வளவு நீடிக்கிறதோ, அந்தளவுக்கு அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார்.

“இவை நாளை நடக்கும் என்றோ அல்லது எந்தத் திசையிலிருந்து வரும் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், ஏதேனும் ஒன்று தவறாகப் போகும்போது, சந்தையில் சாத்தியமற்ற விலைகளில் மதிப்பிடப்பட்ட அனைத்துச் சொத்துக்களையும் நீங்கள் காண நேரிடும்.”

டைமன் தனது முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, திங்களன்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில்: “அடுத்த பொருளாதாரச் சரிவு ஒரு சாதாரண சரிவை விட மோசமாக இருக்கும். அது புவிசார் அரசியல் மோதல்களாலோ அல்லது பணிநீக்கங்கள் மற்றும் நுகர்வோர் செலவினக் குறைப்பு போன்ற காரணிகளாலோ தூண்டப்படலாம்” என்று எச்சரித்தார்.

அதேபோல், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் வழங்குநர்களிடையே கடன் சார்ந்துள்ள அபாயங்கள் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் முன்னெடுப்புகளால், அந்த அபாயங்கள் பெரும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளன.

Loading