மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலானது, ஒரு முழுமையான அழிப்பு மற்றும் நிர்மூலமாக்கும் போரின் தன்மையை மென்மேலும் பகிரங்கமாக எடுத்துள்ளது.
ஈரானிலிருந்து 3,000ம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் ஓர் ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது —இது புதனன்று சர்வதேசக் கடற்பரப்பில் நடத்தப்பட்டது— என்பது, எந்தவொரு சட்ட அல்லது புவியியல் கட்டுப்பாடுகளையும் மதிக்காத ஓர் எல்லையற்ற அழிவுகரமான தாக்குதலின் சமீபத்திய நடவடிக்கையாகும். 180 பேர்கள் இருந்த இந்தக் கப்பலிலிருந்து இலங்கை கடற்படை 32 பேரை மீட்டுள்ளது. மிகுதிப் பேர்கள் அதாவது 148 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போரின் ஆரம்ப நாட்களில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அயதுல்லா அலி கொமேனி உட்பட ஈரானியத் தலைமையின் பெரும் பகுதியினரைப் படுகொலை செய்தன. தெஹ்ரானும் ஏனைய நகரங்களும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. மினாப்பில் உள்ள ஒரு சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி தாக்கப்பட்டதில் 150-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 1,000-ஐத் தாண்டியுள்ளது.
ட்ரம்ப்பிடம் “ஒரு மூலோபாயம் இல்லை” என்று ஊடகங்களில் ஒரு பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது. இது ஒரு பொய். அங்கு ஒரு மூலோபாயம் உள்ளது: அது ஈரான் அரசை அழிப்பதும் மற்றும் மக்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாத தாக்குதலை முன்னெடுப்பதுமாகும். காஸாவில் அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் முன்னோடியாக செய்த வழிமுறைகள், இப்போது 2 மில்லியன் மக்கள் கொண்ட ஒரு பகுதியிலிருந்து 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஒரு நாட்டிற்கு விரிவுபடுத்தப்படுகின்றன.
வெனிசுவேலா மீதான தாக்குதல், கியூபாவின் கழுத்தை நெரித்தல் ஆகியவற்றோடு, இது உலகளாவிய ரீதியில் விரிவடைந்து வரும் தாக்குதலின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறது. இதில் அமெரிக்கா, தான் விலை கொடுத்து வாங்கிய ஒரு தாக்குதல் நாயான இஸ்ரேலைப் பயன்படுத்தி, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்க்கும் எந்தவொரு சமூகத்தையும் உடைத்து அடிபணிய வைக்க முயல்கிறது.
பொதுமக்கள் உயிரிழப்புகள் என்பது “இராணுவ இலக்குகளின்” ஒரு உப விளைவு அல்ல. பாரிய படுகொலையே தாக்குதலின் முக்கிய நோக்கமாகும். புதன்கிழமையன்று, வெள்ளை மாளிகை ஒரு வீடியோவை வெளியிட்டது. அது Call of Duty என்ற போர் சார்ந்த வீடியோ விளையாட்டுத் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அகச்சிவப்புடன் கூடிய தாக்குதல் காட்சிகளின் தொகுப்பாக —ஈரான் முழுவதும் வெடிக்கும் அமெரிக்க குண்டுகள்— மாறுகிறது. இது ஒரு விளையாட்டுப் போட்டியின் முக்கிய காட்சிகளின் சிறப்பம்சத் தொகுப்பு போலத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் “கொலைகளுக்கு” பிறகு, திரையில் ஒரு மதிப்பெண்’ மின்னுகிறது. அதாவது, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கையின் “வெற்றி” என்பது எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
ட்ரம்ப் மற்றும் அவரது “யுத்த அமைச்சர்” பீட் ஹெக்செத் ஆகியோரால் விடுக்கப்படும் ஒவ்வொரு அறிக்கையும் குற்றத்தன்மையுடனும் பாசிச மொழியுடனும் நிறைந்து போயுள்ளது. புதனன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஹெக்செத் இந்தப் படுகொலைகளை பற்றிப் பெருமை பீற்றிக்கொண்டு பேசினார். “அவர்கள் வீழ்ந்து கிடக்கும்போதே நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம், அதுதான் சரியான முறை,” என்று அவர் கூறினார். “நாள் முழுவதும் வானத்திலிருந்து மரணத்தையும் அழிவையும்” வழங்குவதுக்கு அவர் உறுதியளித்தார். இது “தீர்க்கமாகவும், பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும், இரக்கமின்றியும்” தொடுக்கப்படும் என்றார்.
ஹெக்செத் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வக்கிரமான மகிழ்ச்சியுடன் பட்டியலிட்டார்: “ஈரானின் மூத்த தலைவர்கள் இறந்துவிட்டனர். அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஆளும் குழுவும் இறந்துவிட்டது.” மேலும், இந்தக் கொலைகள் நிறுத்தப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்: “நாங்கள் அவர்களைக் கண்டுபிடிப்போம், அவர்களைக் கொல்வோம்” என்று குறிப்பட்டார்.
ஒட்டுமொத்த ஈரானிய மக்களுக்கு எதிராக, ஒரு செறிவான குண்டுவீச்சுத் தாக்குதலுக்கான திட்டங்களை ஹெக்செத் அறிவித்தார். “வானத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நாம் கொண்டுள்ள நிலையில், 500 இறாத்தல், 1,000ம் இறாத்தல் மற்றும் 2,000ம் இறாத்தல் எடைகொண்ட, GPS மற்றும் லேசர் மூலம் வழிகாட்டப்படும் துல்லியமான ஈர்ப்பு விசைக் குண்டுகளை நாங்கள் பயன்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.
சர்வதேச சட்டத்தை மீறி, இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பலை மூழ்கடித்தது குறித்தும் அவர் பெருமிதம் கொண்டார். அதற்கு முந்தைய நாள் பென்டகன் சந்திப்பில், “முட்டாள்தனமான போர் விதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது” என்று ஹெக்செத் தம்பட்டம் அடித்தார். இது சர்வதேச சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்பதற்கான வாக்குமூலம் ஆகும். இது நாஜிக்கள் செய்ததைப் போல ஒரு போரை நடத்துவதற்கான நோக்கத்தின் பிரகடனமாகும்.
இந்தக் குறிப்பிட்ட போரின் பாசிசத் தன்மையானது, முறையான கிறிஸ்தவ-தேசியவாதப் பிரச்சாரத்தின் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. ஈரான் மீதான இந்தப் போர் “கடவுளின் தெய்வீகத் திட்டத்தின் ஒரு பகுதி” என்று படையினர்களிடம் கூறும்படி தளபதிகள் வலியுறுத்துவதாக தி கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக விவிலியத்தின் வெளிப்படுத்துதல் மற்றும் பிரளயம் (Armageddon - உலக முடிவுக்காலப் போர்) போன்றவற்றை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். ஒரு சிப்பாய் அளித்த புகாரின்படி, “இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பதற்கும், பிரளயம் எனும் அழிவைத் தூண்டுவதற்கும், ஈரானில் சமிக்ஞை நெருப்பைப் பற்றவைக்க இயேசுவினால் இரட்சிக்கப்பட்டவர் ட்ரம்ப்” என்று படையினர்களிடம் கூறப்பட்டுள்ளது. அதாவது, முறையான அழித்தொழிப்பு போர் மூலம் உலக அழிவு நிகழ்வுகளைத் தூண்டுவதே இதன் நோக்கமாகும்.
ஐரோப்பிய வல்லரசுகளும் இந்த விரிவடையும் அழித்தொழிப்புப் போரில் ஆர்வமுள்ள கூட்டாளிகளாக உள்ளன. செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் ட்ரம்பிற்கு அருகில் நின்றிருந்த ஜேர்மன் சான்சிலர் மெர்ஸ், “தெஹ்ரானில் உள்ள இந்த மோசமான ஆட்சியை அகற்றுவதில் நாங்கள் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம்” என்று அறிவித்தார். பிரிட்டன் தனது எஃப்-35 ரக போர் விமானங்களை போரில் நிலைநிறுத்தியுள்ளது. நேட்டோவின் பொதுச்செயலாளர் ரூட்டே, ஈரான் மீதான குண்டுவீச்சு சர்வதேசச் சட்டத்தை மீறவில்லை என்று அறிவித்தார்.
ஜனநாயகக் கட்சியினர், சில நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு, ட்ரம்ப் நிர்வாகத்தின் கருத்துக்களையே கிளிப்பிள்ளை போன்று திரும்பக் கூறுகிறார்கள் மற்றும் இந்த இனப்படுகொலை போரை எளிதாக்குகிறார்கள். புதனன்று செனட் சபையில் கொண்டுவரப்பட்ட போர் அதிகாரத் தீர்மானம் என்பது ஒரு அரசியல் நாடகமே ஆகும் — இது போரை நிறுத்துவதற்காக அல்ல, மாறாகப் போருக்கான தங்களின் ஆதரவை மறைப்பதற்கான ஒரு போர்வையாகவே வடிவமைக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமையன்று நடந்த பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் செய்தியாளர் கூட்டத்தில், ஒவ்வொரு பேச்சாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கருத்துக்களையே எதிரொலித்தனர். பிரதிநிதி டெட் லியூ “ஒரு கொலைகார, மதவாத ஆட்சியை” கண்டித்தார். பிரதிநிதி ஹூலஹான்: “அந்தத் தலைவர்களுக்காக நான் துக்கப்பட மாட்டேன்” என்று அறிவித்தார். பிரதிநிதி குட்லேண்டர் ஈரானை “ஒரு கொடூரமான மற்றும் உறுதியான எதிரி... எமது சக அமெரிக்கர்களின் இரத்தத்தை தன் கைகளில் கொண்டுள்ள ஒரு ஆட்சி” என்று அழைத்தார்.
இவை அனைத்தும், ஈரான் மீதான போர் என்பது ட்ரம்பின் கற்பனையில் உதித்த ஒரு திடீர் நடவடிக்கை அல்ல என்பதைக் காட்டுகின்றன. இது கடந்த 35 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட ஏகாதிபத்தியப் போர்களின் சங்கிலித் தொடரின் இறுதி வடிவமாகும்: குறிப்பாக, வளைகுடாப் போர்; ஈராக் மீதான ஒரு தசாப்த காலத் தடைகள் மற்றும் முற்றுகை; 2003-ல் நடந்த படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு; ஆப்கானிஸ்தான் போர்; லிபியாவை அழித்தது; சிரியாவில் சி.ஐ.ஏ ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கை; மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க நடவடிக்கைகளின் விரிவாக்கம்; மற்றும் காஸாவில் தற்போது நடந்து வரும் இனப்படுகொலை ஆகியவைகளாகும்.
இந்தக் குற்றங்கள் அனைத்தையும் இணைப்பது ஒரு ஒற்றைப் புரட்சி-எதிர்ப்பு நோக்கம்தான்: 20-ஆம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர மற்றும் காலனித்துவ-எதிர்ப்புப் போராட்டங்களால் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளைச் சரிசெய்து, நிலைமையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதுதான் அது.
வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடந்த வாரம் இந்த பிற்போக்குத்தனமான திட்டத்தை தெளிவாக விளக்கினார். மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து —அதாவது நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு— “பெரிய மேற்கத்திய சாம்ராஜ்யங்கள்” கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசப் புரட்சிகளாலும், காலனித்துவ-எதிர்ப்பு எழுச்சிகளாலும் முடுக்கிவிடப்பட்ட ஒரு “இறுதி வீழ்ச்சியை” சந்தித்து வருவதாக அறிவித்தார். ஏகாதிபத்திய சக்திகள் “குற்ற உணர்வு மற்றும் அவமானத்தால் பிணைக்கப்பட்டுள்ளன” என்று புலம்பிய அவர், இந்தத் தடைகளைத் தகர்ப்பதன் மூலம், “மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கக் காலத்தை” மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
புதன்கிழமை தனது செய்தியாளர் கூட்டத்தில் ஹெக்செத் கடந்த “47 ஆண்டுகள்” பற்றி ஆவேசமாகப் பேசினார் —இது 1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியைக் குறிக்கிறது. இந்தப் புரட்சிதான் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்து, பாரசீக வளைகுடா மீதான வாஷிங்டனின் நேரடிக் கட்டுப்பாட்டைச் சிதறடித்தது. உலகின் மிக முக்கியமான மூலோபாயப் பகுதிகளில் ஒன்றான இந்தப் பிராந்தியத்தின் மீது மீண்டும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதன் மூலம், ஈரானுக்கு எதிராக “பழிவாங்க” அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது உறுதியாக உள்ளது.
இந்த தாக்குதல் வழிமுறைகளை, ஒரு போர்க் களத்தோடு அல்லது ஒரு ஒரு நாட்டு மக்களோடு மட்டும் மட்டுப்படுத்தும் “பிரிப்புக் கோடு” எதுவும் இல்லை. ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் எதிர்ப்பைச் சந்திக்கிறதோ அங்கெல்லாம், இதே முறைகள் பயன்படுத்தப்படும்: கெய்ரோ மற்றும் கராச்சி, நைரோபி மற்றும் லாகோஸ், இஸ்தான்புல் மற்றும் ஜகார்த்தா, மாஸ்கோ மற்றும் பெய்ஜிங், சியோல் மற்றும் மணிலா, மெக்சிகோ சிட்டி மற்றும் ஜோகன்னஸ்பர்க்.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தெஹ்ரானின் தெருக்களில் தங்கள் சொந்த எதிர்காலத்தையே காண்கிறார்கள். அமெரிக்காவிற்குள், இந்த வெளியுறவுக் கொள்கை குண்டர்வாதம் என்பது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலில் இருந்தும் மற்றும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதில் இருந்தும் பிரிக்க முடியாததாகும். வெளிநாட்டுத் தலைவர்களைக் கொலை செய்யவும், சட்டத்திற்குப் புறம்பாகப் போர் தொடுக்கவும் தனக்கு உரிமை உண்டு என்று கூறும் ஒரு அரசாங்கம், உள்நாட்டில் எழும் எதிர்ப்புக்களை பொறுத்துக் கொள்ள மாட்டாது. மினியாபோலிஸில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் கொலைகார வழி முறைகள் —பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கட்டளைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக பரந்த அளவில் பயன்படுத்தத் தயாராகி வருகின்றன.
இந்தத் தாக்குதலின் மிகக் கொடூரமான தன்மையே ஒருவிதமான விரக்தியின் வெளிப்பாடுதான்: அரசியல் ரீதியாகத் தன் இலக்குகளை அடைய முடியாத ஒரு ஆளும் வர்க்கம், எதிர்ப்புக்களை மிரட்டவும் உடைக்கவும் பாரிய படுகொலைகளை நாடுகின்றது. ஆனால் இந்தப் போர் ஈரானிய மக்களை நசுக்கிவிடாது. இந்தப் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதிலும் உள்ள —மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே— தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கோபத்தையும் ஆத்திரத்தையும் ஆழப்பபடுத்தும்.
ஆயினும், பரவலான ஆத்திரம் மட்டுமே போதுமானதல்ல. ஒரு அரசியல் முன்னோக்கு, ஒரு நனவான வேலைத் திட்டம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் ஆகியவற்றின் வளர்ச்சியே தீர்மானகரமான கேள்வியாகும் —ஏனெனில், காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய வீழ்ச்சியை நிறுத்தக்கூடிய ஒரேயொரு சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 8 அன்று மதியம் 3:00 மணிக்கு (EST), இந்தப் போரின் தோற்றம், அதைத் தூண்டும் சமூக சக்திகள் மற்றும் அதை நிறுத்துவதற்குத் தேவையான மூலோபாயம் ஆகியவற்றை விளக்குவதற்காக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஒரு அவசர உலகளாவிய இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. இந்த அறிக்கையை முடிந்தவரை பரவலாக விநியோகிக்கவும், கூட்டத்தில் கலந்து கொள்ளவும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு நனவான, ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தை உருவாக்க உதவவும் அனைத்து வாசகர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
