பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் அணு ஆயுத இருப்பை விரிவுபடுத்துவதாக அறிவிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரான்சின் அணு ஆயுத இருப்பை ஒரு மாபெரும் அளவில் விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நடக்கும் போர், பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதோ அல்லது அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கானது என்பதோ அல்ல, மாறாக இது மூன்றாம் உலகப் போரை நோக்கிய ஒரு படிதான் என்பதற்கு இன்னும் மேலதிக ஆதாரங்கள் தேவைப்பட்டால், அதை மக்ரோன் இப்போது வழங்கியுள்ளார்.

பாரிஸில் உள்ள எலிசே மாளிகையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (இடதுபுறம்), பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் [AP Photo/Ludovic Marin]

ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்கள், சர்வதேசச் சட்டம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்குள்ளான அணு ஆயுத அழிவைத் தடுக்கப் பயன்படுத்திய பிற வழிமுறைகள் அனைத்தும் இப்போது கடந்த காலத்தின் கதைகளாகிவிட்டன. மூலப்பொருட்கள், இலாபங்கள் மற்றும் உலக அதிகாரத்திற்கான போராட்டத்தில், அவை தங்கள் ஆயுதக் கிடங்குகளை நிரப்பிக்கொண்டும், அணு ஆயுதங்களை மேம்படுத்திக்கொண்டும் இருக்கின்றன. மத்திய கிழக்கில் நடக்கும் போர் இதற்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது.

ஈரானை அழிப்பதற்காக அமெரிக்காவின் யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத் திங்களன்று வெளியிட்ட தாரக மந்திரங்கள் —அனைத்தும் எங்களது நிபந்தனைகளின்படி, போர் விதிகள் கிடையாது, ஜனநாயகத்தை வளர்த்தல் கிடையாது, அரசியல் ரீதியாகச் சரியான போர்கள் கிடையாது, நாங்கள் வெல்வதற்காகப் போராடுகிறோம்— இப்போது ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முழக்கங்களாகவும் உள்ளன.

சுதந்திரத்தைப் பாதுகாக்க விரும்பும் எவரும் அஞ்சி இருக்க வேண்டும் என்று மக்ரோன் அறிவித்தார். அதனால்தான் பிரான்சின் அணு ஆயுத இருப்பை விரிவாக்க வேண்டும் மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்குள் இவை ஆழமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஒரு பிரெஞ்சு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலின் வெடிப்பு சக்தி ஏற்கனவே இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா மீது வீசப்பட்ட அனைத்துக் குண்டுகளின் மொத்த எண்ணிக்கைக்கு சமம் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ஒரு முட்டாள் மட்டுமே பிரான்சும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் இந்தப் பிரமாண்டமான அழிவு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்ப முடியும்.

மக்ரோன் தனது திட்டங்களை பிரெஞ்சு கடற்படைத் தளமான லோங் தீவில் ஒரு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை பின்னணியாகக் கொண்டு ஆற்றிய முக்கிய உரையில் அறிவித்தார். ஐரோப்பிய கண்டத்திற்காக பிரான்ஸ் ஒரு “மேம்பட்ட அணு ஆயுதத்தை கொண்டு தடுப்பை” உருவாக்கும் என்று அவர் கூறினார். எதிர்காலத்தில், இது குறிப்பாக ஜேர்மனி போன்ற ஆர்வமுள்ள அண்டை நாடுகளில் வான்வழி அணு ஆயுதப் படைகளையும் நிலைநிறுத்தும். பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்வீடன், போலந்து, டென்மார்க் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளும் இதில் ஆர்வம் காட்டியுள்ளன.

ஜேர்மனியுடன் கூட்டு அணு ஆயுத இராணுவப் பயிற்சிகள் உட்பட முதல் உறுதியான நடவடிக்கைகள் இந்த ஆண்டு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதில் “ஜேர்மனி ஒரு முக்கிய பங்காளியாகும்,” என்று மக்ரோன் கூறினார். இரு நாடுகளும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல், வான் பாதுகாப்பு மற்றும் “ஆழமான துல்லியத் தாக்குதல்” ஆகிய துறைகளில் நெருக்கமாக இணைந்து செயல்பட உத்தேசித்துள்ளன. ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்துடன் செய்ததைப் போலவே, பிரான்ஸ் இப்போது ஜேர்மனியுடன் “ஐரோப்பிய பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தும்” நோக்கத்துடன் ஓர் அணு ஆயுத வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளது.

300 அணு ஆயுதங்களின் எண்ணிக்கை என மதிப்பிடப்பட்டுள்ள பிரான்சின் அணு ஆயுதங்களின் இருப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த விரிவாக்கத்தின் துல்லியமான அளவு இரகசியமாக வைக்கப்படும். எதிர்காலத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை இனி வெளிப்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை புண்படுத்தாமல் இருக்க மக்ரோன் பெரும் சிரமங்களை மேற்கொண்டார். பிரான்சின் அணு ஆயுத இருப்பு நேட்டோவின் அமெரிக்கப் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு துணையாக இருக்கிறதே தவிர, அவற்றிற்கு மாற்றாக இல்லை என்று அவர் வலியுறுத்தினார். ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான இந்த முன்மொழிவு வாஷிங்டனுடன் “முழு வெளிப்படைத் தன்மையுடன்” வழங்கப்பட்டது. ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அமெரிக்காவின் பங்கை அவர் பாராட்டியதோடு அதற்காக அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இருப்பினும், இராணுவம் மற்றும் அணு ஆயுத விஷயங்களில் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதில் இருந்து பிரான்ஸ் தன்னை விடுவித்துக்கொள்ள விரும்புவதையும் மக்ரோன் தெளிவுபடுத்தினார். அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு மூலோபாயமானது, ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பிற்கு அதிகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக மக்ரோன் கூறினார்.

ஒரு சுயாதீன இராணுவம் மற்றும் அணு ஆயுதங்களுக்கான ஐரோப்பியத் திட்டங்கள் 1950-களிலேயே தொடங்கப்பட்டவை. ஆனால், ஐரோப்பாவிற்குள்ளேயே நிலவிய கருத்து வேறுபாடுகளால் அவை மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன. ட்ரம்பின் முதல் ஜனாதிபதி காலத்தின் போது மக்ரோன் இந்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். 2020-ஆம் ஆண்டில், ஐரோப்பாவின் ‘”முக்கிய நலன்களை” வரையறுப்பதற்காக, பிரான்சின் அணு ஆயுத இருப்புக் குறித்த ஒரு “மூலோபாய உரையாடலில்” ஆர்வம் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் முன்மொழிந்தார். ஆனால், அப்போதைய சான்சிலர் ஏஞ்சலா மேர்க்கல் மற்றும் அவருக்குப் பின் வந்த ஓலாப் ஷோல்ஸ் ஆகியோரிடமிருந்து இதற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

கிறித்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையின் கீழ், ஜேர்மனியின் நிலைப்பாடு மாறியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ட்ரம்பின் தண்டனை சுங்கவரி விதிப்புகள், கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதாக அவர் விடுத்த அச்சுறுத்தல் மற்றும் ஐரோப்பியர்களைத் தவிர்த்துவிட்டு ரஷ்யாவுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி ஆகியவை பாரிஸையும் பேர்லினையும் நெருக்கமாக்கின.

ஈரானுக்கு எதிரான போர் இந்த வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போர்களைப் போலல்லாமல், இம்முறை அமெரிக்கா நேட்டோவையோ அல்லது “விருப்பமுள்ளவர்களின் கூட்டணியையோ” நம்பாமல், இஸ்ரேலுடன் இணைந்து தனித்துப் போரை நடத்தி வருகிறது.

வளங்கள் நிறைந்த மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான அந்தப் பிராந்தியத்திலிருந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவதை ஐரோப்பிய சக்திகள் அஞ்சுகின்றன. அதனால்தான், இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போருக்கும் அதன் ஏகாதிபத்திய இலக்குகளுக்கும் அவை தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளன. பல ஆண்டுகளாக, உக்ரேன் போருக்கான தங்கள் ஆதரவை நியாயப்படுத்த சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறியது மற்றும் “விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறை” ஆகியவற்றையே அவை காரணங்களாகக் கூறி வந்தன. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு முன்னால் இந்த அக்கறைகள் அனைத்தும் இப்போது காற்றில் பறந்துவிட்டன.

அமெரிக்கா ஜேர்மனியில் உள்ள தனது தளங்களிலிருந்து தடையின்றி செயல்பட முடியும். மேலும் ஐக்கிய இராச்சியமும் இப்போது அமெரிக்காவிற்கு இராணுவத் தளங்களை வழங்கியுள்ளதுடன் தனது சொந்தப் படைகளையும் இப்பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. சான்சிலர் மெர்ஸ் போர் தொடங்கிய பிறகு முதல் ஐரோப்பிய அரசாங்கத் தலைவராக செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் ட்ரம்பைச் சந்தித்து தனது நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படையாகக் காட்டினார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேயும் போருக்குத் தனது முழு ஆதரவையும் அளித்துள்ளார்.

ஆயினும்கூட, ஐரோப்பிய சக்திகள் மத்திய கிழக்கின் முன்னேற்றங்களை அச்சத்தோடும் பதற்றத்தோடும் கவனித்து வருகின்றன. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படும் நீண்டகால சீர்குலைவு, எரிசக்தி விலை உயர்வு, பொருளாதாரக் கொந்தளிப்பு மற்றும் புதிய அகதிகள் அலைகள் போன்ற வடிவங்களில் ஐரோப்பாவைத் தாக்கும் என்றும், இது ஏற்கனவே இருக்கும் சமூக பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் என்றும் அவை அஞ்சுகின்றன.

மேலும், உக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு முற்றிலும் நின்றுவிடும் என்றும், அது ரஷ்யாவை பலப்படுத்தும் என்றும் அவை பயப்படுகின்றன. ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்ததிலிருந்து உக்ரேன் போருக்கான நிதியுதவியை அமெரிக்கா பெருமளவில் நிறுத்திவிட்டது; ஐரோப்பா பணம் செலுத்தினால் மட்டுமே இப்போது ஆயுதங்களை வழங்குகிறது. ஆனால் ஈரான் போரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் அதிகப்படியான தேவையைக் கருத்தில் கொண்டால், விரைவில் அதுவும் கிடைக்காமல் போகலாம்.

அமெரிக்கா தனது பொருளாதார எதிரியான சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராகி வருவதுடன், சீனாவின் மிக முக்கியமான எண்ணெய் விநியோக நாடுகளான வெனிசுவேலா மற்றும் ஈரான் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளது. ஆனால், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு ஐரோப்பாவை குறிப்பாக ரஷ்யாவை அடிபணிய வைப்பதே முன்னுரிமையாகும். நேட்டோ உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டபடி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிடுவது மற்றும் ஐரோப்பிய அணு ஆயுதங்களை நிறுவுவது ஆகிய அனைத்தும் இந்த இலக்கையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், மீண்டும் “அதிகார அரசியலின் மொழியைப் பேசக் கற்றுக் கொள்வதற்கான” (Merz) ஐரோப்பிய முயற்சிகள், ஐரோப்பாவிற்குள் தேசிய மற்றும் சமூகப் பதட்டங்களையும் தீவிரப்படுத்துகின்றன. பாரிஸ், பேர்லின், ரோம் மற்றும் வார்சா ஆகியவை இலக்கில் உடன்பட்டாலும், தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் எவரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

பிரெஞ்சு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான முடிவு பிரெஞ்சு ஜனாதிபதியின் தனிப்பட்ட அதிகாரமாகவே இருக்கும் என்பதில் பாரிஸ் பிடிவாதமாக உள்ளது. மறுபுறம், பாரிஸ் மட்டும் அணு ஆயுத விசையை வைத்திருக்கும் “அணுசக்திப் பகிர்வை” ஏற்க பேர்லின் தயாராக இல்லை. கூட்டு அணு ஆயுத கிடங்கிற்கு அடிப்படையாகக் கருதப்படும் 2017-ஆம் ஆண்டின் எதிர்கால போர் வான்வழி அமைப்பு (FCAS) ஒப்பந்தம், பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகளால் முறியும் தருவாயில் உள்ளது.

போர் மற்றும் மீள் ஆயுதமயமாக்கலின் செலவுகள் ஏற்கனவே சமூகச் செலவினக் குறைப்புகள் மற்றும் பாரிய பணிநீக்கங்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. ஈரான் மீதான போரினால் இது மேலும் தீவிரமடையும். மூன்றாவது உலகப் போர் மற்றும் அணு ஆயுத அழிவின் ஆபத்துக்கான விடை இங்கேயே உள்ளது. சமூகச் செலவினக் குறைப்புகள், பணிநீக்கங்கள் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பை, இவற்றுக்கு காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடனும், ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதோடும் இணைக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே இதை நிறுத்த முடியும்.

Loading