முன்னோக்கு

இந்தியப் பெருங்கடலில் ஒரு பெரும் படுகொலை: ஐரிஸ் டெனா கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கிக் குண்டுத் தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரின் தோற்றம், அதைத் தூண்டும் சமூக சக்திகள் மற்றும் அதை நிறுத்துவதற்குத் தேவையான மூலோபாயம் ஆகியவற்றை விளக்குவதற்காக இந்த ஞாயிறு, மார்ச் 8 அன்று மதியம் 3:00 மணிக்கு (EDT) அவசர உலகளாவிய இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. எமது வாசகர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஐரிஸ் டெனா கப்பல் மூழ்கடிக்கப்படுகிறது.

மார்ச் 4, 2026 அன்று, இந்தியப் பெருங்கடலில் ஆயுதங்களற்ற ஈரானியப் போர்க் கப்பலான ஐரிஸ் டெனாவை, அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் குண்டு வீசித் தகர்த்தது ஒரு போர்க்குற்றமாகும். மனநிலை தவறியவராகக் கருதப்படக்கூடிய அமெரிக்க “யுத்த அமைச்சரின்” அனைத்து “வீராவேசப்” பெருமைப் பேச்சுகள் ஒருபுறமிருக்க, கடற்படை வரலாற்றில் இது ஒரு கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலாகவே நினைவு கூரப்படும். இந்தக் குற்றமானது, 1988-ஆம் ஆண்டில் யு.எஸ்.எஸ் வின்சென்னஸ் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல், ஈரானியப் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி 290 அப்பாவி மக்களைக் கொன்ற சம்பவத்திற்கு நிகரான ஒன்றாக வரலாற்றில் இடம்பிடிக்கும். உண்மையில், ஈரானியக் கப்பல் அழிக்கப்பட்ட விதம் மற்றும் செயல்படுத்தப்பட்ட முறை ஆகிய இரண்டும், சமீபத்தில் இலத்தீன் அமெரிக்கக் கடற்பகுதிகளில் பாதுகாப்பற்ற மீனவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவங்களின் ஒரு பெரிய அளவிலான தொடர்ச்சியாகவே உள்ளது.

இந்தச் சம்பவத்தில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையைச் சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல், யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் தராத வகையில் தனித்துச் சென்ற ஒரு கப்பலை இரகசியமாக நெருங்கி, எந்த எச்சரிக்கையும் விடுக்காமல், சரணடைவதற்கான வாய்ப்பையும் அளிக்காமல் தாக்கி, 140-க்கும் மேற்பட்ட மாலுமிகளை இந்தியப் பெருங்கடலின் ஆழத்திற்கு அனுப்பியுள்ளது. தன்னை ஒரு பிரளயத்தை (Armageddon—உலக அழிவுக்கான இறுதிப் போர்) ஏற்படுத்தும் கருவியாகக் கருதிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ பாசிசவாதியான பீட் ஹெக்செத், பின்னர் பென்டகனின் மேடையில் ஏறி இதைப் பற்றிப் பெருமை பீற்றிக் கொண்டார்.

ட்ரம்ப் நிர்வாகம் இதற்கான ஒரு சிறு நியாயத்தைக் கூட அளிக்கவில்லை. இந்தக் கொலையின் சட்டபூர்வ அடிப்படையை அடையாளம் காண அது முயற்சிக்கவில்லை; தற்காப்புக்காகச் செய்ததாக உரிமை கோரவில்லை; ஐரிஸ் டெனா கப்பல் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டவில்லை. இது ஒரு சமமான போர் நடவடிக்கை என்றோ, இராணுவத் தேவை என்றோ அல்லது உடனடி அச்சுறுத்தல் என்றோ அது வாதிடவில்லை. அது எதையும் வழங்கவில்லை —ஏனெனில் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை என்று அது நம்புகிறது. கடந்த முப்பதாண்டுகளாக அமெரிக்கா அனைவருக்கும் போதித்து வந்த “விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கு” என்பது இவ்வளவுதான். அதற்குப் பதிலாக இப்போது வந்துள்ளது என்னவென்றால், அமெரிக்கா யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம் என்பதும், அந்தக் கொலைச் செயலே அதற்கான போதுமான நியாயம் என்பதுமான அப்பட்டமான அதிகாரத் திமிராகும். இதை ஹெக்செத் “அமைதியான மரணம்” என்று அழைத்தார்.

இங்கே ஒரு கசப்பான வரலாற்று முரண் உள்ளது. 1915-ஆம் ஆண்டில், அயர்லாந்து கடற்கரைக்கு அப்பால் செயல்பட்ட ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல் (U-boat), லூசிதானியா என்ற பிரிட்டிஷ் பயணிகள் கப்பலை மூழ்கடித்தது. இது ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கப் பொதுமக்களின் கருத்தைத் திருப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 1917 இல், ஜனாதிபதி வூட்ரோ வில்சன், ஜேர்மனியின் தடையற்ற நீர்மூழ்கிக் கப்பல் போர்ப் பிரகடனத்தை முதலாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைவதற்கான ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கழித்து, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானியக் கப்பலைத் திருட்டுத்தனமாக நெருங்கி நீர்மூழ்கிக் குண்டு மூலம் அதை அழிக்கிறது, மேலும் பீட் ஹெக்செத் அதைப் பார்த்து எக்காளமிடுகிறார்.

இந்தத் தாக்குதல் செயலின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இதில் சம்பந்தப்பட்ட படைகளுக்கு இடையிலான மிகக் கொடூரமான விகிதாச்சாரமின்மையை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்கக் கடற்படையின் ஆர்லே பர்க்-வகுப்பு நாசகாரிக் கப்பல் சுமார் 9,000 டன் எடையைக் கொண்டது. இது கிட்டத்தட்ட 155 மீட்டர் நீளம் கொண்டது. இது டொமாஹாக் குரூஸ் ஏவுகணைகள், மேம்பட்ட தரை-விண் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்களைச் சுடும் திறன் கொண்ட 90 முதல் 96 செங்குத்து ஏவுதளங்களைக் கொண்டுள்ளது. இது ஏஜிஸ் போர் அமைப்புடன் (Aegis Combat System) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் நுணுக்கமான போர்-மேலாண்மை வலையமைப்புகளில் ஒன்றாகும். இது செயற்கைக்கோள்கள், விமானங்கள் மற்றும் பிற போர்க் கப்பல்களுடன் நிகழ்நேரத்தில் தொடர்புகொண்டு முழுமையான போர்ச் சூழலையும் கையாளும் திறன் கொண்டது. அமெரிக்கக் கடற்படை இத்தகைய டசின் கணக்கான கப்பல்களை இயக்கி வருகிறது. அத்துடன், இது 11 அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல் அணிகளை வைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு பெருங்கடல் முழுவதிலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நகரும் வான்படை நகரங்களாகும்.

ஐரிஸ் டெனா கப்பல் 1,500 டன் எடையைக் கொண்டிருந்தது—இது ஒரு அமெரிக்க நாசகாரிக் கப்பலின் எடையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. இது 94 மீட்டர் நீளம் கொண்டது, ஈரானிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு டீசல் என்ஜின்களால் இயக்கப்பட்டது. இதில் ஈரானிய தயாரிப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், ஒரு 76-மில்லிமீட்டர் பீரங்கி மற்றும் குறைந்த எடை கொண்ட நீர்மூழ்கிக் குண்டுகள் இருந்தன. இதன் ஊழியர் குழுவில் 180 படையினர்கள் இருந்தனர். இது அமெரிக்கக் கடற்படை வலிமைக்கு நிகரான ஒன்றல்ல. ஐரிஸ் டெனா என்பது தடைகளுக்கு மத்தியில் கட்டப்பட்ட ஒரு கடலோரப் போர்க் கப்பல் ஆகும். மேற்கத்திய நாடுகள் ஈரானுக்கான உலகளாவிய ஆயுதச் சந்தையைத் துண்டித்ததால், ஈரானியப் பொறியாளர்கள் பல ஆண்டுகளாக உழைத்து உள்நாட்டிலேயே உருவாக்கிய அமைப்புகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. இந்தக் கப்பல் கடலில் பயணம் செய்ய முடிந்தது என்பதும், 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் அது உலகையே சுற்றி வந்தது என்பதும், அதை உருவாக்கியவர்களின் மற்றும் அதன் மாலுமிகளின் திறமைக்கு ஒரு சான்றாகும்.

கொல்லப்பட்ட அந்த ஈரானிய மாலுமிகளின் பெயர்கள் அமெரிக்க ஊடகங்களில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு முகங்கள் இல்லை; அவர்களைப் பேட்டி காண்பதற்காக மேற்கத்திய பத்திரிகையாளர்கள் யாரும் அனுப்பப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்; ஒரு தொழில்முறை கடற்படைப் பணியின் காரணமாகத் தங்கள் குடும்பங்களை விட்டுப் பல மாதங்கள் விலகி இருந்தவர்கள்.

கப்பலில் இருந்த ஈரானிய மாலுமிகளுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. சண்டையிடவோ, தப்பிக்கவோ, அல்லது தங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவோ கூட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அந்தக் கப்பல் மிக வேகமாக மூழ்கியதால், இலங்கை கடற்படை —அமெரிக்க கடற்படை அல்ல, எந்த அமெரிக்க கப்பலும் அல்ல, ஆனால் அதன் சர்வதேச கடல்சார் கடமைகளின் கீழ் செயல்படும் ஒரு சிறிய தீவு நாட்டின் கடற்படை— சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ ஐரிஸ் டெனா ஏற்கனவே கடல் மேற்பரப்புக்கு அடியில் முற்றிலும் மறைந்துவிட்டது.

அவர்களைக் கொன்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், தப்பிப்பிழைத்தவர்களை மீட்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இது, 1949-ஆம் ஆண்டின் இரண்டாம் ஜெனிவா உடன்படிக்கையின் 18-வது பிரிவின் கீழ் உள்ள சட்டபூர்வக் கடமைகளை நேரடியாக மீறுவதாகும். அது, தனது நீர்மூழ்கிக் குண்டுகளை வீசியது, இலக்கு அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது, பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டது. உயிர் பிழைத்த 32 மாலுமிகளும் தங்கள் உயிருக்கு முற்றிலும் இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கே கடமைப்பட்டுள்ளனர். பூமியிலேயே மிகவும் வலிமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கடற்படையைக் கொண்டுள்ள அமெரிக்கா, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் கூட மீட்பதற்காக ஒரு சிறு உதவியைக் கூடச் செய்யவில்லை.

அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த அமெரிக்க மாலுமிகளுக்கு அவர்கள் உத்தரவுகளை நிறைவேற்றியபோது என்ன சொல்லப்பட்டது என்பது எமக்குத் தெரியாது. ஆனால், தாங்கள் எந்தக் காரணமும் இன்றித் தாக்குதல் நடத்தினோம் என்பதையும், 140 பேரை மரணத்திற்கு அனுப்பினோம் என்பதையும் அவர்கள் அறியும்போது, அவர்களில் பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய மன உளைச்சலையும், அவமானத்தையும் உணர்வார்கள்.

ஐரிஸ் டெனா கப்பல் ஈரானியக் கடற்பரப்பில் இருக்கவில்லை. அது பாரசீக வளைகுடாவிலோ அல்லது அறிவிக்கப்பட்ட எந்தத் தடை செய்யப்பட்ட பகுதியிலோ இருக்கவில்லை. அது ஆக்ரோஷமாகச் செயல்படவோ அல்லது எந்தக் கப்பலையும் குறிவைக்கவோ இல்லை. அது எந்தப் போர் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அது மிக அருகில் உள்ள போர்க் களத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், எந்தப் பாதுகாப்பும் இன்றித் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்தது. இந்தியாவின் நேரடி அழைப்பின் பேரில், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த சர்வதேச கடற்படை அணிவகுப்பு மற்றும் மிலன் 2026 (MILAN 2026) பன்னாட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அந்தப் பயிற்சியில் அமெரிக்கா உட்பட 74 நாடுகள் பங்கேற்றன. கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அமெரிக்க மற்றும் ஈரானியக் கடற்படை அதிகாரிகள் இந்திய மண்ணில் ஒரே தொழில்முறை சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

இந்தக் கப்பலை எச்சரிக்க அமெரிக்காவிடம் அனைத்து வசதிகளும் இருந்தன. அதை ஒரு நடுநிலையான நாட்டின் துறைமுகத்திற்குத் திருப்புமாறு கோருவதற்கான அனைத்து வசதிகளும் அதனிடம் இருந்தன. அமெரிக்காவிடம் போர்க் கப்பல்கள், விமானங்கள் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு அமைப்புகள் இருந்தன. ஐரிஸ் டெனா என்பது கண்ணுக்குத் தெரியக்கூடிய, பின்தொடரக்கூடிய, எந்தவொரு சர்வதேச கடல்சார் அதிர்வெண்ணிலும் வானொலி மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தரைப்பரப்பு கப்பலாகும். ட்ரம்ப் நிர்வாகம் எந்த எச்சரிக்கையையும் அவசியமாகக் கருதவில்லை. ஏனென்றால் எந்த விளக்கமும் தேவையில்லை என்று அது நினைக்கிறது ட்ரம்ப்பின் அறநெறிக்கு அப்பாற்பட்ட எந்தவொரு சட்டபூர்வமான அல்லது தார்மீக அதிகாரத்தையும் அது அங்கீகரிக்கவில்லை என்பதே இதற்குப் பின்னால் உள்ள காரணமாகும்.

அமெரிக்க ஊடகங்கள் இந்தக் குற்றத்தை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்டன. ஆனால், இந்தியப் பெருங்கடலில் இயங்கும் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல், ஐரிஸ் டெனாவிற்கு இணையான அளவுள்ள ஒரு உக்ரேனியப் போர்க் கப்பலைக் கண்டுபிடிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்—அந்த உக்ரேனியக் கப்பல் தான் அழைக்கப்பட்ட ஒரு பன்னாட்டுப் பயிற்சியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறது, சர்வதேசக் கடற்பரப்பில் தனியாகப் பயணம் செய்கிறது, யாருக்கும் எந்த உடனடி அச்சுறுத்தலையும் தரவில்லை. அந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல், எந்த எச்சரிக்கையும் விடுக்காமல், சரணடையக் கோரும் எந்த முயற்சியும் எடுக்காமல், ஒரே ஒரு நீர்மூழ்கிக் குண்டு மூலம் அந்தச் சிறு கப்பலையும் அதிலிருந்த 180 உக்ரேனிய மாலுமிகளையும் கடலின் ஆழத்திற்கு அனுப்பியதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் மாஸ்கோவில் கேமராக்களுக்கு முன்னால் நின்று, இந்தத் தாக்குதலை ரஷ்யாவின் ஆற்றலை நிரூபிக்கும் ஒரு வெற்றியாகக் கொண்டாடி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகச்சிறந்த நீர்மூழ்கிக் குண்டுத் தாக்குதல் இது என்று அறிவிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.

இதற்கு மேற்கத்திய நாடுகளின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை விவரிக்க எந்தக் கற்பனைத்திறனும் தேவையில்லை. அது உடனடியானதாகவும், இடியென முழங்குவதாகவும், ஒருமித்த குரலாகவும் இருக்கும். லிண்ட்சே கிரஹாம் போன்ற குடியரசுக் கட்சி பாசிசவாதிகள் முதல் பெர்னி சாண்டர்ஸ் போன்ற “இடது” ஜனநாயகக் கட்சியினர் வரை அனைத்துத் தரப்பு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் உதடுகளிலும் “போர்க் குற்றம்” என்ற சொற்களே ஒலிக்கும். ஐரோப்பாவில், நேட்டோ தலைவர்கள் வெளியிடும் கண்டனங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் பக்தி பூர்வமாக வழிமொழியும். அன்றைய தினம் முடிவதற்குள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அழைக்கப்பட்டிருக்கும். ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டங்கள் கூட்டப்படும். ஐ.நா. சாசனம், கடற்போர் சட்டங்கள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த சர்வதேச மரபுவழிச் சட்டங்கள் ஆகியவற்றின் மீறல்களைப் பட்டியலிட ஒவ்வொரு செய்தி ஊடகத்திலும் சட்ட வல்லுநர்கள் தோன்றுவார்கள். கட்டளைப் பொறுப்பு கொள்கையின் கீழ், ரஷ்ய ஜனாதிபதி மீது தனிப்பட்ட கிரிமினல் வழக்குத் தொடர கோரிக்கைகள் விடுக்கப்படும். மேற்கத்திய அரசாங்கங்கள் அதிரடியான புதிய தடைகளை விதிக்கும். நீரில் மூழ்கிய உக்ரேனிய மாலுமிகளின் பெயர்களும், முகங்களும், குடும்பங்களும் ஒவ்வொரு திரையிலும் நிறைந்திருக்கும்.

இந்தச் சூழலில் ரஷ்யாவிற்கு எதிராக முன்வைக்கப்படக்கூடிய ஒவ்வொரு சட்டபூர்வமான மற்றும் தார்மீக வாதங்களும், மார்ச் 4, 2026 அன்று அமெரிக்கா செய்த செயலுக்கும் அதே வலுவுடன் பொருந்தும். உண்மைகள் அப்பட்டமாக ஒரே மாதிரியானவை. சட்டக் கட்டமைப்பும் ஒன்றுதான். மனிதாபிமான விளைவுகளும் சமமான அளவிலேயே உண்மையானவை. இங்குள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், அந்த நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவினுடையது என்பது மட்டுமே.

அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூன்றாம் பேரரசின் (ஹிட்லரின் நாஜி ஆட்சி) நடவடிக்கைகளையே பிரதிபலிக்கின்றன. அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் 1942-இல் தனது லக்கோனியா உத்தரவை (Laconia Order) பிறப்பித்தார். அது தப்பிப்பிழைத்தவர்களுக்கான அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் கைவிடுமாறும், எவ்வித எச்சரிக்கையுமின்றி தடையற்ற நீர்மூழ்கிக் கப்பல் போர் முறையை மேற்கொள்ளுமாறும், நீர்மூழ்கிக் கப்பல் தளபதிகளுக்கு ஆணையிட்டது. அந்த இழிவான உத்தரவு இவ்வாறு கூறியது:

மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களில் இருந்து உயிர் தப்பியவர்களைக் காப்பாற்றும் அனைத்து முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும். நீரில் தத்தளிக்கும் மனிதர்களை வெளியே எடுப்பது மற்றும் அவர்களை உயிர் காக்கும் படகுகளில் ஏற்றுவது, கவிழ்ந்த படகுகளைச் சரி செய்வது அல்லது அவர்களுக்கு உணவும் நீரும் வழங்குவது போன்ற செயல்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். மீட்பு நடவடிக்கை என்பது போரின் மிக அடிப்படையான தேவைகளுக்கு முரணானது: அது எதிரிக் கப்பல்களையும் அவற்றின் ஊழியர் குழுவினரையும் முழுமையாக அழிப்பதாக இருக்க வேண்டும்.

நூரம்பேர்க் விசாரணையின் போது, நாஜி அட்மிரல் டோனிட்ஸ் இந்த உத்தரவை நியாயப்படுத்தினார். நவீன போர்முறையானது கடற்படையின் பழைய காலத்து கண்ணியமான போர் மரபுகளை காலாவதியானதாக ஆக்கிவிட்டது என்று அவர் வாதிட்டார்.

அட்மிரல் டோனிட்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், எவ்வித வழக்கறிஞர்களும் இன்றி, வெட்கமின்றி, சர்வதேசக் கடற்பரப்பில் 140 மாலுமிகளைக் கொன்றது —எந்த எச்சரிக்கையும் இன்றி, அச்சுறுத்தலும் இன்றி, அவர்களைக் காப்பாற்ற ஒரு சிறு முயற்சியும் செய்யாமல் கொன்றது— தேசிய அளவில் சுய-பாராட்டுக்குரிய ஒரு நிகழ்வே தவிர வேறில்லை என்ற தொனியில், “அமைதியான மரணம்” என்று கேமராக்களுக்கு முன்னால் ஹெக்செத் அறிவித்தார்.

இந்தக் கொலைகளுக்கு உத்தரவிட்ட கட்டளைச் சங்கிலித்தொடர், அந்த நீர்மூழ்கிக் கப்பலின் டோர்பிடோ அறையிலிருந்து வெள்ளை மாளிகை வரை நீள்கிறது. நூரம்பேர்க் விசாரணையில் நிறுவப்பட்டு, சர்வதேச சட்டத்தில் பதிக்கப்பட்ட கட்டளைப் பொறுப்பு என்ற கோட்பாடு, அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் தங்கள் கட்டளையின் கீழ் உள்ள படைகளால் செய்யப்படும் போர்க் குற்றங்களுக்கான குற்றவியல் பொறுப்பை, அவர்கள் ஏற்க வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் அத்தகைய குற்றங்களை நேரடியாக உத்தரவிட்டபோது மட்டுமல்லாமல், அக்குற்றங்களைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தாலோ அல்லது அறிந்திருக்க வேண்டிய சூழல் இருந்தும் அவற்றைத் தடுக்கவோ அல்லது தண்டிக்கவோ தவறியிருந்தாலும் அவர்கள் பொறுப்பாளிகளே ஆவர். இந்தச் சம்பவத்தில், அவர்களுக்கு இதுபற்றி தெரியுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தப் போர்க்குற்றம் அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் முன்னிலையில் யுத்த அமைச்சராலேயே உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

ஐரிஸ் டெனா மீதான நீர்மூழ்கிக் குண்டுத் தாக்குதலின் தாக்கங்கள் வெறும் நடுக் கடலோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியப் பெருங்கடலில் படுகொலை செய்ய அங்கீகாரம் வழங்கிய அதே அரசாங்கம் தான், மினியாபோலிஸ் வீதிகளில் அமெரிக்கர்கள் கொல்லப்படுவதையும் நியாயப்படுத்தியுள்ளது. ஜனவரி 7, 2026 அன்று, 37 வயதான தாயான ரெனீ நிக்கோல் குட் தனது காரில் அமர்ந்திருந்தபோது, ஒரு மத்திய குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனவரி 24 அன்று, அவசர சிகிச்சைப் பிரிவு செவிலியரான அலெக்ஸ் பிரெட்டி, நடைபாதையில் வைத்து ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், எல்லைப் பாதுகாப்பு முகவர்களால் குறைந்தது 10 முறை சுடப்பட்டு கொல்லப்பட்டார். அவர் தனது துப்பாக்கியை ஒருபோதும் வெளியே எடுக்கவே இல்லை.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உள்ள கோட்பாடு ஒன்றுதான். அமெரிக்க அதிகாரத்தால் கொல்லப்பட்டவர்கள் —இந்தியப் பெருங்கடலில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகள் என்றாலும் சரி, அல்லது மினியாபோலிஸ் நடைபாதையில் கொல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள் என்றாலும் சரி— அனைவரும் அரசு அனுசரணையுடன் நடத்தப்பட்ட படுகொலைகளின் இலக்குகளே ஆவர். பலியானவர்கள் எப்போதும், கொல்லப்பட்ட பிறகு ஏதோ ஒரு விஷயத்தில் குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ரெனீ குட்டிடம் அவரது கார் இருந்தது. அலெக்ஸ் பிரெட்டியிடம் சட்டபூர்வமாக வைத்திருந்த துப்பாக்கி இருந்தது. அமெரிக்கத் தெருக்களில் என்ன நடைமுறையில் உள்ளதோ, அதுவேதான் இந்தியப் பெருங்கடலிலும் நடைமுறையில் உள்ளது. இது ஒரே கோட்பாடு, மற்றும் அதே ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படும் ஒரே அரசாங்கம் ஆகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கம், மாணவர்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அனைவரும் இந்தப் போருக்கு எதிராக தீவிரமாக அணிதிரள வேண்டும். ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், “தீவிரமான ஆவேச நடவடிக்கை” என்பதன் கீழ் இழைக்கப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய ஒரு சுயாதீனமான சர்வதேச தொழிலாளர் தீர்ப்பாயத்தைக் (international workers’ tribunal) கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோர வேண்டும்.

ஐரிஸ் டெனாவை மூழ்கடித்த அந்த நீர்மூழ்கிக் குண்டு வெறும் 140 மாலுமிகளை மட்டும் கொல்லவில்லை. அமெரிக்க அரசாங்கம் எந்தச் சட்டத்திற்கும், எந்த உடன்படிக்கைக்கும் அல்லது நாகரீகமான நடத்தைக்கான எந்தத் தரத்திற்கும் கட்டுப்பட்டது அல்ல என்பதை அது எவ்வித மன்னிப்பு ஏதுமின்றி உலகிற்கு அறிவித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பு முறையாலும், இலாபக் குவிப்பாலும் கட்டளையிடப்படும் தேவைகளை மட்டுமே இந்த அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒவ்வொரு புதிய குற்றமும், லியோன் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைக்கு கூடுதல் அவசரத்தன்மையைச் சேர்க்கிறது: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், அதுவும் அடுத்த வரலாற்று காலகட்டத்திற்குள் அத்தகைய புரட்சி நிகழாவிட்டால், மனிதகுலத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரத்திற்கே ஒரு பேரழிவு அச்சுறுத்தல் ஏற்படும்.”

Loading