முன்னோக்கு

வெளிநாட்டில் போர், அமெரிக்காவில் பாரிய பணிநீக்கங்கள்: ஈரானுக்கு எதிரான தாக்குதலை தொழிலாள வர்க்கம் நிறுத்த வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கலிபோர்னியாவின் ஆக்ஸ்நார்டில் உள்ள அமேசான் OXR1 விநியோக மையத்தில், ஒரு தொழிலாளி உள்வரும் பொருட்களை ஸ்கேன் செய்கிறார். [AP Photo/Damian Dovarganes]

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான குற்றவியல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் உள்நாட்டில் அதற்கு இணையான மற்றொரு போர் நடத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் 92,000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தற்போது வேலையின்மை விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது.

இந்த எண்ணிக்கையானது, வேலைவாய்ப்பு வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளை தலைகீழாக மாற்றியதோடு, கடந்த ஐந்து மாதங்களில் மூன்றாவது பின்னடைவைக் குறிக்கிறது. ஏப்ரல் 2025 முதல், அமெரிக்கப் பொருளாதாரம் நிகர அடிப்படையில் வேலைகளை இழந்து வருகிறது. அதே நேரத்தில், முக்கிய பெருநிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பணிநீக்கங்கள் ஒரு பொருளாதார மந்தநிலை காலங்களிலும் பார்க்க இதுவரை கண்டிராத அளவுகளுக்கு உயர்ந்துள்ளன.

சலஞ்சர், கிரே அண்ட் கிறிஸ்மஸ் (Challenger, Gray & Christmas) தொகுத்த மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்க முதலாளிகள் 2025 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான வேலை வெட்டுக்களை அறிவித்துள்ளனர். இது 1989 இல் பணிநீக்கங்களைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து ஒரு முறையான பொருளாதார மந்தநிலை அல்லது தொற்றுநோயின் தொடக்கத்திற்கு வெளியே பதிவான மிக உயர்ந்த மொத்த எண்ணிக்கையாகும். கடந்த மாதம் புதிய ஆள்சேர்ப்பு அறிவிப்புகள் 55 சதவீதம் சரிந்து, 2010 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலைக்கு வீழ்ந்துள்ளன.

பணிநீக்கங்களின் அளவு மிகப் பெரியது. ஒராக்கிள் (Oracle) 30,000 தொழிலாளர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது, அமேசான் அக்டோபர் முதல் 30,000 கார்ப்பரேட் வேலைகளை நீக்கியுள்ளது மற்றும் யு.பி.எஸ் (UPS) கடந்த ஆண்டு 48,000 பணியிடங்களை நீக்கியதைத் தொடர்ந்து இப்போது பல்லாயிரக்கணக்கான பணிநீக்கங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஸ்கொயர் (Square) நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிளொக் (Block), ஒரே நாளில் தனது பணியாளர்களில் பாதியளவு பேரை பணிநீக்கம் செய்தது.

ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு மட்டும் 317,000 மத்திய அரசுத் தொழிலாளர்களை வெளியேற்றியது, மேலும் மருத்துவ உதவி, மருத்துவ பாதுகாப்பு மற்றும் உணவு உதவி உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இது வெறும் தொடக்கம் மட்டுமே, ஏனெனில் வேலைவாய்ப்பின் பெரும் பகுதிகளை அழிக்க செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுகிறது. “பெரும்பாலான, இல்லையெனில் அனைத்து தொழில்முறைப் பணிகளும்” அடுத்த 18 மாதங்களுக்குள் தானியங்கி மயமாக்கப்படும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் AI பிரிவுத் தலைவர் கணித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் உள்நாட்டுத் திட்டங்கள், அதன் சேமிப்பு குடோன் செயல்பாடுகளில் 75 சதவீதத்தைத் தானியங்கி மயமாக்குவதையும், அதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 6,00,000ம் வேலைகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தொழிலாள வர்க்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட வளங்கள் இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன: ஒன்று, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சொத்துக்களைக் குவித்துள்ள தன்னலக்குழுவின் செல்வத்தைப் பெருக்குவது, மற்றொன்று ஏகாதிபத்தியப் போருக்கு நிதி வழங்குவது. ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சுத் தாக்குதலின் ஆரம்ப நாட்களிலேயே அமெரிக்கா சுமார் 3.7 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. அதே நேரத்தில், ட்ரம்ப் நிர்வாகம் 1.5 டிரில்லியன் டாலர் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இது ஏற்கனவே வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ வரவுசெலவுத் திட்டமாக இருக்கும் நிலையில், அதிலிருந்து மேலும் 50 சதவீத உயர்வாக இது உள்ளது.

அதே நேரத்தில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஒரே வாரத்தில் எண்ணெய் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய தேக்கவீக்க நெருக்கடியின் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. விலைவாசி உயர்வு மூலம் இதன் சுமையை தொழிலாளர்களே சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

இந்த நெருக்கடி உலகளாவியதாகும். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரினால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வு ஐரோப்பியத் தொழில்துறையைச் சீரழித்துள்ளதால், ஜேர்மனியில் மட்டும் 2019 முதல் 250,000-க்கும் அதிகமான உற்பத்தித் துறை வேலைகள் மறைந்துவிட்டன. ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரை ஆதரிக்கும் அதே அரசாங்கங்கள், இப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பி வருகின்றன.

போருக்கு எதிரான எதிர்ப்பு உடனடியாக எழுந்துள்ளது. முன்பு ட்ரம்பை ஆதரித்த பலர் உட்பட, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே மற்றொரு ஏகாதிபத்தியப் பேரழிவிற்கு எதிரான ஆழ்ந்த பகைமை நிலவுவதை கருத்துக்கணிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் காட்டுகின்றன.

இந்த பரந்த அளவிலான எதிர்ப்பானது, அதிகாரப்பூர்வ அரசியல் கட்டமைப்பிற்குள் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. காங்கிரஸில் இரு கட்சிகளுமே போரின் அடிப்படை நோக்கங்களையும், அதை நடத்துவதற்குத் தேவையான இராணுவச் செலவினங்களின் பாரிய போர் விரிவாக்கத்தையும் ஆதரிக்கின்றன. பெருநிறுவன ஊடகங்களுக்குள் நடக்கும் விவாதங்கள் போரின் மூலோபாயங்கள் மற்றும் செயல்திறன் பற்றிய கேள்விகளுடன் மட்டுமே நின்றுவிடுகின்றனவே தவிர, போரின் சட்டபூர்வமான தன்மை குறித்து அவை பேசுவதில்லை.

வேலைவாய்ப்பு அழிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க எந்திரம் எதிர்ப்பை ஒழுங்கமைக்க முற்றிலும் எதையும் செய்யவில்லை. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள், டீம்ஸ்டர்ஸ், UAW மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் மற்றும் தானியங்கி மயமாக்கல் மூலம் வேலைகள் அழிக்கப்படுவதற்கு எதிராகத் தங்கள் உறுப்பினர்களை அணிதிரட்ட ஒரு சிறு முயற்சியைக் கூட எடுக்கவில்லை. இந்த ஆண்டின் முதல் அலை போராட்டங்களுக்கு – நியூ யோர்க் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதி செவிலியர்களின் வேலைநிறுத்தங்கள் உட்பட - பதிலளிக்கும் விதமாக, தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தவும், எந்தவொரு விரிவான போராட்டமும் உருவாவதைத் தடுக்கவும் தொழிற்சங்க எந்திரம் திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளது.

இதே தொழிற்சங்க எந்திரம் போருக்கு எதிரான எந்தவொரு அழைப்பையும் விடுக்கவில்லை. ஈரானுக்கு எதிரான தாக்குதலை எதிர்த்து AFL-CIO, UAW அல்லது எந்தவொரு முக்கிய தொழிற்சங்க சம்மேளனத்திடமிருந்தும் ஒரு அறிக்கை கூட வரவில்லை. அவர்களின் மௌனம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சமூக செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது: அதாவது வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவது மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசின் தேவைகளை நடைமுறைப்படுத்துவது.

ஈரான் மீதான குண்டுவீச்சு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஐக்கிய எஃகுத் தொழிலாளர்கள் சங்கம் பல்லாயிரக்கணக்கான சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களை உள்ளடக்கிய சலுகை ஒப்பந்தத்தை வலுக்கட்டாயமாகத் திணித்தது. இது போர் தீவிரமடைந்த நிலையில் தடையற்ற எரிசக்தி உற்பத்தியையும் இலாபங்களின் தொடர்ச்சியான ஓட்டத்தையும் உறுதி செய்தது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), வேலைவாய்ப்பு அழிப்புக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை ஒழுங்கமைக்க —தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக— தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது. இந்தப் போராட்டம் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.

போரை நிறுத்தக்கூடிய தீர்க்கமான சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். போரின் பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளும், அமெரிக்காவிற்குள் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்துடனான அதன் தொடர்பும், போரை நிறுத்தவும், அமெரிக்கப் போர் இயந்திரத்தைக் கலைக்கவும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வீழ்ச்சிக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணர்த்தும். இது ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட, அரசியல் ரீதியாக நனவான வெளிப்பாட்டைக் காண வேண்டும்.

தொழிலாள வர்க்கம், வர்க்கப் போராட்ட முறைகளைக் கொண்டு போரை எதிர்க்க வேண்டும். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சுத்திகரிப்பு நிலையங்கள், ரயில்வே வலைப்பின்னல்கள் மற்றும் இராணுவ விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைந்த வேலைநிறுத்தங்கள், போரைத் தாங்கிப் பிடிக்கும் செயல்பாடுகளை நேரடியாகத் தடம் புரளச் செய்யும். இராணுவச் சரக்குகளைக் கையாள மறுத்த மத்திய தரைக்கடல் பகுதி துறைமுகத் தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டங்கள், போர் இயந்திரத்தைத் தடுப்பதற்கான இத்தகைய நடவடிக்கைகளின் ஆற்றலை நிரூபிக்கின்றன.

இப்போது இராணுவவாதத்திற்குள் செலுத்தப்படும் பரந்த வளங்கள் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திருப்பிவிடப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான இராணுவ வரவுசெலவுத் திட்டம் கைவிடப்பட வேண்டும் மற்றும் அந்த நிதியை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ள பிற முகமைகள் கலைக்கப்பட வேண்டும்.

இத்தகைய இயக்கத்தின் தர்க்கம் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கியே செல்கிறது. அது இளைஞர்களையும் நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கான பிரிவினரையும் தனக்குப் பின்னால் ஈர்க்கும்.

இத்தகைய இயக்கத்தை தற்போதுள்ள தொழிற்சங்க எந்திரத்தின் மூலம் முன்னெடுக்க முடியாது. பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தொழிலாளர்களாலேயே ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதை IWA-RFC ஊக்குவிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது. பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரித்து வரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கைகளிலிருந்து இந்த அமைப்புகள் முன்முயற்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, போருக்கு எதிரான போராட்டம் ஒரு சர்வதேச அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு, போரின் மூலம் இலாபம் ஈட்டும் பில்லியனர்கள் மற்றும் அரசியல்வாதிகளை விட, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுடன் தான் பொதுவான விஷயங்கள் அதிகம் உள்ளன.

போருக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை, போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்தை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும். தனது அபரிமிதமான சமூக சக்தியை அணிதிரட்டுவதன் மூலம், தொழிலாள வர்க்கம் போரை நிறுத்தவும், தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதத் தேவையின் அடிப்படையில் சமூகத்தைச் சோசலிச மறுசீரமைப்பு செய்வதற்கான பாதையைத் திறக்கவும் முடியும்.

Loading