முன்னோக்கு

"போர்கள் தொடங்கும் போது, அரசாங்கங்கள் ஒருபோதும் இவ்வளவு பலவீனமாக இருந்ததில்லை"

உலக சோசலிச வலைத் தளத்தின் அவசர இணையவழி கருத்தரங்கு, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்துவதற்கான ஒரு சோசலிச மூலோபாயத்தை முன்வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மார்ச் 8 அன்று, உலக சோசலிச வலைத் தளம் (wsws) ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் குறித்து ஓர் அவசர உலகளாவிய இணையவழி கருத்தரங்கை நடத்தியது, இதில் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு வேறு எங்கும் காண முடியாத ஒரு புரட்சிகர முன்னோக்கை முன்வைத்தது: இந்தப் போரையும் அனைத்து ஏகாதிபத்திய போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு சோசலிச, ஏகாதிபத்திய-எதிர்ப்பு பகுப்பாய்வை இது முன்வைத்தது. இது முதலாளித்துவ வர்ணனையாளர்கள் மற்றும் போலி-இடது அமைப்புகளால் முன்வைக்கப்படும் அனைத்துக் கட்டமைப்புகளிலிருந்தும் முற்றாக முறித்துக் கொண்டது. அந்த அமைப்புகள் எவையும் ஈரான் மீதான போரை எதிர்க்கும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு எந்தவொரு முன்னோக்கிய பாதையையும் வழங்கவில்லை.

இந்த இணையவழி கருத்தரங்கில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலைவர்களின் சர்வதேசக் குழு ஒன்று பங்கேற்றது: உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்; சோசலிச சமத்துவக் கட்சி (கனடா) தேசியச் செயலாளர் கீத் ஜோன்ஸ்; சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வாண்ட்ரையர்; சோசலிச சமத்துவக் கட்சி (பிரித்தானியா) உதவித் தேசியச் செயலாளர் ரொம் ஸ்கிரிப்ஸ்; சோசலிச சமத்துவக் கட்சி (துருக்கி) தலைவர் உலாஸ் செவின்ச்; மற்றும் மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) வாகனத் தொழிலாளியும் ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) சங்கத் தலைவர் பதவிக்கான வேட்பாளருமான வில் லெஹ்மன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியச் செயலாளர் ஜோசப் கிஷோர் மற்றும் சோசலிச சமத்துவக் குழுவின் (நியூசிலாந்து) ரொம் பீட்டர்ஸ் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மீது அடர்த்தியான கரும்புகை சூழ்ந்திருக்க, ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது நாளாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தெஹ்ரானை குண்டுவீசித் தாக்கிய நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியுள்ளது, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், மேலும் ட்ரம்ப் நிர்வாகம் தரைப்படை துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு பகிரங்கமாகத் திட்டமிட்டு வருகிறது.

இணையவழி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய கிஷோர், இந்தப் போரின் ஏகாதிபத்திய தன்மையை சுருக்கமாக விளக்கினார்: “வெறும் ஒரு வாரத்திற்குள், முழு மத்திய கிழக்கையும், ஏன் உலகத்தையே தீக்கிரையாக்க அச்சுறுத்தும் ஏகாதிபத்திய வன்முறையின் விரைவான தீவிரப்பாட்டை நாம் கண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார். மினாப்பில் (Minab) 150 சிறுவர்களைக் கொன்ற ஒரு சிறுமியர் பள்ளி மீதான தாக்குதல், நகரங்கள் மீதான குண்டுவீச்சுக்கள் மற்றும் சர்வதேச கடற்பரப்பில் ஆயுதமற்ற ஈரானிய கப்பல் மீது ஏவப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் - இவை யாவும் ஒரு “நிர்மூலமாக்கும் போரை” சுட்டிக்காட்டுவதாக கிஷோர் கூறினார். ட்ரம்ப் நிர்வாகம், “சர்வதேச சட்டத்திற்கோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு கட்டுப்பாடுகளுக்கோ தாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று அறிவிக்கிறது. இது ஈரானை நிபந்தனையற்ற சரணடைதலைக் கோருவதோடு, 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு முழுமையான அழிவையும் நிச்சயமான மரணத்தையும் வழங்குவதுக்கு உறுதி அளிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் குற்றங்களை வரலாற்று ரீதியாக வரிசைப்படுத்திய டேவிட் நோர்த், இந்தப் போரை நூரம்பேர்க் விசாரணைகளின் கட்டமைப்பில் வைத்தார். “நூரம்பேர்க்கில் குற்றம் சாட்டப்பட்ட நாஜிக்களுக்கு —கோரிங், கைட்டல், ஜோடில்— எதிராக சுமத்தப்பட்ட முதன்மையான குற்றச்சாட்டு ‘அமைதிக்கு எதிரான குற்றங்கள்’, அதாவது எந்தவித சட்டபூர்வமான நியாயமும் இன்றி ஒரு போரைத் தொடங்குவது என்பதாகும்,” என்று அவர் கூறினார். “அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இருக்கவில்லை. ஈரான் அணுஆயுதத் தாக்குதலை நடத்தப் போகிறது என்ற அபத்தமான வாதம் உட்பட ஒவ்வொரு கூற்றையும் யாரும் நம்பவில்லை. அது ஒரு பொய் என்று அனைவருக்கும் தெரியும்.” அமெரிக்காவின் தலைமையானது, “நாஜி ஆட்சியின் தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கும் இறுதியில் அவர்களது மரணதண்டனைக்கும் அடிப்படையாக அமைந்த அதே குற்றங்களில் முற்றிலும் சிக்கியுள்ளது” என்று நோர்த் குறிப்பிட்டார்.

சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவாலற்ற உலகளாவிய மேலாதிக்கத்தை அடைவதற்கான அமெரிக்காவின் 35 ஆண்டுகால முயற்சிகளுக்குள் இந்தப் போரை நோர்த் வரிசைப்படுத்திக் காட்டினார். இந்த மூலோபாயம் “ட்ரம்ப்புடன் தொடங்கவில்லை” அவர் குறிப்பிட்டார். இந்த வழிமுறைகள் “தொடர்ந்து வன்முறை மிக்கதாகவும் கட்டுப்பாடற்றதாகவும் மாறுகின்றன, ஏனெனில் ஒட்டுமொத்தத் திட்டமும் அடிப்படையில் ஒரு உலகளாவிய பாரிய படுகொலை கொள்கையின் மூலமாக அன்றி வேறெந்த வகையிலும் சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.

இந்தப் போரின் அடிப்படையான நோக்கம் “20 ஆம் நூற்றாண்டையே ஒழிப்பதாகும் — 20 ஆம் நூற்றாண்டின் தேசிய ஜனநாயக மற்றும் சோசலிசப் போராட்டங்களின் அனைத்து விளைவுகளையும் துடைத்தெறிவது. இவை அனைத்தும் ஏதோ ஒரு பெரிய தவறு என்பது போலவும், மீண்டும் காலனித்துவ ஆதிக்கத்தை நிலைநாட்டி ஏகாதிபத்தியம் ஆட்சி செய்ய முடியும் என்பது போலவும் செயல்படுவதாகும்.” இது ஆளும் தட்டின் பழைய பிரகடனத்திற்கு ஒப்பானது என்று நோர்த் கூறினார்: அது, “நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள், அடிமைகளாகவே நீடிப்பீர்கள்” என்பதாகும்.

தெஹ்ரானில் இப்போது நடப்பது “கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் நாம் கண்டவற்றின் தொடர்ச்சியாகும்” என்று அவர் எச்சரித்தார். “மேலும் தொழிலாள வர்க்கத்தால் இது நிறுத்தப்படாவிட்டால், எதிர்காலப் போர்களில் நாம் காண்பது தெஹ்ரானின் படங்களாக இருக்காது — அது மாஸ்கோவின் படங்களாக இருக்கும், அது பெய்ஜிங்கின் படங்களாக இருக்கும்” என்று அவர் எச்சரித்தார்.

இந்த இணையவழி கருத்தரங்கில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஈரானுக்கு எதிரான போர் குறித்துப் பேசிய ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், ஈரான் மீதான போரில் “முட்டாள்தனமான போர்க்கள விதிகள் இருக்காது, தேசத்தைக் கட்டியமைக்கும் சிக்கல்கள் இருக்காது, ஜனநாயகத்தைக் கட்டியமைக்கும் பயிற்சிகள் இருக்காது, அரசியல் ரீதியாகச் சரியான போர்கள் இருக்காது. நாங்கள் வெற்றி பெறவே போராடுகிறோம், நேரத்தையோ உயிரையோ வீணடிக்க மாட்டோம்” என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் பொதுமக்களின் மீது இந்தப் போர் ஏற்படுத்தியுள்ள பேரழிவைப் பற்றி கீத் ஜோன்ஸ் விளக்கினார். 5,535 குடியிருப்பு அலகுகள், 64 பள்ளிகள் மற்றும் 14 மருத்துவ மையங்கள் உட்பட 6,000-க்கும் மேற்பட்ட சிவில் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் (Red Crescent) தலைவர் அறிக்கை அளித்துள்ளதை அவர் மேற்கோள் காட்டினார். கடந்த இரண்டு தசாப்தங்களில் மேற்கத்திய நாடுகளின் தடைகளால் பல்லாயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 2018-ல் ட்ரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டு, “ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் வெளிப்படையான நோக்கத்துடன்” தடைகளை விதித்தார் என்றும் ஜோன்ஸ் சுட்டிகாட்டினார் — இந்தத் தடைகள் “ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ் தடையின்றித் தொடர்ந்தன” என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் ஜேர்மன் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் வாஷிங்டனுக்குச் சென்று ட்ரம்ப்பிடம், “தெஹ்ரானில் உள்ள இந்த பயங்கரமான ஆட்சியை அகற்றுவது என்ற விஷயத்தில் நாம் இருவரும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம்” என்று கூறியதாக கிறிஸ்டோப் வாண்ட்ரையர் தெரிவித்தார். ஹெக்செத்தின் மொழிக்கும் நாஜிக்களின் மொழிக்கும் இடையே வாண்ட்ரையர் நேரடி ஒப்பீட்டைச் செய்தார்: “எந்த விதிகளும் இல்லை, ஆனால் நாங்கள் வெற்றி பெறப் போரிடுகிறோம் என்று அவர் கூறும்போது, போலந்து மீதான தாக்குதலுக்கு சற்று முன்பு ஹிட்லர் தனது இராணுவ அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில் கூறியது இதுதான்: வெற்றி பெற்றவனிடம் அவன் உண்மையைச் சொன்னானா இல்லையா என்று பின்னர் கேட்கப்பட மாட்டாது. ஒரு போரைத் தொடங்கி நடத்தும் போது, நீதி முக்கியமல்ல, வெற்றியே முக்கியம்.” என்று கூறினார். ஹிட்லருக்குப் பிறகு பார்த்திராத அளவில் மீண்டும் ஆயுதபாணியாவதற்கும், கண்டத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையைக் கட்டியெழுப்புவதற்கும் ஜேர்மனி திட்டங்களை அறிவித்துள்ளதாக வான்ட்ரையர் மேலும் குறிப்பிட்டார்.

ஜேர்மனியின் இடது கட்சியின் பங்கையும் வாண்ட்ரையர் அம்பலப்படுத்தினார். அக்கட்சியின் தலைவர் ஜான் வான் ஆக்கன் ஈரானிய தலைவர்களின் படுகொலைகளைக் கொண்டாடி, “அவர்கள் ஒழிந்தது நல்லது, அவர்கள் நரகத்தில் அழுகட்டும்” என்று கூறினார். வான் ஆக்கன் இந்தப் போரை கிரிமினல் குற்றம் என்றும் சட்டவிரோதமானது என்றும் அழைக்கிறார், “ஆனால் அதே நேரத்தில் அதன் விளைவுகளை நியாயப்படுத்துகிறார் மற்றும் அதன் நோக்கங்களை ஆதரிக்கிறார்” என்று வாண்ட்ரையர் குறிப்பிட்டார்.

இந்தப் போருக்கு பிரித்தானியாவின் உடந்தையான போக்கை ரொம் ஸ்கிரிப்ஸ் குறிப்பிட்டார். “மீண்டும் ஒருமுறை, ஒரு தொழிற்கட்சி அரசாங்கம், மக்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி மத்திய கிழக்கில் ஒரு கிரிமினல் போரில் இங்கிலாந்தை ஈடுபடுத்தி வருகிறது,” என்று அவர் கூறினார். பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து கசிந்த அறிக்கைகள், ஆரம்பகட்ட தாக்குதல்கள் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்னரே அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததைக் காட்டுகின்றன. மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் “இங்கிலாந்து அரசாங்கம் தனது ஈடுபாட்டிற்கு ஏதோ ஒரு வகையான நியாயத்தைக் கூறுவதற்கு ஏற்றவாறு ஒரு கோரிக்கையை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி விவாதித்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

துருக்கியின் இஸ்மீரில் உள்ள போல்யாக் ஐனெஸ் (Polyak Eynez) சுரங்கத்தில் 1,200-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய திடீர் வேலைநிறுத்தத்தை உலாஸ் செவின்ச் முன்னிலைப்படுத்தினார். போர் தொடங்குவதற்கு முன்பே வெடித்த இந்த வேலைநிறுத்தம், போரின் முதல் நாட்களிலும் தொடர்ந்தது. “இந்த திடீர் வேலைநிறுத்தத்தின் போது, தொழிலாளர்கள் இப்போது சுரங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தால், அவர்களால் நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடியும் என்று தொழிலாளர்கள் மத்தியில் வெளிப்படையாக கலந்துரையாடப்பட்டது,” என்று அவர் கூறினார். “ஏகாதிபத்திய போருக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தி, சமூக வலிமை உள்ளது என்பதை அவர்கள் புறநிலையாக நிரூபித்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கத் தொழிலாளர்களிடையே இந்தப் போருக்கு இருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பு குறித்து வில் லேமன் விவரித்தார். “ஈரான் மீதான போருக்கு அமெரிக்கக் குடிமக்களிடையே 20 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது — தொழிலாளர்களுடன் பேசுவதிலிருந்து இதுவே எனக்கு அதிகமாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார். பென்சில்வேனியாவின் குவேக்கர் நகரில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு (ICE) எதிராகப் போராடிய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து அவர் தெரிவித்தார். மேலும் உள்நாட்டுப் போருக்கு முன்னர் தப்பியோடிய அடிமைகள் சட்டத்தை எதிர்த்த அந்தப் பகுதியின் புரட்சிகர மரபுகளையும் அவர் குறிப்பிட்டார். “பரந்த எதிர்ப்பு உள்ளது. பென்சில்வேனியாவில் மீண்டும் ஒரு புரட்சிக்கான உணர்வு நிச்சயம் உருவாகி வருகிறது,” என்று லெஹ்மன் கூறினார்.

ஜேக்கபின் பத்திரிகை மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) முன்னெடுக்கும், அமெரிக்கா “இஸ்ரேலின் போரை நடத்துகிறது” என்ற கதையாடலை நோர்த் கையில் எடுத்தார். இதை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்: “வால் மிக மிக வேகமாக ஆடலாம், ஆனால் நாய்தான் ஆட்டத்தை நடத்துகிறது. இஸ்ரேல் அமெரிக்கக் கொள்கையை தீர்மானிப்பதில்லை” என்று அவர் குறிப்பிட்டார். 1953-ல் ஈரானில் நடந்த சதித்திட்டம் முழுமையாக அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும், மன்னர் ஷா (Shah) “பாரசீக வளைகுடாவின் பொலிஸ்காரனாக” செயல்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டார் — அந்தக் காலத்தில் இஸ்ரேலை விட ஷாவின் பாத்திரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. “இதை வெறும் இஸ்ரேலிய போராகக் சித்தரிப்பது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதாகும், மேலும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த உலகளாவிய மூலோபாயத்திலிருந்து இந்தப் போரைத் தனியே பிரிப்பதற்கு ஒப்பானது” என்று அவர் கூறினார்.

ஈரானிய வெகுஜனங்களின் எதிர்ப்பு மட்டுமல்லாது, “அடிப்படையாக, போரின் தன்மையும் அதை உருவாக்கிய முரண்பாடுகளும் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதால், அமெரிக்கா இந்தப் போரில் தோல்வியடையும்” என்று நோர்த் கணித்தார். “போர் வரைபடத்தைப் பின்பற்றாமல், வர்க்கப் போராட்ட வரைபடத்தைப் பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்திய ட்ரொட்ஸ்கியின் 1934 ஆம் ஆண்டு கட்டுரையான “போரும் நான்காம் அகிலமும்” என்பதை அவர் மேற்கோள் காட்டினார்.

தனது நிறைவுரையில், போர்கள் தொடங்கும் போது அரசாங்கங்கள் “ஒருபோதும் இவ்வளவு பலவீனமாக இருந்ததில்லை” என்ற லெனினின் அவதானிப்பைச் சுட்டிக்காட்டி, இளைய தலைமுறையினருக்கு நோர்த் நேரடியாக உரையாற்றினார். “அனைத்து பொய்ப் பிரச்சாரங்களிலும், இந்த அரசாங்கம் சர்வவல்லமை படைத்தது என்ற கருத்துதான் மிகவும் தவறானது. அவர்கள் அப்படி இல்லை,” என்று அவர் கூறினார். “ட்ரம்ப், இந்த அரசாங்கம், இந்தப் போரில் அனைத்தையும் பணயம் வைக்கிறது.” அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் “மனிதகுலத்தின் கருத்துக்களுக்கு உரிய மரியாதை” அளிக்க வேண்டும் என்ற அழைப்பை நினைவுபடுத்திய அவர்: “இந்த அரசாங்கம் யாருடைய கருத்துக்களுக்காவது உரிய மரியாதையைக் காட்டுகிறதா? அந்த முட்டாள், அயோக்கியன், குற்றவாளி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அரசியல் பைத்தியக்காரக் கூட்டத்தைத் தவிர? அவர்களுக்கு யார் மீதும் மரியாதை இல்லை. அமெரிக்க மக்கள் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை. உலகத்தின் கருத்துக்கள் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை,” என்று குறிப்பிட்டார்.

காஸா போராட்டங்களின் அரசியல் படிப்பினைகளை கிஷோர் விளக்கினார். காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை என்பது ஈரானை இலக்கு வைக்கும் ஒரு பரந்த போரின் ஒரு முன்னரங்கப் பகுதி என்று உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்திலிருந்தே எச்சரித்ததை அவர் குறிப்பிட்டார். “அரசியல் ஸ்தாபனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முன்னோக்கின் பின்னால்” பல்வேறு அமைப்புகளால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் திசைதிருப்பப்பட்டன. ஆனால் உண்மையில் தேவையானது “தொழிலாளர் வர்க்கத்தின் சமூக சக்தியை அணிதிரட்டி, தொழிலாளர் வர்க்கத்திற்குள் ஒரு இயக்கத்தை உருவாக்குவதாகும். ஆயுதத் தயாரிப்பு, போக்குவரத்து, தளவாடங்கள் ஆகியவற்றில், இந்தச் சூழ்நிலையில் தலையிட தொழிலாளர் வர்க்கத்திற்கு மகத்தான அதிகாரம் உள்ளது,” என்று அவர் கூறினார். நியூ யோர்க் நகரத்தின் ஜனநாயக சோசலிச (DSA) மேயர் ஜோஹ்ரான் மம்தானி, “ஈரான் மீதான குண்டுவீச்சுக்கு சற்று முன்னதாக” வெள்ளை மாளிகைக்குச் சென்று ட்ரம்புடன் கைகுலுக்கியதை அவர் சுட்டிக்காட்டி, DSA-வின் “முற்றிலும் அரசியல் திவால்தன்மையை” அம்பலப்படுத்தினார்.

பேச்சாளர்களின் பங்களிப்புகளைக் கொண்டு பீட்டர்ஸ் இறுதியில் வலியுறுத்துகையில், “தொழிலாள வர்க்கம் சக்தியற்றது அல்ல, அது போர், பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்குதல்கள், அத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் பாசிசம் மற்றும் எதேச்சாதிகாரத்தின் வளர்ச்சிக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வகையில் அது எதிர்வினையாற்றும். ஆனால், உலக அளவில் உருவாகி வரும் மற்றும் வளரக்கூடிய இந்த இயக்கத்திற்கு ஓர் அரசியல் தலைமை தேவை, அது சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும், வரலாறு முழுவதிலும் உள்ள புரட்சிகரப் போராட்டங்களின் பாடங்களில் அது வேரூன்றி இருக்க வேண்டும்” என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இணையவழி கருத்தரங்கு, ஈரானுக்கு எதிரான போர் குறித்த ஒரேயொரு தீவிரமான அரசியல் ஆய்வாகத் தனித்து நிற்கிறது. இது சர்வதேச தொழிலாளர் வர்க்கம்தான் போரை நிறுத்தக்கூடிய மற்றும் நிறுத்த வேண்டிய சமூக சக்தியாக அடையாளப்படுத்துகிறது. இந்த இணையவழி கருத்தரங்கைப் பார்க்குமாறும், அதை முடிந்தவரை பரவலாகப் பகிருமாறும், அதன் படிப்பினைகளையும் முன்னோக்கிச் செல்லும் பாதையையும் சக தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடுமாறும் எமது வாசகர்கள் அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் நாட்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் கிளை இருந்தால் அதில் இணையுங்கள் அல்லது கிளை இல்லாத இடத்தில் ஒன்றைக் கட்டியெழுப்ப முன்முயற்சி எடுங்கள் என்ற முடிவை இன்றே எடுங்கள்.

Loading