மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பென்சில்வேனியாவின் மகுஞ்சியில் (Macungie) உள்ள மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) ஆலையின் 38 வயதான தொழிலாளி வில் லெஹ்மன் (Will Lehman), 2026 தேர்தல்களில் ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதாக 12 பிப்ரவரி 2026 அன்று அறிவித்துள்ளார்.
தனது பிரச்சார அறிவிப்பின் போது, WillforUAWPresident.org என்ற இணையதளத்தை தான் தொடங்கியுள்ளதாக லெஹ்மன் அறிவித்தார். ஜூன் 15-18 தேதிகளில் நடைபெறவுள்ள UAW அரசியலமைப்பு மாநாட்டிற்குப் பிரதிநிதிகளாகப் போட்டியிடுவது உட்பட, பல்வேறு வழிகளில் தொழிலாளர்கள் தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேசிய தலைமைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இந்த மாநாடே முறைப்படி முன்மொழியும்.

லெஹ்மன் தனது பிரச்சாரத்தின் நான்கு முக்கிய கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டினார்:
முதலாவதாக, “தொழிற்சங்கத்தின் மீதான சொலிடாரிட்டி ஹவுஸ் (Solidarity House) அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணி தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளை UAW-விலிருந்து வெளியேற்றுவது, சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பது, மற்றும் நிறுவன-சார்பு தொழிற்சங்க எந்திரத்திடமிருந்து அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் உரிமையை தொழிற்சாலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்றுவதாகும்.
இரண்டாவதாக, நிறுவனங்களுடன் UAW கொண்டிருக்கும் கூட்டுறவை முடிவுக்குக் கொண்டுவருவது. லெஹ்மன் கூறுகையில், “நாற்பத்தைந்து ஆண்டுகால நிறுவன-ஆதரவு கொள்கைகளுக்குப் பதிலாக வர்க்கப் போராட்ட மூலோபாயம் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார். கடந்த கால சலுகைகள் மற்றும் பணவீக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடுசெய்யும் ஊதியங்கள், பூஜ்ஜிய பணிநீக்கக் கொள்கை, மற்றும் ஊதிய இழப்பின்றி வாரத்திற்கு 30 மணிநேர வேலை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கைகளை அவரது வேலைத்திட்டம் முன்வைக்கிறது.
மூன்றாவதாக, UAW அதிகாரத்துவத்தின் பேரினவாதம் மற்றும் தேசியவாதத்தை நிராகரிக்க லெஹ்மன் அழைப்பு விடுத்துள்ளார். “வர்த்தகப் போரினால் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் இல்லை; இது சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மூலம் ஈட்டப்படும் லாபத்தில் பெரும் பங்கைப் பெறுவதற்கும் முதலாளிகளுக்கு இடையே நடக்கும் போராட்டமே ஆகும்,” என்று அவர் அறிவித்தார். “நமக்குத் தேவையானது பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச மூலோபாயம் ஆகும்.”
நான்காவதாக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போரை எதிர்ப்பதற்கும் தொழிற்சங்க உறுப்பினர்களின் தொழில்துறை சக்தியை அணிதிரட்டுமாறு லெஹ்மன் அழைப்பு விடுத்துள்ளார்.
லெஹ்மன் இதற்கு முன்னதாக 2022 இல் UAW தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தொழிற்சங்க எந்திரத்தின் பாரிய அளவிலான வாக்காளர் ஒடுக்குமுறை காரணமாக வெறும் 9 சதவீதம் என்ற வரலாற்று ரீதியிலான மிகக் குறைந்த வாக்குப்பதிவு நடந்த போதிலும், அவர் கிட்டத்தட்ட 5,000 வாக்குகளை - அதாவது பதிவான வாக்குகளில் சுமார் 5 சதவீதத்தை - பெற்றார்.
வாகனத் துறையில் நிலவும் ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் லெஹ்மனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் 21,000 க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்களின் வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் டெட்ராய்ட்டின் ஃபேக்டரி சீரோவை (Factory Zero) ஒற்றை ஷிப்டாகக் குறைத்து, 1,140 வேலைகளை நீக்கியது. ஃபோர்டு (Ford) அதன் டியர்பார்ன் வசதிகள் மற்றும் கென்டக்கி பேட்டரி ஆலைகளில் பணிநீக்கங்களை நீட்டித்துள்ளது, மேலும் மிச்சிகன், ஓஹியோ மற்றும் பிற மாநிலங்களில் 2,500 க்கும் மேற்பட்ட ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல, ஏனென்றால் இவை சாதாரண காலங்கள் அல்ல,” என்று லெஹ்மன் கூறினார். “நாடு முழுவதும், UAW மற்றும் ஒட்டுமொத்தத் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்கள் தானியங்கிமயமாக்கல் (automation), வேலைவேக அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளால் உந்தப்பட்ட பாரிய பணிநீக்க அலைக்கு முகம் கொடுக்கின்றனர்.”
அமெரிக்கா முழுவதும் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்திற்கு மத்தியில் லெஹ்மனின் பிரச்சாரம் தொடங்கப்படுகிறது; இந்த இயக்கம் பெருகிய முறையில் தொழிற்சங்க எந்திரத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவினர் தசாப்த காலங்களாக வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்தத் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கவும் தனிமைப்படுத்தவும் செயல்படுவதை அவர்கள் காண்கிறார்கள்.
அதே நேரத்தில், தொழிலாள வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை எதிர்கொள்கிறது. லெஹ்மன் தனது பிரச்சார வீடியோவில் இதைச் சுட்டிக்காட்டுகையில்: “குடியேற்ற அமலாக்கப்பிரிவு (ICE) முகவர்கள் கொலை செய்யும் உரிமத்துடன் நமது நகரங்களில் சுற்றித் திரிகின்றனர். மினியாபோலிஸில், மூன்று குழந்தைகளின் தாயான ரெனீ குட் மற்றும் தொழிற்சங்க சகோதரர் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் பிற பில்லியனர்களின் முகவராக இருக்கும் ட்ரம்ப், ஹிட்லரின் மூன்றாம் பேரரசின் (Third Reich) ஓர் அமெரிக்கப் பதிப்பை உருவாக்கத் தீர்மானமாக இருக்கிறார்.”
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் வெடித்துள்ள சமூக எதிர்ப்பு — நாடுகடத்தலுக்கு எதிரான பாரிய போராட்டங்கள் முதல் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வளர்ந்து வரும் எதிர்ப்பு வரை — தொழிலாள வர்க்கத்தின் அபரிமிதமான ஆற்றலை நிரூபித்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் “ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு எதிராகச் செயல்படும் ஒரு தொழிற்சங்க எந்திரத்தால் கை கால்கள் கட்டப்பட்டிருக்கும் வரை” இந்த அதிகாரத்தை உணர முடியாது என்று லெஹ்மன் கூறினார். “தற்போதுள்ள நிலையில், UAW என்பது பெயரளவில் மட்டுமே ஒரு தொழிற்சங்கமாகும். இது நம்மைத் தனிமைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் மட்டுமே செயல்படுகிறது.”
தனது பிரச்சாரத் தொடக்க வீடியோவில், UAW அமைப்பு 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளதாகவும், அதில் கிட்டத்தட்ட 800 மில்லியன் டாலர் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் லெஹ்மன் சுட்டிக்காட்டுகிறார். இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 1,000 பேர் பணியாற்றுகின்றனர்; அவர்களில் கிட்டத்தட்ட 470 பேர் ஆண்டுக்கு 100,000 டாலருக்கும் அதிகமான ஊதியத்தைப் பெறுகின்றனர். UAW தலைவர் ஷான் ஃபைனுக்கு 270,000 டாலர் ஊதியமாக வழங்கப்படுகிறது; செயலாளர்-பொருளாளர் மார்கரெட் மாக் 247,000 டாலர் ஈட்டுகிறார்; மூன்று துணைத் தலைவர்கள் தலா சராசரியாக 235,000 டாலரும், ஒன்பது பிராந்திய இயக்குநர்கள் தலா சராசரியாக 220,000 டாலரும் பெறுகின்றனர்.
இந்த அதிகாரிகள் அமெரிக்காவின் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 5 சதவீதத்திற்குள் அடங்குவர்,” என்று லெஹ்மன் கூறுகிறார். “நாங்கள் எதிர்கொள்ளும் அதே பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இவர்கள் ஆளாவதில்லை.
எனது பிரச்சாரம் என்பது “சொலிடாரிட்டி ஹவுஸில் எனக்கென ஒரு சொகுசான அலுவலகத்தைப் பெறுவது பற்றியது அல்ல—நான் அங்கு செல்லப் போவதில்லை. நான் தொழிற்சாலைத் தளத்திலேயே இருப்பேன். இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் ஒரு அதிகாரியை மாற்றி இன்னொரு அதிகாரியைக் கொண்டுவருவது அல்ல, மாறாக அதிகாரத்துவத்தை ஒழித்து அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களிடம் ஒப்படைப்பதே ஆகும்” என்றும் லெஹ்மன் மேலும் கூறினார்.
70 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் UAW தலைமைத்துவத்திற்காக நடந்த முதல் நேரடித் தேர்தலான 2022 தேர்தலில், அதிகாரத்துவம் மிகப்பெருமளவில் வாக்காளர் ஒடுக்குமுறையில் ஈடுபட்டது. தகுதியுள்ள 1.1 மில்லியன் வாக்காளர்களில், வெறும் 104,776 பேர் மட்டுமே வாக்களித்தனர்; இது அமெரிக்க வரலாற்றிலேயே எந்தவொரு தேசிய தொழிற்சங்கத் தேர்தலிலும் பதிவான மிகக்குறைந்த வாக்குப்பதிவாகும்.
லெஹ்மன் பல சட்ட ரீதியான சவால்களை முன்வைத்தார். ஜூன் 2024 இல், கூட்டாட்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி டேவிட் லாசன் லெஹ்மனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்; லெஹ்மனின் புகார்களை நிராகரிப்பதில் பைடன் நிர்வாகத்தின் தொழிலாளர் துறை “தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும்” செயல்பட்டதாக அவர் கண்டறிந்தார். ப்ளூம்பெர்க் லா (Bloomberg Law) இந்தத் தீர்ப்பை தொழிலாளர் துறைக்குக் கிடைத்த “அரிய கண்டனம்” என்று விவரித்தது. இந்த வெற்றி கிடைத்தும் கூட, பைடன் மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்கள் இரண்டும் இந்தச் சட்டவிரோத வாக்கெடுப்புக்கு அங்கீகாரம் அளித்தன.
ஃபைன் நிர்வாகம் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள சூழலிலேயே லெஹ்மனின் இந்தப் பிரச்சார அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட UAW கண்காணிப்பாளர் நீல் பரோஃப்ஸ்கி , “அமைப்பின் உயர்மட்ட அடுக்குகளில் பிளவு மற்றும் பழிவாங்கும் நச்சு கலாச்சாரம்” நிலவுவதை ஆவணப்படுத்தியுள்ளார். ஃபைன் தனது உள்வட்டத்தைச் சவால் செய்பவர்களின் “தொண்டையை அறுத்துவிடுவேன்” என்று மிரட்டியதாகவும், கண்காணிப்பாளரின் விசாரணையைத் தடுத்ததாகவும் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.
“சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்தே ஷான் ஃபைன் அதிகாரத்திற்கு வந்தார்,” என்று லெஹ்மன் கூறுகிறார். “ஆனால் நமக்குக் கிடைத்தது என்ன? பணிநீக்கங்கள். விட்டுக் கொடுப்புகள். பெரும்பாலான தொழிலாளர்களைப் பணியில் தொடரச் செய்த அந்தப் பெயரளவிலான ஒருங்கிணைந்த வேலைநிறுத்தம். இப்போது, மேலும் பல ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. உண்மை என்னவென்றால், இந்த அதிகாரத்துவத்தைச் சீர்திருத்த முடியாது. இது ஒழிக்கப்பட வேண்டும்.”
தனது அறிமுக வீடியோவின் முடிவில் லெஹ்மன் இவ்வாறு கூறுகிறார்: “நான் ஒரு சோசலிசவாதியாகவும் சர்வதேசவாதியாகவும் போட்டியிடுகிறேன். சோசலிசம் என்பது நமது உழைப்பைச் சுரண்டி லாபம் ஈட்டும் பில்லியனர்களால் அல்லாமல், தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் ஒரு சமூகத்தைக் குறிக்கிறது. இனம், தேசியம் அல்லது இனக்குழுக்களின் அடிப்படையில் நம்மைப் பிரிக்க முற்படும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் நிராகரிக்க வேண்டும்; மேலும், ஒரு பொதுவான போராட்டத்திற்காக எல்லைகளைத் தாண்டி தொழிலாளர்களை ஒன்றிணைக்கப் போராட வேண்டும்.”
தனது உரையின் முடிவில், UAW உறுப்பினர்கள் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று லெஹ்மன் அழைப்பு விடுக்கிறார். குறிப்பாக, “UAW அரசியலமைப்பு மாநாட்டிற்கான பிரதிநிதிகள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய, உங்கள் உள்ளூர் கிளை ஒரு பகிரங்கமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துங்கள்,” என்று அவர் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், “எனது வேட்புமனு உறுதி செய்யப்படுவதை உறுதிப்படுத்த, உங்கள் உள்ளூர் கிளையிலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள் அல்லது நீங்களே ஒரு பிரதிநிதியாக மாறுங்கள்,” என்றும் அவர் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
அமெரிக்கப் புரட்சியின் 250-வது ஆண்டு விழாவை நினைவு கூர்ந்து, லெஹ்மன் தனது உரையை இவ்வாறு நிறைவு செய்தார்: “மகா மேதை ரொம் பெயின் எழுதியது போல, ‘இவை மனிதர்களின் ஆன்மாக்களைச் சோதிக்கும் காலங்கள்.’ நமது புரட்சிகரமான இலட்சியங்களுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.”
UAW தலைவர் பதவிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, WillforUAWPresident.org என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
