மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கியூபாவை பட்டினி போடும் அமெரிக்காவின் இனப்படுகொலை ரீதியிலான எரிபொருள் முற்றுகை குறித்து, தனது அரசாங்கம் ட்ரம் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதை கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் (Miguel Díaz‑Canel) முதன்முறையாக பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்திலிருந்து பேசிய டயஸ்-கனெல், இந்தக் கலந்துரையாடல்கள் “இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்டவை” என்று கூறினார், மேலும் அவை “சமத்துவம், இரு நாடுகளின் அரசியல் அமைப்புகளுக்கான மரியாதை, இறையாண்மை மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில்” நடத்தப்படுவதாகக் கூறினார்.
“மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்குள் எந்த எரிபொருள் கப்பலும் வரவில்லை” என்று அவரே ஒப்புக்கொள்ளும் நிலையில், சமமான நிலையில் பேச்சுவார்த்தை என்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் மேலும் கூறுகையில்: “எங்கள் மக்கள் அனைவரது வாழ்க்கையிலும் அளவிட முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மிக மோசமான சூழ்நிலையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றார்.
ஒரு சாத்தியமான ஒப்பந்தம் குறித்து அவரும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ஹவானாவுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாரக்கணக்கில் அளித்து வந்த குறிப்புகளையும் பெருமைப் பேச்சுகளையும் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
வாஷிங்டனின் தண்டனைக்குரிய வணிகத் தடையால் தீவில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி மற்றும் சமூக நெருக்கடியானது, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றதன் மூலம் ஒரு முக்கிய எண்ணெய் விநியோகப் பாதை துண்டிக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து மூன்றாம் நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகிப்பவர்களுக்கு வரி விதிப்பதற்கான அச்சுறுத்தலாலும் வியத்தகு முறையில் தீவிரமடைந்தது.
இந்த “மிகவும் பதட்டமான” காலத்தில், “பேச்சுவார்த்தைக்கு” ஒரு ஜன்னல் திறக்கப்பட்டுள்ளதாக டயஸ்-கனெல் ஒப்புக்கொண்டார். உண்மையில், இதன் பொருள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் கியூபா சரணடைவதற்கான நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் என்பதாகும்.
இந்தச் செயல்முறையை “மிகவும் உணர்திறன் வாய்ந்தது” என்று விவரித்த டயஸ்-கனெல், மூன்று முக்கிய அச்சுகளை கோடிட்டுக் காட்டினார்: தீர்வுகாண வேண்டிய இருதரப்பு சிக்கல்களை அடையாளம் காண்பது; “இரு நாடுகளின் நலனுக்காக” உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இரு தரப்பினரின் விருப்பத்தை தீர்மானிப்பது; மற்றும் “அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும்” மற்றும் “பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்த” ஒத்துழைப்புக்கான துறைகளை அடையாளம் காண்பது.
இந்த வேண்டுமென்றே பயன்படுத்தப்படும் தெளிவற்ற மொழியானது, ஒரு அடிப்படை உண்மையை மறைக்கிறது: வாஷிங்டன் கியூபாவின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தத் தீவை அமெரிக்காவின் ஒரு அரை-பாதுகாப்பு பகுதியாகவும், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கான ஒரு முன்னணி செயல்பாட்டுத் தளமாகவும் மாற்ற விரும்புகிறது. இதற்காக, ஆழமான பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்புச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக ஒரு சிறிய நிவாரணத்தை மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது.
வத்திக்கான் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து 51 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற ஹவானாவின் வியாழக்கிழமை அறிவிப்பானது வாஷிங்டன் நோக்கிய உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஒரு “சைகை” ஆகும். இது இது பேச்சுவார்த்தைகளில் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், அதைவிட முக்கியமானது, அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையின் (FBI) முகவர்கள் வருவதை ஆட்சி எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக டயஸ்-கனெல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பாகும். “எமது உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து விளக்கங்கள் மற்றும் விசாரணைகளில் பங்கேற்பதற்காக FBI நிபுணர்களின் சாத்தியமான வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
குறிப்பிட்ட அந்த விசாரணையானது, பிப்ரவரி 25 அன்று நடந்த ஆயுதமேந்திய அதிவேகப் படகு ஊடுருவல் பற்றியதாகும். கியூபாவால் பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 10 கியூபா-அமெரிக்கர்கள், வட கடற்கரையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவில் எல்லைக் காவலர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் ஐந்து தாக்குதலாளர்கள் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டனர்.
இதனை “அமெரிக்கப் பிரதேசத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட ஓர் ஆயுத ஊடுருவல்” என்று டயஸ்-கனெல் அவர்களே விவரித்தார், ஆனால் இது குறித்து ஹவானா உடனடியாக வாஷிங்டனுக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதற்கு வாஷிங்டன் ராஜதந்திர வழிகள் மூலம் மிகுந்த “ஆர்வத்துடன்” பதிலளித்ததாகவும் அவர் கூறினார். கியூபாவின் இந்த ஒத்துழைப்பை ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சமரசமற்ற எதிர்ப்பாளர் என்ற கியூப அரசாங்கத்தின் பல பத்தாண்டு காலக் கூற்றுகளை ஒரு மோசடி என அம்பலப்படுத்தும் ஒரு அசாதாரண அரசியல் சரணாகதிச் செயலாக இது அமைகிறது. 1960-களின் முற்பகுதியிலிருந்தே, 1976-ல் கியூபானா விமானம் மீதான குண்டுவெடிப்பு மற்றும் லூயிஸ் போசாடா கார்ரில்ஸுடன் தொடர்புடைய 1997 ஹோட்டல் குண்டுவெடிப்புகள் உட்பட, புளோரிடாவிலிருந்து CIA தொடர்புடைய நாடு கடத்தப்பட்ட அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளைக் கியூப அதிகாரிகள் கண்டித்து வந்துள்ளனர்.
இருப்பினும், அந்த ஹோட்டல் குண்டுவெடிப்புகள் தொடர்பாக 2000-களின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத்திற்குப் பிறகு, அந்தத் தீவிற்கு (கியூபா) FBI மேற்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட கடைசி வருகையிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது, அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஒரு எரிபொருள் முற்றுகை நிலவும் சூழலில், அதே முகமை இப்போது பாதுகாப்பில் ஒரு “பங்காளியாக” மீண்டும் வரவேற்கப்படுகிறது.
வாஷிங்டன் எதனை எதிர்பார்க்கிறது என்பது இப்போது தெளிவாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, USA Today நாளிதழ் அமெரிக்க அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், அதிபர் ட்ரம்ப் கியூபாவுடன் ஒரு பொருளாதார ஒப்பந்தத்தைச் செய்யத் தயாராகி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், “அதிபர் மிகுவெல் டயஸ்-கனெல் அதிகாரத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான வழி, காஸ்ட்ரோ குடும்பத்தினர் கியூபாவிலேயே தொடர்ந்து தங்கியிருப்பது மற்றும் துறைமுகங்கள், எரிசக்தி, சுற்றுலா தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் ஆகியவை குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன” எனத் தெரியவருகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனது மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காகக் கியூப முதலாளித்துவத்தை எவ்வாறு சிறப்பாக மறுசீரமைப்பது என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கம் ஆராய்ந்து வருகிறது: அதாவது, கியூபாவின் தற்போதைய ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியை உள்ளூர் மேலாளர்களாகத் தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் அந்தத் தீவின் துறைமுகங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறையை அமெரிக்க நிறுவனங்களிடம் ஒப்படைப்பதே இதன் நோக்கமாகும். இந்தப் பேரம் பேச்சில், அந்தத் தீவில் உள்ள ரஷ்ய, சீன மற்றும் ஐரோப்பிய செல்வாக்கை வேரோடு ஒழிப்பதே இலக்காகும்.
கியூப அரசாங்கம் சமீபத்தில், தனியார் துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் தனது சமீபத்திய மற்றும் மிகவும் விரிவான வணிக-ஆதரவு “சீர்திருத்தங்களை” நிறைவேற்றியது.
ட்ரம்ப் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், டயஸ்-கனெல்லின் செய்தியாளர் சந்திப்பு குறித்த ஒரு கட்டுரையைத் தனது சமூக ஊடகத் தளத்தில் மறுபதிவு செய்ததன் மூலம் அதனை வரவேற்றார்.
மார்ச் 7, சனிக்கிழமையன்று மியாமியில் நடைபெற்ற “அமெரிக்காக்களின் கேடயம்” (Shield of the Americas) உச்சிமாநாட்டில்—அர்ஜென்டினாவின் ஜேவியர் மிலெய் மற்றும் ஈக்வடாரின் டேனியல் நோபோவா போன்ற தீவிர வலதுசாரித் தலைவர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில்—ட்ரம்ப் பின்வருமாறு அறிவித்தார்: “கியூபா இது வரை இருந்ததைப் போன்ற அதன் வாழ்வின் இறுதித் தருணங்களில் உள்ளது. அது ஒரு சிறந்த புதிய வாழ்க்கையைப் பெறும், ஆனால் தற்போது இருக்கும் நிலையில் அது தனது கடைசித் தருணங்களை எண்ணிக்கொண்டிருக்கிறது,” என்றும் ரூபியோ இந்த ஒப்பந்தத்தை எளிதில் முடித்துவிடுவார் என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.
கியூபா மீதான ட்ரம்பின் கண்டனங்களில் உள்ள நயவஞ்சகம் மலைக்க வைக்கிறது. ஹவானாவிற்கு எதிராக முழக்கமிடும் அதே நிர்வாகம், உலகம் முழுவதும் மரணத்தையும் குழப்பத்தையும் மழையாகப் பொழிகிறது; ஈரானை அழிப்பதில் தொடங்கி, வெனிசுலா மற்றும் கரீபியன் மீனவர்கள் மீதான குண்டுவீச்சு வரை இது நீள்கிறது. மேலும், அமெரிக்க நகரங்களிலேயே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவமயமாக்கப்பட்ட போலீசாரையும் படைகளையும் குவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, எவ்வித தண்டனையுமின்றி அவர்களைக் கொல்வதையும் இந்த நிர்வாகம் செய்கிறது.
ட்ரம்ப் தனது இலக்குகளின் கொள்ளையடிக்கும் தன்மையைப் பற்றி வெளிப்படையாகவே இருக்கிறார். முன்னதாக கியூபாவை ஒரு “நட்புரீதியான முறையில் கையகப்படுத்த” போவதாக உறுதியளித்த அவர், சமீபத்தில் பின்வருமாறு கூறினார்: “அது ஒரு நட்புரீதியான கையகப்படுத்தலாக இருக்கலாம்; அல்லது இல்லாமலும் போகலாம். அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால்... அவர்கள், சொல்வது போல், எரிபொருள் தீர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.”
இருப்பினும், தனது கவனம் இப்போதைக்கு ஈரான் மீது இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்: “எங்கள் கவனம் தற்போது ஈரான் மீது உள்ளது, நாங்கள் அதைச் செய்வோம். மார்கோ, நீ ஒரு இரண்டு நாட்கள் ஓய்வு எடுப்பாயா? அல்லது ஒரு மணிநேரம் போதும். அவர் ஒரு மணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு, கியூபா தொடர்பான ஒப்பந்தத்தை முடித்துவிடுவார்” என்று கூறினார். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஒரு விரிந்த போரில், அந்தத் தீவு (கியூபா) ஒரு சதுரங்கப் பலகையின் காயாகத் பகிரங்கமாக நடத்தப்படுகிறது.
இந்தக் கொள்கை குடியரசுக் கட்சியினருடன் மட்டும் நின்றுவிடவில்லை. “இறையாண்மைக்கான” சடங்கு ரீதியான அழைப்புகளுக்கு அப்பால், கியூபாவை பட்டினி போட்டுப் பணிய வைப்பதன் மூலம் அங்கு முதலாளித்துவ “நவீனமயமாக்கலை” ஏற்றுக்கொள்வதற்கு அழுத்தம் கொடுப்பதில் வாஷிங்டனில் இரு கட்சிகளிடையே (குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள்) உடன்பாடு உள்ளது. ஜனநாயகக் கட்சியின் “முற்போக்கு” பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா, X தளத்தில் இதனை ஆதரித்து எழுதியுள்ளார்: “ஒரு ஒப்பந்தம் அமெரிக்க மற்றும் கியூப தொழில்முனைவோரை கியூபாவில் முதலீடு செய்ய அனுமதிக்கும், மேலும் இது கியூபா பொருளாதார ரீதியாக மீண்டு வரவும் நவீனமடையவும் உதவும்.”
எளிமையான மொழியில் சொன்னால், கியூபாவை அமெரிக்க மற்றும் புலம்பெயர்ந்த முதலாளிகளின் விளையாட்டு மைதானமாக மீட்டெடுப்பதே இதன் பொருளாகும், அதே நேரத்தில் கியூபத் தொழிலாளர்களும் இளைஞர்களும் கடும் வறுமை, பாதுகாப்பற்ற வேலை மற்றும் துண்டிக்கப்பட்ட சமூகச் சேவைகளை மட்டுமே எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
உள்நாட்டில் அதிருப்தி அதிகரித்து வரும் சூழலில், பேச்சுவார்த்தைக்கு டயஸ்-கனெல் ஒப்புக்கொண்டுள்ளார். கியூபாவை குறிவைத்து ட்ரம்ப் “தேசிய அவசரநிலை”யை அறிவித்து நாற்பத்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. கடந்த வாரத்தில், ஹவானாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையேயும், பல தொழிலாள வர்க்கப் பகுதிகளிலும் மின்தடை மற்றும் இடைநிறுத்தப்பட்ட வகுப்புகள், மருந்துகள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றிற்காகவும் ஏறத்தாழ தினசரி போராட்டங்கள் வெடித்துள்ளன.
கியூபாவில் உள்ள ஒரு இளம் தொழிலாளி சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்:
ஊடகங்கள் சித்தரிப்பது போல போராட்டங்கள் அவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலோ அல்லது பிரம்மாண்டமான அளவிலோ இல்லை; அவை பெரும்பாலும் தலைநகரிலேயே (ஹவானா) குவிந்துள்ளன (குறைந்தபட்சம் இப்போதைக்கு வேறெந்தப் பகுதியிலும் போராட்டங்கள் நடப்பதாக நான் கேள்விப்படவில்லை). அதேபோல், இந்தப் போராட்டக்காரர்கள் வலதுசாரி குழுக்களோ அல்லது யாரோ ஒருவரால் கையாளப்பட்டவர்களோ அல்ல. அத்தகைய சக்திகள் மிகக் குறைவாகவே இருந்தன என்றும், சமீபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் நான் நினைக்கிறேன்.
கல்வித்துறையில் நிலவும் ஒரு முக்கியமான நெருக்கடி நிலைக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, பல்கலைக்கழக மாணவர்கள் படிக்கட்டுகளில் அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தியது மட்டுமே ஒரே உறுதியான எதிர்ப்பாக இருந்தது. ஜூலை 11 அரசியல் கைதிகளுக்குப் பிறகு, மக்கள் போராட்டம் நடத்த மிகவும் அஞ்சுகிறார்கள் என்பதால், அவர்களில் அதிகம் பேர் இல்லை. மீதமுள்ளவர்கள் மின்சாரம் இன்றி பல மணிநேரம் பசியுடனும், தண்ணீர் இன்றியும் கழித்தவர்கள்; அவர்களிடம் உள்ள சிறிதளவு உணவும் குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் கெட்டுப்போகிறது. இது உங்களால் கற்பனை செய்யக்கூடிய மிகவும் தன்னிச்சையான விஷயம். அவர்கள் இனிமேலும் இதைத் தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மக்கள்; காவல்துறை எப்போதும் அவர்களை விரைவாகக் கட்டுப்படுத்திவிடுகிறது.
இந்தச் சிறிய அளவிலான அணிதிரட்டல்களுக்கு, கியூப அரசாங்கம் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளைப் பெருமளவில் குவித்து, அச்சுறுத்தல் மூலம் பதிலளித்துள்ளது.
ஹவானா மற்றும் வாஷிங்டன் இடையேயான பேச்சுவார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, அமெரிக்கக் கடற்கரையிலிருந்து வெறும் 90 மைல் தொலைவில் உள்ள ஒரு தீவில், நிதி மூலதனத்தின் நலன்களுக்காக கியூப முதலாளித்துவத்தை மறுசீரமைக்கும் தங்கள் திட்டங்களை நிலைகுலையச் செய்யக்கூடிய ஒரு உண்மையான மக்கள் எழுச்சியை இரு தரப்பினரும் விரும்பவில்லை என்ற உண்மையைப் பிரதிபலிக்கிறது.
இந்த நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கை உறுதிப்படுத்துகின்றன: காஸ்ட்ரோயிச ஆட்சி என்பது ஒரு “ஊனமுற்ற தொழிலாளர் அரசு” அல்லது “சோசலிசத்தை” பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; மாறாக அது முதலாளித்துவ தேசியவாதத்தின் ஒரு தீவிர வடிவமாகும். மிகச்சிறிய சீர்திருத்தங்களைக்கூட ஏற்காத வாஷிங்டனின் விட்டுக் கொடுக்காத விரோதப் போக்கை எதிர்கொண்டபோது, அந்த ஆட்சி தொழில்துறையைத் தேசியமயமாக்கத் தள்ளப்பட்டது. அத்துடன், ஆதரவிற்காக மாஸ்கோவின் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தைச் சார்ந்திருந்ததோடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் “அமைதியான சகவாழ்வு” என்ற ஸ்டாலினிசக் கொள்கைக்கும் தன்னை முழுமையாக அடிபணியச் செய்துகொண்டது.
ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மறுசீரமைப்பும் சோவியத் யூனியனின் கலைப்பும் அந்தத் தீவின் முக்கிய பொருளாதார உயிர்நாடியைத் துண்டித்தன. இது வெனிசுலாவின் மலிவான எண்ணெய் விநியோகத்தால் ஓரளவு ஈடுசெய்யப்பட்டது; ஆனால், அதுவும் இப்போது துண்டிக்கப்பட்டுவிட்டதால், வாஷிங்டனின் நீண்டகால முற்றுகை பொருளாதார ரீதியாகக் கழுத்தை நெரிக்கும் நிலைக்கு இறுக்கியுள்ளது.
கியூபாவின் காஸ்ட்ரோயிசத் தலைமை, வெளிநாட்டு முதலாளித்துவ முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமரசத்தைத் தேடுவதன் மூலமும் தனது ஆட்சியைத் தக்கவைக்க முயன்று வருகிறது. இந்தக் கொள்கைகள், அரசின் பின்னால் தேசிய ஒற்றுமை என்ற பெயரில் சுயாதீனமான தொழிலாளர் வர்க்க அரசியல் நடவடிக்கைகளை ஒதுக்கி அடக்குவதோடும், அமெரிக்காவிலும் உலகளவிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு விடுக்கப்பட வேண்டிய எவ்விதப் புரட்சிகர அழைப்பையும் நிராகரிப்பதோடும் கைகோர்த்துச் சென்றுள்ளன.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கியூபாவைப் பாதுகாக்க வேண்டும்; ஆனால், இது ஹவானாவில் உள்ள முதலாளித்துவ தேசியவாத ஆட்சியின் கொள்கைகளுக்குக் கீழ் அடிபணிவது என்று பொருளல்ல. அமெரிக்க கண்டம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் நனவுப்பூர்வமாகத் தன்னை இணைத்துக்கொள்ளும் ஒன்றாகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாகவும், கியூபத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு புதிய புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில்தான் முன்னேற்றத்திற்கான உண்மையான வழி உள்ளது.
