முன்னோக்கு

கென்னடி மையத்தில் ட்ரம்ப்: அதிகாரத்தில் பாதாள உலகக் குற்றவாளிகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கென்னடி மையத்தில் —தனது சொந்த ஆணையின் மூலம், தனது பெயரிலேயே இந்த மையம் பெயர் மாற்றப்பட்டுள்ளது— ஒரு மணிநேரம் நீடித்த கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான போரைத் தொடங்கியதை நியாயப்படுத்தியதோடு, அதன் முடிவுகள் ஏற்கனவே ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும் அறிவித்தார். மேலும், அதிகரித்து வரும் ஒருவித மனநிலை பிறழ்ந்த நிலையில், அவரது உரையானது எவ்விதத் தொடர்புமற்ற கதைகள், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள், தனது அரசியல் கூட்டாளிகளின் மனைவிகளைப் பற்றிய அவதானிப்புகள், அந்தத் திரையரங்கின் ஒலியமைப்பு பற்றிய கருத்துக்கள் எனத் திசைமாறிச் சென்றது. இவற்றுக்கிடையே, 9.3 கோடி (93 million) மக்களைக் கொண்ட ஒரு தேசத்தையே அழிப்பேன் என்ற வீரவசனங்களும் இடையிடையே கலந்திருந்தன.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெற்ற ஜோன் எப். கென்னடி கலைக்கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். மார்ச் 16, 2026 திங்கட்கிழமை [AP Photo/Alex Brandon]

மார்ட்டின் ஸ்கோர்செஸி (Martin Scorsese) திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரத்தைப் போலவே ட்ரம்ப் உரையாற்றினார். அவரது பேச்சு நடை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை போன்றது: தலைவர்களைக் கொல்வது குறித்த சாதாரணமான உரையாடல், விசுவாசப் பரிசோதனைகள், கூட்டணிகள் குறித்த கொடுக்கல்-வாங்கல் பார்வை, மறைமுக மிரட்டல்கள், வன்முறைச் செயல்களுக்குப் பிறகு தற்பெருமை மற்றும் மற்றவர்களின் அவலங்களைப் பற்றிய மகிழ்ச்சியான அலட்சியம் ஆகியவை அதில் இருந்தன.

இந்த உரையை முதன்முறையாகக் பார்ப்பவர் எவராயினும், “இந்த நபர் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி தானா?” என்று கேட்கத் தூண்டப்படுவார். அமெரிக்க அரசியலின் உச்சத்துக்கே பாதாள உலகக் குற்றவாளிகள் உயர்ந்துவிட்டனர் என்பதே இதன் தவிர்க்க முடியாத முடிவாகும்.

ஈரான் மீது பொழியப்பட்ட அழிவுகளின் பட்டியலுடன் ட்ரம்ப் தனது உரையைத் தொடங்கினார். “எமது சக்திவாய்ந்த இராணுவ நடவடிக்கை,” என்று தொடங்கிய ட்ரம்ப், “கடந்த சில நாட்களாக முழு வீச்சில் தொடர்ந்தது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டனர். விமானப்படை ஒழிக்கப்பட்டுவிட்டது. கடற்படை ஒழிக்கப்பட்டுவிட்டது. பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அவை போர்க் கப்பல்கள், ஆனால் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். விமான எதிர்ப்புத் தளங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அவர்களின் ரேடார் மற்றும் தலைவர்கள் மறைந்துவிட்டனர். இதைத் தவிர, அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

இந்த அருவருப்பான கேலிப்பேச்சு, அவர் தொடுத்த போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கண்டு அவர் மகிழ்வதையே வெளிப்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், மேலும் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் கிட்டத்தட்ட ஆயிரம் லெபனானியர்கள் உயிரிழந்துள்ளனர். பதிமூன்று அமெரிக்க சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

வெறும் இரண்டு வார காலத்திற்குள் ஈரான் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக ட்ரம்ப் தற்பெருமை பேசினார். இராணுவ நிலைகளில் தொடங்கி வெடிமருந்துகள் மற்றும் மின்சார உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகையான அரசு கட்டிடங்கள் வரை இந்தத் தாக்குதல்கள் விரிவடைந்தன. 100 ஈரானிய கடற்படைக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதாக அவர் உரிமை கோரினார். மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு இராணுவ நிலையையும் அமெரிக்க ஏவுகணைகளும் குண்டுகளும் அழித்துவிட்டதாகக் கூறினார். “நாங்கள் குழாய்களை விட்டுவைத்துள்ளோம்,” என்று கூறிய ட்ரம்ப், ஆனால் எண்ணெய் குதங்களை “ஐந்து நிமிட அறிவிப்பில்” அழித்துவிட முடியும் என்றும், “அது முடிந்துவிடும்” என்றும் கூறினார்.

ஈரானின் தலைவர்களைக் கொல்வதன் மூலம் அந்த நாட்டை விரைவாக வீழ்த்தலாம் என்ற அமெரிக்காவின் திட்டம் வெளிப்படையாகத் தோல்வியடைந்த நிலையில், இந்தப் படாடோபம் அதிகரித்து வரும் விரக்தியையே மறைக்கிறது. ஈரானை இப்போது “ஒரு காகிதப் புலி” என்று அழைத்த அதே வேளையில், பாரசீக வளைகுடாவிலிருந்து எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த உதவுமாறு ஐரோப்பிய சக்திகள், ஜப்பான் மற்றும் சீனாவிடம் ட்ரம்ப் மீண்டும் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோத வரிகளை விதித்து உலக நாடுகளை மிரட்டி வந்த ட்ரம்ப், இப்போது தனது அவமதிப்புக்கு உள்ளான கூட்டாளிகள், குறிப்பாக ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற போட்டி ஏகாதிபத்திய சக்திகள், ஹோர்முஸ் நீரிணையை “மீண்டும் திறப்பதற்கு” அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கையில் இணைந்து கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை அனுப்பத் தயாராக இல்லை என்பதைக் காண்கிறார்.

அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடும் சாத்தியக்கூறு குறித்து ட்ரம்ப் முற்றிலும் அறியாமல் இருந்ததாக இப்போது பரவலாகப் புகாரளிக்கப்படுகிறது. இருப்பினும், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் தான் “முன்கூட்டியே கணித்ததாக” தனது செய்தியாளர் கூட்டத்தில் அவர் பெருமை பீற்றிக்கொண்டார்.

ஈரானுடனான போரில் இணைந்துகொள்ள பல அமெரிக்கக் கூட்டாளிகள் காட்டிய தயக்கத்தை அவர் விமர்சித்தபோது, அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து வந்த மிகக் குறிப்பிடத்தக்க கருத்து வெளிப்பட்டது. அத்தகைய ஒரு கூட்டாளியுடன் நடந்த ஒரு கற்பனை உரையாடலைக் குறிப்பிட்டு அவர் கூறியதாவது: “அதாவது 40 ஆண்டுகளாக நாங்கள் உங்களைப் பாதுகாத்து வருகிறோம், ஆனால் மிகச் சிறிய விஷயம் ஒன்றில் நீங்கள் ஈடுபட விரும்பவில்லையா? மிகக் குறைவான குண்டுகளே வீசப்படப் போகின்றன, ஏனென்றால் அவர்களிடம் சுடுவதற்கு அதிக குண்டுகள் மிச்சமில்லை, ஆனால் அவர்களோ நாங்கள் இதில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்று கூறினார்கள்.”

ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை என்பது, ஒரு குற்றவியல் கும்பலால் நடத்தப்படும் ஒரு கப்பம் வசூலிக்கும் குண்டர் பாணியாக உள்ளது. “மிகச் சிறிய” மோதல் என்று அவர் கூறுவது, அணுஆயுதப் போர் வெடிப்பதற்கு உலகை மற்றொரு மாபெரும் அடி நெருக்கத்தில் கொண்டு செல்கிறது. ஈரானிய கடற்கரையோரத்தில் உள்ள மலைப் பகுதிகளைத் தாக்கி, ஹோர்முஸ் நீரிணையை மீட்க, அமெரிக்க கடற்படையினர் முயலும் சூழல்களை பென்டகனில் உள்ள போர் திட்டமிடுபவர்கள் ஏற்கனவே உருவாக்கி வருகின்றனர். இது ஒரு முழு அளவிலான தரைவழிப் போர் உருவாக வழிவகுக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு வலையொலியில் பேசிய, நிர்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோ துறைகளின் “சக்கரவர்த்தியும்” தீவிர சியோனிஸ்டுமான கோடீஸ்வரர் டேவிட் சாக்ஸ், போர் தொடர்ந்தால் “இஸ்ரேல் முற்றிலுமாக அழிக்கப்படலாம் அல்லது அதன் பெரும் பகுதிகள் அழிக்கப்படலாம்” என்று கூறினார். மேலும், ஈரான் தொடர்ந்து எதிர்த்தால் நெதன்யாகு அரசாங்கம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

ஈரான் மீதான குற்றவியல் போரின் வன்முறையைக் கண்டு களிப்படைந்த பின்னர், ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மற்றும் சபாநாயகர் மைக் ஜோன்சன் உள்ளிட்ட மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த அரசியல் கூட்டாளிகளிடம் குறிக்கோளற்ற தனிப்பட்ட கருத்துக்களைப் பேசத் தொடங்கினார்.

ஒரு வயதான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணத்தின் விளிம்பிற்குச் சென்றது குறித்து அவர் ஒரு கோரமான விவரத்தை அளித்தார். பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் ஜோன்சனின் மூன்று வாக்குகள் வித்தியாசத்தைப் பாதுகாப்பதற்காக, நீல் டன்னை (குடியரசுக் கட்சி-புளோரிடா) சிகிச்சை பெற சம்மதிக்க வைத்த பெருமையை அவர் தனக்குத்தானே வழங்கிக்கொண்டார். “நான் அதை முதலில் அவருக்காகவும், இரண்டாவதாக வாக்குகளுக்காகவும் செய்தேன், ஆனால் அது ஒரு நூலிழை வித்தியாசத்தில் நடந்த இரண்டாவது விஷயம்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ட்ரம்ப், தனது அரைகுறையான சம்பவக் கதைகளின் ஊடாக, இந்த ஆட்சியின் சமூகக் கட்டமைப்பை வெளிப்படுத்திக் காட்டினார்: இது பில்லியனர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அரசியல் கையாட்களைக் கொண்ட ஒரு ஆளும் கும்பல். ஒரு கட்டத்தில், “ட்ரம்ப்-கென்னடி மையத்தின்” “பணக்கார வாரியத்தை” பாராட்டுவதற்காக அவர் பேச்சை நிறுத்தினார். மேலும் தனிப்பட்ட பெரும் செல்வந்தர்களைக் கொண்டாடப்பட வேண்டிய முன்மாதிரிகளாகத் தனித்துக் காட்டினார். “ஆக, இந்த விதிவிலக்கான திறமையான மற்றும் பணக்கார வாரியத்தின் தலைமையின் கீழ்,” என்று அவர் கூறினார். “இது ஒரு மிகப்பெரிய பணக்கார வாரியம்... உங்களில் பெரும்பாலானோர் பணத்தில் மிதக்கிறீர்கள். ஐக் பெர்ல்முட்டர் [இவரது மனைவி லாரா உண்மையில் வாரியத்தில் இருக்கிறார்] அள்ளித்தரும் அளவுக்கு ஏராளமான பணம் வைத்துள்ளார். ஐக் பெர்ல்முட்டரைப் பாருங்கள். அவர் டிஸ்னியின் மிகப்பெரிய உரிமையாளராக உருவெடுத்தார்.”

ட்ரம்ப்பின் அமெரிக்காவில் வெற்றிக்கான அடையாளமாக அவர் மற்றொரு தொழிலதிபரை முன்னிறுத்தினார்: “அந்தோணி மற்றொருவர். அவர் ஒரு லாரியுடன் தனது பயணத்தைத் தொடங்கினார்... இறுதியில் 4,000ம் லாரிகளுடன் நின்றார், தனது நிறுவனத்தை பல பில்லியன் டாலர்களுக்கு விற்றார். ... அவர் எனது கிளப்களில் ஒன்றில் உறுப்பினராக உள்ளார், அவரிடம் இருப்பதெல்லாம் வெறும் ரொக்கப் பணம் தான்.”

ஒரு கட்டத்தில், தனது பிறந்தநாள் அழைப்பின் பேரில் வெள்ளை மாளிகை வளாகத்தில் இறுதிவரை சண்டை பிடிக்கும் போட்டி (Ultimate Fighting Championship) நடைபெறும் என்று ட்ரம்ப் அறிவித்தார். UFC வீரர்கள் மேடை வளையத்திற்குள் (ring) வழக்கமாகக் காட்டும் அதேபோன்ற கொடூரமான முறையில் சிப்பாய்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, அந்த அமைப்பிற்கு பென்டகன் ஒரு ஒப்பந்தத்தையும் வழங்கியுள்ளது.

ட்ரம்ப்பை கடந்த காலத்தின் எந்த ஜனாதிபதியுடன் ஒப்பிட முடியும்? அவர் எந்தவொரு ஜனநாயக மரபுக்கும் அப்பாற்பட்டவராக நிற்கிறார். வெள்ளை மாளிகை கணிசமான எண்ணிக்கையிலான அழுகிப்போன தனிநபர்களின் இல்லமாக இருந்திருக்கிறது. ஆனால், ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவுசார் மற்றும் சீரழிந்த ஒழுக்கம் என்பது, ரிச்சர்ட் நிக்சனைக்கூட நேர்மையின் தூணாகத் தோன்றச் செய்கிறது.

ட்ரம்ப்பின் அருவருப்பான குணாதிசயங்கள் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் தட்டின் வரலாற்று ரீதியான சிதைவைச் சித்தரிக்கின்றன. தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை மற்றும் அது உருவாக்கிய தன்னலக்குழுவை வகைப்படுத்தும் அனைத்து அழுக்குகளும், ஊழல்களும் ட்ரம்ப்பின் ஆளுமையில் குவிந்துள்ளன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒவ்வொரு பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரியும் ஒரு டொனால்ட் ட்ரம்ப் அல்ல. ஆனால், ஒவ்வொரு பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரியிடமும் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு துகள் இருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் “வேகமாகச் செயல்படு, விஷயங்களை உடை” என்ற தாரக மந்திரம், ஈரான் போரின் மறைமுக தாரக மந்திரமான “நாடுகள் மீது குண்டு வீசு, மக்களைக் கொல்லு” என்பதில் ஒரு பரந்த அளவில் தனது குற்றவியல் வடிவத்தைக் கண்டடைகிறது.

ட்ரம்பின் ஆளுமைக்கும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் நலன்களுக்கும் இடையே ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. இல்லையெனில், இத்தகைய ஒரு நபர், பெரிய வணிகத்தின் இரு முக்கியக் கட்சிகளில் ஒன்றைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், அதுவும் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கப்படுவதும் எப்படிச் சாத்தியமாகியது?

அமெரிக்கா ஒரு மிகப்பெரிய போரை நடத்திக் கொண்டிருக்கிறது, ஆனால் அந்தப் போரை வழிநடத்தும் நபர் —மனதளவில், உணர்வுப்பூர்வமாக, மற்றும் தார்மீக ரீதியாக, அந்தப் போர்க்களத்தில் இல்லை. அவர் கார் விற்பனையகத் தலைவர்களின் காலைநேர உணவுக் கூட்டத்தில் இருக்கிறார். அவர் ஒரு கோல்ஃப் உல்லாச விடுதியின் பிரம்மாண்டமான திறப்பு விழாவில் இருக்கிறார். அவரது தற்பெருமை எந்தக் கணத்தில் அவரை எங்கே நிறுத்துகிறதோ அங்கே அவர் இருக்கிறார். இந்தப் போர் என்பது அவரது இடைவிடாத சுய-நடிப்புக்கான தற்போதைய ஒரு பின்னணி மட்டுமே.

பாரிய மரணங்களை ஒரு பொழுதுபோக்காகவும் சுய-புகழ்ச்சியாகவும் கருதும் ஒரு நபரால், ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்ற ஒரு அரசியல் ஒழுங்கை அமெரிக்க ஆளும் வர்க்கம் கட்டமைத்துள்ளது. இது ரோமானியர் காலத்து அரங்கில் ஆளை ஆள் கொல்லும் கிளாடியேட்டர் சண்டையைத் தலைமை தாங்கி நடத்தும் கலி்குலா (Caligula) என்ற மன்னனைப் போன்றது.

இந்த நெருக்கடிக்கான ஜனநாயகக் கட்சியின் எதிர்வினை, வழக்கம்போல, நடைமுறை ரீதியான புகார்கள் மற்றும் அரசியல் ரீதியான கையாலாகாத்தனம் ஆகியவற்றின் கலவையாகவே உள்ளது. கடந்த வார இறுதியில் செனட்டர் ஆடம் ஷிஃப் தொலைக்காட்சியில் தோன்றி, ட்ரம்ப் “அமெரிக்க மக்களிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார். இது ஹிட்லரின் ஆஸ்திரிய உச்சரிப்பு நடைமுறை ரீதியாகக் குறைபாடுடையது என்று கவனித்துக் கூறுவதற்குச் சமமான ஒரு அரசியல் கூற்றாகும்.

ட்ரம்பின் போருக்கோ அல்லது ஜனநாயக நெறிமுறைகளை அவர் சர்வாதிகாரப் போக்கில் சிதைப்பதற்கோ ஒரு தீவிரமான எதிர்ப்பைக் காட்ட ஜனநாயகக் கட்சியினரால் முடியாது. ஏனென்றால், இவை இரண்டையும் உருவாக்கிய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவக் கட்டமைப்புகளில் அவர்களும் ஆழமாகத் தொடர்பு கொண்டுள்ளனர். உண்மை என்னவென்றால், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பினது போரையும், அதன் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரலையும் ஆதரிக்கிறார்கள். அவர்கள் இராணுவ வரவுசெலவுத் திட்டங்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் பொருளாதாரத் தடைகளின் கட்டமைப்பை ஆதரித்தனர். ஒபாமா மற்றும் பைடென் காலத்திலும் அவர்கள் ஏகாதிபத்திய ஜனாதிபதி முறையைப் பேணி வளர்த்து விரிவுபடுத்தினர். அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணுவதில் அவர்கள் ட்ரம்பிடமிருந்து வேறுபடவில்லை. மாறாக, சிறந்த நாகரீகமான முறையிலும், மெருகூட்டப்பட்ட சொற்களஞ்சியத்தோடும் அதைச் செய்ய வேண்டும் என்ற முன்னுரிமையில் மட்டுமே அவர்கள் வேறுபடுகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பின் திவால்நிலை என்பது இந்த நெருக்கடியில் தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. அதுவே இந்த நெருக்கடியின் ஒரு அங்கமாகும். அமெரிக்காவின் இருகட்சி முறை எந்தவொரு உண்மையான மாற்றையும் வழங்காத காரணத்தினாலேயே ட்ரம்பின் இந்தக் குண்டர் ஆட்சி சாத்தியமாகிறது. தாங்கள் பார்ப்பவற்றைக் கண்டு திகைத்துப் போயிருக்கும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு, தங்கள் எதிர்ப்பைச் செயல்படுத்த எந்தவொரு அரசியல் கருவியும் இல்லை. மாறாக அவர்களுக்கு, குற்றக் கும்பல் தலைவனின் கட்சி அல்லது அந்தக் குற்றக் கும்பல் தலைவன் குறித்துக் கவலை தெரிவிக்கும் செய்திக்குறிப்புகளை மட்டுமே வெளியிடும், அதேவேளையில் அவரது போர்களுக்கு நிதியளிக்கும் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலேயே தேர்வுகள் உள்ளன.

ட்ரம்ப் என்பவர் முடிவுக்கு வந்துவிட்ட ஒரு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி. கேள்வி என்னவென்றால், தனது செல்வம் மற்றும் சலுகைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கப் போராடும் இந்த வர்க்கம், ஒட்டுமொத்த உலகையும் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லுமா என்பதுதான்.

அமெரிக்காவினதும், உலகினதும் தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடி குறித்து இன்னும் தனது கருத்தைப் பதிவு செய்யவில்லை. தாங்கள் காண்பவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் கோடிக்கணக்கான மக்கள், முறையான ஆட்சிமுறை என்ற எந்தவொரு கருத்தாக்கத்தோடும் தற்போதைய நிகழ்வுகளைப் பொருத்திப் பார்க்க முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள், ஏதோ ஒன்று அடிப்படையாக உடைந்துவிட்டது என்பதை உணரும் கோடிக்கணக்கான மக்கள்—இன்னும் தங்கள் அரசியல் குரலையும், தங்களுக்கான அரசியல் அமைப்பையும் கண்டடையவில்லை.

ஆனால், இந்த நெருக்கடியே தொழிலாள வர்க்கத்தின் எதிர்வினைக்கான சூழலையும் உருவாக்கி வருகிறது. ஒரு குண்டர் கும்பல் தலைவனைப் போன்ற ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட, திறமையற்ற மற்றும் ஏமாற்றுத்தனமான ஒரு போலி எதிர்க்கட்சியால் சம்மதிக்கப்பட்ட, ஒரு வினோதமான சாதாரணமான சூழலில் நடத்தப்படுகிற இந்தப் போர், உலகப் பொருளாதாரத்தை நிலைதடுமாறச் செய்யும் அதே வேளையில், அதன் சூத்திரதாரி (ட்ரம்ப்) ஆயிரக்கணக்கானோரைக் கொல்வதைப் பற்றிப் பெருமை பேசுவதோடு, தனது நடன விருந்துபசார மாளிகையை புதுப்பிக்கும் திறமையைப் பற்றியும் ஒருசேரப் பெருமை பேசுகிறார்—இப்படியே இந்தச் சூழ்நிலை காலவரையின்றித் தொடரப் போவதில்லை.

ட்ரம்ப்பின் சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கான முதல் படி, இந்த அரசாங்கத்தைத் தோற்கடித்தே ஆக வேண்டிய மற்றும் தோற்கடிக்கக்கூடிய சமூக சக்தி தொழிலாளர் வர்க்கமே தவிர, முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தப் பிரிவும் அல்ல என்பதை அங்கீகரிப்பதாகும். முதலாளித்துவத்தின் இருகட்சி முறையிலிருந்து உடைத்துக் கொண்டு, ஒரு சோசலிச மற்றும் போருக்கு எதிரான வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலே இந்த நேரத்தின் அவசியமான கடமையாகும்.

Loading