மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்களன்று கியூபா தீவு முழுவதும் ஏற்பட்ட முழுமையான மின்சாரத் தடையைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கியூபாவைக் கைப்பற்றும் கௌரவம் எனக்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அது ஒரு பெரிய கௌரவம்” என்று தற்பெருமையுடன் பீற்றிக்கொண்டார்.
“நான் அதை விடுவிப்பதா அல்லது கைப்பற்றுவதா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை; அதைக் கொண்டு என்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். அவரது இந்த குண்டர் பாணியிலான பேச்சு, பெரிய தடி (big stick) இராஜதந்திரத்தின் சிற்பியான தியோடர் ரூஸ்வெல்ட்டையே கூட வெட்கப்பட வைக்கும் வகையில் இருந்தது.
ஜனவரி 29 அன்று, ட்ரம்ப் கியூபாவை ஒரு “தேசிய அவசரநிலை” என அறிவித்து, அந்தத் தீவு நாட்டின் மீது முழுமையான எரிசக்தித் தடையை விதித்த பிறகு, ஹவானா (கியூபா அரசு) வழங்கிய தொடர்ச்சியான பல விட்டுக்கொடுப்புகளுக்குப் பின்னரே இந்த ஆணவமான அறிவிப்புகள் வந்துள்ளன.
சில வாரங்களிலேயே கியூப அரசாங்கம் பின்வருவனவற்றைச் செய்துள்ளது: குறிப்பாக, தனியார் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகளை அனுமதிக்கும் பரந்த அளவிலான பொருளாதார “சீர்திருத்தங்களை” அறிவித்தல்; கியூப-அமெரிக்க பயங்கரவாதிகளின் ஆயுதமேந்திய ஊடுருவலை விசாரிக்க உதவுவதற்காக FBI “நிபுணர்களை” கியூபாவுக்கு அழைத்தல்; அமெரிக்க நிறுவனங்களையும், கியூபாவை விட்டு வெளியேறிய மியாமியில் உள்ள “குசானோ” முதலாளிகளையும் பகிரங்கமாகத் தன்வசப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிகள்; எரிபொருள் முற்றுகை மற்றும் “பாதுகாப்பு ஒத்துழைப்பு” குறித்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதை உறுதிப்படுத்துதல் ஆகியவைகளாகும்.
கியூபாவின் ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானெல், ட்ரம்பின் “கிட்டத்தட்ட தினசரி” மிரட்டல்களை கடந்த புதன்கிழமை அன்று கண்டித்ததுடன், “தளராத எதிர்ப்பை” வெளிப்படுத்துவதாக உறுதியளித்தார். ஆனால், அவரது நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சரணடைவதையே காட்டுகின்றன. துணைப் பிரதமர் ஆஸ்கார் பெரெஸ்-ஒலிவா NBC செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அமெரிக்க நிறுவனங்களுடனும், அமெரிக்காவில் வசிக்கும் கியூபர்களுடனும் மற்றும் அவர்களின் வாரிசுகளுடனும் ஒரு சுமூகமான வணிக உறவைக் கொண்டிருக்க கியூபா தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் கியூபாவை ஆக்கிரமிக்கவும், குண்டுவெடிப்புகள் மற்றும் கொலை முயற்சிகள் மூலம் நாட்டை மீண்டும் ஒரு அரை-காலனித்துவ நிலைக்குக் கொண்டு செல்லவும் முயன்ற அதே சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே பிடல் காஸ்ட்ரோ புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளுக்குத் தடை விதித்திருந்தார். இப்போது அந்தத் தடையை நீக்கியிருப்பது ஒரு வரலாற்று ரீதியான பின்வாங்கலாகும்.
ஆயினும், கியூப அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் வெள்ளை மாளிகையின் ஆட்சி மாற்றக் கோரிக்கைகளைத் தணிக்கவில்லை. செவ்வாயன்று, வெள்ளைமாளிகை ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பிற்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஹவானாவின் இந்த வணிக ஆதரவு நடவடிக்கைகளை போதுமானதாக இல்லை என்று நிராகரித்தார்: “அவர்களால் இதைச் சரிசெய்ய முடியாது. எனவே அவர்கள் வியத்தகு முறையில் மாற வேண்டும். நேற்று அவர்கள் அறிவித்தது போதுமானதாக இல்லை. அது எதையும் சரிசெய்யப் போவதில்லை” என்று குறிப்பிட்டார்.
தியாஸ்-கானெல் பதவி விலகுவதற்கான வழிமுறைகள், காஸ்ட்ரோ குடும்பத்தினர் தொடர்ந்து தீவில் வசிப்பது, மற்றும் “துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் சுற்றுலா” தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து ட்ரம்பின் குழு கலந்துரையாடி வருவதாக USA Today செய்தி வெளியிட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு பேச்சுவார்த்தை மூலம் நடத்தப்படும் மறு-காலனியாதிக்கத் திட்டம் ஆகும்.
கியூபா மீதான அமெரிக்காவின் இந்த முற்றுகையானது, மன்றோ கோட்பாட்டிற்கு (Monroe Doctrine) ட்ரம்ப் சேர்த்துள்ள “ட்ரம்ப் பின்விளைவு” என்பதன் கீழ் முன்னெடுக்கப்படும் ஒரு பரந்த ஏகாதிபத்தியத் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இது, மேற்கு அரைக்கோளத்தில் (அமெரிக்க கண்டம்) உள்ள ஒவ்வொரு நாட்டின் விதியையும் நேரடியாகத் தீர்மானிக்கவும், அவர்களின் அனைத்து வளங்களையும் கைப்பற்றவும் வாஷிங்டனுக்கு உரிமை உண்டு என்று கூறுகிறது.
இது அமெரிக்கப் பொதுமக்களிடம் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதில் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு இரு கட்சிகளும் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி) மற்றும் பெருநிறுவன ஊடகங்களும் ஆதரவளிக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் “முற்போக்கு” பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் காங்கிரஸ் உறுப்பினர் ரோ கண்ணா, எக்ஸ் தளத்தில் இதற்கு ஆதரவாக எழுதியுள்ளார்: “ஒரு ஒப்பந்தமானது அமெரிக்க மற்றும் கியூப தொழில் முனைவோரை கியூபாவில் முதலீடு செய்ய அனுமதிக்கும், மேலும் கியூபா பொருளாதார ரீதியாக மீட்சியடையவும் நவீனமடையவும் உதவும்.”
இந்த மாத தொடக்கத்தில் மியாமியில் நடைபெற்ற அமெரிக்காவின் கேடயம் என்ற பேரிலான உச்சிமாநாட்டில், ஆர்ஜென்டினா, ஈக்வடார், பராகுவே, சிலி மற்றும் மேற்கு அரைக்கோளத்தின் பிற நாடுகளைச் சேர்ந்த தீவிர வலதுசாரி ஆட்சிகளையும் கூட்டாளிகளையும் ட்ரம்ப் ஒன்றிணைத்தார். இராணுவமயமாக்கல், பாரிய ஒடுக்குமுறை மற்றும் வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகத் திட்டங்கள் மீதான ஒரு பாரிய தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பொதுவான திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அங்கு கூடியிருந்த பாசிச பிராந்திய தலைவர்களின் கைதட்டல்களுக்கு இடையே ட்ரம்ப் கூறுகையில், “கியூபா தனது வாழ்வின் கடைசி தருணங்களில் உள்ளது” என்றார்.
“போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு” எதிராகப் போராடுவதாகக் கூறி, அமெரிக்கா “முழுமையான அழித்தொழிப்பு நடவடிக்கை” என்பதன் கீழ் ஈக்வடாரில் படைகளை நிலைநிறுத்தி வருவதோடு, அங்கு FBI மற்றும் இராணுவ அலுவலகங்களையும் திறந்து வருகிறது. இந்த கூட்டுத் தாக்குதலில், விவசாயிகளின் வீடுகள் எரிக்கப்படுவதையும், கிராமப்புறங்களில் குண்டுவீச்சு நடத்தப்படுவதையும், தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்படுவதையும் நாம் காண்பது மட்டுமல்லாமல், ஈக்வடாரிலிருந்து ஏவப்பட்ட வான்வழித் தாக்குதலில் தனது எல்லைக்குள் 27 பேர் கொல்லப்பட்டதை கொலம்பியா கண்டித்துள்ளது. இதற்கிடையில், ஈக்வடார் நீதிமன்றங்கள் ரஃபேல் கொரியா தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சியான குடிமக்கள் புரட்சிக் கட்சியை இடைநீக்கம் செய்துள்ளன.
பென்டகனின் தெற்கு கட்டளை மையம் இப்பிராந்தியம் முழுவதும் இராணுவத் தளங்களுக்கான உரிமைகளை ஆக்ரோஷமாகப் பெற்று வருவதுடன், கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளில் கடற்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. இதில் எவ்வித ஆதாரமுமின்றி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட குறைந்தது 157 மீனவர்களின் உயிரைப் பறித்த தொடர்ச்சியான குண்டுவீச்சு நடவடிக்கைகளும் அடங்கும்.
ட்ரம்ப், பனாமாக் கால்வாய் மற்றும் கிரீன்லாந்து ஆகியவற்றைப் பலவந்தமாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்று மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகிறார். அதே நேரத்தில் மெக்சிகோ மீது படையெடுக்கவும் குண்டுவீசவும் அடிக்கடி அழைப்பு விடுத்து வருகிறார்.
வெனிசுவேலாவை ஒரு கைப்பற்றப்பட்ட பிரதேசமாக நடத்தும் ட்ரம்ப், வெனிசுவேலா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறக்கூடும் என்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் முன்மொழிந்தார். இது கனடா குறித்த இதேபோன்ற அறிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. தலைநகர் கராகஸ் மீதான குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு மத்தியில், ஐனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தப்பட்டனர். மேலும் அந்த நாடு சி.ஐ.ஏ.க்கும், அதன் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் கருவூலச் செயலாளர் ஆர்ஜென்டினாவை பிராந்தியத்தில் அமெரிக்க மூலோபாயத்தின் “மையப்பகுதி” என்று அறிவித்துள்ள நிலையில், ஜேவியர் மிலே சீன மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிப்பதாகக் கூறி தெற்கு அட்லாண்டிக் மீதான கட்டுப்பாட்டை பென்டகனிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், 100 ஆண்டுகால தொழிலாளர்களின் உரிமைகளைத் துடைத்தெறியும் நோக்கில் ஒரு தொழிலாளர் “சீர்திருத்தத்தை” அவர் வலுக்கட்டாயமாக நிறைவேற்றியதுடன், கடந்த கால அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரத்தின் குற்றங்களையும் தற்காத்துப் பேசியுள்ளார்.
ஆர்ஜென்டினா, ஹோண்டுராஸ் மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இதேபோன்ற கட்டாய ஆதரவைத் தொடர்ந்து, சிலி நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் ஜோஸ் அந்தோனியோ காஸ்ட் வெற்றிபெற ட்ரம்ப் ஆதரவளித்தார். ஒகஸ்டோ பினோஷேயின் சர்வாதிகாரத்தை பகிரங்கமாகப் பாராட்டுபவரான காஸ்ட், ஏற்கனவே ஜேவியர் மிலேயின் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு பொருளாதார அதிர்ச்சி வைத்திய திட்டத்தைத் சிலியில் தொடங்கியுள்ளார்.
இது வெறும் புவிசார் அரசியல் மட்டுமல்ல; இது ஒரு வர்க்கப் போர். இதன் நோக்கம், 20-ஆம் நூற்றாண்டு முழுவதும் அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் வென்றெடுத்த சமூக மற்றும் ஜனநாயக சாதனைகளைத் துடைத்தெறிவதாகும். இது, கடந்த நூற்றாண்டின் இராணுவ சர்வாதிகாரங்கள் முயன்ற சமூக எதிர்ப்புரட்சியை முழுமையாக்குவதாகும். இவை, உள்நாட்டில் (அமெரிக்காவில்) ஒரு பாசிச ஆட்சியை உருவாக்க ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளிலிருந்து பிரிக்க முடியாதவைகளாகும்.
கியூபா மீதான கூட்டுத் தண்டனை
கீயூபா மீது ஒரு ஏவுகணை கூட ஏவப்படாத நிலையிலும், அதன் மீதான பொருளாதார நெருக்குதல் போருடன் மட்டுமே ஒப்பிடக்கூடிய அளவிலான பேரழிவை உருவாக்கி வருகிறது. 2026-ன் தொடக்கத்தில் மதுரோ பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியைத் துண்டித்ததுடன், மெக்சிகோ மற்றும் பிற நாடுகள் கியூபாவுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்தால் கடுமையான வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியது. மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஜனவரியில் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தினார். பிரேசில் மற்றும் கொலம்பியா —இரண்டுமே “இடது” தலைவர்களால் ஆளப்படுபவை மற்றும் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதியாளர்கள்—ஆகியவையும் இந்த முற்றுகையை உடைக்க மறுத்துவிட்டன.
இது வெறும் சரணடைதல் மட்டுமல்ல, மாறாக வாஷிங்டன் முன்னெடுக்கும் இந்த அரைக்கோளத்தின் புதிய காலனித்துவப் பிரிவினையில், தங்களை இளைய பங்காளிகளாக நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் உள்ளூர் முதலாளித்துவ நலன்களின் கூட்டுச் சதியாகும்.
கியூபாவை தனிமைப்படுத்துவது மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. ஈக்வடார், கியூபாவின் இராஜதந்திரிகளை வெளியேற்றியது; நிகரகுவா கியூபர்களுக்கான விசா இல்லாத பயணத்தைக் கட்டுப்படுத்தியது; குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகள் ஹவானாவிற்கு முக்கிய அந்நியச் செலாவணியை வழங்கிய மருத்துவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.
பழைய சோவியத் காலத்து வெப்பமின் நிலையங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பு, அதன் தாங்கும் திறனைத் தாண்டிச் சென்றுவிட்டது. மார்ச் 16 அன்று, ஒட்டுமொத்த தேசிய மின்சாரக் கட்டமைப்பும் செயலிழந்தது, தீவு முழுவதும் இருளில் மூழ்கியது. 29 மணி நேரத்திற்குப் பிறகே மின்சாரம் பகுதியளவில் சீரமைக்கப்பட்டது.
மடான்சாஸில் உள்ள ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், தனது பகுதியில் பல நாட்களாக மின்சாரம் இல்லை என்று தெரிவித்தார். குடிநீர் பற்றாக்குறை நிலவும் வேளையில், சமையல் எரிவாயுவை சுத்தமாகப் பெற முடியவில்லை. சுகாதார அமைப்பு சீர்குலைந்ததன் விளைவாக தனது நெருங்கிய உறவினர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்ததாகவும், இது ஏற்கனவே எண்ணற்ற உயிர்களைப் பலிவாங்கி வருவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
கியூபாவின் மருத்துவ கட்டமைப்பில் கிட்டத்தட்ட 100,000 “அவசரமற்ற” அறுவை சிகிச்சைகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன. இதில் 11,000-க்கும் அதிகமான குழந்தைகள் அடங்குவர். பல சந்தர்ப்பங்களில், “அவசரமற்றது” என்பது “இன்னும் அவர்கள் இறக்கவில்லை” என்றே பொருள்படுகிறது.
எரிசக்தி ஆய்வாளர் ஜோர்ஜ் பினோன் “ஒரு நாட்டின் 100 சதவீத எரிபொருளும் மறைந்துவிடும் நிலையை நான் இதுவரை பார்த்ததோ அல்லது ஆய்வு செய்ததோ இல்லை” என்று எச்சரித்துள்ளார்.
இந்தச் சூழலில், சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் வெடித்துள்ளன: கல்விமுறை சீர்குலைவதற்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துகின்றனர்; தொழிலாள வர்க்கப் பகுதிகளில் மின்சாரம் மற்றும் உணவு கேட்டு மக்கள் பாத்திரங்களைத் தட்டி போராடுகின்றனர்; மேலும் மொரோன் போன்ற நகரங்களில் சமீபத்தில் நடந்தது போன்ற கலவரங்களும் வெடித்துள்ளன. அங்கு போராட்டக்காரர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்த தளபாடங்களுக்கு தீ வைத்தனர்.
20-ஆம் நூற்றாண்டை ஒழிப்பதற்கான உந்துதலின் ஒரு போர் முணை
கியூபா மீதான இந்த ஏகாதிபத்தியத் தாக்குதல் ஒரு தனித்துவமான பழிவாங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் வெறும் பெருநிறுவன மற்றும் நிதி நலன்களை மட்டும் பின்தொடரவில்லை. அது அமெரிக்காவின் பொம்மை ஆட்சிகளை வீழ்த்திய இரண்டு புரட்சிகளுக்கு —1959 கியூபா மற்றும் 1979 ஈரான்—எதிராக ஒரே நேரத்தில் ஒரு வரலாற்றுப் பழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வலியுறுத்தியது போல, கியூபப் புரட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு நனவான தலைமையின் கீழ் முதலாளித்துவ சொத்து உறவுகளைத் தகர்த்த ஒரு சோசலிசப் புரட்சி அல்ல. மாறாக, அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தியது, நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட சமூக நடவடிக்கைகள் ஆகியவை, 20-ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ தேசியவாத மற்றும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களின் ஒரு தீவிரமான வடிவமே ஆகும். இவை 1917 ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்டிருந்தன.
இன்று, உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் போருக்கான உந்துதலின் சவுக்கடிக்குக் கீழ், ஆளும் வர்க்கங்கள் “20-ஆம் நூற்றாண்டின் புரட்சிகளின் அனைத்துத் தேட்டங்களையும் ஒழித்துக்கட்டி, காலனித்துவக் காலத்திற்கு இழுத்துச் செல்வதில்” உறுதியாக உள்ளன—அதாவது மனிதகுலத்தை மீண்டும் 19-ஆம் நூற்றாண்டின் நிலைமைகளுக்குக் கொண்டு செல்வதே இவர்களின் நோக்கம்: அது, அப்பட்டமான சுரண்டல், காலனித்துவ அடிமைத்தனம் மற்றும் கட்டுப்பாடற்ற போலீஸ்-இராணுவ ஆட்சியாகும்.
அமெரிக்க சிந்தனைக் குழுவான ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போல, கியூபாவின் வீழ்ச்சியானது, “ரஷ்யா, சீனா அல்லது வேறு யாராலும் அமெரிக்காவிற்கு ஒரு மாற்று அதிகார மையமாக செயல்பட முடியாத நாடுகள் என்பதற்கான இறுதி ஆதாரமாக உலகளாவிய தெற்கு நாடுகளால் (ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்) பார்க்கப்படும்.”
கியூபாவின் அவலநிலைக்கு, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள “இளஞ்சிவப்பு அலை” என்று அழைக்கப்படும் இடது அரசாங்கங்கள் மற்றும் ரஷ்யா, சீனா ஆகியவற்றின் எதிர்வினை மற்றும் அவர்களின் திவால்நிலையையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாற்றீடாக “பிராந்திய ஒருங்கிணைப்பு” அல்லது பிரிக்ஸ் (BRICS) என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் அம்பலப்படுத்துகிறது.
ஆனால், கியூபா மீதான இந்த கொடூரமான தாக்குதலும், இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரி ஆட்சிகளின் எதிர்ப்புரட்சி அச்சினை உருவாக்கும் முயற்சியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலிமையைக் காட்டவில்லை. மாறாக, அதன் ஆழமான பலவீனத்தையே காட்டுகின்றன.
கியூபாவின் வேதனை என்பது, அமெரிக்கப் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை நம்பியிருந்த 1945-க்குப் பிந்தைய உலக ஒழுங்கின் பரந்த வீழ்ச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்முனைத் தன்மை உட்பட வேறு எந்த முதலாளித்துவ அடிப்படையிலும் இந்த உலக ஒழுங்கை மீண்டும் கட்டமைப்பது சாத்தியமற்றது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலை நோக்கி
கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள முதலாளித்துவ-தேசியவாத அரசாங்கங்களிடம் முறையிடுவதன் மூலம் கியூபா மீதான நெருக்குதலை நிறுத்த முடியாது என்பதால், எந்தச் சமூக அடிப்படையில் அதனை எதிர்க்க முடியும்?
இதற்கான விடை சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்திடம் உள்ளது. கியூபா மீதான முற்றுகை என்பது அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மீதான தாக்குதலிலிருந்து பிரிக்க முடியாதது. ஈரான் மீதான குற்றவியல் போரினால் உந்தப்பட்ட உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், ஏற்கனவே 1970-களை நினைவுபடுத்தும் வகையில் பணவீக்கத்தையும், சிக்கன நடவடிக்கைகளையும் தூண்டி வருகின்றன. 1970-களின் எண்ணெய் அதிர்ச்சிகள் இலத்தீன் அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் பாரிய வர்க்கப் போராட்டங்களை வெடிக்கச் செய்தன.
கியூபா அனுபவிக்கும் சித்திரவதைக்கு எதிரான வர்க்க ரீதியான பதிலடியை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்தின் பகுதியாக ஒருங்கிணைக்க வேண்டும். அமெரிக்கா, கனடா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள், கியூபத் தொழிலாள வர்க்கத்தின் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வரவும், அவர்கள் தங்களின் சொந்த ஆளும் வர்க்கத்துடன் கணக்குத் தீர்க்க வழிவகை செய்யவும், முற்றுகை மற்றும் அனைத்துத் தடைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் முடிவுக்குக் கொண்டு வரக் கோர வேண்டும்
கியூபாவின் பாதுகாப்பானது, ஸ்டாலினிச மற்றும் போலி-இடது அமைப்புகளால் நீண்டகாலமாக நிலைநிறுத்தப்பட்ட அர்த்தத்தில் ஒரு “தேசியக்” கேள்வி அல்ல.
டேவிட் நோர்த் தனது 1993 விரிவுரையான “நிரந்தரப் புரட்சியும் இன்றைய தேசியக் கேள்வியும்” என்பதில் விளக்கியது போல், ஏகாதிபத்தியமானது “தேசிய அரசுக்கே மரண மணியை அடித்தது” என்பதை ட்ரொட்ஸ்கி நிரூபித்தார். மேலும், “ஏகாதிபத்திய சகாப்தத்தில், மனிதகுலத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் எதையும் தேசிய அடிப்படையில் தீர்ப்பது சாத்தியமில்லை” என்பது, ஒரு சுதேசி முதலாளித்துவ தலைமையின் கீழான “தேசிய விடுதலை” என்ற முன்னோக்கை ஒரு பிற்போக்குத்தனமான கற்பனாவாதமாக மாற்றியது. காஸ்ட்ரோ மற்றும் எண்ணற்ற “தேசிய விடுதலை” பிம்பங்களின் பதிவு இதை நிரூபித்துள்ளது: இவர்கள் அனைவரும் ஒரு தேசிய-அரசு கட்டமைப்பை நம்பியிருந்தனர், ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் இடையில் சமநிலை பேண முயன்றனர். இறுதியில் அவர்களின் மேலோட்டமான சாதனைகள் சிதைந்து போனபோது, அதற்கான விலையைத் தொழிலாளர் வர்க்கமே கொடுக்க வேண்டியதாயிற்று.
கியூபா மற்றும் வெனிசுவேலா அரசாங்கங்களின் தற்போதைய சரணடைவு அலை, ஏனைய “இளஞ்சிவப்பு அலை” அரசாங்கங்களுடன் சேர்ந்து, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்மறையாக உறுதிப்படுத்துகிறது.
ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஒடுக்கப்பட்ட நாடுகள் எதிர்கொள்ளும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூகப் பணிகளில் எதையும் முதலாளித்துவ அல்லது குட்டி-முதலாளித்துவ தலைமையின் கீழ், தேசிய அடிப்படையில் தீர்க்க முடியாது. கியூபாவின் பாதுகாப்பிற்கும், 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட அனைத்து சாதனைகளுக்கும், ஒரே சாத்தியமான அடிப்படை, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சர்வதேச அணிதிரட்டல் மட்டுமே ஆகும்.
இதன் பொருள் என்னவென்றால், வரவிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கு ஒரு நனவான சோசலிசத் தலைமையினை வழங்குவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கியூபாவிலும் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உண்மையான புரட்சிகரக் கட்சிகளாக கட்டியெழுப்புவது அவசியமாகும்.
