மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் ஒரு இறுதி எச்சரிக்கையைப் பதிவிட்டார். அது என்னவென்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்: இது 90 மில்லியன் (9 கோடி) மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்திற்கு எதிரான இனப்படுகொலை வன்முறை அச்சுறுத்தலாகும். மேலும், அவர்கள் உயிர்வாழத் தேவையான உள்கட்டமைப்புகளை அழிப்பதற்கான வெளிப்படையான மிரட்டலால் இது ஆதரிக்கப்படுகிறது: ட்ரம்ப் தனது பதிவில், “ஈரான் எந்த மிரட்டலும் இன்றி ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் முழுமையாகத் திறக்காவிட்டால், அமெரிக்கா அவர்களின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும், முதலில் மிகப்பெரிய நிலையத்திலிருந்து இது தொடங்கும்” என்று எழுதியிருந்தார்.
இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் குற்றச் செயலாக உள்ளது. 1945 ஆகஸ்ட் மாதம், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டுகளை வீசிய பிறகு, ஜப்பானுக்கு ட்ரூமன் நிர்வாகம் விடுத்த இறுதி எச்சரிக்கையை மட்டுமே இதனுடன் வரலாற்று ரீதியாக ஒப்பிட முடியும். அரசியல் ரீதியாகப் அடிபணிய வைப்பதற்காக, ஒட்டுமொத்த சாதாரண மக்கள் தொகையின் அடிப்படை வாழ்வாதார கட்டமைப்புகளை அழித்தொழிப்போம் என்று இவ்வளவு வெளிப்படையான மிரட்டலை விடுத்த வேறெந்த அரசாங்கமும் நவீன வரலாற்றில் இல்லை.
ஈரான் 110-க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வருகிறது. அவற்றில் ஒரு பகுதியை அழிப்பது கூட, பல நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களுக்குத் தொடரக்கூடிய ஒரு மனிதாபிமானப் பேரழிவைத் தூண்டும். 72 மணி நேரத்திற்குள், மருத்துவமனைகள் மின்சாரத்தை இழக்கும். இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு இயந்திரத்தின் உதவியுடன் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் முறையான டயாலிசிஸ் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் இருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்படும். சில நாட்களுக்குள், நாடு முழுவதும் நீர் இறைக்கும் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் செயலிழக்கும், இது கொலரா, வாந்தபேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பெருமளவில் பரவுவதற்கான சூழலை உருவாக்கும்.
“மிகப்பெரிய மின் நிலையம்” என்று ட்ரம்ப் எதைக் குறிப்பிட்டார் என்று விளக்கவில்லை, ஆனால் ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தித் திறன் கொண்ட நிலையம் டமாவந்த் ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையமாகும் (Damavand Combined Cycle Power Plant) — 2,868 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இது, தலைநகர் தெஹ்ரானின் மையப் பகுதியிலிருந்து 35 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ளது. இது, அந்தத் தலைநகரின் முதன்மையான மின்சார மையமாகும். இதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்கள் ஒரே நேரத்தில் மின்சாரத்தை இழக்க நேரிடும்.
ஈரானின் ஒரே ஒரு செயல்பாட்டில் இருக்கும் வணிக ரீதியான அணு உலை, வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள புஷெர் அணு மின் நிலையம் ஆகும். சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைமை இயக்குனர் ரபேல் கிராஸி ஏற்கனவே எச்சரித்துள்ளது போல, புஷெர் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் “சுற்றுச்சூழலில் மிக அதிக அளவிலான கதிர்வீச்சு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்”, இதன் விளைவுகள் ஈரானைத் தாண்டியும் வெகுதூரம் பரவும். ஆனால், ஒரு பேரழிவைத் தூண்டுவதற்கு நேரடியான தாக்குதல் இல்லாமலே இவற்றை துண்டிக்க முடியும்.
IAEA மற்றொரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறையையும் அடையாளம் கண்டறிந்துள்ளது: அந்த நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு முக்கிய மின் இணைப்புகளைத் துண்டிப்பதன் மூலம் அணு உலையின் மையப்பகுதி உருகத் தொடங்கும். இது அந்த அணு மின் நிலையத்தின் முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒரு பெரும் பேரழிவுகரமான செயலிழப்பை தூண்டும். அணு உலை உருகுதல் நிகழாவிட்டாலும் கூட, புஷெர் நிலையம் மீதான தாக்குதல் பாரசீக வளைகுடாவில் கதிர்வீச்சுக் கசிவை ஏற்படுத்தக்கூடும். இது அந்தப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை மாசுபடுத்தும்.
ட்ரம்பின் இந்த இறுதி எச்சரிக்கைக்கு ஈரான் பதில் அளித்துள்ளது. தனது மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் என்றும், அழிக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் மீண்டும் கட்டப்படும் வரை அது திறக்கப்படாது என்றும் ஈரான் கூறியுள்ளது. அத்துடன், இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க எரிசக்தி உள்கட்டமைப்புகளும் முறையான இலக்குகளாக இருக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் —தங்களின் குடிநீருக்காக 99 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நம்பியிருக்கும் நாடுகள்— தற்போது தங்களுக்குரிய ஒரு மனிதாபிமானப் பேரழிவை எதிர்நோக்கி நிற்கின்றன.
ட்ரம்பின் இந்த இறுதி எச்சரிக்கை ஒரு திட்டவட்டமான தர்க்கத்தைப் பின்பற்றுகிறது. இந்தப் போர், தலையைத் துண்டிக்கும் ஒரு தாக்குதலாகத் தொடங்கியது — அதாவது ஈரானின் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம், அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும் ஒரு படுகொலைத் தாக்குதலாகவே இது ஆரம்பமானது. பின்னர், அது நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான இடைவிடாத குண்டுவீச்சு, வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்தல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல் மற்றும் கடற்படை சொத்துக்கள் மீதான தாக்குதல்களாக தீவிரமடைந்தது. இந்த நடவடிக்கைகள் அவற்றின் நோக்கங்களை நிறைவேற்றவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதியான எதிர்த் தாக்குதலை எதிர்கொண்டுள்ளன. இதுவே, இந்த மோதலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் தீவிரமான மற்றும் பகிரங்கமான குற்றவியல் வடிவங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அழிப்பது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடாது. மூன்று வாரங்களாக ஈரான் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகள் 8,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 120-க்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்களை அழித்துள்ளன அல்லது சேதப்படுத்தியுள்ளன, மேலும் டசின் கணக்கான உயர்மட்ட அதிகாரிகளைக் கொன்றுள்ளன—ஆயினும் அந்த நீரிணை இன்னும் மூடப்பட்டே இருக்கிறது. இந்த நீரிணையை மீண்டும் திறக்க தரைப் படையினர்கள் தேவை, அந்தப் படைகள் ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் 31வது கடற்படை அதிரடிப்படையைச் சேர்ந்த 2,200 படையிர்களை ஏற்றிச் செல்லும் USS திரிப்போலி என்ற போர்க் கப்பல் இந்த வார இறுதியில் அரபிக் கடலுக்கு வந்து சேர்கிறது. 2,500 படையினர்களை ஏற்றிச் செல்லும் USS பொக்சர் (USS Boxer) என்ற இரண்டாவது போர்க்கப்பல் சான் டியாகோவில் இருந்து புறப்பட்டுள்ளது. மூன்றாவது அதிரடிப்படையினரும் (MEU) பயணத்தில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 7,500 கடற்படையினர்கள் போர்க் களத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் —இந்தப் படைகள் ஈரானிய மண்ணில் நேரடிப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன.
மிகப்பரந்த அளவில் பார்த்தால், ஈரானுக்கு எதிரான இந்தப் போர், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியடைந்து வரும் நிலையை, இடைவிடாத வன்முறையின் மூலம் ஈடுகட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. பயங்கரம் மற்றும் வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு காலனித்துவ மேலாதிக்கச் சூழலை நிறுவுவதே இதன் மூலோபாய இலக்காக உள்ளது. நாஜி ஆட்சியின் பொறுப்பற்ற தன்மையும், குற்றச்செயல்களும் ஹிட்லரின் மனநிலையிலிருந்து மட்டுமே உருவானவை அல்ல என்பது போலவே, இதுவும் வெறும் ட்ரம்பின் சிந்தனையில் மட்டும் உதித்தது அல்ல. இது முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியிலிருந்தும், தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு ஆளும் வர்க்கத்தின் உறுதியிலிருந்தும் எழுகிறது.
இந்தக் கட்டமைப்பில், சதிகாரக் குற்றவாளிகள் கடக்கக்கூடாத எல்லை என்று எதுவுமே இல்லை. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை அழிப்போம் என்ற மிரட்டல்களை இயல்பாக்குவதானது —மற்றும் பாரசீக வளைகுடாவில் ஒரு கதிரியக்கப் பேரழிவைத் திட்டமிட்டுத் தூண்டுவது— அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்பை எழுப்புகிறது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த வரலாற்றாசிரியர் கேப்ரியல் ஜாக்சன் இவ்வாறு எழுதினார்:
1945 ஆகஸ்ட் மாதத்தின் குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அணு குண்டின் பயன்பாடு, ஒரு உளவியல் ரீதியாக மிகவும் சாதாரணமான மற்றும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி, ஒரு நாஜி சர்வாதிகாரி எவ்விதம் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவாரோ அதே போலவே பயன்படுத்த முடியும் என்பதையே காட்டியது. இதன் மூலம், அமெரிக்கா — வெவ்வேறு வகையான அரசாங்கங்களின் நடத்தையில் உள்ள தார்மீக வேறுபாடுகளைக் கவனிக்கும் எவருக்கும்— பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மங்கச் செய்துவிட்டது.
ஈரானுக்கு எதிரான போரைப் பொறுத்தவரை இந்த அவதானிப்பு ஒரு புதிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தற்போது விடுக்கப்படும் மிரட்டல்களின் குற்றத்தன்மை மட்டுமல்ல பிரச்சினை, மாறாக அவை நிறுவப்பட்ட அரசியல் கட்டமைப்பிற்குள்ளிருந்து எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் கிளம்பவில்லை என்பதுதான் உண்மையாகும். இதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் முன்னேறிய சிதைவையும், வெளிநாடுகளில் ஏகாதிபத்திய வன்முறையும் உள்நாட்டில் சர்வாதிகாரமும் ஒன்றாக இணைவதையும் வெளிப்படுத்தும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
அமெரிக்காவின் எந்தவொரு முக்கிய அரசியல் பிரமுகரும் —ஒரு செனட்டர், ஒரு ஆளுநர், ஜனநாயகக் கட்சியின் ஒரு தலைவர் கூட— 9 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிப்போம் என்ற இந்த மிரட்டலைக் கண்டிக்கவில்லை. பிரதிநிதிகள் சபை உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் அல்லது செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரில் ஒருவர் கூட இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விவாத நிகழ்ச்சிகளில், ஒரு தேசத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைத் திட்டமிட்டு அழிப்பது என்பது முற்றிலும் ஒரு தந்திரோபாயக் கேள்வியாக மட்டுமே கலந்துரையாடப்பட்டது. எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒரு விருந்தினர் கூட இது “போர்க்குற்றம்”, “சர்வதேச சட்டம்”, “ஜெனீவா உடன்படிக்கை”, “கூட்டுத் தண்டனை”, “பொதுமக்களின் உட்கட்டமைப்பு” அல்லது “சட்டவிரோதமானது” ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
இந்த மௌனமானது, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும், அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறையை சர்வதேச விவகாரங்களின் இயல்பான ஒழுங்காக எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் (DNC) முன்னாள் தலைவர் டோனா பிரேசில் இவ்வாறு அறிவித்தார்: “ஈரான் அந்தப் பிராந்தியத்திற்கும், வளைகுடாவுக்கும் மட்டுமல்ல, உலகிற்கே ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொண்டுள்ளனர்’.”
அமெரிக்க நாடாளுமன்றத்தால் எந்தப் போரும் அறிவிக்கப்படவில்லை. இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு அங்கீகாரமும் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி நான்கு வாரங்களாகப் போரை நடத்தி வருகிறார். இப்போது மீண்டும் தனது தனிப்பட்ட அதிகாரத்திலேயே ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தின் ஒட்டுமொத்த எரிசக்தி உள்கட்டமைப்பையும் அழிப்பதாக மிரட்டுகிறார். எந்தவொரு ஜனநாயக முறையிலும், இது ட்ரம்பை பதவியில் இருந்து அகற்ற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும். ஆனால், அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு முக்கியக் குரல் கூட இதை எழுப்பவில்லை.
ஜனநாயகக் கட்சியின் குரலாகச் செயல்படும் நியூ யோர்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் குழு, இந்த வார இறுதியில் ட்ரம்பின் போர் நடத்தை குறித்து ஒரு நீண்ட விமர்சனத்தை வெளியிட்டது. ஈரானின் அணுசக்தித் திறனை ட்ரம்ப் தவறாகச் சித்தரித்துவிட்டார் என்றும், அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியைப் பாதிக்கும் நெருக்கடியை அவர் மறைத்துவிட்டார் என்றும் அந்த தலையங்கம் வாதிடுகிறது. ஆனால், அந்த டைம்ஸ் இதழின் ஆசிரியர் குழு, எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைப்பதற்கு முன்னதாக, “இந்தப் போரின் விவேகம் குறித்து ஒரு நியாயமான விவாதத்தை நடத்த வேண்டியுள்ளது” என்றும், ட்ரம்ப் “தற்போதுள்ள ஈரானிய ஆட்சியை எதிர்கொள்வதற்கு உண்மைகளின் அடிப்படையிலான ஒரு வாதத்தை முன்வைக்க முடியும்” என்றும் நிறுவுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது.
நியூ யோர்க் டைம்ஸ் இதழின் எதிர்ப்பு, இந்தப் போர் ஒரு குற்றம் என்பதற்காக அல்ல. மாறாக, ட்ரம்ப் இதற்காகப் போதுமான வலுவான காரணங்களை முன்வைக்கவில்லை என்பதுதான் அவர்களின் வருத்தமாகும்.
பெருநிறுவன ஊடகங்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய அனைத்தும் ஒரே நிதிய தன்னலக்குழுவின் குரலாகவே ஒலிக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரம்பற்ற வன்முறையின் மூலம் தனது விருப்பத்தைத் திணிக்க உரிமை கொண்டுள்ளது என்பதும், கோடிக்கணக்கான மனித உயிர்கள் அதற்காக தியாகம் செய்யப்படக்கூடியவை என்பதுமே அவர்களின் பொதுவான கருதுகோளாக உள்ளது.
அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந்தப் போருக்கு எதிராகப் மிகப்பெரிய எதிர்ப்பு நிலவுகிறது. கேள்வி என்னவென்றால், இந்த எதிர்ப்பு ஒரு மூலோபாயம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு நனவான இயக்கமாக மாற்றப்படுமா என்பதுதான்.
கடந்த ஆண்டு நடந்த இரண்டு முக்கியப் போராட்டங்களைத் தொடர்ந்து, மார்ச் 28 அன்று “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) என்ற பதாகையின் கீழ் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போராட்டத்தின் மையத்திலும் ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்க வேண்டும். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய அழித்தொழிப்புப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! காஸாவில் நடக்கும் இனப்படுகொலை உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மீதான பரந்த தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! போரை ஒரு இரண்டாம் நிலை விஷயமாகக் கருதும் அல்லது அதை நேரடியாகக் குறிப்பிடத் தயங்கும் எந்தவொரு இயக்கமும், ஆளும் வர்க்கம் எதன் மூலம் சர்வாதிகாரத்தை நோக்கியும் பேரழிவை நோக்கியும் நகர்கிறதோ, அந்த முக்கியக் கட்டமைப்பை அப்படியே விட்டுவிடுகிறது.
நாடாளுமன்றத்திடமோ, ஜனநாயகக் கட்சியிடமோ அல்லது அழித்தொழிப்புகளை இயல்பாக்கிவரும் பெருநிறுவன ஊடகங்களிடமோ கோரிக்கை வைப்பதன் மூலம் போருக்கு எதிரான ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, சமூகத்தை இயக்கும் பணியிடங்கள் மற்றும் தொழில்துறைகளுக்குள் போருக்கு எதிரான போராட்டத்தைக் கொண்டு செல்வதன் மூலம் அது கட்டியெழுப்பப்பட வேண்டும்: துறைமுகங்கள், தளவாட மையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், ரயில்வே வலையமைப்புக்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இது கட்டியெழுப்பப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்திடமோ, ஜனநாயகக் கட்சியிடமோ அல்லது அழித்தொழிப்பைச் சாதாரணமாக்கிவரும் பெருநிறுவன ஊடகங்களிடமோ கோரிக்கை வைப்பதன் மூலம் போருக்கு எதிரான ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. சமூகத்தை இயங்க வைக்கும் பணியிடங்கள் மற்றும் தொழில்துறைகளுக்குள்—துறைமுகங்கள், தளவாட மையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், இரயில்வே வலைப்பின்னல்கள், உற்பத்தி ஆலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என போருக்கு எதிரான போராட்டத்தைக் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே இது கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ட்ரம்பின் இந்த இறுதி எச்சரிக்கை என்பது வெறும் ஈரானுக்கு எதிரான மிரட்டல் மட்டுமல்ல, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஆளும் வர்க்கம் எதற்கும் துணியும் என்பதற்கு இது ஒட்டுமொத்த உலகிற்குமான ஒரு எச்சரிக்கையாகும். இந்தக் குற்றங்களில் உடந்தையாக இருக்கும் நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் இதற்குப் பதிலளிக்கக் கூடாது. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியைத் திரட்டுவதன் மூலமே இதற்குப் பதிலளிக்க வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் என்பது ஊதியம், வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத்தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக வளர்ந்து வரும் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். போருக்கு எதிரான போராட்டத்தையும், சர்வாதிகாரம் மற்றும் இவ்விரண்டையும் உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தையும் பிரிக்க முடியாது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு மாற்றாக இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சர்வதேச, சோசலிச அணிதிரட்டல் மட்டுமே ஆகும்.
