முன்னோக்கு

மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை "ஒத்திவைத்துள்ள" போதிலும், ஈரான் மீதான படையெடுப்பிற்கான தயாரிப்புகளை ட்ரம்ப் விரிவுபடுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

முன்புறத்தில், தரையிலும் கடலிலும் செயல்படும் படையினர்களை கொண்டு செல்லும் கப்பலான USS Bataan மற்றும் பின்புறத்தில் படைகளை தரையிறக்கும் கப்பலான USS Carter Hall ஆகியவை செங்கடல் வழியாகப் பயணிக்கின்றன. ஆகஸ்ட் 8, 2023 செவ்வாய்கிழமை. [AP Photo/Mass Communication Specialist 3rd Class Riley Gasdia/U.S. Navy]

கடந்த திங்கள்கிழமை காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சமூக வலைத் தளத்தில், அமெரிக்காவும் ஈரானும் “மத்திய கிழக்கில் எமது பகைமைகளுக்கு ஒரு முழுமையான மற்றும் ஒட்டுமொத்த தீர்வை காண்பது குறித்த பேச்சுவார்த்தைகளை” நடத்தியுள்ளதாக அறிவித்தார். மேலும், “ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவொரு மற்றும் அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு யுத்த அமைச்சகத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும்” அவர் கூறியுள்ளார்.

சரியாக இரண்டு நாட்களுக்கு முன்புதான், 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவேன் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

ட்ரம்ப், தாக்குதலை வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே ஒத்திவைப்பதாக கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அவரது கூற்றுக்கும், இதற்கும் துளியளவு சம்பந்தமில்லை. இதன் பொருள் என்னவென்றால், ட்ரம்ப் இன்னும் காலக்கெடுவை விடுக்கும் முறையிலேயே செயல்படுகிறார் என்பதாகும். பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்தால் கூட, இந்தப் போரை ஐந்து நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமென்றால், காலவரையற்ற போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பைத்தான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் அதுபோன்ற எதையும் இதில் குறிப்பிடவில்லை. இந்த ஒட்டுமொத்த கதையும் நம்பமுடியாதது மட்டுமல்ல, இது ஒரு ஆபத்தான உள்நோக்கம் கொண்ட ஒரு சதியாகும்.

கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை இராணுவத் தாக்குதல்களை மறைப்பதற்கான ஒரு போர்வையாக “பேச்சுவார்த்தைகளை” ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் காட்டிக்கொண்டனர். ஜூன் 2025-ல், ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதே, நள்ளிரவு தாக்குதல் நடவடிக்கை என்பதன் மூலம் ஏழு B-2 போர் விமானங்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கின. இந்த வருடம் பிப்ரவரி 28 அன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து இரண்டு நாட்களே ஆன நிலையில், அமெரிக்கா ஈரானின் உச்சத் தலைவரைக் கொன்று தற்போதைய போரைத் தொடங்கியது. ஒவ்வொரு முறையும், ஒரு குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரைத் திட்டமிடும்போதெல்லாம் ட்ரம்ப் அமைதியைப் பற்றிப் பேசி வந்துள்ளார்.

ஏதோ ஒரு வகையில் கலந்துரையாடல்கள் நடந்து கொண்டிருப்பதை நிராகரிக்க முடியாது. ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தால், ட்ரம்ப் யாரைக் கொல்லப்போவதாகப் பகிரங்கமாக அச்சுறுத்தினாரோ அல்லது ஏற்கனவே யாரைக் கொல்ல முயன்றாரோ, அவர்களுடன்தான் அந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும். கடந்த திங்களன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் முதல் கட்டத் தலைமை, இரண்டாம் கட்டத் தலைமை மற்றும் பெருமளவிலான மூன்றாம் கட்டத் தலைமையையும் அழித்துவிட்டோம்” என்று தற்பெருமை கொண்டார்.

இந்த ஐந்து நாள் கால அவகாசமானது, தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கக்கூடிய கடற்படைப் பிரிவுகள் வந்து சேருவதற்கான காலவரிசையுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது. ஓகினாவாவிலிருந்து திரிப்போலி மற்றும் சான் டியாகோவிலிருந்து பொக்சர் ஆகிய இரண்டு போர்க் கப்பலில், தரை, கடல் மற்றும் வான்வழித் தாக்குதலை மேற்கொள்ளும் அணிகள் சுமார் 4,500 படையினர்களுடன் பாரசீக வளைகுடாவை நோக்கித் திரண்டு வருகின்றன. இந்த வார இறுதியில் திரிப்போலி போர்க்கப்பல் வந்தடைகிறது. இதுதவிர, ஏற்கனவே 50,000ம் அமெரிக்கப் படைகள் அந்தப் பிராந்தியம் முழுவதும் நிலைகொண்டுள்ளன.

ட்ரம்ப் தனது அறிவிப்பை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே, திங்கட்கிழமை அன்று நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை, “ஈரான் போருக்காக வான்வழியாக துருப்புக்களை நிலைநிறுத்துவது குறித்து பென்டகன் அதிகாரிகள் ஆலோசிக்கிறார்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவதற்காக, 82-வது வான்வழிப் பிரிவின் “அதிரடி தாக்குதல் படையிலிருந்து” —18 மணி நேரத்திற்குள் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லக்கூடிய 3,000ம் படையினர்கள்— ஒரு சண்டையிடும் பிரிகேட்டை நிலைநிறுத்த மூத்த இராணுவ அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தகவல்படி, சுமார் நான்கு வாரங்களாக நடத்தப்பட்டுவரும் மோசமான குண்டுவீச்சுகள் —ஈரானின் 8,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன, 130 கடற்படைக் கப்பல்கள் அழிக்கப்பட்டன, உயர்மட்டத் தலைவர் மற்றும் டசின் கணக்கான மூத்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர்— நடந்தும் ஈரானிய அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவோ முடியவில்லை. மேலும், ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டதை வான்வழித் தாக்குதல்களால் மட்டும் சாதிக்க முடியவில்லை. அமெரிக்க ஊடகங்கள் ஏற்கனவே தரைவழிப் படையெடுப்பிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கிவிட்டன. ஹோர்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறப்பதற்கு கார்க் தீவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே முக்கிய வழி என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை வாதிட்டுள்ளது.

கார்க் தீவைக் கைப்பற்றும் நடவடிக்கையோ அல்லது ஹோர்முஸ் நீரிணையுடன் தொடர்புடைய வேறு எந்த மூலோபாய பகுதியை கைப்பற்றும் திட்டமோ ஒரு வார இறுதியில் திடீரெனத் திட்டமிடப்படுவதில்லை. இது பல வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, போர்க்களத்தை தயார் செய்யும் தாக்குதல்கள், சமுத்திரங்களை கடந்து படைகளை இடமாற்றம் செய்தல் மற்றும் படைப்பிரிவுகளை உஷார் நிலையில் வைத்திருத்தல் என முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். வெள்ளை மாளிகையின் சிந்தனையை அறிந்த ஒரு வட்டாரம் மார்ச் 20 அன்று, ஆக்ஸியோஸ் தளத்திடம் கூறுகையில், “தாக்குதல்கள் மூலம் ஈரானியர்களை இன்னும் பலவீனப்படுத்தவும், தீவைக் கைப்பற்றவும் எமக்கு ஒரு மாதம் காலம் தேவை, அதன் பிறகுதான் அவர்களை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பேச்சுவார்த்தைகளுக்குப் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் ட்ரம்பின் கூற்றுக்களை நேரடியாக மறுத்துள்ளார். “அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,” என்று அவர் கூறினார். “ஜனாதிபதி ட்ரம்பின் அறிக்கைகள் எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கும், இராணுவத் திட்டங்களுக்கான கால அவகாசத்தை வாங்குவதற்கும் செய்யப்படும் ஒரு முயற்சியாகும்.” இந்த மதிப்பீடு தற்போதைய புறநிலை யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது. ட்ரம்ப் அறிவித்த ஐந்து நாள் இடைவெளி, எந்தவொரு நம்பகமான பேச்சுவார்த்தை கால அட்டவணையுடனும் ஒத்துப்போகவில்லை; மாறாக, போர்க்களத்திற்கு கடற்படை மற்றும் கூடுதல் இராணுவத் தளவாடங்கள் வந்து சேருவதோடும் மற்றும் ஐந்து நாள் காலப்பகுதியில் ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்வதன் மூலம் ஈரானிய தற்காப்பை மேலும் “பலவீனப்படுத்துவதுடன்” ஒத்துப்போகிறது.

அதேபோல், கார்க் தீவு மட்டுமே பரிசீலனையில் உள்ள ஒரே அல்லது பிரதான விருப்பமாக கருதப்பட முடியாது. “தீவைக் கைப்பற்றுவது” குறித்த தீவிரமான பொதுக் கவனம், வேறு ஒரு இராணுவ இலக்கை மறைப்பதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்: குறிப்பாக, முக்கிய துறைமுகப் பகுதிகள் உட்பட ஹோர்முஸ் நீரிணையை அடையும் வழிகளை நேரடியாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்தல்; அல்லது இஸ்பஹான் (Isfahan) அல்லது நடான்ஸ் (Natanz) போன்ற அணுசக்தி நிலையங்கள் மீது ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் ஈரானிய நிலப்பரப்பை நீண்டகாலம் ஆக்கிரமிக்கத் தேவைப்படும் ஆழமான தரைவழித் தாக்குதல்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

அமெரிக்காவின் 82-வது விமானப் படை தீவுகளைக் கைப்பற்றுவதற்காக அல்ல. மாறாக, இது விமான நிலையங்களையும், நாட்டின் உட்புறத்தில் உள்ள இலக்குகளையும் கைப்பற்றி, பின்னால் வரும் படைகளுக்கான ஒரு பாதுகாப்பு எல்லையை உருவாக்குவதற்காக இருக்கிறது. முன்னாள் பாதுகாப்பு உதவிச் செயலாளர் ஒருவர் இஸ்ஃபஹான் மீதான தாக்குதல் குறித்த திட்டத்தை விவரிக்கையில், “ஒரு விமானப் படை, அந்தப் பகுதியைக் கைப்பற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். இது கூட்டு சிறப்பு நடவடிக்கைக் கட்டளையகத்தைச் சேர்ந்த (JSOC) உயரடுக்கு படைப்பிரிவுகளைக் கொண்ட ஒரு பெரிய தாக்குதல் படை அந்த வசதிகளைப் பாதுகாப்பதைச் சாத்தியமாக்கும்.” இதற்காகத்தான் 82-வது விமானப் படை பயிற்சி பெறுகிறது. இதில் அந்தப் படை ஈடுபடுத்தப்படுவது என்பது, கடல்வழியாக தீவு மீதான தாக்குதலை விட, நாட்டின் உட்பகுதிக்கான ஒரு பணியையே உணர்த்துகிறது.

இதில் எதைத் தேர்வு செய்தாலும் அல்லது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அது ஈரானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் என இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிர் இழப்புகளை ஏற்படுத்தும்.

கடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது போல, இந்தப் போருக்கான நிதியாக ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரஸிடமிருந்து 200 பில்லியன் டாலர்களைக் கோரியது. இந்த கூடுதல் நிதியானது, இந்த ஆண்டின் நேரடி இராணுவச் செலவை 1 டிரில்லியன் டாலருக்கும் மேலாகக் கொண்டு செல்லும். ஒப்பீட்டளவில் பார்த்தால், ஈராக் ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டத்தில் 170,000 அமெரிக்க படையினர்கள் களத்தில் இருந்தபோது, ஆண்டு போர்ச் செலவு 144 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. ஈரான் போரில் இன்னும் தரைப் படையினர்கள் ஈடுபடுத்தப்படாத நிலையிலேயே, ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அதைவிட அதிகளவிலான நிதியைக் கோரியுள்ளது.

இந்தப் போர் என்பது உலகளாவிய போரின் மூலம் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதியானது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட போருக்கான செலவு அல்ல. இது இறுதியில் சீனாவுக்கு எதிராகத் தீவிரமடையவுள்ள ஒரு உலகளாவிய போருக்கான முன் தவணைப் பணமாகும். ஏனெனில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கச்சா எண்ணெயிலும் 37.7 சதவீதத்தைச் சீனா வாங்குகிறது.

இவை அனைத்தும் முழுமையான சட்டவிரோதமான கட்டமைப்பிற்குள் கட்டவிழ்ந்து வருகின்றன. அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியுள்ளது — இது நூரம்பேர்க் விசாரணையில் நாஜிக்களின் தலைவர்கள் தண்டிக்கப்பட்ட அதே குற்றத்தை கொண்டிருக்கிறது. ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்வது என்பது, ஆயுத மோதல் சட்டங்களால் தடைசெய்யப்பட்ட சட்டத்திற்கு புறம்பான கொலைகளின் ஒரு பகுதியாகும்.

இந்தப் போர், முறையான போர்ப் பிரகடனம் அல்லது நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் இந்தப் போரை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதற்கு நிதியுதவி அளித்து ஆதரித்து வருகின்றனர். ஷுமர், ஜெஃப்ரிஸ், டர்பின், கிளார்க், அகுய்லர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சித் தலைமையும் 839 பில்லியன் டாலர் இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ABC தொலைக்காட்சியின் இந்த வார நிகழ்ச்சியில், முன்னாள் ஜனநாயகக் கட்சி தேசியக் குழுவின் (DNC) தலைவர் டோனா பிரேசில் கூறுகையில், “ஈரான் அந்தப் பிராந்தியத்திற்கும், வளைகுடா பகுதிக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கே அச்சுறுத்தலாக இருப்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொண்டுள்ளனர்,” என்று அறிவித்தார்.

ஜனநாயகத்தின் செயல்பாட்டு முறைகள் முற்றிலும் சீர்குலைந்துவிட்டன என்பதுதான் இதன் மூலம் வெளிப்படுகிறது. ஒரு நாட்டின் ஜனாதிபதி சட்டவிரோதமான போரைத் தொடங்குகிறார். அவர் 9 கோடி மக்கள் வாழும் ஒரு தேசத்திற்கு எதிராக ஒரு முழுமையான அழித்தொழிப்பு போரை முன்னெடுப்பதாக அச்சுறுத்தி, அந்தத் தேசத்தின் தலைவர்களைப் படுகொலை செய்கிறார் — ஆனால், தொடர்ந்து விரிவடைந்து வரும் இந்தப் போரை நிறுத்துவது ஒருபுறம் இருக்க, அதை எதிர்க்கக் கூடிய எந்தவொரு வழிமுறையும் அரசியல் ஸ்தாபனத்திற்குள் இல்லை.

Loading