“நாங்கள் குண்டுகள் மூலமே பேச்சுவார்த்தை நடத்துகிறோம்”: ஈரான் நோக்கி 82-வது வான்வழிப் படையை நகர்த்தும் அமெரிக்கா

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வட கரோலினாவின் போர்ட் ப்ராக் இராணுவத் தளத்திலிருந்து போலந்து நாட்டிற்குப் பணியமர்த்தப்படுவதற்கு முன்னதாக, அமெரிக்க இராணுவத்தின் 82-வது வான்வழிப் பிரிவைச் (Airborne Division) சேர்ந்த சிப்பாய்கள் தங்கள் ஆயுதங்களைச் சுத்தம் செய்து தயார்படுத்துகின்றனர். திங்கட்கிழமை, பிப்ரவரி 14, 2022. [AP Photo/Nathan Posner]

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான தனது அறிவிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான போரில் அமெரிக்கா “வெற்றி” பெற்றுவிட்டதாக” அறிவித்ததுடன், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஆனால், ஈரானை இலக்கு வைத்து இடம்பெறும் இராணுவக் குவிப்பு மேலும் விரிவடைந்து வருவதையே அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

கடந்த செவ்வாயன்று, அமெரிக்காவின் 82வது வான்வழிப் படைப் பிரிவின் (Airborne Division) தளபதி மேஜர் ஜெனரல் பிராண்டன் டெக்ட்மியர் மற்றும் அவரது பணியாளர்கள் உட்பட, அப்படைப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1,000 படையினர்கள் வரும் நாட்களில் மத்திய கிழக்குக்கு “அனுப்பப்பட உள்ளனர்” என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் முக்கிய முனையமான கார்க் தீவை கைப்பற்றுவதற்காக, 82-வது வான்வழிப் படையின் 3,000 படையினர்களைக் கொண்ட “அதிரடி தாக்குதல் படைகள்” அனுப்பப்படலாம் என்று நியூ யோர்க் டைம்ஸ் திங்களன்று செய்தி வெளியிட்டது. இதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு இன்னும் சில மணிநேரங்களில் எதிர்பார்க்கப்படுவதாக பொலிட்டிகோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

82-வது வான்வழிப் படைப் பிரிவு என்பது அமெரிக்க இராணுவத்தின் மிகவேகமாகச் செயல்படக்கூடிய ஒரு பிரிவாகும். இவர்கள் எதிரி நாட்டுப் பகுதிகளுக்குள் பாராசூட் மூலம் குதித்து, விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகளைக் கைப்பற்றப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். ஏற்கனவே ஈரானை நோக்கி வந்துகொண்டிருக்கும் கடற்படையின் அதிரடிப்படைப் பிரிவுகளை (MEU) விட, இந்தப் படையினரின் வருகை என்பது போரின் தீவிரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல் படைகளின் இந்த ஒருங்கிணைப்பு, வெறும் ஒரு தீவைக் கைப்பற்றுவதை விடப் பெரிய அளவிலான, கடல்வழித் தாக்குதல் மற்றும் நாட்டின் உட்புற ஊடுருவல் என இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையையே சுட்டிக்காட்டுகிறது.

வளைகுடாப் பிராந்தியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இரண்டு தாக்குதல் அணிகளில் உள்ள சுமார் 4,500 கடற்படையினர்களுடன் இந்த இராணுவப் பிரிவினரும் இணைந்த கொள்வார்கள். ஓகினாவாவிலிருந்து 2,200 கடற்படையினர்களுடன் வரும் USS திரிப்போலி என்ற போர்க் கப்பல் வெள்ளிக்கிழமை வந்தடைய உள்ளது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. மேலும், 2,500 கடற்படையினர்களைக் கொண்ட இரண்டாவது அணியான USS Boxer, கடந்த வாரம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்டுள்ளது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிப்பதாக ட்ரம்ப் கூறிய அதே நாளில் தான் இந்த துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டனர். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று 48 மணி நேரக் காலக்கெடுவை ட்ரம்ப் விதித்திருந்தார். ஆனால், திங்களன்று தனது போக்கை மாற்றிக்கொண்ட அவர், அமெரிக்காவும் ஈரானும் “மத்திய கிழக்கில் நிலவும் பகையை முழுமையாகத் தீர்ப்பது குறித்த உரையாடல்களை” நடத்தியுள்ளதாக ட்ரூத் சமூக வலைத் தளத்தில் அறிவித்தார். மேலும், ஈரானிய மின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளரின் பதவியேற்பு விழாவில் பேசிய ட்ரம்ப்: “நாங்கள் இதில் வெற்றி பெற்றுவிட்டோம். இந்தப் போர் வெல்லப்பட்டுவிட்டது,” என்று அறிவித்தார். போரின் நிலையைப் பற்றி அவர் விவரிக்கும்போது, அவர் தெளிவற்ற நிலையிலும், வார்த்தைகளை உழற விட்டபடியும் காணப்பட்டார்: “அவர்களின் தலைவர்கள் எவரும் மிஞ்சவில்லை. தலைவர்கள் அனைவரும் போய்விட்டனர். யாரிடம் பேசுவது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் நாங்கள் சரியான நபர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளனர்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரானின் அரசியல் தலைவர்களை திட்டமிட்டுப் படுகொலை செய்தது குறித்து ட்ரம்ப், “இதைச் சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை, ஆனால் நாங்கள் அவர்களின் அனைத்துத் தலைவர்களையும் கொன்றுவிட்டோம். அதன் பிறகு அவர்கள் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடினார்கள், அவர்களையும் நாங்கள் கொன்றுவிட்டோம்” என்று தற்பெருமையுடன் கூறினார்.

ட்ரம்ப்பிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், ட்ரம்பின் பேச்சுவார்த்தை என்பது ஒரு பாரிய படுகொலைக்கான மூடிமறைப்பு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகப் பேசினார். “நாங்கள் குண்டுகள் மூலமே பேச்சுவார்த்தை நடத்துகிறோம்,” “நாங்கள் தெஹ்ரானுக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது உங்களுக்குத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன” என்று அவர் அறிவித்தார். போரின் முதல் கணத்திலிருந்தே “எதிரியை எவ்வளவு கொடூரமாக முடியுமோ அவ்வளவு கொடூரமாக நெருங்கி அழிக்க” இராணுவத்திற்கு உத்தரவிட்டதற்காக அவர் ஜனாதிபதியைப் பாராட்டினார்.

வழக்கம்போல, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “ஈரானில் இராஜதந்திரத்தின் மூடுபனி” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கணக்கீடுகளை வெளிப்படையாகக் கூறியது. “போர் தீவிரமடைவதைத் தடுப்பதற்கான புதிய காலக்கெடு வெள்ளிக்கிழமை ஆகும். அன்றுதான் சுமார் 2,200 கடற்படையினர்கள் இந்தப் பிராந்தியத்திற்கு வந்து சேர உள்ளனர்” என்று அது எழுதியது. அது ஒரு கேள்வியையும் எழுப்பியது: “இந்த ஆட்சியானது (ஈரான்), திரு. ட்ரம்ப் தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தும் வகையில் அவருக்கு மீண்டும் சவால் விடுமா? ஆரம்பத்திலிருந்தே இதுதான் ஜனாதிபதியின் திட்டமாக இருந்ததா? இதற்கான தெளிவான பதில், ஆம் என்பதுதான்.”

மேலும், “அடுத்த கட்டமாக, இவர்களுடன் மற்றொரு கடற்படையின் அதிரடிப்படை, கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் 82-வது வான்வழிப் படையைச் சேர்ந்த ஒரு போர் பிரிகேடும் இணையக்கூடும்” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்தது.

அமெரிக்கப் படைகளின் வருகையையும், அதே நேரத்தில் ட்ரம்ப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசுவதையும் சுட்டிக்காட்டிய அந்த இதழ், “இதை ட்ரம்ப் பாணி இராஜதந்திரம் என்று அழையுங்கள்: ஒரு கை (சமாதானத்திற்காக) நீட்டப்படும்போதே, மற்றொரு கை ஒரு பலமான குத்து விடுவதற்காகத் தயாராகிறது” என்று எழுதியது.

தரைப் படைகளை நிலைநிறுத்துவதற்கு ஆதரவாக வாதிடும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தத் தவறினால், அது ஒரு மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படும் என்றும், ஈரானை இராணுவ ரீதியாக அடக்குவது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்றும் வாதிட்டுள்ளது. “இப்போது இந்த ஆட்சிக்கு (ஈரான்) பணிந்து போவது என்பது, உலகத்தின் தலைக்கு நேராக ஈரானியத் துப்பாக்கியை நீட்டுவதற்குச் சமம் என்பதையும், எரிசக்தி விநியோகத்தின் மீதான ஒரு நிரூபிக்கப்பட்ட வீட்டோ அதிகாரத்தை அவர்களிடம் விடுவதாகும் என்பதையும் அவர் (ட்ரம்ப்) அறிவார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அந்த இதழ் எழுதியுள்ளது. மேலும், “நாட்டில் நிலவும் அதிக எண்ணெய் விலையால் ஏற்படும் அரசியல் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது என்று உலகம் — அதாவது சீனா மற்றும் ரஷ்யா — முடிவு செய்துவிடக்கூடும்,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக நீடித்த குண்டுவீச்சுகளில் ஆயிரக்கணக்கான ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்பட்டன, மேலும் முழுப் பகுதிகளும் இடிபாடுகளாக மாறின. மினாபில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவிகள் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர், உளவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மற்றும் டசின் கணக்கான மூத்த அதிகாரிகள் தெஹ்ரானின் அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கோடி மக்கள் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக வெளி உலகத்துடனான தொடர்பை இழந்துள்ளனர்.

மனித உரிமைகள் அமைப்பான HRANA, குறைந்தது 217 குழந்தைகள் உட்பட 1,443 பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ளது — ஆனால், 23 நாட்களாகத் தொடரும் இந்த முழுமையான தகவல் தொடர்பு முடக்கத்தால், உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிச்சயமாக இதைவிடப் பல மடங்கு அதிகமாகவே இருக்கும். பிப்ரவரி 28 முதல் ஈரானின் 9 கோடி மக்கள் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்; இந்த முடக்கத்தால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு நாளொன்றுக்கு 35.7 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. திங்களன்று வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இஸ்ஃபஹானில் உள்ள எரிவாயு நிலையங்கள் தாக்கப்பட்டு பகுதியளவு சேதமடைந்தன. சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் சமையல் மற்றும் வெப்பமூட்டும் எரிபொருள் விநியோகத்தைப் பாதித்துள்ளன. இந்த மோதலில் இதுவரை 14 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானில், ஈரான் போரின் போர்வையில், இஸ்ரேல் தெற்குப் பகுதியில் ஒரு முழு அளவிலான தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கியுள்ளது. மார்ச் 2 முதல் இதுவரை 118 குழந்தைகள் மற்றும் 40 மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 1,072 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,966 பேர் காயமடைந்துள்ளனர். 12 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் — அதாவது ஐந்து லெபனானியர்களில் ஒருவர் — தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், காஸாவில் இஸ்ரேல் பயன்படுத்திய அழிவு முறைகளைக் குறிப்பிட்டு, “பீட் ஹனூன் மற்றும் ரஃபா மாதிரிகளைப் பின்பற்றி, எல்லைக் கிராமங்களில் உள்ள லெபனானிய வீடுகளை இடிப்பதை விரைவுபடுத்துமாறு” உத்தரவிட்டுள்ளார். நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், லிட்டானி நதியை “லெபனான் நாட்டுடனான நமது புதிய எல்லை” ஆக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கொல்லப்பட்டவர்களில், ஐந்து வயது சிறுமி தாலின் ஷெஹாபும் ஒருவர். அந்தச் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் கொல்லப்பட்டாள். அவளது தந்தையும் கொல்லப்பட்டார், தாய் கோமா நிலையில் உள்ளார்.

லிட்டானி நதியின் குறுக்கே உள்ள ஐந்து பாலங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தகர்த்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தெற்குப் பகுதியைத் துண்டித்துள்ளது. “தெற்கு லெபனானில் இருந்து வடக்கு நோக்கி வெளியேறிய இலட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள், இனி லிட்டானி நதிக்குத் தெற்கே திரும்ப மாட்டார்கள்” என்று காட்ஸ் அறிவித்தார். திங்களன்று பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று வயது சிறுமி உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். லெபனான் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஹுசைன் பாஸி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஐன் ஈபெல் கிராமத்தில் செயற்கைக்கோள் கருவியை பழுதுபார்த்துக் கொண்டிருந்த மூன்று கிறிஸ்தவ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது, ஆனால் அவர்கள் ஹிஸ்புல்லாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் என்று அந்த ஊர் மக்கள் மறுத்துள்ளனர். லெபனான் அரசாங்கம் ஈரானின் தூதரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், ட்ரம்பின் செல்வாக்கு 36 சதவீதமாகக் குறைந்துள்ளது —இது அவர் மீண்டும் பதவியேற்றதிலிருந்து மிகக் குறைந்த அளவாகும்— 61 சதவீத மக்கள் இந்த இராணுவத் தாக்குதல்களை எதிர்க்கின்றனர், மேலும் வாழ்க்கைச் செலவினங்களை அவர் கையாளும் விதத்தை வெறும் 25 சதவீதத்தினர் மட்டுமே ஆதரிக்கின்றனர்.

Loading