மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடங்கி ஒரு மாதமாகிவிட்ட நிலையில், அமெரிக்கா வேகமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பால் அதிர்ந்து போயுள்ளது.
ஆளும் வர்க்கமானது வெளிநாட்டில் போரைத் தீவிரப்படுத்தும் அதே வேளையில், உள்நாட்டில் வேலைவாய்ப்புப் அழிப்பை நடத்தி அடக்குமுறையைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதே காலப்பகுதியில், போர் பணவீக்க அதிர்ச்சிகளையும் பொருளாதார சீர்குலைவையும் தூண்டி வரும் நிலையிலும், சுகாதாரம், கல்வி, பொதுச் சேவைகள், உற்பத்தி, உணவு உற்பத்தி மற்றும் இதர துறைகளில் குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்களும் வேலைநிறுத்த அச்சுறுத்தல்களும் பரவியுள்ளன — இப்போராட்டங்களைத் தொழிற்சங்க எந்திரம் தனிமைப்படுத்தி முடக்க வேலை செய்து வருகின்றது.
உணவு பதப்படுத்தும் துறையில், கொலராடோவின் கிரீலியில் உள்ள JBS இறைச்சி சிப்பமிடும் ஆலையில் நடக்கும் போராட்டம் மிக முக்கியமானது. மார்ச் 16 அன்று, நாட்டிலேயே மிகப்பெரிய மாட்டிறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் ஒன்றான இங்குள்ள ஐக்கிய உணவு மற்றும் வணிகத் தொழிலாளர்கள் (UFCW) சங்கத்தின் சுமார் 3,800 உறுப்பினர்கள், 1980-களுக்குப் பிறகு அமெரிக்க மாட்டிறைச்சி அறுப்புக் கூடத்தில் நடந்த முதல் வேலைநிறுத்தத்தில் வெளிநடப்பு செய்தனர். இந்தத் தொழிலாளர்களில் பெரும் பெரும்பான்மையானவர்கள் புலம்பெயர்ந்தவர்கள், அவர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் பரந்த அளவிலான தாக்குதல்களுக்கு எதிராக இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
UFCW எந்திரமானது இப்போராட்டத்தை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்குள் முடக்கிவைக்க முயன்று, வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் சுயமாகத் திணித்துக் கொண்ட இரண்டு வார கால வரம்பை அது அறிவித்துள்ளது— இது, நிறுவனம் “பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பும்” என்ற தெளிவற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில், தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாகும்.
இதர மோதல்களில், மார்ச் 21 அன்று தொடங்கிய மினசோட்டாவின் பெயின்ஸ்வில்லில் உள்ள AMPI பால் பண்ணைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், நிறுவனத்தின் “சிறந்த சலுகையை” தொழிலாளர்கள் பெருமளவில் நிராகரித்த பின்னர் மார்ச் 23 அன்று தொடங்கிய வாஷிங்டனின் கிராண்ட்வியூவில் உள்ள வெல்ச்ஸ் (Welch’s) ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் அடங்கும். விஸ்கான்சினின் ஸ்டோட்டனில் உள்ள B&G Foods நிறுவனத்தின் டீம்ஸ்டர்ஸ் (Teamsters) தொழிலாளர்கள் இந்த வாரம் 98 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வாக்களித்துள்ளனர். அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் உணவுக்கூடம் மற்றும் உணவுச் சேவைத் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானபோது 99 சதவீத வாக்குகளுடன் வேலைநிறுத்தத்திற்கு அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து, அராமார்க் (Aramark) நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 24 அன்று பெரும் ஊதிய உயர்வு கோரி ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்.
கல்வித்துறையில், பல நிலைகளில் முக்கியப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. மிக அண்மையில், நியூயார்க் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்த வாரம் ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட நிலைமைகளைக் கோரி வெளிநடப்பு செய்தனர். ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்க (UAW) அதிகாரத்துவமானது இரண்டு நாட்களுக்கும் குறைவான காலத்திலேயே வேலைநிறுத்தத்தை நிறுத்த முற்பட்டது, ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்று தொழிலாளர்களுக்குத் தெரியுமுன்னரே, அவர்கள் வாக்களிப்பதைக் கூட விட்டுவிட்டு, வேலைநிறுத்தத்தை “நிறுத்தி” வைத்தது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற “அரசியல்” விவகாரங்களை உள்ளடக்கிய வேலைநிறுத்த நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபட்டால், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உள்ளூர் கிளையை “நேரடிக் கட்டுப்பாட்டின்” கீழ் கொண்டு வருவோம் என்ற UAW-வின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
மார்ச் 11 அன்று, 50,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் ஓரிகானின் மிகப்பெரிய கம்யூனிட்டி கல்லூரியான போர்ட்லேண்ட் கம்யூனிட்டி கல்லூரி தொழிலாளர்கள், 94 சதவீத வாக்குகளுடன் வேலைநிறுத்தத்திற்கு அங்கீகாரம் அளித்த பின்னர், ஓரிகான் கம்யூனிட்டி கல்லூரி வரலாற்றிலேயே முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இந்த வேலைநிறுத்தம் இப்போது அதன் மூன்றாவது வாரத்தில் உள்ளது.
K-12 (பள்ளி கல்வி) மற்றும் உயர்கல்வித் துறை முழுவதும், வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கம் நாடு தழுவிய தாக்குதலாக வெடிப்பதைத் தடுக்க தொழிற்சங்க எந்திரம் வேலை செய்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவில், ட்வின் ரிவர்ஸ் மற்றும் நட்டோமாஸில் நடந்த ஆசிரியர் வேலைநிறுத்தங்கள் — அந்த மாவட்டங்களின் வரலாற்றில் முதல் முறையாக நடந்தவை — விரைவான தீர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன; அதே நேரத்தில் கடந்த மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நான்கு நாள் வேலைநிறுத்தம் ஆத்திரத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் அடிப்படையான நெருக்கடியைத் தீர்க்காத ஒரு ஒப்பந்தத்திற்குள் திசைதிருப்பப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில், SEIU99-இல் உள்ள வகைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உட்பட 68,000 தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 14-ஆம் தேதியை வேலைநிறுத்தக் காலக்கெடுவாக யுனைடெட் டீச்சர்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் (United Teachers Los Angeles) அறிவித்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில் உள்ள 48,000 கல்வித்துறை தொழிலாளர்கள் பிப்ரவரியில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க வாக்களித்தனர், ஆனால் இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) உள்ளூர் கிளை 4811 , அமைப்பு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் நோக்கில் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அறிவித்தது. தொழிலாளர்கள் ஒப்பந்தம் இல்லாமலேயே கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வேலையில் வைக்கப்பட்டனர், பின்னர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் அவர்களுக்கு முன்வைக்கப்பட்டது.
உற்பத்தித் துறையில், மைனில் உள்ள ஜெனரல் டைனமிக்ஸ் பாத் அயர்ன் வொர்க்ஸில் (General Dynamics Bath Iron Works) நடைபெறும் வேலைநிறுத்தமே அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாகும். பாத் மரைன் வரைவாளர் சங்கம் (Bath Marine Draftsmen’s Association), UAW உள்ளூர் கிளை 3999-ஐச் சேர்ந்த 620-க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள், எழுத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், கப்பல் கட்டும் தளத்தின் ஊதிய முன்மொழிவை நிராகரித்த பிறகு இந்த வாரம் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களை வடிவமைப்பதிலும், உருவாக்குவதிலும் இன்றியமையாதத் திறன் கொண்ட தொழிலாளர்கள் ஆவர்; இவர்களின் பங்களிப்பு இன்றி, கடற்படையின் நாசகாரிக் கப்பல்களை வடிவமைப்பதோ அல்லது உருவாக்குவதோ சாத்தியமற்றது. அவர்கள் ஒரு சாதாரண “முதலாளியை” மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக அமெரிக்கப் போர் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தைச் சார்ந்து லாபம் ஈட்டும் ஒரு முக்கிய இராணுவ ஒப்பந்ததாரரை எதிர்கொள்கின்றனர்.
மார்ச் 24 அன்று, ஓஹியோவின் ஃபின்ட்லேயில் உள்ள ஃப்ராய்டன்பெர்க்-நோக் (Freudenberg-NOK) நிறுவனத்தின் தொழிலாளர்களான உள்ளூர் கிளை 1327-இன் உறுப்பினர்கள், அந்த ஆலையின் வரலாற்றிலேயே முதல் முறையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஃப்ராய்டன்பெர்க்-நோக் என்பது வாகன மற்றும் தொழில்துறை விநியோகச் சங்கிலிகளுக்கு அவசியமான சீலிங் தொழில்நுட்பங்களைத் தயாரிக்கும் ஒரு உலகளாவிய நிறுவனமாகும், இது அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
வாஷிங்டன் ஈரான் மீதான தனது தாக்குதலுக்குத் தயாராகி வந்த நிலையில், சுத்திகரிப்பு நிலையங்களின் தடையற்ற உற்பத்தியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐக்கிய எஃகு தொழிலாளர் சங்கத்தினால் (USW) திணிக்கப்பட்ட சலுகைகளை விட்டுக் கொடுக்கும் “மாதிரி” ஒப்பந்தத்தைத் தொடர்ந்து — இண்டியானாவின் வைட்டிங் ஆலையில் உள்ள சுமார் 900 தொழிலாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான கதவடைப்பு உள்ளிட்ட வெளிப்படையான வேலைநிறுத்த முறியடிப்பு நடவடிக்கைகளுடன் BP நிறுவனம் பதிலளித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரத்தின் மூன்று மருத்துவமனைகளில் 15,000 செவிலியர்கள் நடத்திய 41 நாள் வேலைநிறுத்தம் மற்றும் கலிபோர்னியா, ஹவாயில் உள்ள கைசர் பெர்மனென்ட் (Kaiser Permanente) நிறுவனத்தைச் சேர்ந்த 31,000 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்ட வெளிநடப்பு ஆகிய முக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மீண்டும் புதிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான பராமரிப்பிற்கு “பணம் இல்லை” என்று கூறிக்கொண்டே, வேலைப்பளுவை அதிகரிப்பதையும், பணியாளர்கள் குறைப்பையும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்றன.
மார்ச் 18 அன்று, வடக்கு கலிபோர்னியா முழுவதும் சுமார் 2,400 கைசர் (Kaiser) மனநல சிகிச்சையாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்; அவர்களுடன் ஆயிரக்கணக்கான செவிலியர்களும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆதரவு நடவடிக்கையில் இணைந்தனர்.
ஓஹியோவில், லோரைன் கவுண்டி வேலை மற்றும் குடும்பச் சேவைகள் துறையின் 140 தொழிலாளர்கள் — வழக்கு விசாரணை அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மற்றும் சமூக சேவை ஊழியர்கள், UAW உள்ளூர் கிளை 2192-இன் உறுப்பினர்கள் — சிறந்த ஊதியம், சலுகைகள் மற்றும் பணி நிலைமைகளுக்காக ஐந்தாவது வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முதியோர் மீதான துன்புறுத்தல் விசாரணைகள் மற்றும் வீட்டு பராமரிப்பு ஆய்வுகள் முதல் SNAP (உணவு முத்திரைகள்) மற்றும் குறைந்த வருமானம் கொண்டோருக்கான அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான மெடிகெய்ட் (Medicaid) ஆதரவு வரை, அத்தியாவசியத் திட்டங்களையும் பாதுகாப்புகளையும் நிர்வகிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தப் போராட்டங்கள் — ஒவ்வொன்றிலும் உள்ள உடனடிப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் — ஒரு பொதுவான அடிப்படை யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன: தீவிரமடைந்து வரும் சுரண்டல், திகைக்க வைக்கும் சமத்துவமின்மை, பெருநிறுவன வேலைவாய்ப்பு அழிப்பு மற்றும் சமூகத்தின் வளங்கள் போருக்குத் திசைதிருப்பப்படுதல் ஆகியவற்றுக்குத் தொழிலாளர்கள் அளிக்கும் பதிலளிப்பு இதுவாகும்.
ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைவதால் இந்த முரண்பாடுகள் கடுமையாக அதிகரிக்கும். இந்த மோதலானது ஏற்கனவே எரிவாயு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தரைவழிப் படையெடுப்புத் திட்டங்கள் மற்றும் மேலும் 200 பில்லியன் டாலர் போர் நிதி கோரிக்கை உட்பட ஒரு முக்கிய புதிய விரிவாக்கத்திற்குத் தயாராகி வருகிறது. ஊதியம், பணியாளர்கள் நியமனம், பள்ளிகள், வீட்டுவசதி அல்லது சுகாதாரத்திற்காக “பணம் இல்லை” என்று தொழிலாளர்களுக்கு கூறப்படும் வேளையில், குண்டுகள், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் பிற அழிவுச் சாதனங்களுக்காக வரம்பற்ற தொகைகள் கோரப்படுகின்றன.
இந்த விரிவடைந்து வரும் வேலைநிறுத்த இயக்கம், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. அதே சமயம், தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் மூலம் போரை நிறுத்துவதற்கான புறநிலை வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு கட்டத்திலும், தொழிற்சங்க எந்திரமானது இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்கே செயல்படுகிறது. இது வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்துகிறது, செயற்கையான காலக்கெடுவை விதிக்கிறது, அவசர வாக்குப்பதிவுகள் மற்றும் இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் போராட்டங்களை முடக்குகிறது, மேலும் பெருநிறுவனங்களும் அரசும் எதை “ஏற்றுக்கொள்ளத்தக்கது” என்று கருதுகிறதோ அதற்குள்ளேயே தொழிலாளர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
வெடித்துள்ள இந்த வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தில் குவிந்து வரும் சமூக ஆத்திரத்தின் ஆழத்தின் ஒரு மங்கலான பிரதிபலிப்பு மட்டுமேயாகும்; மேலும் தொழிற்சங்க எந்திரத்தின் நேரடி அன்றாடக் கட்டுப்பாடு குறைவாக உள்ள இடங்களிலேயே அவை மிகத் தீவிரமாக வெடிக்க முனைகின்றன. மேற்பரப்பிற்கு அடியில் ஒரு பொது வேலைநிறுத்தம் உட்பட, பரந்த, ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான ஒரு சக்திவாய்ந்த உணர்வு நிலவுகிறது. ஆனால், இதற்கான முதன்மையான தடையானது தொழிற்சங்க எந்திரமேயாகும்: இது வருமானம் ஈட்டுபவர்களில் மேல்தட்டு 5 சதவீதத்தினருக்குள் அடங்கும் அதிக ஊதியம் பெறும் அதிகாரிகளின் ஒரு அடுக்காகும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), ஒவ்வொரு பணியிடத்திலும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது. அதாவது, இவை தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து போராட்டங்களை இணைக்கவும், தனிமைப்படுத்தலைத் தோற்கடிக்கவும், மற்றும் வேலைநீக்கங்கள், சிக்கன நடவடிக்கைகள், அடக்குமுறை மற்றும் போருக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை ஒழுங்கமைக்கவும் கூடிய ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாகும். இத்தகைய அமைப்புகளின் அவசியமானது, தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள போராட்டங்களின் இயல்பான தர்க்கத்திலிருந்தும், தொழிற்சங்க எந்திரத்தின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்திலிருந்தும் எழுகிறது
இந்தக் குழுக்கள் சர்வதேச அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம் ஒரு உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாகும். அவர்கள் உலகம் முழுவதும் அதே பெருநிறுவன தன்னலக்குழுக்களையும், அதே தேசியவாதப் போர் உந்தலையும் எதிர்கொள்கின்றனர். முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் போர்வெறிக்கு, எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்படும் தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமையே பதிலாகும்.
இத்தகையதொரு இயக்கத்தின் எழுச்சியானது, உடனடியாகத் தொழிலாளர்களை ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் எதிராக நிறுத்துகிறது. ஈரானுக்கு எதிரான போர் உட்பட ட்ரம்பின் அடிப்படை நோக்கங்களை ஜனநாயகக் கட்சியினரும் பகிர்ந்து கொள்கின்றனர்; அவர்கள் தந்திரங்கள் மற்றும் அவற்றை முன்வைக்கும் முறையில் மட்டுமே வேறுபடுகின்றனர். சமூக எதிர்ப்பின் வெடிப்புமிக்க வளர்ச்சியானது, முதலாளித்துவ அமைப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடிய, அடிமட்டத்திலிருந்து உருவாகும் ஒரு நனவான இயக்கமாக மாறுவதைத் தடுப்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாகும்.
ஆனால், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு, அதாவது நிகழ்வுகளின் போக்கில் அதன் “நேரடித் தலையீடுதான்” தீர்மானகரமான காரணியாகும். போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்களிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம் அவை முடிவுக்கு வராது; மாறாக, போர் இயந்திரத்தை நிறுத்தவும், அடக்குமுறையை எதிர்க்கவும், பணியிடங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து போராட்டங்களை இணைக்கவும் தொழிலாளர்களின் சமூக சக்தியை அணிதிரட்டுவதன் மூலமே அவை முடிவுக்கு வரும். பெருகி வரும் கோபத்தைக் காட்டுமிராண்டித்தனமான உந்துதலுக்கு எதிராகத் திருப்பி, மனிதகுலத்திற்குப் புதிய வழியைக் காட்டக்கூடிய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக அதனை மாற்றுவதற்குச் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வளர்ச்சி அவசியமான அடிப்படையாகும்.
