மத்திய கிழக்கில் அமெரிக்கா படைகளைக் குவித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக "நரகத்தை கட்டவிழ்த்து விடுவோம்" என வெள்ளை மாளிகை எச்சரிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தேசிய குடியரசுக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (NRCC) வருடாந்திர நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். மார்ச், 25, 2025, புதன்கிழமை [AP Photo/Julia Demaree Nikhinson]

ட்ரம்ப் நிர்வாகம் ஆயிரக்கணக்கான தரைப் படையினர்களை பாரசீக வளைகுடா நோக்கி அனுப்பி வரும் நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் மீதான ஆக்கிரமிப்புப் போரை மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்போவதாக வெள்ளை மாளிகை புதன்கிழமை அன்று அச்சுறுத்தியுள்ளது.

“ஈரான் தற்போதைய யதார்த்தத்தை ஏற்கத் தவறினால், தாம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டோம் மற்றும் தோற்கடிக்கப்படுவோம் என்பதை புரிந்துகொள்ளத் தவறினால், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்படுவதை ஜனாதிபதி ட்ரம்ப் உறுதி செய்வார்,” என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் அறிவித்தார். “ஜனாதிபதி ட்ரம்ப் வெற்று மிரட்டல் விடுபவர் அல்ல, அவர் நரகத்தை அவிழ்த்துவிடத் தயாராக இருக்கிறார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஈரானில் வெற்றியின் விளிம்பில் உள்ளது என லீவிற் கூறினார். “அதனால்தான் அந்த ஆட்சி (ஈரான் அரசு) வெளியேறுவதற்கான வழியைத் தேடுவதை நீங்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

பொதுவாக மோதல்களின் தொடக்கத்தில் அனுப்பப்படும் 82-வது வான்வழிப் படை, தற்போது அனுப்பப்படுவது, போர் முடிவுக்கு வருகிறது என்ற கூற்றுடன் எப்படி ஒத்துப்போகும் என்று ஒரு செய்தியாளர் லெவிட்டிடம் கேட்டார். இந்தப் பிரச்சினையைத் தவிர்த்த லெவிட், “ஜனாதிபதி தனது விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரங்களைத் தன்னிடம் வைத்திருக்க விரும்புகிறார். தலைமைத் தளபதிக்கு அந்த விருப்பங்களை வழங்குவது பென்டகனின் கடமையாகும்’ என்றார்.

பல அறிக்கைகளின்படி, 82வது வான்வழிப் பிரிவின் திடீர் தாக்குதல் படையைச் சேர்ந்த 2,000 முதல் 3,000 வரையிலான பராசூற் சிப்பாய்கள் மத்திய கிழக்குக்குச் செல்வதற்கான எழுத்துப்பூர்வமான பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். 82வது பராசூற் பிரிவு என்பது, போர் மண்டலங்களுக்குள் விரைவாக ஊடுருவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உயரடுக்கு இராணுவ பராசூற் படையாகும் — பென்டகன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தாக்குதல் நடத்த விரும்பும் போது மட்டுமே இந்தப் படைப்பிரிவை அனுப்பும்.

தற்போது பாரசீக வளைகுடாவை நெருங்கிக் கொண்டிருக்கும் இரண்டு கடற்படை தரைவழி தாக்குதல் அணிகளுடன் இந்த பராசூற் துருப்புக்களும் இணைந்து கொள்வார்கள். இதில் 31-வது கடற்படை அதிரடிப்படையின் (MEU) 2,200 சிப்பாய்களைக் கொண்ட திரிபோலி என்ற போர்க் கப்பலும், கடந்த வாரம் சான் டியாகோவில் இருந்து 11-வது MEU-வின் 2,500 சிப்பாய்களுடன் புறப்பட்ட பொக்ஸர் என்ற போர்க்கப்பலும் அடங்கும். ஈரானின் மின்சாரக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்களுக்கு ட்ரம்ப் அறிவித்த ஐந்து நாள் “இடைநிறுத்தம்” முடிவடையும் வெள்ளிக்கிழமை அன்று, திரிபோலி போர்க்கப்பல் அந்தப் பகுதியை வந்தடையும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலிலும், ஜனவரியில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதிலும் மற்றும் தற்போதைய போரிலும், ட்ரம்ப், இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஒரு மூடிமறைப்பாகப் பயன்படுத்தியுள்ளார். அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த யுத்த அமைச்சர் பீட் ஹெக்ஸெத், அந்தப் பாசாங்கை முற்றிலுமாகத் தவிர்த்தார்: “நாங்கள் குண்டுகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறோம். நாங்கள் தெஹ்ரானின் மேல் வட்டமிடும்போது, ​​உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது.” “முதல் கணத்திலிருந்தே எதிரியை முடிந்தவரை மூர்க்கத்தனமாக நெருங்கி அழிக்குமாறு” இராணுவத்திற்கு உத்தரவிட்டதற்காக அவர் ஜனாதிபதியை பாராட்டினார்.

பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு 15 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ட்ரம்ப் நிர்வாகம் அனுப்பியதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் பர்டோ ஆகிய இடங்களில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்தல், யுரேனியம் செறிவூட்டலுக்கு நிரந்தரத் தடை, செறிவூட்டப்பட்ட அனைத்து யுரேனியத்தையும் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைத்தல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்குக் கட்டுப்பாடு மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல் ஆகியவை அந்த கோரிக்கைகளில் அடங்கும். இந்தக் கோரிக்கைகள் ஈரானின் இறையாண்மையை முற்றிலும் கைவிடுவதற்குச் சமமானவை—அதாவது தற்போது தன் மீது குண்டுவீசித் தாக்கும் ஒரு அரசாங்கத்திடமே தனது பாதுகாப்புத் திறன்களை ஒப்படைப்பதாகும். இந்த 15 அம்சப் பட்டியல் ஈரான் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. திங்களன்று ட்ரம்ப், ஈரான் இதனை ஏற்கவில்லை என்றால், “நாங்கள் எங்களால் முடிந்தவரை தொடர்ந்து குண்டுவீசுவோம்” என்று கூறினார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரகை, ட்ரம்ப் நிர்வாகத்தின் கணக்கீடுகளை வெளிப்படையாகக் கூறியது. “மோதல் தீவிரமடைவதைத் தடுப்பதற்கான புதிய காலக்கெடு வெள்ளிக்கிழமை ஆகும், அன்று சுமார் 2,200 கடற்படையிர்கள் இப்பகுதிக்கு வர உள்ளனர்,” என்று அந்த பத்திரிகை எழுதியது. “இந்த ஆட்சி (ஈரான் அரசு) மீண்டும் திரு. ட்ரம்ப்பின் எச்சரிக்கையைச் சோதித்துப் பார்க்குமா? இதுதான் ஜனாதிபதியின் ஆரம்பகாலத் திட்டமா?” என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு அந்தச் செய்தித்தாளே பதிலளித்தும் இருந்தது: “இதை ட்ரம்ப் பாணி இராஜதந்திரம் என்று சொல்லலாம்: ஒரு கை சமாதானத்திற்கு நீட்டப்படும் போதே, மற்றொரு கை தாக்குதலுக்காகத் தயாராகிறது.”

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாளும் முனையமான கார்க் தீவின் மீதான அமெரிக்கத் தாக்குதல் எவ்வாறு நிகழக்கூடும் என்பது குறித்த விரிவான மதிப்பீட்டை பைனான்சியல் டைம்ஸ் செவ்வாயன்று வெளியிட்டது. இராணுவ ஆய்வாளர்கள் “போர்க் களத்தைத் தயார் செய்தல்” என்று விவரித்த நடவடிக்கையில், அமெரிக்கப் படைகள் ஏற்கனவே அத்தீவில் உள்ள கடற்படை கண்ணிவெடிக் கிடங்குகள் மற்றும் ஏவுகணைப் பதுங்கு குழிகள் உட்பட 90-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அது தெரிவித்தது. இந்த இராணுவ நடவடிக்கையில், அமெரிக்க கடற் படையினர் V-22 ஆஸ்ப்ரே டில்ட்-ரோட்டர் விமானம் மூலமாகவோ அல்லது கடல் வழியாகவோ தரையிறங்குவார்கள். மேலும், 82-வது வான்வழிப் படை மற்றும் இராணுவ ரேஞ்சர்ஸ் படையினர், முக்கியத் தாக்குதல் படைக்கு முன்னதாகவே நிலப்பரப்பைக் கைப்பற்றக்கூடும்.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் முன்னாள் உளவுத்துறை இயக்குனர் கரேன் கிப்சன், அமெரிக்காவால் அந்தத் தீவை இராணுவ ரீதியாகக் கைப்பற்ற முடியும் என்றாலும், சவால் என்பது “தீவைக் கைப்பற்றுவது மட்டுமல்ல... தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான்” என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம், கூறினார். கார்க் தீவானது ஈரானிய பெருநிலப்பரப்பிலிருந்து வெறும் 15 மைல் தொலைவில், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளின் தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. பைனான்சியல் டைம்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால், அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகள் “கிட்டத்தட்ட உறுதியானவையே”.

அமெரிக்க சிறப்பு நடவடிக்கை மையத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான சேத் க்ரும்ரிச், கார்க் தீவைக் கைப்பற்றும் எந்தவொரு நடவடிக்கையும் “முற்றிலும் மாறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான ஒரு களத்தில்” நடத்தப்படும் ஒரு “பொருளாதாரப் போர்” என்று அந்தப் பத்திரிகையிடம் கூறினார். “நவம்பரில் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில்,” இதை அமெரிக்க மக்களிடம் நியாயப்படுத்துவது கடினமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நடவடிக்கை வெற்றி பெற்றாலும் கூட, ஈரான் தனது எண்ணெய் உள்கட்டமைப்பை ஒப்படைப்பதற்குப் பதிலாக அதை அழிக்கக்கூடும் என்றும், மேலும் இந்தக் கைப்பற்றல் “ஈரான் போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சிறிய மாற்றத்தையே ஏற்படுத்தும்” என்றும் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஈரானின் ஆயுதத் திட்டங்களை அழிப்பது உள்ளிட்ட தனது இலக்குகளை இஸ்ரேல் அடையும் முன்பே ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவாரோ என்ற கவலையில், அடுத்த 48 மணி நேரத்தில் ஈரான் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தனர். அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலை எதிர்பார்த்து, கார்க் தீவில் கூடுதல் இராணுவ படையினர்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் நகர்த்தி, ஈரான் தனது பாதுகாப்புகளை வலுப்படுத்தி வருவதாக சி.என்.என் புதன்கிழமை செய்தி வெளியிட்டது.

கடந்த நான்கு வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 28 முதல் ஈரானின் 9 கோடி மக்கள் வெளிநாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், இதுவரை 217 குழந்தைகள் உட்பட 1,443 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக HRANA (மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம்) உறுதிப்படுத்தியுள்ளது. மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளியின் மீது நடத்தப்பட்ட ஒரே ஒரு தாக்குதலில் மட்டும் 168 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது. செவ்வாயன்று தெற்கு தெஹ்ரானில் மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனானில், மார்ச் 2 அன்று தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,072 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,966 ஆகவும் உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 118 பேர் குழந்தைகள் ஆவார். 40 பேர் மருத்துவப் பணியாளர்களும் இறந்தவர்களில் உள்ளடங்குகின்றனர். லெபனானின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் —12 லட்சம் மக்கள்— வடக்கு நோக்கித் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், காஸாவின் பெய்த் ஹனூன் மற்றும் ரஃபா அழிக்கப்பட்டதை தனது முன்மாதிரிகளாகக் குறிப்பிட்டு, எல்லைக் கிராமங்களில் “இடித்தொழிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த” உத்தரவிட்டார். இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், லிட்டானி நதி இஸ்ரேலின் “புதிய எல்லையாக” மாற வேண்டும் என்று அறிவித்தார். லிட்டானி நதியின் குறுக்கே இருந்த ஐந்து பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் லெபனானின் தெற்குப் பகுதி முழுவதும் 30 கிலோமீட்டர் இராணுவ மண்டலமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே ஈரான் மீதான தாக்குதல்களை ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில், 61 சதவீதம் பேர் அவற்றை எதிர்க்கின்றனர். ட்ரம்ப்பின் ஒட்டுமொத்த ஆதரவு மதிப்பீடு 36 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மிகக் குறைந்த அளவாகும். நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் மட்டுமே வாழ்க்கைச் செலவினங்களை அவர் கையாளும் விதத்தை அங்கீகரிக்கின்றனர். பிப்ரவரி 28 முதல் பாரசீக வளைகுடா பகுதியில் 14 அமெரிக்க இராணுவத்தினர்கள் உயிரிழந்துள்ளனர்.

Loading