முன்னோக்கு

மார்ச் 28 “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள்: ஈரானுக்கு எதிரான போருக்கு எதிரான போராட்டமே ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தின் மையத்தில் உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

டெட்ராய்டில் நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” எதிர்ப்புப் போராட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கையால் செய்யப்பட்ட பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

சனிக்கிழமையன்று அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்களும் இளைஞர்களும் “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) என்ற மூன்றாவது சுற்று ஆர்ப்பாட்டங்களில் பேரணிகளை நடத்துகின்றனர். அனைத்து 50 மாநிலங்களிலும் 7,000-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி 2026-ல் மினியாபோலிஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பரவிய அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவிற்கு (ICE) எதிரான மாபெரும் போராட்டங்களுடன் சேர்ந்து, இந்த அணிதிரட்டல்கள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மிகப்பெரிய சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன.

இப்போது பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால்: இந்த எதிர்ப்பு எந்த இலட்சியத்தை நோக்கியும், எந்த அரசியல் அடிப்படையிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்?

ஈரானுக்கு எதிராகத் தீவிரமடைந்து வரும் போருக்கான எதிர்ப்பானது, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் மையத்தில் வைக்கப்பட வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நூரம்பேர்க் விசாரணைகளில் (Nuremberg Trials) நிறுவப்பட்ட தரநிலைகளின்படி, ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவது “மிக உயர்ந்த சர்வதேசக் குற்றம்” ஆகும். அதைத் தொடங்கியவர்கள் போர்க் குற்றவாளிகள். மேலும், காங்கிரஸிலும், ஊடகங்களிலும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திலும் இதற்கு அரசியல் பாதுகாப்பை வழங்குபவர்கள் இந்தக் குற்றங்களில் உடந்தையாக இருப்பவர்கள் ஆவர்.

தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போரின் போக்கு, ஒரு பாரிய தீவிரப்பாட்டை நோக்கியே சந்தேகத்திற்கு இடமின்றிச் செல்கிறது. குறைந்தது 2,200 அமெரிக்கக் கடற்படையினர் இப்பிராந்தியத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளனர். 82-வது வான்வழிப் பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைதிக்காக என்று சொல்லப்படும் ட்ரம்பின் “15-அம்சத் திட்டம்”, ஈரானால் நிராகரிக்கப்படுவதற்காகவும், ஒரு தரைவழி ஆக்கிரமிப்பிற்குச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படுவதற்காகவுமே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நாடான ஈரானுக்கு எதிரான ஒரு தரைப்போர் ஏற்படுத்தும் விளைவுகள், அமெரிக்க மக்கள் எதிர்பார்க்குமாறு கூறப்பட்ட எதையும் விடப் பன்மடங்கு பயங்கரமானதாக இருக்கும். இவை அனைத்திற்கும் பின்னணியில் அணு ஆயுதப் போரின் அபாயம் மறைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிராகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஏற்கனவே அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன. வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரின் தீவிரப்பாடானது, ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களுடன் சேர்ந்து, பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான ஈரானியர்களின் உயிரிழப்பிற்கு வழிவகுக்கும். இதன் பொருளாதார விளைவுகள் ஏற்கனவே உலகப் பொருளாதாரம் முழுவதிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன: ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதிலிருந்து எண்ணெய் விலைகள் 35 சதவீதம் உயர்ந்துள்ளன. இது எரிபொருள், உணவு மற்றும் எரிசக்தியைச் சார்ந்து உற்பத்தி மற்றும் போக்குவரத்து செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.

தற்போதைய செலவினத்தை விட 50 சதவீதம் அதிகமாக, அதாவது 1.5 டிரில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். அதே வேளையில், போருக்காக உடனடி கூடுதல் நிதியாக 200 பில்லியன் டாலர்களையும் அவர் கோருகிறார். இந்தப் பெருந்தொகையானது, பல தசாப்தகாலச் சிக்கன நடவடிக்கைகளால் ஏற்கனவே சீரழிக்கப்பட்டுள்ள அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்திலிருந்தும், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் சமூக சேவைகளிலிருந்தும் நேரடியாகப் பறிக்கப்படும்.

ஈரானுக்கு எதிரான இந்தப் போர் 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிவிடவில்லை. இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இரு தரப்பினரின் கீழும் நடத்தப்பட்ட 47 ஆண்டுகால இடைவிடாத பிரச்சாரத்தின் உச்சகட்டமாகும். 1979 ஈரான் புரட்சியின் முடிவுகளைத் தலைகீழாக மாற்றுவதும், ஈரான் மற்றும் பரந்த மத்திய கிழக்கின் மீது அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதுமே இதன் மாறாத மைய நோக்கமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்புகள் உட்பட பரந்த போருடன் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலானது ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்பிலிருந்து பிரிக்க முடியாதது. பதவியேற்ற முதல் நாளிலிருந்தே, ட்ரம்ப் நிர்வாகம் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சதியாகச் செயல்பட்டு வருகிறது. நாடு தழுவிய அளவில் ICE படையினரின் நிலைநிறுத்தம் விரிவுபடுத்தப்பட்டதோடு, மினியாபோலிஸில் ரெனி நிக்கோல் குட் (Renée Nicole Good) மற்றும் அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) ஆகியோரின் கொலைகளும் நிகழ்ந்துள்ளன. இவை, இந்த ஆட்சி எதைச் செய்யவும் துணிந்துவிட்டது என்பதைக் காட்டும் இரத்தத்தால் எழுதப்பட்ட எச்சரிக்கைகளாகும்.

ட்ரம்ப் நிர்வாகம் இப்போது இந்த அடக்குமுறை ஆட்சியைப் பொது உள்கட்டமைப்புகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. விமான நிலையங்களில் ICE படையினரை நிலைநிறுத்தி, மிக சமீபத்தில் அங்கும் தேசியப் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவதாக அச்சுறுத்தியுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து மையங்களை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களாக மாற்றுவதோடு, அன்றாட வாழ்வில் ஆயுதம் தாங்கிய கூட்டாட்சிப் படைகளின் இருப்பிற்கு மக்களைப் பழக்கப்படுத்தவும் முயல்கிறது. ட்ரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பானன் அப்பட்டமாகக் கூறியது போல், விமான நிலையங்களில் ICE படையினரின் இருப்பு என்பது 2026 இடைக்காலத் தேர்தலுக்கான ஒரு “பரிசோதனை முயற்சி” ஆகும்: இது மக்களை அச்சுறுத்துவதற்கும், தேர்தல்களைச் சீர்குலைப்பதற்கும், ஒரு பகுதி-இராணுவ ஆட்சிச் சூழலை இயல்பானதாக்குவதற்குமான ஒரு ஒத்திகையாகும்.

வெளிநாடுகளில் நடத்தப்படும் போரும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான போரும் ஒரே போரின் இரு பக்கங்களாகும். மற்றபடி நிலையானதாகத் தோன்றும் ஒரு “ஜனநாயகத்தில்”, ட்ரம்ப் ஒரு தற்செயலான அரசியல் விபத்து அல்ல. அவர் ஒரு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்—அதாவது, ஜனநாயக முறைகளின் மூலம் இனி ஆட்சி செய்ய முடியாது என்பதால் சட்டபூர்வத் தன்மையிலிருந்து விலகிச் சென்ற முதலாளித்துவ தன்னலக்குழுவையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முன்னெப்போதும் இல்லாத சமூக சமத்துவமின்மை, முடிவற்ற போர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் இழப்பில் ஒரு சிறு மேல்தட்டு வர்க்கத்தைச் செழிக்க வைக்கும் ஒரு அரசியல் அமைப்பின் தலைவராகவே ட்ரம்ப் உருவெடுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியானது ட்ரம்ப் ஆட்சியின் எதிர்ப்பாளர் அல்ல, மாறாக அது ஒரு ஒத்துழைப்பாளர். போர் குறித்தும், ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு அவசியமான அனைத்து விவகாரங்கள் குறித்தும் இரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஒரு தந்திரோபாயத் தன்மையைக் கொண்டவையாகும்.

ஜனவரி மாதத்தில், ஈரானைத் தாக்குவதற்காக ட்ரம்ப் படைகளைக் குவித்துக் கொண்டிருந்தபோது, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையிலிருந்த ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சித் தலைமையும் 839 பில்லியன் டாலர் இராணுவ நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. ஈரானின் உயர்மட்டத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அவர்கள் வெளியிட்ட முதல் பகிரங்க அறிக்கைகள் அந்தப் படுகொலையை ஆதரிப்பதாகவே இருந்தன. மார்ச் 2 அன்று செனட் சபையில் பேசிய செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், “கமேனிக்காக நான் ஒரு துளிக் கண்ணீர் கூட வடிக்கப் போவதில்லை” என்று அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் தலைவர் டோனா பிரேசில் இந்த வாரம் இவ்வாறு கூறினார்: “ஈரான் என்பது அந்தப் பிராந்தியத்திற்கும், வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து வைத்துள்ளனர்.”

ஜனநாயகக் கட்சியினரின் குரலாக ஒலிக்கும் நியூயார்க் டைம்ஸ், “இந்தப் போரின் விவேகம குறித்து ஒரு நியாயமான விவாதத்தை நடத்த வேண்டியுள்ளது” என்றும், “ஈரானிய ஆட்சியை இப்போதே எதிர்கொள்வதற்கு ட்ரம்ப் ஒரு ஆதாரபூர்வமான வாதத்தை முன்வைக்க முடியும்” என்றும் அறிவித்து ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் எதிர்ப்புக் குரல் எனப்படுவது இவ்வளவுதான்.

வால் ஸ்ட்ரீட் மற்றும் உளவு அமைப்புகளின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் முதன்மையான பயம் என்னவென்றால், கீழ்மட்டத்திலிருந்தான ஒரு பரந்த மக்கள் இயக்கம் உருவாவதும், அது அவர்களின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு, வெறும் அரசாங்கத்தை மட்டுமல்லாமல், இரு கட்சிகளும் பாதுகாத்து வரும் முதலாளித்துவ அமைப்பிற்கும் ஏகாதிபத்திய அரசுக்கும் சவாலாக அமைந்துவிடுவதும்தான்.

ஜனநாயகக் கட்சிக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் இருக்கும் குழுக்களைக் கொண்டுள்ள “அரசர்கள் வேண்டாம்” கூட்டணியானது, தனது பிரச்சாரப் பொருட்களில் ஈரானுக்கு எதிரான போரைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கும் ‘இண்டிவிசிபில்’ (Indivisible - பிரிக்க முடியாதது) அமைப்பு, முன்னாள் ஜனநாயகக் கட்சி ஊழியர்களால் நிறுவப்பட்டது மற்றும் அது ஜனநாயகக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஒரு கருவியாக பகிரங்கமாகச் செயல்படுகிறது. AFL-CIO மற்றும் பிற முக்கிய தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களின் “இணை-அமைப்பாளர்களாக” முன்னிறுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை போர் குறித்து மௌனம் காக்கின்றன — அல்லது வெறும் வெற்று நடைமுறை ரீதியான ஆட்சேபனைகளை மட்டுமே தெரிவிக்கின்றன — மேலும் போருக்கு எதிராக தொழிலாளர்களின் சக்தியைத் திரட்ட அவை எதையும் செய்யவில்லை.

சனிக்கிழமையன்று மினியாபோலிஸில் நடைபெறும் முதன்மைப் பேரணியில் முன்னின்று உரையாற்றும் பெர்னி சாண்டர்ஸ், “ஆபத்தான காலங்கள்” என்ற நீண்ட பட்டியலில் ஈரானையும் ஒரு அம்சமாகக் குறிப்பிட்டார். இது வெறும் வெற்றுப் பாவனையே தவிர, இதன் மூலம் அவர் எவருக்கும் எந்தக் கடமையையும் விதிக்கவில்லை; அதேபோல் ஜனநாயகக் கட்சியையும் எதற்கும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதில்லை. அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து சாண்டர்ஸின் பங்கானது, முதலாளித்துவ தன்னலக்குழுவின் போர்-ஆதரவு கட்சிக்கு பின்னால் எதிர்ப்பைத் திருப்புவதாகும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். சனிக்கிழமையன்று நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள், வர்க்கப் போராட்டத்தின் வளர்ந்து வரும் ஒரு எழுச்சியுடன் ஒத்துப்போகின்றன. போர் தொடங்கிய ஒரு மாத காலத்திற்குள், கிரீலியில் (Greeley) உள்ள JBS இறைச்சி பதப்படுத்தும் ஆலை வேலைநிறுத்தம் தொடங்கி, கல்வித்துறை ஊழியர்கள், செவிலியர்கள், உற்பத்தித் தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள வெளிநடப்புகள் மற்றும் வேலைநிறுத்த வாக்கெடுப்புகள் வரை என, முக்கியத் தொழில்துறைகளிலும் சேவைகளிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் வேலைநிறுத்த அச்சுறுத்தல்களின் ஒரு விரிவடைந்து வரும் அலை பரவி வருகிறது.

இந்தச் சமூகத்தில் தொழிலாள வர்க்கமே தீர்க்கமான சமூக சக்தியாகும். அதுவே அனைத்து செல்வத்தையும் உற்பத்தி செய்கிறது; தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், போக்குவரத்து அமைப்புகள், துறைமுகங்கள், பண்டகசாலைகள் மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களை இயக்குகிறது. ஆனால், இந்த சக்தியானது — ஆளும் வர்க்கத்தின் இரு கட்சிகளிடமிருந்தும் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்), மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்தும் சுயாதீனமாகவும் அதற்கு எதிராகவும் சுயாதீனமான நனவான அரசியல் ஒழுங்கமைப்பின் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும்.

ஈரானுக்கு எதிரான போர் எந்த நிபந்தனையுமின்றி எதிர்க்கப்பட வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்தும் விரிவான தாக்குதல்களுடன் இதுவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வலியுறுத்துகிறது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதையோ அல்லது ட்ரம்பின் ஆட்சியைத் தூக்கியெறிவதையோ — நாடாளுமன்றம் (காங்கிரஸ்), நீதிமன்றங்கள் அல்லது வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகனின் ஒரு கட்சியான மற்றும் இந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் ஜனநாயகக் கட்சியிடம் முறையிடுவதன் மூலம் சாதிக்க முடியாது. அதற்கு, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு எதிராக ஒரு நனவான சக்தியாகத் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாகும்.

இதன் பொருள் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை உருவாக்குவதாகும்: ஒவ்வொரு வேலைத்தலத்திலும், பள்ளியிலும் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க வேண்டும். இவை, தொழிலாளர்களின் போராட்டங்களைத் தனிமைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் மற்றும் முடக்கவும் முனையும் தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமா இயங்க வேண்டும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இணைக்கப்பட்ட இந்தக் குழுக்கள், பல்வேறு தொழில்துறைகளையும் எல்லைகளையும் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும். மேலும், போர் இயந்திரத்திற்கு எதிராக — கீழிருந்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தம் வரையிலான முன்னோக்குடன் — ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும்.

தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் தெரிவு ட்ரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையில் இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் மார்க்சிஸ்டுகள் அதிகரித்து வரும் அவசரத்துடன் அடையாளம் காணப்பட்ட மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் அபிவிருத்திகள் மறுக்க முடியாதபடி நிரூபித்துள்ளதுமான ஒரு தெரிவாகும்: சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா? ஒன்று தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசியல் வேலைத்திட்டத்தை, அதன் சொந்த அமைப்புகளை, அதன் சொந்த தலைமையை அபிவிருத்தி செய்து, போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக பேரழிவை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதற்கு நனவான நடவடிக்கையை எடுக்க வேண்டும், அல்லது அந்த அமைப்பு மனித நாகரிகத்தின் நிலைமைகளை அழிப்பதற்கு இன்னும் வன்முறையான வடிவங்களில் தொடர்ந்து நீடிக்கும்.

Loading