தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவிலிருந்து 40 ஆண்டுகள்

காணொளி: லண்டன் கூட்டம் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைமைக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் 40-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மார்ச் 14 அன்று லண்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் வீடியோவை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இங்கே வெளியிடுகிறது. இந்தப் போராட்டமே WRPன் தலைமை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்தது.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் உட்பட பல பேச்சாளர்கள் இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியாக இருந்த அமெரிக்க தொழிலாளர் கழகத்தின் (Workers League) தலைவராக இருந்த டேவிட் நோர்த், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தலைமையின் அரசியல் சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையான பாத்திரத்தை வகித்திருந்தார்.

ஒருங்கமைக்கப்பட்ட அரசியல் போக்கான ட்ரொட்ஸ்கிசம் மற்றும் புரட்சிகர மார்க்சிசத்தின் உயிர்வாழ்வே இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஜெர்ரி ஹீலி, கிளிப் சுலோட்டர் மற்றும் மைக் பண்டா ஆகியோரால் வழிநடத்தப்பட்ட பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கம், பல தசாப்தங்களாகப் பெரும் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்தது. தொழிலாள வர்க்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்டாலினிச, சீர்திருத்தவாத மற்றும் முதலாளித்துவ தேசியவாதப் போக்குகளுக்குள் நான்காம் அகிலத்தின் பிரிவுகளைக் கரைக்க முயன்ற பாப்லோவாத போக்குக்கு எதிராக, ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாத்ததே இதற்குக் காரணமாகும். இருப்பினும், 1980-களில், நீண்ட கால சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத அரசியல் பின்வாங்கலுக்குப் பிறகு, அவர்கள் மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் முக்கியக் கோட்பாட்டு வெற்றிகளையும் கொள்கைகளையும் கைவிட்டு, பின்னர் அவற்றுக்குத் துரோகம் இழைத்தனர்.

தொழிலாளர் கழகத்தின் தலைமையில் WRP-க்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பெரும்பான்மையினர் நடத்திய போராட்டம், மார்க்சிச சிந்தனையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இதில் உலகமயமாக்கல், சோவியத் யூனியனின் கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சி பற்றிய நிகரற்ற பகுப்பாய்வுகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை ஆட்கொண்டிருந்த சோசலிச எதிர்ப்புத் துறவுவாத அலை பற்றிய பகுப்பாய்வுகள் உள்ளடங்கும். இது சோசலிச சமத்துவக் கட்சிகளின் ஸ்தாபிப்பதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் உருவாக்கத்திற்கும் அடித்தளம் அமைத்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரித்தானியா) தேசியச் செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் தனது உரையில், ஹீலி, சுலோட்டர் மற்றும் பண்டா தலைமையின் நீண்டகால சீரழிவு குறித்தும், 1982-84 காலப்பகுதியில் டேவிட் நோர்த் விரிவாக முன்வைத்த விமர்சனத்தின் அடிப்படையில் அனைத்துலகக் குழுவிற்குள் ஒரு ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு உருவானது குறித்தும், அது டேவ் ஹைலண்ட் தலைமையில் அப்போதைய பிரிட்டிஷ் கிளையினுள் இருந்த தொழிலாளர் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கின் ஆதரவை எவ்வாறு வென்றது என்பது குறித்தும் விளக்கினார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் ஸ்வார்ட்ஸ், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவுக்கு எதிராக டேவிட் நோர்த் தலைமையில் எடுக்கப்பட்ட தலையீடு குறித்து விவரித்தார். கட்சியின் உறுப்பினர்களாக இருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினரிடையே WRPயின் தலைமை ஒருவித வெறித்தனமான உணர்வைத் தூண்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தத் தலையீடு எவ்வாறு அந்த மோதலில் இருந்த அத்தியாவசிய அரசியல் சிக்கல்களைத் தெளிவுபடுத்தியது என்பதையும் அவர் விளக்கினார்.”

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெற்றி என்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அனைத்து அரசியல் சக்திகளின் அரசியல் வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்திருந்தது என்று அவர் விளக்கினார். ஸ்டாலினிசம், சமூக சீர்திருத்தவாதம், குட்டி-முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் சிரிசா, பொடெமோஸ், இடது கட்சி மற்றும் பிரித்தானியாவின் கோர்பினைட் (Corbynite) இடதுசாரிகள் போன்ற போலி-இடது போக்குகளிடமே தொழிலாளர் புரட்சிக் கட்சி சரணடைந்திருந்தது.

தனது நிறைவுரையில் டேவிட் நோர்த் விளக்குகையில், ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவற்றிற்கு WRP சரணடைந்ததற்கு எதிராக, உலக சோசலிச புரட்சியின் முன்னோக்கைப் பாதுகாப்பது மட்டுமே, தொழிலாள வர்க்கம், குறிப்பாக இளைய தலைமுறையினர், ஏகாதிபத்தியத்தின் தற்போதைய காட்டுமிராண்டித்தனமான வீழ்ச்சிக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரே அடிப்படையாகும் என்றார்.

அமெரிக்காவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய அடக்குமுறையும், ஈரானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் போரும் ஒரே குறிக்கோளை நோக்கி இருந்தன: அதாவது 20-ஆம் நூற்றாண்டின் புரட்சிகர சமூக மற்றும் அரசியல் வெற்றிகளை ஒழிப்பதே ஆகும். அவர் இக்கூட்டத்தில் கூறுகையில், “நாம் இப்போது ஒரு வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அல்லது முதலாளித்துவம் இந்த உலகிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்... நாம் ஒரு புரட்சிகரக் காலத்தில் இருக்கிறோம். அதே சமயம் ஒரு எதிர்-புரட்சிகரக் காலத்திலும் இருக்கிறோம். உலகில் இந்த இரண்டு போக்குகளில் எது ஆதிக்கம் செலுத்தும்? நெருங்கி வரும் பாசிசத்தின் நிழலுக்கு எதிராக, 1932-33-இல் ட்ரொட்ஸ்கி மிகச் சரியாகக் கூறியது போல, போராட்டமே அதனைத் தீர்மானிக்கும்” என்றார்.

Loading