ட்ரம்ப்புக்கு எதிரான "மன்னர்கள் வேண்டாம்" என்ற மாபெரும் போராட்டங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கானோரைத் திரட்டிய மாபெரும் “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள்

சனிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) மாபெரும் போராட்டங்களின் மூன்றாவது அலை, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைத் தெருக்களுக்குக் கொண்டு வந்தது.

மார்ச் 28, 2026 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான “மன்னர்கள் வேண்டாம்” பேரணியின் ஒரு பகுதி.

ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த 50501 இயக்கத்தின் கூற்றுப்படி, நாடு தழுவிய அளவில் 3,300 க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர், இது அவர்களின் வார்த்தைகளில், “நவீன அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடந்த மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டம்” ஆகும். இதில் 600 போராட்டங்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சிக்குச் சார்பான கிராமப்புறப் பகுதிகளில் நடைபெற்றதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அதன் தன்னலக்குழு ஆதிக்கம், சர்வாதிகாரம், போர் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான அடக்குமுறை போன்ற கொள்கைகளுக்கும் எதிரான பரந்த எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ட்வின் சிட்டீஸில் (Twin Cities) நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில், 200,000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக 50501 அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிவரவு கெஸ்டப்போவால் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கக் குடிமக்களான ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரை நினைவுகூரும் பதாகைகளை மினியாபோலிஸில் பலர் ஏந்திச் சென்றனர்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகர்ப்புற மையங்களிலும் பெரிய போராட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் நியூயார்க் நகரில் சுமார் 350,000 பேரும், கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ்; ஜார்ஜியாவின் அட்லாண்டா; இல்லெநோயின் சிகாகோ, மற்றும் டெக்சாஸின் டல்லாஸ் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கானோரும் கலந்துகொண்டனர். இவற்றுடன் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் பேரணிகள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களின் அளவானது, அதிகாரப்பூர்வ அரசியலின் கட்டமைப்பைத் தாண்டிய ஒரு ஆழமான மற்றும் வளர்ந்து வரும் சமூகக் கோபத்தைப் பிரதிபலிக்கிறது.

மார்ச் 28, 2026 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடந்த “மன்னர்கள் வேண்டாம்” போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

கனடா, மெக்சிகோ, ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் ஒற்றுமைப் பேரணிகளும் நடத்தப்பட்டன. மக்களை வீதிகளில் இறங்கச் செய்யும் பிரச்சினைகள் அமெரிக்காவிற்கு மட்டுமே உரியவை அல்ல, மாறாக அவை ஆழமடைந்து வரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடுகள் என்ற பரந்த யதார்த்தத்தை இந்தச் சர்வதேச அளவு பிரதிபலித்தது.

“மன்னர்கள் வேண்டாம்” போராட்டத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பாளர்கள், இந்தப் போராட்டங்களைப் பொதுமக்களிடையே சித்தரித்த விதம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோதப் போரின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டியபோதிலும் அல்லது அதைப் புறக்கணித்தபோதிலும், ஒவ்வொரு போராட்டத்திலும் போருக்கு எதிரான உணர்வு வெளிப்பட்டது. அமெரிக்கக் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) அதிரடிச் சோதனைகள், நாடு கடத்தல்கள் மற்றும் குடியேறியவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் பதாகைகளுடன், நாடு முழுவதும் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போருக்கு எதிரான பதாகைகளை ஏந்திச் சென்றதுடன், வெளிநாடுகளில் இராணுவவாதத்திற்கும், உள்நாட்டில் ஒடுக்குமுறைக்கும் எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர்.

“மன்னர்கள் வேண்டாம்” என்ற முழக்கத்திற்கு இணையாக, அதே வேகத்துடனும் தீவிரத்துடனும் வேறொரு முழக்கம் ஒலித்தது என்றால், அது “ICE ஒடுக்குமுறை வேண்டாம், போர்கள் வேண்டாம்” என்பதாகும். இது மக்களிடையே வளர்ந்து வரும் உண்மையான அரசியல் நனவைப் பிரதிபலித்தது: அதாவது, உள்நாட்டில் நிலவும் சர்வாதிகாரமும், வெளிநாடுகளில் ஏவப்படும் ஏகாதிபத்திய வன்முறையும் ஒரே வர்க்கக் கொள்கையின் இரு பக்கங்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டதை இது உணர்த்தியது.

மிகப்பெரிய பேரணிகளில் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் பங்கேற்றது, இந்த மக்கள் எதிர்ப்பை முதலாளித்துவ அரசியலுக்குக் கீழ்ப்படியச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. மினியாபோலிஸில், செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ், அட்டர்னி ஜெனரல் கீத் எலிசன், சர்வதேச சேவைப் பணியாளர்கள் சங்கத்தின் (SEIU - Service Employees International Union) தலைவர் ஏப்ரல் வெரெட் மற்றும் அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (AFT - American Federation of Teachers) தலைவர் ராண்டி வெய்ன்கார்டன் ஆகியோர் உரையாற்றினர். இவர்களது நோக்கம் சர்வாதிகாரம், போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு சுயாதீனமான இயக்கத்தை உருவாக்குவது அல்ல; மாறாக, மாபெரும் மக்கள் எதிர்ப்பை மீண்டும் ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பின்னால் திசைதிருப்புவதாகும். இந்த அமைப்புகள் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பவை என்பதோடு, தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தல்.

உலக சோசலிச வலைத்தளத்தின் (WSWS) செய்தியாளர்களும், சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினர்களும் உலகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தலையீடு செய்தனர். அங்கு அவர்கள் மூன்றாம் உலகப் போரை நோக்கிய நகர்வைத் தடுக்கவும், தன்னலக்குழுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஒரு சோசலிச முன்னோக்கை முன்வைத்தனர்

ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” பேரணியில் உரையாற்றுவதற்கு டேவிட் நோர்த் தடை செய்யப்பட்டார்

உலக சோசலிச வலைத்தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், சனிக்கிழமையன்று ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” பேரணியில் உரையாற்றவிடாமல் தடுக்கப்பட்டார். அங்கு “திறந்த மேடை” இருக்கும் என்று கூறியிருந்த அமைப்பாளர்கள், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோதப் போரையும், அதற்கு ஜனநாயகக் கட்சி வழங்கும் ஆதரவையும் அவர் கண்டிக்கவிருந்தார் என்பதால், அவர் கூட்டத்தில் உரையாற்றுவதைத் தடுத்து நிறுத்தினர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அந்த வாக்குவாதத்தின் காணொளியில், ஜனநாயகக் கட்சிக்கு நெருக்கமான ஏற்பாட்டாளர்கள், நோர்த் பேச அனுமதிக்கப்படுவாரா என்பதைத் திரும்பத் திரும்பக் கூற மறுத்தனர். அது ஒரு “கட்சி சார்பற்ற நிகழ்வு” என்று ஒருவர் அவரிடம் கூறினார், அதற்கு நோர்த், “ஒரு சோசலிஸ்ட்டைப் பேச அனுமதிப்பதும் இதில் அடங்குமா?” என்று பதிலளித்தார். மற்றொருவர், “நன்றி, மன்னர்கள் வேண்டாம்” என்று பதிலளித்தார். அதற்கு நோர்த் பின்வருமாறு பதிலடி கொடுத்தார்: “நமக்கு இங்கு மன்னர் யாரும் இல்லை, மாறாக ஒரு தன்னலக்குழு தான் உள்ளது. இது இரண்டு அரசியல் கட்சிகளாலும் [ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி] நடத்தப்படும் ஒரு இருகட்சி ஆட்சிமுறை. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கும் ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது.”

தொடர்ந்து நோர்த் அங்கு நடந்துகொண்டிருந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கினார்: “ ஜனநாயகக் கட்சியால் ஆதரிக்கப்படும் ஈரான் மீதான போருக்கு எதிராக நான் பேசப் போகிறேன் என்பதால் நான் இங்கே பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.”

ஒலிவாங்கி மறுக்கப்பட்ட பிறகு, உலக சோசலிச வலைத்தளத்தின் வாசகர்களிடம் உரையாற்றிய நோர்த் தொடர்ந்து கூறியதாவது:” இதனால்தான் ட்ரம்ப் நாட்டை ஆதிக்கம் செலுத்துகிறார்; ஏனெனில் இங்கு ஒரு போலி எதிர்ப்பு மட்டுமே உள்ளது. இதில் ஈரானுக்கு எதிரான போருக்கு வரும் எந்தவொரு எதிர்ப்பையும் முறியடிக்க, ஜனநாயகக் கட்சியானது ட்ரம்ப்புடன் ஒரு இருகட்சி கூட்டணியில் இணைந்து செயல்படுகிறது.”

தான் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், நூரம்பேர்க் நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுபடுத்தியிருப்பேன் என்று நோர்த் மேலும் கூறினார். “எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் சொல்லியிருக்க விரும்புவது இதுதான்: 80 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நகரில்தான் நூரம்பேர்க் விசாரணைகள் நடைபெற்றன. அங்கு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானவர்கள் அமைதிக்கு எதிரான குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர். அதே போன்ற குற்றங்களைத்தான் இன்று அமெரிக்க அரசாங்கமும் செய்து கொண்டிருக்கிறது.”

Loading