மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மார்ச் 28 அன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில், அமெரிக்கா முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். இது, அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டமாகும். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு முக்கிய நகரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய நகரங்களில் நடைபெற்ற 3,300-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் சுமார் 8 மில்லியன் (80 லட்சம்) மக்கள் பங்கேற்றதாக அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு தனிப்பட்ட போராட்டங்களின் அளவும் அசாதாரணமானதாக இருந்தது: தேசிய அளவில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்ட மினியாபோலிஸ்-செயின்ட் போலில் இடம்பெற்ற போராட்டம், மாநில கேபிடல் மைதானத்திற்கு 1,00,000 முதல் 200,000 வரையிலான மக்களை ஈர்த்தது. நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகர்ப்புற மையங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இதில், நியூ யோர்க் நகரில் சுமார் 3,50,000 பேர்; பொஸ்டனில் 1,80,000 பேர் (இது எதிர்பார்க்கப்பட்டதை விட இருமடங்கு); சிக்காகோவில் 2,00,000 பேர்; சியாட்டிலில் 90,000 பேர் மற்றும் சான் டியாகோவில் 40,000 பேர் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 600 நிகழ்வுகள் கிராமப்புற மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவு அதிகம் உள்ள சமூகங்களில் நடைபெற்றதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இது, இந்த எதிர்ப்பின் தேசிய அளவிலான பரப்பளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மார்ச் 28 போராட்டங்களின் பிரம்மாண்டமான அளவு, உள்நாட்டில் அதிகரித்துவரும் சர்வாதிகாரத்தின் மீதும், வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போரின் தீவிரமடைதலின் மீதும் மக்கள் கொண்டுள்ள ஆழமான கோபத்தைப் பிரதிபலித்தது. ஜனநாயக ஆட்சி முறைகளை முறித்துக் கொள்ளும் ஒரு முதலாளித்துவ தன்னலக் குழுவிற்கும் பரந்த பொதுமக்களுக்கும் இடையே ஒரு மோதல் உருவாகி வருகிறது.
தற்போது ஒரு மாதத்தையும் கடந்துள்ள ஈரானுக்கு எதிராக இடம்பெற்றுவரும் போர்தான், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு தீர்மானகரமான உந்துசக்தியாக இருந்தது. போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமைப்புகள் இதனை ஒரு சிறிய விஷயமாகக் காட்ட முயன்ற போதிலும், ஒவ்வொரு நகரத்திலும் பதாகைகள் மற்றும் முழக்கங்கள் மூலம் இதற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், ஒட்டுமொத்த பூமிக் கோளத்திற்கும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மேலதிக போர் தீவிரமடைதலுக்கு ட்ரம்ப் தயாராகி வந்தார். போராட்டங்களுக்கு அடுத்த நாள், வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், பென்டகன் ஈரானில் “வாரங்கள் அல்லது மாதங்கள்” நீடிக்கக்கூடிய தரைவழி நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும், அத்தகைய நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் மோசடியான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் “பல வாரங்களாக உருவாக்கப்பட்டு வருவதாகவும்” தெரிவித்தது.
போராட்ட எதிர்ப்பின் இந்த பிரம்மாண்டமான அளவு ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. எனவே, பெருநிறுவன ஊடகங்கள் இதனைக் குறைத்து மதிப்பிட்டு, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதைக் கடந்து செல்ல முயன்றன. தனது மேலோட்டமான அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் இந்தப் போராட்டங்களை போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு பாரிய எழுச்சியாகச் சித்தரிக்காமல், “விரக்தியடைந்த ஜனநாயகக் கட்சியினரின்” இடைக்காலத் தேர்தல் சூழ்ச்சியாகவே காட்டியது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியளவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தைப் பற்றி, அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கேபிள் செய்தி நிகழ்ச்சிகள்கூட மிகக் குறைவாகவே குறிப்பிட்டன.
நாம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: இவ்வளவு பெரிய அளவிலான எதிர்ப்பு இருந்தபோதிலும், ட்ரம்ப் இன்னும் எப்படி அதிகாரத்தில் இருக்கிறார்? அரசியலமைப்பை வெளிப்படையாக மீறி, ஒரு சர்வாதிகாரத்தை நிறுவி, உலக மக்களை ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போருக்குள் இழுத்துச் செல்லும் ஒரு குற்றவியல் ஆட்சி எப்படி இன்னும் தொடர்ந்து ஆட்சி நடத்த முடிகிறது?
இதற்கான பதில், இலட்சக்கணக்கான மக்களின் கோபத்திற்கும், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த (இண்டிவிசிபிள் அமைப்பின் தலைமை) ஜனநாயகக் கட்சி சார்ந்த குழுக்களின் பெயரளவிலான எதிர்ப்பிற்கும் இடையே உள்ள அரசியல் பிளவில் உள்ளது. இது போரைத் திட்டமிட்டுத் தரம் தாழ்த்திக் காட்டியதில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” பேரணியில் உரையாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டார். “ஜனநாயகக் கட்சியினர் ஆதரிக்கும் ஈரான் மீதான சட்டவிரோதப் போரைக் கண்டித்து என்னைப் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை” என்று நோர்த் குறிப்பிட்டார்.

பெரிய அளவிலான பேரணிகளில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் போரை முற்றிலும் புறக்கணித்தனர் அல்லது அதனை ஒரு கடந்து செல்லும் சொல்லாக மாற்றினர். ஏனெனில், அவர்கள் போரின் அடிப்படை நோக்கங்களுடன் உடன்படுகிறார்கள் மற்றும் அதன் அடிப்படை ஊகங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். பொஸ்டனில், செனட்டர் எலிசபெத் வாரன் “ஈரான்”’ என்ற வார்த்தையை ஒருமுறை கூடக் குறிப்பிடவில்லை, மாறாக ட்ரம்ப் “உலகிற்குப் பாதி வழியில் குண்டுகளை வீசுவதற்கு ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர் செலவிடுகிறார்” என்று சுருக்கமாக மட்டுமே குறிப்பிட்டார். செனட்டர் எட் மார்க்கி போரைப் பற்றி ஒரு சாதாரண வரியில் மட்டுமே குறிப்பிட்டார்.
மினசோட்டாவில் பெர்னி சாண்டர்ஸ் ஆற்றிய உரையே, ஒரு முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவரால் போரைப் பற்றி ஒரு வாக்கியத்திற்கு மேலாகப் பேசப்பட்ட ஒரே நிகழ்வாகும். “ஈரான் போரைப் பற்றி இன்று நாம் பொய்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று சாண்டர்ஸ் அறிவித்தார். “ட்ரம்ப்பும் அவரது கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுடன் ஒரு போரைத் தொடங்கினர்” என்று கூறிய அவர், இந்தப் போர் “அரசியலமைப்புக்கு எதிரானது”, ஏனெனில் “ட்ரம்ப் காங்கிரஸிடமிருந்து அனுமதி பெறவில்லை” என்றும், இது “சர்வதேச சட்டத்தை மீறும் செயல்” என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், சாண்டர்ஸின் பணி என்பது போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான எதிர்ப்பை வளர்ப்பதல்ல, மாறாக அதனைத் தடுப்பதாகும். அவர் இந்தப் போரை முதன்மையாக ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவின் தனிப்பட்ட செயலாகவே சித்தரிக்கிறாரே தவிர, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வர்க்க நலன்கள் மற்றும் பல தசாப்தங்களாக இரு கட்சிகளாலும் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்) பின்பற்றப்படும் கொள்கையின் விளைவு என்று கூறவில்லை. அவர் காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், அது சாண்டர்ஸ் ஆதரித்துவரும் ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் ஆட்சியின் கீழ் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது என்ற உண்மையைப் பற்றி அவர் ஏதும் கூறவில்லை. மேலும், ட்ரம்பின் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் மீண்டும் வாக்களித்ததையும் அவர் சுட்டிக்காட்டவில்லை.
போரை நிறுத்துவதற்கு “பழமைவாதிகள், மிதவாதிகள் மற்றும் முற்போக்காளர்கள்” அனைவரும் “ஒரே குரலில்” பேசுகிறார்கள் என்ற சாண்டர்ஸின் வரிகள் அவரது பங்கினைச் சுருக்கமாக உணர்த்துகின்றன — இது ஒரு சுயாதீனமான சக்தியாக தொழிலாள வர்க்கத்திடம் முன்வைக்கப்படும் வேண்டுகோள் அல்ல, மாறாக வலதுசாரிகள் மற்றும் குடியரசுக் கட்சியின் சில பிரிவினரை நோக்கிய ஒரு அணுகுமுறை மட்டுமே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை நோக்கங்களைத் தொடாமல் விட்டுவிட்டு, இந்தப் போரை “இஸ்ரேலின் போர்” என்று மட்டும் சித்தரித்து அதனை அவர்கள் விமர்சிக்கின்றனர். இறுதியாக சாண்டர்ஸ் உண்மையில் எதனைப் பரிந்துரைக்கிறார்? தேர்தல் சூழ்ச்சிகளையும், வருகின்ற நவம்பரில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிப்பதையும்தான் பரிந்துரைக்கிறார்.
மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர், ஆனால், அவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக அல்லாமல் தனிநபர்களாகவே கலந்துகொண்டனர். இது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கைகளை ஒடுக்குவதிலும், தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சியுடன் பிணைப்பதிலும், ட்ரம்பின் திட்டங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வதிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பங்கினை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டெட்ராய்டில். ஷான் பெயின் தலைமையிலான ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம் (UAW), ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” என்ற வெற்று முழக்கங்களை ஊக்குவித்ததில் இது தெளிவாகத் தெரிந்தது.
மினசோட்டா பேரணியில் AFL-CIO தொழிற்சங்கத் தலைவர் லிஸ் ஷுலர் உரையாற்றினார். அவர் போரைப் பற்றி ஒருமுறை கூடக் குறிப்பிடவில்லை. மேலும், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி வெயின்கார்டனும் அங்கு உரையாற்றினார். ஈரான் பெயரைச் சொல்லாமலேயே, “ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் டாலர் செலவாகிறது” என்று வெயின்கார்டன் குறிப்பிட்டார். உக்ரேன் போரின் தீவிர ஆதரவாளரான வெயின்கார்டன், இந்தப் பணம் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குச் செலவிடப்பட வேண்டும் என்றே விரும்புவார் என்பதில் ஐயமில்லை.
லிஸ் ஷுலர் அல்லது வெயின்கார்டன் ஆகிய இருவருமே நாடு முழுவதும் உருவாகி வரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. முக்கியமான தொழில்துறைகள் மற்றும் சேவைகளில் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ள இந்தத் தருணத்தில், “15 மில்லியன் தொழிலாளர்களுக்காக” பேசுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த நிர்வாகிகள், ட்ரம்ப் நிர்வாகத்தையோ அல்லது “கோடீஸ்வரர்களையோ” எதிர்த்து தொழிலாளர்கள் உண்மையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை — “இன்று மன்னர்கள் வேண்டாம் ஆனால் நவம்பரில் நாங்கள் வாக்களிப்போம்” என்று வெயின்கார்டன் கூறியது போல, ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிப்பதைத் தவிர வேறெதையும் அவர்கள் சொல்லவில்லை.
மார்ச் 28 போராட்டங்கள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆழமான மற்றும் பரவலான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், இந்த எதிர்ப்பானது இன்னும் ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தினால் வழிநடத்தப்படவில்லை. தற்போதைய நெருக்கடியின் அளவிற்கு இணையான ஒரு நனவுபூர்வமான முன்னோக்கை போராட்டக்காரர்களுக்கு வழங்குவதே இப்போதைய மையப் பணியாகும். இதற்காகச் சில அடிப்படை அம்சங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்.
முதலாவதாக, ட்ரம்ப் நிர்வாகம் வெளிநாடுகளில் போரைத் தீவிரப்படுத்துவதையும், உள்நாட்டில் சர்வாதிகாரத்திற்கான சதியையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருகிறது. பெரும் மக்கள் எதிர்ப்பிற்கு இந்த நிர்வாகம் தரும் பதில் விட்டுக்கொடுப்பது அல்ல, மாறாக அடக்குமுறையைத் தீவிரப்படுத்துவதாகும் — அதாவது, ஜனநாயக உரிமைகளை அழித்தல், போலீஸ்-அரசு முறைகளை இயல்பாக்குதல் மற்றும் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க முன்னெப்போதையும் விட வன்முறையான நடவடிக்கைகளைத் தயாரித்தல். விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) ஏஜெண்டுகளை நிலைநிறுத்துதல் — இது குறித்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரி ரொம் ஹோமன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், போக்குவரத்து பாதுகாப்புதுறை நிர்வாக (TSA) ஏஜெண்டுகளுக்கு ஊதியம் வழங்கத் தொடங்கிய பின்னரும் இது தொடரும் என்று அறிவித்தார் — இது நாடு முழுவதும் துணை இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு முன்னோட்டமாகும்.
இரண்டாவதாக, ட்ரம்பின் நடவடிக்கைகள் வெறும் அவரது தனிப்பட்ட ஒழுக்கக்கேட்டில் இருந்து மட்டும் உருவாகவில்லை. அவர், தனது செல்வத்தையும் உலகளாவிய நலன்களையும் பாதுகாப்பதற்காக, சட்டத்தையும் ஜனநாயக ஆட்சி வடிவங்களையும் மீறிச் செயல்படும் ஒரு வர்க்கத்தின் —அதாவது முதலாளித்துவ தன்னலக் குழுவின்— பிரதிநிதியாகப் பேசுகிறார் மற்றும் செயல்படுகிறார்.
மூன்றாவதாக, ஜனநாயகக் கட்சியும் அதே வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது தந்திரோபாயங்கள் மற்றும் முன்வைக்கும் முறைகளில் மட்டுமே ட்ரம்ப்பிடமிருந்து வேறுபடுகிறது. அதே நேரத்தில் அது, போருக்கு வழிவகுப்பதோடு, மக்கள் எதிர்ப்பைத் திட்டமிட்டு தேர்தல் என்ற முட்டுச்சந்துகளுக்குள்ளும், முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் தராத பாதுகாப்பான வழிகளிலும் திசைதிருப்ப முறையாக வேலை செய்து வருகிறது.
நான்காவதாக, அணிதிரட்டப்பட வேண்டிய தீர்மானகரமான சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். அது தொழிற்சங்க இயந்திரத்திலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தின் தீவிரமடைதலோடு ஒத்துப்போகின்றன. ஆனால், இந்த போராட்ட இயக்கமானது, நிறுவனங்கள் மற்றும் அரசுடன் ஒன்றிணைந்துவிட்ட ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தடுக்கப்பட்டு சிதறடிக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில்தான், சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தலையீடு செய்தது: மக்களின் கோபத்தை போரை நிறுத்தவும் சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்கவும் கூடிய ஒரு இயக்கமாக மாற்றுவதற்குத் தேவையான மூலோபாயத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும்.
அடுத்த முக்கியமான கட்டம் என்பது, பணியிடங்களை அடிப்படையாகக் கொண்ட சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதாகும். இது அமெரிக்கத் தொழிலாளர்களை சர்வதேசத் தொழிலாளர்களுடன் இணைத்து, அதே முதலாளித்துவ தன்னலக் குழுக்களுக்கும், ஏகாதிபத்தியப் போருக்கும் எதிராக ஒன்றிணைக்கும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), போர் இயந்திரத்திற்கும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்காக, பணியிடங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்பவும், இணைக்கவும் ஊக்குவிக்கிறது.
போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டத்தைச் சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வலியுறுத்துகிறது. மில்லியன் கணக்கான மக்களை வீதிக்குக் கொண்டு வந்த இந்த நிலைமைகள், அரசியல் அரசியல் ஸ்தாபனத்திடம் முறையிடுவதன் மூலம் தீர்க்கப்படாது. மாறாக இது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன, சமூக மற்றும் அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியின் மூலமே சாத்தியமாகும்.
இதற்கு, முதலாளித்துவ தன்னலக்குழுவின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய, மற்றும் தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் மனிதத் தேவைகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கக் கூடிய ஒரு தலைமையைக் கட்டியெழுப்புவது அவசரப் பணியாகும். ஒரு முன்னேற்றத்திற்கான வழியைத் தேடும் அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
