மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன்கிழமை இரவு நேரத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ஈரான் போரில் அமெரிக்காவின் இலக்கு ஈரானிய சமூகத்தை அழிப்பதே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். “அமெரிக்காவின் அனைத்து இராணுவ இலக்குகளையும் மிக விரைவில் முடிப்பதற்கான பாதையில் நாம் இருக்கிறோம். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம். அவர்களை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்வோம்,” என்று ட்ரம்ப் கூறினார்.
ஈரானிய அரசாங்கம் தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், “அவர்களுடைய ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையங்களையும் நாங்கள் மிகக் கடுமையாகவும், ஒருவேளை ஒரே நேரத்திலும் தாக்குவோம். எல்லாவற்றிலும் அதுவே எளிதான இலக்காக இருந்தாலும், நாங்கள் இதுவரை அவர்களுடைய எண்ணெய் வளங்களை தாக்கவில்லை. ஏனெனில், அது அவர்களுக்குத் தப்பிப்பிழைப்பதற்கோ அல்லது மீண்டும் கட்டியெழுப்புவதற்கோ ஒரு சிறு வாய்ப்பைக் கூட அளிக்காது. ஆனால், நாங்கள் அதைத் தாக்கினால், அது முற்றிலுமாக அழிந்துவிடும், அதைத் தடுக்க அவர்களால் எதையும் செய்ய முடியாது,” என்று ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரான் முற்றிலும் சரணடைந்து, நடைமுறையில் அமெரிக்காவின் ஒரு காலனித்துவ ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாக மாறவில்லை என்றால், 90 மில்லியன் மக்களின் நவீன வாழ்க்கையைத் தக்கவைக்கும் அனைத்தையும் துடைத்தெறியவும், அவர்களுக்கு “பிழைப்பதற்கான ஒரு சிறிய வாய்ப்பைக் கூட” வழங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.
ஓர் அமெரிக்க ஜனாதிபதியால் இதற்கு முன்பு இத்தகைய உரை நிகழ்த்தப்பட்டதே இல்லை. இதற்கு முந்தைய நிர்வாகங்களால் செய்யப்பட்ட குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அவை ஜனநாயகம், சுயநிர்ணயம் மற்றும் விடுதலை ஆகியவற்றின் பாதுகாப்பாகவே சித்தரிக்கப்பட்டன. இப்போது ஒரு முழு நாட்டின் மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி விடுத்திருக்கும் செய்தி இதுதான்: எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது செத்து மடியுங்கள்.
இவை உண்மையிலேயே இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்ட அறிக்கைகளாகும். ஒரு நாட்டை “குண்டுவீசி கற்காலத்திற்கு தள்ளுவது” என்பது அதன் நாகரிகத்தையே அழிப்பதாகும் —ஈரானைப் பொறுத்தவரை அது ஆயிரக்கணக்கான ஆண்டுகால நாகரீக வரலாற்றைக் கொண்ட ஒரு நாடாகும். அமெரிக்காவின் ஜனாதிபதி, ஒரு முழு நாட்டையும் நிர்மூலமாக்கும் தனது நோக்கத்தை தேசிய தொலைக்காட்சியில் பகிரங்கமாக அறிவிக்கிறார்— அதாவது 90 மில்லியன் மக்கள் உயிர்வாழத் தேவையான நகரங்கள், மின்சாரக் கட்டமைப்பு, நீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறைகள் என அனைத்தையும் தரைமட்டமாக்குவது என்பதே இதன் பொருளாகும்.
ட்ரம்ப் தனது உரையில், இந்தப் போரின் “இலக்குகள்” என்பவை “அமெரிக்காவை அச்சுறுத்தும் அல்லது தங்கள் எல்லைகளுக்கு வெளியே அதிகாரத்தை நிலைநாட்டும் ஆட்சியின் திறனைத் தகர்ப்பதே” என்று அறிவித்தார். இருப்பினும், இந்த நோக்கம் இன்னும் தெளிவாக நிறைவேற்றப்படவில்லை —ஈரான் இப்போதும் ஹோர்முஸ் நீரிணையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்காவின் “இலக்குகளை” அடைவதற்கு ஈரான் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்பதே இதிலிருந்து பெறப்படும் முடிவாகும். “காஸாவின் முன்மாதிரி” இப்போது ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
ட்ரம்ப் ஈரானியத் தலைவர்களை படுகொலை செய்தது குறித்து பெருமையாக மார்தட்டிக் கொண்டார். “ஆட்சி மாற்றம் எங்களது இலக்காக இருக்கவில்லை. நாங்கள் ஒருபோதும் ஆட்சி மாற்றம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களின் அசல் தலைவர்கள் அனைவரும் இறந்ததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.” நாங்கள் ஏற்கனவே படுகொலை செய்த தலைவர்களுக்கு நேர்ந்த அதே கதியை நீங்களும் சந்திக்க விரும்பவில்லை என்றால் எங்களது நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ட்ரம்ப் அறிவித்தார்.
இதை அவர் “பேச்சுவார்த்தை” என்று அழைக்கிறார். இது வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் ஒரு மாஃபியா கும்பலின் மொழியாகும்.
“அவர்களைக் குண்டுவீசி கற்காலத்திற்குத் தள்ளுவோம்” என்ற வாக்கியம், இரண்டாம் உலகப் போரில் டோக்கியோ மீது தீக்குண்டுத் தாக்குதலை நடத்திய தீவிர வலதுசாரி விமானப்படைத் தளபதியான கர்டிஸ் லெமேயுடன் தொடர்புடையது. அந்தத் தாக்குதலில் ஒரே இரவில் மட்டும் 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். கொரியப் போரின்போது வடகொரியாவின் ஒவ்வொரு நகரத்தையும் அமெரிக்க விமானப்படை தரைமட்டமாக்கியதையும் இவர் மேற்பார்வையிட்டார். வியட்நாம் போரின்போது, அமெரிக்க இராணுவம் மற்றும் அரசியல் அதிகார மையத்தின் ஒரு பிரிவினர், வியட்நாம் மீதான குண்டுவீச்சில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்— இந்த நடவடிக்கை சோவியத் யூனியன் அல்லது சீனாவுடன் அணு ஆயுதப் போரைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டிருந்தது.
தனது 1965 ஆம் ஆண்டு சுயசரிதையான லெமியுடன் ஒரு இராணுவப் பயணம் என்ற நூலில், வட வியட்நாமுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “இந்தப் பிரச்சினைக்கு எனது தீர்வு என்னவென்றால், அவர்களிடம் வெளிப்படையாகக் கூறுவேன்: ஒன்று நீங்கள் உங்கள் கொம்புகளை அடக்கிக்கொண்டு ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும், இல்லையெனில் உங்களைக் குண்டுவீசி கற்காலத்திற்கே தள்ளுவோம்.” இத்தகைய மொழியின் பின்னணியில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தது.
தற்போது இதே போன்ற ஒரு மனநிலைதான் வெள்ளை மாளிகையில் நிலவுகிறது. மார்ச் 2 அன்று, யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத், “முட்டாள்தனமான போர் விதிமுறைகள் இனி இருக்காது” என்று அறிவித்ததன் மூலம் இதற்கான அடித்தளத்தை அமைத்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, பென்டகனில் இடம்பெற்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், “கருணைக்குத் தகுதியற்றவர்களுக்கு எதிராக கடும் வன்முறைத் தாக்குதலை நடத்த” கடவுளிடம் வேண்டினார்.
ஒரு குற்றவியல் பாதாள உலகமே இப்போது அதிகாரத்தில் இருக்கிறது. ஈரானுக்கு எதிரான இந்தப் போர் பல தசாப்தங்களாக தீவிரமடைந்து வரும் வன்முறையின் விளைவாகும்—ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புகள், லிபியா மற்றும் சிரியாவின் அழிவு, காஸாவில் நடக்கும் இனப்படுகொலை என ஒவ்வொரு குற்றமும் முந்தையதை விட மிகவும் திமிர்த்தனமானதாகவும், தண்டனையிலிருந்து தப்பிக்கும் தைரியத்துடனும் செய்யப்படுகிறது.
இருப்பினும், ட்ரம்ப்பின் ஆட்சி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் என்ற பாசாங்கு கூட கைவிடப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தக்கவைக்க, அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட, எந்த ஒரு “சிவப்பு கோடுகளும்” எதற்கும் கிடையாது என்று வெளிப்படையாக அது பிரகடனம் செய்கிறது.
ஈரானை “கற்காலத்திற்கே” குண்டுவீசி தள்ளுவோம் என்ற ட்ரம்பின் சபதம், கடந்த இரண்டு நாட்களில் அவர் இதே வார்த்தைகளைப் பயன்படுத்திய மூன்றாவது முறையாகும். ஆனால், அவரது முந்தைய அழைப்புகள் செய்தித் தாள்களின் தலையங்கப் பக்கங்களில் கண்டனத்திற்கு உள்ளாக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அவை செய்திகளில் கூட அரிதாகவே குறிப்பிடப்பட்டன. ஈரானிய அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்றதாக அருவருப்பான செய்திகளைப் பரப்பிய அதே செய்தி நிறுவனங்கள், ரஷ்ய அரசாங்கத்தின் செயல்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைபவர்கள், ஒரு நாட்டின் நாகரிகத்தையே அழிப்போம் என்ற அறைகூவலைக் குறிப்பிடுவதற்குத் தகுதியற்ற ஒன்றாகவே கருதுகின்றனர்.
ட்ரம்பின் முதன்மை நேர உரையைத் தொடர்ந்து வந்த ஊடக வர்ணனைகளில், அமெரிக்க ஜனாதிபதி ஒரு படுகொலையை நிகழ்த்துவதற்கான குற்றவியல் நோக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்ற உண்மையை விட, அவர் “தன் தரப்பு நியாயத்தை முன்வைத்தாரா” என்ற கேள்வியே கலந்துரையாடலில் ஆதிக்கம் செலுத்தியது.
ட்ரம்ப்பின் இந்த “கற்கால” அறிக்கைகளுக்கு ஒரு ஜனநாயகக் கட்சித் தலைவர் கூட எதிர்வினையாற்றவில்லை. குண்டுவீச்சு தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எந்தவொரு குழுவும் இது குறித்து பொது விசாரணையைக்கூட நடத்தவில்லை.
ட்ரம்ப்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்கள் என்பது வெறும் ஒரு மனிதனின் பிதற்றல்கள் அல்ல. அவர் ஒரு முதலாளித்துவ தன்னலக் குழுவிற்காகப் பேசுகிறார்—ஜனநாயக வடிவங்கள் மற்றும் சட்ட முறைகள் மூலம் இனி தமது நலன்களைப் பாதுகாக்க முடியாத ஒரு ஆளும் வர்க்கத்திற்காக அவர் பேசுகிறார். அந்த வர்க்கம், ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு வெளிநாடுகளில் வன்முறை மூலமும், உள்நாட்டில் சர்வாதிகாரத்தின் மூலமும் பதிலளிக்கிறது.
ஈரானைப் பற்றிய தனது உரையை நிகழ்த்திய அதே நாளில், வெள்ளை மாளிகையில் நடந்த ஈஸ்டர் மதிய உணவில் கலந்து கொண்டவர்களிடம், மத்திய அரசினுடைய அனைத்து குழந்தைப் பராமரிப்பு நிதியுதவியையும் நிறுத்துமாறு மேலாண்மை மற்றும் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்திற்கு (OMB) தான் உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் கூறினார். “நாங்கள் போர்களில் ஈடுபட்டுள்ளோம். எங்களால் குழந்தைப் பராமரிப்பைக் கவனித்துக்கொள்ள முடியாது,” என்று கூறிய அவர், “குழந்தைப் பராமரிப்பு, மருத்துவ உதவி, மருத்துவ பாதுகாப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் எங்களால் கவனிப்பது சாத்தியமில்லை,” என்று மேலும் தெரிவித்தார். ட்ரம்ப் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் ஒரே ஒரு விஷயத்தைத்தான் கவனிக்க வேண்டும், அது இராணுவப் பாதுகாப்பு,” என்று குறிப்பிட்டார்.
ஈரானிய மக்களுக்கு எதிரான போரும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரும் ஒரே கொள்கையின் இரு பக்கங்களாகும். வெளிநாடுகளில் பாரிய படுகொலைகளுக்குத் தயாராகும் ஒரு அரசாங்கம், உள்நாட்டில் சமூக எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்குத் தயாராகிறது: அதாவது எஞ்சியிருக்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களைச் சிதைப்பது, சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான உந்துதல் ஆகியவை இதில் அடங்கும். இன்று மனிதகுலம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியானது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதாக முன்வைக்கப்பட்டுள்ளது.
