வட இலங்கையில் காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக வெகுஜனங்களின் எதிர்ப்பு வளரச்சியடைகின்றது

போரினால் நாசமாக்கப்பட்ட தீவின் வடக்கில் கிளிநொச்சிப் பிரதேச மக்கள், இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள புதிய காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம், வடக்கின் மேற்குக் கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பொன்னாவெளி, பாலாவி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட முந்தைய காற்றாலைத் திட்டத்திற்கு எதிராக மன்னார் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்த சமீபத்திய எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர்ச்சியான எதிர்ப்பு இருந்தபோதிலும், இலங்கை அரசாங்கம் அந்தத் திட்டத்தை முன்னெடுத்தது. செப்டம்பர் 26 அன்று, மன்னாரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது பொலிஸ் வன்முறைத் தாக்குதல் நடத்தியது.

“தேசியத் திட்டம்” என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தின்படி, பூநகரி முழுவதும் 34 காற்றாலைகள் நிறுவப்பட உள்ளன. இவற்றில் ஒன்பது, தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் அமைக்கப்பட இருப்பதன் விளைவாக, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதுடன் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) செய்தியாளர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசினர். அவர்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பான தென்னைத் தோட்டங்களை இந்தத் திட்டம் அழித்துவிடும் என்று அவர்கள் விளக்கினர். ஏறத்தாழ 2,500 தென்னை மரங்கள் அழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு காற்றாலைக்கும் 6.25 ஏக்கர் நிலம் தேவைப்படுவதோடு 60 முதல் 80 தென்னை மரங்கள் வரை அழிக்கப்படும். மொத்தத்தில், 56.25 ஏக்கர் தனியார் நிலம் ஆக்கிரமிக்கப்படும்.

வீடுகள் மற்றும் ஒரு கிறிஸ்தவ தேவாலாயமும் அழிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கிராம மக்கள் தங்களது நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஒன்று திரளத் தொடங்கியுள்ளனர். அவர்கள், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவுக்கு பெப்ரவரி 7 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து, அதன் நகல்களைப் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளதுடன் உள்ளூர் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது பற்றி கலந்துரையாட கிராஞ்சி கிராமத்தில் பாதிக்கப்படுவோர் ஒன்று கூடிய போது

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “போரின் போதும், இராணுவம் காவலரண்களைக் கட்டுவதற்காக தென்னை மரங்களை அழித்துப் பயன்படுத்தியது. மீள்குடியேற்றத்திற்குப் பிறகு, நாங்கள் இந்தத் தோப்புகளை மீண்டும் நட்டுப் புனரமைத்தோம். இன்று, இந்தத் தென்னந்தோப்புகள், போரில் தங்கள் பிள்ளைகளை இழந்த முதிய பெற்றோர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகின்றன.”

“நாங்கள் எங்கள் பாரம்பரிய நிலங்களிலேயே தொடர்ந்து வாழ விரும்புகிறோம். எங்களுக்கு இழப்பீடோ மாற்று நிலமோ வேண்டாம்,” என அது மேலும் தொடர்கிறது.

அரசால் ஆதரிக்கப்படும் நிபுணர்கள் முன்வைத்த கூற்றுகளுக்கும் அந்தக் கடிதம் சவால் விடுகிறது. 2003 ஆம் ஆண்டில், இலங்கையின் தேசிய இயற்கை வளங்கள் அமைச்சு, கொழும்புப் பல்கலைக்கழக நிபுணர்களுடன் இணைந்து, இத்திட்டத்தைப் பரிந்துரைத்து ஆய்வுகளை நடத்தியது. குடியிருப்பாளர்கள் இந்தக் கண்டுபிடிப்புகளை நிராகரித்துள்ளனர்.

“இந்த காற்றாலைகள் சதுப்பு நிலங்களில் மட்டுமே நிறுவப்படும் என்ற கூற்று பொய்யானது; அது பொதுமக்களை ஏமாற்றுவதையும் எங்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது,” என கிராமவாசிகள் கூறுகின்றனர்:

பெருகிவரும் எதிர்ப்பைப் புறக்கணித்து, அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியை ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகின்றனர். குடியிருப்பாளர்கள் அரசு அலுவலகங்களுக்கு வரவழைக்கப்பட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளித்து இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர்.

தென்னை மரங்கள் மட்டுமின்றி, பனை, மா மற்றும் பலா உட்பட ஏராளமான பிற பயன்தரும் மரங்களும் அழிக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் 2009 மே மாதம் முடிவடைந்த, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனப்படுகொலைப் போரின் போது, பெரும் அழிவைச் சந்தித்த விவசாய மற்றும் மீன்பிடி சமூகங்களின் பூர்வீகமாக இந்தக் கிராமங்கள் விளங்குகின்றன. வான்வழி குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

தற்போது, ​​அரசாங்கம் இதே சமூகத்தினரிடமிருந்து அவர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிக்க முயற்சிக்கிறது.

2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச) அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் முதலில் திணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளையிலான சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதேநேரம், அது சாதாரண மக்களின் செலவில், பெரும் நிறுவனங்களின் இலாப நோக்குத் திட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிடுகிறது.

வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிராக, பொலிஸ் அடக்குமுறைகள் பெருகி வருகின்றன.

முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் முறையிடுவதால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை மன்னார் போராட்டங்களின் அனுபவம் நிரூபிக்கிறது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடது அமைப்புகளும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் முந்தைய போராட்டங்களில் பங்கேற்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தன. இருந்தபோதிலும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையின் பெரும் வணிகக் குழுமமான, ஹேலீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபென்டன்ஸ் நிறுவனம், மன்னார் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

முன்னதாக, இந்திய கோடீஸ்வர நிறுவனமான அதானி குழுமம் இத்திட்டத்தின் முக்கிய பங்குதாரராக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது தனது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. புதிய முதலீட்டாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நமது நிருபர்களுடன் பேசிய குடியிருப்பாளர்கள் ஆழ்ந்த கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான ஆனந்த நடராஜன் கூறியதாவது: “பொதுமக்களின் ஆதரவு இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள், ஆனால் அது பொய். அவர்கள் அனுமதியின்றி இந்தத் திட்டத்தைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் மௌனம், எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு அவர்கள் உடன்படுவதைக் காட்டுகிறது. இப்போது அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.”

74 வயதான கே. நித்யாதேவி விளக்குகையில், “அவர்கள் என்னை வரவழைத்து என் நிலத்தை ஒப்படைக்கச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். நான் 46 வயதான, மாற்றுத்திறனாளி மகளுடன் வசிக்கும் ஒரு விதவை. எங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் எங்கள் நிலத்தைப் பறித்து, எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க விரும்புகிறார்கள். நாங்கள் எப்படி பிழைப்பது?” என்று கேட்டார்.

மாற்றுத்திறனாளி மகளுடன் கே. நித்தியாதேவி (வலது)

இதற்கிடையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், இத்திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை என்றாலும், அது குடியிருப்புகளைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறி, அதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக மக்களின் பாதுகாவலர்கள் போல் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அரசாங்கக் கொள்கைகளை ஆதரிக்கும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் இரட்டை வேடத்தை இத்தகைய நிலைப்பாடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அவர்களின் முதன்மையான அக்கறை மக்களின் நலன் அல்ல, மாறாக அவர்களின் சொந்த அரசியல் நலன்களே ஆகும்.

இந்தத் திட்டம் மக்களை எவ்வாறு பாதிக்காது என்பதை அவர் விளக்கவில்லை. வடக்கிலுள்ள தமிழ் உயரடுக்கு மற்றும் உயர் மத்தியதர வர்க்க பகுதியினரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் திறந்துவிடுகின்றனர்.

இருப்பினும், இந்தப் புதிய திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று சாமானிய மக்கள் அஞ்சுகின்றனர். 26 ஆண்டு கால இனவாதப் போரை நடத்திய கொழும்பு அரசாங்கங்களை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்கள் நம்புவதில்லை. போரினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து பெரும்பான்மையான மக்களால் இன்னும் மீள முடியவில்லை. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தங்களின் வாக்குறுதிகளை மீறியுள்ளன. இந்த மாகாணங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், திசாநாயக அரசாங்கம் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அவர்களின் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

காற்றாலை மின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெடுக்கும் போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கிறது. தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த குழுக்களிடமிருந்து சுயாதீனமாக தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதன் மூலமே, தங்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அவர்கள் தங்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கையின் ஒரு ரொட்ஸ்கிசப் புரட்சிகரக் கட்சியாகும். இது சோசலிசக் கொள்கைகளுக்காகவும், சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் போராடுகிறது.

Loading