அமைதிக்கு எதிரான குற்றங்கள்: நூரம்பேர்க் விசாரணைகளின் முன்னுதாரணமும் ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலியப் போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மார்ச் 27 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் உள்ள பிரெட்ரிக்-அலெக்சாண்டர் பல்கலைக்கழகத்தில் (FAU) விதிவிலக்கான அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விரிவுரையை ஆற்றினார்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, பிரெட்ரிக்-அலெக்சாண்டர் பல்கலைக்கழகத்தில் IYSSE அமைப்பால் நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டமாகும்—இதற்கு மிகுந்த உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்திற்கு வசந்தகால விடுமுறை விடப்பட்டிருந்த போதிலும், 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இது போர் குறித்த கவலையின் ஆழத்தையும், போருக்கு எதிரான சோசலிச முன்னோக்கு மீது வளர்ந்து வரும் ஆதரவையும் நிரூபிப்பதாக உள்ளது.

லீப்சிக் மற்றும் பேர்லினில் பெரும் திரளானோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்களைத் தொடர்ந்து, ஜேர்மனி முழுவதும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் கூட்டங்களின் உச்சகட்டமாக நூரம்பேர்க்கில் இடம்பெற்ற விரிவுரை அமைந்தது.

1945–46 காலகட்டத்தில் நாஜி ஆட்சியின் எஞ்சியிருந்த தலைவர்கள் மீது நடத்தப்பட்ட நூரம்பேர்க் விசாரணைகளுடன் அந்த நகரத்திற்கு இருக்கும் பிரிக்க முடியாத தொடர்பைக் குறிப்பிட்டு டேவிட் நோர்த் தனது உரையைத் தொடங்கினார். ஆக்கிரமிப்புப் போர்களைத் திட்டமிடுதல், தயாரித்தல் மற்றும் நடத்துதல் ஆகிய “உச்சகட்ட சர்வதேச குற்றத்திற்காக” அவர்கள் அப்போது தண்டிக்கப்பட்டனர். இந்த சட்ட மற்றும் வரலாற்று அடிப்படையைத்தான் நோர்த் தற்போதைய ஈரான் போரின் மீது மிகத் துல்லியமாகப் பிரயோகித்தார்.

யூத இனப்படுகொலை என்பதை விட, அமைதிக்கு எதிரான குற்றங்களை இழைப்பதையே நூரம்பேர்க் நீதிமன்றம் மிக உயரிய குற்றமாக வகைப்படுத்தியது என்று நோர்த் வலியுறுத்தினார். நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி அவர் விளக்கினார்: “ஒரு ஆக்கிரமிப்புப் போர் என்பது மிகவும் உச்சக்கட்ட சர்வதேசக் குற்றமாகும், இது மற்ற போர்க்குற்றங்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம், இது ஒட்டுமொத்தமாகத் திரட்டப்பட்ட தீமைகளையும் தனக்குள்ளேயே கொண்டுள்ளது என்பதாகும்.” இந்த விளக்கத்தின் தாக்கத்தை அவர் இவ்வாறு அழுத்தமாகக் கூறினார்: குறிப்பாக, “ஒரு ஆக்கிரமிப்புப் போரின் போக்கில் செய்யப்படும் ஒவ்வொரு அட்டூழியமும், கொல்லப்படும் ஒவ்வொரு குடிமகனும், அழிக்கப்படும் ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு சித்திரவதை மற்றும் கூட்டுத் தண்டனைச் செயலும், போரைத் தொடங்குவதற்கான அந்த ஆரம்பக்கால குற்றவியல் முடிவிலிருந்தே உருவாகின்றன மற்றும் அதற்குள்ளேயே அடங்கியுள்ளன” என்பதாகும்.

இதனைத் தொடர்ந்து நோர்த் இந்தத் தரநிலையைத் தற்போதைய மோதலுக்குப் பயன்படுத்தினார்: “நூரம்பேர்க் விசாரணையில் நிறுவப்பட்ட தரநிலைகளைப் பயன்படுத்தினால், ஈரானுக்கு எதிரான போர் எந்த சந்தேகமுமின்றி அமைதிக்கு எதிரான ஒரு குற்றம் ஆகும். மேலும் இதனை நடத்துபவர்கள் அனைவரும் குற்றவாளிகளே ஆவர். இது மிகைப்படுத்தல் அல்ல, இது ஒரு சட்டபூர்வமான உண்மை. ட்ரம்ப் ஒரு குற்றவாளி, ஹெக்செத் ஒரு குற்றவாளி, ரூபியோ ஒரு குற்றவாளி.”

நோர்த் இந்த குற்றப்பத்திரிகையை மிகவும் நுணுக்கமான விவரங்களுடன் முன்வைத்தார். நாடாளுமன்றத்தின் போர் பிரகடனம் இல்லாமை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுதல், ஆயுதமற்ற ஈரானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது, இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் திட்டமிட்டுச் சீர்குலைத்தது மற்றும் 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்கத் தரைப்படையின் மிகப்பெரிய அளவிலான குவிப்பிற்கு ஒரு போர்வையாகப் “பயனுள்ள பேச்சுவார்த்தைகள்” என்ற மோசடியான கூற்றுக்களைப் பயன்படுத்தியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பயன்படுத்திய மொழியின் மீது நோர்த் தனிக் கவனம் செலுத்தினார். “முட்டாள்தனமான போர் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாத” மற்றும் “சர்வதேச நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவற்றின் பேச்சைக் கேட்டு அஞ்சாத” விமானப்படை அதிகாரத்தைப் பயன்படுத்துவது பற்றி ஹெக்செத் பெருமையாகப் பேசியிருந்தார். மேலும் அவர் அமெரிக்கப் படையினர்களிடம்: “நாம் இனி பாதுகாப்பாளர்கள் அல்ல. நாம் போர்வீரர்கள், எதிரிகளைக் கொல்லவும் அவர்களின் மன உறுதியை உடைக்கவும் பயிற்சி பெற்றவர்கள்,” என்று கூறியிருந்தார்.

ஒரு ஜேர்மானியராக, இதனை ஹிட்லர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நடத்திய நிர்மூலமாக்கும் போர் என்பதன் மொழியாக நீங்கள் அடையாளம் காண்பீர்கள் என்று நோர்த் அங்கிருந்தவர்களிடம் கூறினார். “எதிரிகளுக்கு மன்னிப்பு கிடையாது, கருணை காட்டப்படமாட்டாது” என்ற ஹெக்செத்தின் பிரகடனம், 1899-ஆம் ஆண்டின் ஹேக் மாநாட்டில் குறியிடப்பட்ட சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று நோர்த் குறிப்பிட்டார். ஒருவேளை ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், இந்த அறிக்கைகள் ஒவ்வொன்றும் ஆதாரங்களாக முன்வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த விரிவுரையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் உடந்தையான போக்கிற்கு ஒதுக்கப்பட்டது. அமெரிக்க-இஸ்ரேலிய திடீர் தாக்குதலைக் கண்டிக்காமல், ஈரானின் பதிலடித் தாக்குதல்களை “மன்னிக்க முடியாதது” என்று ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்ததானது, இது எதார்த்தத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் தலைகீழாக மாற்றுவதாகும் என்று நோர்த் சுட்டிக்காட்டினார். உக்ரேனில் ரஷ்யாவின் போரைக் கண்டிக்க நான்கு ஆண்டுகளாக சர்வதேச சட்டத்தையும் இறையாண்மையின் புனிதத்தையும் பயன்படுத்திய அதே அரசாங்கங்கள், 91 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்திற்கு எதிராகத் தூண்டப்படாமல் நடத்தப்படும் அமெரிக்கப் போருக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூடப் பேசவில்லை.

“விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு” என்பது ஏகாதிபத்திய சக்திகள் தாங்கள் விரும்பும் எவர் மீதும் போர் தொடுப்பதற்கான உரிமையைக் குறிக்கும் ஒரு மாற்றுச் சொல் என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது என்று நோர்த் கூறினார். ஜேர்மனியிலேயே மீண்டும் இராணுவவாதக் கொள்கை உருவெடுப்பதை அவர் சுட்டிக்காட்டினார்; அங்கு அரசியல்வாதிகள் மீண்டும் ஒரு “போர்வீரர் கலாச்சாரத்தை” உருவாக்குவது பற்றியும் ரஷ்யாவுடனான மோதலுக்குத் தயாராவது பற்றியும் பேசி வருகின்றனர்.

போர் பிரச்சாரத்தின் கருவியாக ஊடகங்களின் பங்கையும் நோர்த் அடிக்கோடிட்டுக் காட்டினார். நாஜி பத்திரிகைப் பிரிவின் தலைவரான ஹான்ஸ் பிரிட்ச் மீதான நூரம்பேர்க் விசாரணையை மேற்கோள் காட்டி, ஆக்கிரமிப்புப் போரை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்கு ஒரு மேலோட்டமான விஷயமாகக் கருதப்படாமல், குற்றவியல் முயற்சியின் ஒருங்கிணைந்த அங்கமாக அந்த விசாரணையில் கையாளப்பட்டது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இந்தத் தரநிலையின்படி, தற்போதைய போரை ஊக்குவிக்கும் பிரச்சாரகர்கள் - அவர்கள் நியூ யோர்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அல்லது அவர்களின் ஜேர்மன் சகாக்களுக்காக எழுதினாலும் - எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கொள்கைகளின் கீழ் அவர்களே குற்றவாளிகளாவார்கள் என்று நோர்த் வாதிட்டார்.

ட்ரம்ப்பின் குற்றத்தன்மை என்பது ஒரு பிறழ்வு அல்ல, மாறாக அது ஒரு மரணமடைந்து வரும் சமூக ஒழுங்கின் வெளிப்பாடாகும் என்று நோர்த் விளக்கினார். “ட்ரம்ப்பைக் கொண்டு இந்த நெருக்கடியை விளக்க முடியாது,” என்று அவர் கூறினார். “நெருக்கடியைக் கொண்டுதான் நாம் ட்ரம்ப்பை விளக்க வேண்டும்.”

தனது முடிவில், ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு மாற்றீட்டு சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோர்த் சுட்டிக்காட்டினார், மேலும் போருக்கு எதிரான போராட்டம் ஒரு புரட்சிகர சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விரிவுரையைத் தொடர்ந்து விறுவிறுப்பான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது, இது எழுப்பப்பட்ட அரசியல் கேள்விகளுடன் பார்வையாளர்கள் எவ்வளவு தீவிரத்துடன் ஈடுபட்டனர் என்பதைப் பிரதிபலித்தது.

இந்த விரிவுரை அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எமது வாசகர்கள் அனைவரும் இதை முழுமையாகப் பார்க்குமாறும், அனைத்து தளங்களிலும் முடிந்தவரை பரவலாகப் பகிருமாறும், டேவிட் நோர்த் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை எக்ஸ்/ட்விட்டர்பேஸ்புக்இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்கிறோம். பெருநிறுவன ஊடகங்கள் ஆக்கிரமிப்பு போருக்கான ஒரு பிரச்சாரக் கருவியாகச் செயல்படும் இந்தக் காலத்தில் —சரியாகச் சொன்னால், இதே பாத்திரத்திற்காகவே நூரம்பேர்க் விசாரணையில் நாஜி பத்திரிகை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர்—, உலக சோசலிச வலைத் தளம் வரலாற்று உண்மை மற்றும் சோசலிசக் கோட்பாடுகளின் குரலாக நிற்கிறது. இந்த முக்கியமான அரசியல் முன்னோக்கிற்கு ஆதரவு அளிக்கவும், இதைப் பகிர்ந்து வாசகர் வட்டத்தை உருவாக்க உதவுங்கள்.

Loading