மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரிப்பதை மையமாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட வரைவை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2027 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டக் கோரிக்கையில், “பாதுகாப்பிற்காக” — அதாவது இராணுவ ஆக்கிரமிப்பிற்காக — சுமார் 1.5 டிரில்லியன் டாலர்களை அங்கீகரிக்குமாறு வெள்ளை மாளிகை காங்கிரஸிடம் கேட்டுள்ளது. இது நவீன வரலாற்றிலேயே மிக உயர்ந்த இராணுவச் செலவினமாக இருக்கும். இது ஏற்கனவே சாதனை அளவாக உள்ள பென்டகன் செலவினங்களை விட 40 சதவீத மலைக்க வைக்கும் உயர்வாகும்.
இது மூன்றாம் உலகப் போருக்கான ஒரு வரவுசெலவுத் திட்டமாகும். 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டின் நாகரீக வாழ்க்கையின் உள்கட்டமைப்பை அழிக்கும் வகையில், ஈரானை “கற்காலத்திற்கு” தள்ளும் அளவிற்கு குண்டுவீசுவோம் என்ற தனது உறுதிமொழியை ட்ரம்ப் செயல்படுத்தி — தீவிரப்படுத்தி— வரும் நிலையில் இது வந்துள்ளது. 2027 நிதியாண்டுக்கான கோரிக்கை, 1.1 டிரில்லியன் டாலர்கள் அடிப்படைச் செலவினங்களுக்காகவும், கூடுதலாக வெடிபொருட்கள் மற்றும் “பாதுகாப்பு தொழில்துறை தளத்தின்” விரிவாக்கத்திற்கான கட்டாய நிதியுதவியாக இன்னும் பல நூறு பில்லியன் டாலர்களையும் கோருகிறது.
இந்த ஆவணம், புதிய 18 போர்க் கப்பல்கள் மற்றும் 16 போர் அல்லாத கப்பல்களை வாங்குவதற்காக கப்பல் கட்டுமானத்திற்கு 65.8 பில்லியன் டாலர்கள் நிதியைக் கோருகிறது. மேலும், “ட்ரம்ப்-வகை போர்க் கப்பல்” மற்றும் “அடுத்த தலைமுறை போர்க் கப்பல்கள்” ஆகியவற்றிற்கான நிதியுதவி உட்பட “ஜனாதிபதி ட்ரம்பின் தங்கக் கடற்படை” திட்டத்தை இது அறிவிக்கிறது. விண்வெளி அடிப்படையிலான உணர்விகள் மற்றும் இடைமறிப்பான்கள் உள்ளடக்கிய “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பை இது ஊக்குவிப்பதோடு, அதே நேரத்தில் “ட்ரோன் ஆதிக்கம்” “ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள்” மற்றும் செயற்கை நுண்ணறிவில் “வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடுகளை” துரிதப்படுத்துகிறது.
இதன் மையத்தில் ஈரானுக்கும் அப்பால் நடக்கவிருக்கும் மோதல்களுக்கான தயாரிப்பு உள்ளது: அது, சீனாவைச் சுற்றியுள்ள பிடியை இறுக்குதல், அணு ஆயுதத் திட்டம், அணுசக்தி கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவைகளாகும். இந்த வரவு செலவுத் திட்டம் “உலகின் எந்தப் பகுதிக்கும் அதிகாரத்தைச் செலுத்த” F-47 ஆறாம் தலைமுறை போர் விமானத்தை நோக்கி “தீவிரமாக” நகர்வதாக பெருமையடித்துக் கொள்கிறது. மேலும், இது முழு இராணுவக் கட்டமைப்பையும் “பழைய” அமைப்புகளிலிருந்து விலகி, “21-ஆம் நூற்றாண்டு போர்களில்” வெற்றி பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை திறன்களை நோக்கிய நனவான மாற்றமாக முன்வைக்கிறது.
ட்ரம்ப் “கற்கால” அழிவுக்கு சூளுரைத்துள்ள வேளையில், இந்த 1.5 டிரில்லியன் டாலர்கள் கோரிக்கை, வரலாற்று ரீதியாக பின்னோக்கிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மிகவும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன இயந்திரங்களைக் கட்டமைப்பதற்கான நிதி வழிமுறையாக அமைகிறது.
இதற்கு எவ்வாறு பணம் செலுத்தப்படப் போகிறது? தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான பாரிய தாக்குதலின் மூலமே இது சாத்தியமாகும்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் உள்நாட்டு முகமைகளில் 73 பில்லியன் டாலர்கள் வெட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை வீட்டுவசதி, கல்வி மற்றும் காலநிலை தொடர்பான திட்டங்களைக் இலக்காகக் கொண்டுள்ளன. இது பெருநிறுவனச் சுரண்டலின் மீதான மிகக்குறைந்த ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளைக் கூட பலவீனப்படுத்தும் வெட்டுக்களை முன்னெடுத்துச் செல்கிறது: உதாரணமாக, பணியிட மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே மிகக்குறைந்த நிதியையே பெற்றுள்ள தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்திற்கான (OSHA) நிதியைக் குறைத்தல்; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் வெட்டுக்கள்; மற்றும் தொழிலாள வர்க்கக் குடும்பங்களுக்கான குளிர்கால வெப்பமூட்டிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப் பணம் செலுத்த உதவும் திட்டங்கள் உட்பட சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் குறைப்புகளைச் செய்கிறது.
ஆனால், ட்ரம்ப் கோரும் இந்த இராணுவ விரிவாக்கத்திற்கு இத்தகைய சிறிய வெட்டுக்களால் நிதி வழங்க முடியாது. ஏற்கனவே உள்ள பாரிய பற்றாக்குறை மற்றும் கடன் சுமைக்கு மத்தியில் —இது முடிவில்லாத போர்கள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் விளைவாகும் — 1.5 டிரில்லியன் டாலர்கள் போர்க்கால வரவுசெலவுத் திட்டத்திற்கு வெறும் விருப்பத்தேர்வு சார்ந்த செலவினங்களைக் குறைப்பது மட்டும் போதாது. இது நேரடியாக முக்கிய சமூக நலத்திட்டங்களை —மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு— நோக்கியே விரல் காட்டுகிறது. ஏனெனில், சூறையாடுவதற்கு ஏற்ற வகையில் போதுமான நிதி உள்ள ஒரே வரவு செலவுத் திட்டப் பிரிவுகள் இவை மட்டுமே.
கடந்த வாரம் ஒரு மூடிய கதவுகளுக்கு பின்னால் இடம்பெற்ற ஈஸ்டர் மதிய உணவின் போது, ட்ரம்பின் கசிந்த கருத்துக்களின் அர்த்தம் இதுதான். அங்கு அவர், “நாம் போர்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்பதால் சமூக நலத் திட்டங்கள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று அப்பட்டமாகத் தெரிவித்தார். ட்ரம்ப் இவ்வாறு கோரினார்: “குழந்தை பராமரிப்புக்கு எந்தப் பணத்தையும் அனுப்ப வேண்டாம். ... நாம் போர்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களால் குழந்தை பராமரிப்பைக் கவனித்துக் கொள்ள முடியாது.” மேலும் அவர் கூறுகையில்: “குழந்தை பராமரிப்பு, மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவி ஆகியவற்றைக் கவனிப்பது நமக்குச் சாத்தியமில்லை. ... நாம் ஒன்றை மட்டும் கவனிக்க வேண்டும்: அது இராணுவப் பாதுகாப்பு.”
இங்கு தான், ட்ரம்ப் உண்மையை போட்டுடைத்துள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இரு தரப்பினரின் கீழும், ஆளும் வர்க்கமானது 20 ஆம் நூற்றாண்டின் சமூகச் சீர்திருத்தங்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தச் சீர்திருத்தங்கள் கடுமையான வர்க்கப் போராட்டத்தின் மூலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டவை, மேலும் சமூகப் புரட்சியின் பயம் காரணமாக ஒரு பகுதியினரால் விட்டுக் கொடுக்கப்பட்டன. “எமக்குத் தெரிந்த சமூக நலத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவேன்” என்ற கிளிண்டனின் பிரகடனம் முதல், காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை உறுதிப்படுத்திய ஓபாமாவின் பெருநிறுவன ஆதரவு “சுகாதார சீர்திருத்தம்” மற்றும் பொதுக் கல்வியின் தொடர்ச்சியான சீரழிவு வரை, திசைவழி ஒன்றாகவே இருந்து வந்துள்ளன.
ஆனால், பல மில்லியன்கணக்கான மக்களின் நவீன வாழ்க்கையின் குறைந்தபட்ச உத்தரவாதங்களாக இருக்கும் முக்கிய சமூக நலத் திட்டங்களில்தான் “பெரிய அளவிலான பணம்” உள்ளது: பெரும் பொருளாதார மந்தநிலையின் போது நிறுவப்பட்டு 70 மில்லியனுக்கும் (7 கோடி) அதிகமான மக்களால் நம்பியிருக்கப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டம், மற்றும் 1960களில் நிறுவப்பட்ட மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவி திட்டங்கள் — குறிப்பாக, மருத்துவ காப்பீடு திட்டம் ஏறத்தாழ 68 மில்லியன் மக்களையும், மருத்துவ உதவி மற்றும் குழந்தைகள் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் இணைந்து சுமார் 36 மில்லியன் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 75 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் உள்ளடக்கியுள்ளன.
இராணுவவாதத்திற்கு நிதியளிக்கவும், நிதிய தன்னலக்குழுவை வளப்படுத்தவும் இந்தத் திட்டங்களே இலக்கு வைக்கப்பட வேண்டும் என்பது ஆளும் வட்டாரங்களில் நீண்ட காலமாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதன் பின்னாலுள்ள வர்க்க தர்க்கத்தை அப்பட்டமாகக் கூறியுள்ளது: “உண்மையான தேர்வு” என்பது “ஆயுதங்களுக்கும்” மற்றும் “கட்டுக்கடங்காத உரிமைகளுக்கும்” இடையில் உள்ளது —அதாவது, ஏகாதிபத்திய போருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளுக்கும் இடையில்தான் அந்த தேர்வு உள்ளது.
ஒரு கொடூரமான பொலிஸ் அரசு சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலமே ஒழிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது சாத்தியமில்லை. குடிவரவு பொலிஸ் துறையினரை துணை இராணுவப் படையில் நிறுத்துதல், ரெனி நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினர் (ICE) கொலை செய்தது, பாசிச வன்முறையை வளர்த்தெடுப்பது, மற்றும் கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்குதல் ஆகியவற்றின் சாராம்சமான வர்க்க உள்ளடக்கம் இதுவே. கடந்த 4ம் திகதி WSWS எழுதியது போல், “வெளிநாடுகளில் மக்களைக் கொடூரமாக நடத்தும் ஒரு அரசாங்கம், உள்நாட்டிலும் அதே முறைகளையே கையாளும். ஏகாதிபத்தியப் போரில் உருவாக்கப்பட்ட வழிமுறைகள் உள்நாட்டு வாழ்க்கையிலும் அதே போன்றதையே காண்கின்றன.” போரும் சர்வாதிகாரமும் ஒரே வர்க்கப் போரின் இரண்டு முன்னரங்குகளாகும்.
போரை நடத்துவதைப் போலவே, உள்நாட்டுக் கொள்கையிலும் தன்னலக்குழுவின் செய்தித் தொடர்பாளராக ட்ரம்ப் செயல்படுகிறார். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இருவராலும் ஆதரிக்கப்படும் வர்க்கக் கொள்கையை அவர் மிகவும் இரக்கமற்ற மற்றும் வெளிப்படையான வடிவத்தில் வெளிப்படுத்துகிறார்.
ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு வழக்கமான நேர்மையற்ற மற்றும் பாசாங்குத்தனமான அறிக்கைகளுடன் பதிலளிக்கின்றனர். ஆனால், அவர்கள் இந்தத் திட்டத்தின் வர்க்க சாரத்தை ஆதரிக்கின்றனர். ட்ரம்ப் இப்போது தடையின்றி விரிவுபடுத்தும் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கும் பாரிய இராணுவ மற்றும் உளவுத்துறை வரவு செலவுத் திட்டங்களுக்கு அவர்கள் வாக்களித்துள்ளனர். ட்ரம்ப் நிர்வாகம் மிரட்டல் மற்றும் பயங்கரத்தின் உள்நாட்டு எந்திரத்தை உருவாக்கியுள்ள நிலையிலும் கூட, மார்ச் 27 அன்று செனட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நிதி நடவடிக்கைக்கு ஒருமனதாக வாக்களித்தனர். இது ICE மற்றும் எல்லை பொலிஸ் படை மீதான குறைந்தபட்ச கட்டுப்பாடுகளைக் கூடக் கைவிட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் சமூக நலத்திட்டங்கள் மீதான தாக்குதலை ஆதரிக்கின்றனர். ஏனெனில், அவர்கள் அதை கோரும் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கின்றனர். ஜனநாயகக் கட்சியின் “இடதுசாரி” என்று அழைக்கப்படுபவர்கள் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பைக் காட்ட வேண்டும். நியூ யோர்க் நகர மேயரும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் கட்சி (DSA) உறுப்பினருமான ஜோஹ்ரான் மம்தானி, ட்ரம்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம், மம்தானியின் “மலிவு விலை நிகழ்ச்சி நிரலுக்கு” ட்ரம்ப் ஆதரவு அளிப்பார் என்ற ஒரு கற்பனையான உடன்படிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்பதை நினைவு கூர வேண்டும். இப்போது தெரிவது என்னவென்றால், இந்த “நிகழ்ச்சி நிரல்” என்பது போரை நடத்துவதற்கும் சர்வாதிகாரத்தை நிலைநிறுவுவதற்கும் சமூக நலத்திட்டங்களை அழிப்பதை உள்ளடக்கியுள்ளது.
தன்னலக்குழுவின் கொள்கையை நடைமுறைப்படுத்துவது வெடிப்புமிக்க எதிர்ப்பை உருவாக்கும். உண்மையில் இதை ஏற்கனவே உருவாக்கி வருகிறது. இது மார்ச் 28 “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் வெளிப்பட்டது. இது போர், சர்வாதிகாரம் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் இதுவரை கண்டிராத பரந்த வெளிப்பாடாக மில்லியன் கணக்கான மக்களை வீதிக்குக் கொண்டு வந்தது.
இது வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கம் மற்றும் பணியிடப் போராட்டங்களின் பெருகிவரும் அலையிலும் வெளிப்பட்டு வருகிறது. போரே சமூக எதிர்ப்பை முடுக்கி விடுகிறது. இது பணவீக்க அழுத்தங்களைத் தீவிரப்படுத்துகிறது, பிரம்மாண்டமான அளவில் வளங்களைத் திசைதிருப்புகிறது மற்றும் பொருளாதார சீர்குலைவை ஆழமாக்குகிறது. மேலும், அமெரிக்காவில் உள்ள பெருந்திரளான தொழிலாளர்கள், ஈரான் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மார்க்ஸிஸ்டுகள் நீண்டகாலமாக விளக்கி வருவதை ட்ரம்ப் மிகவும் கொடூரமான மற்றும் தெளிவான வடிவத்தில் வெளிப்படுத்துகிறார்: முதலாளித்துவ அரசு என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாகும். ஒரு பேராசை கொண்ட கொள்ளையடிக்கும் மற்றும் குற்றவியல் ஆளும் வர்க்கம், வெளிநாட்டில் போரை நடத்தவும், உள்நாட்டில் சமூக நலத்திட்டங்களை அழிக்கவும், ஒரு போலீஸ் அரசை நிறுவவும் அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.
இதற்கான எதிர்ப்பு எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதே தீர்க்கமான கேள்வியாகும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சமூக சக்தியை அணிதிரட்டி, வர்க்கப் போராட்டத்தின் முறைகள் மூலம் இது முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. சமூக நலத்திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக உரிமையின் பாதுகாப்பையும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது.
இரு முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க எந்திரத்திலிருந்தும் சுயாதீனமான, மற்றும் சர்வதேச ரீதியாக ஒன்றுபட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதே இன்றைய பணியாகும். அதன் அர்த்தம் அதிகாரத்தின் மூலத்தை எதிர்கொள்வதாகும்: அதாவது, தன்னலக்குழுக்கள் மற்றும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் ஆகும். இதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவை —அதாவது, பெரும் தன்னலக்குழுக்களையும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் மாபெரும் பெருநிறுவனங்களையும் கையகப்படுத்தி, சமூகத்தின் தீர்க்கமான பொருளாதார வளங்களை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொது உடைமைக்கு மாற்றுவதாகும்.
