மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத் தளத்தில், தொடர்ச்சியான போர்க்குற்றங்கள் மூலம் ஈரானின் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை அழிக்கப் போவதாக ஆபாச வார்த்தைகள் கலந்த ஒரு வெறித்தனமான பதிவை வெளியிட்டார்.
அதில் அவர், “ஈரானில் செவ்வாய்க்கிழமை என்பது ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும். இது போன்ற ஒன்று இதுவரை நடந்திருக்காது!!! பித்துப்பிடித்தவர்களே, அந்த F****n நீரிணையை திறந்து விடுங்கள், இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும் - பொறுத்திருந்து பாருங்கள்! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, ட்ரம்ப் இவ்வாறு எழுதியிருந்தார்: “நேரம் முடிந்து கொண்டிருக்கிறது — அவர்கள் மீது ஒட்டுமொத்த நரகமும் இறங்குவதற்கு இன்னும் 48 மணிநேரமே உள்ளது. இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும்!” ஞாயிற்றுக்கிழமை காலை பொக்ஸ் நியூஸிடம் ட்ரம்ப் கூறுகையில்: “அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு விரைவாக வராவிட்டால், நான் அனைத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவதைப் பற்றி பரிசீலித்து வருகிறேன்,” என்றார்.
ஈஸ்டர் ஞாயிறு அன்று, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டின் மக்களை “நரகத்திற்கு” அனுப்புவதாக அச்சுறுத்தும் செய்தியில் அல்லாஹ் என்ற பெயரைப் பயன்படுத்தியது, வெளிப்படையான ஒரு கிறித்தவ பாசிச அறிக்கையாகும். இது, இப்போர் ஒரு சிலுவைப் போரின் சாயலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
90 மில்லியன் மக்களின் நாகரீக வாழ்க்கையின் அடிப்படையான ஈரானின் மின் கட்டமைப்பு மற்றும் பாலங்களை அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்துகிறார். சட்டவிரோதமான ஆக்கிரமிப்புப் போரின் பின்னணியில் இவை முற்றிலும் குற்றத்தன்மையுள்ள அறிக்கைகளாகும்.
ட்ரம்ப், சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பு, ஜனநாயக மரபுகள் மற்றும் அடிப்படை சட்டபூர்வத்தன்மை ஆகியவற்றுக்கு முற்றிலும் அப்பாற்பட்டே செயல்பட்டு வருகிறார். விண்ணைத் தொடும் சமூக சமத்துவமின்மை, முடிவில்லாத போர் மற்றும் சுழன்று கொண்டிருக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் அழுத்தத்தினால், அமெரிக்க ஜனநாயகம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து போயுள்ளதற்கு அவரது கூற்றுகளும் செயல்களுமே ஒரு சாட்சியமாகும்.
அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் ஈரானிய மக்களுக்கு எதிரான ட்ரம்பின் இந்தச் சட்டவிரோதப் போரை வெறுக்கிறார்கள் மற்றும் எதிர்க்கிறார்கள். அவர்கள், ட்ரம்பை ஒரு குற்றவாளியாகவும் ரவுடியாகவும் மிகச் சரியாகவே பார்க்கிறார்கள்.
ஆனால் இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: மார்ச் 28 அன்று மில்லியன் கணக்கான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக அணிவகுத்து நின்ற பிறகும், இவ்வளவு பெரிய மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், இந்த குண்டரின் ரவுடித்தனமான ஆட்சி எவ்வாறு அதிகாரத்தில் இருக்க முடிகிறது?
இதற்கான பதில், பெயரளவிலான அரசியல் எதிர்ப்பின் தன்மையில் உள்ளது. ட்ரம்பின் அறிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்வினை, ஜனாதிபதியின் ஆளுமை மற்றும் மனநிலை ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தியுள்ளது. “இவை ஒரு ஆபத்தான மற்றும் மனநிலை சரியில்லாத நபரின் பிதற்றல்கள்” என்று செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை எழுதினார். செனட்டர் கிறிஸ் மர்பி, ட்ரம்பின் கருத்துக்கள் “முற்றிலும் நிலைகுலைந்தவை” என்று கூறினார். செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், ட்ரம்ப் “சமூக ஊடகங்களில் ஒரு பைத்தியக்காரனைப் போல ரகளையில்” ஈடுபடுகிறார் என்றும் “போர்க் குற்றங்களை” இழைப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் என்றும் கூறினார்.
ட்ரம்பின் கூற்றுகள் உண்மையில் குற்றத்தன்மை கொண்டவை மற்றும் பைத்தியக்காரத்தனமானவை. ஆனால், ஜனநாயகக் கட்சியினரின் பதிலிறுப்பானது அரசியல் ரீதியான கையாலாகத்தனத்தைக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகியும், எந்தவொரு காங்கிரஸ் கமிட்டியும் பொது விசாரணையை நடத்தவில்லை. போரைக் கண்டிக்கும் எந்தத் தீர்மானமும் வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்படவில்லை. எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை.
ட்ரம்ப் ஒரு குற்றவாளி மற்றும் மனரீதியாக தகுதியற்றவர் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், ஜனநாயகக் கட்சியினர் அவரை பதவி நீக்கம் செய்வதை திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர். மார்ச் 26 அன்று, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியின் காகஸ் தலைவர் பீட் அகுய்லர் பஞ்ச்போல் நியூஸிடம் கூறுகையில்: “உண்மையில் எந்த ஜனநாயகக் கட்சியினரும் இது [பதவி நீக்கம்] பற்றிப் பேசவில்லை. இது எங்கள் விவாதங்களில் எழுப்பப்படும் ஒரு விஷயமே அல்ல” என்றார். பிரதிநிதி சூசி லீ, “நாங்கள் கவனம் செலுத்த இதைவிட பெரிய முன்னுரிமைகள் உள்ளன,” என்று கூறினார்.
பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் மேக்சின் வாட்டர்ஸ் மார்ச் 4 அன்று கூறுகையில், “பிரதிநிதிகள் சபையை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்து நாங்கள் பரிசீலிப்போம் என்று நினைக்கிறேன்,” என்றார்.
ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதை நடைமுறையில் நிராகரித்தது மட்டுமல்லாமல், அவருக்குத் துணையாகவும் இருந்து வருகின்றனர். ட்ரம்பின் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கும் 839 பில்லியன் டாலர் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு அவர்கள் வாக்களித்தனர். ஈரான் அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்றுவிட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறியதை பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் எதிரொலித்தார். அத்துடன், ஞாயிற்றுக்கிழமை பொக்ஸ் நியூஸில் ட்ரம்ப் ஒப்புக்கொண்டது போல, அமெரிக்க அரசாங்கத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை அவர் ஆதரித்தார். “நாங்கள் போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கிகளை அனுப்பினோம், நிறைய அனுப்பினோம்,” என்று ட்ரம்ப் கூறினார்.
ஜனநாயகக் கட்சியினரின் இத்தகைய அணுகுமுறை இரண்டு காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது: (1) ட்ரம்புடன் அவர்களுக்கு என்னதான் தந்திரோபாய ரீதியான வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்கள் வோல் ஸ்ட்ரீட் மற்றும் சி.ஐ.ஏ-வின் கட்சியாக இருந்து வருவதுடன், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் மூலோபாய இலக்கை ஆதரித்து வருகின்றனர், மற்றும் (2) அடிமட்டத்திலிருந்து பெருகி வரும் மக்கள் எதிர்ப்பைக் கண்டு அவர்கள் பீதியடைந்துள்ளனர்.
ஒரு உண்மையான மக்கள் அணிதிரட்டலானது போருடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அது செல்வப் பகிர்வு, நிதிய தன்னலக்குழுவின் அதிகாரம் மற்றும் இரு கட்சிகளும் எதைப் பாதுகாக்க இருக்கின்றனவோ அந்த ஒட்டுமொத்த சமூக ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கும். அதனால்தான், ட்ரம்பிற்கு எதிரான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களின் போது, ஈரானுக்கு எதிரான போரே மையப் பிரச்சினையாக இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சியினரும் அவர்களது அரசியல் கூட்டாளிகளும் திட்டமிட்டே அதன் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டினர்.
அமெரிக்க அரசியலின் உச்சத்திற்கு ட்ரம்ப் உயர்ந்திருப்பது, ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் வரலாற்று ரீதியான திவால்நிலையின் பிரதிபலிப்பைக் காட்டுகிறது. ஏப்ரல் 2 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் எழுதியது போல், ட்ரம்ப் என்பவர் அதிகாரத்திற்கு வந்துள்ள ஒரு குற்றவியல் பாதாளக் உலகத்தின் உருவகம் ஆவார். அவரது மொழி, “குற்றச்செயல்களுக்குப் பழகிப்போனதும், அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டிய கட்டாயத்தை இனி உணராததுமான ஒரு சமூக அடுக்கின் உள்ளார்ந்த தன்மையை” வெளிப்படுத்துகிறது.
இந்த தன்னலக்குழு, தனது செல்வத்தை உற்பத்தி உழைப்பின் மூலம் குவிக்கவில்லை. மாறாக மோசடி, ஊக வணிகம் மற்றும் திருட்டு ஆகியவற்றின் மூலமே குவித்துள்ளது. இதன் சமூக முகத்தோற்றம் எப்ஸ்டீன் ஊழல் மூலம் மிகத்தெளிவாக வெளிப்பட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செயல்பாடுகளில் உயர்மட்ட நிதித்துறை, அரசு அதிகாரம் மற்றும் பாலியல் மிரட்டல் ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பதை இது - ஒரு பகுதியாகவேனும் - அம்பலப்படுத்தியது. எப்ஸ்டீனைச் சூழ்ந்திருந்த அதே சலுகைகள், ஊழல் மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்குகளே இந்த அரசியல் அமைப்பு முறையைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்த அமைப்பு முறையில் குற்றத்தன்மை என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது ஒரு ஆட்சி முறையாகவே மாறிவிட்டது.
ட்ரம்ப் திடீரென எங்கிருந்தோ வந்துவிடவில்லை. அவர் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் கொள்கையை எவ்வித மறைப்பும் இன்றி அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். அவரது இனப்படுகொலை அச்சுறுத்தல்கள், பல தசாப்தங்களாகத் தொடரும் அமெரிக்க ஏகாதிபத்தியக் குற்றச்செயல்களின் தீவிரத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன: புனையப்பட்ட காரணங்களைக் கூறி புஷ் ஈராக் மீது நடத்திய படையெடுப்பு; ஜனநாயக அல்லது சட்டக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒபாமா நடத்திய உலகளாவிய ட்ரோன் படுகொலைத் திட்டம்; காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பைடென் ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கியது என அனைத்தும் இதன் தொடர்ச்சியே.
இதே ஆளும் வர்க்கம் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு முழுமையான போரை நடத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஈஸ்டர் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், போரை நடத்துவதற்குப் பணம் தேவைப்படுவதால் அரசாங்கத்தால் குழந்தை பராமரிப்பு, மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறினார். கோடிக்கணக்கான மக்கள் நம்பியிருக்கும் இந்த முக்கியமான சமூக நலத் திட்டங்களை அவர் “சிறு மோசடிகள்” என்று அழைத்தார், மேலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒரே ஒரு வேலைதான் உள்ளது, அது “இராணுவப் பாதுகாப்பு” என்றும் கூறினார். அவரது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் பென்டகனுக்கு 1.5 டிரில்லியன் டாலர்கள் தொகையைக் கோருகிறது —இது 44 சதவீத அதிகரிப்பாகும்— இதற்கான நிதி உள்நாட்டுச் செலவினங்களைக் வெட்டிக் குறைப்பதன் மூலம் ஈடுகட்டப்படும்.
மீண்டும் சொல்கிறோம், கீழிருந்து எழும் ஒரு மக்கள் இயக்கம் இந்த விரிவான பிரச்சினைகளை உடனடியாக முன்னெடுக்கும் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் எந்தவொரு மக்கள் அணிதிரட்டலையும் எதிர்க்கின்றனர். ஈரானின் பொதுமக்கள் உள்கட்டமைப்பை அழிக்கப்போவதாக ட்ரம்ப் விடுத்த ஆபாச வார்த்தைகள் கலந்த அச்சுறுத்தல்கள் அவரது தனிப்பட்ட ஒழுக்கக்கேட்டைத் தாண்டி பலவற்றை வெளிப்படுத்துகின்றன. அவை ஜனநாயக நிறுவனங்களின் வீழ்ச்சியையே காட்டுகின்றன. அவரைத் தீவிரமாக எதிர்ப்பதற்கு தற்போதுள்ள அரசியல் நிறுவனங்களுக்குள் எந்த வழிமுறையும் இல்லை. மேலும், இந்த ஆட்சியானது தனது நடவடிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளையும் ஏற்காது என்று அறிவித்துள்ளது.
எதிர்ப்புப் போராட்டத்தை ஜனநாயகக் கட்சியிடம் ஒப்படைக்க முடியாது. அது ஒரு வர்க்க இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்களும் இளைஞர்களும் போருக்கு எதிராகவும், சமூக நலத் திட்டங்களின் அழிப்பிற்கு எதிராகவும், மற்றும் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகவும் - பணியிடங்களிலும், தொழில்துறைகளிலும் மற்றும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் - சுயாதீனமாக ஒன்றிணையும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
