முன்னோக்கு

ஈரானுக்கு எதிரான பாரிய போர்க்குற்றத்தை நிகழ்த்த செவ்வாய்க்கிழமை இரவு வரை ட்ரம்ப் காலக்கெடு விதிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் ஜேம்ஸ் பிராடி பத்திரிகையாளர் சந்திப்பு அறையில் செய்தியாளர்களுடன் பேசுகிறார், திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2026, வாஷிங்டன். [AP Photo/Mark Schiefelbein]

அமெரிக்கா ஒரு ஒழுக்கநெறி மற்றும் அரசியல் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. திங்கள்கிழமை அன்று டொனால்ட் ட்ரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலிருந்து பெறப்படும் தவிர்க்க முடியாத முடிவு இதுவே.

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் பயன்படுத்தப்பட்ட மொழி அதையே பறைசாற்றுகிறது. அடுத்தடுத்து பல கொலைவெறி அறிக்கைகளுக்கு மத்தியில், ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு உடனடியாக சரணடையாவிட்டால், ஈரானை வரைபடத்திலிருந்து அழித்துவிடுவோம் என்று ட்ரம்ப் அறிவித்தார். “ஒரே இரவில் முழு நாட்டையும் அழித்துவிட முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம்” என்று அவர் கர்ஜித்தார்.

உலகளாவியளவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் முன்னிலையில், கடந்த ஞாயிறு காலை சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகளுடன் தான் வெளிப்படுத்திய அந்த வெறித்தனத்தை ட்ரம்ப் நேரலையில் காட்சிப்படுத்தினார். “எமது இராணுவத்தின் வலிமையால் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. அதன்படி ஈரானில் உள்ள ஒவ்வொரு பாலமும் நாளை இரவு 12:00 மணிக்குள் தகர்த்தெறியப்படும், ஈரானின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்து, எரிந்து, வெடித்து, இனி ஒருபோதும் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகும். நான் சொல்வது என்னவென்றால், 12:00 மணிக்குள் முழுமையான அழிவு. நாங்கள் விரும்பினால், இது வெறும் நான்கு மணி நேரத்திற்குள்ளேயே நடத்தி முடிப்போம்” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், “அவர்கள் மீண்டும் கட்டியெழுப்ப நூறு ஆண்டுகள் ஆகும். இப்போதே நாம் வெளியேறினால் கூட, அவர்கள் தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும், மேலும் அது முன்பிருந்ததைப் போல ஒருபோதும் சிறப்பாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அமெரிக்க அரசாங்கத்தை ஹிட்லரின் காலத்திற்கு இணையான ஒரு குற்றத்தில் ஈடுபடுத்துகிறது. நாஜிக்களின் தலைவர்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் எதைப் பற்றி விவாதித்தார்களோ, அதை இவர் பகிரங்கமாகச் சொல்கிறார். இது, 21-ஆம் நூற்றாண்டில் உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சி மற்றும் சீரழிவின் அளவுகோலாகும்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு, அமெரிக்க இராணுவத்தின் ஆற்றல் மற்றும் “ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்பின் துணிச்சலான தலைமை மற்றும் இரும்பு போன்ற உறுதி” ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு மணிநேர இடைவிடாத புகழுரையுடன் தொடங்கியது. யுத்த அமைச்சர் பீட் ஹெக்செத், தற்போதைய அமெரிக்க அமைச்சரவை அதிகாரிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள அந்த முகஸ்துதியான மொழியில் இதனை அறிவித்தார்.

அதன்பிறகு ட்ரம்ப் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஆனால் அதற்கு முன்னதாக, ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை முதலில் வெளியிட்ட செய்தியாளரைச் சிறையிலடைக்கப் போவதாக அவர் அச்சுறுத்தினார். இந்தப் அறிக்கை பென்டகனிலிருந்து கசிந்த தகவலின் அடிப்படையில் அமைந்தது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், இந்தத் தகவலைக் கசியவிட்ட நபரைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். “இதை வெளியிட்ட ஊடக நிறுவனத்திற்கு நாங்கள் சென்று, தேசிய பாதுகாப்பு கருதி அந்தத் தகவலைக் கொடுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள் என்று சொல்லப் போகிறோம்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் பெரும்பாலும் வலதுசாரி வலையொலியாளர்கள் (podcasters) மற்றும் பிற முகஸ்துதி செய்பவர்களே நிறைந்திருந்தனர். அவர்கள் தங்கள் “கேள்விகளை” கேட்பதற்கு முன்னதாக ட்ரம்பிற்கு மிகைப்படுத்தப்பட்ட நன்றிகளைத் தெரிவித்தனர். இருந்தபோதிலும், ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் கண்டனங்களும் அங்கு தொடர்ந்தன.

“வெற்றி பெற்றவனுக்கே கொள்ளைப் பொருட்கள் சொந்தம்” என்ற —காட்டுமிராண்டிகளின் காலத்திற்குச் செல்லும் — கொள்கையைத் தான் மீண்டும் உயிர்ப்பிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பிறகு, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கி கப்பல்களிடம் அமெரிக்கா சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அது தனது விருப்பமாக இருந்தால், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி காலக்கெடுவிற்குள் ஈரான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் பதிலளித்தார்: “எனக்கு ஏற்புடைய ஒரு ஒப்பந்தத்தை நாம் எட்ட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எண்ணெய் மற்றும் பிற அனைத்தின் தடையற்ற போக்குவரத்தை நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலளித்தார்.

“மற்றொரு செய்தியாளர் கேட்டார், “இந்த மோதலில் நீங்கள் ‘இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும்’ என்று கூறினீர்கள். அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடவுள் ஆதரிக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்கப்பட்டபோது, அதற்கு ட்ரம்ப், “ஏனென்றால் கடவுள் நல்லவர், மக்கள் பராமரிக்கப்படுவதை கடவுள் பார்க்க விரும்புகிறார்” என்று பதிலளித்தார்.

ஹெக்செத் மற்றும் பிறரது உரைகள் முழுவதிலும் பாசிசக் கிறித்தவ அடிப்படைவாதத்தின் ஒரு சாயல் பரவியிருந்தது. செய்தியாளர் சந்திப்பில் தனது சொந்த உரையின் போது, F-15 போர் விமானத்தின் இரண்டாவது விமானி மீட்கப்பட்டதை ஒரு கிறித்தவ உவமைக் கதையாக ஹெக்செத் முன்வைத்தார்:

ஒரு வெள்ளிக்கிழமை அன்று சுட்டுவீழ்த்தப்பட்டார்: அன்று புனித வெள்ளி. ஒரு குகையில், ஒரு இடுக்கில், சனிக்கிழமை முழுவதும் அவர் மறைந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று மீட்கப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு அன்று சூரியன் உதயமாகும் வேளையில் ஈரானிலிருந்து அவர் வெளியே அழைத்து வரப்பட்டார். ஒரு விமானி மறுபிறவி எடுத்தார். அனைவரும் வீடு திரும்பிவிட்டனர், அனைவரும் கணக்கில் கொள்ளப்பட்டனர், தேசமே கொண்டாடுகிறது. கடவுள் நல்லவர்.

பென்டகன் தலைவர் தொடர்ந்து கூறுகையில், “ஜனாதிபதியின் உத்தரவின்படி, இந்தச் செயல்பாட்டின் முதல் நாளிலிருந்து இன்றுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்று நடத்தப்படும். நாளை, இன்றைய விட அதிகமாக இருக்கும். அதன் பிறகு ஈரானுக்கு ஒரு தெரிவு உள்ளது. அதை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் இந்த ஜனாதிபதி விளையாடுபவர் அல்ல. நீங்கள் சுலைமானி, மதுரோ அல்லது கொமேனியிடம் இதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்,” என்று ட்ரம்பின் உத்தரவின்படி கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்ட தலைவர்களைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.

ஒரு சில கூர்மையான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ட்ரம்ப் கோபத்தில் திக்கித் திணறினார். “விமர்சகர்களுக்கு உங்கள் பதில் என்ன?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை,” என்று அவர் கூறினார். “மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களைத் தகர்ப்பதாக நீங்கள் விடுக்கும் அச்சுறுத்தல் போர்க்குற்றங்களுக்குச் சமமானது என்று நீங்கள் கவலைப்படவில்லையா?” என்று கேட்டதற்கு, ட்ரம்ப், “இல்லை, சிறிதும் இல்லை,” என்று பதிலளித்தார்.

சட்டத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறிச் செயல்படும் ஒரு ஆட்சியை ட்ரம்ப் தலைமை தாங்கி நடத்துகிறார் — அதாவது, இது அதிகாரத்தில் இருக்கும் ஒரு குற்றவியல் பாதாள உலகமாகும். இந்தப் போர் தீவிரமடைவதன் தர்க்கம் தவிர்க்க முடியாதது: தீவிரப்படுத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள், தரைப்படைகளுடன் ஈரானுக்குள் ஊடுருவி படையெடுத்தல், முக்கிய நகரங்களை ஆக்கிரமித்தல் அல்லது அழித்தல், மற்றும் அமெரிக்க உயிரிழப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில், அணு ஆயுதங்களை நாடுதல் என “நரகத்தை” நோக்கித்தான் ஈரானிய மக்களை ட்ரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

மிகப்பெரிய அளவிலான இந்தக் குற்றத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் மட்டுமல்ல, முழு ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் அமைப்பும் ஈடுபட்டுள்ளது. 9.3 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் சமூக உள்கட்டமைப்பை அழித்து, அதை “கற்காலத்திற்குத் தள்ளப்” போவதாக டரம்ப் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது. ஆனால், இதற்கு பூமியில் உள்ள பிற முக்கிய நாடுகளிடமிருந்தோ அல்லது அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்திற்குள்ளிருந்தோ எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் இதற்கு இல்லை.

அமெரிக்காவில் பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் அரசியல் அமைப்பு முறையால், இந்த ஆக்கிரமிப்பு மற்றும் பெரும் உயிரிழப்புக் கொள்கைக்கு எந்தவொரு தடையையும் விதிக்க முடியவில்லை. போர் தொடங்கி முதல் ஒரு மாதம் பெரும்பாலும் மவுனமாக இருந்த ஜனநாயகக் கட்சி, இப்போது ட்ரம்ப் போர்க்குற்றங்களைச் செய்யும் ஒரு பைத்தியக்காரர் என்று அறிவிக்கிறது. பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ் அவரை “அருவருப்பானவர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்” என்று அழைத்தார். செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர், ட்ரம்பை “மனநிலை தவறிய பைத்தியக்காரர்” என்று குறிப்பிட்டதோடு, மேலும் “அவர் சாத்தியமான போர்க்குற்றங்களை செய்யப்போவதாக மிரட்டி வருகிறார் மற்றும் கூட்டாளிகளை அந்நியப்படுத்துகிறார்” என்று கூறினார்.

ஆனால், இந்த குற்றவியல் போரை நிறுத்துவதற்கு எந்த ஒரு ஜனநாயகக் கட்சியினரும் எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியின் சிறிய பெரும்பான்மையை மாற்ற முடியாத ஒன்றாக அவர்கள் கருதுகின்றனர். ஒருவேளை நிலைமைகள் தலைகீழாக இருந்தால், ஒரு குடியரசுக் கட்சி சிறுபான்மையினர் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியை எளிதில் தடுத்து நிறுத்திவிடுவார்கள். மாறாக, செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், “காங்கிரஸ் இப்போதே செயல்பட வேண்டும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்,” என்று இயலாமையுடன் மன்றாடுகிறார்.

ட்ரம்ப் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ள அவரது கூட்டாளிகள் ஏதேனும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்று ஒரு ஜனநாயகக் கட்சியினர் கூட பரிந்துரைக்கவில்லை.

கடந்த இலையுதிர்காலத்தில், ஒரு சில ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், அமெரிக்க இராணுவத்தினர்களுக்கு ஒரு வீடியோ வேண்டுகோள் விடுத்தனர். அதில் சட்டவிரோதமான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டிய பொறுப்பை அவர்களுக்கு அறிவுறுத்தினர். ஆனால், இப்போது வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனிலிருந்து சட்டவிரோத உத்தரவுகள் மழையாகப் பொழிந்து கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் மவுனமாகிவிட்டனர். போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது எதிர்கால ஜனநாயகக் கட்சி நிர்வாகம் வழக்குத் தொடரும் என்று அவர்கள் இராணுவத் தளபதிகளிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்த எதிர்கால நிர்வாகம் தனது சொந்த ஏகாதிபத்தியத் திட்டங்களில் ஈடுபடும், அதற்குத் தற்காப்புப் படைகளின் முழுமையான சேவை தேவைப்படும்.

ஒருவேளை ட்ரம்ப் தனது அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தினால், இன்றைய நாள் — ஏப்ரல் 7, 2026 — ஒரு அவமானகரமான நாளாக வரலாற்றில் நிலைத்திருக்கும். நவீன யுகத்தின் மாபெரும் குற்றங்களில் ஒன்றாக இது நினைவு கூரப்படும். இந்தப் போரில் அடுத்து என்ன நடந்தாலும், ஒரு எல்லை மீறப்பட்டுவிட்டது. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்ற வேஷத்தை இந்தப் போர் என்றென்றைக்குமாகத் தகர்த்தெறிந்துவிட்டது. இது ட்ரம்பின் நிர்வாகத்தை ஒரு சட்டவிரோத ஆட்சி என்று முத்திரை குத்துகிறது. இது, எந்தவொரு வரலாற்று நியாயத்தையும் கடந்துவிட்ட ஒரு ஆளும் வர்க்கமாகிய தன்னலக்குழுவின் ஆட்சியைக் கண்டிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு சமூகப் புரட்சிக்கான காலத்தைத் திறந்துவிட வேண்டும்.

Loading