மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மத்திய கிழக்கு முழுவதும் தொடரும் குண்டுவீச்சுகள் மற்றும் அமெரிக்காவிற்குள் தீவிரமடைந்து வரும் உள்நாட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ட்ரம்ப் அறிவித்த ஈரானுடனான இரண்டு வார “போர்நிறுத்தம்” ஒரே நாளில் சிதையத் தொடங்கியுள்ளது. தனது இலக்குகளை அடையாத ஒரு போருக்குப் பிறகு, அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆளும் வர்க்கம் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
இந்த ஒட்டுமொத்தச் சூழலும், ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போருக்கு ஏதோ ஒரு வகையான அமைதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகளில் தொழிலாளர்கள் நம்பியிருக்கக் கூடாது என்பதையும், மாறாக ஒரு சுயாதீனமான பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க வேண்டிய அவசரத் தேவையையும் எழுப்புகிறது.
இந்த போர்நிறுத்தத்தில் அடிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள் முற்றிலும் தெளிவற்றதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன. இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, புதன்கிழமை அன்று லெபனான் மீது இஸ்ரேல் பாரிய குண்டுவீச்சுக்களை மேற்கொண்டது. 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களிலேயே இதுதான் மிகவும் கொடிய ஒற்றை நாள் தாக்குதலாகும். இதில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 குழந்தைகள் உட்பட 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய பெய்ரூட் மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்கள், குடியிருப்புத் தெருக்கள் மற்றும் நெரிசலான வணிகப் பகுதிகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை இந்த ஒப்பந்தத்திற்கு தரகராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் முதலில் அறிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை மாலை அவர் வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவும் ஈரானும் “தங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என்று அறிவித்தார்.
புதன்கிழமை அன்று, ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்கா தனது இஸ்ரேலிய நட்பு நாட்டின் மூலம் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் மூலம் போர்நிறுத்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டினார். “இத்தகைய சூழ்நிலையில், இருதரப்பு போர்நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை என்பது நியாயமற்றது” என்று அவர் எழுதினார். லெபனான் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரவில்லை என்று இஸ்ரேல் உறுதிபடக் கூறுகிறது. இந்தக் கூற்றை ட்ரம்பும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட்டும் புதன்கிழமை அன்று ஆதரித்தனர், ட்ரம்ப் இதனை ஒரு “தனிப்பட்ட மோதல்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பதற்காகவே லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதன்கிழமை அன்று “போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலுக்குத் தாமதமாகத் தெரிவிக்கப்பட்டது, அது மகிழ்ச்சியடையவில்லை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் இஸ்ரேல் “ஈரான் பேச்சுவார்த்தைகளில் உத்தியோகபூர்வமாக ஒரு பகுதியாக இருக்கவில்லை” என்று குறிப்பிட்டது.
இருப்பினும், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருக்கும் குறிப்பிடத்தக்க பிரிவுகளின் ஆதரவு இன்றி இஸ்ரேல் இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்திருக்க முடியாது.
அமெரிக்காவிற்குள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு அரசியல் ஸ்தாபனங்களின் விமர்சனங்களும், ட்ரம்பின் போர்நிறுத்த அறிவிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு என்றும், ஈரானியர்களுக்கு அளிக்கப்பட்ட ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சலுகை என்றும் கண்டனம் தெரிவிப்பதையே மையமாகக் கொண்டுள்ளன.
நியூ யோர்க் டைம்ஸின் மூத்த தேசிய பாதுகாப்பு நிருபர் டேவிட் சேங்கர் புதன்கிழமை அன்று எழுதுகையில், இந்தப் போர்நிறுத்தம் “போருக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகாணவில்லை” என்று குறிப்பிட்டார். புதிய அமெரிக்கப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் போன்டைனை மேற்கோள் காட்டிய டேவிட் சேங்கர் “ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது”, மேலும் “ஈரான் ஒரு முக்கிய எரிசக்தி சோதனைச் சாவடியை காலவரையன்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சூழ்நிலையை அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக்கொள்ளும் என்பதை நம்புவது கடினம். இது போருக்கு முன்னிருந்த நிலையை விட மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்” என்று எழுதினார்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழின் ஆசிரியர் குழு புதன்கிழமை அன்று “ட்ரம்ப் ஈரானில் முன்கூட்டியே வெற்றியை அறிவிக்கிறார்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “ஈரானிய ஆட்சி இன்னும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது, இன்னும் வேலை முழுமையாக முடிவடையவில்லை” என்று வாதிட்டது. ட்ரம்பின் “போர் குறித்த முரணான சொல்லாடல்களை” விமர்சித்த அந்த நாளிதழ், இறுதியாக இவ்வாறு குறிப்பிட்டது: “திரு. ட்ரம்பிற்கு அடுத்த சோதனை என்னவென்றால், அவர் தனது இரண்டு வார போர்நிறுத்த காலக்கெடுவை தீவிரமாக எடுத்துக்கொள்கிறாரா என்பதுதான். அவர் அவ்வாறு இருந்து, ஈரான் தனது வழக்கமான விளையாட்டுகளை விளையாடினால், அவர் உண்மையில் அந்த ‘வேலையை முடித்தே’ ஆக வேண்டும்.”
வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் மேக்ஸ் பூட் புதன்கிழமை எழுதுகையில், “குறைந்தபட்சம் இப்போதைக்காவது, ஹார்முஸ் நீரிணை வழியாக கடந்து செல்லும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் திறனை ஈரான் தக்க வைத்துள்ளது. இந்தப் போர் தொடங்கியபோது அது அவ்வாறு செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் “மூன்றாம் உலகப் போர்” குறித்து எச்சரித்து, ட்ரம்பை “போர்க்குற்றவாளி” என்று குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சியினர் —அவரது உத்தரவுகளை நிறைவேற்றும் படையினர்கள் போர்ச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தவர்கள்— இப்போது தங்களது விமர்சனத்தின் தொனியை மாற்றியுள்ளனர். அதாவது ட்ரம்ப் மிகத் தூரம் சென்றுவிட்டார் என்பதல்ல, மாறாக அவர் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்துக்களை விற்றுவிட்டார் என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை ஒரு நியூ யோர்க் ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் போல அவர் கையாளுகிறார் என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி புதன்கிழமை CNN செய்தி நிறுவனத்திடம், “ஹார்முஸ் நீரிணை இப்போது ஈரானின் நிரந்தரக் கட்டுப்பாட்டில் இருந்தால், இந்த முழு முயற்சியும் எவ்வளவு பெரிய தவறு, எவ்வளவு தவறான கணக்கீடு!” என்று தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், ஒரு “போர்நிறுத்தம்” என்பது எதையும் குறிக்கவில்லை. மத்திய கிழக்கில் ட்ரம்ப் அறிவித்த ஒவ்வொரு “போர்நிறுத்தமும்”, அதற்குப் பிந்தைய இரத்தக்களரியான இராணுவ நடவடிக்கைகளுக்கான முன்னுரையாகவே செயல்பட்டுள்ளன. ஜூன் 2025-இல், நடு இரவில் மேற்கொள்ளப்பட்ட பலமான தாக்குதல் (ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான பி-2 குண்டுவீச்சு) நடவடிக்கையைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம், அடுத்த எட்டே மாதங்களில் பிப்ரவரி 28 அன்று முழு அளவிலான போருக்கு வழிவகுத்தது.
புதன்கிழமை இரவு, ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத் தளத்தில் “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியைக் கொன்று குவிப்பதற்கும் அழிப்பதற்கும் பொருத்தமான மற்றும் அவசியமான அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், மற்றும் இராணுவத்தினர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிற அனைத்தும், எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்” என்று பதிவிட்டார். ஈரானை “முன்னெப்போதும் கண்டிராத அளவுக்குப் பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும்” தாக்குவோம் என்று மிரட்டிய ட்ரம்ப், “எமது பிரமாண்டமான இராணுவம் ஆயுதங்களை தயார் செய்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், அது தனது அடுத்த வெற்றியை எதிர்நோக்கியுள்ளது” என்றும் கூறினார்.
அமெரிக்காவின் மூலோபாய இலக்குகள் மாறவில்லை. பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரினையின் மீது நேரடி கட்டுப்பாட்டை திணிக்கவும், 1979 ஈரானியப் புரட்சியின் விளைவுகளைத் தலைகீழாக மாற்றவும் வாஷிங்டன் இந்தப் போரைத் தொடங்கியது. ஈரானுக்கு எதிரான போர் என்பது தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும் — இது மத்திய கிழக்கிலிருந்து ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல் வரை நீண்டுள்ளது — மேலும், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற முழு அனுபவமும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாபெரும் எச்சரிக்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வெறும் 24 மணி நேரத்திற்கு முன்புதான், ஈரானிய நாகரிகத்தை “ஒழித்துக்கட்டப்போவதாக” சூளுரைத்த ட்ரம்ப், 9 கோடி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டின் மீது காஸா இனப்படுகொலையின் வழிமுறைகளைக் கையாளப் போவதாக அச்சுறுத்தினார். ட்ரம்ப் தனது இனப்படுகொலை மொழியை திரும்பப் பெறப்போவது கிடையாது. மேலும் இனப்படுகொலை என்பது ஒரு அமெரிக்க ஜனாதிபதியால் போரை நடத்தும் ஒரு வழிமுறையாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஹிட்லரைப் போன்ற வார்த்தை வீச்சுக்களையும், நாகரீகத்தை அழிப்பது குறித்த அச்சுறுத்தல்களையும் பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீடுகள் “மனித உரிமைகள்” அல்லது “ஜனநாயகம்” என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன என்ற பிரச்சாரத்தின் எஞ்சியிருந்த கடைசி மிச்சங்களையும் ட்ரம்ப் தகர்த்தெறிந்துள்ளார். ஒரு குற்றவியல் தன்னலக்குழுவால் வழிநடத்தப்படுகின்ற அமெரிக்கா, ஒட்டுமொத்தச் சமூகங்களையும் தங்களுக்கு கீழ் அடிபணிய வைக்க தகர்க்கப்பட வேண்டிய ஒரு தேவையற்ற தடைகளாகவே கருதுகிறது என்பதை உலகம் இப்போது கண்டுள்ளது.
இந்தப் போரை நிறுத்துவதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தை ஒரு வர்க்க சக்தியாக சுயாதீனமாக அணிதிரட்டுவது மட்டுமே ஆகும். ஜனநாயகக் கட்சியோ அல்லது அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவினரோ ஏகாதிபத்தியப் போரை கொள்கை ரீதியாக எதிர்க்க மாட்டார்கள். ட்ரம்புடன் அவர்களுக்கு என்னதான் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் அதே மூலோபாய இலக்குகளை - அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை – பாதுகாக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பையே அச்சுறுத்தும் கீழிருந்து எழும் ஒரு இயக்கத்தின் எழுச்சியை ஒடுக்குவதே அவர்களின் பணியாக உள்ளது.
ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு — போருக்கு எதிராகவும், சமூக நலத் திட்டங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும், போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மூல காரணமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகவும் — பணியிடங்கள், தொழில்துறைகள் மற்றும் எல்லைகளைத் தாண்டி ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தை வளர்த்தெடுப்பது அவசியமாகும்.
