ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான போர்களுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பை நெதன்யாகு அரசாங்கம் கொடூரமாக ஒடுக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவிற்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய போர், காஸா மற்றும் மேற்குக் கரையில் நடந்து வரும் ஒடுக்குமுறை, மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதித்தல் ஆகியவற்றிற்கு, இஸ்ரேலில் நெதன்யாகு அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் சிறிய அளவிலான போராட்டங்களை பொலிசார் கடுமையாக ஒடுக்கி வருகின்றனர்.

போராட்டம் நடத்துவதற்கான உரிமை என்பது “முழுமையானது அல்ல” என்றும், அது “பொது அமைதிக்கான உரிமையுடன்” சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது. ஈரானிய ஏவுகணை அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இராணுவம் பொது இடங்களில் மக்கள் கூடுவதை 150 பேராகக் கட்டுப்படுத்தியதுடன், டெல் அவிவ் நகரில் போராட்டங்களை நடத்தவதற்கான அனுமதியையும் மறுத்துள்ளது.

டெல் அவிவ் நகரில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது, இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகள், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய இடங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை மக்கள் ஏந்தி நிற்கின்றனர். ஏப்ரல் 11, 2026 சனிக்கிழமை, இஸ்ரேல் [AP Photo/Maya Levin]

இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பரந்த போர்களுக்குத் தயாராகும் வகையில், வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கை மறுஒழுங்கமைத்து கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த அரசியல் மற்றும் இராணுவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, ஒரு அகண்ட இஸ்ரேல் கொள்கையை முன்னெடுப்பதற்கான உள்நாட்டுத் தேவையாக இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் உள்ளன. இப்போது இஸ்ரேலின் “முடிவில்லாப் போர்கள்” என்று அழைக்கப்படுபவை, போரை எதிர்க்கவும் போராடவும் உள்ள ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி வைக்கக் கோருகின்றன.

இருப்பினும், நாடு முழுவதும் போராட்டங்களும் பேரணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டித்தும் கடந்த வார இறுதியில் தொடர்ச்சியாக ஆறாவது வாரமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. நெதன்யாகு மீதான நீண்டகால ஊழல் விசாரணை, “பாதுகாப்பு மற்றும் அரசியல்” காரணங்களுக்காக மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதித்துறையை மாற்றி அமைப்பதற்கான அவரது பாசிச அரசாங்கத்தின் முயற்சி மற்றும் தீவிர பழமைவாத யெஷிவா மாணவர்களுக்கு இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு ஆகியவற்றிற்கு எதிராகவும் இந்த போராட்டக் குழுக்கள் களம் இறங்கியுள்ளன.

“பாதுகாப்புத் தேவைகளுக்கும் பேச்சு சுதந்திரத்திற்கும்” இடையில் சமநிலையை ஏற்படுத்தும் ஒரு கட்டமைப்பைக் கண்டறியுமாறு பொலிசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் நடந்தன. அரசாங்கத்துக்கு எதிரான பல போராட்டங்களை பொலிசார் வலுக்கட்டாயமாகக் கலைத்த பிறகு, போர்க்காலத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நடைமுறைத் தடையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி இஸ்ரேலில் உள்ள சிவில் உரிமைகளுக்கான கழகம் (ACRI) தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த நீதிமன்ற உத்தரவு வந்தது. போராட்டங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் கூடினாலும், அது போராட்டங்களைக் கலைப்பதற்கு பொலிசாருக்கு போதுமான காரணமாக அமையாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

மார்ச் 28 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவரான இதாமர் கிரீன்பெர்க் சார்பாக ACRI இந்த மனுவைத் தாக்கல் செய்தது. இந்த 20 வயது மாணவர், கட்டாய இராணுவக் ஆட்சேர்ப்புக்கு மனசாட்சியின் அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்ததற்காக 197 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது, இதுவரை விதிக்கப்பட்ட மிக நீண்ட தண்டனைகளில் ஒன்றாகும். அவர் இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஒரு போராட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் சட்டவிரோதமான முறையில் ஆடைகளைக் களைந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

டெல் அவிவ் நகரின் ஹபிமா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களை எதிர்கொண்டனர். போர் எதிர்ப்பு முழக்கங்கள் தொடங்கிய உடனேயே, பொலிசார் போராட்டக்காரர்களைத் தரையில் தள்ளி வீழ்த்தி, கிரீன்பெர்க் உட்பட பலரை கைது செய்யத் தொடங்கினர். இந்த ஆர்ப்பாட்டம் “அவசரகால விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது” என்றும், ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்க வாய்ப்புள்ளதால் “மனித உயிருக்கு ஏற்படக்கூடிய உண்மையான அச்சுறுத்தலுக்கு” பதிலளிக்கும் விதமாகவே அதிகாரிகள் செயல்பட்டனர் என்றும் பொலிசார் அறிவித்தனர். ஆனால், இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில், ஹாபிமா சதுக்கமானது, டெல் அவிவின் மிகப்பெரிய பொதுப் பாதுகாப்பு பதுங்கு குழிகளில் ஒன்றின் மேல் அமைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, டெல் அவிவ் நகரின் ஹாபிமா சதுக்கத்தில் நடைபெற்ற போர் எதிர்ப்பு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,000 முதல் 10,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட 1,000 பேர் என்ற வரம்பை விடவும் அதிகமானோர் இதில் பங்கேற்ற போதிலும், கடந்த வாரங்களைப் போல பொலிசார் இம்முறை குறுக்கிடவில்லை. இது தவிர, ஜெருசலேம், ஹைபா, பீர் ஷெபா, கஃபர் சபா, தம்ரா மற்றும் கஃபர் யாசிஃப் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள டசின் கணக்கான இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக தனது அதிகாரங்களை அதிகரிப்பதற்காக நெதன்யாகு அரசாங்கம் இரண்டு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது.

முதலாவதாக, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஸ்லோமோ கர்ஹி ஒரு தகவல் தொடர்பு மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார். இது, தற்போதுள்ள இரண்டு முகமைகளுக்குப் பதிலாக, புதிய ஒழுங்குமுறை முகமையின் மீது அரசாங்கத்திற்கு அரசியல் கட்டுப்பாட்டை வழங்கும். இந்த மசோதா, வணிகத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் அவற்றின் செய்தித் துறைகளுக்கும் இடையிலான பிரிவினையை முடிவுக்குக் கொண்டு வந்து, செய்தி ஒளிபரப்புகள் மீதான வணிக ரீதியான செல்வாக்கை விரிவுபடுத்தும். ஊடக நிறுவனங்களின் குறுக்கு-உரிமை (cross-ownership) மீதான கட்டுப்பாடுகளை நீக்கும். பல்திறன் தளங்களில் விளம்பரம் செய்வதற்கான தடையை நீக்கும்; மற்றும் தொலைக்காட்சியின் மதிப்பீடுகளை அளவிடுவதிலும் வெளியிடுவதிலும் அரசாங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரும்.

இரண்டாவதாக, அரசாங்கம் தலைமை வழக்கறிஞர் பதவியை மூன்றாகப் பிரிக்க முயல்கிறது: அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் தலைவர் மற்றும் நீதிமன்றத்தில் அரசின் பிரதிநிதி. தலைமை வழக்கறிஞர் பஹாரவ்-மியாரா அரசாங்கத்துடன் பலமுறை மோதியுள்ளார். மிகச் சமீபத்தில், பொலிஸ்துறையின் பொறுப்பிலுள்ள தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிர், அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவது உட்பட தனது அதிகாரங்களைத் தாண்டிச் செயல்படுவதாக அவர் வாதிட்டார். அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த மசோதாவின்படி, பிரதமரும், நீதி அமைச்சரும் சட்ட ஆலோசகரை பரிந்துரைப்பார்கள். அவர் அமைச்சரவையால் நியமிக்கப்படுவார். நீதி அமைச்சர், அரசியலமைப்பு குழுவின் ஒப்புதலுடன் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரிவின் தலைவரை நியமிப்பார். மேலும் நீதிமன்றத்தில் அரசின் பிரதிநிதியையும் அவரே நியமிப்பார். மிக முக்கியமாக, தலைமை வழக்கறிஞரின் கருத்துக்கள் இனி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. மேலும், நீதிமன்றத்தில் அரசின் பிரதிநிதி அரசாங்கத்துடன் உடன்படவில்லை என்றால், தனக்காக வாதிட மற்றொரு வழக்கறிஞரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தையும் இந்த மசோதா அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரினால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ள சூழலில், ஊடகங்கள் மற்றும் நீதித்துறையின் மீதான கட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

40 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் போது, ஈரான் இஸ்ரேல் மீது சுமார் 1,000 ஏவுகணைகளை வீசியது. இதனால் நூற்றுக்கணக்கான இடங்களில் சேதம் ஏற்பட்டது. இதில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்த 16 ஏவுகணைகளால் 14 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பொதுமக்களுக்கான குண்டுவீச்சிலிருந்து பாதுகாக்கும் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தினால், மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லெபனானில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகளால் மேலும் இருவர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் லெபனான் எல்லைக்கு அருகில் இஸ்ரேலிய இராணுவத்தின் குறிதவறிய தாக்குதலால் ஒரு இஸ்ரேலிய குடிமகன் கொல்லப்பட்டார். மார்ச் 2 அன்று, லெபனானில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் தொடங்கியதில் இருந்து லெபனானில் குறைந்தது 2,055 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 6,588 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), பாதுகாப்பு அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கான பாதுகாப்பு மற்றும் இராணுவச் செலவுகள் 7 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளன. அதே நேரத்தில், ஏவுகணைகளால் ஏற்பட்ட நேரடி சேதங்கள், வணிகங்களுக்கான பொருளாதார உற்பத்தி இழப்பு மற்றும் ஊழியர்களுக்கான ஊதியமில்லா விடுமுறை ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டங்கள் இதுவரை சுமார் 4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் கிடைத்த தகவலின்படி, போர் காரணமாக ஏற்பட்ட சொத்து சேதங்களுக்காக இஸ்ரேலின் வரி ஆணையத்திற்கு சுமார் 23,000 கோரிக்கைகள் வந்துள்ளன.

மருத்துவமனை செயல்பாடுகள், அவசரகால உதவிகள் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் செலவுகள் உட்பட சிவிலியன் சார்ந்த செலவுகளுக்காக மேலும் 1 பில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன. இதன் மூலம் மொத்தச் செலவு 11 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகிறது. இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றின் மீதான முழுமையான தாக்கம் எதிர்காலத்தில் தான் தெளிவாகத் தெரியும் என்று நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.

அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் போருக்காக ஒதுக்கப்பட்ட தொகை —அதாவது 2.3 பில்லியன் டாலர்கள் கையிருப்பு நிதி உட்பட மொத்தம் 13 பில்லியன் டாலர்கள்— ஏற்கனவே செலவாகிவிட்டது. இதில் போர்க்கால பாதுகாப்புச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் டாலர்கள் கையிருப்பு நிதியும், சேதமடைந்த உள்கட்டமைப்புகள் மற்றும் கட்டிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற சிவிலியன் சார்ந்த செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 2 பில்லியன் டாலர்கள் நிதியும் அடங்கும். மேலும், இந்தப் போர் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் முடிவுக்கு வரும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டன. இருப்பினும், ஈரான் போர் நடவடிக்கைக்கே மட்டும் 13 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர, லெபனானில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை அமைச்சகம் கோருகிறது. ஒட்டுமொத்தமாக கூடுதலாக 9 பில்லியன் டார்கள் நிதி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எதிலுமே இஸ்ரேலியப் பொருளாதாரத்தின் பகுதிநேர முடக்கத்தினால் ஏற்படும் செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உள்ளிட்ட பொதுச் சேவைகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாலும், நூறாயிரக்கணக்கான துணை இராணுவப் படையினர் நீண்ட காலத்திற்கு IDF ன் இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாலும், பல பத்து பில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. தற்போது ஒருபுறம் போர்நிறுத்தம் என்று சொல்லப்பட்டாலும், ஈரான், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆகியோருக்கு எதிராகவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான விரிவான இராணுவ நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில், இஸ்ரேல் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, போர்நிறுத்தம் நீடித்தால் கூட, 2026-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 1.4 சதவீதம் குறையும். வளர்ச்சி முன்னறிவிப்பு 5.2 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாகக் குறையும் என்பதால், அசல் திட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 10-12 பில்லியன் டாலர் GDP இழப்பு ஏற்படும். இந்த ஆண்டு அல்லது 2027-ல் மேற்கொண்டு பெரிய போர்கள் இருக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், மீண்டும் ஒரு போர் வெடித்தால் அதைச் சமாளிக்க பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும், லெபனானில் ஒரு “பரந்த பாதுகாப்பு மண்டலத்தை” —ஒரு ஆக்கிரமிப்புப் படையை— உருவாக்குவதற்கான இஸ்ரேலிய இராணுவத்தின் திட்டத்தையும் இது கணக்கில் கொள்ளவில்லை. இதற்கு முதலில் திட்டமிட்டதை விட பெரிய அளவிலான ரிசர்வ் படைகள் தேவைப்படும். இது, இஸ்ரேலின் வடக்குப் பகுதி நகரங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தடுப்பதுடன், கல்வி முறை, வணிகம் மற்றும் சுற்றுலாத் துறையையும் பாதிக்கும்.

கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அரசின் வரவுசெலவுத் திட்டமானது, சுகாதாரம், கல்வி, சமூக நலன்கள் மற்றும் போக்குவரத்துச் சேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, பாதுகாப்புத் துறைக்கும், ஆளும் கூட்டணியின் ஆதரவுத் தளங்களாக இருக்கும் குடியேறிகள் மற்றும் தீவிர பழமைவாத பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மதிப்புக்கூட்டு வரி மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் 8,80,000 குழந்தைகள் (28 சதவீதம்) உட்பட, 20 இலட்சம் மக்கள் (மக்கள் தொகையில் 21 சதவீதம்) இஸ்ரேலில் ஏற்கனவே வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். இது இஸ்ரேலை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) நாடுகளிலேயே இரண்டாவது மிக உயர்ந்த வறுமை விகிதத்தைக் கொண்ட நாடாக மாற்றியுள்ளது.

Loading