மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் எப்போதும் மோசமடைந்து வரும் விளைவுகளால் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் — பெட்ரோல் மற்றும் எரிவாயு விலைகளில் முடக்கும் அளவிலான உயர்வுகள், உணவு விலையேற்றங்கள் மற்றும் ஏழ்மையான நாடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் — பெருநிறுவனங்களும் வங்கிகளும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் கணக்கில் அதிகரித்த இலாபங்களை அள்ளிக் குவிக்கின்றன.
எதிர்பார்ப்பது போலவே, இந்த இலாப வேட்டையில் பலன் பெறுவதில் எண்ணெய் நிறுவனங்களே முதலிடத்தில் உள்ளன. ஆனால், இந்த அதிகரித்த பணப்புழக்கம் எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது.
கார்டியன் (Guardian) செய்தித்தாள் நடத்திய விசாரணையின்படி —அதன் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன— ஒரு பேரல் எண்ணெய் சுமார் 100 டாலர் விலையில் இருப்பதால், சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 234 பில்லியன் டாலர் இலாபத்தை ஈட்டவுள்ளன. இது ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 30 மில்லியன் டாலர் கூடுதல் நிதி வரவாக இருக்கும்..
மிகப்பெரிய வெற்றியாளராக சவுதி அரேபியாவின் அராம்கோ (Aramco) உள்ளது, இது 25.5 பில்லியன் டாலர் போர் இலாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ரஷ்ய பெட்ரோலிய ஜாம்பவான்கள் கூடுதலாக 23.9 பில்லியன் டாலர்களை ஈட்ட உள்ளனர்.
அமெரிக்க நிறுவனமான எக்ஸான்மொபில் (ExxonMobil) கூடுதலாக 11 பில்லியன் டாலர்களைப் பெறும். ஷெல் (Shell) நிறுவனத்தின் வருவாய் 6.8 பில்லியன் டாலர் உயரும், மேலும் செவ்ரான் (Chevron) கூடுதலாக 9.2 பில்லியன் டாலர்களை ஈட்ட வாய்ப்புள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணக்கீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 1.3 டிரில்லியன் டாலராக இருந்த வெளிப்படையான மானியங்களைப் பெறுகின்ற அதேவேளையில், எண்ணெய் துறை ஒவ்வொரு ஆண்டும் ஈட்டும் 1 டிரில்லியன் டாலர் இலாபத்திற்கும் மேலதிகமாகவே இந்த கூடுதல் இலாபங்கள் உள்ளன.
பங்கு விலைகளின் உயர்விலிருந்து மற்ற நன்மைகளும் கிடைக்கின்றன. எக்ஸான்மொபில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 118 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஷெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 34 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
எண்ணெய் உற்பத்தியாளர்களைத் தவிர, எண்ணெய், உணவு, உலோகங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களில் வர்த்தகம் செய்யும் வர்த்தக நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளில் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றன, அவை ஏற்கனவே இதில் ஆதாயம் அடைகின்றன. சுவிஸ் பொருட்கள் வர்த்தக நிறுவனமான குன்வோர் (Gunvor), கடந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் ஈட்டிய 1.6 பில்லியன் டாலர் இலாபத்தை, இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே ஈட்டியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இதர நிறுவனங்களும் இதேபோன்ற இலாப ஏற்றத்தைப் பெறும்.
அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் ஆதாயம் அடைந்து வருவதில் ஆச்சரியமில்லை. ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலின் முதல் நாளிலேயே, முக்கிய நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பில் 30 பில்லியன் டாலர் வரை உயர்வு பதிவாகியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழின் சமீபத்திய கட்டுரையின்படி, அமெரிக்கப் பொருளாதாரத்தில் பெருநிறுவன இலாபங்கள் “முன்னெப்போதும் இல்லாத அளவை (சாதனைப் பங்கை) எட்டியுள்ளன”. இத்தகைய சூழலில், இந்த இலாப வேட்டையும் விலைச் சுரண்டலும் அமெரிக்கப் பொருளாதாரம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் இந்த நிலையை இந்த நிலையை இப்படியே நீடிக்கச் செய்யவே விரும்புகின்றன.
போர் போன்ற “வெளிப்புற அதிர்ச்சிகளால்” ஏற்படும் பணவீக்கத்தைப் பல நிறுவனங்கள் “விலைகளை உயர்த்துவதற்கும் இலாப வரம்புகளை அதிகரிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகக்” கருதுகின்றன என்றும், சில “இலாப வரம்பு விரிவடையப்போகிறது” என்றும் நிதி நிறுவனமான கார்சன் குழுமத்தின் உலகளாவிய பேரியல் மூலோபாய நிபுணர் சோனு வர்கீஸ் டைம்ஸ் இதழிடம் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டின் பணவீக்க உயர்வின் போது ஏற்பட்ட அனுபவமே மீண்டும் நிகழப்போவதை இது சுட்டிக்காட்டுகிறது. அப்போது, மொத்த விற்பனையாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் பொதுவாக “தங்களது விற்பனை விலைக்கும், பொருட்களை வாங்குவதற்கான செலவுக்கும் இடையிலான இலாப வரம்பை விரிவுபடுத்தியதை” அமெரிக்க உற்பத்தியாளர் விலை குறியீட்டு தரவுகள் காட்டுவதாக டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
முக்கிய அமெரிக்க வங்கிகளும் போரினால் உருவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்து வருகின்றன. அமெரிக்காவின் ஆறு முக்கிய வங்கிகள் முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக 47.6 பில்லியன் டாலர் இலாபத்தை ஈட்டியுள்ளன; சந்தை ஏற்ற இறக்கமானது வர்த்தகத்தில் கணிசமான இலாபம் ஈட்டுவதற்கான சூழலை வழங்கியதே இந்த இலாபத்தின் பெரும்பகுதிக்குக் காரணமாகும்.
இந்த இலாப உயர்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பைனான்சியல் டைம்ஸ், முதல் காலாண்டானது புவிசார் அரசியல் அதிர்ச்சிகளால் — அதாவது வெனிசுலா மீதான இராணுவ நடவடிக்கை மற்றும் ஈரான் போர் ஆகியவற்றால் — அடையாளப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டது. இவை சந்தை ஏற்ற இறக்கத்தைத் தூண்டின; இது “வாடிக்கையாளர்களின் வர்த்தகங்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலமும் அவற்றை எளிதாக்குவதன் மூலமும் பணம் சம்பாதிக்கும் முதலீட்டு வங்கிகளுக்கு சாதகமானது” என்றும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
ஜே.பி. மோர்கன் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத இலாப உயர்வுடன், 16.5 பில்லியன் டாலர்களை ஈட்டி முன்னணியில் உள்ளது; சந்தைப் பதற்றமானது அதன் “வர்த்தகப் பிரிவுகளுக்குக் கிடைத்த ஒரு பரிசு” என்று விவரிக்கப்படுகிறது. கோல்ட்மேன் சாக்ஸ் தனது இலாபம் 19 சதவிகிதம் அதிகரித்து $5.6 பில்லியனை எட்டியதாக அறிவித்தது. சிட்டிகுரூப் 42 சதவீத இலாப ஏற்றத்தையும், மோர்கன் ஸ்டான்லி 29 சதவீத இலாப உயர்வையும் பதிவு செய்துள்ளன.
முக்கிய வங்கிகளின் வர்த்தகப் பிரிவுகள் ஈட்டிய ஒட்டுமொத்த இலாப உயர்வு, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு மிக உயர்ந்த உச்சமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தின் பெரும்பகுதி, வங்கிகளின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காக, தங்களின் சொந்தப் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகள் முதல் காலாண்டில் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்காகச் சாதனை அளவாக 33 பில்லியன் டாலர்களைச் செலவிட்டன; இதில் ஜே.பி. மோர்கன், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் சிட்டி குரூப் ஆகியவை தங்களின் வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய மறு கொள்முதல்களைச் செய்துள்ளன.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதன் மூலம் வங்கிகள் பயனடைந்துள்ளன.. பாங்க் ஆஃப் அமெரிக்காவின் (Bank of America) தலைமை நிதி அதிகாரி அலாஸ்டெய்ர் போர்த்விக், “நிர்வாகம் செய்து வரும் பணிகளால் வங்கி ஊக்கமடைந்துள்ளது” என்று தெரிவித்தார், ஏனெனில் அந்த வங்கி இக்காலாண்டில் 7.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது சொந்தப் பங்குகளைத் திரும்ப வாங்கியுள்ளது, இது நான்கு ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவாகும். வங்கிகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய நிதியின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ட்ரம்ப் அரசாங்கம் எடுத்து வருகிறது; இது வர்த்தகம் மற்றும் பங்குகளின் மறு கொள்முதலுக்கான பணத்தை விடுவிக்கிறது.
இந்த எதிர்பாராத இலாபப் பெருக்கு குறைந்தபட்சம் இப்போதைக்காவது தொடரும் என்பதே வால் ஸ்ட்ரீட்டின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது; இதற்குச் சான்றாக புதன்கிழமையன்று S&P 500 குறியீடு முதல் முறையாக 7,000 புள்ளிகளைக் கடந்தது. போரினால் தூண்டப்பட்ட பணவீக்க இலாபமீட்டல் ஒரு காரணியாகும்; மற்றொரு காரணி பல சந்தர்ப்பங்களில், குறிப்பாக உயர்தொழில்நுட்பத் துறைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பாதித்துள்ள ஒட்டுமொத்தப் பணிநீக்க அலையாகும்.
மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்புகளின் புதிய யுகத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், “தங்களது பணியாளர்களை ஒரே நேரத்தில் பெருமளவில் நீக்குவதன் மூலம் கிடைக்கக்கூடிய நிதி ரீதியான ஆதாயங்களை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில், ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஒட்டுமொத்தப் பணிநீக்கங்கள், அந்நிறுவனத்தின் சிக்கல்கள் அல்லது நிர்வாகக் குறைபாடுகளின் அறிகுறியாகக் கருதப்பட்டன. ஆனால் இப்போது, அத்தகைய ஒரு நிறுவனம் தனது பங்கு மதிப்பில் ஒரு பெரிய ஏற்றத்தைப் பெறுவதற்கும், துணிச்சலாகச் செயல்பட்டதற்காக முதலீட்டாளர்களின் பாராட்டைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
உலகெங்கிலும் நிகழும் மரணங்கள், அழிவுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏழ்மை நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டே பெரும் நிறுவனங்களும் வங்கிகளும் தங்களை வளர்த்துக்கொள்கின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகத் தெளிவான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியது தற்போது மிக அவசியமாகும்.
ஈரான் மீதான போர் என்பது தனிப்பட்ட முறையில் டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய ஒன்றல்ல; மாறாக, அது ஏகாதிபத்தியத்தின் வரலாற்று ரீதியான நெருக்கடியால் உந்தப்படுகிறது; அந்த நெருக்கடியின் மிகவும் அருவருப்பான உருவகமாகவே அவர் திகழ்கிறார்.
அதேபோல், இன்றைய பொருளாதார மற்றும் நிதி அமைப்பில் வெளிப்படும் அருவருப்பு என்பது, ஆளும் தன்னலக்குழுக்களின் தனிப்பட்ட பேராசையினால் உருவானது அல்ல (அத்தகைய பேராசை அங்கு ஏராளமாக இருந்தாலும் கூட). அது முதலாளித்துவ அமைப்பின் விளைபொருளாகும். அந்த அமைப்பின் புறநிலைத் தர்க்கம் என்னவென்றால் — 150 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் விளக்கியது போல — சமூகத்தின் ஒரு முனையில் பிரம்மாண்டமான செல்வத்தையும், மறுமுனையில் வறுமை, துயரம் மற்றும் சீரழிவையும் உருவாக்குவதே ஆகும்.
இன்று, அந்த அமைப்பை வீழ்த்தி சோசலிசத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் என்பது வெறும் மார்க்ஸின் மூலதனம் (Das Kapital) ) நூலின் பக்கங்களுக்குள் மட்டும் முடங்கிக் கிடக்கவில்லை; மாறாக, அது மக்களின் அன்றாட வாழ்வின் மொழியிலும் விரிவாக எழுதப்பட்டு வருகிறது.
