இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூட்டத்தில் கவனம் பெரும்பாலும் நேரடியாக உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் (WEO) அறிக்கையின் மீது நேரடியாகச் குவிந்திருந்தாலும், நிதிக் கண்காணிப்பு (Fiscal Monitor) அறிக்கை பல சமயங்களில் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சில நேரங்களில் அதைவிடவும் அதிக முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்கும்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிடப்பட்ட உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் அறிக்கை, ஈரானுக்கு எதிரான போரின் விளைவாக ஏற்படக்கூடிய ஒரு “கடுமையான சூழ்நிலை” குறித்து முன்வைத்தது. இதில் எண்ணெய் விலைகள் உயர்ந்த மட்டத்திலேயே நீடிக்கும் என்றும், உலகளாவிய வளர்ச்சி வெறும் 2 சதவீதமாக வீழ்ச்சியடைந்து, சர்வதேச நாணய நிதியத்தால் மந்தநிலை என வகைப்படுத்தப்படும் சூழல் உருவாகலாம் என்றும் அது குறிப்பிட்டது.
நிதி கண்காணிப்பு அறிக்கையின் முக்கியத்துவம் என்னவென்றால், இங்குதான் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கங்களுக்கும் மத்திய வங்கிகளுக்குமான தனது கொள்கை பரிந்துரைகளை வகுத்துரைக்கிறது.
உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் அறிக்கையைத் தொடர்ந்து புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் செய்தி தெளிவானது: போரின் காரணமாக தங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பைத் தணிக்க அரசாங்கங்கள் செலவினங்களை கணிசமாக அதிகரிக்கக் கூடாது. மோசமடைந்து வரும் கடன் நிலைமை, இராணுவச் செலவினங்களின் அதிகரிப்புடன் சேர்ந்து, அதை அனுமதிக்காது.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலைப்பதிவு இடுகை, உயர்ந்த எரிசக்தி மற்றும் உணவு விலைகள், இறுக்கமான நிதி நிலைமைகள் மற்றும் அதிகரித்த நிச்சயமற்ற தன்மையுடன் இணைந்து, “மீண்டும் ஒருமுறை நிதி ஆதரவுக்கான கோரிக்கைகளைத் தூண்டுகின்றன” என்று குறிப்பிடுகிறது.
ஆனால், அது தொடர்ந்து கூறியது: “பல நாடுகளில் ஏற்கனவே கடன் உயர்ந்த நிலையில் உள்ளதால், நிதிக் கொள்கை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்-தேவையான இடங்களில் ஆதரவை வழங்கியபோதும், பொது நிதியை விளிம்பிற்குத் தள்ளாமல் இருக்க வேண்டும்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசியல் அழுத்தங்களால் அத்தகைய நிவாரணம் வழங்கப்படும் சூழலில், அது கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்; மேலும் ஒரு துறையில் செலவுகள் அதிகரித்தால், அதற்கான ஈடாக பிற துறைகளில் வெட்டுகள் செய்யப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் எரிசக்தி மற்றும் உணவு விலை அதிர்ச்சியிலிருந்து பொருளாதாரங்கள் மீண்ட போதிலும், அரசாங்கங்கள் அதிகக் கடன்களையும் பலவீனமான பாதுகாப்புக் கையிருப்புக்களையுமே கொண்டிருந்தன. வளர்ச்சி அதிகரித்தபோதும், நிதி நிலைகள் மேம்படவில்லை.
“2025 இல் உலகளாவிய வளர்ச்சி வலுவாக இருந்தது, இருப்பினும் வரவு செலவுத் திட்டங்களைச் சரிசெய்வதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பல நாடுகளில், பற்றாக்குறைகள் அதிகமாகவே இருந்தன, கடன் தொடர்ந்து உயர்ந்தது மற்றும் வட்டிச் செலவுகள் வேகமாக அதிகரித்தன.”
இதன் விளைவாக, 2025 இல் உலகளாவிய பொதுக் கடன் உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 94 சதவீதத்தை எட்டியது. 2029 ஆம் ஆண்டில் அது 100 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.— இது ஓராண்டிற்கு முன்பு கணித்ததை விட ஒரு வருடம் முன்னதாகவே உள்ளது. கடன் நிலை மேலும் மோசமடைவதற்கான முக்கிய காரணம் வட்டிச் செலவின் திடீர் உயர்வாகும், நான்கு ஆண்டுகளில் அது GDP‑யின் 2 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏழை நாடுகள் சில காலமாகவே தங்கள் நிதி நிலைகளில் பெருகிவரும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன - பல சந்தர்ப்பங்களில், அவை சுகாதாரம், கல்வி மற்றும் பிற சமூக சேவைகளைவிட கடன் மற்றும் வட்டிக்கே அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. வட்டி விகிதங்களின் மேலதிக உயர்வு மற்றும் எரிசக்தி மற்றும் உணவுப் பற்றாக்குறையுடன் வரும் காலத்தில் அவை இன்னும் கடுமையாக பாதிக்கப்படப் போகின்றன.
இப்போது முக்கிய பொருளாதாரங்கள் ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடியின் சுழலில் அதிகமாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு, “ஒழுங்கான நிதிச் சரிசெய்தலுக்கான வாய்ப்பு சுருங்கி வருகிறது’’என்று அந்த அறிக்கை கூறியது.
“அதிக கடன் சுமைகளைக் கொண்ட முன்னேறிய பொருளாதாரங்களுக்கு நடுத்தரகால இலக்குகள் அல்ல, மாறாக, உறுதியான மற்றும் நன்கு வரிசைப்படுத்தப்பட்ட நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளே தேவைப்படுகின்றன.”
இந்தச் சொல்லாட்சியின் நடைமுறை அர்த்தம் அமெரிக்காவுக்காக விளக்கப்பட்டது, அங்கு அரசாங்கக் கடன் 39 டிரில்லியன் டாலராகவும், வட்டி செலவு ஆண்டுக்கு சுமார் 1 டிரில்லியன் டாலராகவும் உள்ளது.
“அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தக் கணக்கு தவிர்க்க முடியாதது: நாட்டின் கடன் பாதையை நிலைநிறுத்துவதற்கு வருவாய் மற்றும் செலவினம் ஆகிய இரண்டிலும் நடவடிக்கை தேவைப்படும்; இதில் முக்கிய சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களும் அடங்கும்.”
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் நோக்கம் அதுவே என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இது, அவர் தோற்றத்தில் எவ்வளவுதான் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றினாலும், அவரது கொள்கைகள் ஏதோ ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்கள் அல்ல, மாறாக அவை சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள நிதி மூலதனத்தின் திட்டவட்டமான வெளிப்பாடே என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற ஒரு மூடிய மதிய விருந்தில், மத்திய அரசு பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு, அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் (Medicare) மற்றும் மருத்துவ உதவி திட்டம் (Medicaid) ஆகியவற்றுக்கு நிதியளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு “இராணுவப் பாதுகாப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தில்” மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரல் அவரது கொதிப்படைந்த மூளையில் உதித்த விளைபொருள் அல்ல, மாறாக அது ஒரு உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் குறிப்பிட்ட வெளிப்பாடே என்பது, ஐரோப்பாவைப் பற்றி சர்வதேச நாணய நிதியம் கூறியவற்றின் மூலம் வெளிப்பட்டது.
“ஐரோப்பிய அரசாங்கங்கள், பாதுகாப்பு சார்ந்த கடப்பாடுகளையும், முதியோர் மக்கள் தொகையினால் ஏற்படும் அழுத்தங்களையும், செலவின முன்னுரிமைகளில் ஒரு உறுதியான மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்” என்று அது குறிப்பிட்டது.
இதன் பொருள் என்னவென்றால், அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களின் இராணுவச் செலவினங்களில் ஏற்படும் பெரும் அதிகரிப்புக்கு இடமளிக்க, ஓய்வூதியங்கள் மற்றும் முதியோருக்கான சேவைகள் உள்ளிட்ட பல துறைகளின் செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் செய்தி முக்கிய அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. புதன்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற கூட்டத்தில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சுமார் ஒரு டஜன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்காக வாஷிங்டனில் கூடி, “நிதிப் பொறுப்பு’” என்று அழைக்கப்படுவதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்தனர்.
“[ஈரான்] மோதலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட்டாலும் கூட, வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் சந்தைகள் மீதான அதன் தாக்கங்கள் நீடிக்கும்,” என்று அவர்கள் கூறினர். “இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், அதற்கான பொருளாதார எதிர்வினைகளை ஒருங்கிணைந்த, பொறுப்பான மற்றும் துரிதமான முறையில் கையாள்வதற்கும் நாங்கள் உறுதியளித்துள்ளோம்.”
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் அனைத்து துறைகளிலும் விரிவாக விளக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சால் எஸ்லேக், வளர்ந்து வரும் இந்த நெருக்கடிக்கு அரசாங்கங்களின் பதிலளிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து எழுதிய கட்டுரை ஒன்றை சிட்னி மார்னிங் ஹெரால்டு வெளியிட்டிருந்தது.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் வாழ்க்கைச் செலவினங்களுக்கான நிதியுதவியை வழங்க முற்பட்டால், அவர்கள் அந்தத் தூண்டுதலை எதிர்க்க வேண்டும் என்று அவர் எழுதினார். ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்துவதைத் தடுக்கவும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்கவும் அவர்கள் விரும்பினால், தங்கள் வரவு-செலவுத் திட்டங்களில் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை “அரசியல் ரீதியாக எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு குறைவாகவே” வழங்க வேண்டும். அத்துடன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை ஆதரிக்கும் எந்தவொரு எண்ணத்தையும் அவர்கள் முறியடிக்க வேண்டும்.
தொழிலாளர் வர்க்கத்தின் மீதான உலகளாவிய தாக்குதல் என்பது ஒரு கடந்து செல்லும் புயலாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சி நிரலிலும் இதுவே அதன் மையக்கருவாக இருக்க வேண்டும் என்பதை நிதி கண்காணிப்பு அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த வலைப்பதிவு இடுகையின் சொற்களில் கூறுவதானால்: “இன்றைய நிதிச் சவால்களின் தன்மை மாறியுள்ளது. பலவீனங்கள் என்பவை இனி பெரும்பாலும் சுழற்சி முறையிலானவை அல்லது தற்காலிக அவசர நிலைகளின் விளைவால் ஏற்பட்டவை அல்ல; மாறாக அவை கட்டமைப்பு ரீதியானவை: பாதுகாப்புச் செலவுகள் [பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவச் செலவினங்களுக்கான ஒரு நயமான சொல்], காலநிலை மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான செலவுகள், மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவினங்கள்ஆகியவை வரவு-செலவுத் திட்டங்களில் நீடித்த அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன; அதே நேரத்தில் வருவாய் அதற்கு இணையாக உயரவில்லை.”
இந்த வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வெளிவந்துள்ள அனைத்து அறிக்கைகளும், போர் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிலை ஆகியவற்றுக்கு இடையேயான பிரிக்க முடியாத தொடர்பையும், உலக நிதி அமைப்பின் அதிகரித்து வரும் பலவீனத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. இவை அனைத்தும் நிதி கண்காணிப்பு அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன; அந்த அறிக்கை உண்மையில் உள்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளது.
