மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஏப்ரல் 17-18 தேதிகளில், சுமார் 6,000ம் அரசியல்வாதிகள், கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் பல்வேறு ஒட்டுண்ணிகள், “உலகளாவிய அளவில் அணிதிரளும் முற்போக்குகள்” (GPM) என விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வின் தொடக்கத்திற்காக பார்சிலோனாவில் கூடினர். “ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்” எனும் பதாகையின் கீழ், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் இந்த உச்சிமாநாட்டை கூட்டினர்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஓர் அரசியல் மோசடி நாடகமாகும்.
இது சிக்கன நடவடிக்கைகள், அடக்குமுறை மற்றும் போரை எதிர்ப்பவர்களின் கூட்டமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பவர்களின் கூட்டமாகும். இது தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான அணிதிரட்டல் அல்ல, மாறாக தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்குக் காரணமான கொள்கைகளை வகுத்த கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மாநாடாகும். இது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சி அல்ல, மாறாக தன்னலக்குழுவின் செல்வத்தைப் பாதுகாத்து, அரசின் அடக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்தி, உலகம் முழுவதும் ஏகாதிபத்திய வன்முறையை ஆதரிக்கும் அரசாங்கங்களின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் அடையாளப்படுத்தும் முயற்சியாகும்.
தற்போது “முற்போக்குவாதம்” என்று கருதப்படுவதற்கான தகுதி மிகவும் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. அந்தச் சொல் அதன் அனைத்து தீவிரமான உள்ளடக்கங்களையும் இழந்துவிட்டது. இன்று இது, ட்ரம்ப் எனும் அட்டில்லா-வுக்கு இடதுபுறம் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாக மாறியுள்ளது. இன்று ஒரு “முற்போக்குவாதி” என்று தகுதி பெற ஒருவர், சமூக ரீதியாகப் பிற்போக்கான கொள்கைகளை மனிதாபிமானக் குரலில் திணிப்பது, ஊதியங்கள் மற்றும் சமூகத் நலத் திட்டங்களைத் தாக்கும் அதே வேளையில், ஏழைகளுக்காக ஒரு அடையாளக் கண்ணீரைச் சிந்துவது, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எல்லைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், அவர்களுக்கு சடங்கு ரீதியான அனுதாபத்தை வழங்குவது, மேலும் ஏகாதிபத்தியப் படுகொலைகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி அவற்றை ஆதரிக்கும் அதே வேளையில், அதற்காக ஒரு பெருமூச்சு விட்டு வருத்தப்பட்டாலே போதுமானது.
முந்தைய காலங்களில், அதன் தன்மை வரம்புக்குட்பட்டதாகவும் முதலாளித்துவப் பண்பு கொண்டதாகவும் இருந்தபோதிலும், “முற்போக்குவாதம்” என்பது சமூக சீர்திருத்தம், ஜனநாயக உரிமைகள், வேரூன்றிய சிறப்புரிமைகளுக்கு எதிரான பகைமை மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவில் முதலாளித்துவச் சுரண்டலின் கொடூரமான வடிவங்களுக்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றைக் குறிப்பதாக இருந்தது. ஆனால் இன்று, இது சிக்கன நடவடிக்கைகள், அடக்குமுறை மற்றும் போர் ஆகியவற்றிற்கு ஒரு ஒழுக்க ரீதியான முகமூடியை அணிவிக்கும் முயற்சியையே குறிக்கிறது.
இந்த மாநாட்டின் பேச்சாளர்களின் பட்டியல், இந்த மாநாடு உண்மையில் என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஸ்பெயினில் தற்போது நலிவடைந்து வரும் சர்வதேச சோசலிஸ்டுக்கள் என்ற அமைப்பின் தலைவரான சான்செஸ், இராணுவச் செலவினங்களை சாதனை அளவிற்குக் கூட்டிக் கொண்டும், குடியேறுபவர்களைத் தாக்கியும், சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வரும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். சுமர் (Sumar) கட்சியுடனான அவரது கூட்டணி, அனைத்து இடங்களிலும் காணப்படும் போலி-இடது அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியையே செய்து வருகிறது: அதாவது வங்கிகள், இராணுவம் மற்றும் அரசால் வரைவு செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு ஒப்பனைப் பூச்சை பூசுவதாகும்.
ஒரு காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் குரலாக முன்னிறுத்தப்பட்டவரும், இப்போது பிரேசிலிய முதலாளித்துவத்தின் அனுபவம் வாய்ந்த நிர்வாகியாக இருந்துவரும் லுலா, சான்செஸுடன் இணைந்துகொண்டார். பார்சிலோனாவில் ஒரு வெளிப்படையான தருணத்தில், “இடதுசாரி” அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தியதாக லூலா குறிப்பிட்டார்: “நாங்கள் இந்த அமைப்பு முறையாகவே மாறிவிட்டோம்” என்றார். குறைந்தபட்சம் அந்த அளவிற்கு அது உண்மையாக இருந்தது. பார்சிலோனாவில் சமத்துவமின்மைக்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும்போதே, லூலாவின் அரசாங்கம் அமேசான் படுகையின் எண்ணெய் சுரண்டலுக்குத் தொடர்ந்து ஒப்புதல் அளித்து வருகிறது, மேலும் ஒரு மத்திய வங்கியாளரின் நம்பகத்தன்மையுடன் மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், லூலா மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து, ஆனால் நடைபெறாமல் போன ட்ரம்புடனான சந்திப்பிற்கு முன்னதாக, வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஊடுருவல் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அவர் ஒப்புதல் அளித்தார். மேலும் ட்ரம்ப் குறித்துப் பேசுகையில், “நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்றும், கடத்தப்பட்ட மதுரோ மீண்டும் வருவது “முதன்மையான கவலை அல்ல” என்றும் அறிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியான சிரில் ராமபோசாவும் அங்கு இருந்தார். அவர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் அந்த நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் இனவெறி ஆட்சிக்கு பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கின் கோடீஸ்வரப் பிரதிநிதி ஆவர். 2012-ஆம் ஆண்டில் லோன்மின் (Lonmin) நிறுவனம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 34 சுரங்கத் தொழிலாளர்களைக் படுகொலை செய்தபோது, அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார். ஜனாதிபதியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட ஜாமா ஜாமா (zama zama) சுரங்கத் தொழிலாளர்கள் பட்டினியால் இறப்பதற்குக் காரணமாக இருந்தார். கீழ்மட்டத்திலிருந்து மக்களின் கோபம் அதிகரித்து வருவதால், குண்டர்களின் வன்முறையை ஒடுக்குவதாகக் கூறி ராமபோசா இராணுவத்தை குவித்து வருகிறார்.
கிளாடியா ஷைன்பாமும் (Claudia Sheinbaum) இதில் கலந்துகொண்டார். மெக்சிகோ அரசாங்கத்தின் சார்பாகக் கலந்துகொண்ட அவர், மிதமான சீர்திருத்தவாத வசனங்களைப் பேசிக்கொண்டே, வாஷிங்டனின் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் மற்றும் குடியேறுபவர்களுக்கு எதிராக மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையினரை ஏவி விடுகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், 1913-ஆம் ஆண்டு அமெரிக்காவால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பிரான்சிஸ்கோ ஐ. மடேரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு நினைவேந்தலில் பங்கேற்ற ஷைன்பாம், அதன் பிறகு மெக்சிகோவின் சிறப்புப் படைகளுக்குப் பயிற்சியளிக்க அமெரிக்க கடற்படை சீல்ஸ் படைப் பிரிவினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பல்வேறு பிரதிநிதிகளும், நீண்டகாலமாகச் சீரழிந்து வரும் சமூக ஜனநாயகவாதிகளும் அங்கு இருந்தனர். இதில் ஜேர்மனியின் துணை சான்சிலரும் சமூக ஜனநாயகக் கட்சியின் இணைத் தலைவருமான லார்ஸ் கிளிங்பீலும் அடங்குவார். ஜேர்மனியை “போருக்குத் தகுதியானதாக” மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரமாண்டமான 1 டிரில்லியன் யூரோ மதிப்பிலான இராணுவ மற்றும் உள்கட்டமைப்புத் திட்டத்தை இவரது அரசாங்கம் மேற்பார்வையிட்டு வருகிறது. “சர்வதேச அரசியலில் வலிமையும் அதிகாரமும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாக மாறி வரும்” ஒரு உலகிற்கு ஜேர்மனியின் தேவையான பதில் இதுவே என்று கிளிங்பீல் பிப்ரவரி மாதம் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மரின் கீழ் துணைப் பிரதமராக இருக்கும் டேவிட் லாம்மி, சமூக சீர்திருத்தம் குறித்த அனைத்துப் பாசாங்குகளையும் நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்ட தொழிற் கட்சியின் சார்பாகக் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நீதித்துறை அமைச்சராக இருந்த லாம்மி, காஸா இனப்படுகொலைக்கு எதிராகப் போராடி கைது செய்யப்பட்ட பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைச் சந்திக்க முயன்ற வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்களைத் தடுத்ததற்குப் பொறுப்பானவர் ஆவர். பாலியல் கடத்தல்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டிருந்த பீட்டர் மண்டேல்சன் அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட்டபோது லாம்மி வெளியுறவு அமைச்சராக இருந்தார்.
இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அதிகாரப்பூர்வ ஐரோப்பாவின் அரசியல் குப்பைகள். இந்தக் கட்சிகள் பல தசாப்தங்களாகத் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற சீர்திருத்தங்களை ஒழித்துக் கட்டுவதிலும், அடக்குமுறை அரசின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதிலும், ஏகாதிபத்தியப் போர்களை ஆதரிப்பதிலும் காலத்தைக் கழித்துவிட்டு, இன்னும் தாங்கள்தான் “இடதுகளைப்” பிரதிநிதித்துவப்படுத்துவதாக அடம் பிடிக்கின்றன. இவர்கள், போருக்காக ஆயுதங்களை ஏந்துவதற்கும், சமூகச் செலவினங்களைக் குறைப்பதற்கும், தொழிலாளர் வர்க்கத்துடனான மோதலுக்குத் தயாராவதற்கும் துடிக்கும் அரசாங்கங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள் அல்லது தலைமை தாங்கத் துடிக்கிறார்கள்.
இத்தகைய கூட்டத்தை “முற்போக்கு” என்று வர்ணிப்பது அந்தச் சொல்லின் பொருளைப் பறிப்பது மட்டுமல்ல. அது அரசியல் மோசடிக்கு அங்கீகாரம் அளிப்பதாகும்.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு பதிலாக இது முன்னிறுத்தப்பட்டாலும், அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதியை நேரடியாகக் குறிப்பிடுவது எதிர்கால வணிக ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் வாய்ப்புகளைப் பாதித்துவிடும் என்ற அச்சத்தில், முக்கியப் பேச்சாளர்கள் கிட்டத்தட்ட அனைவரும் “ட்ரம்ப்” என்ற பெயரைக் குறிப்பிடுவதை மிகவும் கவனமாகத் தவிர்த்தனர்.
மேலும், ஈரான் மீதான போருக்கு எதிராக அவ்வப்போது வாய்வீச்சிலான விமர்சனங்களை முன்வைத்தாலும், பார்சிலோனாவில் கூடியிருந்த அனைத்து முக்கியக் கட்சிகளும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை ஆதரிக்கின்றன. இந்த உச்சிமாநாட்டிற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, மார்ச் 18 அன்று, சான்செஸ் மோன்க்ளோவா அரண்மனையில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்காக உக்ரேனுக்கு 1 பில்லியன் யூரோ மதிப்பிலான புதிய இராணுவ உதவித் தொகுப்பை அறிவித்தார். இதன் மூலம், 2022 முதல் உக்ரேனுக்கு ஸ்பெயின் வழங்கிய மொத்த உதவித் தொகை கிட்டத்தட்ட 3.8 பில்லியன் யூரோவாக உயர்ந்துள்ளது.
அங்கு கூடியிருந்த ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள் — உக்ரேனுக்கு உலகின் முக்கிய ஆயுத விநியோகஸ்தர்களில் ஒன்றாக மாறியுள்ள ஒரு அரசாங்கத்தை இணைந்து வழிநடத்தும் ஜேர்மன் SPD கட்சியைச் சேர்ந்த கிளிங்பெய்ல்; போரின் மற்றொரு முக்கிய ஆதரவாளரான பிரிட்டனின் தொழிற் கட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த லாம்மி; இந்த மோதல் காரணமாக ஸ்வீடன் நேட்டோவில் இணைந்து கொண்டதுடன் தொடர்புடைய லோஃப்வென் — ஏகாதிபத்தியக் கொள்கையை விமர்சிப்பவர்கள் அல்ல. மாறாக இவர்கள் அதன் அரசியல் பிரதிநிதிகளில் அடங்குகின்றனர்.
நிச்சயமாக, அமெரிக்கப் பிரதிநிதிகளையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. அங்கு கலந்துகொண்ட இரு அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் —கனெக்டிகட் செனட்டர் கிறிஸ் மர்பி மற்றும் மின்னசோட்டா கவர்னர் டிம் வால்ஸ்— ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்தனர். வால்ஸ் உண்மையில் “ட்ரம்ப்” என்ற பெயரைப் பயன்படுத்தினார்; அவரை “புத்திசுவாதீனம் அற்ற, எந்நேரமும் தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருக்கும் ஜனாதிபதி” என்று அழைத்ததோடு, “எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், தெளிவான குறிக்கோள்கள் அல்லது வெளியேறும் திட்டம் ஏதுமின்றி” அவர் ஈரான் போரைத் தொடங்கியதாகக் கூறினார். மர்பி கூறுகையில், “டொனால்ட் ட்ரம்ப் எமது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரத் துடிக்கிறார்” என்றும், “நாம் ஒரு சர்வாதிகாரக் கைப்பற்றலின் விளிம்பில் இல்லை, அதன் நடுவிலேயே இருக்கிறோம்” என்றும் அறிவித்தார்.
இவர்களுடைய வாயிலிருந்து வரும் இத்தகைய வசனங்கள் அர்த்தமற்றவை. அமெரிக்கா ஒரு சர்வாதிகார உருமாற்றத்தின் நடுவில் இருக்கிறது என்றால் —இங்கே மர்பி சொன்னது உண்மைதான்— ஜனநாயகக் கட்சி அதை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக அதற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அது இராணுவ-உளவுத்துறை அமைப்பிற்கான போர் வரவுசெலவுத் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கிறது, அடக்குமுறை இயந்திரத்தை ஆதரிக்கிறது மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அரசியல் இயக்கத்தையும் தடுக்கிறது.
லிபியாவையும் சிரியாவையும் நாசமாக்கிய ஆட்சி மாற்ற நடவடிக்கைகளின் முதன்மை சூத்திரதாரிகளில் ஒருவரான ஹிலாரி கிளிண்டனுக்கு, காணொளி வாயிலாக உரையாற்றும் கௌரவம் வழங்கப்பட்டது. ஏகாதிபத்திய ஆட்சி மாற்றத்தின் உயர்மட்ட பெண் பூசாரி ஒருவரின் ஆசிர்வாதம் இல்லாமல், அரசியல் மோசடிப் பேர்வழிகளின் எந்தவொரு கூட்டமும் முழுமையடையாது என்று அமைப்பாளர்கள் தெளிவாக முடிவு செய்துள்ளனர்.
அதேபோல், சோஹ்ரான் மம்தானியின் இருப்பு இல்லாமல் இத்தகையதொரு கூட்டம் முழுமையடையாது.
நியூ யோர்க் நகரத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் உறுப்பினருமான மம்தானி வழங்கிய காணொளிச் செய்தி, அதன் அர்த்தமற்ற தன்மையால் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. ஜனநாயகக் கட்சியின் கட்டமைப்பிற்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு சமூக வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கப்பட்ட போலி-இடது நடைமுறையின் மூலம் உயர்ந்த மம்தானி, உச்சிமாநாட்டைக் கூட்டியதற்காக சான்செஸிற்கு நன்றி தெரிவித்தார். உலகில் பல நெருக்கடிகளும் மோதல்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வீட்டு வாடகை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி சமத்துவமின்மைக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார்.
அவர் எதைச் சொல்லவில்லை என்பதுதான் இங்கு மிக முக்கியமானது. அவர் ட்ரம்ப்பைக் குறிப்பிடவில்லை. அவர் ஈரானைக் குறிப்பிடவில்லை. அவர் காஸாவைக் குறிப்பிடவில்லை. அவர் லெபனானைக் குறிப்பிடவில்லை. நியூ யோர்க்கில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடத்தப்படும் நாடு கடத்தும் நடவடிக்கைகளைக் குறிப்பிடவில்லை. அவர் “போர்” என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லை.
மம்தானியும் DSA அமைப்பும், தீவிரமடைந்துவரும் உணர்வுகளை உள்வாங்கி, அவற்றின் அரசியல் தெளிவைச் சிதைத்து, மீண்டும் ஜனநாயகக் கட்சி அரசியலின் முட்டுச்சந்திற்குள் திசைதிருப்பவே இருக்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி ஆற்றிய உரையில், மம்தானி தனது சாதனைகளைச் சாலைகளில் உள்ள குழிகளை மூடுவதிலேயே மையப்படுத்தினார். அதை அவர் “குழி அரசியல்” என்று அழைத்தார். அந்தச் சொற்றொடர், அது மறைக்க முயன்ற அரசியல் திவால்நிலைக்கு ஒரு தற்செயலான நினைவுச்சின்னமாக மட்டுமே எஞ்சியிருக்கத் தகுதியானது.
பார்சிலோனாவில் ஆற்றிய உரைகள் “ஜனநாயகம்,” “உரிமைகள்” மற்றும் “சமூக நீதி” ஆகிய மொழிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அரசாங்கங்களின் உண்மையான செயல்பாடுகள் ஆயுத ஒப்பந்தங்கள், முக்கியமான தாதுக்களின் விநியோகம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மொழியிலேயே நடத்தப்படுகின்றன. ஏப்ரல் 19 அன்று, “ஜனநாயகம், தொழிலாளர்கள் மற்றும் இயற்கையை அழிக்கும் யுத்த பிரபுக்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்களைக்” கண்டித்த மறுநாளே, லுலா ஜேர்மனிக்கு பறந்து சென்று உலகின் மிகப்பெரிய தொழில் வர்த்தகக் கண்காட்சியான ஹன்னோவர் மெஸ்ஸை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு பிரேசில் அதன் அதிகாரப்பூர்வ கூட்டாளர் நாடாக இருக்கிறது.
அங்கு, CDU கட்சியின் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ்ஸுடன் இணைந்து, லுலா வரவிருக்கும் ஐரோப்பிய யூனியன்-மெர்கோசூர் (EU-Mercosur) வர்த்தக ஒப்பந்தத்தையும், செயற்கை நுண்ணறிவு, முக்கியமான தாதுக்கள் மற்றும் தரவு மையங்களில் விரிவான ஒத்துழைப்பையும் கொண்டாடினார். பார்சிலோனாவில் புகழப்பட்ட “பல்தரப்புவாதத்தின்” உண்மையான உள்ளடக்கம் இதுதான்: இது போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேச ஒற்றுமை அல்ல, மாறாக டிஜிட்டல் பொருளாதாரம், ஆயுதத் தொழில் மற்றும் ஐரோப்பாவின் வேகமான மறுஒழுங்கமைப்பிற்கு அவசியமான சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான பாதுகாப்பான அணுகலைத் தேடும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான ஒரு மூலோபாய மற்றும் வணிக ரீதியான அணிசேர்க்கை ஆகும்.
ஒவ்வொரு முக்கிய நாட்டின் ஆளும் வர்க்கங்களும் தங்களை ஆயுதங்களால் முழுமையாகப் பலப்படுத்திக் கொள்கின்றன. தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக ஒரு தாக்குதல் கருவிகளாக பயன்படுத்துவதற்காக அவர்கள் பாசிச இயக்கங்களை வளர்த்தெடுக்கிறார்கள். ரஷ்யாவிற்கு எதிரான போர், காஸாவில் நடக்கும் இனப்படுகொலை, ஈரான் மற்றும் லெபனான் மீதான குண்டுவீச்சு ஆகியவை ஒரு புதிய ஏகாதிபத்தியப் பேரழிவின் தொடக்கக் கட்டங்களாகும். இவை அனைத்திற்கும் மத்தியில், பார்சிலோனாவில் திரண்டிருந்த அந்த “முற்போக்குவாதிகள்” வெறும் 15 ஒப்பந்தங்கள், ஒரு முக்கியமான தாதுக்கள் ஒப்பந்தம், சமத்துவமின்மை குறித்து ஒரு ஐ.நா. குழுவிற்கான முன்மொழிவு மற்றும் ஒரு காடு வளர்ப்பு இலக்கு ஆகியவற்றை மட்டுமே அளித்தனர்.
இவை அனைத்திலும் உள்ள வெட்கமற்ற தன்மை மூச்சுத்திணறச் செய்கிறது. போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது, அவர்கள் வெறும் அதிகாரத்துவ வெற்று வார்த்தைகளையே பதிலாக அளித்தனர்.
ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பு என்ற பாசாங்குத்தனம், அனைத்து வெற்று வார்த்தைகளையும் உரித்துப் பார்த்தால் இறுதியாக எஞ்சியிருப்பது இதுதான்: அதாவது, அடுத்த குண்டுவீச்சிற்கு உத்தரவிடுவதற்கு முன்பு அவர் தனது ஆக்ரோஷமான வாய்வீச்சுக்களை குறைத்துக்கொள்ள வேண்டும், தனது கூட்டாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் மற்றும் முறையான இராஜதந்திர நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் — மேலும், ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதாகும்.
தொழிலாளர் வர்க்கத்தின் முன்னால் உள்ள பணி இத்தகையவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது அவர்களுக்காகக் காத்திருப்பதோ அல்ல. இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடமிருந்து — அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி, PSOE, PT, SPD, தொழிற் கட்சி மற்றும் அவற்றின் போலி-இடது துணை அமைப்புகளிடமிருந்து — அரசியல் ரீதியாக முறித்துக் கொள்வதும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுமே ஆகும்.
இதுவே பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்தியப் போரை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே அடிப்படையாகும். பார்சிலோனாவில் நடந்த எதிலுமே அந்தத் திசையிலான அறிகுறி தென்படவில்லை. மாறாக, அனைத்தும் அதைத் தடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன.
