முன்னோக்கு

ஈரான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர், தொழிலாள வர்க்கத்திற்கு உலகளாவிய பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த பெப்ரவரி 28 அன்று நள்ளிரவில், பாசிச அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குற்றவியல் அமெரிக்க/இஸ்ரேலியப் போரைத் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், இந்த மோதலானது உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மீது அழிவுகரமான பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலகின் மிக முக்கியமான எரிசக்தி உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான மத்திய கிழக்கின் மீது தனது பூகோள மூலோபாய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டுள்ள உறுதி, ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஈரானியர்களின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவால் தூண்டப்பட்ட இந்தப் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் பயங்கரமான உயிரழப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்தப் போர் வெடிப்பதற்கு முன்பு, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதமும், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கணிசமான பகுதியும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெற்றன. இந்த எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் விளைவுகள் ஏற்கனவே உலகப் பொருளாதாரம் முழுவதும் எதிரொலித்து வருகின்றன. இதில் எரிபொருள் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் பில்லியன் கணக்கான மக்களுக்கான போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.

மத்திய கிழக்கு பிராந்தியம் உர உற்பத்தியிலும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது; எனவே, வட அரைக்கோளத்தில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியக் கண்டம், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், தென் அமெரிக்காவின் சில பகுதிகள்) உள்ள விவசாயிகள், தமது பயிர்களை பயிரிடும் காலத்திற்கு மத்தியில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பயிர்களுக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், செலவுளை குறைப்பதற்காக விவசாயிகள் குறைவாகப் பயிரிடுவதாலும் அல்லது குறைவான உரங்களைப் பயன்படுத்துவதாலும் அறுவடை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வரவிருக்கும் மாதங்களிலும் 2027 ஆம் ஆண்டு வரையிலும் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு நிலைமைகளை உருவாக்கும்.

கப்பல் போக்குவரத்து இடையூறுகள், அதிகரித்துள்ள காப்பீட்டுத் தொகைகள் மற்றும் திசைதிருப்பப்பட்ட வர்த்தகப் பாதைகள் ஆகியவற்றால் உணவு இறக்குமதி விலைகள் மேலும் உயர்ந்துள்ளது. போர் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் கொள்கலன் சரக்குக் குறியீடு 10 சதவீதம் உயர்ந்தது. இது ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் நேரடியாகப் பாதிக்கப்படாத போக்குவரத்திலும்கூட பாதிப்புக்குள்ளாகியிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஏவுகணைகளால் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் இதர சிவிலியன் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஈரானில் உள்ள தொழிலாள வர்க்கம் இந்தப் போரின் பொருளாதாரத் தாக்குதலையும் தாங்கி வருகிறது. இந்த மோதலின் நேரடி விளைவாக சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை பெரிதும் நம்பியிருப்பதால், ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் போரின் தாக்கம் குறிப்பாகக் கடுமையாக உள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் LNG-யில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய தொழில்மயமான நாடுகள் உட்பட ஆசிய-பசிபிக் நாடுகளுக்கே செல்கின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில வாரங்களிலேயே சுமார் 10-15 சதவீதம் அதிகரித்துள்ளன.

இந்தோனேசியாவில், உலோகத்தைப் பிரித்தெடுக்கவும், சுத்திகரிக்கவும் தேவையான அதிக வெப்பநிலையை உருவாக்கப் பயன்படும் இயற்கை எரிவாயு மற்றும் கந்தகத் தட்டுப்பாடு காரணமாக நிக்கல் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைந்தது 10 சதவீதம் குறைத்துள்ளனர். அதேபோல், ஆடைகள் தயாரிக்கப் பயன்படும் படிம எரிபொருள் துணைப் பொருட்களான பாலியஸ்டர் மற்றும் நைலோன் தட்டுப்பாட்டினால், வங்காளதேசத்தின் ஆடைத் தொழிற்சாலைகளில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு முக்கியமான அம்சம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகும். தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வளைகுடா பிராந்தியத்தில் பணியாற்றி, தங்களின் ஏழ்மையான குடும்பங்களுக்குத் தேவையான வருமானத்தை அனுப்பி வருகின்றனர். போர் காரணமாகப் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்து, வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதால், இந்தப் பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வாகன ஓட்டிகள் வரிசையில் நிற்கின்றனர், திங்கட்கிழமை, மார்ச் 23, 2026. [AP Photo/Ajit Solanki]

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றில், ஈரான் மீதான இந்தப் போர், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 36 நாடுகளுக்கு சுமார் 300 பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், 8.8 மில்லியன் (88 லட்சம்) மக்களை வறுமையில் தள்ளக்கூடும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதில் 50 லட்சம் பேர் ஈரானில் வசிக்கின்றனர்; அங்கு நிலவும் போரினால் அந்நாட்டின் மனித மேம்பாட்டு குறியீடு (HDI) ஏற்கனவே 1 முதல் 1.5 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ் இதழ் ஏப்ரல் 20 அன்று வெளியிட்ட ஒரு நீண்ட பகுப்பாய்வில், ஹோர்முஸ் நீரிணை இன்னும் சில வாரங்களுக்கு முற்றுகையிடப்பட்டால், ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள நாடுகள் “பெரிய அளவிலான அமைதியின்மை மற்றும் அதைத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலையைச் சந்திக்க நேரிடும்” என்று கவலை தெரிவித்துள்ளது. தைவானில் தயாரிக்கப்படும் சிப்களுக்கு (chips) அவசியமான மின்குறைக்கடத்திகள் (semiconductors) உள்ளிட்ட உயர்தரத் தயாரிப்புகளும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. போருக்கு முன்பு, மின்குறைக்கடத்திகள் உற்பத்தி செயல்பாட்டின் ஒரு முக்கிய அங்கமான ஹீலியம் வாயுவின் உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை கத்தார் உற்பத்தி செய்தது. ஆனால், ஈரானின் பதிலடித் தாக்குதல் கத்தாரின் எரிவாயு நிலையங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, மார்ச் 2 அன்று அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளபடி, சிப் உற்பத்திக் குறைவு என்பது “மின்னணு சாதனங்கள் முதல் கார்கள் வரை அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.”

ஆப்பிரிக்காவில், நைஜீரியா ஒரு மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருந்தபோதிலும், அங்கு எரிபொருள் விலைகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. சுமார் 240 மில்லியன் மக்களைக் கொண்ட அந்த நாடு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் இறக்குமதியை பெரிதும் நம்பியிருப்பதால், பெட்ரோல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இது அந்நாட்டில் பொதுப் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது. கென்யாவில், ஏப்ரல் நடுப்பகுதியில் எரிபொருள் விலை ஒழுங்குமுறை ஆணையம் பெட்ரோல் விலையை 16 சதவீதத்திற்கும் மேலாகவும், டீசல் விலையை 24 சதவீதத்திற்கும் மேலாகவும் உயர்த்தியது. இது எண்ணெய் இறக்குமதிச் செலவு 68 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

பல ஆப்பிரிக்க நாடுகள் இறக்குமதி செய்யப்படும் உரங்களையே நம்பியுள்ளன. இயற்கை எரிவாயு விலை உயர்வு விவசாயிகளுக்கான செலவுகளை அதிகரித்துள்ளது; இது பயிர் விளைச்சல் குறைவதற்கும், வாழ்வாதார விவசாயம் நிலவும் பகுதிகளில் நேரடிப் பஞ்சம் ஏற்படுவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அதே நேரத்தில், பல நாடுகளில் நிலவும் நாணய மதிப்பு வீழ்ச்சி, உலகளாவிய விலை உயர்வால் ஏற்படும் தாக்கத்தை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இது இறக்குமதிச் செலவுகளை மேலும் அதிகமாக்கி, உண்மையான ஊதியத்தைக் குறைப்பதுடன், நிதி நெருக்கடியில் உள்ள அரசாங்கங்களுக்கு ஏற்கனவே முடங்கிப்போயுள்ள கடன் திருப்பிச் செலுத்தும் செலவுகளை மேலும் உயர்த்துகிறது.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது தேக்கமடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி, பாரிய பணிநீக்கங்கள் மற்றும் வீங்கிய இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கும் நிதிய தன்னலக் குழுக்களின் செழிப்பிற்கும் பணம் செலுத்துவதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கினரால் நடத்தப்படும் சமூகத் தாக்குதல்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்களின் வரவு செலவுத் திட்டத்தில் மற்றொரு சுமையை ஏற்றியுள்ளது. ஜேர்மனியில், ஆயிரக்கணக்கான விமான சேவைத் தொழிலாளர்கள் வேலை, பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) தனது சிட்டிலைன் (CityLine) துணை நிறுவனத்தை உடனடியாக மூடுவதாக அறிவித்தது. ஐரோப்பிய கண்டத்தின் அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் நலத் திட்டங்களின் செலவில் தங்களின் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்காக, தங்களின் சொந்தப் போர் இயந்திரங்களில் டிரில்லியன் கணக்கான யூரோக்களை முதலீடு செய்து வருகின்றன.

அட்லாண்டிக் கடலுக்கு அப்பால், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழ் நிதி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் வேலை இழப்புகளுடன் “பிரமாண்டமான ஆட்குறைப்பு” சகாப்தத்தை அறிவித்துள்ளது.

இதற்கு நேர்மாறாக, இந்தப் போர் பெருநிறுவனங்களுக்கும் நிதிய தன்னலக்குழுக்களுக்கும் ஒரு பெரும் இலாபத்தை அளிப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆய்வின்படி, உலகின் முக்கிய எண்ணெய் பெருநிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டில் மட்டும் 230 பில்லியன் டாலருக்கும் அதிகமான கூடுதல் இலாபத்தை ஈட்டப் போகின்றன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போரானது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போர் மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ மோதலுக்கான ஆயத்தங்கள் உள்ளிட்ட மூன்றாம் உலகப் போரின் ஆரம்பக் கட்டங்களின் ஒரு முனையாகும் என்று உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வலியுறுத்தியுள்ளது. வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள ஏகாதிபத்திய சக்திகள் உலகத்தை மறுபங்கீடு செய்து மேலாதிக்கம் செலுத்துவதற்காகப் போட்டியிடும் வேளையில், நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவத்தாலும் அவர்களின் பைத்தியக்காரத்தனமான கொள்கைகளாலும் உருவாகும் உலகளாவிய பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அவர்கள் முற்றிலும் அலட்சியமாக உள்ளனர். ஆனால், இதே பேரழிவுதான் போரையும் அதன் மூல காரணமான முதலாளித்துவ இலாப முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்கான பொருள்சார் நிலைமைகளையும் உருவாக்குகிறது.

முதலாம் உலகப் போருடன் தற்போதைய சூழல் கொண்டிருக்கும் இணைப்போக்குகள் வியக்கத்தக்கவை. 1916 மற்றும் 1917-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் வெடித்த உணவுப் பொருட்கள் தொடர்பான கலவரங்கள், ஏகாதிபத்திய படுகொலைகளுக்கு எதிராக வளர்ந்து வந்த மக்கள் எதிர்ப்பின் ஆரம்ப வெளிப்பாடாக அமைந்தன. இவற்றில் மிக முக்கியமானவை, 1917-ன் தொடக்கத்தில் பெட்ரோகிராட் நகரில் ரொட்டிக்காக வெடித்த போராட்டங்களாகும். இவை ரஷ்யாவின் பிப்ரவரி புரட்சியின் தொடக்கத்தைக் குறித்தன. எட்டு மாதங்களுக்குப் பிறகு, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான போல்ஷிவிக்குகள், உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர்.

இன்று, உலகப் பொருளாதாரம் மிகவும் ஒருங்கிணைந்துவிட்டதால், போரினால் தூண்டப்பட்ட சமூகக் கொந்தளிப்பின் ஆரம்ப வெளிப்பாடுகள் அதன் முதல் வாரங்களிலேயே ஏற்கனவே வெடித்துள்ளன. ஏப்ரல் 10 முதல், இந்தியாவின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான தொழில்துறை தொழிலாளர்கள் போரினால் தூண்டப்பட்ட விலை உயர்வுக்கு எதிராக வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் தொடங்கினர். வாடகை உயர்வு, எரிபொருள் செலவு மற்றும் உணவு விலை உயர்வைச் சமாளிக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பிலிப்பைன்ஸ் மற்றும் அயர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இப்போது, 1917 இல் இருந்ததைப் போலவே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவான, ஐக்கியப்பட்ட இயக்கத்தை வளர்ப்பதற்கும், தொழிலாளர்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை வழிநடத்தக்கூடிய ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கும் போராடுவதே தீர்க்கமான பணிகளாகும்.

நெருக்கடியின் உலகளாவிய தன்மை, தேசியப் பிரிவினைகளைக் கடந்து இராணுவவாதத்தை எதிர்க்கும் ஒரு சர்வதேச அளவிலான பதிலடியைக் கோருகிறது. ஈரான், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் போரையும் அதற்குக் காரணமான திவாலாகிப்போன முதலாளித்துவ ஒழுங்கையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். இதற்கு, பொருளாதாரத்தின் அதிகார மையங்களை ஜனநாயக ரீதியிலான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், உற்பத்தி என்பது தனிப்பட்ட இலாபத்திற்காக அல்லாமல், மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைவதை உறுதிப்படுத்துவதற்கும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாகும்.

இத்தகைய சூழ்நிலைகளில், வரவிருக்கும் 2026 சர்வதேச மே தின இணையவழிப் பேரணி மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. ஏகாதிபத்தியப் போரையும் அதன் காட்டுமிராண்டித்தனமான விளைவுகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை இந்தப் பேரணி தெளிவுபடுத்தும். இதில் பங்கேற்க இன்றே பதிவு செய்யுங்கள், உங்கள் சக ஊழியர்களையும் நண்பர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவியுங்கள்.

Loading