முன்னோக்கு

2026 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உலக சோசலிச வலைத் தளம் (WSWS), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஆகியவற்றால் மே 1 அன்று நடத்தப்பட்ட 2026 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியானது, ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச சோசலிச மற்றும் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

2026 மே தின இணையவழிப் பேரணி

இந்தப் பேரணியில், ஐந்து கண்டங்களில் உள்ள 14 நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்களால் மொத்தம் 18 அறிக்கைகள் வழங்கப்பட்டன. இந்த உரைகள் 11 மொழிகளில் —ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலியன், போலந்து, போர்த்துகீசியம், ரஷ்யன், சிங்களம், ஸ்பானிஷ், தமிழ் மற்றும் துருக்கி— துணைத் தலைப்புகளுடன் ஒளிபரப்பப்பட்டது. இது, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினருக்கு எளிதில் புரியும்படி அமைந்தது. ஒவ்வொரு கண்டத்திலும் 30-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்ட ஐந்து தொகுப்புக் காட்சிகள், நிகழ்ச்சி முழுவதும் இடையிடையே ஒளிபரப்பப்பட்டன. இவை அரசியல் போராட்டத்தில் இறங்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சாட்சியங்களுடன் ICFI-இன் பகுப்பாய்வை ஒருங்கிணைத்தன.

இந்தப் பேரணி, அது முன்வைத்த அரசியல் பகுப்பாய்விலும் நோக்குநிலையிலும் முற்றிலும் தனித்துவமானதாக இருந்தது. இது ஒரு அகநிலை ரீதியான கூற்று அல்ல. இன்று உலகில் வேறெந்த அரசியல் போக்கும் உலகளாவிய நெருக்கடியை முதலாளித்துவ அமைப்பு முறையின் வரலாற்று ரீதியான மற்றும் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் வெடிப்பாக அணுகவில்லை, அல்லது அந்த நெருக்கடியைத் தீர்க்கும் திறன் கொண்ட புரட்சிகர சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடையாளம் காணவில்லை. மார்க்சியத்தின் மொழி வேறு எங்கும் பேசப்படுவதில்லை. இந்தப் பேரணி, சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அனைத்து தீர்க்கமான கேள்விகளையும் ஒரு ஒருங்கிணைந்த முறையில் ஒட்டுமொத்தமாக அணுகியது. அவ்வாறு செய்வதன் மூலம், இது ஒரு மையமான அரசியல் உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது: உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கின் அடிப்படையில் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை முன்வைப்பதில் இன்று ICFI மட்டுமே தனித்து நிற்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் வரும் நாட்களில் ஒவ்வொரு உரையையும் வெளியிடும், மேலும் எங்கள் வாசகர்கள் அவற்றைப் படிக்குமாறும், முடிந்தவரை பரந்த அளவில் பகிர்ந்து கொள்ளுமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பேரணியின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் வழங்கிய தொடக்க அறிக்கையில் முன்வைக்கப்பட்டது. “மே தினக் கொண்டாட்டம் என்பது சர்வதேச ஒற்றுமைப் பிரகடனங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது” என்று நோர்த் வலியுறுத்தினார். அது, “தற்போதைய உலக நிலைமை குறித்த ஒரு புறநிலை பகுப்பாய்விற்கான சந்தர்ப்பமாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் அத்தகைய பகுப்பாய்வின் அடிப்படையில்தான் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் வகுக்கப்படுகிறது.”

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்களன்று அதிகாலை அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளை அகற்றுகிறார்கள், ஏப்ரல் 6, 2026. [AP Photo/Francisco Seco]

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இந்தப் பேரணி முழுமையான பகுப்பாய்வை வழங்கியது. நோர்த் விளக்கியது போல, இந்தப் போர் “1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் தொடங்கிய 35 ஆண்டுகால தனித்துவமான வரலாற்றுக் கால கட்டத்தின் உச்சகட்டத்தைக் குறிக்கிறது.” இதனை “ஒரு தனித்துவமான அத்தியாயமாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதியின் கொள்கையாகவோ அல்லது இஸ்ரேலினுடைய செல்வாக்கின் (lobby) விளைவாகவோ மட்டும்” புரிந்து கொள்ள முடியாது, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் வெறியாட்டத்தில் ஒரு புதிய கட்டமாகவே இதைப் பார்க்க வேண்டும். “உலகப் போர் என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, மாறாக தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யதார்த்தம்” என்று நோர்த் வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் என்பது உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உலகளாவிய அமைப்பிற்குள் அமெரிக்காவின் பொருளாதார நிலை இடைவிடாமல் சீரழிந்து வருவதன் விளைவாகும். கடந்த தசாப்தங்களின் தொடர்ச்சியான போர்கள் —ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் முதல் லிபியா மற்றும் சிரியா வரை, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் முதல் காஸாவில் நடக்கும் இனப்படுகொலை வரை— ஒரே பயணப்பாதையின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கட்டங்களாகவே இருந்துள்ளன: அதாவது, நிதி மூலதனத்தின் நலன்களுக்காக உலகின் ஏகாதிபத்திய மறுபிரிவினையை அமல்படுத்தும் முயற்சியே இதுவாகும்.

வெளிநாடுகளில் நடக்கும் போர் என்பது ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரிலிருந்து பிரிக்க முடியாதது: சமூக சீர்திருத்தங்களைச் சீர்குலைத்தல், செல்வத்தை மேல்தட்டு மக்களுக்கு மறுபகிர்வு செய்தல் மற்றும் எதிர்ப்பை ஒடுக்க ஆளும் உயரடுக்குகளின் எதேச்சதிகார ஆட்சி மற்றும் பாசிச முறைகளை நோக்கித் திரும்புதல் ஆகியவை இதில் அடங்கும்.

நோர்த் பின்வருமாறு விளக்கியது போல:

அமெரிக்காவில் ஜனநாயக வடிவங்களின் சிதைவு, அரசியலில் பகிரங்கமான குண்டர் கும்பல் ஆட்சியின் பக்கம் திரும்புதல், அனைத்து சமூக வாழ்வையும் தன்னலக் குழுக்களின் நலன்களுக்கு அடிபணியச் செய்தல், மற்றும் இராணுவ வன்முறையின் மூலம் உலகை மீண்டும் பிளவுபடுத்த முனைவதும், ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கின் நெருக்கடியை, அதன் மிகவும் செறிவானதும் வெடிக்கும் தன்மையுடையதுமான வடிவத்தில் வெளிப்படுத்துகின்றன.

இந்த நெருக்கடியின் மிகத் தொலைநோக்கு விளைவு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்வினையாகும். இந்தப் பேரணி, 2026-ஆம் ஆண்டை நவீன வரலாற்றின் ஒரு அடிப்படைத் திருப்புமுனையாக அடையாளம் காட்டியது. நோர்த் பிரகடனம் செய்தது போல:

ஒப்பீட்டளவில் சமூக சமநிலையாக இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியும். இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட புறநிலை நிலைமைகளான, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ அமைப்பின் சிதைவு, பழைய ஆட்சி முறைகளைத் தொடர்வதில் சாத்தியமின்மை, புரட்சிகர மாற்றம், அல்லது காட்டுமிராண்டித்தனத்திற்கு பலியாவது ஆகியன, உறுதிப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், தீவிரமடைந்தும் உள்ளன. தன்னலக்குழு ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் அதேவேளை, போரா அல்லது சமாதானமா, சர்வாதிகாரமா அல்லது ஜனநாயகமா, சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற, இந்தக் காலகட்டத்தின் அடிப்படைக் கேள்விகளை, நேரடியாக வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்திருக்குமளவுக்கு, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு, ஒரு உலகளாவிய சக்தியாக உருவெடுத்திருப்பதை 2026ஆம் ஆண்டின் முதல் மாதங்கள் குறிக்கின்றன.

இதுவே தற்போதைய காலகட்டத்தின் வரையறுக்கும் யதார்த்தமாகும். சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட எழுச்சியில் வேரூன்றிய ஒரு புரட்சிகரக் கோட்பாட்டை இந்தப் பேரணி முன்னெடுத்தது. பில்லியன்கணக்கில் எண்ணிக்கையில் உள்ளதும், உலகளாவிய உற்பத்திச் செயல்முறைகளால் ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதுமான இந்த வர்க்கம், இப்போது தன்னை ஒரு ஒற்றைப் புறநிலை சமூக சக்தியாக அங்கீகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது.

மினியாபோலிஸ் நகரின் மையப்பகுதியில் நடந்த 100,000 பேர் பங்கேற்ற ICE-எதிர்ப்புப் பேரணியின் ஒரு பகுதி. ஜனவரி 23, 2026 [Photo: @maxnesterak]

நோர்த் பின்னர் தனது அறிக்கையில் புரட்சிகரத் தலைமை பற்றிய கேள்விக்குத் திரும்பினார், புறநிலை நிலைமைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தயார்நிலைக்கும் இடையிலான இடைவெளியைக் குறிப்பிட்டார்:

அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் இன்னும் பரந்துபட்ட வெகுஜனக் கட்சிகளாக உருவாகவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது ஒரு தவறு அல்ல, மாறாக, பழைய சமூக ஜனநாயக, ஸ்டாலினிச, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க முடிந்த ஒரு நீண்ட கால அரசியல் பிற்போக்கின் வெளிப்பாடாகும். ஆனால், ட்ரொட்ஸ்கி கூறியது போல், “வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட மிகவும் பலம் வாய்ந்தவை.” முதலாளித்துவ நெருக்கடி உக்கிரமடைகின்றமை, வெகுஜனங்களைத் தீவிரமயப்படுத்துகிறது; அத்துடன் இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரமாண்டமான வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கும்

முடிவில் நோர்த் பின்வருமாறு வலியுறுத்தினார்:

இப்போது எழும் கேள்வி, போராடுவதா இல்லையா என்பதல்ல, மாறாக, எப்படிப் போராடுவது, எந்தப் பதாகையின் கீழ் போராடுவது என்பதே ஆகும். இந்தக் கேள்விகளுக்கான எங்கள் பதில்: அதிகாரத்திற்காக சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் நடத்தும் நனவுப்பூர்வமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமே முன்னேறிச் செல்வதற்கான பாதையாகும். அதன் பதாகை நான்காம் அகிலத்தினுடையதாகும். ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை உருவாக்குங்கள். சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுங்கள். உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறுங்கள்! என்று நாங்கள் கூறுகிறோம்.

அதைத் தொடர்ந்து வந்த பேச்சாளர்களின் அறிக்கைகள் உலக நெருக்கடியின் துல்லியமான தேசிய மற்றும் பிராந்திய கண்ணோட்டத்தின் மூலம் இந்தப் பகுப்பாய்வை உறுதிப்படுத்தின. சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியச் செயலாளர் ஜோசப் கிஷோர், ட்ரம்ப் நிர்வாகத்தை “ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒத்துப்போகாத, முன்னெப்போதும் இல்லாத அளவிலான சமூக சமத்துவமின்மையின் விளைவான ஒரு தன்னலக்குழுவின் அரசாங்கம்” என்று வர்ணித்தார். ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தேசியச் செயலாளர் கிறிஸ்டோப் வான்ரையர், பேர்லினில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே இருந்து பேசுகையில், “ஜேர்மனி நீண்ட காலமாக மீண்டும் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளது” என்று வெளிப்படையாகக் கூறினார்; ஹிட்லருக்குப் பிறகு ஜேர்மனியின் மிகப்பெரிய மீள்-ஆயுதமயமாக்கல் பற்றிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ்-இன் அறிவிப்பை அவர் ஆவணப்படுத்தினார்.

பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் தலைவரான தோமாஸ் காஸ்தான்ஹெய்ரா, இலத்தீன் அமெரிக்காவில் நடந்த ஏகாதிபத்தியத் தாக்குதல்களை — ஜனாதிபதி மதுரோவின் கடத்தல், கியூபாவிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை மற்றும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் 180க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றை — பகுப்பாய்வு செய்து, ஏகாதிபத்திய எழுச்சியின் முன் முதலாளித்துவ தேசியவாதத்தின் ஒவ்வொரு வடிவமும் திவாலாகிவிட்டதை அம்பலப்படுத்தினார். ICFI-இன் புதிதாக நிறுவப்பட்ட துருக்கிய பிரிவின் தலைவர் உலாஸ் செவின்ச், துருக்கியில் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி குறித்து அறிக்கை அளித்தார். டோருக் (Doruk) சுரங்கத் தொழிலாளர்களின் அசாதாரணமான 190 கிலோமீட்டர் நடை பயணத்தையும், அவர்களின் தலைவர்களை எர்டோகன் ஆட்சியினர் கைது செய்ததையும் அவர் ஆவணப்படுத்தினார். தீபால் ஜெயசேகர மற்றும் டிலக்ஸன் மகாலிங்கம் ஆகியோர் சிங்களம் மற்றும் தமிழில் கூட்டாக உரையாற்றினர் — இது, இலங்கை ஆளும் வர்க்கம் கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களாகப் பயன்படுத்தி வரும் இனப் பிரிவினைகளுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட கண்டனமாகும் — மேலும், அமெரிக்க-இஸ்ரேலியப் போருடன் ஜே.வி.பி / என்.பி.பி அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும், தெற்காசியா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலையும் அவர்கள் அம்பலப்படுத்தினர்.

தோமஸ் ஸ்கிரிப்ஸ் (பிரிட்டன்), அலெக்ஸ் லான்டியர் (பிரான்ஸ்), ஷெரில் கிரிஸ்ப் (ஆஸ்திரேலியா), ரொம் பீட்டர்ஸ் (நியூசிலாந்து) மற்றும் கீத் ஜோன்ஸ் (கனடா) ஆகியோரின் அறிக்கைகள், ஈரான் போரிலும் சிக்கன நடவடிக்கை, மீள்-ஆயுதமயமாக்கல் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய உந்துதலில் ஒவ்வொரு தேசிய ஆளும் வர்க்கத்தின் உடந்தையை ஆவணப்படுத்தின—ஈரான் போரில் மக்ரோன் நிர்வாகத்தின் நேரடி இராணுவ உடந்தை மற்றும் 2014 முதல் மத்திய தரைக்கடலில் 35,000-க்கும் அதிகமான அகதிகள் இறந்ததை அலெக்ஸ் லான்டியர் அம்பலப்படுத்தியதும், உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீட்டில் கனடாவின் கார்னி அரசாங்கம் “இரையாக அல்ல, வேட்டையாடுபவராக” இருக்க வேண்டும் என்ற அதன் உறுதியை ஜோன்ஸ் குறிப்பிட்டதும் அடங்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பேசியவர்கள் போலி-இடது அமைப்புகளைப் பற்றிய அத்தியாவசிய அரசியல் முடிவை வலியுறுத்தினர் — அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) முதல், திட்டமிடப்பட்ட “அணிசேராமை” கொள்கைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் இலங்கையின் முன்னிலை சோசலிசக் கட்சி (FSP), பிரான்சில் மிலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி, மற்றும் கனடாவில் அவி லூயிஸின் தலைமையிலான NDP-யின் சந்தர்ப்பவாத மறுபெயரிடல் வரை, இவர்களின் தேசிய உடைகள் எவ்வளவு மாறுபட்டிருந்தாலும், இவர்கள் தொழிலாளர் இயக்கத்திற்குள் ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக அதே அத்தியாவசிய சேவையைச் செய்கிறார்கள்.

ஜோன் ரீட் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் புத்தகத்தின் பழைய சோவியத் பதிப்பில் லியோன் ட்ரொட்ஸ்கியின் படத்துடன் போக்டன் சிரோட்டியுக், ஏப்ரல் 2023.

இந்தப் பேரணியின் ஒரு முக்கிய அம்சம், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் 26 வயது தலைவரான தோழர் பொக்டான் சிரோடியுக்கின் பாதுகாப்பு குறித்ததாக இருந்தது. உக்ரேனிய அரசால் இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் மீது, 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கக்கூடிய “தேசத்துரோக” வழக்குகள் பதியப்பட்டுள்ளன; இவருக்கு எதிரான “ஆதாரங்கள்” என்று கூறப்படுபவை, WSWS கட்டுரைகளின் ஒன்பது தொகுதிகள், ICFI மே தினப் பேச்சுகள் மற்றும் ட்ரொட்ஸ்கியின் ஒரு கட்டுரை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றன. டமினோ டிரைசாம் (IYSSE ஜேர்மனி) மற்றும் ஆண்ட்ரி ரிட்ஸ்கி (YGBL) ஆகியோரின் அறிக்கைகள், பொக்டானின் துன்புறுத்தலில் பிரதிபலிக்கும் சோசலிச எதிர்ப்பிற்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலின் மீது கவனம் செலுத்தின. அதேவேளையில், டேவிட் நோர்த், வில் லேமன், உலாஸ் செவிஞ்ச் மற்றும் பிற பேச்சாளர்கள், இதர அரசியல் கைதிகளுடன் சேர்த்து, பொக்டானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) சங்கத் தலைவருக்கான வேட்பாளர் வில் லெஹ்மன், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு நேரடியாக உரையாற்றினார். “உலகத் தொழிலாளர்களாகிய நாம் ஏற்கனவே உலகளாவிய உற்பத்தி சக்திகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம். நாம் செய்ய வேண்டியது, இப்போதே, இன்றிலிருந்து தொடங்கி, ஒரு நனவான போராட்ட சக்தியாக ஒன்றிணைவதாகும்.” “நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் சேவை செய்யும் தொழிற்சங்க அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமாக, தொழிலாளர்கள் தமது சொந்த அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதுதான் இதற்கு பதில்” என்று அவர் வலியுறுத்தினார். போர்ட் ரூஜ் (Ford Rouge) ஆலையின் ஐந்தாம் தலைமுறைத் தொழிலாளரான மார்டெஸ் குரட்ச்பீல்ட், லெஹ்மனுடன் இணைந்து “கிளர்ச்சியாளர் பட்டியலில்” வரவிருக்கும் UAW அரசியலமைப்பு மாநாட்டிற்கான பிரதிநிதியாகப் போட்டியிடுபவர், ஒவ்வொரு பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கான அழைப்பை முன்வைத்தார்.

தனது அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியக் குழு உறுப்பினரான எவன் பிளேக், செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கு குறித்துப் பேசியதோடு, சோசலிசம் AI-இன் (Socialism AI) கணிசமான வளர்ச்சியை அறிவித்தார்.

எவன் பிளேக் பின்வருமாறு விளக்கினார்:

சோசலிசம் AI-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் முதல்முறையாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கைகளில் மார்க்சிசத்தின் முழு மரபையும் —மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் மற்றும் பிளெக்கனோவ் ஆகியோரின் படைப்புகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால தினசரி பகுப்பாய்வுகள்— நிகழ் நேரத்தில், உரையாடல் வடிவில், எந்த மொழியிலும், எந்த நேரத்திலும் அணுகக்கூடியதாக மாற்றும் திறன் கொண்ட ஒரு கருவியை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கைகளில் நாங்கள் வழங்கியுள்ளோம்.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையில், அதன் கட்டமைப்பு கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரசியல், தத்துவார்த்த மற்றும் வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சோசலிசம் AI இப்போது பண்புரீதியாக அதிக ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது என்றும் பிளேக் அறிவித்தார்.

இந்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது. சோசலிசப் புரட்சிக்கான புறநிலை நிலைமைகள் உலகளவில் முதிர்ச்சியடைந்து வருகின்றன, ஆனால் அந்த நிலைமைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவுக்கும் இடையிலான இடைவெளியே மிகவும் தீர்க்கமான தடையாக உள்ளது. இந்த இடைவெளி, ஸ்டாலினிச, சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோகங்களால் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டு, முதலாளித்துவ ஊடகங்களின் தணிக்கை மற்றும் பொய்மைப்படுத்தலால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சோசலிசம் AI என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முறையான அரசியல் கல்விக்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் இதுவரை உருவாக்கியுள்ள மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் தினசரி விரிவாக்கத்துடன் சேர்ந்து இதன் மேலதிக வளர்ச்சியும் வரவிருக்கும் காலத்தின் மையப் பணிகளில் ஒன்றாக இருக்கும்.

பேரணியில் வழங்கப்பட்ட பகுப்பாய்வுகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஈரானுக்கு எதிரான போர் உலகப் பொருளாதாரத்தை ஆழமாகச் சீர்குலைத்து வருகிறது —எரிசக்தி மற்றும் உணவு விலைகளை உயர்த்தி, விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, ஒவ்வொரு நாட்டிலும் சமூக நெருக்கடியை ஆழப்படுத்துகிறது—. பேரணி நடந்த மறுநாள், ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தி, 17,000 வேலைகளைக் குறைக்கத் தொடங்கியது. ஈரான் போரினால் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த ஜெட் விமானங்களின் எரிபொருள் விலைகளின் நேரடி விளைவாக, கடந்த 25 ஆண்டுகளில் ஒரு பெரிய அமெரிக்க விமான நிறுவனம் கலைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

பேரணி நடந்த அதே நாளில், ட்ரம்ப் தனது “தெரிவுகளை” மாஃபியா கும்பலின் அருவருப்பான மொழியில் முன்வைத்தார்: “போய் அவர்களைத் துவம்சம் செய்து, அவர்களை என்றென்றைக்குமாக ஒழித்துக்கட்டுங்கள்,” அல்லது “ஒரு உடன்பாடு செய்துகொள்ளுங்கள்” — பின்னர், “வெளிப்படையாகச் சொல்வதானால், ஒருவேளை நாம் எந்த உடன்பாடும் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றும் கூறினார். இந்த நிர்வாகம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கும் ஒரு ஆட்சியாகும். கொலைகார வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளைத் தீர்க்க முடியும் என்று ட்ரம்ப் நம்புகிறார். இது தோல்வியடையும். பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மீது ஈரான் நடத்திய குறிப்பிடத்தக்க பதிலடித் தாக்குதல்கள் குறித்த அறிக்கைகள், தனது இலக்குகளை அடையாத ஒரு போருக்குப் பிறகு எவ்வாறு தொடர்வது என்பது குறித்து அரசு எந்திரத்திற்குள் மோதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தப் பேரணியைப் பற்றிய ஆய்வு —அதன் பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டம் பற்றியது— வெறுமனே அறிவுசார் ஆர்வம் சார்ந்த விஷயம் அல்ல. இது மார்க்சிசக் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் புறநிலை நெருக்கடியின் உண்மையான வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய ஆய்வாகும்: போர், வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி, முதலாளித்துவ அரசியல் வடிவங்களின் முறிவு மற்றும் சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளின் முதிர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆய்வாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வெளியே, விரிவடைந்து வரும் நெருக்கடி குறித்து ஒப்பிடத்தக்க பகுப்பாய்வோ, புரட்சிகர முன்னோக்கோ, மார்க்சிய மதிப்பீடோ இல்லை. இந்தப் பேரணியானது, சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் ஒரு சுயாதீனமான சமூக சக்தியாக உருவெடுத்துள்ளதன் வெளிப்பாடாகவும், அந்தச் சக்திக்கு ஒரு வேலைத்திட்டம், ஒரு மூலோபாயம் மற்றும் மற்றும் தலைமையுடன் ஆயுதபாணியாக்குவதற்கான நனவான முயற்சியாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இது சுய-பாராட்டிற்கான விஷயம் அல்ல. இது அவசரமான பணிகளைச் சுட்டிக்காட்டுகிறது. உலக நெருக்கடியின் முற்றிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தயார்நிலைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது. வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பை ஒரு நனவான புரட்சிகர இயக்கமாக மாற்றுவதற்குத் தேவையான அரசியல் நனவு, அமைப்பு மற்றும் தலைமை ஆகியவற்றை நிகழ்வுகள் கோரும் வேகத்தில் வளர்த்தெடுக்க முடியுமா என்பதுதான் தீர்க்கமான கேள்வியாகும்.

புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதே வரலாறு எமக்கு முன்வைக்கும் பணியாகும். சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தை கட்டியெழுப்பும் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற ICFI போராடுகிறது. மே தினப் பேரணியை பார்த்த ஒவ்வொருவரும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்—காணொளிகளும் எழுத்துப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்படும்போது அவற்றைப் பகிருங்கள், சக தொழிலாளர்கள், வகுப்புத் தோழர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புங்கள், மேலும் சமூக ஊடகங்களில் பேரணியைப் பதிவிடுங்கள். பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கூட்டங்கள் மற்றும் அரசியல் கலந்துரையாடல்களுக்கு இந்தப் பேரணியை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தேவையான அரசியல் முடிவுகளை எடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணையுங்கள், மேலும் போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்து ஒரு கட்சி உறுப்பினருடன் பேச எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Loading