முன்னோக்கு

ஹோர்முஸ் நீரிணையில் போர்க் கப்பல்களை நிறுத்தி ஈரான் மீதான போரை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஈரானின் பந்தர் அப்பாஸ் கடற்கரைக்கு அருகே, ஹோர்முஸ் நீரிணையில், ஒரு சிறிய மோட்டார் படகு கடந்து செல்ல, மொத்த சரக்குக் கப்பல்கள் மற்றும் பொது சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட பல சரக்குக் கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்கின்றன. மே 4, 2026 திங்கட்கிழமை. [AP Photo/Amirhosein Khorgooi/ISNA ]

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களை அமெரிக்க இராணுவம் “வழிநடத்திச் செல்லும்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது, இந்தக் குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரின் ஒரு பெரும் விரிவாக்கத்தை குறிக்கிறது. உலக சோசலிச வலைத் தளம், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்றும், உலகம் முழுவதையும் பேரழிவிற்குள் தள்ளும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் நிபந்தனையின்றி முடிவுக்கு வர வேண்டும் என்றும் கோருவதோடு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களை உடனடியாக அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறது.

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் கூற்றுப்படி, “சுதந்திரமான திட்டத்தில்” (Project Freedom) வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாசகாரிக் கப்பல்கள், 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சுமார் 15,000ம் இராணுவத்தினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ட்ரம்பின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆறு வாரங்களுக்கும் மேலாக ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கொடூரமான குண்டுவீச்சுக்கு ஏப்ரல் 7 அன்று முற்றுப்புள்ளி வைத்த அந்த நிலையற்ற போர்நிறுத்தம் சிதையத் தொடங்கியது.

அமெரிக்கப் படைகள் ஈரானின் ஏழு சிறிய படகுகளை அழித்ததாக ட்ரம்ப் கூறிய நிலையில், திங்களன்று ஈரானிலிருந்து தனது பகுதியை நோக்கி 15 ட்ரோன்களும் நான்கு ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களை நோக்கி “எச்சரிக்கை வேட்டுக்களை” தீர்த்ததாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் போர்க் கப்பல்களுடன் எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அழைத்துச் செல்வதன் மூலம் எளிதாக “பாதுகாத்துவிட” முடியாது. ஈரான் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் சிறிய கடற்படைக் கப்பல்களைக் கொண்டு போக்குவரத்தைச் சீர்குலைக்கும் திறனைக் கொண்டிருக்கும் ஒரு குறுகிய, நெருக்கடியான பகுதியில், ஆயிரக்கணக்கான அமெரிக்க மாலுமிகள் மற்றும் விமானப் படையினர்களின் உயிர்களை ட்ரம்ப் பொறுப்பற்ற முறையில் ஆபத்தில் ஆழ்த்தி, அவர்களைத் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறார். இதன் நோக்கம் “வர்த்தகத்தைப் பாதுகாப்பது” அல்ல, மாறாக ஒரு ஆத்திரமூட்டலுக்கான சூழலை உருவாக்குவதே ஆகும். எந்தவொரு மோதலும் ஏகாதிபத்தியக் காட்டுமிராண்டித்தனத்தின் புதிய கட்டத்திற்கான ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

போரின் இலக்குகளை அடைவதில் ஏற்பட்ட தோல்வியிலிருந்தே ட்ரம்பின் இந்தத் தீவிரப்படுத்துதல் நேரடியாகப் பிறக்கிறது. ஈரானை விரைவாக அடிபணிய வைக்க முடியும் என்றும், தலைமையை அழிக்கும் தாக்குதல்கள் மற்றும் பாரிய குண்டுவீச்சுக்களின் கீழ் அதன் அரசு கட்டமைப்புகள் சிதையும் என்றும், பெரிய குழப்பங்களைத் தூண்டாமல் பாரசீக வளைகுடா மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முடியும் என்றும் வாஷிங்டன் அனுமானித்து இந்தப் போரைத் தொடங்கியது. இருப்பினும், ஈரான் இன்னும் அடிபணியவில்லை, அந்த நீரிணை தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஒரு குண்டர் கும்பல் தலைவனின் மொழியைப் பயன்படுத்திய ட்ரம்ப், ஈரான் “ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை” என்றால், அமெரிக்கா “அங்கேயே சென்று அவர்களைச் சிதைத்து நிரந்தரமாக முடித்துவிடும்” என்று அறிவித்தார். இத்தகைய அறிக்கைகள் தற்போது நடைபெற்று வரும் தீவிரத்தன்மையின் தர்க்கத்தை வரையறுக்கின்றன: அதாவது இது ஒரு முழுமையான அழித்தொழிப்புப் போராகும். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கடிப் பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக ஒரு சட்டவிரோதப் போரைத் தொடுக்க முடிவு செய்யப்பட்டவுடன், போரைத் தீவிரப்படுத்துவதற்கான அழுத்தம் தானாகவே ஒரு உத்வேகத்தைப் பெறுகிறது.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட எதையும் நிராகரிக்க முடியாது. அவற்றை நிலைநிறுத்துவது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாரிய படுகொலைக்கு வழிவகுக்கும். இது பாரசீக வளைகுடா முழுவதும் ஒரு கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இது காற்றையும் நீரையும் நஞ்சாக்கி, கடல்நீரைக் குடிநீராக்குவதை நம்பி வாழும் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை மாசுபடுத்தவும் செய்யும். இது உலகளாவிய விளைவுகளைத் தூண்டிவிடும், ஒரு பரந்த போரைத் தூண்டி, உலக வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைச் சிதைத்து, மனிதகுலத்தை ஒரு பெரும் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளும்.

இது வெறும் “தவறான கொள்கை” முடிவுகளின் விளைவோ அல்லது ஒரு நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையோ அல்ல. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளிலேயே வேரூன்றியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக, அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கத்தின் நீண்டகாலச் சரிவை இராணுவ வலிமையின் மூலம் ஈடுகட்டுவதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையத் திட்டமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், ஆளும் வர்க்கத்திற்கு இராணுவவாதம் என்பது பெருகிய முறையில் அதன் இருப்பைப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக மாறுகிறது: பின்வாங்குவது அதன் உலகளாவிய அதிகாரத்தின் நம்பகத்தன்மையை அச்சுறுத்துகிறது, அதே நேரத்தில் தீவிரப்படுத்துவது பேரழிவை அழைக்கிறது.

இந்தப் போர் தீவிரமடைவதன் விளைவுகள், முதலில் ஈரான், மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதே கடுமையாக விழுகின்றன. மதிப்பீடுகளின்படி இந்தப் போர் ஏற்கனவே கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டது, ஆனால், எந்தவொரு சமூக நலத் தேவை என்று வரும்போது நிர்வாகம் தன்னிடம் நிதி இல்லை எனக் கைவிரிக்கிறது. ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல்களுக்கு வரம்பற்ற நிதியைக் கோரும் அதே அரசாங்கத்தால், போரினால் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததால் 17,000 தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியைத் தடுக்க, அதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஒதுக்க முடியவில்லை.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபடுவது, கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு 110- டாலர்களுக்கு மேல் உயர்த்தியுள்ளதோடு, ஏற்கனவே பலவீனமாக உள்ள உலகப் பொருளாதாரத்தில் ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைத்து ஆயிரக்கணக்கான விமானப் பயணங்களை ரத்து செய்து வருகின்றன. இது விமானிகள், விமானப் பணிப்பெண்கள், தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு நேரடி ஆட்குறைப்பு, வேலைநேரக் குறைப்பு மற்றும் தீவிரமான சுரண்டலுக்கு இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கடற்படையினர் தாக்குதல் அபாயத்திற்கு மத்தியில் வளைகுடா பகுதியில் சிக்கியுள்ளனர்.

அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் ஒவ்வொரு விநியோகச் சங்கிலியிலும் எதிரொலிக்கின்றன — இவை போக்குவரத்து மற்றும் இறக்குமதி செலவுகளை உயர்த்தி, பணவீக்கத்தை வேகப்படுத்தி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளின் விலையை அதிகரிக்கின்றன. இந்த நெருக்கடி மிகவும் உண்மையான அர்த்தத்தில் உலகளாவியது: இந்தப் பிராந்தியத்தின் வழியாக முக்கிய உணவுப் பொருட்கள் மற்றும் உரக் கலவைகள் கொண்டு செல்லப்படுவதில் ஏற்படும் தடைகள், ஏற்கனவே மக்களை பெருமளவிலான வறுமைக்கு இட்டுச் செல்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் நலன்களுக்காக நடத்தப்படும் போருக்கான விலையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஏழ்மையான நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு, இது பசி மற்றும் பஞ்சத்தின் அச்சுறுத்தலை ஆழமாக்குகிறது.

ஆளும் வர்க்கத்திற்குள் கசப்பான மோதல்கள் இருந்தாலும், இவை முற்றிலும் தந்திரோபாயங்கள் தொடர்பான கேள்விகள் மட்டுமே. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கு மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது என்ற இலக்கில் அவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் பேசும் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு, கடந்த மாதம், “திரு. ட்ரம்பின் விமர்சகர்கள் உட்பட எந்தவொரு அமெரிக்கரும், இந்த நாடு தோல்வியடைய வேண்டும் என்று விரும்புவது தவறு” என்று அறிவித்தது.

ஏகாதிபத்தியக் கொள்கையைச் செயல்படுத்துவதில் ஜனநாயகக் கட்சி ஒரு பங்காளியாகவே செயல்படுகிறது. பெர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியின் “இடதுசாரி” என்று அழைக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்களும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இதில் அடங்கும். தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் எதிர்ப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஈரான் மீதான போரைப் பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர்த்து தொழிற்சங்க அமைப்புகள் “மே தின வலிமை” நிகழ்வுகளை நடத்தின.

தொழிலாள வர்க்கத்தின் தலையீடே தீர்மானிக்கும் காரணியாகும். தொழிலாளர்களின் சுயாதீனமான அணிதிரட்டலும், ஒரு வர்க்கமாகச் செயல்பட்டு எல்லைகளைக் கடந்து ஒன்றுபடுவதும் மட்டுமே போர் முன்னெடுப்பைத் தடுத்து, பரந்த பேரழிவை நோக்கி வீழ்வதைத் தடுத்து நிறுத்த முடியும். அத்தோடு, வெளிநாடுகளில் இராணுவவாதத்துடன் சேர்ந்து உள்நாட்டில் அடக்குமுறை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுடன் வரும் சமூக எதிர்ப் புரட்சியை எதிர்க்கவும் முடியும்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் ஏற்கனவே இந்தப் போரினாலும் அதன் விளைவுகளினாலும் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய WSWSன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், 2026-ன் முதல் காலாண்டில் மட்டும் எட்டு ஐரோப்பிய நாடுகளில் சுமார் 458 வேலைநிறுத்தங்கள் பதிவாகியுள்ளன என்றும், இது 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வு என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவில், ட்ரம்ப் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு எதிராக மார்ச் மாதம் நடைபெற்ற “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

“1914-இல் முதலாம் உலகப் போரை உருவாக்கிய அதே முரண்பாடுகள்தான், 1917-இல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் சென்றன” என்று நோர்த் விளக்கினார். “அதே வரலாற்று இயங்கியல் இன்றும் செயல்பட்டு வருகிறது. ஏகாதிபத்திய வன்முறை வெடிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் வெடிப்பிற்கும் களம் அமைத்து வருகிறது.”

உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களைக் கீழ்க்கண்டவற்றை கோருமாறு அழைப்பு விடுக்கிறது: ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து! மத்திய கிழக்கிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளையும் திரும்பப் பெறு. போர் இலாபங்களைக் கையகப்படுத்தி, வேலைவாய்ப்புகள், ஊதியங்கள், சலுகைகள் மற்றும் சமூகத் திட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்க அவற்றைப் பயன்படுத்து. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம். போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவோம் — இது சர்வதேச அளவிலும், சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களிலும் சமூகங்களிலும் கூட்டங்களை நடத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என்ன நடக்கிறது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதியுங்கள். ஜனநாயகக் கட்சியிலிருந்தும், முதலாளித்துவ அரசு நிறுவனங்களுக்கு அடிபணிந்து செயல்படும் அனைத்து முயற்சிகளிலிருந்தும் விலகி இருங்கள். சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்பி, சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

இந்தக் கோரிக்கைகளை ஒரு பரந்த முன்னோக்கால் மட்டுமே நிறைவேற்ற முடியும் — அதாவது, போர் என்பது தற்செயலான ஒன்றல்ல, மாறாக அது முதலாளித்துவத்தின் ஒரு விளைபொருள் என்பதை அங்கீகரிப்பதே இந்த முன்னோக்காகும். போருக்கு எதிரான போராட்டமானது சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது: அதாவது இலாபத்தை விட மனிதத் தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கமைப்பதும், சமூகத்தின் பரந்த வளங்களின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவுவதும் ஆகும்.

Loading