முன்னோக்கு

உலகளாவிய போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் ஜி7  ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இடமிருந்து, யூரோகுழுவின் (Eurogroup) தலைவர் கிரியாகோஸ் பியராகாகிஸ், ஜேர்மன் துணை அதிபரும் கூட்டாட்சி நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பீல், அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட், பிரெஞ்சு நிதி அமைச்சர் ரோலண்ட் லெஸ்குர், பிரிட்டனின் நிதித்துறை அதிபர் ரேச்சல் ரீவ்ஸ், கனடாவின் நிதி மற்றும் தேசிய வருவாய் அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பைன், ஜப்பானின் நிதி அமைச்சர் சட்சுகி கடாயாமா, இத்தாலிய நிதி அமைச்சர் ஜியான்கார்லோ ஜியோர்ஜெட்டி, பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறன், அமலாக்கம் மற்றும் எளிமைப்படுத்துதலுக்கான ஐரோப்பிய ஆணையர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் ஆகியோர் திங்கட்கிழமை, மே 18, 2026 அன்று பாரிஸில் நடைபெற்ற ஜி7 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒரு குடும்பப் புகைப்படத்திற்காகக் போஸ் கொடுக்கின்றனர். [AP Photo/Thibault Camus]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நாம் அவர்களை இன்னும் ஒரு முறை தாக்க வேண்டியிருக்கலாம்” என்று பிரகடனம் செய்து, செவ்வாய்க்கிழமை அன்று ஈரானை மற்றொரு இராணுவத் தாக்குதலைக் கொண்டு அச்சுறுத்தினார். ஈரான் மீதான குண்டுவீச்சை மீண்டும் தொடங்குவது தற்காலிகமாக “நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக”க் கூறி சில மணி நேரங்களே ஆகியிருந்த நிலையில், அமெரிக்க இராணுவம் “தயார் நிலையில் உள்ளது” என்றும், அடுத்த வார தொடக்கத்தில் தாக்குதல் நடத்துவதா என்பது குறித்து தான் ஒரு முடிவை எடுக்க முடியும் என்றும் ட்ரம்ப் உறுதியுடன் கூறினார்.

ட்ரம்பின் குண்டர்தனமான அச்சுறுத்தல்கள், உலக ஏகாதிபத்தியத்தின் உண்மையான குரலாகும். ஏற்கனவே நன்கு முன்னேறியுள்ள பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உலக மறுபங்கீட்டின் ஒரு பகுதியாக, ஈரானின் மீதும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மீதும் காலனித்துவச் சங்கிலிகளைப் பூட்டுவதற்கு உலக ஏகாதிபத்தியம் உறுதியாக உள்ளது. பாரிஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு ஜி7 நிதி அமைச்சர்களால் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட இறுதி உத்தியோகபூர்வ அறிக்கை இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது; குற்றகரமான அமெரிக்க/இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போர் உருவாக்கிய பொருளாதார பேரழிவிற்கு, அந்தப் போரினால் பாதிக்கப்பட்டவரையே [ஈரானை] குற்றம் சாட்டும் ஒரு அறிக்கையில் அனைத்து உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும், “ஹார்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு விரைவாகத் திரும்புவதும், மோதலுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண்பதும் இன்றியமையாதது” என்று வலியுறுத்தினர். கடந்த பிப்ரவரி 28 அன்று பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருந்த போதே ஈரான் மீது தொடுக்கப்பட்ட தூண்டப்படாத கொடூரத் தாக்குதலைப் பற்றியோ, அல்லது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஈரானிய சிவிலியன்களைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாமல், வழக்கமான ஏகாதிபத்திய இரட்டை வேடத்தைக் காட்டிய ஜி7 நிதி அமைச்சர்கள், தங்களின் பிரதான உத்தியோகபூர்வ அறிக்கையை, “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தொடர்ச்சியான மிருகத்தனமான போரையும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளையும் கண்டனம் செய்வதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்” என்ற கூற்றுடன் நயவஞ்சகமாகத் தொடங்கினர்.

ஏகாதிபத்தியவாதிகளின் அறச்சீற்றத்தில் காணப்படும் இந்த அப்பட்டமான முரண்பாடானது, அவர்கள் பின்தொடரும் உலகளாவிய கொள்ளையடிக்கும் நலன்களுடன் எப்பொழுதும் கச்சிதமாக ஒத்துப்போகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவாக இருக்கும் தனது எதிரிகளை ஓரங்கட்டுவதன் மூலம், எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு உந்துதலின் பகுதியாக, 1979 புரட்சியைத் தொடர்ந்து ஈரானின் மீது தான் இழந்த ஆதிக்கத்தை மீண்டும் பெற உறுதியாக உள்ளது. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இப்போரை ஆதரித்துள்ளனர்; ஏனெனில், காலனித்துவத்துடன் தொடர்புடைய காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் கொள்ளைப் பொருட்களில் தங்களின் சொந்தப் பங்கைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான தங்களின் போருக்கு அவர்களுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது.

“சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான” “கூட்டு முயற்சிகளில்” ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த அரசாங்கங்கள், உண்மையில் வேகமாக தீவிரமடைந்து வரும் ஒரு மூன்றாவது உலகப் போரின் முதன்மைச் சூத்திரதாரிகள் ஆவர். உலகினுடைய இரு பெரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு உச்சிமாநாடு என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒன்றில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக ட்ரம்ப் கடந்த வாரம் பெய்ஜிங்கிற்குப் பயணம் செய்தார். ஆனால், இந்த இராஜதந்திரச் சம்பிரதாயங்களுக்குப் பின்னால், ட்ரம்ப் யாருக்காகப் பேசுகிறாரோ அந்த அமெரிக்க  நிதி  தன்னலக்குழு, அமெரிக்காவின் இழப்பில் சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதோடு, சீனாவுடனான போருக்குப் பகிரங்கமாகத் தயாராகி வருகிறது.

பெய்ஜிங்கில் எந்தவொரு கணிசமான உடன்பாட்டையும் எட்டுவதில் ட்ரம்ப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் மிக முக்கியமான எண்ணெய் விநியோக நாடுகளில் ஒன்றான ஈரானை அழித்தொழிப்பதற்கான ட்ரம்பின் மற்றொரு சுற்று அச்சுறுத்தல்கள் வந்துள்ளன; இது ஒன்றும் தற்செயலானது அல்ல.

ட்ரம்பின் ஒழுங்கற்ற சீற்றங்களும், இராணுவவாத வன்முறையின் அடிக்கடி நிகழும் வெடிப்புகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலவீனத்தின் அறிகுறிகளேயன்றி, அதன் பலத்தின் அறிகுறிகள் அல்ல. கடந்த 35 ஆண்டுகளாக, வாஷிங்டன் அடுத்தடுத்து வந்த நிர்வாகங்களின் கீழ் கொடூரமான இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது செங்குத்தான பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்ய முயன்று வருகிறது. இந்தத் தடையற்ற தொடர்ச்சியான போர்கள், சமூகப் பதட்டங்களை முறிவுப் புள்ளிக்குத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, மோசமடைந்து வரும் உலக முதலாளித்துவச் சரிவின் நிலைமைகளின் கீழ் சந்தைகள், மூலப்பொருட்கள், மலிவான உழைப்பு மற்றும் மூலோபாய செல்வாக்கைப் பாதுகாப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் போட்டியிடும் போது அவர்களுக்கு இடையிலான விரோதப் போக்குகளைக் கூர்மையாக்குவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

அமெரிக்க அல்லது ஐரோப்பிய வகை ஏகாதிபத்தியமாக இருந்தாலும் சரி, போர்களை மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிர, இந்த நெருக்கடியிலிருந்து விடுபட வேறு எந்த வழியையும் அதனால் வழங்க முடியாது.

ஈரான் மீதான போரை மீண்டும் தொடங்குவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அவர் கியூபா மீதான படையெடுப்பிற்கு உத்தரவிடுவாரா என்பது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. கியூபா, ஈரானிய இராணுவ ஆலோசகர்களுக்குப் புகலிடம் அளிப்பதாகவும், ரஷ்யா மற்றும் ஈரானால் வழங்கப்பட்ட 300 ட்ரோன்களைக் கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகை இப்போது அபத்தமாகக் குற்றம் சாட்டுகிறது. காஸ்ட்ரோயிச ஆட்சியை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட கரீபியன் தீவு மீதான இராணுவ நடவடிக்கைகள், ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா தலைமையிலான இரண்டாவது “ஆட்சி மாற்ற” நடவடிக்கையாக அமையும். இது, கடந்த ஜனவரியில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தி, நியூயார்க் நீதிமன்றத்தில் அவரை ஒரு சாதாரண குற்றவாளியாக விசாரிப்பதற்காக வெனிசுலா மீது நடத்தப்பட்ட படையெடுப்பைத் தொடர்ந்து வருவதாகும். விரைவில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளதாகக் கூறப்படும் 94 வயதான ரவுல் காஸ்ட்ரோவைக் கைப்பற்றுவதற்கான ஒரு இணையான திட்டத்தையும் ட்ரம்ப் தீட்டி வரலாம்.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், அணுஆயுத சக்தியான ரஷ்யாவிற்கு எதிரான போரை எந்தவொரு கட்டுப்பாடுமின்றிப் பொறுப்பற்ற முறையில் தூண்டிவிடுகின்றன. குறிப்பாக ஜேர்மனி, ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் உக்ரைனுக்கு உதவுவதிலும், ரஷ்யாவின் எல்லைக்குள்ளே ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட நீண்டதூர ஆயுதங்களை வழங்குவதிலும் முன்னிலை வகிக்கிறது. மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சமீபத்திய வாரங்களில் கியேவ் துணிச்சல் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேட்டோ நாடுகளில் உள்ள உற்பத்தி ஆலைகள் மீது குண்டுவீசப்படும் என்ற கிரெம்ளினின் அச்சுறுத்தலுக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ள இந்த ஆத்திரமூட்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ரஷ்யாவின் தரப்பிலிருந்து ஒரு பதிலடித் தாக்குதலைத் தூண்டும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளன; இது போரை மேலும் விரிவாக்குவதற்கான நியாயப்படுத்துதலாகப் பயன்படுத்தப்படலாம்.

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் சமூகத்தின் அனைத்து வளங்களையும் போர் தொடுப்பதற்குக் கீழ்ப்படுத்துகின்றன. ஜேர்மனி போர்ச் செலவினங்களுக்காக 1 டிரில்லியன் யூரோக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், அனைத்து நேட்டோ உறுப்பினர்களும் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்திற்காக ஒதுக்க உறுதியளித்துள்ளனர். இந்த வெறித்தனமான மீள்ஆயுதமயமாக்கல் உந்துதலுக்கு நிதியளிப்பதற்காகத் தேவைப்படும் பொதுச் சேவைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளின் அழிப்பானது, வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கொண்டு நியாயப்படுத்தப்படுகிறது.

நான்கு ஆண்டுகாலப் போருக்குப் பின்னரும் உக்ரைனின் பாதிப் பகுதியைக் கூடக் கைப்பற்ற இயலாத ரஷ்யா, 2029க்குள் ஒரு நேட்டோ நாட்டைத் தாக்கக்கூடும் என்று ஜேர்மன் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி கார்ஸ்டன் ப்ரூயர், சுடாய்ட்ச் சைடுங் (Süddeutsche Zeitung) பத்திரிகையில் தனது பிரிட்டிஷ் சகத் தளபதியுடன் இணைந்து அளித்த நேர்காணலில் தெரிவித்தார். ஐரோப்பாவின் இந்த மறுஆயுதமயமாக்கல் உந்துதல் ரஷ்யாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டது அல்ல. மாறாக, நீண்டகாலமாகக் கூட்டாளியாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், இப்போது உலகைப் பெரும் வல்லரசுகளுக்கு இடையே பிய்த்தெறிந்து பகிர்ந்துகொள்வதற்கான போராட்டத்தில் ஒரு போட்டியாளராக மாறியுள்ளது என்பதை ஆளும் வர்க்கம் உணர்ந்துகொண்டதே இதன் மிக அடிப்படையான உந்துசக்தியாகும்.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதப் போக்குகள் கூர்மையடைவதும், மூன்றாவது உலகப் போர் முடுக்கப்படுவதும், லெனின் தனது ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வில் அடையாளம் கண்ட முதலாளித்துவத்தின் அதே அடிப்படைப் பண்புகள் இன்றும் முழு ஆற்றலுடன் பொருந்துகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. முதலாம் உலகப் போரின் கொடூரமான இரத்தப் படுகொலைகளின் உச்சக்கட்டத்தில் லெனின் எழுதினார்: “ஏகபோகங்கள், நிதித் தன்னலக்குழு, சுதந்திரத்திற்கானதாக அல்லாமல் ஆதிக்கத்திற்கான உந்துதல், ஒரு சில பணக்கார அல்லது மிகவும் சக்திவாய்ந்த நாடுகளால் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான சிறிய அல்லது பலவீனமான நாடுகள் சுரண்டப்படுவது — இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் அந்தத் தனித்துவமான பண்புகளைப் பெற்றெடுத்துள்ளன; இப்பண்புகளே ஏகாதிபத்தியத்தை ஓர் ஒட்டுண்ணி அல்லது அழுகிப்போகும் முதலாளித்துவம் என்று வரையறுக்க நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன.”

இந்தச் சகாப்தத்தைப் போர்கள் மற்றும் புரட்சிகளின் சகாப்தமாக லெனின் கருதியதற்கு இந்தக் கோட்பாட்டுப் புரிதலே மையமாக இருந்தது. அதாவது, இக்காலகட்டம் வெறும் ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் காலம் மட்டுமல்ல; மாறாக, நெருக்கடி நிறைந்த முதலாளித்துவமானது, இந்த முட்டுச்சந்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு சோசலிச வழியைத் தொழிலாளர் வர்க்கம் முன்வைப்பதற்கான புறநிலை நிலைமைகளை உருவாக்கியிருந்த ஒரு காலகட்டமும் ஆகும்.

அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் உலகப் போரில் ஈடுபடத் தூண்டும் அதே முதலாளித்துவ முரண்பாடுகள் தான், இப்பேரழிவை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தைப் போராட்டக் களத்திற்குள் தள்ளுகின்றன. அமெரிக்காவால் தூண்டப்பட்ட ஈரான் மீதான போர் ஏற்கனவே, மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் எரிசக்தி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் கடுமையான விலை உயர்வைத் தூண்டியுள்ளது. கென்யா மற்றும் பொலிவியாவில் விலை உயர்வுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்து வரும் தேசிய வேலைநிறுத்தங்கள் முதல், போருக்கும் காஸா இனப்படுகொலைக்கும் எதிராக இத்தாலியப் பொருளாதாரத்தின் பரந்த பகுதிகளை முடக்கிய திங்கட்கிழமை நடந்த ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தம் வரை, கண்டங்கள் முழுவதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

வர்க்கப் போராட்டத்தின் தீவிரமடைதலானது, ஒரு புரட்சிகர சோசலிசத் திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசப் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் அவசரத் தன்மையை வெளிப்படுத்துகிறது. வேலைநிறுத்தங்களில் வெளிப்படும் தொழிலாளர்களின் ஆரம்பகட்ட ஆத்திரமானது, வேலைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் அதன் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான போராட்டத்துடன் இணைப்பதன் மூலம், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு நனவான எதிர்ப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த இயக்கம், தொழிலாளர் வர்க்கத்தால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் சமூகத்தின் சோசலிச மாற்றத்தையும் தனது இலக்குகளாகக் கொண்டு செயல்பட வேண்டும்; அதன் மூலமே, நிதித் தன்னலக்குழுவின் சமூகத்தின் மீதான ஆதிக்கத்திற்கும், இலாபம் மற்றும் சூறையாடலுக்கான அவர்களின் இடைவிடாத தேடலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Loading