முன்னோக்கு

துருக்கியில் CHP கட்சிக்கு எதிராக எர்டோகன் நடத்திய முன்கூட்டிய சதி நடவடிக்கையின் சர்வதேச முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கட்சியின் தலைமையகம் மீதான போலீஸ் சோதனையைத் தொடர்ந்து, CHP கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஒஸ்குர் ஒசெல், தனது ஆதரவாளர்களுடன் மழையில் துருக்கிய நாடாளுமன்றத்தை நோக்கி நடந்து செல்கிறார். [Photo: eczozgurozel / X]

துருக்கியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அரசாங்கம், ஒட்டுமொத்த உலகத்தின் கண்களுக்கு முன்பாக ஒரு முன்கூட்டிய அரசியல் சதியை அரங்கேற்றி வருகிறது. எர்டோகன் முதலில், முக்கிய நாடாளுமன்ற எதிர்க்கட்சியும், கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் உள்ள கட்சியுமான குடியரசு மக்கள் கட்சியின் (CHP) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை, அரசியல் உள்நோக்கம் கொண்ட நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீக்கினார். பின்னர், அக்கட்சியின் தலைமையகத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுமாறு கலவரத் தடுப்பு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

துருக்கியில் கட்டவிழ்ந்து வருவது முற்றிலும் ஒரு தேசிய நிகழ்வு அல்ல. மாறாக, ஆழமடைந்து வரும் முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியில் வேரூன்றிய ஒரு சர்வதேச செயல்முறையின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நவம்பர் 2020 தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், சட்டவிரோதமாக அதிகாரத்தில் நீடிப்பதற்காக ஜனவரி 6, 2021 அன்று ஒரு தோல்வியடைந்த சதிப்புரட்சியை மேற்கொண்டார். எர்டோகனோ தனது பங்கிற்கு, தனது முதன்மையான அரசியல் எதிரியைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் அடுத்த தேர்தல்களில் வரவிருக்கும் சாத்தியமான தோல்வியைத் தடுக்க முயற்சிக்கிறார்.

அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாகவும், இறுதியில் தொழிலாள வர்க்கத்தையே இலக்காகவும் கொண்ட இந்த முன்கூட்டிய சதி நடவடிக்கையை தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்க்க வேண்டும்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கும் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கும் எதிரான வெடிப்புமிக்க எதிர்ப்பின் மனநிலைக்கு மத்தியில், துருக்கிய தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் நுழைகிறது. ஈரானுக்கு எதிரான போரின் முதல் நாட்களில், இஸ்மிரில் உள்ள பொலியாக் சுரங்கத் தொழிலாளர்கள் இராணுவப் பொலீசாரின் தடுப்புகளைத் தகர்த்து, சுரங்கத்தைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கடந்த மாதம், அங்காராவில் உள்ள டோருக் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் துருக்கிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது.

துருக்கிய மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஈரானுக்கு எதிரான போரையும், துருக்கியில் அமெரிக்க இராணுவத் தளங்கள் இருப்பதையும் எதிர்க்கிறார்கள் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்ற போதிலும், எர்டோகன் மத்திய கிழக்கில் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்புடன் தன்னை திறம்பட அணிசேர்த்துக் கொண்டுள்ளார், மேலும் அஜர்பைஜானில் இருந்து இஸ்ரேலுக்கு எண்ணெய் கொண்டு செல்லப்படுவதைத் தொடர்ந்து எளிதாக்கி வருகிறார். மத்திய கிழக்கு முழுவதும், ஆளும் தட்டுக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், இஸ்ரேலிய சியோனிசத்துடனும் கூட்டுச் சேர்வது குறித்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கோபத்தால் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே கடுமையான வாழ்க்கைச் செலவின நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிய, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் இனப்படுகொலைக்கும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான ஒரு இயக்கம் எழுச்சி பெற்று வருவதை ஒடுக்குவதற்கு எர்டோகனும் அவரது கூட்டாளிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

CHP கட்சியை நோக்கி இயக்கப்பட்டுள்ள ஒடுக்குமுறையானது வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத தன்மையைக் கொண்டுள்ளது. CHP என்பது குடியரசின் வரலாறு முழுவதும் வன்முறையாக ஒடுக்கப்பட்டு வருகின்ற ஒரு குர்திஷ் அரசியல் இயக்கமோ அல்லது ஒரு இடதுசாரிக் கட்சியோ அல்ல. மாறாக அது, 1923 இல் துருக்கிய குடியரசை நிறுவிய முஸ்தபா கெமால் அதாதுர்க்கின் கட்சியாகும். நீதித்துறையானது, ஓஸ்குர் ஓசெல் தலைமையிலான அதன் தலைமையை அகற்றி, கெமால் கிலிச்டரோக்லுவை —இவர் “மாட்சிமை பொருந்திய மன்னரின் விசுவாசமான எதிர்க்கட்சி” என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளார்— மீண்டும் பதவியில் ஒரு சதியின் மூலம் அமர்த்தியுள்ளது. இது, வெடிக்கும் வர்க்க மற்றும் சர்வதேசப் பதட்டங்களுக்கு மத்தியில், மிக மென்மையான அரசியல் எதிர்ப்புகூட சகித்துக்கொள்ளப்படாது என்ற ஒரு பிரகடனத்திற்குச் சமமாகும்.

ட்ரம்ப்பின் போர்கள் குறித்த ஒசெலின் வரையறுக்கப்பட்ட விமர்சனங்களும், அங்காராவில் உள்ள டோருக் சுரங்கத் தொழிலாளர்களுக்கு அவர் வெளியிட்ட மிதமான பகிரங்க ஆதரவு அறிக்கைகளும், துருக்கிய முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளுக்கு மட்டுமல்லாமல், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் சகித்துக்கொள்ள முடியாதவையாக இருந்தன. எர்டோகனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் விமர்சிக்கவில்லை. இது, கிலிச்டரோக்லு தலைமையிலான CHP-ன் சொந்தப் பிரிவுகளின் உடந்தையுடன், எர்டோகனால் ஒசெல் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியது.

ஏகாதிபத்தியப் போரை ஆதரிப்பதில் ஆழமான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ள பலவீனமான மற்றும் திறமையற்ற ஒரு வேட்பாளரான கிலிக்டரோக்லுவை CHP-ன் புதிய தலைவராக ஆதரிப்பதற்கு எர்டோகன் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் ஆகிய இரு தரப்பினருக்குமே காரணங்கள் உள்ளன. 2023 ஜனாதிபதித் தேர்தலில், எர்டோகனிடம் மிக மோசமாகத் தோல்வியடைந்த கிலிக்டரோக்லு, குர்திஷ் தேசியவாத இயக்கம் (தற்போது DEM கட்சி) மற்றும் போலி-இடது குழுக்களின் ஆதரவுடன், பகிரங்கமாக நேட்டோ-ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த முன்கூட்டிய அரசியல் சதி நடவடிக்கைக்குப் பின்னால் எர்டோகனும் கிலிச்டரோக்லுவும் கைகோர்த்து நிற்பது, துருக்கிய முதலாளித்துவத்தின் நலன்களையும், ஏகாதிபத்தியத்துடனான அதன் அணிசேர்க்கையையும் பிரதிபலிக்கிறது. வாஷிங்டனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகளும், எர்டோகன் அரசாங்கத்தால் ஆளப்படும் துருக்கியை, பரந்த பிராந்தியம் முழுவதிலும் உள்ள தங்களின் நலன்களுக்கான ஒரு முக்கியமான கூட்டாளியாகவே பார்க்கின்றன. காஸாவிற்கான ட்ரம்பின் “அமைதி மன்றத்தில்” இணைந்ததுடன் மட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் பிரிட்டன் மற்றும் பிரான்சுடனான தனது ஒத்துழைப்பை எர்டோகன் ஆழப்படுத்தியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக அகதிகளை துருக்கியிலேயே தடுத்து வைக்கும் பணியையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இமாமோக்லுவின் கைதுக்கு முன்னரும், CHP கட்சிக்கு எதிரான சமீபத்திய நீதித்துறை நடவடிக்கைக்கு முன்னரும் எர்டோகன் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியது தற்செயலான விடயமல்ல. தங்களது சொந்த நாடுகளில் இராணுவச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்து, ஜனநாயக உரிமைகளைத் தாக்கியுள்ள அவரது ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து, பெயரளவிலான அறிக்கைகளைத் தவிர வேறு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

CHP கட்சித் தலைவரிலிருந்து தன்னை நீக்குவதற்கான எர்டோகனின் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒசெல் காட்டிய எதிர்வினையானது, CHP போன்ற ஒரு முதலாளித்துவக் கட்சியின் தலைமையின் கீழ் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏகாதிபத்தியத்துடனும் நிதி மூலதனத்துடனும் ஆயிரம் இழைகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், ஒசெல் தனது ஆரம்பகால “எதிர்ப்பு” வாய்வீச்சுகளுக்கு மாறாக, இந்த முன்கூட்டிய சதிக்கு உடனடியாக அடிபணிந்தார். முதலில் மறுத்த அவர், பின்னர் கிலிச்டரோக்லுவுடன் பேசினார். பிறகு, நிராகரிப்பதாகச் சபதம் செய்திருந்த நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்று உறுதியளித்திருந்த அவரது கட்சித் தலைமையகத்தையும் காலி செய்தார். தற்போது அவர் ஒரு புதிய CHP கட்சி மாநாட்டிற்கும் புதிய தேர்தல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

உண்மையில், ஓசல் நேட்டோவின் முக்கிய ஏகாதிபத்திய வல்லரசுகளின் அதிருப்திக்கு ஆளாகியிருந்தாலும், அவர் ஒன்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர் அல்ல. மார்ச் 2025-இல் இஸ்தான்புல் பெருநகர மேயரும், CHPயின் ஜனாதிபதி வேட்பாளருமான எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த மக்கள் போராட்டங்களின் போது, ​​நேட்டோவுடன் வலுவான உறவுகளைக் கொண்டிருப்பதில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக ஓசல் அறிவித்தார். கடந்த இலையுதிர் காலத்தில் நேட்டோவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அக்கட்சியின் ஈரான் தொடர்பான அறிக்கை, அடிப்படையில் அமெரிக்கா-இஸ்ரேலிய பிரச்சாரத்தை பிரதிபலித்ததுடன், பிராந்தியத்தில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும் உதவியது.

இது CHP-யின் முதலாளித்துவத் தன்மையால் விதிக்கப்பட்ட வரம்புகளின் ஒரு வெளிப்பாடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, கிலிச்டாரோக்லு அல்லது எர்டோகனைப் போலவே, முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களுக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் அச்சுறுத்தலாக ஒரு தொழிலாளர் வர்க்க இயக்கம் எழுச்சி பெறுவதைக் கண்டுதான் ஓசலும் அஞ்சுகிறார்.

துருக்கியிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஒரு சமூக வெடிமருந்துப் பீப்பாயின் மீது அமர்ந்திருக்கின்றன. ஐரோப்பாவிலேயே மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக துருக்கி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான துருவமுனைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. தொழிலாளர்களை வறுமைக்குள் தள்ளும் அதே வேளையில், நிதித்துறை தன்னலக்குழுவை வளம் கொழிக்கச் செய்யும் எர்டோகன் அரசாங்கத்தின் கொள்கைகள், வர்க்கப் பதட்டங்களையும் சமூகப் புரட்சிக்கான அச்சுறுத்தலையும் மட்டுமே தீவிரப்படுத்துகின்றன. விரிவடைந்து வரும் உலகளாவிய போரின் நிலைமைகளின் கீழ், பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் மீது முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஆதிக்கம் நிலவுவது என்பது, அதன் மிகக் குறைந்த வரம்பிற்குட்பட்ட வடிவத்தில்கூட ஜனநாயகத்துடன் ஒத்துப்போக மாட்டாது என்பதைக் காட்டுகிறது.

CHP-க்கு எதிரான எர்டோகன் ஆட்சியின் நடவடிக்கையானது, அதே அரசாங்கத்தால் “அமைதி மற்றும் ஜனநாயகமயமாக்கல்” மூலம் குர்துப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற DEM கட்சி, CHP மற்றும் போலி-இடது போக்குகளால் முன்னெடுக்கப்பட்ட கூற்றை ஒரு வெட்கங்கெட்ட மோசடியாக மேலும் அம்பலப்படுத்துகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் விளக்கியதன்படி, பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், ஏகாதிபத்திய சகாப்தத்தில் உள்ள முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவினராலும் ஒரு ஜனநாயக ஆட்சியை நிறுவவோ அல்லது ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரத்தைப் பெறவோ முடியாது. ஏகாதிபத்தியப் போர்களை நிறுத்தி, குர்திஷ், துருக்கி மற்றும் பிராந்தியம் முழுவதிலும் உள்ள பிற ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு ஆட்சியை உருவாக்கும் பணி தொழிலாளர் வர்க்கத்தின் மீதே விழுகின்றது. இதன் பொருள், மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்பிற்கான போராட்டமாகும்.

துருக்கியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, உலகளாவிய மட்டத்தில் வெளிப்பட்டு வரும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு தற்போதைய நிறுவனங்களுக்குள் எந்தவொரு தீர்வும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சர்வாதிகாரம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்தியப் போர் ஆகியவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை சீர்திருத்த முடியாது. சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் மூலம் தொழிலாளர் அதிகாரத்தையும் சோசலிசத்தையும் நிறுவுவதைத் தவிர, வேறெந்த முன்னேற்றப் பாதையும் கிடையாது. ஆகவே இதற்கு, ஒரு புரட்சிகர தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், மற்றும் அதன் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading