முன்னோக்கு

இத்தாலியில் மே 29 பொது வேலைநிறுத்தம்: தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதை என்ன?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தாலி முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். [Photo: Potere al Popolo-Roma]

மே 29 அன்று நடைபெறவுள்ள ஒரு பொது வேலைநிறுத்தம், இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக இத்தாலியின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் பெரும்பகுதியை முழுமையாக முடக்குகிறது.

இந்த வேலைநிறுத்தம் கடந்த ஒன்பது மாதங்களாக இத்தாலியின் பொது வாழ்க்கையை முடக்கியுள்ள தொடர் வேலைநிறுத்தங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களின் அலையில் மிகச் சமீபத்திய நிகழ்வாகும். செப்டம்பர் 22, 2025 அன்று நடந்த ஒரு மாபெரும் ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, “குளோபல் சுமூத் புளோட்டிலா” என்ற உதவிக் குழுவின் போக்குவரத்துக் கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியதற்கு எதிராக, அக்டோபர் 4 அன்று ரோமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் “அனைத்தையும் முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் அணிதிரண்டு போராட்டம் நடத்தினர்.

ஜெனோவா, லிவோர்னோ மற்றும் அங்கோனா ஆகிய நகரங்களின் துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பவிருந்த ஆயுதங்களை ஏற்றி அனுப்புவதுக்கு மறுத்துள்ளனர். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக, நவம்பர் 28-29 மற்றும் டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தன. அதன் பிறகு பல சிறிய அளவிலான வெளிநடப்புகளும் போராட்டங்களும் நடந்தன. மே 18, 2026 அன்று, சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள், “போர்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் ஒரு ஆணி கூட தரமாட்டோம்” என்ற முழக்கத்துடன் போருக்கும் சிக்கன நடவடிக்கைக்கும் எதிராக மேலும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

சாமானிய தொழிலாளர்களின் இந்த தீவிரமடைந்து வரும் கொள்கைரீதியான எதிர்ப்பு இயக்கம், இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் மகத்தான ஆற்றலை நிரூபிக்கிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை நடத்துவதற்கும், காஸா இனப்படுகொலை மற்றும் ஈரானுக்கு எதிரான போரை ஆதரிப்பதற்கும் தேவைப்படும் பில்லியன் கணக்கான யூரோக்கள், தங்களின் ஊதியம், மருத்துவம், கல்வி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிலிருந்தே பறிக்கப்படுகின்றன என்பதை மில்லியன் கணக்கான மக்கள் உணர்ந்துள்ளனர். இனிமேலும் அவர்கள் இதை இன்னும் சகித்துக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்த வரவுசெலவுத் திட்டம் —இதுவே தற்போதைய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட அலைகளின் முக்கிய இலக்காக உள்ளது— சமூக சேவைகள், ஓய்வூதியங்கள், ஊதியங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கான செலவினங்களைக் வெட்டிக் குறைக்கிறது. அதே நேரத்தில், நேட்டோவின் 5 சதவீத இலக்கை எட்டுவதற்காக, பாதுகாப்புத் துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் சமூக விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, கடுமையான வறுமையில் —அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில்— வாழும் மக்களின் எண்ணிக்கை 5.7 மில்லியனை எட்டி, எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 9.8 சதவீதமாகும். வேலையின்மை விகிதம் குறைந்து வரும் போதிலும், குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தைக்கூட உறுதி செய்ய முடியாத ஊதியத்திற்காக அதிகப்படியான மக்கள் உழைக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

இதற்கு நேர்மாறாக, செல்வந்தர்களின் சொத்துக்களும் வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளன. வெளிநாட்டு மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் உண்மையான வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல், அவர்களுக்கு விதிக்கப்படும் ஒரு நிலையான வரி விகிதம், இத்தாலியை அதிசெல்வந்தர்களுக்கான ஒரு வரி சொர்க்கமாக மாற்றியுள்ளது.

அதே நேரத்தில், தொழிலாளர் வர்க்கத்துடனான தவிர்க்க முடியாத மோதலுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு இயந்திரத்தை முறையாக வலுப்படுத்தி வருகிறார். அவர், தனது கூட்டாளியான டொனால்ட் ட்ரம்பின் வழியைப் பின்பற்றி, நீதிமன்றங்கள், அரசு மற்றும் கலாச்சார நிறுவனங்களை பாசிசக் கட்சி விசுவாசிகளால் நிரப்பி, பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து இடதுசாரி செல்வாக்கை நீக்கி, அடக்குமுறை சக்திகளை வலுப்படுத்தி, மேலும் ஒரு மூர்க்கமான நாடு கடத்தும் கொள்கையின் மூலம் இனவெறி மற்றும் அந்நியர் வெறுப்பைத் தூண்டி வருகிறார். இத்தாலியில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தின் ஆபத்து நிஜமாக உள்ளது.

இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிரிகள்

எனவே, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற, மெலோனியின் அரசாங்கத்தை வீழ்த்துவது தெளிவாக அவசியமாகிறது. இது ஒரு சோசலிச மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு முன்னோக்கை ஏற்றுக்கொள்வதற்கான அவசரக் கேள்வியை எழுப்புகிறது. இந்த நோக்குநிலையானது, அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான போராட்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் முடக்கி வருகின்ற, நிறுவனமாயமான தொழிற்சங்கங்கள் மற்றும் பெயரளவிலான எதிர்க்கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தை முறையாக விரிவுபடுத்துவதில் இருந்து தொடங்குகிறது.

பெயரளவில் “இடது” என்று கூறிக்கொள்ளும் முதலாளித்துவ ஆதரவு கட்சிகள், நிறுவனமயமான தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களின் “தீவிரப்போக்கு” அரசியல் பாதுகாவலர்களின் தொழிலாளர்-எதிர்ப்புக் கொள்கைகளே, மெலோனி ஆட்சிக்கு வருவதுக்கு வழிவகுத்தன. இந்தக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வலதுசாரிக் கொள்கைகள் மீதான அதிருப்தி அதிகரித்து, வளர்ந்து வந்த சமூக எதிர்ப்பின் மீதான கட்டுப்பாட்டை அவர்கள் இழந்தபோது, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கம் பாசிச இத்தாலியின் சகோதரர்கள் (Fratelli d’Italia) கட்சியை நோக்கித் திரும்பியது. இந்தக் கட்சி சில ஆண்டுகளிலேயே 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நாட்டின் வலிமையான கட்சியாக உருவெடுத்தது.

சி.ஜி.ஐ.எல் (CGIL) தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அல்லது சில நேரங்களில் சி.ஐ.எஸ்.எல் (CISL) மற்றும் யு.ஐ.எல் (UIL) ஆகிய சங்கங்கள், அரசாங்கத்தின் சிக்கன வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக இப்போது போராட்டம் நடத்துகின்றன என்றால், அவை முதலாளித்துவ ஆட்சிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாதவாறு தொழிலாளர்களின் கோபத்தை வேறு திசைக்கு திருப்புவதற்காக மட்டுமே அவ்வாறு செய்கின்றன.

சாமானியத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் இந்த சிக்கன வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை, காஸா இனப்படுகொலை மற்றும் அரசாங்கத்தின் போர்ப் போக்கிற்கு எதிரான எதிர்ப்போடு இணைத்து, 2025 நவம்பர் 28-29 ஆகிய தேதிகளில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆனால், சி.ஜி.ஐ.எல் அமைப்பு இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனியாக ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இந்த முயற்சியைக் சீர்குலைத்தது. மேலும், இந்த வேலைநிறுத்தம் வரவுசெலவுத் திட்டச் சட்டத்தில் சில சிறிய மாற்றங்களைக் கோருவதோடு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு, மெலோனி அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு ஒருங்கிணைந்த அரசியல் இயக்கமாக வளர்ந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதில் சி.ஜி.ஐ.எல் தொழிற்சங்கம் உறுதியாக இருந்தது.

கடந்த காலத்தைப் போலவே, வர்க்கப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சி.ஜி.ஐ.எல் சங்கத்தின் தலைமை மீண்டும் ஜனநாயகக் கட்சி (PD) மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S) ஆகியவற்றுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, இவர்களை மெலோனிக்கு மாற்றீடாக காட்ட முயல்கிறது. ஆனால், இக்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவை மெலோனியின் கொள்கைகளையே தொடரும்: அதாவது நேட்டோவிற்கான ஆதரவு, இராணுவக் கட்டமைப்பு மற்றும் சமூகச் சேவைகளுக்கான நிதி வெட்டுக்கள். பிரித்தானியாவின் தொழிற்கட்சி, ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அல்லது ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி-சுமார் (PSOE-Sumar) கூட்டணி என ஐரோப்பா முழுவதிலும் உள்ள இவற்றுடன் தொடர்புடைய பிற கட்சிகளின் செயல்பாடுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவை அனைத்துமே இதே போன்ற வலதுசாரிக் கொள்கையையே பின்பற்றி வருகின்றன.

இத்தாலிய இடதுகள் மற்றும் பசுமைக் கட்சிகள் போன்ற பெயரளவில் “தீவிர” இடதுசாரிகளாகக் காட்டிக்கொள்ளும் கட்சிகளுக்கும் இது பொருந்தும். இவை ஜனநாயகக் கட்சிக்கும் (PD) தொழிற்சங்கங்களுக்கும் ஓர் அரசியல் முகமூடியாகச் செயல்பட்டு வருகின்றன. இவை, சமூக அநீதிகளுக்கு எதிராகத் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினாலும், ஒரு மாற்று சமூக ஒழுங்கிற்காகப் போராட மறுக்கின்றன. இந்த “போலி-இடது” கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக இவை, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் தங்களின் சலுகைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதும் நடுத்தர வர்க்கத்தின் செல்வந்தர்களையும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரையுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இத்தகைய போலி-இடதுகள் ஆட்சிக்கு வரும்போது அது எங்கு போய் முடியும் என்பதை கிரேக்கத்தின் சிரிசா, ஸ்பெயினின் பொடெமோஸ் மற்றும் ஜேர்மனியின் பல மாநிலங்களில் உள்ள இடதுகட்சி ஆகியவை நிரூபித்துக் காட்டியுள்ளன—இவை தங்களின் தீவிரமான வாய் வீச்சுக்களைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் கட்டளைகளைத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது திணித்தன.

சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை வலுப்படுத்துங்கள்!

மெலோனியைத் தோற்கடிப்பதுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்தும், நாடாளுமன்றக் கட்சிகளிலிருந்தும் அரசியல் ரீதியான சுயாதீனத்தை விரும்பும் தொழிலாளர்கள், ஒவ்வொரு பணியிடம், துறைமுகம், பள்ளி, குடோன்களின் மையம் மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் வாழும் சுற்றுப்புறப் பகுதிகளில் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதன் மூலம் தங்களது போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

இந்தக் குழுக்களால் போராடத் தயாராக இருக்கும் அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க முடியும். இவை ஜனநாயகத் தன்மை கொண்டவையாகவும், தொழிலாளர்களின் நேரடிப் பங்கேற்பின் மூலம் தங்களின் அதிகாரத்தைப் பெறுபவையாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெருநிறுவனங்களின் இலாப வெறியை விட, சமூகத்தின் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் இந்த சாமானிய தொழிலாளர் குழுக்கள் வழிநடத்தப்பட வேண்டும். மேலும் அவை ஒவ்வொரு பணியிடத்தையும், ஒவ்வொரு சமூகச் சாதனையையும் மற்றும் ஒவ்வொரு ஜனநாயக உரிமையையும் பாதுகாக்க வேண்டும்.

இத்தாலியில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான இத்தகையதொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வலுவான சூழல் ஏற்கனவே உருவாகி வருகிறது.

மெலோனியின் அரசாங்கமானது, முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்வினை மற்றும் ஏகாதிபத்திய போர்களுக்குத் தயாராகும் ஒரு ஐரோப்பிய மற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாகவே விளங்கி வருகிறது. ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். ஐரோப்பா முழுவதிலும், காஸா இனப்படுகொலைக்கு எதிரான தங்களின் ஆத்திரத்தை அவர்கள் ஏற்கனவே வேலைநிறுத்தப் போராட்டங்களாக மாற்றியுள்ளனர். இதில் பெல்ஜியம், கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடந்த பொது வேலைநிறுத்தங்களும் அடங்கும். இதன் மூலம், ஏகாதிபத்தியப் போர் இயந்திரத்தை உடல்ரீதியாக நிறுத்தும் சக்தி தொழிலாளர் வர்க்கத்திடம் உள்ளது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

வளர்ந்து வரும் இந்த வெகுஜன இயக்கத்தின் அத்தியாவசியப் பணி என்னவென்றால், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் “போட்டித்திறன்” என்ற பெயரில் —அதாவது பெருநிறுவனங்களின் இலாபங்களுக்காக, திட்டமிட்டு ஊக்குவிக்கப்படும் பணியிடம், நிறுவனம், தொழில் மற்றும் நாடு ரீதியிலான தொழிலாளர்களின் பிரிவினையை களைவதாகும். ஒரு பொதுவான சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தில், அனைத்துப் பிரிவுகளையும் கடந்து தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச எதிர் தாக்குதல் உருவாக்கப்பட வேண்டும்.

இதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை உலகளவில் ஒருங்கிணைக்கத் தொடங்குவதற்கான ஒரு வழியாக சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) தொடங்கியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்பது சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாகும், இது ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்-புரட்சிகரக் கொள்கைகளுக்கும், சிக்கன நடவடிக்கை, பாசிசப் பிற்போக்குத்தனம், இராணுவவாதம் மற்றும் போருக்கு ஆதாரமாக விளங்கும் முதலாளித்துவ இலாப முறைமையுடன் தொழிலாள வர்க்கத்தை வரலாற்று ரீதியாகப் பிணைக்க முயன்ற அனைத்துப் போக்குகளுக்கும் எதிரான போராட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது.

இத்தாலிய தொழிலாளர்கள் அனைவரும் IWA-RFC அமைப்பைத் தொடர்பு கொள்ளவும், பல மொழிகளில் தினசரி வெளியாகும் ‘உலக சோசலிச வலைத்தளத்தை (wsws.org) வாசிக்கவும், மற்றும் ICFI-ன் இத்தாலியப் பிரிவைக் கட்டியெழுப்ப உதவ அதனுடன் தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் அழைக்கிறோம்.

அனைத்து இத்தாலிய தொழிலாளர்களையும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை தொடர்பு கொள்ளுமாறும், பல மொழிகளில் தினமும் வெளியாகும் உலக சோசலிச வலைத் தளத்தை (wsws.org) வாசிக்குமாறும், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இத்தாலியப் பிரிவைக் கட்டியெழுப்ப உதவுவதற்கு அதனுடன் தொடர்பு கொள்ளுமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading