இலங்கையின் ஜே.வி.பி. அரசாங்கம் இனவாத தமிழர்-விரோத போரில் “வெற்றி” பெற்ற 17வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 18, இலங்கை அரசு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை அறிவித்து 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கின்றது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கை நாசமாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர், அன்று இரத்தக்களரியான முடிவுக்கு வந்தது.

17வது தேசிய போர் வீரர்கள் நினைவு தினம் [Photo: Facebook/Anura Kumara Dissanayake]

அடுத்த நாள், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, பத்தரமுல்லவில் உள்ள பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு (போர் வீரர்கள்) நினைவிடத்தில் நடைபெற்ற “தேசிய வெற்றி தின நினைவு தினத்திற்கு” தலைமை தாங்கினார். அங்கு, போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அந்நிகழ்ச்சியில் பேசிய திசாநாயக, “பயங்கரவாதத்திலிருந்து” “தாய்நாட்டை” விடுவிப்பதற்காக படையினர் செய்த “மாபெரும் தியாகத்திற்காக” அவர்களை “போர் வீரர்கள்” என்று மீண்டும் மீண்டும் பாராட்டினார். போரின் தமிழர்-விரோத இனவாதப் பண்பை மூடிமறைக்கும் நோக்கில், இராணுவம் 'பிரிவினைவாதத்திற்கு' எதிராகவே போரிட்டதே தவிர, 'எந்தவொரு இன சமூகத்திற்கும் எதிராக அல்ல' என்று அவர் கூறினார். இனவாதப் போரை முன்னெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.ம.ச.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும், திசாநாயக்கவின் ஜே.வி.பி. உட்பட அதனை ஆதரித்த கட்சிகளும், இந்தப் படுகொலையை நியாயப்படுத்த இந்த வர்ணனையைப் பயன்படுத்தியுள்ளன.

போரின் போது இலங்கை அரசின் இனப்படுகொலை நடத்தை, திசாநாயகவின் கூற்றை முற்றிலுமாகப் பொய்யாக்குகிறது. போரின் இறுதிக் கட்டங்களில் மட்டும், அதாவது 2009 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு உட்பட மனித உரிமை அமைப்புகளின் விசாரணைகள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான வசதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, அரசாங்கத்தின் பீரங்கித் தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முடிவு செய்தன. இதைவிட அதிகமான பொதுமக்கள் உயிரிழப்புகளை மதிப்பிட்ட சர்வதேச நெருக்கடிக் குழு, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது வேண்டுமென்றே பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்வைத்தது. ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட காணொளிக் காட்சிகளில், இலங்கை படையினர் கட்டிவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளைக் கொல்வதைக் காட்டுவதாக இருக்கின்றது. பிற்கால விசாரணைகள் நடந்தபோதிலும், இந்தக் குற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்த அல்லது மேற்பார்வையிட்ட எந்தவொரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை.

கொழும்பு அரசாங்கத்தின் பாதுகாப்பு வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, சரணடைய முயன்றவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பின்னர், சுமார் 300,000 தமிழ் பொதுமக்கள் இராணுவமயமாக்கப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமை மற்றும் பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்டமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்தன. போரின் இறுதிக் கட்டத்தில் காணாமல் போன அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களைக் கோரி, யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் போராட்டங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. இன்றும் கூட, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

போரின் இரத்தக்களரி முடிவானது, விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத் வேலைத் திட்டத்தின் முழுமையான தோல்வியையும் நிரூபித்தது. உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல்: “புலிகள் சந்தித்த படுதோல்வியானது, இலங்கை எனும் சிறிய தீவின் ஒரு பகுதியில் தமிழ் சிறுபான்மையினருக்கென ஒரு தனியான இன அடிப்படையிலான அரசை உருவாக்குவதே அரசாங்க ஆதரவுடனான தமிழர்-விரோத பாகுபாட்டிற்கான பதில், என்ற எந்தவொரு முற்போக்கான பொருளாதார அல்லது அரசியல் அடிப்படையும் இல்லாத ஒரு முன்நோக்கின் விளைவாகும்.”

திசாநாயகவின் “இன நல்லிணக்கம்” பற்றி வாய்ச்சவடால்கள் ஒருபுறம் இருக்க, அவரது கட்சியானது புலிகளுக்கு எதிரான இனவாதப் போரின் தீவிர ஆதரவாளராக இருந்தது. 2006 இல் போரை மீண்டும் தொடங்குமாறு அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவைத் தாங்கள் வற்புறுத்தியதாக ஜே.வி.பி. பெருமையடித்துக் கொண்டது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தப் பயன்படுத்தி வருகின்ற அதே இனவாத அரசியலையே திசாநாயகவின் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கமும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1983 இல் போரைத் தொடங்கியது. இது, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தைத் தடுக்கும் நோக்கில், 1948 இல் இலங்கை உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதிலிருந்து அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட தமிழர்-விரோத இனவாதப் பாகுபாட்டுக் கொள்கைகளின் உச்சகட்டமாகும். தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு அஞ்சி, 1948 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே சுமார் பத்து இலட்சம் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. தொழிலாளர் வர்க்கம் தனது போர்க்குணத்தை அதிகரித்த போதெல்லாம், ஆளும் வர்க்கத்தினர், குறிப்பாக 1956இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம்-மட்டும் கொள்கையின் மூலம், இனவாதப் பிளவுகளை ஆழப்படுத்தி பதிலளித்தனர்.

ட்ரொட்ஸ்கிசவாதத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), 1964 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்துடன் இணைந்ததன் மூலம் செய்த வரலாற்றுத் காட்டிக்கொடுப்பால் இந்தப் பிளவுபடுத்தல் எளிதாக்கப்பட்டது. அந்தத் காட்டிக்கொடுப்பு, சிங்கள-பௌத்தப் பேரினவாத அரச எந்திரத்திற்கு எதிராகத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் திறன் கொண்ட ஒரு தீர்க்கமான அரசியல் கருவியாகப் பலரால் கருதப்பட்ட ஒரு கட்சியை தமிழ் மக்களுக்கு இல்லாமல் ஆக்கியது. ல.ச.ச.க. தலைவரான கொல்வின் ஆர். டி சில்வா, சிங்களத்தை அரச மொழியாகவும் பௌத்தத்தை அரச மதமாகவும் நிலைநிறுத்திய 1972 ஆம் ஆண்டு பிற்போக்கு அரசியலமைப்பை வரைவதில் நேரடியாகப் பங்கேற்றார். தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் மேலும் அரசியல் அந்நியப்படுத்தலுக்கும் விரக்திக்கும் தள்ளப்பட்டமை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றுவதற்கான சூழலை உருவாக்கியது.

1977க்குப் பிறகு திறந்த சந்தை மறுசீரமைப்புக்கு மாறியமையும், 1980 பொது வேலைநிறுத்தம் கொடூரமாக அடக்கப்பட்டமையும் தீர்க்கமான திருப்புமுனைகளாக அமைந்தன. தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் அவசரமான சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய இயலாத முதலாளித்துவ வர்க்கம், பேரினவாதத்தையும் அடக்குமுறையையும் கடுமையாக நாடியது—இது 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலையிலும் முழு அளவிலான உள்நாட்டுப் போர் வெடித்ததிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால மோதல் முழுவதும், இலங்கையின் ஆளும் வர்க்கத்தினர் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இனவாதப் போரை விரிவாகப் பயன்படுத்திக் கொண்டனர். அடுத்தடுத்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்களும் கட்சிகளும் போர் முயற்சிகளுக்கு ஆதரவளித்த நிலையில், அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களின் எந்தவொரு ஐக்கியப்பட்ட இயக்கமும் உருவாவதைத் தடுப்பதற்கு செயல்பட்டன.

17வது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தில் திசாநாயக்க கலந்துகொண்ட போது [Photo: Facebook/Anura Kumara Dissanayake]

போரை மிகத் தீவிரமாக ஆதரித்த திசாநாயகவும் மற்ற ஜே.வி.பி. தலைவர்களும், இலங்கை இராணுவம் தனது போர் இறுதிவரை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். முதலாளித்துவ அரசியல் அமைப்பின் மற்ற பகுதியினருடன் சேர்ந்து, ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் மரணங்கள் உட்பட, இந்த மோதலினால் ஏற்பட்ட பெரும் மனித இழப்புகளுக்கு ஜே.வி.பி. தலைவர்களும் அரசியல் ரீதியாகப் பொறுப்பாளிகள் ஆவர்.

அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும், இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, புலிகளுக்கு எதிரான கொழும்பின் போருக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவையும், இராணுவ உளவுத் தகவல்களையும், உபகரணங்களையும் வழங்கி ஆதரவளித்தன. 2009 மே மாதம் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் மேற்கத்திய சக்திகளும் இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை எழுப்பத் தொடங்கியதோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் தொடர்ச்சியான தீர்மானங்களை முன்மொழிந்தன.

இந்த முன்னெடுப்புகள், தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிய கவலையால் உந்தப்படவில்லை, மாறாக பரந்த புவிசார் அரசியல் கணக்கீடுகளாலேயே உந்தப்பட்டன. அவை, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை, சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான மூலோபாயத் தாக்குதலுடன் இன்னும் நெருக்கமாக இணையுமாறு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. புலிகளுக்கு எதிரான போருக்கு சீனாவின் ஆதரவின் மூலமாகவும், மோதலுக்குப் பின்னர் செய்யப்பட்ட கணிசமான சீன முதலீடுகள் மற்றும் கடன்கள் மூலமாகவும் கொழும்பு பெய்ஜிங்குடனான உறவுகளை வலுப்படுத்தியிருந்தது.

கொழும்பு அரசின் வெற்றி முழக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்திய சக்திகளின் வஞ்சகமான சுரண்டலுக்கு எதிராகவும், சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ அரசியலின் தேசியவாத திசைதிருப்பல்களுக்கு எதிராகவும், போருக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான, கொள்கை ரீதியான போராட்டத்தை நிலைநிறுத்தி வரும் ஒரு அரசியல் போக்கு நிற்கிறது: அதுவே இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) ஆகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே 1980களின் பிற்பகுதியில், தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற துணிச்சலான மற்றும் விஞ்ஞானப்பூர்வமான கோஷத்தை முன்வைத்தது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளாலும் தூண்டிவிடப்பட்ட இனவாத மற்றும் தேசியவாதப் பிரிவினைகளைக் கடந்து, இந்த வேலைத்திட்டம் பிராந்தியம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிகரமாக ஐக்கியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

கொழும்பின் இனவெறிக்கும் புலிகளின் பிரிவினைவாத தேசியவாதத்திற்கும் இடையிலான பிழையான தேர்வை இந்த வேலைத்திட்டம் தகர்த்தது. தமிழ் தேசிய ஒடுக்குமுறை வேரூண்றியிருப்பது சிங்கள மக்களிடம் அன்றி, மாறாக இலங்கையின் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திலும் அது கட்டமைத்து நிலைநிறுத்திய இனவாத அரசிலும்மே வேரூண்றியுள்ளது என்பதை அது அடையாளம் கண்டுகொண்டது.

பு.க.க. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவப் படைகளை நிபந்தனையின்றி விலக்கிக்கொள்ளக் கோரியதுடன், விடுதலைப் புலிகள் போன்ற முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளுக்குத் தமிழ் மக்களை அடிபணியச் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராகப் போராடின. இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாடு, இனவாதப் பிளவின் இரு தரப்பினரதும் வெறுப்பை, அதாவது, கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், பிற சிங்கள இனவாத சக்திகள் மற்றும் விடுதலைப் புலிகளினதும் வெறுப்பை, சோசலிச சமத்துவக் கட்சி எதிர்கொண்டுள்ளது.

கொழும்பின் இனவாதப் போருக்கும், விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் தேசியவாதக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட பிற்போக்கு தமிழ் பிரிவினைவாதத்திற்கும் எதிராக, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசவாத முன்நோக்கை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்தது. முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிங்களத் தொழிலாளர்களுடன் ஒன்றிணைவதன் மூலமே தமிழ் தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் தங்கள் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று அது வலியுறுத்தியது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான கட்சியின் அழைப்பு இந்த வேலைத்திட்டத்திலேயே வேரூன்றியிருந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான போரை எதிர்க்காமல், சிங்கள மொழி பேசும் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்று அது வாதிட்டது.

தொழிலாளர் சுரண்டல் மற்றும் இனப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களின் அரசியல் ஐக்கியத்தை முதலாளித்துவ அரசால் சகித்துக்கொள்ள முடியாது. 'தேசிய ஒற்றுமை' மற்றும் இனவாதத்தை எதிர்ப்பது பற்றி திசாநாயக என்ன சொற்றொடர்களைப் பயன்படுத்தினாலும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களுக்கு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் விரோதப் பேரினவாதத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலமே பதிலளிக்கும் என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. உழைக்கும் மக்கள், சர்வதேச சோசலிசப் புரட்சி எனும் பதாகையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே இந்த நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும்.

Loading