முன்னோக்கு

எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆகிறார்: சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அவசியம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் 2025 மே 30 வெள்ளிக்கிழமை அன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (வலம்) உடன் எலோன் மஸ்க் பேசுகிறார், அப்போது கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (இடமிருந்து முதலாவது), வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் ஆகியோர் கவனிக்கின்றனர். [AP Photo/Evan Vucci]

அடுத்த 10 நாட்களுக்குள், எலோன் மஸ்க் தனது கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி ஏவுதல் ஏகபோக நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொள்ளும்போது, உலகின் முதல் டிரில்லியனர் (இலட்சம் கோடி அதிபர்) ஆக உள்ளார்.

ஜூன் 11 அன்று இந்த ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படும்போது, மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உயரும். பங்கு வெளியீட்டு விலையின்படி, அவரது சுமார் 41 சதவீதப் பங்கின் மதிப்பு தோராயமாக 700 பில்லியன் டாலராக இருக்கும்.

பெயரளவில் பார்த்தால், மஸ்க்கின் சொத்து ஏற்கனவே எந்தவொரு தனிநபரும் வரலாற்றில் இதுவரை பெற்றிராத மிகப்பெரிய தொகையாகும். இந்த உத்தியோகபூர்வ பங்கு வெளியீட்டிற்கு முன்பே வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அவரது சொத்து மதிப்பை 970 பில்லியன் டாலராகக் குறிப்பிட்டிருந்தது. இது ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதார உற்பத்தியில் சுமார் 3 சதவீதத்திற்குச் சமமானதாகும் என்பதோடு, ஜான் டி. ராக்பெல்லர் 1937 இல் இறக்கும் போது வைத்திருந்த பங்கை விட இருமடங்காகும்.

இந்தச் செல்வக் குவிப்பின் அளவை வெறும் எண்களால் மட்டும் விளக்கிவிட முடியாது. மஸ்க் தனது முதல் நிறுவனத்தைத் தொடங்கியதிலிருந்து கடந்த 31 ஆண்டுகாலப் பகுதியில் இந்தச் சொத்தைப் பகிர்ந்து கணக்கிட்டுப் பார்த்தால், 970 பில்லியன் டாலர் என்பது ஒரு மணி நேரத்திற்கு 3.6 மில்லியன் டாலராக வரும் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டது; அமெரிக்காவின் சராசரி  வருமானம் ஈட்டும் ஒரு குடும்பம் இந்தச் சொத்துக்கு இணையானதை ஈட்டுவதற்கு 11 மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.

மஸ்க் தனிப்பட்ட முறையில் அமெரிக்க நிதியியல் தன்னலக்குழுவிற்குள் இருக்கும் பிரம்மாண்டமான செல்வக் குவிப்பை பிரதிபலிக்கிறார், ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிலிருந்து ஒட்டுமொத்த அமெரிக்க நிதித்துறைக் கட்டமைப்பும் லாபமடையும். கோல்ட்மேன் சாக்ஸ், மோர்கன் ஸ்டான்லி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டிகுரூப் மற்றும் ஜேபிமோர்கன் ஆகிய வங்கிகள் 20-க்கும் மேற்பட்ட வங்கிகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்குகின்றன, இவை சுமார் 500 மில்லியன் டாலர் கட்டணத் தொகையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு வெளியீடு என்பது வரலாற்றிலேயே மிகப்பெரிய மூன்று ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுகளில் முதலாவதாக இருக்கும்; இவை அனைத்தும் இந்த ஆண்டிலேயே எதிர்பார்க்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) ஜூன் 1 அன்று சுமார் 965 பில்லியன் டாலர் மதிப்பில் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு விண்ணப்பித்துள்ளது, மேலும் அதன் போட்டியாளரான ஓபன்ஏஐ (OpenAI) சுமார் 852 பில்லியன் டாலர் மதிப்பில் அடுத்ததாக வர வாய்ப்புள்ளது; இந்த மூன்றும் சேர்ந்து 3.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையவை—இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீதமாகும்.

இந்த ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை சுமார் 1.75 டிரில்லியன் டாலராக மதிப்பிடுகிறது; இது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் ஒன்றாக அதை வரிசைப்படுத்துகிறது. ஆனால் வருவாயைப் பொறுத்தவரை, இது அமெரிக்க நிறுவனங்களுக்குள் சுமார் 200-வது இடத்தையே பிடிக்கும் என்பதோடு, தோராயமாக ஜெனரல் மில்ஸ் (General Mills) நிறுவனத்தின் அளவையே கொண்டிருக்கும்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சொந்தத் தகவல் அறிக்கை, அது “நிகர இழப்புகளின் வரலாற்றைக்” கொண்டுள்ளது என்றும் “எதிர்காலத்தில் லாபகரமான நிலையை அடையாமல் போகலாம்” என்றும் எச்சரிக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ் 2025 இல் 4.94 பில்லியன் டாலரையும், 2026 இன் முதல் காலாண்டில் மட்டுமே 4.28 பில்லியன் டாலரையும் இழந்துள்ளதுடன், அது தொடங்கப்பட்டதிலிருந்து 41.3 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டு விலையில் அதன் மதிப்பீடானது அதன் ஆண்டு வருவாயைப் போல 93.7 மடங்காகும்; இது டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஐந்து மடங்குக்கும் அதிகமானதாகும்.

எதிர்காலப் பொருளாதாரத்தின் ஆதிக்க நிலையை வகிக்கும் என்று அது உரிமை கோரும் தொழில்துறைகளான—விண்வெளி ஏவுதல், விண்வெளியில் இருந்து பூமிக்கான தகவல் தொடர்புகள் மற்றும் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் உள்ள தனது ஏகபோக அதிகாரத்தின் அடிப்படையில் ஸ்பேஸ் எக்ஸ் தன் மதிப்பீட்டை நியாயப்படுத்துகிறது. அதன் தகவல் அறிக்கை, ஏகபோகத்திற்கான ஒரு மறைமுகக் குறியீட்டு வார்த்தையான “செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்டது” என்ற சொற்றொடரைக் கிட்டத்தட்ட 40 முறை பயன்படுத்துகிறது.

அந்த அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எந்தவொரு முயற்சியும் எடுக்காது என்றே அந்த ஆவணம் கருதுகிறது. அது தாக்கல் செய்துள்ள விண்ணப்பப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள அபாயங்களில் சூரியப் பிழம்புகள், நுண் விண்கற்கள் (micrometeoroids) மற்றும் சுற்றுப்பாதையிலுள்ள சிதைந்த உதிரிபாகங்களுடனான மோதல்கள் ஆகியவை அடங்கும், ஆனால் “ஏகபோக எதிர்ப்பு” என்ற வார்த்தை ஒருமுறை கூட அதில் இடம் பெறவில்லை.

ஸ்பேஸ் எக்ஸ் தன்னை “பூமியிலும் (மற்றும் பூமிக்கு அப்பாலும்) செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புத்தாக்க இயந்திரம்” என்று வர்ணித்துக் கொள்கிறது; மேலும் “2023 முதல், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட ஒட்டுமொத்த நிறையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை நாங்களே ஏவியுள்ளோம்” என்று பெருமை பேசுகிறது. இது அமெரிக்க அரசாங்கத்திற்கான முதன்மை ஏவுதல் வழங்குநராக விளங்குகிறது என்பதோடு, அமெரிக்க அரசாங்கமும் அதற்குப் பெருமளவிலான லாபகரமான ஒப்பந்தங்களை அள்ளி வழங்குகிறது.

அதன் மூன்று வணிகங்களான—ஏவுதல், தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில்—செயற்கைக்கோள் வலைப்பின்னலான ஸ்டார்லிங்க் (Starlink) மட்டுமே லாபம் ஈட்டுகிறது. இருப்பினும், அந்தத் தகவல் அறிக்கை தனக்கு இருப்பதாக உரிமை கோரும் 28.5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பில், 26.5 டிரில்லியன் டாலரை செயற்கை நுண்ணறிவுத் துறையிலேயே முதலீடு செய்கிறது; ஆனால், இந்தத் துறையோ இதுவரை அந்த நிறுவனத்திற்கு நஷ்டங்களை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் பத்தியாளர் ரானா போரூஹர், இந்த 2,00,000 வார்த்தைகள் கொண்ட தகவல் அறிக்கை, “குறைந்தது ஓரளவிற்காவது ஏதோ போதைப்பொருள் லாகிரியில் இருந்த ஒருவரால் எழுதப்பட்டது போல் வாசிக்க முடிகிறது” என்று எழுதினார். ஆனால் அதேவேளையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் “அதிதீவிரமான ஒரு விஷயத்தைப் பிரதிபலிக்கிறது: அது, இதற்கு முன்பு அரசாங்கங்களின் பிரத்தியேக அதிகார வரம்பிற்குள் இருந்த விண்வெளியைத் தனியார்மயமாக்கும் பேராசையாகும்” என்று குறிப்பிட்டார்.

இந்த மதிப்பீடுகளுக்கும் உண்மையான மதிப்பு உருவாக்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நிஜப் பொருளாதாரத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிதிச் சொத்துக்களின் வீக்கமானது, ஒரு ஊக வணிக அலையின் மீது பங்குச் சந்தைகளைச் சாதனை அளவிலான உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. ஆனால், இந்த மாபெரும் ஊக அலை, செயற்கை நுண்ணறிவும் தானியங்கிமயமாக்கலும் (automation) மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான சமநிலையை மூலதனத்திற்குச் சாதகமாகத் தீர்க்கமாக மாற்றியமைக்கும், தொழிலாளர்களை வேலைகளிலிருந்து தூக்கி எறியும், ஊதியங்களைக் குறைக்கும் மற்றும் அதன் லாபப் பலன்களை இயந்திரங்களை உடைமையாகக் கொண்டுள்ளவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கும் என்ற வர்க்கப் பந்தயத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தொழில்நுட்பத் துறை இந்த ஆண்டு மட்டும் 1,40,000-க்கும் அதிகமான வேலைகளைக் குறைத்துள்ளது; அவற்றில் பல செயற்கை நுண்ணறிவு காரணமாக நிகழ்ந்தவையாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பை 1.75 டிரில்லியன் டாலரை நோக்கி ஏலமிட்டு உயர்த்தும் முதலீட்டாளர்கள், தொழிலாள வர்க்கம் முழுமையாக வறுமையில் தள்ளப்படும் என்ற வாக்குறுதிக்காகவே தங்களது பணத்தைக் கொட்டுகிறார்கள்.

மூலதனத்தின் (Capital) மூன்றாவது பாகத்தில், கார்ல் மார்க்ஸ் கடன் முறையின் இருமுகத் தன்மையை விவரித்தார்; அதன் “இரண்டு பண்புகள்” என்னவெனில், “ஒருபுறம், முதலாளித்துவ உற்பத்தியின் உந்துதலை—அதாவது பிறருடைய உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் செல்வத்தைப் பெருக்குவதை—சூதாட்டம் மற்றும் மோசடியின் மிகத் தூய்மையான மற்றும் பிரம்மாண்டமான வடிவமாக வளர்ப்பதுடன், சமூகச் செல்வத்தைச் சுரண்டும் ஒரு சில தனிநபர்களின் எண்ணிக்கையை மேலும் மேலும் குறைப்பதாகும்; மறுபுறம், ஒரு புதிய உற்பத்தி முறைக்கு மாறுவதற்கான வடிவத்தை உருவாக்குவதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த “முரண்பாடுகள் நிறைந்த இருமுகத் தன்மைதான்” முதலாளித்துவத்தின் முன்னணி நபர்களுக்கு “மோசடிக்காரன் மற்றும் தீர்க்கதரிசி ஆகியோரின் இன்பகரமான குணநலன் கலவையை” அளிக்கிறது என்று மார்க்ஸ் எழுதினார்.

சமூகத்தின் உச்சியில் இருக்கும் இந்த பிரம்மாண்டமான செல்வக் குவிப்பு, பெரும்பான்மையான மக்களின் வறுமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம், அமெரிக்காவில் 47.9 மில்லியன் மக்கள்—அதாவது ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பம்—உணவை நம்பகத்தன்மையுடன் வாங்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயத் துறை அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்கக் குடும்பங்களில் உள்ள அதிபணக்கார 1 சதவீதத்தினர் நாட்டின் ஒட்டுமொத்தச் செல்வத்தில் 31.7 சதவீதத்தைத் தங்களது கைவசம் வைத்துள்ளனர், இது ஒரு சாதனையாகும்; அவர்களின் வசம் உள்ள 50 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான இந்தச் சொத்து மதிப்பு என்பது, அடிமட்டத்திலுள்ள 90 சதவீத மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வைத்துள்ள சொத்துக்கு இணையானதாகும்.

இவ்வளவு செறிந்த செல்வக் குவிப்பு ஜனநாயகத்துடன் இணைந்து இருக்க முடியாது. மஸ்க், தனது செல்வத்தில் மட்டுமன்றி, பாசிசத்தை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதிலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அசல் முகமாகத் திகழும் தனது கலாச்சாரப் பின்தங்கிய நிலையிலும், ஒரு குற்றவியல் நிதி தன்னலக்குழுவின் மிக மோசமான பிரதிநிதியாக விளங்குகிறார். அவர் இரண்டாவது ட்ரம்பின் நிர்வாகத்திற்குள் பணத்தைக் கொட்டினார், அதன் கூட்டாட்சிப் பணியாளர்களை ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னின்று நடத்தினார்; மேலும் ஜேர்மனியின் தீவிர வலதுசாரியான ‘ஜேர்மனிக்கான மாற்று’ (AfD) கட்சிக்கும், பிரிட்டிஷ் பாசிசவாதியான டாமி ராபின்சனுக்கும் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் என்பது இந்த தன்னலக்குழுவின் அரசாங்கமாகும். சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அதன் சதித்திட்டம், ஜனநாயக உரிமைகள் மீதான அதன் கொடூரத் தாக்குதல், உலகெங்கிலும் அது நடத்தும் போர்கள் மற்றும் வெளிநாடுகளில் அதன் கொள்ளையடிப்புகள் ஆகியவை—தங்களது செல்வத்தை இனிமேலும் ஜனநாயக வடிவங்களுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத ஒரு ஆளும் வர்க்கத்தின் திட்ட நிரலாகும். இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியம்; மஸ்க் அதன் முகமாக இருக்கிறார்.

இந்தச் செல்வக் குவிப்பின் அளவு, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஒவ்வொரு சீர்திருத்தவாதப் பதிலிறுப்பின் பயனற்ற தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெர்மான்ட் மாநில செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் மற்றும் எக்ஸ்ஏஐ (xAI) நிறுவனங்களின் பங்குகள் மீது விதிக்கப்படும் வரியின் மூலம் நிதியளிக்கப்படும் ஒரு “அமெரிக்க செயற்கை நுண்ணறிவு இறையாண்மை செல்வ நிதி தணிக்கையாளரை” முன்மொழிந்தார்.

இந்த முன்மொழிவு, உண்மையில், தொழில்நுட்பத் தன்னலக்குழுக்கள் தாங்களாகவே மீண்டும் மீண்டும் முன்மொழிந்ததைத் தவிர வேறொன்றுமில்லை. சாண்டர்ஸின் கட்டுரை, “செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் வேலையின்மையை எதிர்கொள்ள, “கூட்டாட்சி அரசாங்கத்தால் வழங்கப்படும் காசோலைகள் மூலமாக ‘உலகளாவிய உயர் வருமானம்’ வழங்குவதே சிறந்த வழி” என்ற எலோன் மஸ்க்கின் பிரகடனத்தைச் சாதகமாக மேற்கோள் காட்டியுள்ளது. இது ஓபன்ஏஐ -இன் சாம் ஆல்ட்மேன் முன்வைத்த அதே திட்டமாகும். அவர்கள் ஒருபோதும் வழங்க உத்தேசிக்காத, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இத்தகைய “உலகளாவிய அடிப்படை வருமானம்” திட்டங்களை மக்களுக்கு உறுதியளித்துக் கொண்டே, இந்தத் தன்னலக்குழுக்கள் சமூகத்தின் செல்வத்தில் எப்போதும் இல்லாத அளவு ஒரு பெரும் பங்கைத் தங்களது வசமாக்கிக் கொள்கிறார்கள்.

சாண்டர்ஸின் முன்மொழிவு ஜனநாயகக் கட்சியின் பயனற்ற திட்டத்தையே பிரதிபலிக்கிறது; இக்கட்சி தான் விமர்சிப்பதாகப் பாசாங்கு செய்யும் நிதித் தன்னலக்குழுவிற்காகவே உண்மையில் குரல் கொடுக்கிறது.

நிதித் தன்னலக்குழுவின் அதிகாரத்தை வெறும் மேலோட்டமான மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டும் உடைத்துவிட முடியாது. நடைமுறைக்குச் சாத்தியமான ஒரே திட்டம், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது மட்டுமேயாகும். மஸ்க் மற்றும் அவரது சக தன்னலக்குழுக்களின் செல்வம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, சமூகத்தின் பொதுச் சொத்தாக்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீதான இந்தத் தன்னலக்குழுவின் இறுக்கமான பிடி உடைக்கப்பட வேண்டும்; அது தொழிலாள வர்க்கத்தின் ஒரு மாபெரும் வெகுஜன இயக்கத்தின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். ஆளும் வர்க்கத்தின் கைகளில் இருக்கும் வரை, இந்தத் தானியங்கிமயமும் செயற்கை நுண்ணறிவும் தொழிலாளர்களுக்கு எதிரான ஆயுதங்களாகும்; அதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் கைகளில் ஒப்படைக்கப்படும் போது, அவை உற்பத்தித் திறனையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் பெருமளவில் மேம்படுத்தக் கூடியவையாக மாறும்.

இதற்கான ஆற்றல் கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும்; அது போராட்டத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறது. மில்லியன் கணக்கான மக்களால் தங்களது வாடகை அல்லது உணவிற்கான செலவைக்கூடச் சமாளிக்க முடியவில்லை; இன்னும் மில்லியன் கணக்கானவர்கள், இந்தத் தன்னலக்குழு உருவாக்கி வரும் அதிநவீன இயந்திரங்களுக்குள் தங்களது வேலைவாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருப்பதை நேரில் காண்கிறார்கள்; தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்பு எவ்வாறாவது கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் கோபம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

1789 மற்றும் 1917 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போலவே, இந்த அளவிலான செல்வக் குவிப்பானது, தவிர்க்க முடியாத தர்க்கத்துடன் நிச்சயமாக மாபெரும் சமூக எழுச்சியையும் புரட்சியையும் உருவாக்கும்.

இன்றைய காலகட்டத்திற்குத் தேவைப்படுவது ஒரு நனவான சோசலிசத் தலைமையாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) முன்னோக்கு என்பது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், மனிதத் தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுசீரமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதேயாகும். இந்தத் தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணி, தொழிலாள வர்க்கத்தின் சொந்தப் பணியாகும்.

Loading