வெள்ளிக்கிழமையன்று, எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். முதலீட்டு வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்று, வியாழக்கிழமை இரவு நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) பங்கின் விலையை 135 டாலராக நிர்ணயித்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கியபோது 150 டாலராக எகிறிய பங்கின் விலை, அன்றைய வர்த்தகத்தின் இடையே 30 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் சுமார் 19 சதவீத வளர்ச்சியுடன் 161 டாலராக நிலைபெற்றது. இது நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பை தோராயமாக 2.1 டிரில்லியனாக உயர்த்தியது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பங்குகளின் மதிப்பின் அடிப்படையில், மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 1.1 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (offering) முன்பு அது சுமார் 810 பில்லியன் டாலராக இருந்தது. பங்கு விலை நிர்ணயமும் சந்தை அறிமுகமும் சேர்ந்து, வெறும் இரண்டே நாட்களில் அவரது சொத்தை 300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்தன. வியாழக்கிழமை விலை நிர்ணயத்தின் மூலம் மட்டுமே சுமார் 188 பில்லியன் டாலர் அதிகரித்தது; எதுவுமற்ற நிலையிலிருந்து வெறும் மாயமாய் உருவாக்கப்பட்டு, வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான மேல்நோக்கிய செல்வப் பரிமாற்றமாக இது திகழ்கிறது.
பெருநிறுவன ஊடகங்கள் இந்நிகழ்வை மிகுந்த பரவசத்துடன் வரவேற்றதோடு, தன்னலக்குழுவின் கொண்டாட்டங்களை மூச்சடைக்க வைக்கும் வியப்புத் தொனியில் உலகிற்கு ஒளிபரப்பின. டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள நாஸ்டாக் கட்டிடத்தின் மேலே, விண்வெளி வீரர் உடைகளை அணிந்த ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்கள் திரண்டிருந்த வேளையில், வர்த்தக நேர முடிவைக் குறிக்கும் விதமாக, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற செவ்வாய் கிரகமாக மறுவடிவமைக்கப்பட்ட புத்தாண்டு இரவுக்கான பந்து மேலே உயர்த்தப்பட்டது. மாலையில், இந்த பங்கு வெளியீட்டை முன்னின்று நடத்திய முன்னணி முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கன் சேஸ், அதன் பார்க் அவென்யூ கோபுரத்தில் ஒரு “விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான” பிரம்மாண்டமான கொண்டாட்ட விழாவை நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் விவரித்தது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பீடு, எந்தவொரு உண்மையான உற்பத்தி செயல்முறையுடனும் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. ஸ்பேஸ்எக்ஸ் 2025 ஆம் ஆண்டில் 18.7 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றிருந்தபோதிலும், 4.9 பில்லியன் டாலர் நஷ்டத்தையே சந்தித்தது. தானாகவே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க குமிழியின் (historic bubble) பிடியில் சிக்கியுள்ள எஸ்பி 500 (S&P 500) குறியீட்டிலுள்ள சராசரி நிறுவனம் ஒன்றின் பங்குகள், அதன் வருடாந்திர வருவாயை விட நான்கு மடங்குக்கும் குறைவான மதிப்பிலேயே வர்த்தகமாகின்றன; அப்படியிருக்க, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமோ அதன் வருடாந்திர வருவாயைப் போல் தோராயமாக 95 மடங்கு அதிக மதிப்பில் வர்த்தகமாகிறது.
இதனுடன் ஒப்பிடுகையில், ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனம் 2025 இல் 187 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது; இது ஸ்பேஸ்எக்ஸின் வருவாயை விட பத்து மடங்காகும். ஆனால், அதன் சந்தை மதிப்போ சுமார் 70 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. ஒருவேளை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் விகிதத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டால், அதன் மதிப்பு 17.7 டிரில்லியன் டாலராக இருக்கும்—இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை விட அதிகமாகும்; மேலும், தற்போது சுமார் 82 டாலராக இருக்கும் அதன் ஒரு பங்கின் விலை தோராயமாக 21,000 டாலர்களாக இருக்கும். இதே கணக்கீட்டின்படி, வால்மார்ட் (Walmart) நிறுவனம் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான, அதாவது 65 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறும்; எக்ஸான்மொபில் (ExxonMobil) நிறுவனத்தின் மதிப்போ 32 டிரில்லியன் டாலரை எட்டும்.
ஸ்பேஸ்எக்ஸ் தனது சொந்தப் பங்கு வெளியீட்டுத் தகவல் அறிக்கையில், இந்த மதிப்பீட்டைத் தனது ஏகபோகக் கட்டுப்பாட்டின் மூலம் நியாயப்படுத்துகிறது; இதை அது மீண்டும் மீண்டும் “செங்குத்து ஒருங்கிணைப்பு” என்று குறிப்பிடுகிறது. 2023 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் புவி வட்டப்பாதைக்குச் செலுத்தப்படும் ஒட்டுமொத்த எடையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைத் தானே ஏவியதாக அது பெருமையடித்துக் கொள்கிறது; அதோடு, அதன் ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பு செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளின் மீது ஒரு இறுக்கமான பிடியைக் கொண்டுள்ளது. மேலும், விண்வெளி சுற்றுப்பாதையிலான செயற்கை நுண்ணறிவு கணினி உள்கட்டமைப்பு என்னும் அடுத்த எல்லையைக் கைப்பற்றவும் அது தன்னைத் தயார்படுத்தி வருகிறது. விண்கல ஏவுதல், தகவல் தொடர்பு மற்றும் கணினி உள்கட்டமைப்புகளில் ஸ்பேஸ்எக்ஸ் ஏகபோக உரிமையைப் பெறும் என்றும், அது வழிநடத்தப் போவதாக உறுதியளிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவுப் புரட்சியானது தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை மூலதனம் மிகக் கொடூரமான முறையில் தீவிரப்படுத்த வழிவகுக்கும் என்றும் வால் ஸ்ட்ரீட் பந்தயம் கட்டுகிறது.
ஆனால் ஏகபோகம் என்பது—ஸ்பேஸ்எக்ஸின் பிடி எவ்வளவுதான் உண்மையானதாக இருந்தாலும்—தானாகவே எந்தவொரு புதிய மதிப்பையும் தோற்றுவித்துவிடாது; மாறாக, அது வேறு இடங்களில் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் உபரி மதிப்பின் ஒரு பெரும் பகுதியை மட்டுமே தன்வசப்படுத்த முடியும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் மீது செலுத்தப்படும் எந்தவொரு ஆதிக்கமுமே, 2.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தொட்டுவிடக்கூடிய அளவிலானதொரு இலாப ஓட்டத்தை உருவாக்கித் தந்துவிட முடியாது
ஸ்பேஸ்எக்ஸ் என்பது ஏதோ ஒரு தனித்த நிகழ்வு அல்ல; மாறாக, அது ஒட்டுமொத்தமாக நடந்துவரும் ஒரு பரந்த செயல்முறையின் மிகத் தீவிரமான வெளிப்பாடாகும். ஒட்டுமொத்த அமெரிக்கப் பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு இப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 232 சதவீதமாக உள்ளது. அதாவது, அமெரிக்கச் சந்தைகளின் மதிப்பு அந்த நாடு ஓராண்டில் உற்பத்தி செய்யும் அனைத்தையும் விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்; இந்த நிலை, முந்தைய டாட்-காம் குமிழியின் (dot-com bubble) உச்சக்கட்டத்தை விடவும் மிக அதிகமானதொரு மட்டமாகும்.
ஒட்டுமொத்த எஸ்பி 500 (S&P 500) குறியீட்டின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பங்கை வெறும் ஏழு நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்குள் கொண்டுள்ளன. தொழில்நுட்பப் பெருநிறுவனமான என்விடியா மட்டுமே 5 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் வர்த்தகமாகிறது; இது அமெரிக்கா மற்றும் சீனாவைத் தவிர, உலகிலுள்ள வேறு ஒவ்வொரு நாட்டின் ஆண்டு உற்பத்தி மதிப்பை விடவும் அதிகமாகும்.
பங்கு மதிப்புகளின் இந்த முடிவற்ற உயர்வு என்பது திட்டமிட்ட அரசுக் கொள்கையின் விளைபொருளாகும். கடந்த கால் நூற்றாண்டுகளாக, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் என இருதரப்பு ஆட்சியின் கீழும், பெடரல் ரிசர்வ் அடுத்தடுத்து வழங்கிய பிணை எடுப்புகள் மூலம் வால் ஸ்ட்ரீட்டிற்குள் பல டிரில்லியன் டாலர்களைப் பாய்ச்சியுள்ளது; இதனால் ஊதியங்கள் தேக்கமடைந்து, சமூகச் செலவினங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களின் விலைகள் விண்முட்டும் அளவுக்கு உயர்ந்தன. மீண்டும் ஒரு சந்தை வீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில், மற்றொரு பிரம்மாண்டமான பிணை எடுப்பு நிச்சயம் உத்தரவாதம் அளிக்கப்படும் என்பதையும், அதற்கான செலவு இறுதியாகத் தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்தப்படும் என்பதையும் இந்தத் தன்னலக்குழு நன்கு அறிந்திருக்கிறது.
இந்த ஊக வெறியின் மிக நேரடிப் பயனாளி மஸ்க் ஆவார்; ஆனால், இதில் ஒரு மனிதனின் அதீத செல்வக் குவிப்பைத் தாண்டிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன.
2008 இல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைக்கு நெருங்கியிருந்தபோது அதில் 20 மில்லியன் டாலர்களை முதலீடு செய்த பீட்டர் தீலின் பவுண்டர்ஸ் ஃபண்ட் (Founders Fund), இப்போது 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான கணக்கேட்டு லாபத்தை அள்ளிக்கொண்டு வெளியேறுகிறது — இது வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒற்றை துணிகர முதலீட்டு லாபமாக என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் இயக்குநரும் வாலர் ஈக்விட்டி பார்ட்னர்ஸ் (Valor Equity Partners) நிறுவனத்தின் நிறுவனருமான அன்டோனியோ கிராசியாஸ், 65 பில்லியன் டாலர் வரையிலான மதிப்புள்ள பங்குகளைக் கொண்டுள்ளார். கூகுளின் பங்கின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. செக்வோயா கேபிடல் (Sequoia Capital), ஆண்ட்ரிசென் ஹொரோவிட்ஸ் D1 மற்றும் கோட்யூ ஆகிய ஹெட்ஜ் நிதியங்கள், கேத்தி வுட்டின் ஆர்க், மாபெரும் பரஸ்பர நிதி நிறுவனமான ஃபிடிலிட்டி— என ஒவ்வொன்றும் தங்களுக்கான லாபப் பங்கைத் தடையின்றிப் பெறுகின்றன.
மஸ்க்கின் ட்ரில்லியன் டாலர் மதிப்பு என்பது மிகவும் பரந்ததொரு செல்வக் குவிப்பின் உச்சமுனை மட்டுமேயாகும். அமெரிக்கா இப்போது 935 பில்லியனர்களைக் கொண்டுள்ளது; இது இதற்கு அடுத்த இடங்களிலுள்ள ஒன்பது நாடுகளின் பில்லியனர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஓராண்டில் மட்டுமே அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்குப் பெருகியது; 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி இருந்த அனைத்து அமெரிக்க பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பை விட, இன்றுள்ள பதினான்கு பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. மஸ்க்கிற்கு அடுத்தபடியாக ஜெஃப் பெசோஸ் சுமார் $260 பில்லியனுடனும், லாரி எலிசன் $237 பில்லியனுடனும், கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தலா கிட்டத்தட்ட $300 பில்லியனுடனும், மார்க் ஜுக்கர்பெர்க் $200 பில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்புடனும் உள்ளனர். இதற்கு நேர் எதிர் முனையில், அமெரிக்கக் குடும்பங்களில் அடிமட்டத்திலுள்ள பாதிப் பிரிவினர் நாட்டின் ஒட்டுமொத்தச் செல்வத்தில் வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.
ஊக வணிகம் மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் மீது தனது செல்வத்தைக் கட்டியெழுப்பியுள்ள ஒரு தன்னலக்குழு, குற்றத்தன்மையும் குண்டர்தனமும் கொண்ட ஒரு வெளியுறவுக் கொள்கையை நடத்தி வருகிறது. இந்த வாரம் நாஸ்டாக்கில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சந்தைக்கு வந்துகொண்டிருந்த அதே வேளையில், ஈரானின் மீது அமெரிக்கக் குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன; முன்னதாக “ஒரு முழு நாகரிகமே அழியும்” என்று அச்சுறுத்திய ட்ரம்ப், அந்நாட்டின் எண்ணெய் வயல்களையும் சுத்திகரிப்பு நிலையங்களையும் கைப்பற்ற முன்மொழிவதோடு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் முன்வைத்து வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் அமெரிக்கப் போர், இப்போது ஒரு உலகப் போரின் ஆரம்ப கட்டங்களுக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமே பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மூலம் பென்டகனுடனும் உளவு அமைப்புகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்பு, உக்ரேன் முதல் மத்திய கிழக்கு வரையிலான தீவிரப் போர் மண்டலங்களின் தகவல் தொடர்புகளோடு ஏற்கனவே பின்னிப்பிணைந்துள்ளது. தற்போது 2.1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பாக மூலதனமாக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி சுற்றுப்பாதை உள்கட்டமைப்பானது, ஒரு முக்கிய பகுதியில், அமெரிக்கப் போருக்கானதொரு கருவியாகவே செயல்படுகிறது.
உள்நாட்டில், இந்தத் தன்னலக்குழு ட்ரம்ப் ஆட்சியில் தனது உண்மையான பிரதிநிதியைக் கொண்டுள்ளது: அது சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்புகளை பகிரங்கமாக அவமதிக்கும் குண்டர்கள் மற்றும் மோசடிப் பேர்வழிகளின் அரசாங்கமாகும். மஸ்க் கடந்த பதினெட்டு மாதங்களை சர்வதேச தீவிர வலதுசாரிகளுக்கு நிதியுதவி செய்வதில் செலவிட்டார்: ஜேர்மனியின் AfD கட்சியை ஆதரிப்பது, பிரிட்டிஷ் பாசிசவாதியான டாமி ராபின்சனை ஊக்குவிப்பது, போல்சனாரோ ஆதரவாளர்களுக்காக பிரேசீலின் நீதிமன்றங்களுக்கு எதிராகப் போர் தொடுப்பது மற்றும் தீவிர வலதுசாரிகளின் புகலிடமாக மாற்றுவதற்காக அவர் வாங்கிய எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் உள்ள 200 மில்லியன் பின்பற்றுபவர்களுக்கு யூத-விரோத “மகா மாற்றீடு” சதித் திட்டக் கோட்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றைச் செய்தார்.
மஸ்க்கிற்கும் அவரது சக தன்னலக்குழுவினருக்கும் அள்ளிக்கொடுக்கப்படும் ஒவ்வொரு டாலரும் தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்தப்படும் ஒரு பெருஞ்சுமையாகும்; இது அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் மீதான கொடூரமான தாக்குதலின் மூலம் — அதாவது ஊதியக் குறைப்பு மற்றும் பாரிய பணிநீக்கங்கள், சுகாதாரம், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுக் கல்வியைச் சீரழிப்பது, லாபத்திற்கும் அதை உருவாக்கும் உழைப்பிற்கும் இடையில் அரணாக நிற்கும் ஒவ்வொரு சமூகப் பாதுகாப்பையும் அழிப்பது ஆகியவற்றின் மூலமாகவே வசூலிக்கப்படவுள்ளது.
ஆனால், இந்தத் தாக்குதல் வளர்ந்து வரும் எதிர்ப்பையே தோற்றுவித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத செல்வக் குவியலைக் கொண்ட ஒரு தன்னலக்குழுவை மேலே உயர்த்திய அதே செயல்முறைதான், தொழிலாள வர்க்கத்தைப் போராட்டப் பாதையை நோக்கித் தள்ளுகிறது. மஸ்க்கின் செல்வக் களிப்போடு ஒரே நேரத்தில் நிகழும் சமூக வெடிப்புகளைக் கண்டு எதிர்கால வரலாற்றாசிரியர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்; மாறாக, அவை முற்றிலும் தவிர்க்க முடியாதவை என்றே அவர்கள் கருதுவார்கள்.
தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம், ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தைக் கையில் ஏந்தி, வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதன் மூலமே நடத்தப்பட வேண்டும். தன்னலக்குழுவினரிடம் “அவர்களின் நியாயமான பங்கைச் செலுத்துமாறு” எப்போதும் கெஞ்சிக் கொண்டிருக்கும் பெர்னி சாண்டர்ஸ் முதல், ஒரு டாலருக்கு இரண்டு காசுகள் என்ற லூலாவின் முன்மொழியப்பட்ட “பில்லியனர் வரி” வரை, மற்றும் வெள்ளிக்கிழமையன்று மஸ்க்கின் புதிய செல்வக் குவிப்பைக் கண்டு “பணக்காரர்களுக்கு வரி விதிப்போம்” என்ற அழைப்போடு வரவேற்ற நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி வரை — அனைவரும் அமைப்பின் ஓர விளிம்புகளில் மட்டும் சில மாற்றங்களைச் செய்ய முயல்கிறார்கள்; தங்களால் ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிந்தே இத்தகைய சிறு சீர்திருத்தங்களை அவர்கள் முன்மொழிகிறார்கள்.
முதன்மையான அச்சுறுத்தல் இந்தத் தன்னலக்குழுவும், பொருளாதார வாழ்வின் மீது அது கொண்டுள்ள இறுக்கமான பிடியும்தான். வங்கிகளும் பெருநிறுவனங்களும், அவற்றுடன் தொழிலாள வர்க்கம் உருவாக்கியுள்ள மகத்தான உற்பத்திச் சக்திகளும் தனியார் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுப் பொது உடைமையாக்கப்பட வேண்டும்; அத்துடன் அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஒருசில ஒட்டுண்ணிகளின் லாபத்திற்காக அல்லாமல் மனிதகுலத்தின் ஒட்டுமொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சிலருக்கு டிரில்லியன்களைக் குவித்துக்கொண்டு, பில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குத் தள்ளி, உலகைச் சர்வாதிகாரத்தையும் போரையும் நோக்கித் தள்ளும் ஒரு சமூக ஒழுங்கிற்கு இதுவே ஒரே பகுத்தறிவுப்பூர்வமான தீர்வாகும். ஸ்பேஸ்எக்ஸ் பொதுப் பங்கு வெளியீடு என்பது சோசலிசத்தின் தேவையை உணர்த்தும் மிக வலுவான சான்றாகும்.
