ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) அரசியலமைப்பு மாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்க முதலாளித்துவம் தனது முதல் ட்ரில்லியனரை உருவாக்கியுள்ளது. ஜூன் 12 வெள்ளிக்கிழமை அன்று, எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு, அவரது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சாதனை அளவிலான பங்குச்சந்தை அறிமுகத்துடன் ஒரு டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.
அமெரிக்கா, ஜூலை 4, 1776 இல் சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டதன் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. உலக வரலாற்றிலேயே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு, ஒரு தனி மனிதனிடம் இந்த அளவுக்கு அருவருப்பாக செல்வம் குவிந்திருப்பது, “மனிதர்கள் அனைவரும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள்” என்ற ஜெபர்சனின் கூற்றை கேலிக்குரியதாக்குகிறது.
எலோன் மாஸ்க்கின் சொத்து மதிப்பின் அளவை உண்மையில் புரிந்துகொள்வது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் என்பது ஆயிரம் பில்லியன்கள் அல்லது ஒரு மில்லியன் மில்லியன்கள் ஆகும். ஒரு ட்ரில்லியன் டாலர் நோட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக நீளமாக அடுக்கினால், அது சுமார் 96 மில்லியன் மைல்கள் வரை நீளும்—இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட அதிகமாகும். ஒரு வாகன உற்பத்தித்துறை தொழிலாளியின் ஊதியத்தைக் கொண்டு அளவிட்டால், ஒரு டிரில்லியன் டாலர் என்பது 20 மில்லியன் (2 கோடி) ஆண்டுகால உழைப்புக்குச் சமமானதாகும்.
மாஸ்க்கின் செல்வம் என்பது ஒரு முதலாளித்துவ தன்னலக் குழுவால் சமூகம் கொள்ளையடிக்கப்படுவதன் மிக மோசமான உதாரணம் மட்டுமே ஆகும். இவர்தான் முதல் ட்ரில்லியனர் ஆவார். இன்றைய பிற பெரும்-பில்லியனர்கள் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கும்பலில் இணைவதற்கு அதிக காலம் பிடிக்காது.
தற்போதைய செல்வக் குவிப்பின் அளவை, ஆழமான சீர்கெட்ட பொருளாதார முறை மற்றும் செயலிழந்த சமூகத்தின் அறிகுறி என்று வாதிட வேண்டிய அவசியமே இல்லை. ட்ரம்ப்பின் ஆட்சி என்பது, ஒரு பாசிச பொலீஸ் சர்வாதிகாரத்தை உருவாக்குவதன் மூலம் தனது செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தன்னலக் குழுவின் உந்துதலின் அரசியல் வெளிப்பாட்டைத் தவிர வேறொன்றுமில்லை.
இதற்கும் UAW இன் அரசியலமைப்பு மாநாடு தொடங்குவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? ஒரே வார்த்தையில் சொல்வதானால், எல்லாமே சம்பந்தப்பட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டில் ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர் சங்கம் ஆற்றிய பங்கை ஆராயாமல், அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையின் வெடிப்பை புரிந்து கொள்வது சாத்தியமற்றது.
ஒற்றுமைக் கூடத்தில் (Solidarity House) இருந்த அதிகாரத்துவவாதிகள், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் பெருநிறுவனங்களின் இலாப வெறிக்கு எதிரான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் ஒடுக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை ஏற்றுக்கொண்டனர். பல பத்தாண்டு காலமாக விலைபோகுதல்களுடன் வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட சட்டவிரோதமாக்கப்பட்டது, சலுகை ஒப்பந்தங்கள் திணிக்கப்பட்டது, ஊதியக் குறைப்பு, நலத்திட்ட உதவிகள் வெட்டப்பட்டது, 40 மணி நேர வேலை வாரம் ஒழிக்கப்பட்டது, உற்பத்தித்திறன் பெருமளவில் அதிகரித்தது. அதன் விளைவாகத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சிகண்டது. இவை அனைத்தும் இல்லாமல், தன்னலக் குழுவின் செல்வக் குவிப்பு சாத்தியமாகியிருக்காது.
1979 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்தன. கிரைஸ்லர் நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்தபோது, UAW சங்கத்தின் தலைவர் டக்ளஸ் பிரேசர் முன்னெப்போதும் இல்லாத அளவில், சலுகைகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன் பலனாக, 1980-ல் கிறைஸ்லரின் இயக்குநர் குழுவில் ஓர் இடம் அவருக்கு வழங்கப்பட்டது—ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் அமர்ந்தது அதுவே முதல் முறையாகும். 1982-ஆம் ஆண்டிற்குள், UAW சங்கமானது கிறைஸ்லருக்கு 1.1 பில்லியன் டாலர் தொகையைத் திரும்ப வழங்கியிருந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டிருந்தன; கிட்டத்தட்ட 30 ஆலைகள் மூடப்பட்டிருந்தன; இதே மாதிரிதான் போர்டு (Ford) மற்றும் ஜிஎம் (GM) நிறுவனங்களிலும் திணிக்கப்பட்டது.
1980களில் தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் மூலம், கூட்டாண்மைவாத (corporatism) திட்டத்தை UAW தழுவியது: அதாவது தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரே மாதிரியான நலன்கள் இருப்பதாகக் கூறுவது. நடைமுறையில், இது தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்க அதிகாரிகள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு ஆகியோரின் வரம்பற்ற ஒத்துழைப்பைக் குறித்தது. இந்த அதிகாரத்துவ தொழிற்சங்க அமைப்பு, நிறுவனங்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கூட்டு “பயிற்சி மைய” நிதிகளின் மூலம் பெருகிய முறையில் தக்கவைக்கப்பட்டது. இதுவே பின்னர் டசினுக்கும் மேற்பட்ட உயர்மட்ட UAW தொழிற்சங்க அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்பிய ஊழலின் பொருள்சார்ந்த அடித்தளமாக அமைந்தது.
UAWயின் காட்டிக்கொடுப்பு மட்டும் இதில் தனியாக இல்லை. 1981 இல், ரீகன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11,000ம் PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை பணிநீக்கம் செய்தபோது, AFL-CIO தொழிற்சங்கம் அவர்களுக்கு ஆதரவாக ஒரு விரலைக்கூட அசைக்க மறுத்து, அந்த வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தி, அது நசுக்கப்படுவதற்கு அனுமதித்தது. இந்தக் காட்டிக்கொடுப்பு எஃகு, இறைச்சிப் பொதி செய்தல், சுரங்கம் மற்றும் வாகனத் துறை ஆகியவற்றுக்குள்ளாகப் பரவிய ஒரு பெருநிறுவனத் தாக்குதலின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒவ்வொரு தாக்குதலுக்கும் “வேலைகளைக் காப்பாற்றுவது” என்ற பெயரில் சலுகைகளை விட்டுக் கொடுத்துப் பதிலளித்தது.
உலகப் பொருளாதாரத்திலும் இதற்கு இணையான செயல்முறைகள் நடந்து கொண்டிருந்தன, எல்லாவற்றிற்கும் மேலாக, உற்பத்தியின் உலகமயமாக்கல் மற்றும் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் தேசிய அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பின் முறிவு ஆகியவை நிகழ்ந்தன. முதலாளித்துவ உலகமயமாக்கலை எதிர்கொண்ட முதலாளித்துவ ஆதரவு மற்றும் தேசியவாத அதிகாரத்துவம், தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் எந்தவொரு சர்வதேச மூலோபாயத்தையும் நிராகரித்ததுடன், பெருநிறுவன நிர்வாகத்திலும் அரசிலும் முன்னெப்போதையும் விட நேரடியாகத் தன்னை இணைத்துக் கொண்டது.
தொழிலாளர்களுக்கு இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. UAW இன் உறுப்பினர் எண்ணிக்கை 1970களின் இறுதியில் 1.5 மில்லியனாக இருந்ததில் இருந்து இன்று தோராயமாக 370,000 ஆகக் குறைந்துள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் வாகனத் துறை தொழிலாளர்கள் பாதி மட்டுமே உள்ளனர். ஏனெனில் UAW மற்ற துறைகளில், குறிப்பாக பல்கலைக்கழகங்களில் சந்தா செலுத்தும் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. ஹார்வர்ட் கல்வித்துறை ஊழியர்கள் சமீபத்தில் கண்டறிந்தது போல, இந்தத் தொழிலாளர்களும் வாகனத் தொழிலாளர்களைப் போலவே அதே துரோகங்களுக்கும் ஜனநாயக விரோத சூழ்ச்சிகளுக்கும் ஆளாகின்றனர்.
தொழிற்சங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ஜிஎம் (GM) மற்றும் கிரைஸ்லர் (Chrysler) நிறுவனங்களின் 2009 ஆம் ஆண்டு ஒபாமா கால திவால்நிலைகள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்ததுடன், இரு அடுக்கு ஊதிய முறையை நிலைநிறுத்தின. UAW தொழிற்சங்க எந்திரம், உதிரிப் பாகங்கள் தயாரிப்புப் பிரிவுகளான ஜிஎம்-மிலிருந்து டெல்ஃபியையும் (Delphi), போர்டிலிருந்து விஸ்டியோனையும் (Visteon) குறைந்த ஊதியம் பெறும் உதிரிபாகத் துறையாகப் பிரித்து விடுவதைக் கண்காணித்து வழிநடத்தியது.
இதே தசாப்தங்களில், உற்பத்தித் திறன் கடுமையாக உயர்ந்த அதே வேளையில், ஊதியங்கள் தேக்கமடைந்தன அல்லது வீழ்ச்சியடைந்தன. அசெம்பிளி பிரிவின் உண்மையான அதிகபட்ச ஊதியம் தோராயமாக 1978 இல் இருந்த இடத்திலேயேதான் உள்ளது, மேலும் வாகனத் துறையின் சராசரி உண்மையான ஊதியம் 2008 மற்றும் 2023 க்கு இடையில் மட்டும் 19 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்தது. புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களிடமிருந்து ஓய்வூதியங்கள் பறிக்கப்பட்டன, ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு தொழிற்சங்கக் கட்டுப்பாட்டில் உள்ள VEBA (தன்னார்வ ஊழியர் நலச் சங்கம்) அறக்கட்டளைகளுக்கு மாற்றப்பட்டது, மேலும் தொழிலாளர் செலவுகள் ஒரு வாகனத்தின் விலையில் மிகச் சிறிய பகுதியாகக் குறைக்கப்பட்டன.
உறுப்பினர் எண்ணிக்கையிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சி, தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்பின் பொருள்சார்ந்த நிலையைப் பலவீனப்படுத்தவில்லை. மாறாக, UAW அமைப்பு 1.25 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டிருக்கிறது. UAW சர்வதேசத் தலைவர் ஷான் பெயின் உட்பட உயர்மட்ட நிர்வாகிகள் ஆண்டுக்கு கால் மில்லியன் டாலர்களுக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். இந்த அதிகாரத்துவ அமைப்பின் வருமானம், சலுகைகள் மற்றும் நிறுவன நிலை ஆகியவை வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதையும், பெருநிறுவனங்களுடனான அதன் கூட்டாண்மையைப் பாதுகாப்பதிலும் தான் தங்கியுள்ளன.
எனவே, இது அதிகாரத்துவ அமைப்பைச் சீர்திருத்துவது பற்றிய விஷயம் அல்ல. வேறு எதுவும் இல்லையென்றாலும், பெயின் நிர்வாகத்தின் மூன்று ஆண்டுகள் இதை நிரூபித்துள்ளது. 2023-ஆம் ஆண்டின் “நேரடி வேலைநிறுத்தம்” தொழிலாளர்களை தொடர்ந்து வேலையில் வைத்திருக்கவே வடிவமைக்கப்பட்டது, மேலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் பெருமளவிலான ஆட்குறைப்புக்கு வழிவகுத்தன.
மாநாட்டிற்கு முந்தைய நாள், அமெரிக்கன் ஆக்சில் (American Axle) நிறுவனத்தின் 1,000 தொழிலாளர்கள் நடத்திய 10 நாள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, UAW அதிகாரத்துவ அமைப்பு அவசரஅவசரமாக ஒரு தற்காலிக ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக, நிறுவனம் உதிரிபாகங்களைச் சேமித்து வைப்பதற்காக மேலதிக வேலை நேரத்தை இந்த அமைப்பு ஒருங்கிணைத்துக் கொடுத்திருந்தது. சாகினாவ் (Saginaw) நகரில், நெக்ஸ்டீர் (Nexteer) தொழிலாளர்கள் UAW ஆதரவு பெற்ற மூன்று ஒப்பந்தங்களை நிராகரித்து, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக 86 சதவீத வாக்கு அளித்தனர். அதே நேரத்தில் பல மாநிலங்களில் உள்ள டானா (Dana) தொழிலாளர்கள் UAW ஆதரவு பெற்ற ஒப்பந்தங்களை 90 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரித்துள்ளனர்.
மேலும், பெயின் தனது பதவிக்குத் தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டவர் அல்ல, மாறாக அவர்களின் வாக்குகளை ஒடுக்கிய ஒரு அதிகாரத்துவ அமைப்பிற்கே கடமைப்பட்டவர் ஆவார். அரசாங்கத்தால் தொழிற்சங்கத்தின் மீது திணிக்கப்பட்ட UAW அதிகாரிகளுக்கான 2022-23 நேரடித் தேர்தல் ஒரு மோசடியாகும்: இதில் 10 சதவீதத்திற்கும் குறைவான உறுப்பினர்களே வாக்களித்தனர், மேலும் பெயின் வெறும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.
சோசலிச சாமானிய தொழிலாளர் வேட்பாளரும், மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) நிறுவனத் தொழிலாளியுமான வில் லெஹ்மன், இந்த திட்டமிட்ட முறையான வாக்குரிமை பறிப்பை ஆவணப்படுத்தியுள்ளார். மேலும், இப்போது மாநாட்டுத் தளத்தில் இருந்து தன்னை வேட்பாளராக முன்மொழியுமாறு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
லெஹ்மனின் பிரச்சாரம் என்பது தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான நடைமுறை மாற்றீட்டிற்கான வெளிப்பாடாகும். இது நேரடியாக ஒரு கேள்வியை எழுப்புகிறது: தொழிலாள வர்க்கம் தனது செல்வத்தை எலோன் மாஸ்க்கிற்கும் தன்னலக் குழுவுக்கும் வாரி வழங்கும் ஓர் எந்திரத்திடம் தொடர்ந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்குமா, அல்லது அது சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் ஒரு பாதையை எடுக்குமா? என்பதாகும்.
மாநாட்டில் உள்ள பிரதிநிதிகளிடையே, இந்த அதிகாரத்துவ எந்திரத்திற்குள் வெறும் பதவிகளை மட்டும் தேடாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முன்முயற்சி எடுத்து லெஹ்மனின் வேட்புமனுவை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், இந்த முழு நிகழ்வையும் தங்களின் திவாலான கொள்கைகளுக்கான ஒரு முடிசூட்டு விழாவாக மாற்றுவதுக்கு பெயின் மற்றும் அவரது அதிகாரத்துவ அமைப்பு எடுக்கும் முயற்சிகளை அவர்கள் எதிர்க்க வேண்டும்.
இருப்பினும், லெஹ்மன் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, முன்னேறிச் செல்வதற்கான வழி இந்த அதிகாரத்துவ அமைப்பின் மூலம் அல்ல, மாறாக அதை ஒழித்து, ஒவ்வொரு பணியிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தை மீண்டும் தொழிலாளர்களிடம் ஒப்படைப்பதே ஆகும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்பு மற்றும் இரு முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக, ஆலைகள், தொழில்துறைகள் மற்றும் எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைக்கப்பட்ட இத்தகைய குழுக்களை அனைத்துப் பணியிடங்களிலும் உருவாக்க ஊக்குவிக்கிறது.
இந்தக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு மற்றும் போராட்டத்தின் கோட்டைகளாக மாற வேண்டும். உற்பத்தி வேகம், உற்பத்தித் தரங்கள், ஆள்சேர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்காகப் போராட வேண்டும். மேலும், உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் உற்பத்தியை நிறுத்தும் அதிகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். அன்டோனியோ காஸ்டன், ரொனால்ட் ஆடம்ஸ் சீனியர் மற்றும் கிரிகோரி நாஃப் ஆகியோர் இறந்ததைப் போல, தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்த வேலையில் வேக அதிகரிப்புகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் ஆலைகளில் நசுக்கப்பட்டு, இனி எந்தத் தொழிலாளியும் இறக்கக்கூடாது.
இது, வாகன உற்பத்தி நிறுவனங்களையும் முக்கிய தொழில்துறைகளையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டியதன் அவசியத்தை எழுப்புகிறது. இதன் மூலம் உற்பத்தி என்பது தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல், சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
இதற்கான போராட்டம் அதன் சாராம்சத்திலேயே சர்வதேசத் தன்மை கொண்டதாகும். அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அதே தீவிரமடைந்து வரும் போரையும், அதே சர்வாதிகாரப் போக்கையும், அதே முதலாளித்துவ நெருக்கடியையும் எதிர்கொள்வதால், ஒவ்வொரு கண்டத்திலும் வெடித்துக் கிளம்பும் ஒரு இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். வாகனத் துறை மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் பிரமாண்டமான நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாகச் செயல்பட்டு, எல்லா இடங்களிலும் ஊதியங்களைக் குறைப்பதற்காக ஒரு நாட்டின் தொழிலாளர்களை மற்றொரு நாட்டின் தொழிலாளர்களுக்கு எதிராகப் போட்டியிட வைக்கின்றன. அனைத்து எல்லைகளையும் கடந்து ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மூலம் மட்டுமே அவர்களுக்குப் பதிலடி கொடுக்க முடியும்.
தன்னலக் குழுவின் சர்வாதிகாரம் —இதற்கு எலோன் மாஸ்க்கின் ஒரு ட்ரில்லியன் டாலர் சொத்து மிகவும் அப்பட்டமான வெளிப்பாடாகும்— மேலோட்டமான மாற்றங்களைச் செய்வதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட மாட்டாது. சமூகத்தின் அடிப்படை மறுஒழுங்கமைப்பின் மூலம் மட்டுமே இதை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: அதாவது, பொருளாதார வாழ்க்கையை நிதித்துறை பிரபுத்துவத்தின் கைகளிலிருந்து பறித்து, சமூகத் தேவை மற்றும் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் அதை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.
இதுவே சோசலிச முன்னோக்காகும். இதனை நனவாக்குவதற்கு, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மகத்தான புரட்சிகர மற்றும் சோசலிச பாரம்பரியங்களை நனவுப்பூர்வமாக புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்—இந்தப் பாரம்பரியங்களை புதைப்பதற்காகவே தொழிற்சங்க அதிகாரத்துவம் தலைமுறை தலைமுறையாக உழைத்து வருகிறது. இந்தத் தடையை உடைத்து போராட்டத்தை முன்னெடுக்க ஒவ்வொரு வாகனத் துறை தொழிலாளிக்கும், மற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்: சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள், சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் இணையுங்கள்.
