இந்த மொழிபயெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்காவும் ஈரானும், பிப்ரவரி 28 அன்று ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட போரில், ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. 3,000-க்கும் மேற்பட்ட ஈரானிய மக்களைக் கொன்று, உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய போதிலும், தான் எதற்காகப் போருக்குச் சென்றதோ அந்த நோக்கங்களை அடைவதில் அமெரிக்கா படுதோல்வியடைந்துள்ளது.
ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தம்” ஞாயிற்றுக்கிழமையன்று டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டது, மேலும் முறையான கையெழுத்து விழா சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 60 நாள் கட்டமைப்பு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், அமெரிக்க கடற்படை முற்றுகையை அகற்றுவதற்கும் மற்றும் லெபனான் உட்பட இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும் வழிவகை செய்வதாகக் கூறப்படுகிறது. இது ஈரானின் அணுசக்தி திட்டம், தடைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இரு தரப்பையும் உட்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தம் உண்மையில் நிலைத்திருக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. இதன் உரை இன்னும் வெளியிடப்படவில்லை. முடக்கப்பட்டிருந்த சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா அதை மறுத்துள்ளது. “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது” என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார், மேலும் “பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இல்லாத இஸ்ரேல், இதை நிராகரித்துள்ளதுடன், அதே நாளில் லெபனான் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்தது.
எப்படியிருந்த போதிலும், இந்த முடிவு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முழுமையான பின்னடைவைக் குறிக்கிறது. இது ஒரு பாடசாலை மைதானத்தில் வம்புக்கு இழுக்கும் ரவுடி சண்டைக்குச் சென்று, இறுதியில் தனது கண்ணில் அடிபட்டுத் திரும்புவது போன்ற நிகழ்வே இதுவாகும். ஈரானிய அரசாங்கம் இன்னும் அதிகாரத்தில் உள்ளது. அதன் அணுசக்தி திட்டம் அப்படியே இருக்கிறது. இதில் கிடைத்துள்ள மிகக் குறிப்பிட்ட பலன் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதாகும், இது போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதைக் காட்டுகிறது
போர் தொடங்கப்பட்டபோது வெளிப்பட்ட அதீத தற்பெருமைக்கும், அதன் முடிவின் யதார்த்தத்திற்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் இடைவெளி உள்ளது. ஈரானின் “நிபந்தனையற்ற சரணடைதலுடன்” போர் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் உறுதியளித்தார். மார்ச் 2 அன்று, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத், “முட்டாள்தனமான போர் விதிகள் ஏதுமின்றி,” அமெரிக்கா “வரலாற்றிலேயே மிகவும் கொடிய... வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை” மேற்கொண்டு வருவதாக அறிவித்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் “நாள் முழுவதும் வானத்திலிருந்து மரணமும் அழிவும்” ஏற்படும் என்று உறுதியளித்தார்.
ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்க்க ஓராண்டு முழுவதும் முயற்சி செய்து, பிப்ரவரியில் ஈரானியர்களை “உங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றுங்கள்” என்று அழைத்த ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம், “ஆட்சி மாற்றத்தைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை” என்று கூறினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வி குறித்த வர்ணனைகளால் ஊடகங்கள் நிறைந்துள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதை “அதன் போர் நோக்கங்களை அடையாமல் செய்யப்பட்ட ஒரு மூலோபாய பின்வாங்கல்” என்று அழைத்துள்ளது. 1991-ல் சோவியத் யூனியன் (USSR) கலைக்கப்பட்டதன் மூலம் தொடங்கிய, சவாலற்ற அமெரிக்க மேலாதிக்கக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கான, உலகிற்கு முன்னாலான செயல்பாட்டு நிரூபணம் இதுவாகும்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேசும் நியூ யோர்க் டைம்ஸ் இதழ், “ஜனாதிபதி ட்ரம்ப் இந்தப் போரில் தோற்றுவிட்டார்” என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்க கட்டுரை, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எதிர்வினையின் அரசியல் தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. பெருந்தொகையான மக்களின் கொலைகள் மற்றும் படுகொலைகள் மூலம் இந்தப் போர் நடத்தப்பட்டது என்பது டைம்ஸ் இதழின் கவலை அல்ல, மாறாக அது தோல்வியடைந்தது என்பதுதான் அதன் கவலையாகும்.
“திரு. ட்ரம்ப் இந்தப் போரைத் தொடங்கியதன் மூலம் ஒரு பயங்கரமான தவறைச் செய்துவிட்டார்,” என்று அந்த தலையங்க கட்டுரை அறிவிக்கிறது. “அவர் அதை அலட்சியமாகவும் சட்டத்தை பகிரங்கமாக மீறியும் நடத்தினார். அமெரிக்கா இராணுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலவீனமடைந்து வருகிறது — மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் மூலோபாய ரீதியான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்” என்று கூறிய டைம்ஸ், “ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நான்கு மாத காலப் போரின் மூலோபாய வெற்றியாளராக ஈரான் உருவெடுத்துள்ளது” என்று புலம்புகிறது. அமெரிக்க இராணுவம் “அதன் நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் மற்றும் இடைமறிப்பான்களில் பலவற்றை எரித்துத் தீர்த்த போதிலும், தன்னைவிட மிகச் சிறிய எதிரியை அடக்க முடியாமல் போயுள்ளது என்பதை அது காட்டுகிறது. இதன் விளைவு, மற்ற சாத்தியமான எதிரிகளைத் தடுக்கும் இந்த நாட்டின் திறனைப் பாதிக்கிறது” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.
இந்தத் தலையங்க கட்டுரையின் பரிந்துரை, “பென்டகன் தன்னை நவீனமயமாக்கிக் கொண்டு, எதிர்காலப் போர்களுக்குத் தயாராக வேண்டும்” என்ற கூற்றாகச் சுருங்கிவிடுகிறது.
எதிர்காலப் போர்கள். குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவுடனான நிரந்தர ஏகாதிபத்திய மோதலுக்கான கட்டமைப்பை டைம்ஸ் பத்திரிகை இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறது; இதற்காக பென்டகன் “நவீனமயமாக்கப்பட்டுத் தயாராக வேண்டும்” என்றும் கருதுகிறது. கேள்விக்குரிய விஷயம் என்னவென்றால், அந்தக் கட்டமைப்பு எவ்வளவு திறமையுடன் நிர்வகிக்கப்படுகிறது என்பது மட்டுமேயாகும்.
நாடாளுமன்றத்திலுள்ள ஜனநாயகக் கட்சியினரின் பதிலிறுப்பும் இதே கட்டமைப்பிற்குள்ளேயே செயல்படுகிறது. செனட்டர் கிறிஸ் மர்பி இந்த ஒப்பந்தத்தை “அடிப்படையில் ஈரானிடம் சரணடைவது போன்றது” என்று அழைத்தார். பிரதிநிதிகள் சபை உறுப்பினர் செத் மௌல்டன் இதை “அடிப்படையில் டொனால்ட் ட்ரம்பிடமிருந்து ஈரானின் உச்ச தலைவருக்கு வழங்கப்பட்ட ஒரு சரணடைதல் ஆவணம்” என்று அழைத்தார். செனட்டர் ஜாக் ரீட், ஒபாமா காலத்து அணுசக்தி ஒப்பந்தமான JCPOA-வின் கீழ் நமக்குக் கிடைத்ததை விட அமெரிக்காவிற்கு “குறைவாகவே” கிடைக்கிறது என்று குறை கூறினார். ஜனநாயகக் கட்சியினர் போர் தொடங்கப்பட்டபோது அதை ஆதரித்தனர். ஈரான் அழிக்கப்படாமல் போர் முடிவுக்கு வந்ததால் மட்டுமே அவர்கள் இப்போது அதைப் பற்றி புகார் கூறுகிறார்கள்.
இந்தப் போருக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பு இருந்தது, ஆனால் இது உத்தியோகபூர்வ அரசியலின் கட்டமைப்பிற்குள் எவ்வித வெளிப்பாட்டையும் பெறவில்லை.
போரின் இந்தக் கட்டத்தின் முடிவு என்பது போரின் முடிவு என்று அர்த்தமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நிலையை மீட்டெடுக்க புதிய போர்களைத் தயாரிக்கும். ஒபாமாவின் கீழ் 2015-ல் நிறுவப்பட்ட JCPOA கட்டமைப்பு 2018-ல் ட்ரம்பால் முடிக்கப்பட்டு, 2026 போருக்கு வழிவகுத்தது. இந்த 2026 போர்நிறுத்தக் கட்டமைப்பு, அடுத்து வரவிருக்கும் போருக்கு வழிவகுக்கும்.
இருப்பினும், இந்தப் படுதோல்வியின் மிக முக்கியமான விளைவுகள் அமெரிக்காவிற்குள் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்டமைப்பு ரீதியான வீழ்ச்சியைத் தடுக்கும் ஒரு முயற்சியாகவே, பகுதியளவு, இந்தப் போர் தொடங்கப்பட்டது. ஐரோப்பிய மத்திய வங்கி இந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தங்கம் யூரோவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பெரிய கையிருப்புச் சொத்தாக உருவெடுத்துள்ளது. இது, ஒரு வருடத்திற்கு முன்பு 20 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது உலகளாவிய கையிருப்பில் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1946-க்குப் பிறகு முதன்முறையாக, கடந்த மார்ச் மாதத்தில் மத்திய கூட்டாட்சி அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இந்தப் போரின் தோல்வி டாலரின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியுள்ளதுடன், எந்தக் கட்டமைப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்காகப் போர் தொடங்கப்பட்டதோ அந்த நெருக்கடியை மேலும் ஆழமாக்கியுள்ளது.
தீவிரமடைந்து வரும் சமூக மோதல்களின் பின்னணியிலேயே இந்தப் போர் தொடங்கப்பட்டது. போர் தொடங்குவதற்கு முந்தைய வாரங்களில், மினியாபோலிஸில் மத்திய அரசின் முகவர்களால் 37 வயதான கவிஞர் ரெனே நிக்கோல் குட் மற்றும் 37 வயதான செவிலியர் அலெக்ஸ் ப்ரெட்டி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறைக்கு (ICE) எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ட்ரம்ப் நிர்வாகம் இந்தப் போரைத் தொடங்கியதன் நோக்கம், பிற காரணங்களுடன் சேர்த்து, இந்த அதிகரித்து வந்த எதிர்ப்பை, தேசபக்தி போர் வெறிப் பாதையை நோக்கி திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவும் இருந்தது.
சமூக எதிர்ப்பு இப்போது தீவிரமடையும், மேலும் அது பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்டிருக்கும். அமெரிக்கன் ஆக்சில் (American Axle) நிறுவனத்தின் வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் இந்த மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரயில்வே தொழிலாளர்கள், இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் பற்றிய செய்தியால் வோல் ஸ்ட்ரீட் பங்கு சந்தை உயர்ந்தது. ஆனால் எரிபொருள் மற்றும் உணவு விலைகள் போருக்கு முந்தைய நிலையை விட இன்னும் மிக அதிகமாகவே உள்ளன. தனிநபர் நுகர்வுச் செலவினங்கள் (PCE) பணவீக்கம் 3.8 சதவீதத்தை எட்டியுள்ளது, இது 2021-க்குப் பிந்தைய அதிவேகமான உயர்வாகும். நுகர்வோர் நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டங்களில் உள்ளது. இது பெரும் மந்தநிலை அல்லது தொற்றுநோய் காலத்தை விட மோசமானதாகும்.
பெருநிறுவனங்கள் இலாபம் ஈட்டிவரும் அதே வேளையில், தொழிலாளர்கள் விலைவாசி உயர்வு மூலம் போரின் செலவுகளைத் தாங்கிக்கொள்ளத் தள்ளப்பட்டனர். இதன் பொருளாதார தாக்கம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு வர்க்க மோதல்களுக்கான எரிபொருளை வழங்கும். போரை உருவாக்கும் அதே நெருக்கடி தான், அதற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்தையும் உருவாக்கி வருகிறது.
ஆழமடைந்து வரும் சமூக எதிர்ப்பிற்கு ட்ரம்ப் நிர்வாகம், தான் ஏற்கனவே காட்டிய அதே வழிமுறைகளின் மூலமே பதிலளிக்கும்: ICE சோதனைகள், பெருமளவிலான தடுப்புக்காவல் உள்கட்டமைப்புகள், உள்நாட்டுப் போராட்டங்களுக்கு எதிராக தேசியக் காவல்படையை நிலைநிறுத்துதல், அரசியல் எதிர்ப்பைக் குற்றமாக்குதல் மற்றும் சர்வாதிகார அரசு அதிகாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். ஈரானில் ஏற்பட்ட தோல்வி இந்த போக்கைக் குறைக்கப்போவதில்லை, மாறாக தீவிரப்படுத்தும். வெளிநாட்டில் தனது ஏகாதிபத்திய தாக்குதலின் தோல்வியை எதிர்கொள்ளும் அமெரிக்க ஆளும் வர்க்கம், உள்நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக புதிய மூர்க்கத்தனத்துடன் திரும்பும்.
தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய பணியாகும். இது, அதன் நோக்கத்தில் சர்வதேச ரீதியானதாகவும், அதன் வேலைத் திட்டத்தில் சோசலிசத் தன்மையைக் கொண்டதாகவும், அதன் குறிக்கோள்களில் அரசியல் ரீதியாக நனவுபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.
