முன்னோக்கு

ஆங்கிலக் கால்வாயில் துப்பாக்கிச் சூடு—பிரித்தானியாவும், ரஷ்யாவும் மற்றும் மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலும்

இந்த மொழிபயெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 19, 2021 அன்று எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்  மற்றும் எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் ஆகிய போர்க்கப்பல்கள் முதன்முறையாக கடலில் ஒன்றாக இருக்கும் காட்சி. [Photo by Open Government Licence v3.0]

செவ்வாயன்று ஆங்கிலக் கால்வாயில் (Channel) ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றிலிருந்து வானத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள், அருகில் இருந்த ஒரு பிரித்தானிய சொகுசுப் படகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். ஆனால் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம், தங்களது அரசாங்கங்களால் தாங்கள் ரஷ்யாவுடனான ஒரு போருக்குள் எப்போதையும் விட மிக உறுதியாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவே இதைக் கருத வேண்டும்.

இயல்பாகவே, இந்தச் சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. அந்த சொகுசுப் படகு ஆபத்தான முறையில் நெருங்கி வரும் பாதையில் வந்துகொண்டிருந்ததாகவும், அதைத் தொடர்புகொள்ள பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கை சமிக்ஞை விளக்குகள் ஏவப்பட்ட பின்னரே, அட்மிரல் கிரிகோரோவிச்  போர்க்கப்பலில் இருந்து வானத்தை நோக்கி ஐந்து எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக ரஷ்ய இராணுவம் கூறுகிறது. ஆனால் அந்தப் படகில் இருந்த தம்பதியினர், எச்சரிக்கை விளக்குகள் எதுவும் ஏவப்படவில்லை அல்லது வானொலி அழைப்புகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறுவதோடு, எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்காணித்து வந்த பிரித்தானிய இராணுவமும், ஆரம்பத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை வெறுமனே “ஒரு சாத்தியமான மோதலைத் தடுப்பதற்கான ஒரு முயற்சி” என்று மட்டுமே விவரித்தது.

துல்லியமான நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், இரண்டு உண்மைகள் தீர்க்கமானவை மற்றும் மறுக்க முடியாதவை. ரஷ்யாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்காவிடில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்காது. இந்தப் பதற்றங்கள், ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் ஒரு நடைமுறைப்படியான போர் நிலையின்  விளைவாகும்; இது ஏற்கனவே உக்ரேனில் நடந்து வரும் பேரழிவை ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரப்பும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இதே கடல் பகுதியில், இந்தியாவிற்கு எண்ணெய் கொண்டு சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் நிழல் கடற்படையின் ஒரு பகுதியான, கேமரூன் கொடி ஏந்திய ஸ்மிர்டோஸ் என்ற எண்ணெய்க் கப்பலை பிரித்தானியப் படைகள் பறிமுதல் செய்தன. மாஸ்கோவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தும் பொருட்டு பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான கப்பல் பறிமுதல்கள் மற்றும் முடக்கங்களின் வரிசையில் சமீபத்திய நிகழ்வு இதுவாகும்.

ஆங்கிலக் கால்வாயில் கப்பல்களை இடைமறிக்கத் தான் தயாராக இருப்பதை பிரித்தானியா சமிஞை செய்திருப்பது, ஆபத்தின் எல்லையை கணிசமாக உயர்த்துகிறது. உஸ்ட்-லுகா (Ust-Luga), ப்ரிமோர்ஸ்க் (Primorsk) மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg) ஆகிய ரஷ்யாவின் முக்கிய பால்டிக் துறைமுகங்களில் இருந்து புறப்படும் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடம் இதுவேயாகும். சண்டே டைம்ஸ் நடத்திய புலனாய்வின்படி, 2022 ஆம் ஆண்டிலிருந்து சுமார் £239 பில்லியன் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெய் (319 பில்லியன் டாலர்) இந்த நீர்வழிப்பாதை வழியாகக் கடந்து சென்றுள்ளது.

சொகுசுப் படகுச் சம்பவம் குறித்துப் பதிலளித்த பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், ரஷ்யாவின் “பொறுப்பற்ற” நடவடிக்கைகளைக் கண்டித்தார். இந்தக் குற்றச்சாட்டு ஸ்டார்மர் மற்றும் அவரது தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீதே பத்து மடங்கு திருப்பி விடப்பட வேண்டும். “கடந்த வார இறுதியில் நடந்த ரஷ்ய நிழல் கடற்படையின் எண்ணெய் டேங்கர் கப்பல் பறிமுதலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவரது அமைச்சரவை அமைச்சர் நிக் தாமஸ்-சைமண்ட்ஸ் கூறுவது அபத்தமானது.

பிரித்தானியாவும் ஐரோப்பிய வல்லரசுகளும், 2014 ஆம் ஆண்டின் தீவிர வலதுசாரி மைதான் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஆதரவளித்தது முதல், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ரஷ்யாவுடனான மோதலை ஆக்ரோஷமாகத் தூண்டி வருகின்றன. பைடன் நிர்வாகத்தின் ஆதரவுடன், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு ஒரு பிற்போக்குத்தனமான எதிர்ப்பாக இருந்த 2022 இன் உக்ரேன்  மீதான ரஷ்ய படையெடுப்பை அவை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கண்டன. அதன் மூலம், உக்ரேனை பொருளாதாரச் சுரண்டலுக்கு உகந்த ஒரு அடிமை நாடாக மாற்றும் அதே வேளையில், ரஷ்யாவை ஒரு முட்டுச்சந்திற்குள் தள்ளி பலவீனப்படுத்த முடியும், அநேகமாக அங்கு ஓர் ஆட்சி மாற்றத்தைக்கூட தூண்ட முடியும் என்று அவை கருதின.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பின்னர், இந்த நோக்கங்கள் வெறித்தனமான உற்சாகத்துடன் தொடரப்படுகின்றன. உக்ரேன் மீதான தனது சொந்த பொருளாதாரக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அரியவகை தாதுக்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மூலோபாய வளங்கள் ஆகியவற்றில் ரஷ்யாவுடன் சாதகமான வர்த்தக உறவுகளைப் பேண ட்ரம்ப் நிர்வாகம் விரும்புகிறது; இதனால் அது இப்போரில் ஆர்வம் குறைந்துள்ள நிலையில், தற்போது ஐரோப்பிய வல்லரசுகளே இதற்குத் தலைமை தாங்குகின்றன.

உக்ரேனின் ஜெலென்ஸ்கி ஆட்சியால் முன்னெடுக்கப்படும் ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதி மீதான பரந்த இராணுவத் தாக்குதல், மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் தலைமையிலான பொருளாதாரத் தாக்குதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவே இந்த எண்ணெய் டேங்கர் கப்பல் பறிமுதல்கள் அமைந்துள்ளன.

நேட்டோ தொழில்நுட்பத்தின் உதவியுடன், உக்ரேனிய இராணுவம் ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக உள்ள இலக்குகளைத் தாக்கும் தனது திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இதர எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்புகள் மீதும், அரை டசன் துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  ரஷ்யாவின் டாவோஸ் என்று அழைக்கப்படும் பொருளாதார மன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல்கள், அரசியல் ரீதியாக குறிப்பாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின.

ஆங்கிலக் கால்வாய் சம்பவம் நடந்த நாளன்று உட்பட, சரக்குக் கப்பல்களும் எண்ணெய் டேங்கர்களும் கூட தாக்கப்பட்டுள்ளன.

பொருளாதார முன்னணியில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் 2,000 முதல் 3,000 வரையிலான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; அத்துடன் முக்கியமான துறைகளில் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ரஷ்ய எண்ணெய்க்கு G7 அமைப்பால் விலை உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் G7 உச்சிமாநாடு, “ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிப்போம். இந்தச் சூழலில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் மீதான தடைகள் உட்பட எங்களது பொருளாதாரத் தடைகளை நாங்கள் பலப்படுத்துவோம்” என்று ஓர் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வெளியிட்டுள்ளது.

இந்த அழுத்தம் அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியிருப்பதை பல்வேறு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன; தேசிய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை வேகமாக அதிகரித்து வருகிறது, அதே போல் தனியார் வணிகக் கடன்களும் நிலுவைகளும் பெருகி வருகின்றன. மேலும், முக்கியமான எண்ணெய் ஏற்றுமதிகளும் கூட குறைக்கப்பட்டுள்ளதால் நாடு இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் ரஷ்யா கைப்பற்றிய நிலப்பரப்பின் அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை பல கண்காணிப்பு அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன. இராணுவ ஆட்சேர்ப்பு முயற்சிகளும் தொய்வடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தாங்கள் கூறுவது போல, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பேரம்பேசும் கருவியாக இதைப்பயன்படுத்துவதற்கு மாறாக, “அமைதி”ப் பேச்சுவார்த்தைகள் என்பது ரஷ்யாவின் சரணடைதலுக்கான பேச்சுவார்த்தை என்ற வடிவத்தில் மட்டுமே நடைபெறுவதை உறுதிசெய்வதே தங்களது நோக்கம் என்பதை ஐரோப்பிய சக்திகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இதற்குப் பகுதியளவு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா முக்கிய நகர மையங்கள் மீதான தனது வான்வழிப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், 274 உக்ரேனியப் பொதுமக்கள் உயிரிழந்ததையும் 1,763 பேர் காயமடைந்ததையும் சுட்டிக்காட்டி, மே மாதம் இந்தப் போரின் மிக மோசமான மாதமாக அமைந்தது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யப் பெரும் தன்னலக்குழுவின் தீவிர இராணுவவாத மற்றும் தேசியவாதப் பிரிவுகளில், இன்னும் விரிவான மற்றும் ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது; இது புட்டினை மேலும் மேலும் ஒரு பலவீனமான நிலைக்குத் தள்ளும்

உக்ரேனியப் போர் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் தங்களது ஈடுபாட்டை தீவிரப்படுத்துவதற்குப் பதிலடியாக, உக்ரேனுக்கு வெளியே உள்ள ஐரோப்பிய இலக்குகளைத் தாக்கப் போவதாக இப்போரின் பல்வேறு கட்டங்களில் ரஷ்ய அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர்.

2024 இல், உக்ரேனிய போர் விமானங்களின் புறப்பாடு புள்ளிகளாகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு நேட்டோ விமானத் தளங்களும் ஒரு “சட்டபூர்வமான இலக்காக” கருதப்படும் என்று புட்டின் குறிப்பிட்டார். அதே ஆண்டில், உக்ரேனுக்குப் படைகளை அனுப்பும் யோசனையை பாரிஸ் முன்வைத்தபோதும், லண்டன் ரஷ்ய இலக்குகளைத் தாக்க தனது நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதித்தபோதும், ரஷ்யா மூலோபாய அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பயிற்சிகளைப் பகிரங்கமாக அறிவித்த நிலையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் “தீவிரமடைதலின் ஒரு புதிய கட்டம்” குறித்து எச்சரித்தார்.  

இந்த ஆண்டு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரேனுக்கு ட்ரோன்களைத் தயாரிக்க உதவும் ஐரோப்பிய நிறுவனங்களின் முகவரிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பட்டியலிட்டதுடன், அவற்றின் ஈடுபாடு “இந்த நாடுகள் உக்ரேனுக்கு ஒரு மூலோபாயப் பின்புலமாக மெதுவாக மாறிவருவதைக்” குறிக்கிறது என்றும், இது “ஒரு கடுமையான மோதல் தீவிரமடைதலுக்கு” வழிவகுக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தது.

இந்த எச்சரிக்கைகள் பிரித்தானிய ஊடகங்களில் அரிதாகவே இடம் பெறுகின்றன; மேலும், அரசாங்கத்தால் அவை வழக்கம் போல ஒரு “வெற்று மிரட்டல்” என்று நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசாங்கம், மக்களை ஒரு போலியான பாதுகாப்பு உணர்வில் மூழ்கடித்து உறங்க வைக்க முயல்கிறது. ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போருக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர்கள் பலமுறை வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த நிலை நீடிக்கிறது.

போர் வெடித்த சில மாதங்களுக்குள், பிரித்தானிய இராணுவத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ், ஸ்கை நியூஸ் ஒளிபரப்பிய ஒரு இராணுவ மாநாட்டு உரையில், “நமது நட்பு நாடுகளுடன் இணைந்து போராடக் கூடிய மற்றும் போர்க்களத்தில் ரஷ்யாவைத் தோற்கடிக்கக் கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்க வேண்டிய அவசரத் தேவை இப்போது எழுந்துள்ளது. ஐரோப்பாவில் மீண்டும் ஒருமுறை போரிடுவதற்கு இராணுவத்தைத் தயார் செய்ய வேண்டிய தலைமுறை நாம் தான்” என்றார்.

ஓய்வு பெற்ற ரஷ்ய லெப்டினன்ட்-ஜெனரல் எவ்ஜெனி புஜின்ஸ்கி  இதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஷ்ய அரசு ஒளிபரப்பு நிறுவனத்திடம் கூறுகையில், “மூன்றாம் உலகப் போரின் விளைவாக பிரித்தானியா பௌதீக ரீதியாக இல்லாமல் போய்விடும் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் தீவே முற்றிலும் மறைந்துவிடும்; அதனால் அவரோ அல்லது அவரது சந்ததியினரோ எங்கே வாழ்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

தற்போது தங்களை ஆளும் இந்த யுத்த வெறியர்களை அதிகாரத்தில் நீடிப்பதற்குத் தொழிலாள வர்க்கம் அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவுடனான போரைப் பற்றி “இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்” அல்லது “சில ஆண்டுகளுக்குள்” என்று குறிப்பிடுகிறார்கள்; இது மனிதகுலத்திற்கேற்படும் ஒரு பேரழிவு அல்ல, மாறாக நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய வாழ்வின் ஒரு துரதிர்ஷ்டவசமான யதார்த்தம் என்பதைப் போல அவர்கள் பேசுகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், மிகச் சிறிய சம்பவம்கூட மிக விரைவாகப் போர் தீவிரமடைவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக மாறிவிடக்கூடும். கடுமையான சம்பவங்கள் ஏற்கனவே வழக்கமாக நடந்து வருகின்றன. உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பின் ட்ரோன்களும் லிதுவேனியா, லாட்வியா, போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளன. கடந்த மாதம் கருங்கடல் பகுதியில் பிரித்தானிய அரச விமானப்படையின் உளவு விமானம் ஒன்று ரஷ்ய போர் விமானங்களால் இடைமறிக்கப்பட்டது; சில நாட்களுக்கு முன்பு ஸ்வீடிஷ் போர் விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தன.

ஐரோப்பிய சக்திகள் தங்களை வேகமாக இராணுவமயமாக்கி வருவதால், இத்தகைய நிகழ்வுகள் மேலும் அடிக்கடி நடப்பதுடன் இன்னும் கடுமையானதாகவும் மாறும். சிப்ரி (SIPRI) இராணுவச் செலவினங்கள் மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டத்தைச் சேர்ந்த ஜேட் குய்பெர்டோ ரிகார்ட் அவர்களின் கருத்துப்படி, ஐரோப்பாவின் நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் 2025 ஆம் ஆண்டில் இராணுவத்திற்காக மொத்தம் 559 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளன; இந்தச் செலவினமானது “1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாக உயர்ந்துள்ளது.”

கண்டம் முழுவதும், போருக்கான கூக்குரல் வலுத்து வருகிறது. கடந்த வாரம் ஸ்டார்மரின் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தனது பதவியை ராஜினாமா செய்தார்; “அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில்” இராணுவச் செலவினங்களைப் போதுமான அளவு உயர்த்த அரசாங்கம் “இயலாமலும் விருப்பமின்றியும்” இருப்பதாக அவர் கண்டித்துள்ளார்.

அவருக்கு முன்னிருந்த பென் வாலஸ், பிபிசி ரேடியோ 4 இன் ‘டுடே’  நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ஆங்கிலக் கால்வாய் சம்பவமானது ரஷ்யா “நம்மால் தடுத்து நிறுத்தப்படவில்லை”  என்பதைக் காட்டுவதாகக் குறை கூறினார். நாடாளுமன்றக் கீழவையின் பாதுகாப்புவழிக் குழுத் தலைவர் தன் தேசி, “வெளிப்படையாகவே, பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பது உட்பட நாம் இன்னும் மிக வேகமாக நகர வேண்டும்” என்றார்.

இதற்கிடையில், ஜேர்மனி 2025 ஆம் ஆண்டில் தனது இராணுவச் செலவினங்களை 24 சதவீதம் அதிகரித்து—அதாவது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து—114 பில்லியன் டாலர்களுடன் உலகின் நான்காவது பெரிய இராணுவச் செலவின நாடாக முன்னிலையில் உள்ளது. ரஷ்யா 190 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது; அதன் அரசாங்கம், தன்னால் வெல்ல முடியாத ஒரு பிற்போக்குத்தனமான போருக்கும், தப்பிப் பிழைக்கப் போராட வேண்டிய ஒரு “அமைதிக்கும்” இடையில் சிக்கிக்கொண்டுள்ளது.

ஆங்கிலக் கால்வாயில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளையில், எவியானில் நடந்த ஜி7  உச்சிமாநாட்டில் உலகின் ஏகாதிபத்திய சக்திகளிடம் ட்ரம்ப், ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” கையெழுத்திடுவது மட்டுமே பாக்கியுள்ளது என்றும், ஈரானுடனான அமைதி இன்னும் சில நாட்களில் எட்டப்பட்டுவிடும் என்றும் தற்பெருமை பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு மாறாக, உலகம் ரஷ்யாவுடனான ஒரு பகிரங்கமான போரை நோக்கி மேலும் ஒரு படி நெருங்கியுள்ளது.

இப்போரில் ஈடுபட்டுள்ள எவராலும் பற்றி எரியும் இந்த யுத்தப் பேரழிவிலிருந்து ஒரு வழியைக் காட்ட முடியாது. அவர்கள் தங்களது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போர் மற்றும் சர்வாதிகார முறைகளை எப்போதையும்விட அதிகமாகச் சார்ந்துள்ள முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் பல்வேறு பிரிவுகளையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்: அது ஏகாதிபத்திய வல்லரசுகளைப் போல புதிய செல்வாக்கு மண்டலங்களைப் பிரித்தெடுப்பதன் மூலமாக இருக்கலாம், அல்லது ரஷ்யாவைப் போல இத்தகைய முயற்சிகளை எதிர்ப்பதற்கான ஒரு வலுவான பிராந்திய நிலையை நிறுவுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.

ஐரோப்பாவிலுள்ள தொழிலாள வர்க்கம், முன்னெப்போதையும்விடக் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் அழிப்பு ஆகியவற்றின் மூலம் இதற்கான விலையை ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருக்கிறது. தங்களது உக்ரேனிய மற்றும் ரஷ்ய சகோதர சகோதரிகளைப் போலவே, இந்தத் தொழிலாளர்களும் தங்களது உயிர்களையே விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஒரு வெகுஜன சோசலிசப் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இப்போது மிக அவசரமான தேவையாகும். தொழிலாள வர்க்கம் மட்டுமே அதன் சொந்த சர்வதேச சோசலிசப் புரட்சி வழிமுறையைப் பயன்படுத்தி, தீவிரமடைந்து வரும் உலகப் போரை நிறுத்த முடியும்.

Loading